நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/பிள்ளைப் பூச்சிகள்
171. பிள்ளைப் பூச்சிகள்
சுற்றி இருந்தவர்கள் அவளை இலட்சியம் செய்ததாகவே தோன்றவில்லை. அங்கிருந்த மேஜை, நாற்காலி, சுவர், தரை எல்லாவற்றையும் போல அவளையும் ஒரு ஜடப் பொருளாகவே நினைத்து மறந்து விட்ட மாதிரி இருந்தது. அவளுக்கும் மனம் உண்டு, உணர்வுகள் உண்டு, மூளை உண்டு, கண்களும் பார்வையும் உண்டு என்பதை அவர்கள் ஏனோ மறந்துதான் போயிருந்தார்கள்.
எல்லாருடைய அலட்சியத்துக்குக்கும் முக்கியமான காரணம் அவளுக்காகத் தட்டிக் கேட்பவர் யாருமில்லை என்பதுதான். அவள் ஏறக்குறைய ஓர் அநாதை மாதிரிதான்.
மேலேயிருந்து கீழ் வரை யார், எவர் என்ற பேதா பேதமின்றி அந்த அலுவலகத்தில் அனைவருடைய ஏளனத்திற்கும், எகத்தாளத்திற்கும் இலக்கானாள் அவள்.
இடது கையில் முழங்கைக்குக் கீழே எதுவுமில்லாதபடி, ஒரு விபத்தில் உடல் ஊனமுற்றது அவளது மைனஸ் பாய்ண்ட். அதுவே ஒரு வகையில் ப்ளஸ் பாயிண்ட் ஆகியிருந்தது.
சிறு வயதிலேயே இந்த விபத்து நிகழ்ந்து விட்டதால் அவளைத் திருமணம் செய்து கொள்ள யாரும் முன் வரவில்லை. முக வசீகரம், எடுப்பான உடற்கட்டு, மூன்றாவது ஃபாரம் வரை படிப்பு எல்லாம் இருந்தும், உடல் ஊனம் அவளை மூலையில் பிடித்துத் தள்ளி விட்டது. வேலை கிடைத்தாலும் மனக்குறை குறைதான்.
சர்வதேச உடல் ஊனமுற்றோர் ஆண்டில் அவளுக்கு ஒரு யோகம் அடித்தது. அந்த ஆண்டு முழுவதும் உடல் ஊனமுற்றோருக்கு வேல வாய்ப்புக்கள் தாராளமாக அளிக்கப்பட்டன. தேடித் தேடி வேலை கொடுத்தார்கள்.
மிஸ். மாரியம்மாளுக்கும் ஒரு பெரிய சர்க்கார் அலுவலகத்தில் குடி தண்ணீர் நிரப்பி வைக்கும் வேலை கொடுக்கப்பட்டது. அந்த அலுவலகத்தின் மூன்று மாடிகளிலும் இருந்த பதினெட்டுப் பானைகளிலும் தண்ணீர் தீரத் தீர நிரப்ப வேண்டும். டம்ளர்கள், பானைகளை அன்றாடம் நன்கு கழுவிச் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும். அலுவலகத்தைக் குப்பை நீக்கிச் சுத்தம் செய்து பெருக்கும் வேலையையும் அவளே கவனித்து வந்தாள். காலை பத்து மணிக்கு அலுவலகம் என்றால், எட்டரை மணிக்கே அவள் போயாக வேண்டும். அலுவலகம் தொடங்குவதற்கு முன்பே, பெருக்குதல், தண்ணீர் நிரப்புதல் போன்ற வேலைகளை முடித்தாக வேண்டும்.வேலை செய்யும் பெண்களுக்கான ஹாஸ்டல் ஒன்றில் தங்கிக் கொண்டிருந்த மாரியம்மாள் இங்கும் இதே வேலையைச் செய்ய வேண்டியிருந்தது. காலை 8 மணி வரை ஹாஸ்டலிலும் பின்பு எட்டரை முதல் ஐந்து வரை அலுவலகத்திலுமாக அவள் வேலை செய்ய வேண்டியிருந்தது. மறுபடி மாலை ஐந்தரை முதல் இரவு ஒன்பது, பத்து வரை ஹாஸ்டலில் வேலை சரியாயிருக்கும். அவளும் அந்த ஹாஸ்டலிலேயே 'செர்வண்ட்ஸ் குவார்ட்டர்ஸ்’ போன்ற ஒரு பகுதியில் தங்கிக் கொண்டதால் அங்கிருப்பவர்கள் நேரம் காலம் பார்க்காமல் வேலை ஏவினார்கள்.
எல்லாரும் மாரியம்மாளை ஒர் இயந்திரமாகச் சொன்னதைச் செய்ய ஒடியாடும் கருவியாகநினைத்தார்களே ஒழியத் தன்மானமுள்ள மனுவியாகவே நினைக்கவில்லை. அவளைப் பொருட்படுத்தவுமில்லை. அவளுக்காகக் கவலைப்படவுமில்லை. பயப்படவுமில்லை. எதை ஏவினாலும், எப்போது ஏவினாலும் செய்யக் கடமைப்பட்டவள் என்றே அவளைப் பற்றி எண்ணினார்கள். அலுவலகத்திலும், ஹாஸ்டலிலுமாக இரட்டை வருமானம் வந்தாலும் இரண்டிடங்களிலும் தன்னை யாரும் ஒரு சிறிதும் மதிக்கவில்லை என்பது உறுத்தியது. வேலியில்லாத பயிரைப் போலிருந்தாள் அவள் அலட்சியத்தைக் கூடப் பொருட்படுத்தாமல் விட்டுவிடலாம். அவமானத்தை அப்படிப் பொருட்படுத்தாமல் இருக்க முடியாது.
அவள் வேலை பார்த்த அந்த அலுவலகத்தின் மூன்று மாடிகளிலுமாக அறுநூறு, எழுநூறு பேர் பணி புரிந்தாலும், தினசரி காலையில் அவள் தன் காரியங்களைத் தொடங்கும்போது வெறிச்சோடிக் கிடக்கும்.
அலுவலகத்தின் வாட்ச்மேனும் சார்ஜெண்ட்டும், அந்த வளாகத்திலேயே ஒரு மூலையில் குடியிருந்த சூப்பிரண்டெண்டும் தான் அவள் தன் பணியைத் தொடங்கும்பேர்து பார்க்க முடிந்தவர்கள்.
சூப்பிரெண்டெண்டு அவ்வளவாக நல்ல மனிதர் இல்லை. சார்ஜெண்டு, வாட்ச்மேன் எல்லாரும் சூப்பிரெண்டெண்டுக்கு அடங்கியவர்கள்.
ஒரு நாள் காலையில் மாரியம்மாள் முதல் மாடியைப் பெருக்கிச் சுத்தம் செய்து தண்ணீர் நிரப்பிக் கொண்டிருந்த போது, சார்ஜெண்டும் வாட்ச்மேனும் வந்தார்கள். அவளை நைச்சியமாக வேண்டினார்கள்:
“இந்தா மாரியம்மா! சூப்பிரண்டெண்டு ஐயா வீட்டிலே எல்லாரும் ஒரு கல்யாணத்துக்காக வெளியூர் போயிருக்காங்க. ஐயா மட்டும்தான் இருக்காரு. சிரமத்தைப் பாராமே, பெருக்கிச் சுத்தம் பண்ணிறனும், பாத்திரங்களையும் கழுவிக் குடுத்துடனும்... இன்னிக்கி ஒரு நா மட்டும்தான்...”
மாரியம்மாள் பதில் எதுவும் சொல்லாமல் தயங்கினாள். அவளுடைய மெளனம் உடன்பாடாகத் தோன்றவில்லை என்பதோடு எதிர்மறையாகத் தோன்றவும் செய்தது. அவர்கள் விட்டுவிடவில்லை. வற்புறுத்தினர்கள். வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக அவள் சம்மதிக்க வேண்டியதாயிற்று.
“முதல்லே ஆபீஸ் வேலையெல்லாம் முடிச்சுப்போட்டு அப்பாலே வாரேன்.” “ஐயையோ அது முடியாது மாரியம்மா! சூப்பிரெண்டு ஐயா ஆபீஸுக்குக் கிளம்பியாகனுமே! முதல்லே அங்கே வந்து வீட்டு வேலையை முடிச்சுக் கொடுத்தால்தான் அவரு கிளம்ப முடியும்” என்றார் சார்ஜெண்ட்.
ஆபீஸ் காம்பவுண்டிலும், அலுவலகத்திற்குள்ளும் ஆள் நடமாட்டமே இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்த அந்த வேளையில் இன்னும் ஒதுக்குப்புறமாக விலகி இருந்த சூப்பிரெண்டெண்டின் வீட்டுக்குள் போக அவளுக்குத் தயக்கமாயிருந்தது. சூப்பிரெண்டெண்டின் குடும்பத்தார் எல்லாரும் ஏதோ கல்யாணத்துக்காக வெளியூர் போயிருப்பதாக வேறு சார்ஜெண்டே சொல்லுகிறார்.மாரியம்மாளின் தயக்கத்துக்கு இவை எல்லாம்தான் காரணமாயிருந்தன.
சாதாரணமாக அந்த சூப்பிரரெண்டெண்டின் பார்வையே நன்றாக இராது. அந்த மனிதரின் அலுவலக அறையைச் சுத்தம் செய்யப் போன இரண்டொரு வேளைகளில் கூட அவருடைய பேச்சும், நடத்தையும் பிடிக்காமல் மிரண்டு பதறி அவசர அவசரமாக வெளியேறியிருக்கிறாள் மாரியம்மாள்.
அந்த சூப்பிரண்டெண்டு மாதிரி முரடர்களைப் பொறுத்தவரை - கொட்டாத வர்கள் எல்லாம் பிள்ளைப் பூச்சிகள். கொட்டுகிறவர் கள் அல்லது கொட்ட முடிந்தவர்களென்று தோன்றுகிறவர்களுக்குத்தான் அவர் பயப்படுவார். தன்னையும் அவர் பிள்ளைப் பூச்சியாய் நினைப்பது இருக்கட்டும். தான் தேள் இல்லை. தன்னால் யாரையும் கொட்ட முடியாது என்பது அவளுக்கே புரிந்துதான் இருந்தது.
பிள்ளைப் பூச்சிகள் தேள்களைப்போல நடந்து கொள்ள் முடியாதென்று அவள் உணர்ந்துதான் இருந்தாள்.
அவள் சூப்பிரெண்டெண்டின் அவுட் ஹவுஸிற்குள் நுழைந்ததும் முதலில் வாசற் கதவருகேயே தரையைப் பெருக்கிச் சுத்தம் செய்யத் தொடங்கினாள்.
உள்ளே போக அவளுக்குப் பயமாயிருந்தது.
“உள்ளே வாயேன் மாரியம்மா”
“இல்லீங்க முதல்லே இங்கே வாசல்பக்கத்தைச் சுத்தம் பண்ணி முடிச்சிடறேன்.”
“அட, சும்மா உள்ளே வா - சொல்றேன்.
இந்த வார்த்தைகளைச் சொல்லும்போது சூப்பிரெண்டெண்டின் முரட்டுக் கை அவளது தோள்பட்டையை அழுத்திக் கொண்டிருந்தது. அந்த மனிதரின் சூடான மூச்சுக்காற்று அவள் உணர்வில் பதிய முடிந்த அளவு நெருக்கமாக உறைத்தது.
அவ்வளவுதான்! உடல் பதறி வியர்க்க அவள் அப்படியே துடைப்பத்தை வீசி விட்டு வெளியே ஒடிவிட்டாள். மாரியம்மாள் பிள்ளைப் பூச்சியானாலும் அவளுக்கு முன்ஜாக்கிரதையுணர்ச்சி அதிகம். அந்த நிலைமைக்கு மேல் அங்கே இருப்பது அபாயம் என்று உள்ளுணர்வு கூறியதால் தான் அவள் வெளியேறி ஒடியிருந்தாள்.
மறுநாள் காலை அவள் ஆபீஸுக்குள் நுழைந்தபோது சார்ஜெண்ட் அவளிடம் தமிழில் டைப் செய்யப்பட்ட ஒரு 'மெமோ’வை நீட்டினான். முந்திய தினம் காலையில் அவள் அலுவலகக் காம்பவுண்டிலிருந்த சூப்பிரெண்டெண்டின் வீட்டில் நுழைந்து பாத்திரங்களைத் திருட முயன்றதாகவும், சூப்பிரெண்டெண்டு அவளைக் கையும் களவுமாகப் பிடிக்க முயன்றபோது அவர்மீது துடைப்பத்தை வீசிவிட்டு ஓடியதாகவும் குற்றம் சாட்டி அவளை ஏன் வேலையிலிருந்து நீக்கக்கூடாது எனக் கேட்டிருந்தது. அவள் அவுட்ஹவுஸில் திருட முயன்றதை வாட்ச்மேனும், அலுவலக சார்ஜெண்டும் பார்த்ததாகவேறு சாட்சியங்கள் ஜோடிக்கப்பட்டிருந்தன.
பிள்ளைப்பூச்சியாகவே தொடர்ந்து இருப்பது எவ்வளவு அபாயகரமானது என்பது மாரியம்மாளுக்கு இப்போது புரிந்தது. பிள்ளைப்பூச்சியாக இருந்தே அழிய வேண்டும் அல்லது தேளாக மாற வேண்டும். தொடர்ந்து பிள்ளைப்பூச்சியாகவே இருந்து பிழைக்க முடியாதென்று தெரிந்தது.
மாரியம்மாள் உஷாரானாள். இந்த அலுவலகத்தில் வேலைக்குச் சேர்வதன் முன் தான் பணிபுரிந்த ஒரு தொழிலதிபரின் வீட்டைத் தேடிச் சென்றாள். அந்தத் தொழிலதிபர் ஒரு வக்கீலும் ஆவார். சூப்பிரெண்டெண்டு வீட்டில் நடந்ததைக் கூறி அந்த மெமோவை அவரிடம் காட்டினாள்.
“இதெல்லாம் வெளியே பேசி விவகாரம் பண்ணி ஜெயிக்கிற விஷயமில்லே. நீ பெண்பிள்ளையா இருக்கிறதாலே உன் பேரும் இரசாபாசமாக அடிபடும்.”
“அது சரிதாங்க! ஆனா அதுக்காக அபாண்டமாய்ப் பழி சுமத்தினாங்கன்னா எப்பிடி ஒத்துக்க முடியும்? நாம செய்யாததைச் செஞ்சதாக்குத்தம் சொல்றாங்களே?”
“என்ன கெடுதல் பண்ணினாலும் பதிலுக்கு எதிர்க்கிற சக்தி உங்கிட்ட இல்லேங்கிற துணிவிலேதான் இப்பிடி எல்லாம் பண்றாங்க.”
“நியாயம் ஒண்ணு இருக்குங்களே..?”
“இருக்கா? இருந்துதுன்னு சொல்லு மாரியம்மா முன்னாள் மந்திரி, முன்னாள் தலைவர் மாதிரி நியாயம், தருமம்லாம்கூட முன்னாள் விவகாரம் ஆயிரிச்சே?”
“அந்த இராவணன் எம் பொழைப்பிலே மண்ணைப் போட்டுருவான் போலிருக்கே ஐயா?”
“யாரு அந்த இராவணன்?”
“அதான் சூப்பிரண்டோட பேரு” .
“பேருக்குப்பொருத்தமா ரொம்ப மனுசங்க வாழ மாட்டாங்க. இந்த ஆளு. இராவணன் வேலையே பண்றாரு..?
சொல்லிவிட்டுச் சிரித்தார் அவர்.
“என்னை விட்டுடுங்க ஆபீஸ்ல கிளார்க்கு டைப்பிஸ்ட்னு இருக்கிற வேற பல குடும்பப் பொண்ணுங்களும் இந்த ஆளாலே தவிக்குதுங்க ஐயா.”
வக்கீல் பதில் ஏதுவும் சொல்லாமல் யோசனையில் ஆழ்ந்தார். பின்பு சிரித்துக் கொண்டே மாரியம்மாளிடம் சொன்னார். “இப்ப ஒரு வேடிக்கை காண்பிக்கிறேன் பாரு... இராவணன் திணறும்படி ஒரு ராமசாமியை வரவழைக்கிறேன்... அது சரி. அந்த ஆபீஸ்லியோ, சூப்பிரண்டெண்ட் குவார்ட்டர்ஸிலேயோ போன் இருக்கா..?”
“குவார்ட்டர்ஸிலேயே இருக்குங்க”
“உனக்கு நம்பர் தெரியுமா?”
“தெரியாதுங்களே..?”
அவரே அவள் எடுத்துக் கொடுத்திருந்த மெமோ கடிதத்திலே இருந்த அலுவலகப் பேரைப் பார்த்து டெலிஃபோன் டைரக்டரியை எடுத்துப் பக்கங்களைப் புரட்டிப் புரட்டி நம்பரைக் கண்டுபிடித்தார்.
டெலிஃபோனைச் சுழற்றினார். இது வேறு ஒரு நம்பருக்கு எதிர்ப்புறம் யாரோ எடுத்தார்கள். இவர் கேட்டார் :
“மாநில பொதுச் செயலாளர் ராமசாமி விடுங்களா?”
“.....”
“ராமசாமிதான் பேசறதா? நான் வக்கீல் கண்ணபிரான் பேசறேன். ஒரு அர்ஜெண்ட் மேட்டர். கொஞ்சம் உடனே இங்கே வர முடியுமா?”
“.....”
“சரி, உடனே வந்துடுப்பா. உனக்காக வேறொருத்தரைக் காக்க வச்சிட்டிருக்கேன்.”
பத்து நிமிஷங்களில் போர்டிகோவில் ஒரு கார் சீறிப் பாய்ந்து கொண்டு வந்து நின்றது. கருகருவென்று அடர்ந்த தலைமுடியும், அரும்பு மீசையும் களையான முகமுமுள்ள ஓர் உயரமான இளைஞர் இறங்கி வக்கீலை நோக்கிக் கை கூப்பியபடி வந்தார். மாரியம்மாள் இந்த ஆளைப் பல இடங்களில் பார்த்திருக்கிறாள். தினசரிகளிலும் புகைப்படங்கள் வந்திருக்கின்றன. ஆளும் கட்சியின் முக்கியப்புள்ளி. ‘கிங் மேக்கர்’ என்று கூட மக்கள் பேசிக் கொள்வது உண்டு. அவளும் வந்தவரைக் கும்பிட்டாள். கண்ணபிரான் இராமசாமியின் குடும்ப வழக்கறிஞர் என்பது தவிர மிகவும் நெருங்கிய நண்பர் போலிருக்கிறது.
உள்ளுர மாரியம்மாளிடம் நம்பிக்கை ஊற்றுக் கண் திறந்தது.
அவளையும் வைத்துக் கொண்டே கண்ணபிரான் இராமசாமியிடம் விவரிக்கலானார் :
“என்னப்பாது? உங்க ஆட்சியிலே உடல் ஊனமுற்றோர் ஆண்டிலே உடல் ஊனமுற்ற பெண்களை மேலும் ஊனப்படுத்தறாங்க. இதுதான் நீங்க உடல் ஊனமுற்றோர் ஆண்டைக் கொண்டாடற லட்சணமா?”
“என்ன நடந்திச்சுன்னு சொல்லுங்கண்ணே உடனே கவனிக்கிறேன்." கண்ணபிரான் மாரியம்மாளுக்குக் கொடுக்கப்பட்ட மெமோவைக் காட்டி இராமசாமிக்கு எல்லாவற்றையும் விளக்கிச் சொன்னார்.
கேட்டுவிட்டு ஆத்திரமடைந்த இராமசாமி, “தாய்க்குலத்துக்கு இப்படிக் கேடு சூழ்ந்த கயமை எதுவாயிருந்தாலும் அது தண்டிக்கப்படும் அம்மா! நீங்க கவலைப்படாதீங்க” என்று சொற்பொழிவுப் பாணியில் மாரியம்மாளிடம் கூற, இராமசாமியை இடைமறித்து,
“இந்தா பாரு ராமசாமி! இது ரொம்ப நாகுக்கான விஷயம். முள் புதரிலே விழுந்த வேஷ்டியை எடுக்கிற மாதிரி. கையிலேயும் முள் குத்தப்படாது, வேஷ்டியும் கிழியக்கூடாது. ஜாக்கிரதையாச் சமாளிக்கனும்” என்றார்.
“என்ன செய்யலாம்னு நீங்களே சொல்லுங்கண்ணே!”
“இதான் அந்த சூப்பிரண்டோடஃபோன் நம்பர்...”
இராமசாமி அந்த நம்பரை வாங்கிக் கொண்டு கண்ணபிரானின் முகத்தைப் பார்த்தான். அவர் அவனிடம் சொன்னார்.
“இவளுக்கு அவன் கெடுதல் பண்ணக்கூடாது. அதை அவனுக்குப் புரிய வைப்பதற்காக நாம் அவனுக்குக் கெடுதல் பண்ணித்தான் ஆகணும்கிறது இல்லே! மறுபடி இவங்ககிட்டே வாலாட்டினா - இது பிள்ளைப்பூச்சியா இராது. தேளாகத்தான் மாறவேண்டியிருக்கும். மாறும்னு - புலப்படுத்தினால் போறும்.”
"கவலைப்படாதீங்கண்ணே! உங்க முன்னாடி இப்பவே கச்சிதமா முடிக்கிறேன் பாருங்க.”
இராமசாமி டெலிபோனைச் சுழற்றினான்.
எதிர்ப்புறம் போன் எடுக்கப்பட்டது.
“ஆபீஸ் சூப்பிரரெண்டு இராவணனோட பேசணும். நான் மாநிலப் பொதுச் செயலாளர் - தலைமை நிலையத்திலிருந்து பேசறேன்.”
எதிர்ப்புறம் போனை எடுத்திருந்த சார்ஜெண்ட் அல்லது வாட்ச்மேன் போனை இராவணனிடம் கொடுத்திருக்க வேண்டும்.
"மிஸ்டர் இராவணன்! நான்மாநிலப் பொதுச்செயலாளர் இராமசாமி பேசறேன். உங்கஆபீஸ்ல மாரியம்மாள்னு ஒரு ஸ்வீப்பர் இருக்காங்களா..? அவங்களை அவங்க சேவைக்காக இந்த உடல் ஊனமுற்றோர் ஆண்டில் எங்க கட்சி சார்பிலே கெளரவிக்கனும்னு ஒரு பங்ஷன் அரேன்ஜ் பண்ணிக்கிட்டிருக்கோம்.நோ.நோ.நீங்க இதுக்காக என்னைப் பார்க்க வரணும்ங்கிறது இல்லே. அந்தம்மாவைப் பார்த்து என் சார்பிலே பாராட்டையும் மரியாதையையும் தெரிவியுங்க போதும்.”
மேற்கொண்டு எதுவும் பேசாமல் போனை வைத்தான் இராமசாமி.
“போதுமா அண்ணே.”
“நீ எமகாதகன் அப்பா..” “நீங்க எப்பவும் போல ஆபீசுக்குப் போங்கம்மா...ஒண்ணும் கண்டுக்காதீங்க.நான் பேசினேன்கிறது ஆபீஸ் பூராப் பரவிடும். ஒரு பய உங்ககிட்டே வாலாட்ட மாட்டான் இனிமே.” “நன்றிங்க.” மாநிலக்கட்சிப் பொதுச் செயலாளர் இராமசாமியையும் வக்கீல் கண்ணபிரானையும் வணங்கி விடைபெற்றுக் கொண்டு புறப்பட்டாள் மாரியம்மாள். அவள் துடைப்பமும் கையுமாகச் சூப்பிரெண்டெண்டின் அறையைப் பெருக்கிச் சுத்தம் செய்ய நுழைந்தபோது, சார்ஜெண்ட் பயபக்தியோடு ஓடிவந்து, “வணக்கம் அக்கா சூப்பிரெண்டு உங்களைப் பார்க்கணும்னாரு” என்றாள். வணக்கமும் புதிது. அக்காப் பட்டமும் புதிது. அவள் எதையும் காண்பித்துக் கொள்ளாமல் சகஜமாகத் தன் பணியில் ஈடுபட்டாள். “வணக்கம் அண்ணி” இது சூப்பிரெண்டெண்ட் இராவணன். அவள் பதில் வணக்கம் சொல்லக்கூட இல்லை. அவராகவே மேலும் பேசிக் கொண்டே போனார்."என்ன இருந்தாலும் நீங்க வயதுல மூத்தவங்க உங்களை அண்ணின்னு கூப்பிடறதுதான் முறை” அவள் பதில் எதுவும் சொல்லாமல் கருமமே கண்ணாகத் தன் வேலையைச் செய்துகொண்டிருந்தாள். அவளைவிடச் சற்று மூத்த வாட்ச்மேன், "இப்பவே லேட்டாயிரிச்சு. நீ பெருக்கி முடிக்கவே ஒம்பதரைஆயிரும்.அப்பாலே தண்ணி ரொப்ப முடியாது.உனக்குப் பதிலா இன்னிக்கி நானே தண்ணி ரொப்பிடலாம்னு பார்க்கிறேன்” - என்று அனுசரணையாகக் குரல் கொடுத்தான். - இதற்கும் அவள் பதில் சொல்லவில்லை. குனிந்த தலை நிமிராமல் தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். தன்னளவில் இன்னும் பிள்ளைப்பூச்சியாகத்தான் இருந்தாள்.ஆனால், மற்றவர்களுக்குத் தேளாகத் தோன்றினாள் போலிருக்கிறது.அது போதுமே. - . “டீ குடிக்கிறியா மாரியம்மா." - வாட்ச்மேனின் குரல் பாசத்தோடு ஒலித்தது. “வேண்டாம்.” - தன் வேலையில் குறிப்பாக அவள் தொடர்ந்து தரையைப் பெருக்கிக் கொண்டிருந்தாள். - - அந்த ஆபீஸில் காலம் காலமாகத் தொடர்ந்து சுத்தம் செய்ய வேண்டிய குப்பை கூளம் அத்தனையும் அன்று ஒரு நாளிலேயே சுத்தமாகிவிட்டாற் போன்ற அவ்வளவு நிம்மதியோடும் திருப்தியோடும் பெருக்கிக் கொண்டிருந்தாள் மாரியம்மாள்.
(கல்கி, தீபாவளி மலர், 1987)