நா. பார்த்தசாரதி சிறுகதைகள் 2/ஸ்ரீராமனைக் காட்டிலும்

172. ஸ்ரீராமனைக் காட்டிலும்

வ்வளவுதான் படித்திருந்தாலும், என்னதான் நாகரிகம் அடைந்திருந்தாலும், மனிதர்கள் இதில் மோசமாகத்தான் இருப்பார்கள் என்று தோன்றியது. அவதார புருஷனாகிய இராமனே விதி விலக்காக நடந்து கொள்ளவில்லை என்றால் சாதாரண மனிதர்கள் எம்மாத்திரம்?

‘அவன்’ முதல் தடவை டெலி ஃபோன் பண்ணி ஐந்நூறு ரூபாய் ரொக்கத்தோடு, லால்பாக் தோட்டத்தில் சந்திக்கும்படி சொன்னான். நீண்ட தயக்கத்துக்குப் பின் கெளரி யாருக்கும் தெரியாமல் ஒர் ஆட்டோ வைத்துக் கொண்டு போய்ப் பணத்தை அழுது விட்டு வந்தாள்.

உண்மையில் அந்த முறை அவன் தனக்கு வறுமை, பண முடை, சோற்றுக்கே இல்லை என்றுதான் பண உதவி கேட்டதாகச் சொன்னான். வேறு பயமுறுத்தல் எதுவும் இல்லை.

“பள்ளிப் பருவத்துப் பால்ய சிநேகிதத்துக்காகவும் கூடப் படித்தவன், சொந்த ஊர்க்காரன் சிரமப்படுகிறானே என்ற இரக்கத்துக்காகவும், இந்தத் தடவை எப்படியோ உதவி பண்ணிட்டேன்! இனிமேல் நீ என்னைத் தொந்தரவு பண்ணக் கூடாது சங்கர்” - என்று கெளரி அவனிடம் மன்றாடிய போது, “பிராமிஸ்ஸா சொல்றேன்! எனக்கு வேலை கிடைச்சு முதல் மாதச் சம்பளம் வாங்கினதும், இந்த ஐந்நூறை உனக்கு நான் வட்டியோடு திருப்பிக் குடுத்துடறேன்” என்றான் சங்கர்.

ஒரு நாள் கணவன் ஆபீஸ் புறப்பட்டுப் போனதும் ,மல்லேசுவரத்துக்கு வீடு தேடி வந்து காலிங் பெல்லை அழுத்தினான் சங்கர். அவளுக்குத் திக்கென்றது.

“என்னைத் தப்பா நெனைச்சுக்காதே கெளரீ! நான் ஒரு ஆபத்துலே சிக்கிண்டிருக்கேன் தப்பணும்னா உடனே ‘ஒரு தவுஸண்ட் ருபீஸ்’ வேணும். நீதான் கொஞ்சம் பெரிய மனசு பண்ணணும்! இந்த ஊர்லே எனக்கு வேற யாரையும் தெரியாது.”

அவன் துணிந்து வீடு தேடி வந்ததைக் கண்டவுடனே, கெளரியின் ஆத்திரமும், பதற்றமும் அதிகமாயின. நிஜமாகவே கஷ்டம் பொறுக்க முடியாமல் வருகிறானா, அல்லது மெல்ல மெல்லத் தன்னை ‘பிளாக் மெயில்’ செய்து பணம் பறிக்கும் முயற்சியா? சாமர்த்தியமாக அவனைப் பங்களாவுக்குள் விடாமலே முகப்பில் தோட்டத்தை ஒட்டி இருந்த வராந்தாவிலேயே ஒரு நாற்காலியைப் போட்டு உட்கார வைத்துவிட்டு, “இரு! காபி கொண்டு வருகிறேன்” என்று உள்ளே சென்றவளைப் பின்னாலேயே ஓடிவந்து வழி மறித்து,”இந்த ட்ரிக் எல்லாம் எங்கிட்ட வச்சுக்காதேடி. கெளரி! போலீசுக்கு ஃபோன் அது இதுன்னு முயற்சி பண்ணினா, எல்லாம் ரசாபாசமாய்ப் போயிடும். 'என் உயிரினுமினிய சங்கர்! நீயின்றி நானில்லை. நாம் இன்றுபோல் என்றும் இணை பிரியாமல் வாழ்வோம்’னு நீ உன் கைப்பட எழுதின லெட்டர் இன்னும் என்னிடம்தான் இருக்கு” - என்று மிரட்டினான் அவன். இதை அவள் எதிர்பார்க்கவில்லை.

அவள் மனத்தில் எழுந்த சந்தேகம் உறுதிப்பட்டது. இது ‘பிளாக் மெயில்’தான். ஃபோனில் பணம் கேட்டுப் புலம்பிக் கொண்டிருந்தவன் வீட்டுக்கே வந்து விட்டான் இன்று. கெளரி தன் கோபத்தையும், எரிச்சலையும் உள்ளூற அடக்கிக் கொண்டு சமையற்காரப் பெண்மணியிடம் சொல்லி, அவனுக்கு ஒரு காபி கலந்து கொண்டு போய்க் கொடுத்த பின் இதமாகவும், தன்மையாகவும், சுபாவமான குரலில்,”இத பாரு சங்கர்! நீ அவர் வீட்டிலே இருக்கிறப்போ வா. உன்னை அவருக்கு இண்ட்ரொடியூஸ் பண்ணி விட்டுடறேன். உன் கஷ்டம் தீர உனக்கு ஒரு நல்ல ‘ஜாப்’ கூட அவராலே தேடித் தர முடியும்”- என்று ஆரம்பித்தாள்.

கெளரி தன் கணவனைப் பற்றிப் பேச்சை ஆரம்பித்ததும், சங்கரின் முகத்தில் கலவரமும் பதற்றமும் தென்பட்டன.

“என்னை எப்படியாவது வளைச்சுப் பிடிச்சு மாட்டி வைக்கலாம்னு பார்க்கிறியா கெளரீ? அதெல்லாம் நடக்காது. நான் ஒண்ணும் ஏமாளி இல்லே. எனக்கு வேண்டியதை எப்படிக் கறக்கிறதுன்னு தெரியும் எனக்கு” - என்று கடுமையாகவும், கறாராகவும் பதில் வந்தது அவனிடமிருந்து.

இப்போது உண்மை மிகவும் கசப்பானதாக அவளுக்குப் புரிந்தது. சினிமாக்களிலும், நாடகங்களிலும், பத்திரிகைக் கதைகளிலும் படித்திருந்த, பார்த்திருந்த கற்பனைகள் இன்று அவள் வாழ்விலேயே நடக்கின்றன. அவளே பரிதாபத்திற்கும், பரிதவிப்பிற்கும் உரிய கதாநாயகியாகி இருந்தாள் இன்று.

அவள் அவனோடு பள்ளி இறுதி வகுப்புப் படிக்கும் போது விளையாட்டாக எழுதிய ஒரு கடிதம் - அதன் வாக்கியங்கள் கூடச் சங்கர் டிக்டேக் செய்தவைதான். அவனுடைய கையெழுத்து முத்து முத்தாக இருக்கும். தன் கையெழுத்து அப்படித் திருந்துவதற்கு என்ன செய்ய வேண்டும் என்று அவள் சக மாணவனான அவனிடம் யோசனை கேட்டதற்கு அவன் கொடுத்த பயிற்சிப் பாடங்களில் ஒன்று இந்த மாதிரிக் கடிதம் எழுதுவது. அந்த அறியாப் பருவத்தில் அவள் அதை நம்பினாள்.

“எதையும் பிரியப்பட்டுச் செய்தால் நன்றாக வரும். நீ எனக்குப் பிரியமாக ஒரு கடிதம் எழுதுவதாக நினைத்துக் கொண்டு எழுது. நல்லா வரும். எழுத்தும் அச்சுக் குண்டா இருக்கும்.”

“நான் உனக்கு அப்பிடி எழுதறது தப்புடா?”

“தப்பு ஒண்னுமில்லேடி! தமிழ் சார் கிளாஸ்ல அடிக்கடி சொல்றதை நீ கேட்டதில்லையா? பிரியப்பட்டு அக்கறை காட்டி மனசு வச்சு எழுதினால் எந்த எழுத்தும் முத்து முத்தா இருக்கும். நான் உனக்கு எழுதறதெல்லாம் முத்து முத்தா இருக்கே, அதுக்கு என்ன காரணம்னு யோசிச்சியா?”

கெளரி இப்படி அன்று எழுதிய கடிதம், விளையாட்டுத்தனமாக அவனோடு கை கோத்தபடி எடுத்துக் கொண்ட ஒரு புகைப்படம் இரண்டும்தான் இன்று அவளுக்குத் தலைவலிகள் ஆகி இருந்தன. அவளைப் பயமுறுத்த அவனுக்கு ஆயுதங்களாயின.

திடீரெனப் புற்றிலிருந்து பாம்பு படமெடுப்பது போல் இத்தனை ஆண்டுகளுக்குப் பின் அவற்றை வைத்துக் கொண்டு தன்னை சங்கர் ‘'பிளாக் மெயில்’ செய்ய முடியும் என்று, அவள் அன்று - அந்தப் பழைய நாட்களில் கனவு கூடக் கண்டிருக்கவில்லை. சூது வாது தெரியாத பேதைப் பருவம் அது.

இன்று கெளரியின் கணவன் பெங்களூரில் ஒரு கம்பெனி ‘எக்ஸிகியூட்டிவ்’. மிக மிக நல்லவன். கண்ணுக்கு அழகும், பண்பும் ஒரு சேர அமைந்த ஒரு கணவன் என்று கெளரியே அவனைப் பற்றிப் பெருமிதம் கொண்டிருந்தாள். கார், டிரைவர், சமைக்க ஆள் என்று அவளை மகாராணி போல் வைத்துக் கொண்டிருந்தான் அவன். அவர்களுக்குக் கல்யாணமாகி ஒரு வருடம் கூட முழுமையாக முடியவில்லை. ராமசந்திர கிருஷ்ணகுமார் என்ற முழுப்பெயர் ராம்.கே. குமார் என்ற சுருங்கியிருந்தது. கெளரியின் பெற்றோர்கள் சென்னை அடையாற்றில் இருந்தனர். குமாரின் பெற்றோர்கள் மயிலாப்பூரில் இருந்தனர்.

இளசுகள் இரண்டும் பெங்களூரில் ஹனிமூன் அனுபவிப்பது போல் ஹாயாக இருக்கட்டும் என்று அவர்களைத் தனியாக விட்டிருந்தனர் பெற்றோர்.

குமார் அவளை மிக மிகச் சுதந்திரமாக நடத்தினான். “கெளரி! கட்டுப் பெட்டித் தனமாகப் பழைய கிராமாந்தரத்து மனைவி போல் ‘அவர் இவர்லாம்’ தேவையில்லை. நீ ஸ்ட்ரெயிட்டா எந்தத் தயக்கமும் இல்லாமல் குமார் என்றே என்னைக் கூப்பிடலாம். நான் உன்னை எப்பிடிக் கெளரி என்று வாய் நிறையக் கூப்பிடறேனோ, அப்படியே நீயும் என்னைக் கூப்பிட உரிமை உண்டு” என்று அவனே அவளை வற்புறுத்திச் சொல்லியிருந்தான்.

“என்னை மாதிரி ஒரு கம்பெனி எக்ஸ்ஸிக்யூடிவ் நேரம் காலம் பார்க்காமல் அலைய வேண்டியிருக்கும். வேற யாருக்காவது ‘ட்ரீட்’ குடுக்க வெளியிலேயே லஞ்ச்சையோ, டின்னரையோ முடிச்சுக்க வேண்டியிருக்கும். அதுனாலே நீ ‘அவர் வந்ததும் சாப்பிட்டுக்கலாம்’னு எந்த வேளையிலும் எனக்காக வீணாக் காத்திருக்கக் கூடாது.அது உன் ஹெல்த்தைப் பாதிக்கும்.இதிலே எல்லாம் நாம பத்தாம் பசலியாயிருக்க வேண்டாம்” என்று செல்லமாக அவளைக் கடிந்து கொள்வான் குமார். அத்தனை தங்கமான குணம்.

இராமன், கிருஷ்ணன் இருவரையும் இணைத்த பெயர் அவனுக்கு இருந்தாலும், அவன் கிருஷ்ணனைப் போல் பல கோபிகைகளின் சகவாசமுள்ளவனோ, இராமனைப் போல் பிறருக்காகச் சொந்த மனைவியையே நெருப்பில் நுழையச் சொல்கிறவனாகவோ இல்லை.இது பொதுவான கணிப்புத்தான்.ஆனால் இராமனின் சந்தேகம் என்பது ஒவ்வோர் ஆண்பிள்ளையுடனும் கூடப் பிறந்தது. கிருஷ்ணனின் பலரைக் கவரும் குணம் ஒவ்வோர் ஆணுக்கும் உண்டோ இல்லையோ, இராமனின் சந்தேகம் ஒவ்வோர் ஆணுக்கும் நிச்சயமாக உண்டு. தெய்வீக அவதாரம் என்று கொண்டாடப்படும் இராமனையே கேவலம் ஒரு சிறிய சந்தேகம் வெறும் மிருக குணமுள்ள சாதாரண மனிதனாக்கி விட்டதென்றால் மற்றவர் எம்மாத்திரம்!

அவர்களுடைய உயர்நிலைப் பள்ளி நாளில் எழுதியது எடுத்தது என்றாலும் -அந்தப் பழைய கடிதங்கள், புகைப்படங்களுடன் சங்கர் தன் கணவன் குமாரைச் சந்தித்து இல்லாததும், பொல்லாததுமாக அளந்தான் என்றால் குமாரின் மனநிலை எப்படி மாறக்கூடும்? கற்பனை செய்த போதே கெளரியின் உடல் நடுங்கியது.

இரண்டாவது தடவையும் அவள் அவனுக்கு - அவனது மிரட்டலுக்கு அடிபணிந்தாள். மூச்சுவிடாமல் லாக்கரைத் திறந்து புத்தம் புதிய நோட்டுக்களாக எண்ணிப்பத்து நூறு ரூபாய் நோட்டுக்களை சங்கரிடம் கொண்டு வந்து கொடுத்தாள். “எல்லா நோட்டையுமே இப்பிடி முழுசு முழுசாக் குடுத்தா எப்படி? இங்கேருந்து நான் போக வேண்டிய இடத்துக்கு ஆட்டோவில் போகப் பத்து ரூபாயாவது ஆகுமே? அதுக்குச் சேஞ்ஜ் வேணாம்?”

மறு பேச்சுப் பேசாமல் மேலும் ஒரு பத்து ரூபாய்த் தாளை எடுத்து வந்து இயந்திரமாக இயங்கி, அவனிடம் நீட்டினாள் கெளரி. எப்படியாவது அவன் அங்கிருந்து தொலைந்தால் போதும் என்றிருந்தது அவளுக்கு.

இன்னொருவனுடன் கடிதத் தொடர்பு இருந்தது, இருக்கிறது என்ற சந்தேகம் ஏற்பட்டுவிட்டதன் காரணமாக மனைவியைக் கணவன் குரூரமாகக் கொலை செய்ததாகப் பத்திரிகைகளில் வெளிவந்த செய்திகள் ஒவ்வொன்றாக அவளுக்கு நினைவு வந்தன.

அவள் முகத்தில் மலர்ச்சி பறிபோனது. இரவில் உறக்கம் பறிபோனது. சதா எதையோ பறி கொடுத்தது போல் அவள் இருந்ததைக் கண்டு குமாரே அன்றிரவு சாப்பிடும்போது அவளை விசாரித்தான்.

“கெளரி! உனக்கு என்ன வந்தது? ஏன் என்னமோ மாதிரி இருக்கே? உடம்பை ஏதாவது பண்றதா? இல்லே, நான் ஏதாவது என்னையறியாமலே உன்னைக் கடிந்து சொல்லிட்டேனா? உன் வாட்டத்துக்கு என்னதான் காரணம்”

"அதெல்லாம் ஒண்னுமில்லே! நான் எப்பவும் போலத்தான் இருக்கேன்.” அவள் மழுப்பினாள். அவன் நம்பவில்லை. மறுநாள் அதிகாலையிலேயே பம்பாயிலிருந்து வருகிற கம்பெனி எம்டியை வரவேற்க விமான நிலையம் போயாக வேண்டும் என்று குமார் விடிந்ததுமே புறப்பட்டுப் போய்விட்டான். .

அன்று பதினொரு மணிக்கு மேல் கெளரிக்கு மறுபடி சங்கர் ஃபோன் செய்தான். இந்தத் தடவை அவனுடைய கோரிக்கையில் தொகை ஏறியிருந்தது. ஐயாயிரம் ரூபாய் வேண்டுமாம். போனால் போகிறதென்று கெளரியின் மேல் கருனை கூர்ந்து இரண்டு நாள் தவணை கொடுத்திருந்தான்.

“இப்படி வதைப்பதற்குப் பதில் நேரே வந்து என்னைக் கழுத்தை நெரித்துக் கொலை பண்ணிவிட்டுப் போயிடு” - என்று கெளரியே ஃபோனில் அவனிடம் குமுறினாள்.

அவன் அவள் குமுறலைப் பொருட்படுத்தவேயில்லை.

"மறந்துடாதே! நாளன்னிக்கிக் காலையிலே பதினொரு மணியிலேருந்து பன்னிரண்டு மணிக்குள் அதே பழைய லால்பாக் கார்டன்ல கிளாஸ் ஹவுஸ் அருகே எதிர்பார்த்துக் காத்திருப்போன்” - என்று காரியத்தை மீண்டும் வற்புறுத்திவிட்டு ஃபோனை வைத்துவிட்டான்.

இப்படிச் சித்திரவதையை அநுபவிப்பதற்குப் பதில், தானே கணவனிடம் எல்லாவற்றையும் தெளிவாகச் சொல்லிவிட்டு, 'அவன் விட்ட வழி விடட்டும்' என இருக்கலாமா என்று கூட அவளுக்குத் தோன்றியது.

குமார் அவள் பேருக்கு ஒரு ‘ஸேவிங்ஸ் கணக்கு வைத்துக் கொடுத்து அவ்வப்போது இரண்டாயிரம் மூவாயிரம் என்று வீட்டுச் செலவுக்காக அதில் டெபாஸிட் செய்வான். இது அநேகமாக ஒவ்வொரு மாதத் தொடக்கத்திலும் நடக்கிற வழக்கம். அப்போது மாதத் தொடக்கமும் இல்லை. அதில் இருந்ததை எடுத்து, ஏற்கெனவே அவனுக்கு அதுதான் அந்தக் கிராதகன் சங்கருக்கு' அழுதாயிற்று.

'இப்போது இனி மேல் ஸேவிங்க்ஸ் அகெளண்டில் விட வேண்டிய மினிமத்தை விட்டு விட்டு எடுத்தால் கூட இரண்டாயிரம்தான் தேறும். பாக்கி மூவாயிரத்துக்கு எங்கே போவது? கணவனுக்குத் தெரியாமல் மார்வாரி கடையில் நகை எதையாவது அடகு வைக்கலாமா? அவருக்குத் தெரிந்து விட்டால் என்ன செய்வது? ஒரேயடியாக மனம் குழம்பினாள் அவள். மண்டையே வெடித்துச் சிதறிவிடும் போலிருந்தது. கெடுவுக்கு நடுவே ஒரு நாள் தான் மீதமிருந்தது. நாளை மட்டும்தான். நாளன்றைக்குக் காலையில் பதினொரு மணிக்கு அவனைப் பார்த்துப் பணம் கொடுத்தாக வேண்டும்.

அன்று இரவு மணி பதினொன்றரை. கணவன் அயர்ந்து தூங்கிக் கொண்டிருந்தான். அவள் படுக்கையில் புரண்டு கொண்டிருந்தாள். டெலிஃபோன் மணி அடிக்க ஆரம்பித்தது. வெளியே ஹாலில் இருந்த டெலிஃபோனுக்குப்படுக்கை அறையில் ஒரு எக்ஸ்டென்ஷன் இருந்தது. ஒரு பட்டனை அமுக்கினால் உள்ளே இருந்தே டயல் செய்து பேசலாம். வெளியே ஒருவர் - உள்ளே ஒருவராக இருவர் ஒரே சமயத்தில் ஒரு இன்கம்மிங் காலைக் கேட்கவும் வசதி இருந்தது. .

பதற்றத்தோடு கெளரி வெளியே ஒடிப் போய் ஹாலில் ஃபோனை எடுத்தாள். எதிர்ப்புறத்து ஆளை தன்னோடு பேசுகிற ஆளைக் குரல் மூலம் உறுதிப் படுத்திக் கொள்ளாதவரை வாய் திறக்கத் தயங்குவது போல மெளனம் சாதித்தான். -

“யெஸ். கெளரி ஹியர்” என்று அவள் குரல் கொடுத்த பின்பே எதிர்ப் பக்கத்திலிருந்து பதில் வந்தது. “நான்தான் சங்கர்! நாளன்னிக்கிக் காலையிலே பதினொரு மணியிலேருந்து பன்னிரண்டுமணிக்குள்-நேரத்திலே மாறுதல் இல்லே.ஆனால் இடத்தை மாத்தறேன். லால்பாக் - கார்டன்ல நாளன்னிக்கி கிளாஸ் ஹவுஸ்லே என்னமோ லிங்காயத் கான்பரன்ஸ்னு பேப்பர்ல பார்த்தேன். அதனாலே ஏகப்பட்ட போலீஸ் நிற்கும். அந்த இடம் சரிப்படாது. அதனால் நீ விதான் செளதா எதிர்த்தாப்ல கப்பன் பூங்கான்னு இருக்கே, அங்கே அதுக்குள்ளே ஒரு சில்ரன்ஸ் பார்க் இருக்கு அதுனோடமுகப்புக்கு வந்துடு! உனக்கு இன்னொரு ஆப்ஷன் கூட ஆஃபர் பண்றேன். நாளன்னிக்கே மொத்தமா இருபத்தையாயிரம் கொண்டு வந்து தர்றதா இருந்தா எங்கிட்ட இருக்கிற உன்னோட லெட்டர்ஸ், போட்டோ எல்லாத்தையுமே திருப்பிக் குடுத்துடலாம். முடிஞ்சா இருபத்தையாயிரத்தோடு வா."

அவள் பதிலை எதிர்பார்க்காமலே எதிர்ப் பக்கம் ஃபோன் துண்டிக்கப்பட்டுவிட்டது. இருபத்தையாயிரத்தைக் கொண்டு போய் அழுது எல்லாவற்றையும் திருப்பி வாங்கிக் கொண்டுவந்து விட்டால் இந்த பிளாக் மெயிலில்’ இருந்து நிரந்தரமாக விடுதலை கிடைக்குமே என்றுகூடத் தோன்றியது.

'இவனைப் போல ஒர் அயோக்கியனை எப்படி நம்புவது? எல்லாவற்றுக்கும் ஜெராக்ஸ் காப்பி எடுத்து வைத்துக் கொண்டு நம்மை ஏமாற்றினாலும் ஏமாற்றிவிடுவான் என்று பயமாகவும் தயக்கமாகவும் கூட இருந்தது. நல்ல வேளை! குமார் அயர்ந்து உறங்கிய பின்பு இந்த ஃபோன் வந்து தொலைத்தது. இல்லாவிட்டால், அவரே எடுத்துப் பேசும்படி ஆகியிருக்கும். என் குட்டும் உடைபட்டு நாறியிருக்கும்.

மறுநாள் பூராவும் ஐயாயிரரூபாய் பணம் தயார் செய்து கொள்ளுவதில் கழிந்து விட்டது. காலையில் காபி யருந்தும் போது குமார் மறுபடி அவளைச் செல்லமாகக் கடிந்து கொண்டான்.

“வர வர நீ புதிராக மாறிண்டிருக்கே கெளரி ராத்திரியெல்லாம் நீ தூங்காமப் புரண்டு புரண்டு படுத்தது எனக்குத் தெரியும். ராத்திரி தூக்கம் இல்லாததாலே தான் உன் முகம் இப்பப் பேயறைஞ்சமாதிரி இருக்கு”- . அவன் அவளைக் கூர்ந்து நோக்கிப் புன்னகை புரிந்தான். பின்பு மெல்லச் சொன்னான்; ‘என்னை நீ ஏமாத்த முடியாது கெளரீ! உன் முகத்திலே பழைய சிரிப்பையும், மலர்ச்சியையும் காணலியே? சில சமயம் புரியாத்தனத்தினாலயும் நமக்குள் நாமே ஒருநரகத்தைப் படைத்துக்கொண்டு சிரமப்படுகிறோம். மனசு திறந்து பேசினால் முக்கால்வாசி வேதனை போயிடும்”

___

“சரி! உங்கிட்ட பேசிப் பிரயோஜனமில்லே. ராத்திரித் தான் தூக்கமில்லே. பகல்லியாவது தூங்கு."- என்று கூறிவிட்டு அலுவலகம் புறப்பட்டான் குமார்'

இப்படி இன்று கணவன் தூண்டித் தூண்டிக் கேட்டதிலிருந்து நள்ளிரவில் ஃபோன் கால் வந்ததுதான் வெளியே ஹாலில் உள்ள மற்றொரு ஃபோன் மூலம் பேசியது எல்லாம் அவனுக்குத் தெரிந்திருக்குமோ என்று முதலிலே சந்தேகமாயிருந்தாலும் அப்புறம் அவன் தன்னிடம் பேசிய தோரணையிலிருந்து அவனுக்கு எதுவும் தெரிந்திருக்க வழியில்லை என்ற முடிவுக்கு வந்தாள் கெளரி.

கப்பன் பார்க்கில் போய் ஆட்டோவிலிருந்து இறங்குகிற போது உடம்பெல்லாம் வேர்த்துக் கொட்டியிருந்தது. கையில் எப்போதோ பட்டுப் புடவை வாங்கிய இடத்தில் கொடுத்த பாலிதின் பையில் அதிக கனமில்லாமல் இருப்பதற்காக ஐம்பது நூறு ரூபாய்களாக மாற்றித் தயாராயிருந்த ரூபாய் ஐயாயிரம் சில்லறையாக ஒரு பத்து அல்லது இருபது வேண்டுமென்று அவன் கொசுறுக்கு மன்றாடினால் - அதையும் கொடுப்பதற்கு ஐந்து ரூபாய் நோட்டுக்கள் நாலு இவற்றோடு கப்பன் பூங்காசில்ரன்ஸ் கார்னரில் அவள் இறங்கும்போது மணி பத்து ஐம்பத்தைந்து. அதிக ஆள் நடமாட்டமில்லை. ஒரு மரத்தடியில் மோட்டார் சைக்கிளை நிறுத்திவிட்டு யாரோ இரண்டு மூன்று முரட்டு ஆட்கள் சிகரெட் புகைத்தவாறே பேசிக் கொண்டிருந்தனர்.

சங்கர் சொல்லியிருந்தபடி குழந்தைகள் பூங்கா முகப்பில் நின்று கொண்டிருந்தான். அவளைக் கண்டவுடன், “என்ன கொண்டு வந்திருக்கே கெளரி? சின்ன அமவுண்டா? பெரிய அமவுண்டா? இதோ, இந்தக் கவர்ல அந்த லெட்டர்ஸ் போட்டோல்லாம் தயாராகப் போட்டு வச்சிருக்கேன். உனக்கு நம்பிக்கையில்லேன்னா நீயே இதைப் பிரிச்சு எல்லாம் சரியாயிருக்கான்னு பார்த்துட்டு அப்புறம் அமவுண்டை எங்கிட்ட குடு! போதும்” என்று தன் கையிலிருந்த தடித்த கவரை அவளிடம் நீட்டினான் அவன்.


“வேண்டாம் சங்கர்! இப்ப எங்கிட்ட அவ்வளவு இல்லே! இந்த அஞ்சுக்கே’ கைவளையலை மார்வாரி கடையிலே வச்சிருக்கேன்” -

இதைக் கேட்டு அவன் ஏளனமாகச் சிரித்தான். "யார் கிட்ட கதை அளக்கிறே! என்னைக் கிறுக்கன்னு நினைச்சியா நீ? மாசம் பத்தாயிரத்துக்கு மேலே சுளை சுளையாச் சம்பாதிக்கிற புருஷன். புத்தம் புது பென்ஸ் கார். மல்லேசுவரத்திலே தோட்டத்தோட பெரிய பங்களா. இவ்வளவையும் வைத்துக் கொண்டு மார்வாரி கடையிலே கைவளையை அடகு வச்சு ஐயாயிரம் வாங்கினேன்னு கப்ஸா அடிச்சா. பைத்தியம் கூட நம்பாது அதை”.

“காரு, வீடு, எல்லாம் கம்பெனி அரேன்ஜ் பண்ணிக் கொடுத்தது. சொந்தமில்லே”

“சரி பிஸினசுக்கு வரேன். அப்போ நீ வெறும் ஐயாயிரம் தான் கொண்டாந்திருக்கே ரைட் பின்னாலே பார்த்துக்கலாம். பொன் முட்டை இடற வாத்தை இப்பவே வயிற்றைக் கிழிக்க வேணாம்.கொண்டாந்திருக்கிறதைக் குடு இஃப் யூடோண்ட்மைண்ட் ஹாவ் ஏ கிளான்ஸ்' என்று அந்தக் கவரை அவளிடம் அவசர அவசரமாக நீட்டினான். அவள் அதை வாங்கினாள். நடுங்கும் கைகளால் ஏதோ ஒர் ஆவலைத் தவிர்க்க முடியாமல் உறையைப் பிரித்தாள். முதல் கடிதத்திலிருந்து, “என் உயிரினு மினிய சங்கர்” என்ற அவளது பள்ளிப் பருவக் கையெழுத்து எட்டிப் பார்த்தது. புகைப்படங்களும் இருந்தன. -

அவற்றை அரைகுறையாகப் பார்த்த பயமும் ஆற்றாமையுமாக அவள் மறுபடி உறையிலிட்டுத் திருப்பிக் கொடுக்க இருந்தபோது மிக அருகே காலடி ஓசை கேட்டது. நிமிர்ந்தால், சற்று முன் மரத்தடியில் சிகரெட் பிடித்துக் கொண்டிருந்த இரண்டு (போலீஸ்காரர்கள் - மப்டியில் இருந்தவர்கள் என அறிய முடிந்தது) முரடர்களும் அவள் கணவன் குமாரும் நின்றனர். சூழ்ந்து கொண்டது போல வளைத்து நின்றனர். உடனே சங்கர் ஓட முயன்றான். முடியவில்லை. பிடிபட்டான். அவனிடமிருந்து கிடைத்த உறை இன்னும் கௌரியிடம்தான் இருந்தது. இன்னும் அவனிடம் திருப்பிக் கொடுக்கப் படவில்லை.

‘'நீ ஒண்ணும் பயப்படாதே! எனக்கு எல்லாம் தெரியும் கெளரீ! அன்னிக்கி ராத்திரி இவனோட நீ ஃபோன்ல பேசினதை நானும் பெட்ரூம் டெலிபோன் மூலம் எடுத்துக் கேட்டேன்” - என்றான் குமார்.

சற்றுத் தள்ளி நிறுத்தப் பட்டிருந்த போலீஸ் ஜீப் அருகே வந்தது. சங்கரைப் பிடரியில் பிடித்துத் தள்ளி ஜீப்பில் ஏற்றி விட்டு,”சார் அவங்க வாக்கு மூலம் தேவை! அப்புறம் அவங்களோட நீங்களும் ஸ்டேஷனுக்கு வந்து எழுதிக் குடுத்துட்டுப் போயிடுங்க” என்று குமாரிடம் சொல்லி விட்டு ஜீப்பைக் கிளப்பிக் கொண்டு போனார்கள் அவர்கள்.

“என்னை மன்னிச்சுடுங்கோ! நான் முதல்லேருந்தே உங்ககிட்ட எல்லாத்தையும் சொல்லாமலிருந்தது என் தப்புத்தான். மனசறிய நான் ஒரு பாவமும் பண்ணலே.”

இப்போது அவள் குரலில் குற்ற உணர்வு தொனித்தது. கணவன் தன் மேல் என்னென்ன சந்தேகப் படப் போகிறானோ, எதிர் கால வாழ்வு எப்படி எப்படி நரகமாகப் போகிறதோ என்று மனம் உள்ளூறப் பதை பதைத்துக் கொண்டிருந்தது அவளுக்கு.

“அசடே! நீ பண்ணினது ஒண்ணும் தப்பில்லே. உன்னை மாதிரி நெலைமையிலே நான் இருந்தாக் கூட இப்படி இதைத் தான் செய்திருப்பேன். அவன்தான் பெரிய ரோக். அவனை மாதிரிப் புல்லுருவிகள் தான் சமுதாயத்திலிருந்தே களையப்பட வேண்டும். என்னுடைய காலேஜ் டேஸ்ல கூட என்னோடு படித்த ஒரு பெண் எனக்கு அசட்டுப் பிசட்டென்று லெட்டர் போட்டிருக்கா. இன்னிக்கு அவ ஒரு மினிஸ்டரோடமனைவி. நான் அவளைப் போயி மிரட்டலாமா? கூடாது. உறவுகள் புனிதமானவை என்றால், அவற்றை விலை பேசக் கூடாது. சர்வ சாதாரணமானவை என்றால், அவற்றை மறந்து விட வேண்டும். இரண்டையும் செய்யாமல் இந்தப் பயல் பிளாக் மெயிலில்’ இறங்கியதுதான் சமூகக் கொடுமை.இவனைப் போன்றவர்களே இதில் குற்றவாளிகள்.”

“என்னிடம் உங்களுக்குத் தெரியக் கூடாதது எதுவுமில்லை. இந்தாருங்கள்! நீங்களே இதெல்லாம் படிச்சுடறது நல்லது” என்று அந்த உறையைக் குமாரிடம் நீட்டினாள் கெளரி.

குமார் புன்முறுவல் பூத்தபடி அவளைப் பார்த்தான். தயங்கியபடி அதை வாங்கினான். பிரித்தான்.

அங்கே பக்கத்தில் கப்பன் பூங்காவின் இலையுதிர் காலத்துச் சருகுகளைக் குவித்து எரித்துக் கொண்டிருந்த தோட்டக்காரனின் தீ மூட்டத்தருகே சென்று உறையிலிருந்தவற்றைத் தனித் தனியே பிரித்து அதில் ஒவ்வொன்றாகப் போட்டான். கடைசியாக உறையையும் போட்டான்.

“திருப்திதானே கெளரி?”

“இல்லை! நீங்கள் அவற்றைப் படித்திருக்க வேண்டும். அப்போதுதான் வீண் சந்தேகங்கள் தவிர்க்கப்படும். இந்தக் கடிதங்கள் என் கையெழுத்துத் திருந்துவதற்காக என்று அவனாலேயே எனக்கு டிக்டேட் செய்யப்பட்டவை.”

“குப்பைகளை நான் படிப்பதில்லை”

“என் மேல் உங்களுக்குக் கோபமா?”

“கோபமில்லை! ஆனால் வருத்தம் உண்டு!”

“என்ன வருத்தம், குமார்?”

“அல்ப காரணங்களுக்காக எல்லாம் நான் வீணாகச் சந்தேகப்படுவேன் என்று நீ என்னைப் பற்றித் தவறாக அனுமானம் செய்திருந்தாயே, அதற்காகத்தான் வருத்தம்”

“மன்னித்து விடுங்கள் குமார்!”

“தவறு உன்னுடையதில்லை. சராசரி மனிதர்கள் பெரும்பாலும் சந்தேகங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறார்கள், தெய்வமாகிய ஸ்ரீராமனே மனிதர்களுக்கே உரிய கொச்சையான சந்தேகத்துடன் சீதா தேவியைத் தீக்குளிக்கச் சொல்லி இருக்கிறான்! இராமாயணம் சொல்லுகிறது. அரசரான ஸ்ரீராமன் அவதூறுகளுக்காகச் சீதையைத் தீக்குளிக்க வைத்துச் சிரமப் படுத்தியிருக்கிறான். நான் அந்த அவதூறுகளையே தீக்குளிக்க வைத்து விட்டேன் கெளரி!”

“நீங்கள் அந்தக் கடிதங்களைப் படிக்காமல் நெருப்பில் போட்டிருக்கக் கூடாது குமார்!”

“வீண் சந்தேகங்களால் என் மனத்தினாலேயே என்னைச் சுற்றி ஒரு நரகம் படைக்கப்படுவதை நான் வெறுக்கிறேன் கெளரி.”

அப்போது எதிரே இருந்த தீ மூட்டத்தில் மேலும் ஒரு கூடை சருகுகளைத் தோட்டக்காரன் கொண்டு வந்து கொட்டினான்.

“கெளரி! இதை நன்றாகப் பார்த்துக் கொள்! குப்பைகளை அவை எங்கிருந்தாலும் எரித்து விட வேண்டும். உடனே எரித்து விடவேண்டும்” - என்று அவளருகே வந்து கைகோத்துக் கொண்டு உற்சாகமாக நடந்தான் குமார்.

“நீங்கள் ஸ்ரீராமனைக் காட்டிலும் சிரேஷ்டமானவர்”-கெளரி அவன் காதருகே கிளுகிளுத்தாள்.

“அபசாரம்! நாம் மனிதர்கள்!” - என்றான் குமார். பக்கத்தில் வந்த பூக்காரி ஒருத்தியிடம் அப்போது கெளரிக்காகச் சண்பகப்பூ வாங்கினான் குமார்.

(கலைமகள், தீபாவளி மலர், 1987)