நித்திலவல்லி/முதல் பாகம்/18. இன்னும் ஒரு விருந்தினர்
தாயும் மகளும் நீராடி வீடு திரும்பியபோது மாளிகை வாயிலில் வேற்றூரைச் சேர்ந்தவன்போல் தோன்றிய ஒருவனோடு பெரிய காராளர் உரையாடிக் கொண்டிருந்தார். வந்து உரையாடிக் கொண்டிருந்தவனுக்கு அவ்வளவு முதுமை என்று சொல்லிவிட முடியாது. இளமை என்று கருதவும் வாய்ப்பில்லை. இளமையைக் கடந்து முதுமையின் எல்லையை இன்னும் தொடாத வயது. நீண்ட நாட்களாகவே காட்டில் வாழ்ந்தவன் ஒருவனின் சாயல், வந்து பேசிக் கொண்டிருந்தவனிடம் தென்பட்டது. புலித்தோலால் தைத்த முரட்டு அங்கி ஒன்றை அணிந்திருந்தான் அவன். வந்திருந்த புதியவனாகிய அவனுக்கும் தன் தந்தைக்கும் எதைப்பற்றியோ கடுமையான வாக்குவாதம் நிகழ்ந்து கொண்டிருந்தது என்பதைச் செல்வப் பூங்கோதை அறியமுடிந்தது. வந்திருந்தவனால் எதையும் மெல்லிய குரலில் பேச முடியவில்லை. காற்றைக் கிழிப்பது போல் கணீரென்ற குரல் வாய்த்திருந்தது வந்திருந்தவனுக்கு. கண்களிலும், முகத்திலும் இரண்டாவது முறை ஏறிட்டுப் பார்க்கவும் அஞ்சுகிற ஒரு குரூரம் இருந்தது. நீராடி வந்த கோலத்தில் அங்கே அதிக நேரம் நிற்க முடியாததால் செல்வப் பூங்கோதை உடனே தாயுடன் உள்ளே சென்று விட்டாள். எனினும் தன் தந்தைக்கும் அந்தப் புதிய மனிதனுக்கும் நிகழ்ந்த வாக்கு வாதத்தை அவள் உட்புறம் இருந்தே கேட்க முடிந்தது. தந்தையின் மெல்லிய குரலே முதலில் ஒலித்தது.
“உங்களை நான் இதற்கு முன்பு எப்போதும் இங்கு பார்த்ததில்லை. நீங்களோ நெடுநாள் பழகி அறிந்தவர் போல் உறவு கொண்டாடித் தேடி வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு நான் என்ன மறுமொழி சொல்வதென்றே எனக்குத் தெரியவில்லை." “நீங்களே மறுமொழி சொல்லவில்லை என்றால் நான் வேறு எங்கு போக முடியும்? யாரைக் கேட்க முடியும்? தயை கூர்ந்து எனக்கு வழி காட்டி உதவ வேண்டும்...”
“விருந்தோம்புவதும், பிறருக்கு உபகாரம் செய்வதும் என்னைப் போல் ஒவ்வொரு வேளாளனுக்கும் கடமை. நீங்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் உங்களை நான் உபசரிக்கக் கடமைப்பட்டிருக்கிறேன். ஆனால் நீங்கள் முதலில் வினாவியது போல், பாண்டிய நாட்டு அரசியல் நிலைமை பற்றி என்னை எதுவும் வினவக்கூடாது. அதைப் பற்றி என் போன்றவர்களுக்கு எதுவும் தெரியாது. முந்நூறு ஏர்கள் பூட்டி உழக் கூடிய நிலக் கிழமை இந்த மருத நிலத்து ஊரில் எனக்கு இருக்கிறது. நான் அரசியலுக்கு அப்பாற்பட்டவன்.”
“ஐயா! நீங்கள் அப்படிச் சொல்லித் தப்பித்துக் கொள்ளக் கூடாது. பெரியவர் மதுராபதி வித்தகர் இருக்குமிடத்தை அறிந்து, நான் அவரைச் சந்தித்தே ஆக வேண்டும். இந்த ஆண்டு ஆவணித் திங்கள் முழு நிலா நாளில் அவிட்ட நட்சத்திரத்தன்று தொடங்கும் திருவோண விழா நாள் முதலான விழா நாள் ஏழில், இரண்டாம் நாளன்று நான் அவரைச் சந்தித்தாக வேண்டும் என்று எனக்குத் தெரிவிக்கப் பட்டிருக்கிறது. பாண்டிய வேளாளர் மரபில் வந்த தாங்களே இந்த நல்லுதவியைச் செய்யாவிடில், வேறு யார் செய்யப் போகிறார்கள்?”
“நான் பாண்டிய வேளாளர் மரபில் வந்தவன் என்று அறிந்து பாராட்டும் உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி கூறக் கடமைப்பட்டிருக்கிறேன். நீங்கள் அந்தத் தகுதியைச் சொல்லிப் பாராட்டுவதால், உங்களுக்கு முன்னால் மட்டும்தான் அதற்காக நான் பெருமைப்படலாம். ஆனால், இதே பெருமையை இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களுக்கு முன்னால் நான் கொண்டாடுவேனாயின், என் தலையைச் சீவிக் கழுமரத்தில் தொங்க விட்டு விடுவார்கள்.”
“கடவுள் புண்ணியத்தில் உங்களுக்கு அப்படி எல்லாம் நேராது ஐயா! நீங்கள் அறக்கோட்டங்கள் மூலமாகவும் அன்ன சத்திரங்கள் மூலமாகவும் செய்து வரும் தான தருமங்களும் உங்களைக் காப்பாற்றும்.”
“தங்களுக்கு என்னைப் பற்றி இவ்வளவு தெரிந்திருப்பது எனக்கே வியப்பைத் தருகிறது. தான தருமங்கள் செய்வது பன்னெடுங்காலமாக எங்கள் குடும்பத்தின் வழக்கம். அதற்காகப் பிறர் புகழைக் கூட நாங்கள் எதிர் பார்ப்பதில்லை.”
பெரிய காராளர் நிலை இருதலைக் கொள்ளி எறும்பு போல் ஆகியிருந்தது. வந்திருக்கும் புதியவனின் பேச்சு அவன் மதுராபதி வித்தகருக்கும், பாண்டிய மரபினருக்கும் மிக மிக வேண்டியவன்தான் என்பது போல் காட்டினாலும் நல்லடையாளச் சொல்லைத் தெரிவிக்காத வரை அவனை எப்படி நம்புவது என்று தயக்கமாக இருந்தது. பெரியவரைச் சந்திப்பதற்கும் நாளும் நாழிகையும் குறித்து நினைவு வைத்திருக்கும் இந்தப் புதிய மனிதன் களப்பிரர்களின் ஒற்றனாக இருக்க முடியாது என்று தோன்றினாலும், ஒற்றன் இல்லை என்று முடிவு செய்யவும் இயலாமல் இருந்தது. அதனால்தான் எதிலும் சார்பு காண்பிக்காமல், நடுநிலையாகப் பேசியிருந்தார் பெரிய காராளர். வந்திருக்கும் இந்த அதிசய விருந்தினரிடம் களப்பிரர்களை எதிர்த்துப் பேசுவதும் கூடாது. முற்றாகப் பாராட்டிப் பேசுவதும் கூடாது. நடுநிலையாக இருந்து உண்மையைக் கண்டு பிடித்த பின்பே, தன் விருப்பு வெறுப்புகளை அவனிடம் காண்பிக்க வேண்டும் என்ற கருத்துடன், “ஐயா! நாங்கள் வேளாளர்! நாட்டின் அரசியல் விருப்பு வெறுப்புக்களைப் பற்றி எங்களைக் கேட்டுப் பயனில்லை. நிலத்தை உழுது பயன் கொள்ளுவதுதான் எங்கள் தொழில்”. என்பது போலவே பேசிக் கொண்டிருந்தார். ஆனாலும் உள்ளுர ஒரு நம்பிக்கையும் இருந்தது. வந்திருப்பவனைத் தன்னுடைய அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்று உண்ணவும் தங்கவும் ஏற்பாடு செய்துவிட்டுத் தானே ஆலமரத்தடிக்குச் சென்று பெரியவரைக் கண்டு, 'இப்படி யாரையாவது உங்களை வந்து காணச் சொல்லியிருந்தீர்களா?' என்று கேட்டு விடலாம் என்பதாக நினைத்திருந்தார் பெரிய காராளர். ஆனால், வந்திருக்கும் புதிய மனிதனிடம் அதை எப்படிக் கூறுவது என்றும் அவருக்கு அச்சமாக இருந்தது. பதற்றமும், முன் கோபமும் உள்ளவன் போல் தெரியும் அந்த மனிதன், புலித்தோல் அங்கியோடு எதிரே தெரியும் போது ஓர் அசைப்பில் புலியே நிற்பது போலிருந்தது. நெடுநேரம் பேசி, அந்தப் புதிய மனிதனைத் தன் விருந்தினனாக இணங்க வைத்து, அடுத்த வீதியிலிருந்த அறக்கோட்டத்திற்கு அழைத்துச் சென்றார் பெரியகாராளர். போகும்போது “ஐயா! சிறிது மெல்லப் பேசலாமே? ஏன் இவ்வளவு உரத்த குரலில் பேசுகிறீர்கள்?” என்று அவர் அந்தப் புதிய மனிதனை வேண்டிக் கொண்டபோது-
“ஏன் இப்படி வேண்டுகிறீர்கள்? உரத்த குரலில் பேசுவதற்கு கூடக் களப்பிரர் ஆட்சியில் தண்டனை உண்டா?” என்பதாக முன்னைவிட உரத்த குரலில் அவரை வினாவினான் அவன். இப்படி எல்லாம் வினாவுவதைப் பார்த்தால், அந்த மனிதனை நம்பலாம் போலவும் இருந்தது. கடந்த காலத்தில் இதே போல ஆசை காட்டி நெருங்கி வஞ்சகம் செய்த சில ஒற்றர்களைப் பற்றி ஞாபகம் வந்தபோது பயமாகவும் இருந்தது; எதையும் உறுதி செய்ய முடியாமல் இருந்தது.
வந்திருந்த புதிய மனிதனை அறக்கோட்டத்தில் தங்க வைத்து விட்டுப் பெரியவரைச் சந்திக்க விரைந்து சென்றார் காராளர். அவர் சென்ற போது, பெரியவர் ஆலமரத்தின் விழுதுகளிடையே இரு கைகளையும் பின்புறம் கோத்தபடி உலாவிக் கொண்டிருந்தார். காராளரை எதிரே கண்டதுடன், அவரே முன் வந்து தெரிவித்த செய்தி வியப்பை அதிகப் படுத்துவதாக இருந்தது: “காராளரே! இப்போது நீங்கள் எதற்காக என்னைத் தேடி வருகிறீர்கள் என்பதை நான் அறிவேன். என்னைக் காண வந்திருக்கும் புதியவனைப் பற்றி அறியத்தானே வந்திருக்கிறீர்கள்? திருவோண முதலாக ஏழு நாள் நிகழும் அவிட்ட நாள் விழாவின் முன் தினம் அந்தத் திருக்கானப்பேர்ப் பிள்ளையாண்டான் என்னைச் சந்திக்க வந்தது போலவே இன்று என்னைச் சந்திக்குமாறு மற்றொருவனுக்கும் ஆணை இடப்பட்டிருக்கிறது. ஆனால் அப்படிச் சந்திக்க வேண்டியவன் இப்போது உம்மைத் தேடி வந்திருப்பவன்தானா என்று அறிய ஓர் உபாயம் இருக்கிறது. இப்படி அருகே வந்து அதைக் கேட்டுக் கொண்டு போகலாம்"--என்று கூறிக் காராளரை அருகில் அழைத்தார். காராளர் அருகில் வந்ததும் அவர் காதருகே மெல்லிய குரலில் ஏதோ கூறிய பின், “இந்தப் பரிசோதனையின் பின் அவன் என்னைத்தேடி வந்திருப்பவன் என்று உறுதியானால் அப்புறம் நம்முடைய ஆபத்துதவிகளில் ஒருவனின் துணையோடு அந்தப் புதியவனை இங்கே அனுப்புங்கள்” - என்றார் மதுராபதிவித்தகர். அந்தப் பரிசோதனையைச் செய்யப் பெரியவரிடம் வணங்கி ஒப்புக்கொண்டு திரும்பினாலும் - அதை எப்படி அந்தப் புதிய மனிதனிடம் தெரிவிப்பது என்று முதலில் கலங்கியது காராளர் மனம்.