நித்திலவல்லி/முதல் பாகம்/19. சேறும் செந்தாமரையும்
அழகன் பெருமாள் மாறன் எவ்வளவோ உறுதி கூறியும் இளைய நம்பிக்கு அந்த விஷயத்தில் இன்னும் அவநம்பிக்கை இருந்தது. அதைப் பற்றி இரத்தினமாலை முத்துப் பல்லக்கில் அரண்மனைக்குப் புறப் பட்டுச் சென்ற பின்பு மீண்டும் மீண்டும் அழகன் பெருமாளுக்கும் இளையநம்பிக்கும் ஒரு தர்க்கமே நிகழ்ந்தது. இளையநம்பி கேட்டான்:-
“அந்தரங்கமான செய்திகளையும், சங்கேதக் குறிப்பு களையும் இப்படி மறைவான சித்திர எழுத்துக்கள் மூலம் முகத்திலும் கைகளிலும் எழுதி அனுப்புவதாகப் பழைய காவியங்களில் நிகழ்ச்சிகள் வருகின்றன. அந்தக் காவிய நிகழ்ச்சிகள் பாலி மொழியிலும் இருக்கின்றன. களப்பிரர்களுக்கும் அவற்றைப் பற்றி நன்கு தெரிந்திருக்க நியாயமிருக்கிறது. அவ்வாறு இருக்கும் போது இரத்தின மாலையின் கைகளிலே நாம் தீட்டி அனுப்பியிருக்கும் வினாக்களை யாருமே சந்தேகக் கண்களோடு பார்க்காமல் விட்டு விடுவார்கள் என்பது என்ன நிச்சயம்?”
“இன்றோ, நேற்றோ புதிதாக நாங்கள் இந்தக் காரியத்தைச் செய்யவில்லை ஐயா! பெரியவர் மதுராபதி வித்தகரின் ஆணையை ஏற்று இதில் ஈடுபட்ட நாளிலிருந்து, நீங்கள் கூறுவது போல் எதுவும் நடைபெறவில்லை. மேலும் காவிய நிகழ்ச்சிகளில் கூறப்பட்டுள்ள முக எழுத்துக்களாகிய சித்திர எழுத்துக்கள் வேறு; நாம் பயன்படுத்தும் கரந்தெழுத்துக்கள் வேறு.”
“வேறாயிருந்தால் கவலையில்லை! இந்தக் கை எழுத்துக்களே, நம் தலை எழுத்தை நிர்ணயம் செய்யும் முடிவை உண்டாக்கிவிடக் கூடாதே என்பதுதான் நான் படுகிற கவலை.”
“நம் தலை எழுத்து அவ்வளவிற்கு வலிமைக் குறைவாக இல்லை ஐயா!”
“உன்னுடைய எல்லா மறுமொழிகளுமே நம்பிக்கை ஊட்டுவனவாகத் தான் எப்போதும் வெளிப்படுகின்றன அழகன்பெருமாள்.”
“நான் எதைப் பற்றியும் இருள் மயமாகச் சிந்திப்பதே இல்லை ஐயா!”
“நீ அப்படி இருப்பதனால் தான், எதைப் பற்றியும் ஒளி மயமாகவே சிந்திக்க முடியாமல் இருக்கிறது. ‘சாத்தியமாகும்’ என்று மட்டுமே உடன்பாடாகச் சிந்திக்கிறவனுக்கு அருகில் அது எவ்விதத்தில் ‘அசாத்தியமாகும்’ என்று எதிர் மறையாகச் சிந்திக்கிறவன் ஒருவனும் இன்றியமையாதவனாக இருக்க வேண்டும். அவன்தான் அபாயங்களைத் தவிர்க்க முடியும்.”
-இங்கே அவர்கள் இவ்வாறு பேசிக் கொண்டிருந்த போது குறளன் வந்து குறுக்கிட்டான். உடனே அழகன் பெருமாளிடமிருந்து குறளனுக்குக் கட்டளை பிறந்தது: “குறளா! இனி நீ இங்கிருக்க வேண்டிய காரியம் எதுவும் இல்லை. யாருமே காவலின்றி உப வனம் தனியே இருக்கலாகாது. நீ அங்கே போய் இரு. மாலை நேரத்திற்குப் பின் காரி, கழற்சிங்கன், செங்கணான், சாத்தன் எல்லாரும் திருப்பி வந்து விடுவார்கள். ஆனால் நீ மட்டும் தனியாகப் போகிற காரணத்தால் நிலவறை வழியாகப் போக வேண்டாம். அக நகருக்குள் போய்க் கோட்டை வாயில் வழியே வெளியேறிப் புறநகரில் உப வனத்துக்குப் போ. தொடர்ந்து அகநகர் வீதிகளில் தென்படாமல் நிலவறை வழியாகவே வந்து போய்க் கொண்டிருந்தோமானால், ஊருக்குள்ளே நாமும் சந்தேகத்துக்கு உரியவர்கள் ஆகி விடுவோம். அகநகரிலும் கோட்டையின் உட்பகுதிகளிலும் நடமாட நமக்கு இருக்கும் உரிமையை அவ்வப்போது நிலைநாட்டுவது போல் பழக வேண்டும் நாம்” - என்று கூறிக் குறளனைக் கணிகை மாளிகையின் புற வாயில் வழியே உப வனத்துக்கு அனுப்பி வைத்தான் அழகன் பெருமாள்.
குறளன் புறப்பட்டுச் சென்றதும் அழகன் பெருமாளிடம் வேறு சில சந்தேகங்களை வினாவினான் இளையநம்பி.
“இரத்தினமாலைக்கு உதவுவதற்கு, அவள் கைகளில் நாம் தீட்டியனுப்பியிருக்கும் வினாக்களுக்கு, உடனே மறுமொழி எழுதி அனுப்பக்கூடிய விதத்தில் அங்கே அரண்மனையில் நம்மவர்கள் யாரேனும் இருக்கிறார்களா அழகன் பெருமாள்?”
“ஊமைகள் போலவும், செவிடர்கள் போலவும் நடிக்கும் நம்மவர்கள் சிலர் அரண்மனையில் ஊழியம் புரிகிறார்கள். அரண்மனை அந்தப்புர மகளிருக்குப் பூத் தொடுக்கவும் பூணவும், புனையவும், அலங்கரித்துக் கொள்ளவும் உதவுகிற பெண்களில் பலர் இரத்தின மாலையால் அப்பணிக்கு அங்கே அனுப்பப் பெற்றவர்கள். அவர்களில் ஒருத்திக்கு இதே வகையைச் சேர்ந்த கரந்தெழுத்துக்களில் பயிற்சி உண்டு. அவள்தான் இரத்தினமாலை திரும்பும்போது மறு மொழிகளை எழுதி அனுப்புவாள். களப்பிரர்களின் அந்தப்புரப் பெண்களிடமும் உரிமை மகளிரிடமும் நம் இரத்தின மாலைக்குச் செல்வாக்கு உண்டு. நல்ல வாசனையுள்ள பொதிய மலைச் சந்தனம், பூக்கள், பிறவகை நறுமணப் பொருள்கள் இவற்றை வழங்கி வழங்கி அரண்மனைப் பெண்களிடம் தோழமையை வளர்த்திருக்கிறாள் அவள். அந்தத் தோழமையினால்தான் பல காரியங்களை நாம் சாதிக்க முடிகிறது ஐயா!” என்று அழகன் பெருமாள் விளக்கமாகச் சொன்ன பின்புதான், முதல் நாளிரவு நிலவறை வழியாக உப வனத்துக்குச் செல்லும்போது கணிகையர்களைப் பற்றி ஓரளவு குறைவாக மதிப்பிட்ட தன் சொற்கள் ஏன் அவனுக்கு அவ்வளவு சினமூட்டின என்று இளைய நம்பிக்குப் புரிந்தது. அழகன்பெருமாள் இப்போதாவது ஆறுதல் அடையட்டும் என்று இளையநம்பி ஒரு வாக்கியம் சொன்னான்:-
“சேற்றிலும் தாமரைகள் பூக்கின்றன.”
“தவறு! அந்த உவமையை நீக்கிவிட்டே புகழலாம் நீங்கள். சேற்றில்தான் தாமரைகள் பூக்கின்றன! வேர்தான் சேற்றில் இருக்கிறது. பூக்களில் சேறு படுவதில்லை. பூக்களுக்கும் சேற்றுக்கும் தொடர்பு உண்டு. ஆனால் பூவில் சேறுபடுவது கிடையாததோடு, தெய்வங்களின் கால்களும், பெண்களின் கைகளும் படுகின்றன.”
“உப வனத்தைக் காப்பதைவிடத் தர்க்க நியாயங்களையும் இலக்கண விதிகளையும் காக்கப் போகலாம் நீ...”
“நான் காவல் செய்யாவிட்டாலும், நியாயங்களும் இலக்கணங்களும் பத்திரமாக இருக்கும். உண்மையில் ஒரு பெரிய புலவர் மரபில் வந்தவன்தான் நான். பெரியவருடைய ஆணைக்குக் கட்டுப்பட்டு இந்த உப வனத்தைக் காத்துக் கொண்டு வருகிறேன். அவ்வளவுதான்.”
“நான் கூறியவற்றில் எவையேனும் உன் மனத்தைப் புண்படுத்தியிருந்தால் பொறுத்துக் கொள்.”
“அப்படி எதுவுமில்லை ஐயா? நாமிருவரும் ஒரே கடமைக்காக ஒரே தலைமையின் கீழ் இயங்குகிறோம்.
நமக்குள் பொறுத்துக் கொள்வதும் விட்டுக் கொடுப்பதும் இயல்புதான்.”
பலவகையிலும் சோதனை செய்து பார்த்ததில் அழகன் பெருமாளின் உறுதியும், பொன்னான இதயமும் இளைய நம்பிக்குத் தெளிவாகத் தெரிந்தன. கோ நகருக்குள் நுழைந்ததும் சந்தித்த முதல் நண்பனாகிய யானைப் பாகன் அந்துவன், எதையும் சிரிப்பு நீங்காத முகத்தோடு பார்க்கிறவன். இரண்டாவதாகச் சந்தித்த இந்த அழகன் பெருமாளோ, எதையும் சிந்தனையோடும், காரிய நோக்கத்தோடும் பார்க்கிறவனாகத் தெரிந்தான். இருவருமே பெரியவரின் ஊழியத்திலும், பாண்டிய நாட்டைக் களப்பிரர் ஆட்சியிலிருந்து விடுவிக்கும் பணியிலும் கடமை உணர்வு குன்றாதவர்களாக இருப்பதை இளையநம்பியால் புரிந்து கொள்ள முடிந்தது. குணங்களால் வேறுபட்ட பலரை உணர்வினால் ஒன்றுபடச் செய்து பணியாற்ற வைத்திருந்த பெரியவரின் கட்டுப்பாட்டையும் ஏற்பாட்டையும் வியந்தான் அவன்.
மாலை நேரம் வரை அந்தக் கணிகை மாளிகைகளிலேயே கழிந்தது. அகிற்புகை மணமும், பூக்கள், சந்தனம், பச்சைக் கற்பூரம் எல்லாம் கலந்த வாசனைகளும் நிறைந்த அந்த மாளிகையில் பெண்கள் அந்தி விளக்குகளை ஏற்றினார்கள். மங்கல வாத்தியங்கள் இசைத்தன. வீடு இந்திரலோகத்து நடன மண்டபம்போல் அழகு மயமாயிற்று. இளையநம்பியும் அழகன் பெருமாளும் இரவில் அங்கேயே உண்ண வேண்டும் என்று அந்த மாளிகையைச் சேர்ந்த பெண்கள் வந்து வேண்டிக் கொண்டார்கள். அவர்களுடைய விநயமும் பணிவான இனிய சொற்களும் உபசாரமும் இளையநம்பியைத் திகைப்படையச் செய்தன. இந்த மாளிகையில் இவ்வளவு அன்பையும் பண்பையும் அவன் எதிர்பார்க்கவில்லை. ஆனால், அவர்கள் உபசாரமோ அவனை வியப்பிலேயே ஆழ்த்தியது.