நித்திலவல்லி/முதல் பாகம்/21. எண்ணெய் நீராட்டு
அந்தப் புதிய விருந்தினனை அறக் கோட்டத்தில் தங்க வைத்து விட்டு வந்திருந்த காராளர் இப்போது பெரியவர் மதுராபதி வித்தகர் கூறிய பரிசோதனையை அவனிடம் எவ்வாறு செய்து முடிப்பது என்று சிந்திக்கத் தொடங்கினார் வந்திருப்பவனின் மனம் புண்படாமல், தனக்கு ஆகவேண்டிய காரியமும் பழுது படாமல் எப்படி முடித்துக்கொள்வது என்று தெரியவில்லை. சோதனைக்குப் பின் அவன் வேண்டியவன் என்று தெரிந்து விட்டால், சோதனை செய்ததற்காகக் கூச வேண்டிய நிலை ஏற்படும். வேண்டாதவன் என்று தெரிந்து விட்டாலோ அவனுக்குக் கோபம் வரும். அவனோ உடனே ஆத்திரப்படுகிறவனாகவும், முன் கோபக்காரனாகவும், உரத்த குரலில் சப்தம் போட்டுப் பேசுகிறவனாகவும் இருந்தான். இதையெல்லாம் விடப் பெரிய அபாயம், தன்னுடைய நீண்ட புலித்தோல் அங்கிக்குள் சற்றே மறைத்தாற் போல் உறையிட்ட வாள் ஒன்றையும் வைத்திருந்தான் அவன்.
பாண்டிய நாட்டில் தங்கள் ஆட்சிக்கு எதிராகக் கலகம் எதுவும் எழலாகாது என்ற கருத்தில் களப்பிரர்கள் ஆட்சியில், பொது மக்கள் வாளும், வேலும் கொண்டு பயில்வது தடுக்கப்பட்டிருந்தும், ‘இவன் எப்படி வாளைக் கைக் கொண்டு வெளிப்பட்டுப் பழகுகிறான்?’ என்பதுதான் காராளரின் மிகப் பெரிய ஐயமாயிருந்தது.
'ஒன்று இவன் நம்மை ஆழம் பார்க்க வந்த களப்பிரப்பூத பயங்கரப்படை ஒற்றனாக இருக்க வேண்டும்; அல்லது வருவது வரட்டும் என்று எதற்கும் துணிந்து வாள் வைத்திருப்பனாக இருக்க வேண்டும்’ என்று தோன்றியது காராளருக்கு. இந்த இரண்டைத் தவிர வேறு எதையுமே உய்த்துணர இயலவில்லை. அவனுடைய வயதைப் பற்றிய தன்னுடைய முதல் அனுமானம் கூடத் தவறானதோ என்று இப்போது நெருங்கி நின்று கண்ட பின் நினைத்தார் அவர். வளர்ச்சியினாலும் முகத்தில் நெகிழ்ச்சியோ முறுவலோ ஒரு சிறிதும் தெரியாத குரூரத்தினாலும் வயது கூடுதலாகத் தோற்றுகிறதோ என்று இப்போது எண்ணினார் அவர். மதுராபதி வித்தகரைச் சந்தித்துவிட்டு அறக் கோட்டத்திற்குத் திரும்பிய பெரிய காராளர் அங்கே அந்த அறக் கோட்டத்தின் கூடத்தில், பசி எடுத்து இரை தேடும் புலி உலவுவது போல உலவிக் கொண்டிருந்த அவனை மீண்டும் மிக அருகே நெருங்கிக் கண்டபோது இவ்வாறுதான் எண்ணத் தோன்றியது.
அவன் அவரைக் கண்டதும் அடக்க முடியாத ஆவலோடு “இப்போதாவது என்னைப் பெரியவர் இருக்கும் இடத்துக்கு அழைத்துச் செல்லும் முடிவோடு வந்திருப்பீர்கள் என்று நினைக்கிறேன்"- என்று கேட்டான்.
“அடடா! பார்த்தீர்களா? பார்த்தீர்களா? மீண்டும் அரசியலுக்கு வருகிறீர்களே? நான் அதற்காக இப்போது இங்கே வரவில்லை. என்னுடைய அறக்கோட்டத்துக்கு யார் வந்தாலும் எண்ணெய் நீராடச் செய்து உணவளித்து அனுப்புவது வழக்கம். நீங்களோ நெடுந்தூரம் அலைந்து களைத்துத் தென்படுகிறீர்கள். இங்குள்ள மல்லன் ஒருவன் எண்ணெய் தேய்த்து உடம்பு பிடித்து விடுவதில் பெருந்திறமை உடையவன். அவனிடம் எண்ணெய் தேய்த்துக் கொண்டு நீராடிவிட்டு இந்த அறக்கோட்டத்தின் உணவையும் உண்டு முடித்தீர்களானால், எழுந்திருக்கவே மனம் வராமல் சுகமான உறக்கம் வரும்.”
“ஐயா! சுகமான உறக்கத்துக்கு உங்களிடம் நான் வழி கேட்கவில்லை. என்னுடைய இந்த உடல், தொடர்ச்சியாக ஐந்து நாள் உறக்கம் விழித்தாலும் தாங்கும். உறக்கத்தைப் பற்றியோ, உணவைப் பற்றியோ நான் அதிகம் கவலைப் படவில்லை.”
“நீங்கள் கவலைப்படவில்லை என்றாலும் உங்களுக்காக நான் கவலைப்படுகிறேன் என்று வைத்துக் கொள்ளுங்களேன்.”
“ஒருவரைப் பற்றி மற்றொருவர் கவலைப்படுவதற்கு, நாம் இன்னும் அவ்வளவு ஆழமாக நெருங்கிப் பழகிவிட வில்லையே?”
“ஏன் அப்படிச் சொல்கிறீர்கள்?”
“காரணத்தோடுதான் சொல்கிறேன். நீங்கள் என்னை முழுமையாக நம்பவில்லை என்பது எனக்குப் புரிகிறது. உங்கள் கண் காண எதிரே இரண்டு களப்பிரர்களை என் வாளால் குத்திக் கொன்று காட்டினால்தான் நம்புவீர்கள் போலிருக்கிறது” -என்று தனக்கே உரிய உரத்த குரலில் அவன் இரையவும், காராளருக்கு அவனிடம் ஏன்தான் பேச்சுக் கொடுத்தோம் என்று கவலையாகி விட்டது. அவனைப் போன்று வஞ்சகமில்லாத வெள்ளை முரடனை ஓரளவு இதமாகப் பேசித்தான் வழிக்குக் கொண்டுவர முடியும் போலிருந்தது. சாம, தான, பேத, தண்டம் என்ற உபாயங்களில் முதல் உபாயத்தைத் தவிர வேறெதனாலும் அவனை வழிக்குக் கொண்டு வர முடியாது போலிருந்தது. அவனை வழிக்குக் கொண்டு வர முடியாதவரை தன் பரிசோதனையும் நிறைவேறாதென்று கருதினார் அவர். அடுத்த கணமே அவனிடம், அவருடைய உரையாடலின் தொனியும் போக்கும் மாறின.
“நம்பிக்கை என்பது ஒரே அளவில் அன்பைப் பரிமாறிக் கொள்வதுதான் என்றால், என்னுடைய அறக்கோட்டத்தில் நான் செய்யும் உபசாரங்களை நீங்கள் முதலில் நம்பி, ஏற்க வேண்டும். இருபுறமும் நிறைய வேண்டிய ஒரு நம்பிக்கையை, ஏதாவது ஒருபுறம்தான் முதலில் தொடங்க வேண்டியிருக்கும்...”
இதைக் கேட்டு முதலில் ஒன்றும் புரிந்து கொள்ளாதது போல காராளரை ஏறிட்டு நோக்கி விழித்த அவன், சில விநாடிகளுக்குப் பின்,
“இப்போது நான் என்ன செய்ய வேண்டும் என்கிறீர்கள்?” என்று சூடாகத் தெரியும் ஒலி தொனிக்கக் கேட்டான். காராளர் சிரித்துக் கொண்டே இதற்கு மறு மொழி கூறினார்:-’
“இந்த அறக் கோட்டத்தின் உபசாரங்கள் எதையும் நீங்கள் மறுக்காமல் ஏற்க வேண்டும்.”
பதிலுக்கு அவன் முகத்தில் சிரிப்போ, மலர்ச்சியோ இல்லை. இளையநம்பியின் முகத்தில் எவ்வளவுக்கு எவ்வளவு சுமுக பாவமும் கவர்ச்சியும் உண்டோ, அவ்வளவிற்கு இவன் முகத்தில் கடுமை இருந்தது. சுமுகத்தன்மை வறண்டிருந்தது.
அவனுடைய மெளனத்தை இசைவாகப் புரிந்து கொண்டு, அறக்கோட்டத்து மல்லனை எண்ணெய்ப் பேழையுடன் வரச் செய்தார் அவர். புதியவனை நீராட்ட அழைத்துச் செல்லுமுன் மல்லனைத் தனியே அழைத்து இரண்டு விநாடிகள் இரகசியமாக அவனோடு ஏதோ பேசினார். அவர் கூறியதற்கு இணங்கித் தலையசைத்தான் அந்த மல்லன். காராளர் கூடத்திலேயே நின்று கொண்டார். மல்லனையும், புதியவனையும் தனியே விடக் கருதியே அவர் இதைச் செய்தார்.
ஆனால் அங்கே புதியவனோடு தனியே சென்ற மல்லனுக்கோ பயமாயிருந்தது. கையிலிருந்த வாளைக் கீழே வைக்காமலேயே எண்ணெய் பூசி நீவிவிடச் சொல்லும் முதல் மனிதனை அவன் இப்போதுதான் சந்தித்தான். அந்தச் சிறு பிள்ளைத்தனமான பாதுகாப்பு உணர்ச்சியை எண்ணி உள்ளூற நகைத்தாலும், தனக்கு என்ன நேருமோ என்ற பயம் எண்ணெய் பூசுகிறவனுக்கு இருந்தது. புலியோடு பழகுகிற மனநிலையில் இருந்தான் அவன். அரையாடையைத் தார்ப்பாய்ச்சிக் கட்டிக் கொண்டு பாறையாகப் பரந்த மார்பும் திரண்ட தோள்களுமாக எண்ணெய் பளபளக்க நின்று அந்த உடலின் வலிமையை எண்ணித் தான் ஒரு மல்லனாயிருந்தும் அந்த ஊழியனால் அஞ்சாமலிருக்க முடியவில்லை. தயங்கித் தயங்கி அவன் வேண்டினான். “அந்த வாளைக் கீழே வைத்தீர்களேயானால் எண்ணெய் பூசிவிட வாகாயிருக்கும்.”
“யாருக்கு வாளுக்கா? எனக்கா?” என்று வந்தவன் சீறியதும், மல்லன் அடங்க வேண்டியதாயிற்று. ஆனாலும் மல்லனுக்கு ஒரு மனநிறைவு இருந்தது. வந்திருப்பவனுடைய உடலில் காராளர் கண்டறியச் சொன்ன அடையாளத்தை அவன் கண்டு விட்டான். உடனே எண்ணெய் பூசுவதை நிறுத்தி விட்டு, உள்ளே ஓடிப் போய்க் காராளரிடம் அதைச் சொல்லிவிட அவன் பரபரப்பு அடைந்தாலும், வந்திருப்பவனுக்கு அது சந்தேகத்தை உண்டாக்கும் என்ற எண்ணத்தில் பொறுமையோடு முழுமையாக எண்ணெய் தேய்த்து முடித்தான்.
எல்லாம் முடிந்த பின் அவன் திரும்பி வந்து காராளரிடம்-
“ஐயா! நீங்கள் கூறிய அடையாளம் அவருடைய வலது தோளில் பழுதின்றி இருக்கக் கண்டேன்” என்று கூறினான். அதைக் கேட்ட பின்பு வந்திருப்பவனை ஒரு தேசாந்திரி போல் கருதி, அறக் கோட்டத்தில் வைத்துச் சோறிடுவதா அல்லது தன்னுடைய மாளிகைக்கு அழைத்துச் சென்று சிறப்பாக விருந்தளிப்பதா என்ற மனப்போராட்டம் எழுந்தது காராளருக்குள்ளே. உடனே காண்பிக்கப்படும் சிரத்தையை வந்திருப்பவன் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக எந்த மாறுதலும் செய்யாமல் விட்டார் அவர். உண்டு முடித்ததும் அந்தப் புதியவனைப் பெரியவர் மதுராபதி வித்தகரிடம் அழைத்துச் செல்லும் பொறுப்பையும் மல்லனிடமே ஒப்படைத்தார் காராளர். அவருடைய அறக்கோட்டங்களில் பணிபுரியும் அனைவரும் பொது மக்கள்போல் பழகினாலும் அந்தரங்கத்தில் அவர்கள் அனைவரும் பாண்டிய குலத்தின் முனை எதிர் மோகர் படையினரையோ, தென்னவன் ஆபத்துதவி களையோ சேர்ந்தவர்கள் தாம், அதனால் அவர்களை எதற்கும் நம்பலாம் என்பதைக் காராளர் நன்கு அறிந்திருந்தார்.