நித்திலவல்லி/முதல் பாகம்/20. கோட்டை மூடப்பட்டது

20. கோட்டை மூடப்பட்டது

காத்திருக்கிறோம் என்ற கவலையும் களைப்பும் தெரியாமலிருக்க அங்கிருந்த இளம் பெண்கள் சிலர், குரவைக்கூத்து ஆடி இளையநம்பியை மகிழச் செய்தனர். ஆயர்பாடியில் மாயனாகிய திருமாலிடம் இளம் நங்கையர் ஊடினாற் போன்ற பிணக்கு நிலைகளையும், காதல் நிலைகளையும் சித்திரிக்கும் அபிநயங்களை அவர்கள் அழகுற ஆடிக் காட்டினர்.

மாலை முடிந்தது; இரவு நேரம் வளர்ந்து கொண்டிருந்தது. அந்தப் பெண்கள் அன்பும் இனிமையும் நிறைந்த வார்த்தைகளில் உபசாரம் செய்து படைத்த உணவையும் உண்டாயிற்று. இன்னும் இரத்தினமாலை திரும்பி வரவில்லை. இளையநம்பி அழகன் பெருமாளைக் கேட்டான்:

“ஏன் நேரமாகிறது? மாலையிலேயே அவள் திரும்பிவிடுவாள் என்றல்லவா நீ கூறியிருந்தாய்?”

“சில சமயங்களில் மறுநாள் வைகறையில் திரும்புவதும் உண்டு. போன காரியம் முடியாமல் அவள் திரும்பமாட்டாள். நம்முடைய வினாக்களுக்கு மறுமொழி தெரிந்து அதைச்சமயம் பார்த்துக் கைகளில் எழுதச் செய்து கொண்டு தானே அவள் திரும்ப முடியும்?”

“அகால வேளையில் இரவு நெடுநேரமான பின்பு இங்கே திரும்ப முடியுமா?”

“எதிர்பார்ப்பதில் தவறில்லை. ஏனென்றால் இந்த வீதியில் இரவுக்கு அமைதி கிடையாது. இரவிலும் இங்கே ஆரவாரங்கள் உண்டு. இரத்தினமாலை ஒரு வேளை அகாலத்தில் திரும்பி வந்தாலும் தெரிய வேண்டிய செய்திகள் நமக்குத் தெரியும்.” -இவ்வாறு அவர்கள் பேசிக் கொண்டிருந்தபோதே மாளிகையின் வாயிற் கதவு பலமாகத் தட்டப்பட்டது. இரத்தினமாலைதான் திரும்பி வந்திருக்க வேண்டும் என்று பணிப் பெண்கள் ஓடிப் போய்க் கதவுகளைத் திறந்தார்கள். ஆனால், கதவைத் திறந்ததுமே வந்திருப்பது இரத்தினமாலையில்லை என்பதைத் தெரிந்து கொள்ள முடிந்தது.

குறளன்தான் திரும்பி வந்திருந்தான். அவன் முகத்தில் இயல்பை மீறிய பரபரப்புத் தென்பட்டது. நிறைய ஓடியாடிக் களைத்திருந்த சோர்வும் தெரிந்தது. அவனை அமைதியடையச் செய்து, பேச வைக்கவே சில கணங்களாயிற்று. பின் அவன் அழகன்பெருமாளை நோக்கிச் சொல்லலானான்:

“ஐயா! அவிட்ட நாள் விழாவை ஒட்டி நகருக்கு வந்த கூட்டத்தில் யாரோ ஓர் ஒற்றன் நேற்று, பிடிபட்டு விட்டானாம். யாத்திரீகர்கள் தங்கும் இடமாகிய வெள்ளியம்பலத்துக்கு அருகே அவனைப் பிடித்தார்களாம். இன்று காலை அதே இடத்திற்கு அருகே இன்னும் ஓர் ஒற்றன் அகப் பட்டானாம். அதனால் திடீரென்று வெள்ளியம்பலத்தில் தங்கியிருந்த யாத்திரீகர்களை எல்லாம் விரட்டி விட்டுக் கோட்டையின் நான்கு புறத்து வாயில்களையும் உடனே மூடச் சொல்லி உத்தரவிட்டு விட்டார்கள். அகநகர் முழுவதும் ஒரே பரபரப்பு யாரும் அகநகரிலிருந்து வெளியேறவும் முடியாது. வெளியேயிருந்து அகநகருக்குள் புதிதாக வரவும் முடியாது. ஒவ்வொரு கோட்டை வாயிலாக அலைந்து போய்ப் பார்த்து விட்டுத்தான் ஏமாற்றத்தோடு இங்கே திரும்பி வந்தேன்.

“எப்போது முதன்முதலாகக் கோட்டைக் கதவுகளை அடைத்தார்கள்?”

“நடுப்பகலிலிருந்தே அடைக்கத் தொடங்கி விட்டார்கள் போலிருக்கிறது. இது தெரிந்திருந்தால் நான் போயே இருக்க வேண்டாம்.”

“ஐயோ! அப்படியானால் நம்மவர்கள் காரி, கழற்சிங்கன், சாத்தன், செங்கணான் நால்வரும் எப்படி உபவனத்துக்குத் திரும்புவார்கள்? நீ கூறுவதிலிருந்து வெள்ளியம்பலத்துப் பக்கம் போய் அந்த நிலவறை வழியையும் வெளியேறுவதற்குப் பயன்படுத்த முடியாது என்று தெரிகிறது.”

“முடியவே முடியாது! வெள்ளியம்பலத்தைச் சுற்றிலும் உருவிய வாளுடன் பூத பயங்கரப்படை காவலுக்கு நிற்கிறது.”

“பூத பயங்கரப்படை காவலிருப்பது தெரியாமல் அவர்கள் வெள்ளியம்பலத்துக்குப் போய்விட்டு அங்கே அகப்பட்டுக் கொள்ளப் போகிறார்களே, பாவம்?” என்று இளையநம்பி வருந்திக் கூறியபோது-

“ஒருபோதும் அவர்கள் எதிரிகளிடம் அகப்பட மாட்டார்கள். தந்திரமாகத் தப்பி நான்கு பேரும் சேர்ந்தோ, தனித்தனியாகவோ, இங்கே வந்து சேர்வார்கள்” என்று உறுதி கூறினான் அழகன் பெருமாள் மாறன்.

“அதெப்படிச் சொல்லி வைத்தாற்போல் இங்கே வந்து சேருவார்கள் என்று உன்னால் உய்த்துணர முடிகிறது?”

“நான்கு கோட்டை வாயில்களும் மூடப்பட்டு வெள்ளியம்பலத்து நிலவறையிலும் நுழைய முடியாமல் தவிக்கும் ஒரு நிலைமை ஏற்பட்டால் புற நகரிலுள்ள உபவனத்திற்கு வெளியேறிச் செல்ல மீதமிருக்கும் ஒரே வழி இந்த மாளிகையில்தான் இருக்கிறது என்பதை அவர்கள் நால்வரும் நன்கு அறிவார்கள் ஐயா! இந்த மாளிகைக்கு வரும் போது சூழ்நிலைக்கேற்பப் பிறர் ஐயம் அடையாதவாறு வந்து சேர அவர்களுக்குத் தெரியும். இத்துறையில் அவர்கள் மிகவும் செம்மையான முறையில் தேர்ச்சி பெற்றிருக்கிறார்கள்” -என்று இளையநம்பிக்கு மறுமொழி கூறிவிட்டுக் கணிகை மாளிகையின் பணிப் பெண்களைக் கூப்பிட்டுப் பெருங்கதவு களை அடைத்துத் தாழிட்டு விட்டு, அவற்றின் நடுவே உள்ள சிறிய திருஷ்டி வாசற் கதவை மட்டும் தாழிடாமல் திறந்து வைக்குமாறு வேண்டினான் அழகன்பெருமாள்.

அந்த மாளிகைப் பெண்களும் அன்றிரவு உறங்காமல் விழித்திருந்தனர். பயத்தினாலும் அகநகரைப் பற்றிக் கேள்விப்பட்ட பரபரப்பான செய்திகளாலும் யாருக்குமே உறக்கம் வரவில்லை.

இரவு நடுச்சாமத்திற்கு மேலும் ஆகிவிட்டது. திருஷ்டி வாசல் கதவு கண்ணில் தெரியும்படியான ஓரிடத்தில் இளையநம்பியும், அழகன் பெருமாளும், குறளனும் அமர்ந்து அந்த வாயிற்புறத்திலேயே பார்வையைப் பதித்துக் கண்காணித்துக் கொண்டிருந்தனர்.

நேரம் ஆகஆக அவர்கள் மனத்தில் சந்தேக நிழல் படரத் தொடங்கியது. இரத்தின் மாலையும் திரும்பவில்லை. காரி முதலிய நால்வரும் கூட எதிர்பார்த்தபடி அங்குவந்து சேரவில்லை.

அதுவரை எல்லா விஷயங்களிலும் அளவற்ற நம்பிக் கையோடு இருந்த அழகன் பெருமாள்கூட-

“நண்பர்கள் ஏன் இன்னும் வரவில்லை? இறைவன் அருளால் அவர்களுக்கு எதுவும் நேர்ந்திருக்கக் கூடாது நேர்ந்திருக்க முடியாது.” என்று தானாகவே முன்வந்து இளையநம்பியிடம் கூறினான். அப்படிக் கூறியபோது அந்தக் குரலில் தளர்ச்சி தொனிப்பதையும் இளையநம்பி உணரத்தவறி விடவில்லை.