நித்திலவல்லி/முதல் பாகம்/6. யானைப்பாகன் அந்துவன்
கோவிலுக்குள் அவிட்டநாள் பெருவிழாக் கூட்டம் வெள்ளமாகப் பொங்கி வழிந்தாலும் அந்த நந்தவனப் பகுதி, ஆட்கள் பழகாத காடுபோல் தனிமையாகவும் அமைதியாகவும் இருந்தது. வண்டிகள் அங்கே நிறுத்தப்பட்டன. செல்வப்பூங்கோதையும், அவள் தாயும் தங்கள் வண்டியிலிருந்து விரைவாகக் கீழிறங்கி வந்து நடு வண்டியை நெருங்கினர். செல்வப் பூங்கோதை வண்டியை அணுகி, உள்ளே அம்பாரமாய்க் குவிந்திருந்த செந்தாமரைப் பூக்களை விலக்கியதும், அந்தப் பூக்களின் நடுவேயிருந்து ஒர் அழகிய ஆடவனின் முகம் மலர்ந்தது. பல சிறிய தாமரைப் பூக்களின் நடுவே ஒரு பெரிய செந்தாமரைப் பூ மலர்ந்து மேலெழுவது போல், இளைய நம்பி அந்தப் பூங்குவியலின் உள்ளேயிருந்து எழுந்திருந்தான். செல்வப் பூங்கோதை மிகவும் அநுதாபத்தோடு அவனைக் கேட்டாள்:- ‘மூச்சுவிடச் சிர்மமாயிருந்ததா? பூக்களின் ஈரமும், குளிர்ச்சியும் அதிகத் துன்பத்தைத் தந்தனவா?”
‘ஒரு சிரமமுமில்லை! இப்படிப் பயணம் செய்ய முன் பிறவியில் நான் புண்ணியம் செய்திருக்கவேண்டும். நிலவின் கதிர்களையும், பனி புலராத பூக்களின் மென்மையையும் இணைத்துச் செய்த பஞ்சணையில் உறங்குவது போன்ற சுகத்தை ஆயிரத்தெட்டுத் தாமரைப் பூக்களும் எனக்கு அளித்தன. இத்தனை சுகமான அநுபவம் இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரமன்னனுக்குக் கூடக் கிடைத்திருக்க முடியாது பெண்ணே?”
‘அந்தப் பூத பயங்கரப் படையைச் சேர்ந்த முரடன் ‘பூக்குவியலை வாளால் குத்தி சோதனை செய்வேன்’ என்றபோது எனக்கு மூச்சே நின்று விடும் போலாகிவிட்டது. நீங்கள் ஏறி வந்த வண்டிப் பூக்களை நாங்கள் வழிபாட்டுக்குப் பயன்படுத்தப் போவதில்லை என்றாலும், அவனிடம் நான் பொய் கூற வேண்டியிருந்தது.”
“நீ அவ்வளவு தூரம் பதறியிருக்க வேண்டிய அவசியம் இல்லை, பெண்ணே! அப்படியே அவன் வாளால் குத்தியிருந்தாலும், எனக்கு எதுவும் ஆகியிருக்க முடியாது. நான் காதில் கேட்ட பேச்சிலிருந்து எனது கை தென்பட்ட இடத்தில்தான் அவன் வாளைச் செருகிப் பார்ப்பதாக இருந்தான் என்று தெரிந்தது. அதனால் வாள் நுனியில் இரண்டொரு தாமரைப் பூக்கள் குத்திச் சொருகிக் கொண்டு போயிருக்கலாமே தவிர, வேறு எதுவும் நேர்ந்திருக்க இயலாது! கோட்டைக்குள் வந்து சேர இப்படி ஒர் அருமையான வழியைக் கூறுவதற்கு முதலில் உன் தந்தை ஏனோ தயங்கினார்?”
“பூப்போல் பத்திரமாக வந்து சேர்வது என்பார்கள். அப்படி அக நகருக்குள் வந்து சேர்ந்து விட்டீர்கள்! இனி உங்களை, நீங்களேதான் பொறுப்போடும், கவலையோடும், அக்கறையாகவும் பாதுகாத்துக் கொள்ள வேண்டும்...”
“தலைவிதியா? காலக்கேடா? எப்படிச் சொல்வது என்று தெரியவில்லை. சொந்த நாட்டின் சொந்தத் தலைநகரத்திலேயே ஏதோ அந்நியன் கவலைப்படுவது போல் நாம் கவலைப்பட வேண்டியிருக்கிறது” என்று நெட்டுயிர்த்த வண்ணம் அவளிடம் அவன் கூறிக்கொண்டிருந்த போது, கருடனைப் போல வளைந்த கிளிமூக்கும், காது வரை கிழிவது போல் சிரித்த வாயுமாக, ஒரு பருத்த மனிதன் அருகிலுள்ள செடிகளின் மறைவிலிருந்து வெளிப்பட்டு, இளைய நம்பியின் அருகே வந்தான். கிளி மூக்கும், கோணலாக நீண்ட இளித்த வாயும், பிறவியிலேயே அவனுக்கு அமைந்து விட்டவை என்று தெரிந்தது. அருகில் வந்து சுற்றும் முற்றும் ஒருமுறை நன்றாகப் பார்த்த பின், இளையநம்பியை நோக்கிக் ‘கயல்’ என்று அவன் கூறிய ஒலி அடங்கு முன் இளையநம்பியும் அதே நல்லடையாளச் சொல்லைத் திருப்பிச் சொன்னான்.
“இவன் யானைப்பாகன் அந்துவன். இன்று இந்த நாட்டை ஆளும் களப்பிரர்களின் ஆட்சியைக் கண்டு வாய் கிழிய ஏளனமாகச் சிரிக்கத் தொடங்கிய முதல் சிரிப்பை இன்னும் மாற்றிக் கொள்ள இவனுக்கு வாய்ப்புக் கிடைக்கவில்லை!” என்று செல்வப் பூங்கோதை, இளைய நம்பிக்கு அந்தப் புதிய மனிதனைப் பற்றிச் சொல்லிய போது,
“இது உன் கற்பனையா அல்லது அனுமானமா?” என்று சிரித்துக் கொண்டே அவளைக் கேட்டான் இளைய நம்பி.
“கற்பனை என்னுடையது இல்லை! அந்துவனையே கேளுங்களேன். அவன்தான் அடிக்கடி எல்லாரிடமும் இப்படிச் சொல்வான்."
இப்படிச் செல்வப்பூங்கோதை மறுமொழி கூறி முடிப்பதற்குள், அந்துவனே முந்திக்கொண்டு-
“ஆமாம், ஐயா! என்னைப் படைத்த கடவுளே அழ வைக்கவேண்டும் என்று நினைத்தாலும், அவரால்கூட அதைச் செய்யவே முடியாது. என்னைப் படைத்த மறு விநாடியிலிருந்தே நான் அவரைப் பார்த்து இப்படித்தான் சிரித்துக் கொண்டிருக்கிறேன்" என்றான். இந்த முதற் பேச்சிலேயே இளையநம்பிக்கு அவனை மிகவும் பிடித்திருந்தது. பிறவியில் நேர்ந்துவிட்ட ஓர் அவலட்சணத்துக்காக மனம் மறுகி மாய்ந்து கொண்டிராமல், தன்னம்பிக்கையோடும், உற்சாகத்தோடும் வாழ்கிற அவனை மிகவும் விரும்பி வரவேற்றான் இளையநம்பி. எப்படிப்பட்டவனாலும் அந்த யானைப் பாகனைத் துயரப்படச் செய்யமுடியாது என்று தோன்றியது. செல்வப் பூங்கோதையும் அவள் அன்னையும் இளைய நம்பிடம் விடை பெற்றனர்.
“இனி உங்களையும், உங்கள் காரியங்களையும் அந்துவனின் பொறுப்பில் விட்டு விட்டு நாங்கள் விடை பெற வேண்டிய நேரம் வந்துவிட்டது. ஆலயத்தில் வழிபாட்டை முடித்துக் கொண்டு இரவோடிரவாகவே நாங்கள் வண்டிகளோடு திருமோகூர் திரும்ப வேண்டியிருக்கும்.”
“பெரிய காராளருக்கும், அவருடைய புதல்வியாகிய உனக்கும் நான் எவ்வளவோ நன்றிக்கடன்...” என்று உபசாரமாக அவன் தொடங்கிய பேச்சை இடைமறித்து-
“அப்படி எல்லாம் நன்றி சொல்லி, இன்றோடு கணக்குத் தீர்த்து விடாதீர்கள். நமக்குள் இன்னும் எவ்வளவோ பல உதவிகளைத் தரவும் பெறவும் வேண்டும்! நெருங்கிப் பழக வேண்டியவர்கள், நட்பும் பகையும் அற்ற நொது மலர்களைப் போல் நன்றி சொல்லிக்கொண்டு போய் விடக் கூடாது” என்றாள் பெரிய காராளரின் மனைவி. அவனும் அதை ஒப்புக் கொள்வதுபோல், மலர்ந்த முகத்தோடு அவர்களுக்கு விடை கொடுத்தான். நந்தவனத்தில் இருந்து அவர்கள் ஆலயத்திற்குள் சென்ற பின், யானைப் பாகன் அந்துவன் இளைய
நம்பியை யானைக் கொட்டாரத்துக்கு அழைத்துச் சென்றான். போகும் போதும் அதே உற்சாகமான பேச்சுத்தான்.
“ஐயா! நீங்கள் கொடுத்து வைத்தவர். இந்நகரத்தில் முதல்முதலாக என் முகத்தில் விழிப்பவர்கள் யாராயிருந்தாலும் அவர்களுடைய காரியத்துக்கு நிச்சயமாக வெற்றி உண்டு. இன்று இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் முதலில் என் முகத்தில்தான் விழித்திருக்கிறீர்கள். இனி நீங்கள் எதற்குமே கவலைப்பட வேண்டியதில்லை. என்னுடைய முகத்துக்கு அப்படி ஒர் இராசி உண்டு என்பது பிரசித்தமானது...”
“நீ சொல்வதை நான் எப்படி நம்புவது அப்பனே? உன்னுடைய முகராசியின் வெற்றிக்கு நிரூபணமோ எடுத்துக் காட்டோ இருந்தால்தானே நம்பலாம்?”
“நிரூபணம் வேண்டுமானால் மிகவும் பெரிய இடத்திலிருந்தே அதை எடுத்துக் காட்டலாம் ஐயா. அதிக தூரம் போவானேன்? நம் இருந்த வளமுடைய பெருமாளையே எடுத்துக் கொள்ளுங்களேன். நாள் தவறாமல் விசுவரூப மங்கல தரிசனத்தின் போது வையையிலிருந்து குடம் நிறைய என் யானைமேல் தான் திருமஞ்சன நீர் வருகிறது. அகிலாண்ட கோடி பிரமாண்ட நாயகராகிய அவரே எண்ணற்ற மக்களுக்கு அருள்புரிவதற்கும் காட்சியளிப்பதற்கும் முன் இந்த ஏழை யானைப் பாகன் அந்துவனின் இராசியான முகத்தில்தான் நாள் தவறாமல் முதலில் விழிக்க வேண்டியிருக்கிறது.”
இதைக் கேட்டுச் சிரிப்பை அடக்கமுடியாமல் இளைய நம்பி நன்றாக வாய்விட்டுச் சிரித்து விட்டான்.
“இரைந்து சிரிக்காதீர்கள்! நம்மைச் சுற்றிலும் அபாயங்கள் இருக்கின்றன. இந்தப் பாண்டிய நாட்டில் அதிக மகிழ்ச்சியோடு இருப்பவர்கள் யார் யாரோ அவர்களெல்லாரும் கூடக் களப்பிரர்களின் சந்தேகத்துக்குரியவர்களே” என்று கூறிய்படியே எதிரே கையைச் சுட்டிக் காட்டினான் அந்துவன்.