நித்திலவல்லி/முதல் பாகம்/7. வெள்ளியம்பலம்
“முரடர்களின் மிகப் பெரிய சந்தேகங்களைக் கூடச் சுலபமாக நீக்கி விடலாம். ஆனால் பலவீனமானவர்களின் சிறிய சந்தேகங்களைக் கடுமையாக முயன்றாலும் கூடப் போக்க முடியாது! நல்லவேளையாகக் களப்பிரர்களில் பெரும்பாலோர் முரடர்கள்.”
“முரடர்கள் என்றாலும், நீங்கள் கவலைப்பட வேண்டியதில்லை. இந்த நகரத்தில் நுழைந்தவுடன் நீங்கள் என் முகத்தில் அல்லவா விழித்திருக்கிறீர்கள்? இருந்த வளமுடைய பெருமாளே இந்தக் கடுமையான களப்பிரர் ஆட்சியில் ஆபத்தில்லாமல் இருக்கக் காரணமாக நாள் தவறாமல் எந்த முகத்தில் விழித்துக் கொண்டிருக்கிறாரோ, அந்த முகத்தில் நீங்களும் விழித்திருக்கிறீர்கள்!”
“அதாவது நாள் தவறாமல் உன் முகத்தில் முதலில் விழிப்பதனால் தான் எல்லாம் வல்ல பெருமாளுக்கே இவ்வளவு புகழ் என்கிறாய் இல்லையா?”
“அதில் சந்தேகம் என்ன?”
“பெரிய வம்புக்காரனாக இருப்பாய் போலிருக்கிறதே!... சிரித்துச் சிரித்து வாய் புண்ணாகி விடச் செய்கிறாய் நீ!”
“இந்த நற்சான்று அடியேன் முற்றிலும் எதிர்பாராத இடத்திலிருந்து கூடக் கிடைத்திருக்கிறது ஐயா! நம்முடைய பெரியவர் மதுராபதி வித்தகர் வெற்றுச் சிரிப்பையும், நகைச்சுவையையும் அதிகம் விரும்பாதவர் என்பதைத் தாங்களும் நன்கு அறிவீர்கள். காரியங்களைச் சாதிக்காத வார்த்தைகளும், எதிராளியை வெற்றி கொள்ள முடியாத புன்முறுவலும் ஓர் அரச தந்திரியின் வாயிதழ்களிலிருந்து வெளியேறி நஷ்டப்படக் கூடாது என்று அடிக்கடி கூறுகிறவர் அவர். அவரையே சமயா சமயங்களில் என்னுடைய பேச்சுகளால் சிரிக்க வைத்திருக்கிறேன் நான்.”
“'அந்துவா! கடவுள் இன்னும் ஒன்பது பேர் முகத்தில் வைத்திருக்க வேண்டிய சிரிப்பையும் சேர்த்துக் கைத்தவறுதலாகவோ, மறதியாகவோ உன் ஒருவன் முகத்திலேயே வைத்துவிட்டார். இதேபோல் அவர் பத்துப் பேருடைய அழுகையையும் ஒரே முகத்தில் வைத்துப் படைத்த குரூரமான முகமும் உலகில் எங்காவது இருக்கும். உன்னால் படைப்புக் கடவுளுக்குக் கை நஷ்டமாகிப் போன அந்த ஒன்பது பேருடைய சிரிப்பையும், நிரந்து கொள்வதற்காக உன் முகத்துக்கு நேர்மாறான குரூர முகம் ஒன்றையும் அவர் படைத்துத்தான் இருக்கவேண்டும்’ என்று பெரியவர் ஒரு சமயம் என்னிடம் கூறியபோது, உடனே சிறிதும் தயங்காமல் நான் என்ன மறுமொழி கூறினேன் தெரியுமா?”
“அவரிடம் என்ன கூறியிருந்தாய் நீ அப்போது?”
“நான் அவரிடம், ‘தாங்கள் கூறுவது மெய்தான் ஐயா! இப்போது நம்முடைய பாண்டிய நாட்டை அடிமைப்படுத்தி ஆண்டுவரும் களப்பிரக் கலியரசன் முகத்தில், பத்து முகங்களுக்குப் பகிர்ந்து அளிக்கத் தேவையான அவ்வளவு குரூரத்தையும், அழுகையையும் கைதவறிப் படைப்புக் கடவுள் வைத்திருப்பதாகத் தெரிகிறது’ என்று உடனே கூறிய மறுமொழியைக் கேட்டு நீண்டநேரம் சிரித்துக் கொண்டிருந்தார் பெரியவர்” என்றான் யானைப்பாகனாகிய அந்துவன்.
சிறிதும் பெரிதுமாகச் சங்கிலிகளால் பிணைக்கப் பட்டிருந்த யானைகளைக் கடந்து, இளையநம்பியைக் கொட்டாரத்தின் உட்பகுதிக்கு அழைத்துச் சென்றான் அந்துவன். அவனோடு ஓர் அரை நாழிகை நேரம் பேசிச் சில விவரங்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது.
“இரவில் இங்கே தங்குவதை விட, நீங்கள் வெள்ளியம்பல மண்டபத்துக்குப் போய்விடுவது நல்லது. இந்தக் கொட்டாரத்தில் சில களப்பிர யானைப் பாகர்களும் இருக்கிறார்கள். அவர்கள் அவ்வளவாக விரும்பத் தக்கவர்கள் இல்லை; மேலும் இன்றிரவு வெள்ளியம்பல மண்டபத்தின் பின்புறம் உள்ள தோட்டத்தில் உங்களை இன்னொரு நண்பன் சந்திப்பான். அவனிடம் இருந்து நீங்கள் மிக அரிய செய்திகள் சிலவற்றையும், செயல் திட்டங்களையும் தெரிந்து
கொள்ளலாம். நன்றாக நினைவு வைத்துக் கொள்ளுங்கள்; அந்தத் தோட்டத்தில் உள்ள கடம்ப மரங்களில் மிகப் பெரிய அடிமரத்தை உடையது எதுவோ, அதன் அருகே நீங்கள் காத்திருக்க வேண்டும். அவன் உங்களைச் சந்திக்க நடுச்சாமம் வரை கூட நேரம் ஆகலாம்” என்றான் அந்துவன்.
இருந்த வளமுடையாரை வழிபட்ட பின் இருளில் கூட்டத்தோடு கூட்டமாக மதுரை நகரின் வீதிகளில் அலைந்து வெள்ளியம்பல மண்டபத்திற்கு இளையநம்பி போய்ச் சேரும் போது அதிக நேரம் ஆகியிருந்தாலும், இன்னும் மண்டபத்தில் கலகலப்புக் குறையவில்லை.
பல மொழி பேசும் பல நாட்டு யாத்திரிகர்களும், வணிகர்களும், புலவர்களும், திருவிழாப் பார்க்க வந்தவர்களுமாக எண்ணற்றோர் தங்கியிருந்த கடல் போற் பரந்த அந்த அம்பலத்தை, எல்லாப் பகுதியும் சுற்றிப் பார்த்துவிட்டு, அவன் தோட்டத்துக்குள் நுழையும்போதே நள்ளிரவாகி விட்டது. கடம்ப மரங்களில் மிகப் பெரிய மரத்தைத் தேடி, அவன் அதனருகிற் போய் நிற்கவும் அங்கு இருளில் நன்றாக முகம் தெரியாத மற்றொருவன் வந்து சேர்ந்தான். ஒரு கணம் தயங்கியபின் புதியவனை நோக்கி இளைய நம்பி ‘கயல்’ என்று கூறினான். ஆனால் வந்த புதியவனிடம் இருந்து பதிலுக்கு அந்த நல்லடையாளச் சொல் ஒலிக்கவில்லை. உடனே இளையநம்பியின் நெஞ்சம் விரைந்து துடித்தது.
அருகில் வந்தவனோ தள்ளாடினான். அவன் சுயபுத்தியோடு பேசும் நிலையில் இல்லை என்பதை மிகச் சிறு கணங்களிலேயே இளையநம்பி தெரிந்து கொண்டான். நாட்பட்டுப் புளித்த தேறலை அருந்திவிட்டுத் தள்ளாடி அரற்றி அலையும் அந்தக் களப்பிரன், தான் சந்திக்க வேண்டிய மனிதனாக இருக்க முடியாது என்பதையும் அவன் உடனே புரிந்துகொண்டான். தன்னை அங்கே அந்தக் குறிப்பிட்ட இடத்தில் சந்திக்க வரப் போகிற நண்பனுக்கு இடையூறாகக் குடித்து விட்டு அலையும் இந்தக் களிமகன் நடுவே நிற்கக் கூடாதே என்ற கவலையில் பாலியில் ஏதோ பேசி, அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. பாலியில் இளைய நம்பி பேசத் தொடங்கியதும், அவன் மேலும் நின்று உடும்புப் பிடியாக அரற்றத் தொடங்கினான். போரிட்டோ, முரண்பட்டோ அவனை அங்கிருந்து விலக்கி அனுப்புவது, தனியே வந்து காத்திருக்கும் தனக்கு நல்லதில்லை என்று தயங்கியே, அந்தக் குடிகாரனின் பேச்சோடு ஒத்துப் பாடி அவனை அனுப்ப முயன்றான் இளையநம்பி. அப்போது அவனிருந்த தளர்ச்சியான நிலையில், தான் அவனைச் செம்மையாகப் புடைத்து வீழ்த்தக் கூட முடியும் என்றாலும், அவனைத் தேடி மற்றவர் வரவோ, அவனே எழுந்து போய் தன்னைச் சேர்ந்த மற்றவர்களைத் தேடி அங்கே அழைத்து வரவோ செய்தால், தன் நிலை கவலைக்குரியதாகிவிடும் என்ற முன்னெச்சரிக்கையோடு முள்ளில் விழுந்த ஆடையை விலக்குவது போல் மெல்ல அவனை அங்கிருந்து விலக்க முயன்றான் இளையநம்பி.
அவனோ, தான் பாலியில் இயற்றியிருக்கும் சிருங்காரச் சுவைக் கவிதை ஒன்றை இவன் கேட்டே தீர வேண்டும் என்று வற்புறுத்தினான். ஆட்சியைக் காப்பாற்றிக் கொள்வதிலேயே குறியாயிருந்த களப்பிரர்கள் தங்கள் நாட்டிலிருந்து படை வீரர்களாகவும், பல்வேறு பணியாளர்களாகவும், பல்லாயிரம் களப்பிர இளைஞர்களைக் கூடல் மாநகரில் கொண்டு வந்து வைத்து, அடிமைகளைப் போல் வேலை வாங்குவதால் மணமாகாத அந்த இளைஞர்கள் தவிப்பதையும், வேதனைப் படுவதையும், வேட்கையுற்றுத் திரிவதையும் பற்றித் தான் கேள்விப்பட்டிருந்தவற்றை நினைத்தான் இளையநம்பி. தான் கேள்விப்பட்டிருந்தவற்றில் எள்ளளவும் பொய்யில்லை என்பதை இப்பொழுது அவன் உணரமுடிந்தது.
வேறு வழியின்றி அந்தக் களிமகனின் பாலி மொழிக் கவிதையைக் கேட்டுத் தொலைப்பதற்காகக் கடம்பமரம் கண்ணில் படுகிற வகையில், அருகே இருந்த மண்டபப் பகுதி
ஒன்றில் போய் அவனோடு அமர்ந்தான் இளையநம்பி. அவன் வாயிலிருந்து அடித்த தேறல் நாற்றம் பொறுக்க முடியாத தாயிருந்தது. அந்தக் களப்பிர இளைஞன் நல்ல உடற் கட்டுடையவனாக இருந்தான். எந்த அபாயத்தையோ எதிர் பார்த்து அவனிடம் பாலியில் பேசப் புகுந்ததன் விளைவு கள் வெறியில் அவன் அரற்றும் சிருங்காரக் கவிதையைக் கேட்க வேண்டிய தண்டனைக்குத் தன்னை ஆளாக்கி விட்டதே என்ற வெறுப்புடன் அமர்ந்திருந்தான் இளையநம்பி. அந்தக் களப்பிர இளைஞன் திரும்பத்திரும்ப அரற்றியதைத் தமிழில் நினைத்துக் கூட்டிப் பார்த்தால், இப்படி வரும் போலிருந்தது:-
"கட்டித் தழுவிட ஓர்இளம்
கன்னிகை வேண்டும் இங்குநான்
மட்டும் படமுடியாக் காமத்தால்
மனமும் உடலும் எரிகையிலே
முட்டும் இளநகில்கள் மோதிடவே என்
மேனி முழுமையும் வெது வெதுப்பாய்ப்
பட்டுப் பெண்ணுடல் பட்டுக் கலந்தவள்
பருகிச் செவ்விதழ் தரவேண்டும்...”
உயர்ந்த கல்வியும், நல்ல குடிப்பிறப்பும் உடைய அவனுக்கு இதை இரண்டாவது முறை நினைத்துப் பார்க்கக்கூடக் கூச்சமாயிருந்தது. காதல் வெறியில் அந்தத் திருக்கானப்பேர்ப் பித்தன் உளறும் கவிதையில் இருந்த நயம்கூட இந்தக் கள்வெறிக் களப்பிரனின் பாடலில் இல்லாததை இரண்டையும் ஒப்பிட்டுப் பார்த்து அவன் உணர முடிந்தது. காதலிற் பிறக்கும் சொற்களையும், காமத்திற் பிறக்கும் சொற்களையும் தரம் பிரிக்க இந்த இருவர் நிலைகளும் அவனுக்குப் பயன்பட்டன.
இப்படித் திரும்பத் திரும்ப இந்தப் பாடலை அரற்றிய படியே மெல்ல மெல்லக் குரல் ஒய்ந்து தூங்கிவிட்டான் அந்த இளைஞன். அவனுடைய குறட்டை ஒலி செவித் துளைகளை அறுப்பது போல் ஒலிப்பதைப் பொறுக்க முடியாமல் எழுந்து
கடம்ப மரத்தடியில் மீண்டும் போய் அமர்ந்தான் இளைய நம்பி. நேரம் ஆகிக் கொண்டே இருந்தது. கலகலப்பு நிறைந்திருந்த வெள்ளியம்பல மண்டபமும் உறக்கத்தில் அடங்கி விட்டது. மண்டபத்தின் வடக்குக் கோடியில் நீண்ட நேரமாய் உரத்த குரலில் ‘மாயை ஏன் அநிர்வசனீயமாக இருக்கிறது?’ -என்று விவாதித்துக் கொண்டிருந்த ஒரு சமணத்துறவியும் வட மொழிவாணரும் கூட நடுச் சாமத்திற்கு மேல் உறக்கத்தைக் கெடுத்துக் கொள்ளும் அளவுக்கு மாயையைப் பற்றிக் கவலைப்பட விரும்பாமல் நன்றாக உறங்கத் தொடங்கியிருந்தனர். வெள்ளியம்பல மன்றின் தோட்டத்தில் ஒர் ஆந்தை இரவின் தனிமைக்கு உருவகம் தருவது போல விட்டு விட்டு அலறிக் கொண்டிருந்தது. அந்த மரத்தடியில் தனியே விழித்திருப்பது பொறுமையைச் சோதிக்கும் காரியமாயிருந்தது. இலைகள் அசையும் ஓசை கூடப் பெரிதாகக் கேட்கும் அந்த நிசப்தமும், அதை இடை இடையே கிழிக்கும் ஆந்தையின் அலறலும், பின்னிரவின் வரவிற்குக் கட்டியம் கூறுவது போன்ற குளிர்ந்த காற்றுமே அந்த வேளையில் அங்கே அவனுக்குத் துணையிருந்தன. தன்னைச் சந்திக்க வேண்டியவன் வழி தவறிவிட்டானோ அல்லது வரவில்லையோ என்ற கவலையில் இளையநம்பி நம்பிக்கை இழக்கத் தொடங்கிய வேளையில் மண்டபத்திற்குள் வரிசை வரிசையான தூண்களின் அணி வகுப்புக்கு நடுவே இருபுறமும் படுத்து உறங்கிக் கொண்டிருக்கும் மனிதர்களை மிதித்துவிடாமல் கவனமாக நடந்து வரும் ஒரு மனிதன் எதிர்ப்பட்டான். அந்த அமைதியில் நெடுந்துாரம் தெரியும் தூண்களின் வரிசைக்கு ஊடே இருபுறமும் படுத்து உறங்குகிறவர்களின் கால்களுக்கு நடுவில் தானாக நேர்ந்திருந்த ஒற்றையடிப் பாதையில் அடிபெயர்ந்து நடக்கும் ஒசைகூடக் கேட்டுவிடாமல் அவன் நிதானமாகவும், கவனமாகவும் நடந்துவருவது மெளனமே உருப்பெற்று எழுந்து வருவது போலிருந்தது.