நிலாப்பாட்டி

இப்புத்தகத்தை Mobi(kindle) வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை EPUB வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை RTF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை PDF வடிவில் பதிவிறக்குக. - இப்புத்தகத்தை txt வடிவில் பதிவிறக்குக. - இவ்வடிவில் பதிவிறக்குக




உலகளாவிய பொதுக் கள உரிமம் (CC0 1.0)
இது சட்ட ஏற்புடைய உரிமத்தின் சுருக்கம் மட்டுமே. முழு உரையை https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode என்ற முகவரியில் காணலாம்.


பதிப்புரிமை அற்றது

இந்த ஆக்கத்துடன் தொடர்புடையவர்கள், உலகளளாவிய பொதுப் பயன்பாட்டுக்கு என பதிப்புரிமைச் சட்டத்துக்கு உட்பட்டு, தங்கள் அனைத்துப் பதிப்புரிமைகளையும் விடுவித்துள்ளனர்.

நீங்கள் இவ்வாக்கத்தைப் படியெடுக்கலாம்; மேம்படுத்தலாம்; பகிரலாம்; வேறு வடிவமாக மாற்றலாம்; வணிகப் பயன்களும் அடையலாம். இவற்றுக்கு நீங்கள் ஒப்புதல் ஏதும் கோரத் தேவையில்லை.

***
இது, உலகத் தமிழ் விக்கியூடகச் சமூகமும் ( https://ta.wikisource.org ), தமிழ் இணையக் கல்விக் கழகமும் ( http://tamilvu.org ) இணைந்த கூட்டுமுயற்சியில், பதிவேற்றிய நூல்களில் ஒன்று. இக்கூட்டு முயற்சியைப் பற்றி, https://ta.wikisource.org/s/4kx என்ற முகவரியில் விரிவாகக் காணலாம்.
Universal (CC0 1.0) Public Domain Dedication

This is a human readable summary of the legal code found at https://creativecommons.org/publicdomain/zero/1.0/legalcode


No Copyright

The person who associated a work with this deed has dedicated the work to the public domain by waiving all of his or her rights to the work worldwide under copyright law including all related and neighboring rights, to the extent allowed by law.

You can copy, modify, distribute and perform the work even for commercial purposes, all without asking permission.
***
This book is uploaded as part of the collaboration between Global Tamil Wikimedia Community

( https://ta.wikisource.org ) and Tamil Virtual Academy ( http://tamilvu.org ). More details about this collaboration can be found at https://ta.wikisource.org/s/4kx.

நிலாப்பாட்டி




பெ. தூரன்


பழனியப்பா பிரதர்ஸ்

சென்னை - 600 014 திருச்சி - 620 002

சேலம் - 636 001 கோயமுத்துர் - 641 001

மதுரை - 625 001 ஈரோடு- 638001



  • சர்வதேசக் குழந்தைகள் ஆண்டு வெளியீடு




NILAA–P–PAATTI
Subject : Story for Children
Author : P. Thooran
Illustrator : Razak
Publishers : PALANIAPPA BROS. Madras - 14, Tiruchi - 2, Salem - 1 Coimbatore - 1, Madurai -1 Erode-l
Printers : ASIAN PRINTERS 14. Peters Road, Madras -600014
Price : Rs. 2-00
First Edition : 14-1 1-79 (Children's day)


நிலாப்பாட்டி

மிகவும் வயசான கிழவி ஒருத்தி இருந்தாள். அவளுக்கு உதவி செய்ய யாரும் இல்லை. சொந்தக்காரர்களும் இல்லை.

அவள் தனியாக ஒரு சின்னக் குடிசையிலே வசித்து வந்தாள்.

அந்தக் கிழவி யாருடைய வீட்டிற்கும் போக மாட்டாள். யாரும் அவள் வீட்டிற்கு வரவும் மாட்டார்கள். அருகிலேயுள்ள வீட்டுக் குழந்தைகளெல்லாம் அந்தக் கிழவியை நிலாப்பாட்டி என்று கூப்பிடுவார்கள். நிலாவுக்குள்ளே யாரோ ஒரு கிழவி, ராட்டையில் நூல் நூற்றுக்கொண்டிருக்கிறது போலத் தெரிகிறதல்லவா? அவளைப் போல அந்தக் கிழவியும் எப்பொழுது பார்த்தாலும் ராட்டையிலே நூல் நூற்றுக்கொண்டிருப்பாள். அதனால் அவளை நிலாப்பாட்டி என்று குழந்தைகள் கூப்பிட்டார்கள். அந்தப் பேராலேயே எல்லாரும் அவளைக் கூப்பிடத் தொடங்கி விட்டார்கள். குழந்தைகள் வைத்த பெயரே அவளுக்கு நிலைத்துப் போய்விட்டது.

அவளுடைய உண்மையான பெயர் யாருக்குமே தெரியாது. ஏனென்றால், அவள் யாரிடமும் அதிகமாகப் பழகுவதும் இல்லை: பேசுவதும் இல்லை. அவள் சதா நூல் நூற்றுக் கொண்டே இருப்பாள். அந்தக் காலத்திலே எந்திரங்கள் இல்லை. ராட்டையால் நூல் நூற்று, அந்த நூலைக்கொண்டுதான் துணி நெய்வார்கள். கிழவி நூல் நூற்று, அதைத் துணி நெய்பவர்களுக்கு விற்று, அதில் கிடைக்கும் கொஞ்சம் பணத்தைக்கொண்டு உணவுப் பொருள் வாங்கி, வயிறு வளர்த்து வந்தாள். அவளால் கஷ்டப்பட்டு வேறு வேலை செய்ய முடியாது. வயதாகி விட்டதால் உடம்பிலே அத்தனை வலுவில்லை.

ஒருநாள் மாலையிலே நிலாப்பாட்டி நூல் நூற்று விட்டுப் பிறகு அடுப்புப் பற்றவைப்ப தற்குக் கொஞ்சம் சுள்ளி எடுத்து வருவதற்காகக் குடிசையைவிட்டு வெளியே வந்தாள். அந்தச் சமயத்திலே, அழகான குருவி ஒன்று பயந்து அலறிக்கொண்டு அவள் பாதத்தின் அருகிலே வந்து விழுந்தது. அதன்மேலே பச்சை, சிவப்பு,

நீலம் ஆகிய மூன்று நிறங்களும் அழகாக விளங்கின. தலையின் உச்சியிலே பட்டுப்போலச் சின்னக் கொண்டேயிருந்தது.

நிலாப்பாட்டி குருவியை அன்போடு கையிலெடுத்தாள். குருவியின் காலொன்று ஒடிந்திருந்தது. அதன் தொடையிலே காயம்பட்டு அதிலிருந்து ரத்தம் வடிந்தது.

“பாட்டி, என்னைக் காப்பாற்று" என்று சொல்வது போலக் குருவி பார்த்தது. அதன் உடம்பெல்லாம் நடுங்கிற்று.

நிலாப்பாட்டி, "ஐயோ பாவம் ! யாரோ இதன்மேல் கல்லை எறிந்திருக்கிறார்கள் போலிருக்கிறது" என்று கூறிக்கொண்டு, சில பச்சிலைகளைப் பறித்து வந்தாள். அவற்றிலிருந்து சாற்றைப் பிழிந்து, காயத்தின் மீது ஊற்றிக் கட்டினாள். ஒடிந்திருந்த காலையும் நேராக வைத்து, அதற்கு ஒரு கட்டுப் போட்டாள்.

பிறகு, அந்தக் குருவியைக் குடிசைக்குள் கொண்டுபோய். முதலில் கொஞ்சம் தண்ணீர் குடிக்க வைத்தாள். சட்டியிலிருந்து கம்பஞ்சாதம் சிறிது எடுத்து வந்து அதற்குக் கொடுத்தாள். அதைச் சாப்பிட்டுவிட்டுக் குருவி அடிபட்ட மயக்கத்தால் அப்படியே படுத்துத் தூங்கி விட்டது.

நிலாப்பாட்டி அந்தக் குருவியைத் தன் குழந்தையைப் போலக் கவனித்து வந்தாள். சில நாட்களிலே அதற்குக் காயமெல்லாம் ஆறிப் போயிற்று; ஒடிந்த காலும் சரியாகிவிட்டது. இப்பொழுது அதனால் பறந்துபோகவும் முடிந்தது. வெளியில் போய்த் தனக்கு வேண்டிய இரையைத் தானே தேடிக்கொண்டது. ஆனால், அதற்குக் கிழவியைவிட்டுப் பிரிந்து வாழ மனம் வரவில்லை. அவளுடனேயே குடிசையில் வாழ்ந்து வந்தது.

குருவி காலையில் எழுந்து இனிமையாகப் பாடும். அந்தப் பாட்டைக் கேட்டுக்கொண்டே மகிழ்ச்சியோடு கிழவி எழுந்திருப்பாள்.

இரவிலே குருவியின் பாட்டைக் கேட்டுக் கொண்டே கிழவி தூங்கப் போவாள்.

இப்படிச் சிலகாலம் சென்றது. அதற்குள்ளே கிழவி மிகவும் தளர்ந்து போய்விட்டாள். முதுமையினாலே அவள் கைகால்கள் ஓய்ந்துவிட்டன. அவளால் ராட்டை சுற்றக்கூட முடியவில்லை. அதனால் உணவுப்பொருள் வாங்குவதற்குக் காசு, பணம் ஒன்றும் இல்லை. சில நாள் அவள் பட்டினியாகவே கிடக்க நேரிட்டது. சில நாளைக்குக் குடிசையைச் சுற்றி முளைத்திருக்கும் கீரைகளைப் பிடுங்கி, வேக வைத்துச் சாப்பிட்டு ஒருவாறு பசியைத் தணித்துக்கொள்ளுவாள். சில நாளைக்கு அதுவும் கிடைக்காது.

அவள் யாரிடத்திலும் தனது நிலைமையைப் பற்றிச் சொல்லவில்லை. இனிமேல் நான் உயிரோடிருந்து யாருக்கு என்ன பயன்? பிறரிடத்திலே உதவி பெற்று வாழ்வது இழிவானது' என்று நினைத்துக்கொண்டு பேசாமல் படுத்திருப்பாள்.

குருவிக்கு அவள் நிலைமையைப் பார்த்து மனம் பொறுக்கவில்லை. அதற்கு அழுகையாக வந்தது. நிலாப்பாட்டி பசியோடு படுத்திருந்தால் இதுவும் அவள் பக்கத்திலே போய்ப் படுத்துக்கொள்ளும்; இரை தேடப் போகாது. கிழவி அதை அன்போடு நீவிக் கொடுத்துவிட்டு, "நீ போய் இரை தேடிச் சாப்பிட்டு வாடா, கண்ணு, எனக்காக நீ பட்டினியாகக் கிடக்காதே. உன்னைப் பார்த்தும் உன்னுடைய பாட்டைக்


கேட்டும் தான் நான் இப்போது சந்தோஷப்படுகிறேன். உன் உடம்பைக் கெடுத்துக்கொள்ளாதே” என்று குழந்தையிடம் சொல்வது போலச் சொல்லுவாள்.

நிலாப்பாட்டிக்கு எப்படியாவது உணவு கண்டுபிடிக்க வேண்டும் என்று அந்தக் குருவி துடியாய்த் துடித்தது. யாரிடமாவது நிலாப் பாட்டியின் நிலைமையை எடுத்துச் சொல்லலாமா என்றால், குருவிக்கு எப்படிச் சொல்லுவதென்று தெரியவில்லை. அதனுடைய பேச்சு மனிதர்களுக்குப் புரியாது. ஆனால், எப்படியாவது பணம் கண்டு பிடித்து அவளுக்குக், கொடுக்க வேண்டும் என்று குருவி முடிவு செய்தது. பணம் கிடைத்தால் நிலாப்பாட்டியின் கவலையெல்லாம் தீர்ந்து

போகும். அவளுக்குச் சோறு கிடைத்துவிடும். இந்த எண்ணம் தோன்றியதும் குருவி பணம் தேடப் புறப்பட்டது. நாள் தோறும் காலையிலிருந்து மாலை வரை எங்கெங்கோ சுற்றி அலைந்தது. கடைசியிலே ஒரு நாள், அந்தக் குருவி தன் மூக்கிலே ஒரு தங்கக் காசை வைத்துக்கொண்டு நிலாப்பாட்டியிடம் பறந்தோடி வந்தது. அந்தக் காசை அவளுடைய பாதத்தருகில்

போட்டுவிட்டு அளவில்லாத மகிழ்ச்சியோடு துள்ளித் துள்ளிக் குதித்தது. ஆனந்தமாகப் பாடிக்கொண்டே நிலாப்பாட்டியைப் பார்த்தது.

நிலாப்பாட்டிக்கு அந்தக் குருவியின் அன்பெல்லாம் புரிந்துவிட்டது. தான் பட்டினி கிடக்கக்கூடாது என்பதற்காகக் குருவி எங்கிருந்தோ அந்தத் தங்கக் காசைக் கொண்டு வந்திருப்பதை அவள் அறிந்துகொண்டாள். அதைக் கொண்டுபோய்க் கடையில் மாற்றி உணவுப் பொருள்கள் வாங்கிக்கொள்ள வேண்டும் என்பது குருவியின் ஆசை என்பதையும் தெரிந்துகொண்டாள். அவளுக்குக் குருவியின் மேல் இன்னும் அன்பு அதிகமாயிற்று.

ஆனால், நிலாப்பாட்டி அந்தத் தங்கக்காசைத் தனக்காக எடுத்துக் கொள்ள விரும்பவில்லை.

'இது யாருடைய சொத்தோ. இதை நான் எனக்காகப் பயன்படுத்தினால் கடவுள் அதைச் சரியென்று நினைக்கமாட்டார். இதுவரையில் நான் யாருடைய பொருளையும் எனக்காக எடுத்துக்கொள்ளவில்லை. சாகப்போகிற வயசிலே அப்படிச் செய்யலாமா?' என்று அவள் எண்ணினாள். நீண்ட நேரம் இப்படி நினைத்துப் பார்த்து, அந்தத் தங்கக் காசைத் தான் வைத்துக் கொள்ளக்கூடாது என்று நிலாப்பாட்டி முடிவு செய்தாள். ஆனால், அந்தக் காசை என்ன செய்வது? அதற்காக மறுபடியும் எண்ணமிடத் தொடங்கினாள்.

அந்த ஊரை ஆண்ட அரசன் மிகவும் நல்லவன். அவன் ஒரு ஏற்பாடு செய்திருந்தான். ஏழைகளுக்குச் சோறு போடவும், ஒரு பெரிய ஏரியுண்டாக்கி அதிலிருந்து தண்ணீரை நிலங்களுக்குப் பாய்ச்சவும் பணம் நிறைய வேண்டி யிருக்கிறதென்றும், செல்வமிருப்பவர்கள் தாராளமாகப் பண உதவி செய்ய முன்வர வேண்டு மென்றும் மக்களுக்குத் தெரியப்படுத்தியிருந் தான். கிழவிக்கு அது இப்பொழுது நினைவுக்கு வந்தது. அரசன் ஒரு பெரிய உண்டிப் பெட்டியை அந்த ஊர்க் கோவிலிலே வைத்திருந்தான். விருப்பமிருந்தால் யார் வேண்டுமானாலும் கோவிலுக்குச் சென்று, அதிலே பணம் போடலாம். அப்படிக் கிடைக்கும் பணத்தைக்கொண்டு ஏரி உண்டாக்க அரசன் எண்ணியிருந்தான்.

“குருவி கொண்டுவந்த தங்கக் காசை அந்த உண்டியிலே போட்டால் எத்தனையோ ஏழை களுக்கு உணவு கிடைக்கும். ஏரியுண்டாக்கி நாட்டைச் செழிப்புள்ளதாகச் செய்யவும் அது உதவியாக இருக்கும்” என்று நிலாப்பாட்டி கருதினாள். அதனால் தள்ளாடித் தள்ளாடி மெதுவாக நடந்து. கோவிலுக்குச் சென்று, அந்தத் தங்கக்காசை உண்டியில் போட்டுவிட்டு வந்தாள்.

கிழவியின் நல்லெண்ணத்தை அறிந்து குருவி பெருமையடைந்தது. இருந்தாலும், தனது எண்ணம் நிறைவேறவில்லையே என்று அதற்கு வருத்தம் உண்டாயிற்று. அது மறுநாளும் ஒரு தங்கக் காசைக் கொண்டுவந்து நிலாப்பாட்டியின் முன்னால் போட்டது. அந்தக் காசைக்கொண்டாவது நிலாப்பாட்டி உணவுப்பொருள் வாங்கிக் கொள்ள வேண்டும் என்பது குருவியின் ஆசை. ஆனால், அவள் அதையும் உண்டியில் போட்டு விட்டாள்.

சில நாட்கள் தினமும் இப்படியே நடந்து வந்தது. ஒரு நாளைக்காவது அவள் ஒரு தங்கக் காசைத் தனக்காக வைத்துக்கொள்ள மாட்டாளா என்று அந்தக் குருவி துடிதுடித்தது. அதனுடைய பேச்சிலே என்னவெல்லாமோ சொல்லிப் பார்த்தது. நிலாப்பாட்டிக்கு அதன் கத்ருது நன்றாகத் தெரிந்தது. இருந்தாலும் தங்கக் காசைத் தனக்காக எடுத்துக்கொள்ள அவள் விரும்பவில்லை. "கண்ணு, நீ எனக்காக வருத்தப்பட வேண்டாமடா. நம் நாட்டு மக்களெல்லாம் சுகப்பட்டால் அதுவே போதும். இந்த


உலகத்துக்குச் சுமையாக நான் எதற்காக இன்னும் இந்த உடம்பைக் காப்பாற்றிக்கொண்டிருக்க வேணும்?" என்று அதனிடம் கூறினாள். குருவி விசனத்தோடு அவள் பேச்சைக் காதிலே வாங்கிக்கொண்டது.

இப்படியிருக்க, சில நாட்களாக உண்டியை நாள் தோறும் இரவிலே திறந்து பார்க்கும்போது, அதிலே வெள்ளியாலும் செம்பாலும் செய்த நாணயங்களோடு ஒரு தங்கக்காசும் இருப்பதைப் பார்த்து அரசன் ஆச்சரியமடைந்தான். ஒவ் வொரு நாளும் யார் இப்படித் தங்கக் காசு போடுகிறவர்கள் என்று கண்டுபிடிக்க வேண்டு மென்று அரசனுக்கு ஆசையுண்டாயிற்று. அதற்காகச் சில ஆட்களை நியமித்து, மறைவாக இருந்து, உண்டியில் பணம் போடுகிறவர்களைக் கவனிக்கும்படி அவன் ஏற்பாடு செய்தான்.

நிலாப்பாட்டியால் ஒரு நாள் நடக்கக்கூட முடியவில்லை. பட்டினியாகக் கிடப்பதால் கை கால்கள் ஓய்ந்துபோய்விட்டன. இருந்தாலும் அவள் மனம் தளரவில்லை. அன்று குருவி கொண்டுவந்த தங்கக் காசை உண்டியில் போடுவதற்காக அவள் புறப்பட்டாள். பசி மயக்கத்தால் தலை சுற்றத் தொடங்கியது. கால்கள் தள்ளாடின. அதனல் அவள் உட்கார்ந்த நிலையிலேயே, கால்களையும் கைகளையும் மெதுவாக முன்னால் தரைமீது வைத்து வைத்துக் கோவிலுக்குப் போனாள். உடம்பில் ஏற்பட்டுள்ள தளர்ச்சியையும், வலியையும் பொறுத்துக் கொண்டு, மெதுவாகக் கோவிலை அடைந்து, அந்தத் தங்கக் காசை உண்டியிலே போட்டுவிட வேண்டும் என்று அவளுக்கு ஆசை. கோவிலை அடைந்ததும் அவளுக்கு சந்தோஷம் உண்டாகி விட்டது. நல்லதொரு திட்டத்திற்கு உதவி

 செய்யப்போவதை நினைத்துப் பெருமை அடைந்தாள்.

அவள் கடவுளைக் கும்பிட்டுவிட்டு உண்டியில் தங்கக் காசைப் போடுவதை அரசனுடைய ஆட்கள் கண்டுகொண்டார்கள். அதை அவர்கள் உடனே அரசனிடம் தெரிவித்தார்கள். அரசன் இதைக் கேட்டு மேலும் ஆச்சரியமடைந்தான். நிலாப்பாட்டியைச் சந்தித்து அவளைப்பற்றி முழு விவரம் தெரிந்துகொள்ள வேண்டும் என்று நினைத்தான்.

இந்த அரசன் மிகவும் நல்லவன். மக்களிடத்தில் அன்புடையவன். சிறந்த வீரன். அவன் சின்னக் குழந்தையாக இருந்தபோது அவனுடைய தந்தை அரசாட்சி செய்து வந்தார். அப்போது பகைவர்கள் அந்த ஊரையும் கோட்டையையும் திடீரென்று எதிர்த்து வந்து தாக்கினார்கள். தந்தையால் பகைவர்களைத் தோற்கடிக்க முடியவில்லை. ஏனென்றால், பகைவர்களுடைய சேனை மிகப் பெரியதாக இருந்தது. அதனால் அவனுடைய தந்தை வீரத்தோடு சண்டை செய்தும் பயனில்லாமற் போயிற்று. அவர் உடம்பில் பல இடங்களில் காயமடைந்து போர்க்களத்திலேயே இறந்து போனார். பகைவர்கள் கோட்டையைப் பிடித்துக்கொண்டார்கள். ஆனால், சின்னக் குழந்தையாக இருந்த இந்த அரசன் அவர்களிடம் சிக்கவில்லை. யாரோ சில பேர் அவனை இரகசியமாக அந்த ஊரிலிருந்து எடுத்துக்கொண்டு போய், வேறு யாருக்கும்


தெரியாமல் வளர்த்து வந்தார்கள். அவனுக்கும் தான் அரச குமாரன் என்பது தெரியாது. அவனுக்கு இருபது வயதான போதுதான் அவனிடம் உண்மையைச் சொன்னார்கள். அவன் உடனே ஒரு சேனையைத் திரட்டி வந்து, பகைவர்களை எதிர்த்துப் போரிட்டு, அவர்களை ஊரைவிட்டு விரட்டியடித்தான். அவனே அரசனும் ஆனான். மக்களெல்லாம் அவனுடைய வீரத்தைக் கண்டு மகிழ்ச்சியடைந்தார்கள்.

இப்படிப்பட்ட வீரனான அந்த அரசன், மறுநாள் காலையில் நிலாப்பாட்டியைத் தேடிக் கொண்டு அவளுடைய குடிசைக்கே வந்து விட்டான். “பாட்டீ, உனக்கு இந்தத் தங்கக்காசு ஏது ? எதற்காக இதை உண்டியில் நாள் தோறும் போடுகிறாய்?” என்று அவன் கேட்டான் .

நிலாப்பாட்டிக்கு அரசனைப் பார்த்ததும் முதலில் கொஞ்சம் பயமாகத்தான் இருந்தது. இருந்தாலும் அவள் குற்றமொன்றும் செய்யாதவளாகையால் அவளுடைய பயம் விரைவில் நீங்கி விட்டது. குருவி தனக்கு எங்கிருந்தோ தங்கக் காசு கொண்டுவந்து கொடுக்கிறதையும், அதை அவள் தனக்காக வைத்துக்கொள்ளாமல் உண்டியில் போடுவதையும் அரசனுக்குத் தெளிவாகக் கூறினாள்.

அரசனுக்கு உண்டான ஆச்சரியத்தைச் சொல்ல முடியாது. அவன் நிலாப்பாட்டியை மரியாதையோடும் அன்போடும் பார்த்துக் கொண்டு நின்றன். அந்த வேளையில், வெளியே போயிருந்த குருவி, தன்னுடைய மூக்கில் ஒரு தங்கக் காசைக் கொண்டுவந்து நிலாப்பாட்டியின் முன்னால் வைப்பதையும் அவன் பார்த்தான். கிழவி சொல்வது உண்மை என்று அவனுக்குத் தெரிந்துவிட்டது.



பிறகு, அரசன், அந்தக் குருவி எங்கிருந்து தங்கக் காசு கொண்டுவருகிறது என்று கண்டு பிடிக்க வேண்டுமென்று நினைத்தான். அதற்காக மிகவும் திறமைசாலிகளான சில பேரை அவன் பொறுக்கி எடுத்தான். அந்தக் குருவி காலையில் எழுந்தவுடன் எங்கெல்லாம் போகிறது என்று தெரிந்து கொள்வதற்காக, அதன் பின்னால் எப்படி யாவது தொடர்ந்து சென்று கவனிக்கும்படி ஏற்பாடு செய்தான்.

அந்த ஊரைச் சேர்ந்த கோட்டைச்சுவர் மிகப்பழமையானது. அரசனுடைய முன்னோர்கள் பல ஆண்டுகளுக்கு முன்னாலே அதைக் கட்டியிருந்தார்கள். அந்தக் கோட்டையின் சுவரிலே, எங்கோ ஒரு பக்கத்தில், சிறிதாயிருந்த ஒரு பொந்துக்குள் அந்தக் குருவி நுழைவதையும், அப்படி நுழைந்துவிட்டு வெளியில் வரும்போது தங்கக்காசு ஒன்றை மூக்கில் வைத்திருப்பதையும் ஒருவன் மூன்று நாட்களிலே கண்டுபிடித்து விட்டான். அவன் அதை உடனே அரசனுக்குத் தெரிவித்தான். அரசனுக்கு ஆச்சரியம் மேலும் அதிகமாகிவிட்டது. பல பேர் அவனிடம் கூறியிருந்த ஒரு செய்தியும் அவனுடைய நினைவுக்கு அந்தச் சமயத்தில் திடீரென்று வந்தது. அதனால் அவன் அந்த மதில் சுவரைப் பரிசோதிக்க ஆட்களோடு விரைந்து சென்றான். வேலைக்காரர்களை விட்டு அந்தப் பொந்திருந்த இடத்திலே சவரை இடிக்கும்படி உத்தரவு கொடுத்தான்.

வேலைக்காரர்கள் அப்படியே இடித்தார்கள். அதற்குள்ளே, ஒரு பித்தளை அண்டாவிலே நிறையத் தங்கக் காசும் தங்க நகைகளும் இருந்தன. அந்தக் கோட்டையை இந்த அரசனுடைய தந்தை ஆண்ட காலத்தில் பகைவர்கள் பிடித்துக்கொண்டார்களல்லவா ? அப்படிப் பிடிப்பதற்கு முன்னல் இந்த அரசனுடைய தந்தை யாருக்கும் தெரியாமல் அரண்மனையிலிருந்த விலையுயர்ந்த பொருள்களையெல்லாம் இப்படி எங்கேயோ மறைத்து வைத்துவிட்டதாகப் பல பேர் சொல்லிக்கொள்வார்கள். அரசனும்

 அந்தப் பேச்சைக் கேட்டிருக்கிறான். ஆனால் இது, வரையில் அந்தப் பொருள்கள் எங்கிருக்கின்றன என்று யாருக்கும் தெரியவில்லை. குருவியின் உதவியால் அவை இப்பொழுது அரசனுக்கே கிடைத்துவிட்டன.

அதைக்கொண்டு ஏரியுண்டாக்க அரசன் உடனே ஏற்பாடு செய்தான். அதற்கு "நிலாப் பாட்டி ஏரி" என்று பெயரிட வேண்டுமென்றும் முடிவு செய்தான். நிலாப்பாட்டியை அரசன் வெகுவாகப் புகழ்ந்ததோடு அவளை அரண்மனையிலேயே வந்திருக்கும்படியாகக் கேட்டுக்கொண்டான், ஆனால், நிலாப்பாட்டி தனது குடிசையை விட்டுப் போக இசையவில்லை. “இந்தக் குருவியும் நானும் இங்கேயே சந்தோஷமாக இருக்கிறோம். எங்களுக்குப் பெரிய வீடு எதற்கு?” என்று அவள் கூறிவிட்டாள். நிலாப்பாட்டியின் வசதிக்காகவும் உணவிற்காகவும் அரசன் எல்லா ஏற்பாடுகளையும் செய்து வைத்தான். குருவிக்கு இப்பொழுது ஒரே மகிழ்ச்சி. இனிமை இனிமையாகப் பாடிக் கொண்டே இருந்தது.

அந்த ஊர் மக்களுக்கு நிலாப்பாட்டியைப் பற்றி நன்றாகத் தெரிந்து விட்டது. அதனால் பல பேர் ஒவ்வொரு நாளும் அவளைப் பார்த்துப் பேசவும், அவளுக்கு வணக்கம் தெரிவிக்கவும் வரத் தொடங்கினார்கள்.

— — —
"https://ta.wikisource.org/w/index.php?title=நிலாப்பாட்டி&oldid=1118953" இலிருந்து மீள்விக்கப்பட்டது