நீங்களும் இளமையாக வாழலாம்/புரிந்து கொள்வது புத்திசாலித்தனம்

6
புரிந்து கொள்வது புத்திசாலித்தனம்

 நமக்கு எப்படி வயதாகிறது? முதுமை வந்து எவ்வாறு மூடுகிறது?

இரண்டு முறையாக நமக்கு எடுத்துக் கூறுகின்றார்கள் அறிவியல் வல்லுநர்கள்.

இயற்கையாகவே கொஞ்சங் கொஞ்சமாக வந்து தேகத்தைத் தழுவிக் கொள்ளும் தளர்ச்சி. அது முதல் முறை.

இரண்டாவது காரணமானது. சுற்றுப்புறச் சூழ்நிலைகள் வந்து சுற்றி வளைத்துக்கொள்ளும் தன்மைகள். அதாவது, அவ்வப்போது உடலுக்கு உட்புறமும், வெளிப்புறமும் ஏற்படக்கூடிய காயங்கள், (Injuries); தொற்றிக் கொள்ளும் நோயின் வேகங்கள், தேயும் உடலுறுப்புக்களுக்குத் தக்கவாறு, புதுப்பித்தும் புத்துணர்ச்சியையும் கொடுக்கின்ற உணவுச் சத்துக்கள் இல்லாத கொடுமைகள், வறுமைகள், மற்றும் நம்மை நாமே வருத்திக் கொள்ளும் வடிகட்டிய முட்டாள்தனமான பழக்க வழக்கங்கள்.

இதனால்தான் நிச்சயமாக உடலில் மாற்றங்கள் நிகழ்கின்றன.

அதாவது, தசைகளில் உள்ள விசைச் சக்திகள் நாளாக நாளாக வேகம் இழக்கின்றன. வெளிப்புறத் தாக்குதல்களை சமாளிக்கவும், சரிக்கு சரி போராடவும் கூடிய ஆற்றலிலும் உடலுறுப்புக்கள் குமைகின்றன. அத்துடன் கூடவே தேக அமைப்பிலும் தோற்றத்திலும் மாறுகின்ற வடிவமைப்பும் புலனாகின்றன.

இப்படி ஏற்படுகின்ற இத்யாதிகள் ஏற்படுத்தும் கொடுமைகளைப் பாருங்கள். வருடங்கள் வந்து கொண்டே இருப்பதும், வாழ்க்கை வளர்ந்து கொண்டே இருப்பதும், வயதும் உயர்ந்துகொண்டே இருப்பதும் நாம் அறிந்ததுதானே!

அதற்குள், உடலுக்குள்ளே உண்டாகும் உபரியான விளைவுகள், அதாவது உடலின் அமைப்புக்கு அடிப்படையாய் அமைந்த திசுக்கள் விரிவதற்குப் பதிலாக சுருங்கி கனமடைகின்றன. இறுக்கமாகின்றன. ஈரத்தன்மையை இழக்கின்றன. வழவழப்புத் தன்மையை இழக்கின்றன.

மிருகங்களின் தசைகள் தான் முதிர்ச்சி அடைந்து விடுகின்றன என்று முனுமுனுக்கின்ற அசைவ மனிதர்களை பற்றி நாம் அறிவோம். மிருகங்களின் தசைகள் முதிர்ந்து போவதுபோலவே, மனித தேகத்தின் தசைகளும் முற்றித்தான் போகின்றன.

ஏன் இந்த மாற்றம் நிகழ்கிறது என்பதையும் சற்று ஆராய்ந்து பார்க்கலாமே!

வயதும் தோலும்

உடலின் அடிப்படையானவை செல்கள். செல்கள் கூட்டம்தான் திசுக்கள் ஆகின்றன. திசுக்களின் கூட்டம்தான் உறுப்புக்களாக உருவம் கொள்கின்றன.

இப்படி இணையற்ற தன்மை பெற்ற திசுக்கள் இரண்டு விதமாக மாறி, உடலுக்குள் பணிபுரிகின்றன. ஒன்று முக்கியமான உறுப்புக்களாக (Vital Organs) அமைந்திருப்பது. மற்றொன்று உறுப்புக்களை இணைக்கின்ற இணைப்புத் திசுக்களாகிவிடுவது.

இத்தகைய இணைப்புத் திசுக்கள் உடல் முழுதும் நீக்கமறப் பரவி இருக்கின்றன. இவை வளர்ந்து கொள்ளவும், மாற்றி அமைத்துக் கொள்கின்ற ஆற்றலும் உடையவை. உதாரணமாக, காயம் பட்ட இடத்தில், தீய்ந்து போன தோல்களின் மீது இவை மாறி, தழும்பாக ஆகிவிடுகின்றன.

வயது ஆக ஆக, இணைப்புத் திசுக்கள் வாட்டமடையாமல் வேலை செய்கின்றன. ஆனால் முக்கிய உறுபபுக்களாக அமையும் திசுக்கள் தான் தங்கள் செயல் வேகம் குறைந்து, சுருங்கிக் கொள்ளும் தன்மைகளை அடைகின்றன.

முக்கிய உறுப்பின் திசுக்கள் வளர்ச்சி குறைந்து சுருங்கும்பொழுது. இணைப்புத் திசுக்கள் மட்டும் சற்றும் களைக்காது இருப்பதால் மாற்றங்களில் சில ஏமாற்றங்களையும் சந்திக்க வேண்டியிருக்கிறது. இதனைத் தோல் அமைப்பிலே நாம் காணலாம்.

தோலின் உட்புறம் எபிதீலியல் திசுக்கள் என்று ஒரு மெல்லிய அடுக்கு இருக்கிறது. அதற்குக் கீழே இணைப்புத் திசுக்களின் அடுக்கு, அதற்கும் கீழே கொழுப்புப் பரவியிருக்கிறது.

வயது ஏற ஏற, மேலே உள்ள எபிதீலியல் திசுக்கள் மேலும் மேலும் மெலிந்து போய் விடுகின்றன. அதனால் தோலின் பளபளப்பும் மினுமினுப்பும் குறைந்து மாறி விடுகின்றன.

வழவழப்பினை வழங்குகின்ற, வியர்வையை சுரக்கின்ற வியர்வைச் சுரப்பிகளும் செயல் வேகம் இழந்து விடுவதால், தோலின் மேற்புறம் கடினமாக மாறுவதுடன், காய்ந்துபோகும் வறட்சித் தன்மையையும் அடைகிறது.

உள்ளே இருக்கும் கொழுப்புப் பகுதி குறையவும் கரையவும் நேர்வதால், தோலில் சுருக்கம் நேர்கிறது. தொங்கலான தோற்றத்தை அடைகின்றது. அதே சமயத்தில், இணைப்புத் தசைகளும் முதிர்ந்து போகின்றன. இதன் காரணமாக, தோலின் வழவழப்பு மறைகிறது. சாதாரணமான இயங்கும் இயல்பு மறைகிறது. நீண்டு சுருங்கிட நேர்த்தன்மை கொள்ளும் ஆற்றலைத் தோல் இழப்பதால்தான், தோலில் சுருக்கம் விழுகின்றது.

இப்படி திசுக்களும் தசைகளும் தளர்ச்சியடைவதால்தான், முகத்திலே சுருக்கம், கழுத்துப் புறத்திலே மடிப்புக்கள் ஏற்படுகின்றன. ஏற்படுகின்ற தருணத்தில், இரத்தத் தந்துகிகள் (அதாவது சிறு சிறு குழாய்கள்) தங்களது அகலத்தில் குறைகின்றன. அதனால் இரத்தப் போக்குவரத்தும் குறைகிறது. இதன் விளைவாக முகத்தில் உள்ள தோலானது அதன் இயற்கை வண்ணத்தையும் எழிலையும் இழக்க, அதன் மூலம், தோன்றும் இளமையை இழக்க, ஒரு வயதான தோற்றத்தை அளித்து விடுகிறது.

வயதாகும் தோற்றத்திற்கு முன்னோடியாகக் காட்டுவது வெளியில் தெரியும் தோல் என்பதால், அதனைப் பக்குவமாகப் பாதுகாக்கும் பழக்கத்தை நாம் மேற்கொண்டாக வேண்டும். (இம்முறைகளை பின்வரும் அத்தியாயங்களில் விளக்க இருக்கிறோம்.)

வயதும் முடியும்:

முடி உதிர்ந்து தலை வழுக்கையாவது அல்லது கறுத்த முடி நரைத்தும் போவது வயதானதிற்கு அறிகுறி என்பார்கள் ஆண்களுக்கு நரைப்பது போலவே, முடி உதிர்வதும் ஓர் அதிகமான தண்டனை தான். பெண்களுக்குப் பொதுவாக வழுக்கையோ சொட்டையோ விழுவதில்லை.

முடி உதிர்வதும் நரைப்பதும் எந்த வயதிலிருந்து ஆரம்பிக்கும்?

கறுத்தமுடி நரைப்பது இருபதிலும் உண்டு எழுபதிலும் உண்டு. சிலருக்குத் தொண்ணூறு வயதிலும் நரைப்பதில்லை. இந்த நிலை ஏன்? முடி வளர்வதற்கும் முடி உதிர்வதற்கும் உடலில் உள்ள ஒரு வகையான அமிலச் சுரப்பிகள் தான் காரணம். இத்தகைய சுரப்பிகள் சுரப்பதில் தளர்ந்து தவறுகிறபொழுதுதான். இத்தகைய தகராறுகள் வருகின்றன. அதிலும் ஆண்களுக்குரிய சுரப்பிகள்தான் இப்படி அவல நிலைக்கு ஆளாகின்றன.

முடி உதிர்ந்து போனால், அந்த வழுக்கைத் தலையில் வேறு எந்த முயற்சிகளாலும் முடிமுளைக்கும் வாய்ப்பினை ஏற்படுத்திவிட முடியாது.

முடியைப் பாதுகாப்பதால், பத்திரமான பழக்க வழக்கங்களால், தூய்மையாக வைத்திருந்தால், விழாமல் வைத்துக் கொள்ளலாம். என்றாலும் அதற்கு நம்மால் உத்திரவாதம் அளிக்க முடியாது.

முடியானது வயதாகும் போது, நெளியும் தன்மையிலிருந்து மாறி நிமிர்ந்து நிற்கின்ற வளையாத்தன்மையை அடைவதை நாம் பார்க்கலாம்.

இது போலவே, நகங்களும் இருக்கின்றன. வயதின் முதிர்ச்சி காலத்தில், கை விரல், கால் விரலில் உள்ள நகங்கள் எளிதில் உடையக் கூடியனவாக, முரட்டுத்தன்மை மிகுந்தனவாக, கடினமானதாக மாறிப் போகின்றன. இதுவும் சரியாகப் பாதுகாக்காத காரணத்தால் தான் மாறிப் போகின்றன. என்றும் கூறுகின்றார்கள்.

எலும்புகள் வலுவிழக்கின்றன.

நிமிர்ந்து நிற்கவும், வலிமை காக்கவும் உதவுவன எலும்புகளாகும். வயதாகும் போது எலும்புகள் வலுவிழக்கின்றன. கடினத்தன்மையிலிருந்து மென்மையாகிக் கொள்கின்றன. பலஹீனம் அடைகின்றன.

எலும்பின் உட்பகுதிகள் கூடாக மாறி விடுவதால், எலும்பின் சுவர்ப் பகுதி கடினத்திலிருந்து இலேசாகி விடுகின்றன. அதனால்தான் வயதானவர்கள் எலும்பு முறிவுக்கு சர்வ சாதாரணமாக, இலக்காகி விடுகின்றார்கள்.

முகம் ஏன் மாறுகிறது?

முக அமைப்பு கூட இந்த சக்தியற்ற எலும்புகளால் தான் மாறிப் போகிறது. கீழ்த்தாடை எலும்பு மாற்றமும், பற்கள் கழன்று போவதும் மாற்றத்திற்கு ஒரு காரணமாகும்.

காதோரத்திற்கு கீழ்ப்பகுதி எலும்புகள், பொருத்தப்பட்டிருக்கும் இடத்திலிருந்து இடம் பெயர்ந்து போவதால், அந்த அமைப்பு முன்புறமாக முட்டி கொண்டு வந்து விடுவதால்தான், முக அமைப்பு மாறி முதிர்ச்சியைத் தந்து, கிழட்டுத் தோற்றத்தை கொடுத்து விடுகிறது.

நிமிர்ந்து நிற்க உதவும் முதுகுப்புறமுள்ள தண்டுகள், மெலிவினால், வளைகின்றன. அவற்றை சேர்த்துக் கட்டியிருக்கும் தசைகள் சக்தியிழந்து போவதால், இறுக்கமாகக் கட்டியிழுக்கும் ஆற்றல் இழக்கின்றன. அதனால்தான கூன் முதுகுப் போடவும், குனிந்தவாறு நடக்கவும் கூடிய கொடுமை ஏற்பட்டுவிடுகிறது.

இன்னும் பாருங்கள்

மூட்டுக்களில் வலிகள் உண்டாகின்றன. எலும்புகளை இணைக்கின்ற இணைப்புத் திசுக்கள் தங்களது விரிந்து சுருங்கிப் பணியாற்றும் ஆற்றலை இழப்பதால், மூட்டுக்கள் விறைப்பாகிப்போகின்றன.

மூட்டுக்களில் விறைப்புத்தன்மையும், தளர்ச்சியடையும் தசைகளும்தான் முதுமை வந்துவிட்டது என்ற அறிவிக்கின்ற முன்னோடித் தூதுவர்கள் ஆவார்கள்.

இதனை எப்படி அறிவது?

நடக்கும்பொழுது இதனை அறியலாம். இளைஞர்களுடன் நடக்கின்றபொழுது. அவர்கள் வேகத்திற்கு ஈடுகொடுத்து நடக்கமுடியாத ஓர் இரண்டுங் கெட்டான் நிலைமை. எடுத்து வைக்கும் அடியில் ஒரு தடைபடும் தன்மை. இயல்பாக கைவீசி நடக்க முடியாத ஒரு தடுமாற்றத்தன்மை. அகலமாகக் கால் வைத்து நடக்க இயலாமல் குறுகிய தப்படிகளாக வைக்கச் செய்யும் தன்மை. சிறிது தடுமாற்றம்... சமநிலை இழப்பதுபோன்ற உணர்வு முன்புறம் குனிய வைக்கும் முதுகு...

இப்படியாக முதுமையின் ஆற்றல் முதுகிலேறி திடுக்கிட வைக்கின்ற போது, இந்த முதுமை நிலைமையை நாம் அறியலாம். நாம் அறிவதற்கு இன்னும் நிறைய இருக்கிறது.

வயதானால் தோலின் மேற்பகுதி வழவழப்பையும் மினுமினுப்பையும் இழந்து விடுகிறது. சுருக்கங்கள் பெருக்கம் கொள்கின்றன. எலும்புகள் வலுவிழக்கின்றன. முடிகளும் உதிர்ந்து போகின்றன. முக அமைப்பும் மாறுபாடடைகின்றது.

இது மட்டுமா! இன்னும் எத்தனை எத்தனை மாற்றங்கள்!

பற்கள் படும்பாடு

ஆணித்தரமாக உறுதிப் பெற்று அழகாகக் கொலுவீற்றிருக்கும் பற்கள், ஆட்டங்கண்டு விழத் தொடங்குகின்றன. அழகு மிகுந்த வாயமைப்பும் அழகிழந்து களையிழந்து மாறத் தொடங்குகிறது.

ஈறுகள் பாதிக்கப்பட்டும், சீழ் பிடிக்கப்பட்டும் பற்கள் சிதைவடைவதுடன், சீர் கெட்டும் போகின்றன. பல் வலிகள் வந்து வந்து உபத்திரவப்படுத்தி வாயைப் பிடுங்கி விடுகின்றன.

உணவு செய்யும் உதவி

உடல் வளர்ச்சிக்கு மட்டுமா உணவு உதவுகிறது? உடல் பாதுகாப்புக்கும் பராமரிப்புக்கும் தான். உணவின் அளவும் சக்தியும் குறையும் போது, உண்டாகும் இடர்ப்பாடுகள் ஏராளம் ஏராளம்.

வயதாகிற பொழுது உணவு சமாசாரத்தில் நாம் அதிகக் கவனம் செலுத்தியாக வேண்டும் இந்தச் சிந்தனையில்லாமல் ‘ஏனோ தானோ’ என்று வாழ்பவர்களே, இன்னல் குளத்தில் நொடிக்கு நொடி மூழ்கி மூழ்கித் தத்தளித்துத் தவிக்கின்றார்கள்.

குடற்தசைகளும் வயிற்றுத் தசைகளும் மெலிந்து போவதாலும். ஜீரண அமிலங்களின் அளவு குறைவுபடுவதாலும், ஜீரண ஆற்றல் வயதானவர்களுக்குக் குறைந்து போகிறது. இந்த சமயத்தில், வாலிப காலத்தில் வளைத்துப் பிடித்துத் தின்றது போல சாப்பிடுகின்றவர்கள். ஏலாமையின் காரணமாக, வயிற்று வலியாலும், வயிற்றுப் போக்காலும் அஜீரணக் கோளாறுகளாலும் அவதிப்படுகின்றனர்.

சத்தான உணவு வகைகள் வேண்டும். அதே சமயத்தில், கொஞ்சங் கொஞ்சமாக உண்டு மகிழப் பழகிக் கொள்ள வேண்டும். வயதானோர் உணவின் அளவைக் குறைத்துக் கொண்டு, உடலுக்கு எது சக்தி தருகிறதோ, அதனையெல்லாம் உணவில் சேர்த்துக் கொண்டுவிடத் தெரிந்து கொள்ள வேண்டும்.

ஒரேயடியாக வரிந்து கட்டிக்கொண்டு சாப்பிட முயலக் கூடாது. காரணம், வயதாகும் போது வேலைகளும், உடல் இயக்கங்களும் குறைகின்றன. உடலில் ஏற்படும் உஷ்ண சக்தியும் குறைகிறது. ஆகவே தேவைபடும் பொழுது, உணவு நேரங்களுக்கு இடைப்பட்ட சமயத்தில், பசி தீர்வதுபோல சாப்பிட்டுக் கொள்ள வேண்டும். அதுவும் எளிதாக ஜீரணம் ஆவது போல.

பழங்கள், பால், பச்சைக்காய்கறிகள், சிறிதளவு மாமிசம், முட்டை போன்ற உணவு வகைகள் உடலுக்குச் சக்தியும் ஊட்டமும் தரும் முறையை அளித்துப் பாதுகாப்பவையாகும். வயதானோர் உணர்ந்து உட்கொண்டால், உடலில் தெளிவும் பொலிவும் உண்டாகும்.

உணவு வகையில் மாற்றம் கொள்ளாதவர்கள் மேலே, உடல் நலிவும். முதுமையும் ஓடோடி வந்து உட்கர்ந்து கொள்கின்றன. ஓடி ஆடி அவர்களைக் களைக்க வைத்து ஓரத்தில் உட்கார வைத்து விடுகின்றன. உணவுப் பற்றாக்குறை ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது என்பதை ஒவ்வொருவரும் உணர வேண்டும்.

ஆசையும் உணவும்

வயதாக ஆக, உணவு மேலே ஒருவித ஆசையும் வெறியும் உண்டாவது இயற்கை தான். இனிமேல் இப்படி சாப்பிட முடியுமோ என்னவோ, இப்பொழுதே சாப்பிட்டு ஆசையைத் தீர்த்துக் கொள்ளலாம் என்ற ஆவேசம் எழுவதும் இயற்கைதான்.

யானை மேலே ஏறி அமர்ந்து கொள்ள ஆசைதான். ஆனால் ஆள் உயரம்தான் போதவில்ல என்பது ஒரு பழமொழி. அதிகமாக உண்டு சுவைக்க ஆசை தான். ஆனால் வயிறு ஏற்றுக் கொள்ள வேண்டுமே! வந்துவிழும் உணவினை வயிற்றுப்பை தாங்கிக் கொள்ள வேண்டுமே! அங்கேதான் தகராறு தோன்றுகிறது. தொடர்கிறது. துன்பங்களாகித் துரத்துகிறது.

உணவு உடலுக்கு சுமையாகிவிடக் கூடாது தளர்ந்து போன தசைகளும், நெகிழ்ச்சி கொள்ள முடியாத மூட்டுக்களையும் வயதானவர்கள் அடிக்கடி நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

அதிகமாக உண்டு விடுபவர்கள். அதிக எடைக்காரர்களாகின்றார்கள். குண்டாகி தோற்றமளிப்பதுடன் இந்த பிரச்சினை நின்றுவிடுவதில்லை. தேவையற்ற சதைப் பகுதிகளுக்கு, இரத்தத்தை இறைத்து விடும் பொறுப்பு இதயத்துக்கு ஏற்பட்டு விடுகிறது. கால்களும் உடல் கனத்தைத் தாங்க இயலாமல் தள்ளாடத் தொடங்குகின்றன. இதனால்தான் இதயத்தில் வலியும் ஏற்பட்டுத் தொலைக்கிறது.

ஆகவே, உணவு ஆசையை ஒழித்து விட வேண்டும் என்று இங்கே கூறவில்லை. உணவில் பற்றைக் குறைத்து, சத்துள்ள உணவினை தேவையான அளவுக்கு சேர்த்துக் கொள்ள வேண்டும் என்கிறோம்.

முதுமையும் அஜீரணமும்

வயதானவர்களுக்கு அடிக்கடி ஏற்படுவது அஜீரணமாகும். இதற்குப் பல காரணங்கள் உண்டு. ஜீரண உறுப்புக்கள் செயல்படாமல் தளர்ச்சியடைவது ஒன்று, அதனுள் ஒன்றுபட்டு செயல்படும் நரம்புகளின் தளர்ச்சியும் மற்றொன்று.

வயது மட்டும் ஒருவருக்கு ஏறுகிறபொழுது வம்பு எதுவும் இல்லையே! வயது ஏறும் பொழுது, குடும்பப் பொறுப்புகளும், வேலை விவகாரங்களும், வியாபார நிர்ப்பந்தங்களும் அல்லவா விருத்தியடைந்து கொண்டே வருகின்றன.

சூழ்நிலைகளால் ஏற்படும் கவலை, வீட்டுக் கடமைகள், வேலை வியாபாரத்தில் ஏற்படுகின்ற மனோ பிரச்சினைகள், போட்டிகளினால் உண்டாகும் குமுறல்கள், வேலைப்பளு, உணவு குறைப்பு மற்றும் மது, புகையிலை, போன்ற வேண்டாத பழக்கங்கள் எல்லாம் சேர்ந்து அஜீரண சக்தியை அதிகப்படுத்துகின்றன.

சிலருக்கு மலச்சிக்கலையும் ஏற்படுத்துகிறது. அதுவும், ஜீரணக் குழாய்களின் தளர்ச்சியால், சரியாக வேலை செய்யும் திறனிலிருந்து சரிந்து கொள்கிறது. ஆகவே அஜீரண நோயை அதிகப்படுத்திக் கொள்ளாமல், அறிவோடு உண்டிட முயல வேண்டும். ஏனெனில், ஒவ்வொரு செயலும் மற்றொரு செயலுடன் தொடர்பு கொண்டிருப்பதால், எந்த ஒன்றையும் பொறுப்புணர்ந்து செய்வதுதான் முதுமையின் முரட்டுப் பிடியிலிருந்து தப்புவதற்குரிய புத்திசாலித்தனமான வழியாக அமையும்.

வெப்பமும் முதுமையும்

உடலின் வெப்பநிலை ஒரு சீராக இருப்பதுதான் திறமான தேகத்திற்குரிய தகுதியாகும். உணவின் நிலை மாறும்பொழுது உடலின் வேலையும் மாறுபடுகிறது. சீரான வெப்பம் உடலில் ஏற்படாமல், முதுமை காலத்தில் சோர்ந்து போகிறது. இவ்வாறு வெப்பம் குறைவது முதுமையின் ஓர் அறிகுறியாகும்.

சுரப்பிகளின் சுரக்கும் தன்மையால், உடலின் வெப்பம் ஒரு சீராகக் கட்டுப்படுத்தப்படுகிறது. இதை 98.4 டிகிரி என்பார்கள். வயதாக ஆக, இந்த அளவு நிறைவுபடாமல் நிலைமாறிக் கொள்கிறது. இதனால் தான். வயதானவர்கள் சாதாரண குளிரையும் தாங்கிட இயலாமல், அதிகக்குளிர் என்பார்கள். அதற்கான போர்வைகள், அறையின் ஓரப்பகுதிகள் இவற்றையும் தேட ஆரம்பிப்பார்கள்.

இதற்குக் காரணம் கிட்னி (Kidney) தான். கிட்னியின் வேலையில் முதுமை கூடிவிடுவதுதான். இதனால் சிறு நீர் உற்பத்தி அதிகமாகிப் போகிறது. இரவு நேரங்களில் வயதானவர்கள் அடிக்கடி எழுந்து போய் சிறு நீர் கழித்திடும் தொல்லையும் கூடிவிடுகிறது.

கிட்னியின் முதிர்ச்சியால் சிறுநீர் அதிகம் ஏற்படுவது ஒருபுறமிருக்க. அதனால் இதயத்தின் வேலைப்பளுவும் கூடிவிடுகிறது. இந்த உறுப்புகளுக்கு இரத்தத்தை அதிகம் பாய்ச்சிடும் பணி கூடுவதால், இரத்த அழுத்தம் ஏற்படுவதுடன், இதயத்திற்கும் அதிகக் கஷ்டம் உண்டாகிறது.

இரத்த அழுத்தம்

பொதுவாக இரத்த ஓட்டம் சரளமாக ஓடிக் கொண்டிருக்கும் பொழுதுதான், சகல சுகமும் கிடைக்கிறது. இரத்தக் குழாய்களின் ஓட்டத்தில் தடை ஏற்படும்பொழுது தான், சகல சங்கடங்களும் வந்து சரணாகதி அடைகின்றன. இப்படி இரத்த அழுத்தம் மிகுதியாகும் பொழுது, வேறுபல துன்பங்கள் தோன்றி விளையாடியே விடுகின்றன.

ஒரு முறை இதயம் சுருங்கி இரத்தத்தை இறைத்தால், உடல் முழுவதும் ஓடி இரத்தம் வரும், இரத்தக் குழாய்கள் தடித்துப் போவதாலும், இரத்தம் ஓடுகின்ற பாதை சுருங்கிப் போவதாலும் இரத்த ஓட்டம் தனது வேகத்தை இழக்கிறது. அதனால் இதயம் அடிக்கடி சுருங்கி சுருங்கி இரத்தத்தை இறைக்க வேண்டியிருக்கிறது. இதுவும் முதுமையின் அறிகுறியாகும்.

இரத்தக் குழாய்கள் தங்கள் உட்புற அளவில் குறைந்து போவதால், உடலின் முக்கிய பாகங்களுக்குப் போகின்ற இரத்தத்தின் அளவு குறைந்துபோவதால், உடலில் இயற்கைத் தன்மையும் செயல்முறைகளும் பாதிக்கப்பட்டு விடுகின்றன.

மூளைக்கு சரியாக இரத்தம் போகாவிடில், மூளைக் கோளாறு ஏற்படவும் ஏதுவாகின்றன. கால்களுக்குப் போதிய இரத்தம் கிடைக்காததால், புண்கள் உண்டாகவும், சில சமயங்களில் கால்களுக்கு நடமாட்டத் தடைகளும் ஏற்பட்டுவிடுகின்றன.

சீரான இரத்த ஓட்டம் பெறுவதற்குரிய வழி வகைகள் பிற்பகுதியில் கூறப்பட இருப்பதால், இங்கே விவரிக்கவில்லை. வேண்டாத முதுமையை விரைவாகக் கொண்டு வரும் இந்த இரத்த அழுத்த நோயின் மேல் ஒரு கண் வைத்து, எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

இவ்வாறு பல முறைகளில் மனித உடலைத் தாக்கிப் பிடிக்க முற்றுகையிட்டு, முனைப்பாக ஆக்ரமிக்கும் முதுமையை நாம் சற்று உஷாராக இருந்து எதிர்த்து விரட்ட வேண்டும். அதற்கான ஆற்றலை வளர்த்துக் கொண்டு போராட வேண்டும். அதற்கான மனப்பக்குவத்தையும் பெருக்கிக் கொள்ள வேண்டும்.