நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/இனிப்பும் நினைப்பும்!
அடர்ந்து செழித்த பெருங்காடு அது. அதன் நடுவிலே ஒருவன் அவனையறியாமல் போய் சிக்கிக் கொண்டான். வெளியே வர முயன்றால், வருவதற்கும் வழி தெரியவில்லை. வேறு விவரமும் புரியவில்லை.
அவன் எடுக்கும் முயற்சி ஒவ்வொன்றும் அடுத்தடுத்து வீணாகின்றனவே தவிர, விடிவினைத் தரவில்லை. மேலாக, மேலும் மேலும் அவனைக் குழப்புகிறது. வேறொன்றும் அறியாதவனாக அவன் மருண்டு நடக்கிறான். மயங்கி நிற்கிறான்.
வானளாவிய மரங்கள், அவைகளை ஆரத்தழுவித் தொங்கிக் கிடக்கும் தோரணம் போன்ற பசுங்கொடிகள். கொடிகளிலே மறைந்து தொங்கும் கொழுத்தக் கனிகள். அவற்றை அணைத்து அணைத்துக் குலுங்கிக் காட்டும் இலைகள். எங்கு பார்த்தாலும் பச்சைப் பசேலென்ற தோற்றம். ஏற்றம். கலையாட்டம். வளத்தோட்டம்.
எத்தனையோ அழகுகளை இயற்கை காட்டினாலும், அவன் கண்கள் அவற்றைக் காணத் தயாராக இல்லை. கவர்ச்சிகளை ரசிக்கும் நிலையிலும் அவனது மனோநிலை இல்லை. கானகத்தை விட்டு வெளியே வந்து விட்டால் போதும் என்ற வெறி மட்டும் அவனை விடாப்பிடியாக விரட்டிக் கொண்டிருக்கிறது. தனிமை தரும் பயமோ மேலும் அவனைத் தள்ளாடச் செய்த வண்ணமிருக்கிறது.
வேகமாக நடக்கிறான். எதிரே கிடக்கும் பாதை அவனுக்கு என்னவென்று தெரியவில்லை. ஏதாவது தடம் தெரியாதா, இடம் புரியாதா என்று அவனது பார்வை நாலாபுறமும் போய் போய் திரும்புகிறது. கால்கள் இரண்டும் கீழே கிடக்கும் காய்ந்த சருகுகளுக்கிடையே புகுந்து புகுந்து வெளியே வருகின்றன.
திடீரென்று ஒரு சத்தம். அவனது உடலோ, அதல பாதாளத்தில் போவது போன்ற ஒரு பிரமை, ஆமாம். அவன் வைத்த அடுத்த அடியானது, இலைகள் மூடிக் கிடந்த பாழுங்கிணறு போன்ற பெரிய பள்ளத்திற்குள்ளே கொண்டு சேர்த்து விட்டது.
கீழே கீழே போய்க்கொண்டிருந்த அவன், அப்படி இப்படி அசையும் பொழுது, அவனது கைகள் ஏதோ ஒன்றைப் பற்றிக் கொள்கின்றன. ஒரு விழுதுபோன்ற ஒன்றைத் தான் பற்றிக் கொண்டிருப்பதாக நினைக்கிறான். அதைப் பிடித்த வேகத்தில் அந்தரத்தில் ஊஞ்சல் போல் ஆடிக் கொண்டிருக்கிறான். வேகமாக அசைந்தால், தரைப் பக்கம் கால் வைக்கலாம் என்று முயற்சி செய்கிறான். ஆனால் படமெடுத்தவாறு பாம்பு ஒன்று. இவனையே பார்த்து சீறிக் கொண்டிருக்கிறது.
பயந்துபோய் பள்ளத்தைப் பார்க்கிறான். இவன் கீழே விழுந்திருந்தால், கழுவேறியிருப்பான். ஒடிந்த மரம் ஒன்று மொட்டையாக நடுவில் நின்று கொண்டிருக்கிறது. அதற்குப் பக்கத்திலே புலி ஒன்று வாயைப் பிளந்தபடி இவனையே பார்த்துக் கொண்டிருக்கிறது. என்றைக்கு அது இந்தப் பள்ளத்தில் விழுந்ததோ? யார் கண்டது? ஆனால் அதன் முகத்தில் பசியின் வேகமும் சோகமும் நன்கு தெரிகிறது.
கொஞ்சம் தவறி கீழே விழுந்திருந்தால், கூர்முனையில், மாட்டிக் கொள்ளலாம். தவறிப் போனால் புலிக்கு இரையாகலாம். பயத்தால் மேலே பார்க்கிறான். அவன் பிடித்திருப்பது மரத்தின் விழுது அல்ல. மலைப்பாம்பின் வால், ஐயோ! அவன் உடல் பயத்தால் சிலிர்த்துத் துள்ளுகிறது. அந்த சலசலப்பில் ஒரு குச்சி ஒன்று ஒடிந்து, உயரத்தில் தொங்கிய தேன் கூட்டைக் குத்திவிடவே, தேன் சொட்ட ஆரம்பித்திருக்கிறது.
என்ன விழுகிறது என்று அண்ணாந்து பார்க்கிறபொழுது அவனது வாயில் ஒரு சொட்டுத் தேன் விழுகிறது. அதன் இனிமையில் லயித்துப்போய், இன்னொரு சொட்டு விழாதா என்று ஏங்கி மேலே பார்க்கிறான் அவன்.
அந்த ‘அவன்’ தான் நாம். நமது வாழ்க்கையில் கிடைக்கும் இன்பம் இப்படித்தான் இருக்கிறது. போகின்ற பாதையோ புதிர். நடக்கின்ற வழியோ நமட்டுச் சிரிப்பைப் போல. அதற்குள் எத்தனையோ பிரச்சினைகள். வேலைகள், மோதல்கள். மிரட்டல்கள். அத்தனைக்கும் ஈடு கொடுத்துத்தான் நாம் வாழ்க்கைப் பயணத்தைத் தொடங்கியிருக்கிறோம், தொடர்ந்து கொண்டிருக்கிறோம்.
வாழ்க்கை பிறந்தது நமக்காக. நாம் பிறந்ததோ வாழ்வதற்காக! வாழ வந்த நாம் வீழவோ, வீணாகவோ கூடாது. நாம் மேற்கொள்கின்ற வாழ்க்கைமுறை நெல்லுக்கிறைக்கின்ற நீராக இருக்கவேண்டுமே தவிர புல்லுக்கு போகின்றதாக ஆகிவிடக் கூடாது.
நல்ல வாழ்க்கைதான் நமது இலட்சியம். அந்த இலட்சியத்தை ஏற்று நடத்திச்செல்லும் இனிய தலைவன் தான் நமது உடல். உடலை வைத்துத்தானே உலக வாழ்க்கை நடக்கிறது! உடலையும் அதற்குள்ளே ஒய்யாரமாய் ஒளிந்து கொண்டு உணர்வினை எழுப்பிவிட்டு வேடிக்கை பார்க்கின்ற உள்ளத்தையும் வைத்துக்கொண்டுதானே நமது இனிய பயணத்தைத் தொடர வேண்டும்?
செல்லும் பயணம் இனிமையாக வேண்டும். வெல்லும் உடலும் உள்ளமும் திடமாக இருக்க வேண்டும். திடமில்லாத உடல் அடிக்கடி சுருண்டு படுத்துக் கொள்ளும். அதைத்தான் நாம் நோய் என்கிறோம்.
நோய் என்றால் என்ன? ‘உன்னோடு ஒத்துழைக்க மாட்டேன்’ என்று உடல் ஒத்துழையாமல் படுத்துக் கொள்வதைத்தான் நோய் என்கிறோம். இந்த நோய் இருவகையாக அமைந்து விடுகிறது.
ஒன்று மெய் நோய். மற்றொன்று பொய் நோய். இந்தப் பொய்யும் மெய்யும்தான் இருளும் ஒளியும் போல, மேடும் பள்ளமும் போல. வாழ்க்கையில் வந்து வந்து போகிறது. இதனை நாம் நன்கு புரிந்து கொண்டால், நோயற்ற வாழ்க்கை வாழலாம்.
அந்த இனிய வழிகளை இனி நாம் தொடர்ந்து காணலாம்.