நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/உடலும் பயிற்சியும்
கல்லாலும் மண்ணாலும் கட்டையாலும் கனமான இரும்பாலும் கட்டப்பட்டதல்ல நமது உடல். எலும்பாலும் சதையாலும், இரத்தத்தாலும் நரம்பாலும் உருவாக்கப்பட்ட உயர்ந்த அமைப்புதான் உடலாகும். இது ஓர் ஒப்பற்ற படைப்பும் ஆகும்.
நமது அழகான உடலின் அடிப்படை அமைப்பைப் பாருங்கள். செல். செல்கள் பல கூடி திசுக்கள் ஆகின்றன. திசுக்கள் கூடி தசைகளை உருவாக்குகின்றன. தசைகளின் கூட்டம் ஒரு குறிப்பிட்ட பணியாற்றும் மண்டலமாக அமைகின்றன.
செல் என்பது அதிக அளவு நீராலும் காற்றாலும் ஆனதாகும். செல்லுக்கு அதிகமாகப் புதிய காற்றுத் தேவைப்படுகிறது. அதையே பிராணவாயு என்கிறோம். பிராணனைக் காக்கும் வாயுவல்லவா அது!
காசு போட்டோ, கஷ்டப்பட்டோ அதை நாம் வாங்க வேண்டியதில்லை, தேடித்திரியவும் வேண்டியதில்லை, நம்மைச் சுற்றித் திரிகின்ற காற்றை நாம் அதிகமாக எடுத்துக் கொள்ள வேண்டும். அதுதான் நாம் செய்ய வேண்டிய செயல், அதற்குத்தான் நாம் உடலைப் பழக்கப்படுத்திட வேண்டும். அந்த அற்புத பணியை ஆற்றுலுடன் செய்கின்ற பயிற்சியையே நாம் அதிகப்படுத்திக் கொள்ள வேண்டும்.
அதை எப்படிச் செய்வது? அதைப் பெறும் வழியைத் தான் நாம் உடல் பயிற்சி என்கிறோம். உடலுக்கு ஒரு பயிற்சி அதுவே உடலுக்காக, உடலால் உடல் மூலம் செய்யப்படுகின்ற பயிற்சி.
அதைத்தான் நாம் அன்றாடம் செய்கின்றோம். கை கால்களை ஆட்டுகிறோம், வேலை செய்கிறோம் அதெல்லாம் பயிற்சியாகாதா என்று கேட்கலாம். உண்மைதான். அவையெல்லாம் சாதாரண செயல்கள். வாழ்க்கைக்கு ஆதாரமான செயல்கள்.
இயல்பாக கைகளை கால்களை அசைக்கிறோம். பேசும் போதும் நடக்கும்போதும் அசைக்கிறோம். இதற்குப் பெயர் இயக்கம் என்பது- இது இயற்கையானது. இது மட்டும் உடலுக்குப் போதாது.
காசுக்காகவோ, அல்லது வேறுவித நன்மையை எதிர்பார்த்தோ உடலை இயக்குகிறோம். அதற்குப் பெயர்தான் வேலை, வேலையால் உடலுக்கு அதிக இயக்கமே தவிர, எதிர்பார்க்கும் உயர்ந்த பயன்கள் வந்து விடாது.
உடல் பயிற்சி என்பது. ஒரு லாபத்தை எதிர்பார்த்து, உடல் உறுப்புக்களை இயக்குகின்ற வேலையை மட்டும் கொண்டதல்ல. உறுப்புக்கள் இயங்கும் போதே, நுரையீரலை பிராணவாயுவைக் கொண்டு நிரப்பிவிட்டு, உள்ளிருந்து அசுத்தமடைந்த காற்றை முழுதும் வெளியேற்றும் வேலையை விரைவாகச் செய்வதுதான் உடற்பயிற்சியாகும்.
சுவாசித்துக் கொண்டே, அதாவது ஆழ்ந்த மூக்சிழுத்து சுவாசித்துக் கொண்டே, உறுப்புக்களை இதமாக பதமாக இயக்குவதே உடற் பயிற்சியாகும். அதிகக் காற்றை உடலுக்குள் அடக்கி செலுத்திட முயல்வதுதான் உடற்பயிற்சி.
அதனால் என்ன நன்மை என்று கேட்கலாம்.
தூய பிராணவாயுவைத் தேடித்தான் இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்கள் திரிகின்றன. ஆகர்ஷித்துக் கொள்கின்றன. அதனால் அவை வேகம் பெறுகின்றன. அந்த வேகத்தினால் இரத்த ஓட்டமும் வேகம் பெற்று விரைவாக ஓடத் தொடங்குகிறது.
உடல் முழுதும் இரத்த ஓட்டம் ஓடி முடிக்க 23 வினாடிகள் ஆகின்றது என்றால் நல்ல உடற் பயிற்சி செய்பவருடைய உடலில் இரத்த ஓட்டம் 12 வினாடிகளில் நடைபெறுகிறது என்கிறார்கள் விஞ்ஞானிகள். அப்படித்தான் இரத்த ஓட்டம் உடல் முழுவதும் ஓடி உடலைச் செழுமைப் படுத்துகிறது.
எப்படி? இரத்த ஓட்டம் உணவுக் குடலிலிருந்து உணவினை உடல் உறுப்புகள் அனைத்துக்கும் எடுத்துச் செல்கிறது. இரத்த அணுக்கள் பிராணவாயுவை நுரையீரலிலிருந்து உடல் முழுதுக்கும் எடுத்துச் செல்கின்றன. உறுப்புக்கள் வேலை செய்வதால், அங்கு உண்டாகும் கரியமிலவாயு, லேக்டிக் அமிலம் போன்ற கழிவுப் பொருட்களையெல்லாம் விரைவாக வெளியேற்றிட இரத்த ஓட்டம் உதவுகிறது.
செல்களிலிருந்து தூய்மையிழந்த காற்றை நுரையீரலுக்கு எடுத்துச் செல்வது மட்டுமின்றி, மற்ற கழிவுப் பொருட்களையும் கல்லீரலுக்கும் சிறுநீர்ப் பைக்கும் அதிவிரைவாகக் கொண்டு செல்கிறது.
அத்துடன் ‘நில்லாமல், இரத்த ஓட்டம் உடலில் வெப்ப தட்பத் தன்மையையும் சீராக்கி வைக்கிறது. குளிர்ந்த உடல் பகுதிக்கு வெப்பத்தையும் கொண்டு செல்கிறது. இவ்வாறு இரத்த ஓட்டத்தின் வேலையை அதிகப்படுத்தி, உடலின் தூய்மையை சதாகாலமும் காத்து கடமை புரிகின்ற பணியைத் தூண்ட உடற் பயிற்சியல்லவா உறுதுணை புரிகிறது?
இதையே இன்னும் நாம் தெளிவாக அறியலாம். உடற்பயிற்சி அதிகமான பிராணவாயுவை விரும்புகிறது! பிராண வாயுவை இரத்தத்தில் உள்ள சிவப்பணுக்கள் விரும்புகின்றன. அதில் உள்ள ஹீமோகுளோபின் என்பது இரும்புச் சத்தை விரும்புகிறது. இந்த இரும்புச் சத்து நல்ல உணவை நாடுகிறது. பெறுகிறது.
அதனால்தான் உடற்பயிற்சி ‘செய்பவன் உணவை ரசித்துப் புசிக்கிறான். வளமாக வாழ்கிறான். நோயணுகாத வாழ்வுடன் நாளெல்லாம் இன்பம் காணுகிறான்.
விலை உயர்ந்த ஆடை அணிகளால் உடலை மூடி, வெள்ளையடிக்கப்பட்ட கல்லறை போல, வாழும் வீடாக உடலை வைத்து வாழ்வதால் யாருக்கும் லாபமில்லை. உள்ளத் தூய்மையில் விளையும் வாய்மையுடன், உடல் தூய்மையில் விளையும் சீர்மையுடன் விளங்கும் கோயிலாகத்தான் உடல் இருக்க வேண்டும்.
நல்ல தோரணையை (Position) உருவாக்குகின்றது. நிமிர்ந்து நிற்க நடக்க உதவுகிறது, தசைகளை திறமையாகப் பயன்படுத்தக் கற்றுத் தருகிறது. இதயத்தை வலிமைப் படுத்துகிறது. நுரையீரலை விரிவு படுத்துகிறது. இரத்த ஓட்டத்தை விரைவு படுத்துகிறது.
பசியை அதிகப்படுத்துகிறது. ருசித்து சாப்பிட வைக்கிறது. உடலில் தூய்மையை பரப்பி, தோற்றத்தை அழகு படுத்துகிறது. நல்ல உறக்கத்தை நல்குகிறது. மன அலைச்சலை மாற்றி வைக்கிறது. எதையும் தாங்கும் இதயத்தைத் தந்து இன்பகரமாக வாழ்வை ஏற்றி வைக்கிறது எது? உடற்பயிற்சிதான்.
உடற்பயிற்சிதான் ஒருவருக்கு உற்ற துணைவன். உண்மையான வழிகாட்டி, ஒப்பற்ற ஆசான்.
நூறாண்டுகள் வாழ்வது எப்படி என்று நூல்கள் எழுதியவர்களில் பலர் அரை நூற்றாண்டுடன் தங்கள் ஆயுட்காலத்தை முடித்துக்கொண்டு போய் விட்டனர். ஆனால், நம்மிடையே அண்மைக் காலத்தில், சொல்லாமல் செய்துகாட்டிய, அதாவது 101 ஆண்டுகள் வாழ்ந்து மறைந்த ஒரு பொறியியல் மேதை விஸ்வேஸ்வரய்யா என்பவர் கூறிய பொன் மொழியை நீங்கள் அறிந்து கொள்ள வேண்டியது மிக மிக அவசியமாகும்.
“Your health lies 10 miles away.
You have to Walk daily and pickit up there”
உங்களது ஆரோக்கியம் 16 கி.மீ.களுக்கு அப்பால் இருக்கிறது. நீங்கள் தினம் நடந்து போய் அதனைப் பெற்றுக் கொள்ளுங்கள்.
மற்றவர்களை அனுப்பிப் பெற்றுக் கொள்வதுதான் நம்மவர்களின் இயல்பு. அதாவது இக்கால நாகரிக மக்களின் நடைமுறை. தமது உடல் நலத்திற்காக ஒரு வைத்தியரை அமர்த்திக் கொண்டு, அவருக்கு நல்ல சம்பளம் தந்து, தமக்காக அவரைக் கவலைப்படும்படி செய்து, மருந்தையும் ஊசியையும் நம்பி வாழ்பவர்கள் ஆயிற்றே நம் காலத்தவர்.
அதை நடைமுறையில் பின்பற்றாமல், நீங்களே போய் உங்கள் ஆரோக்கியத்தைப் பெற்றுக் கொள்ளுங்கள். என்று அவர் கூறியதிலிருந்து, 101 வயது வரை ஆரோக்கியமாக வாழ்ந்து அரும்பணிகளை ஆற்றிய அவர், அப்படித்தான் தினம் பெற்று திவ்யமாக வாழ்ந்திருந்தார் போலும்.
இத்தகைய அரிய அபூர்வமான உண்மையை, அனுபவத்தால் உணர்ந்து. அதிசயமாக வாழ்ந்து காட்டியிருக்கின்றார். என்னே நடையின் பெருமை!
‘நலமாக வாழ வேண்டும் என்றால். மெதுவாக ஓடுங்கள். நீண்டநாள் வாழ விரும்புகிறவர்கள் வேகமாக ஓடுங்கள்’ என்பது ஒரு மேல் நாட்டுப் பழமொழி.
நடையில், வேக நடையும். மெதுவான ஓட்டமும், மிக வேகமான ஓட்டமும் ஓர் ஒப்பற்ற பயிற்சியே! உடல் உறுப்புக்களை உன்னதமாக இயக்கும் பயிற்சியே! உடலை இயக்குவதன் மூலம், உயிர்க்காற்றை நிறைய நுரையீரலுக்கு அனுப்பி இரத்தத்தைத் தூய்மைப்படுத்தி, செல்களை, திசுக்களை, தசைகளை, எலும்புகளை வளமுடையதாக மாற்றிவிடுகின்றது.
ஆகவேதான், உடலை இயக்கும் ஒப்பற்றபணியில், தினம் சிறிது நேரமாவது ஈடுபடுங்கள். உறுப்புக்களை ஈடுபடுத்துங்கள் என்கிறார்கள் அனுபவசாலிகள்.
வசதியுள்ளவர்கள் நடக்கலாம், மெதுவாக ஓடலாம் வாய்ப்புள்ளவர்கள் விரும்பிய விளையாட்டுகளில் ஈடுபடலாம். ஆதலால், நோயில்லாமல் வாழும் தூய வாழ்க்கையில் ஈடுபட விரும்பும் நீங்கள், இதுவரை இத்தகைய பயிற்சிகளில் முயற்சி செய்யாமல் இருந்தால் இன்றே ஈடுபடுங்கள்.
நாளை என்று நினைவை, செயலை ஒத்திப் போட வேண்டாம். நல்ல காரியம் செய்வதற்கு நாள் பார்க்க வேண்டாம். நேரத்தை ஒதுக்க வேண்டாம். அதிலும், நோயில்லாமல் வாழ நுட்பமான வழியைக் கண்டறிந்த பிறகு, ஏன் நாம் வாளா இருக்க வேண்டும்?
ஆகவே, அனுபவசாலிகளின் அருமையான கருத்திற்கு செயல் வடிவம் தாருங்கள். வாருங்கள் பயிற்சி செய்ய! வாழுங்கள் நன்மைகள் பல உடல்நலத்தின் மூலம் பெற்று’ என்று உங்களை வாழ்த்துகிறோம்.
பயிற்சி பற்றிய விவரங்களை எழுதத் தொடங்கினால் பக்கங்கள் அதிகமாகும். ஏற்கனவே வெளியாகியுள்ள எனது உடற்பயிற்சிக்கான நூல்களை, வாங்கிப் படித்துப் பின் பற்றி பயனடையுங்கள்.
ஆண்களுக்கான நூல் நீங்களும் உடலழகு பெறலாம். பெண்களுக்கான நூல் என்றால்: பெண்களும் பேரழகு பெறலாம் எனும் நூல்களை நீங்கள் பின்பற்றலாம்.
இறுதியாக ஒன்று. எவ்வளவு நாள் உலகத்தில் இருக்கிறோம் என்பதில் இல்லை மகிழ்ச்சியும் ஆனந்தமும். நோயும் புலம்பலுமின்றி, எத்தனை நாள் இருந்தோம். பிறருக்கு உதவி புரிந்தோம் வாழ்வை சுகமாக அனுபவித்தோம் என்பதில்தான் வாழ்வின் சுவையும் வளமும் நிறைந்திருக்கிறது.
நீங்களும் நோயில்லாமல் வாழ முடியும் என்ற நம்பிக்கையை மட்டும் நிறைத்துக் கொண்டால் போதாது, நல்ல முறைகளை, வழிகளை விதிமாறா செயல்களைப் பின்பற்றுங்கள், நல்லதே விளையும் நல்லதே மலரும். புலரும் பொழுதெல்லாம் பூரிப்பும் புளகாங்கிதம் தரவே வரும் - வளரும் என்று வாழ்வோம். வாழ்க்கையின் குறிக்கோளும் இதுதான்.