நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/உணவும் குணமும்
அழகும் ஆண்மையும் மிக்க நமது உடல் ஓர் அற்புதமான படைப்பாகும். அதிசயமான அமைப்பும் ஆகும். சதாகாலமும் உள்ளுக்குள்ளே எரிந்து கொண்டிருக்கும். அதே நேரத்தில் எரிபிழம்பு தெரியாதவண்ணம் ஒளிருகின்ற ஒரு நூதனப் பெட்டகமாகவும் நமது உடல் துலங்குகிறது.
எரிந்து வெப்பத்தைக் கொடுத்துக் கொண்டு, உறுப்புக்களை இயக்கி வரும் உடலில், எடை குறைந்து கொண்டே வரும் என்பதால்தான், நமக்குப் பசி ஏற்படுகிறது. நாமும் அடிக்கடி உண்ணுகின்றோம்.
உணவுதான் ஜீரணமாகி, இரத்தமாகின்றது. இரத்தம்தான் எல்லா வகையிலும் உடலைக் காக்கிறது. ஆகவே உடலை ஒருவர் நையாண்டியுடன் குறிப்பிடுகிறார். ‘இது சோற்றாலடித்த சுவரு, கொஞ்சம் சோறில்லாட்டிப் போனாபோகுமே உசிரு.’ என்பதாக, உணவுதான் உடலின் ஜீவநாடி, ஆதாரம் அனைத்தும் என்று கூறலாம்.
‘ஒரு சாண் வயிறு இல்லாட்டா இந்த உலகத்தில் ஏது கலாட்டா’ என்று பாடுகிற பாட்டையும் நீங்கள் கேட்டிருக்கலாம். அத்தகைய அற்புதக் களஞ்சியமாகத் திகழும் உடலின் ஆதாரமாக அமையும் உணவை நாம் ஏன் உட்கொள்கின்றோம்? அதனால் என்னென்ன பயன்கள் ஏற்படுகின்றன என்பதை நாம் முதலில் தெரிந்து கொள்வோம்.
1. உடல் செய்கின்ற வேலைகளினால் உடல் சக்தியை இழந்து தளர்ச்சி அடையும் பொழுது, சக்தியை அளிக்கவும். உடல் அமைப்பை சதா காலமும் கட்டிக்காத்து, ஒரே நிலைமையில் அமைத்து வைத்திருக்கவும் உண்கிறோம்.
2. அன்றாட செயல்களை உறுப்புக்கள் தங்கு தடையின்றி செய்யும் வல்லமையைக் கொடுக்கவும் உணவு தமக்குப் பயன்படுகிறது. அதனால்தான் நாம் உணவை உண்கிறோம்.
அப்படியானால், நாம் எத்தகைய உணவை அளித்தால் உடல் ஏற்ற தன்மையில் அமையும் என்பதையும் நாம் எண்ணிப்பார்க்க வேண்டுமல்லவா? வெறும் பசிக்காகவும், வாய் ருசிக்காகவும் மட்டும்தான் நாம் சாப்பிடுகின்றோமா என்றால், அதற்காக மட்டுமல்ல, முக்கியமாக மூன்று நோக்கங்களுக்காகவும் தான் உண்கின்றோம் என்பதை உணர்ந்து கொள்ள வேண்டும்.
1. நாம் உண்ணுகின்ற உணவு உடலுக்கு சக்தியையும் மற்றும் பலத்தையும், நேரிய நெஞ்சுரத்தையும் (Stamina) நல்கிட வேண்டும்.
2. இயற்கையின் தாக்குதல்கள், சமூகச் சாடல்கள் மற்றும் நோய்க் கிருமிகளின் முற்றுகைகள் இவற்றிலிருந்து உடலைக் காத்து மீட்டு, வளத்துடன் வாழச் செய்திடவும் வேண்டும்.
3. அத்துடன், நோயில்லாமல் நீண்ட நாள் மனநலத்துடன் உடல் வாழ்ந்திடவும் உதவிட வேண்டும்.
இத்தகைய இனிய நோக்கத்திற்காகத் தான் நாம் உண்கிறோம். உணவினை ஐந்து வகைப் பிரிவுகளாகப் பகுத்துக் காட்டுவார்கள் விஞ்ஞானிகள். கார்போஹைடிரேட் (Carbohydrate,) புரோட்டீன். (Protein) மினரல்கள். (Minerals) கொழுப்பு, (Fats), வைட்டமின் (Vitamin). இந்த ஐந்து வகைச் சத்துக்களைத் தரும் உணவுப் பண்டங்களாகப் பார்த்து, தேவையான அளவில் பெற்று, சம நிலை உணவாகக் கொண்டால் உடல் சத்தும் சாதுர்யமும் நிறையப் பெற்று வாழும் வளரும் என்றெல்லாம் அறிஞர்கள் விளக்கிக் கூறுகின்றார்கள்.
இவற்றையெல்லாம் எண்ணிப்பார்த்து வாங்குகின்ற அளவுக்குப் போதிய பொருளாதார வசதியுமில்லை, அளந்து பார்க்க, உடலைத் தெரிந்து அதற்கேற்ற வகையில் உணவுப் பொருட்களை வாங்க நேரமுமில்லை, நெஞ்சமுமில்லை, அறிவும் இல்லை. விரைந்து போகின்ற கால வெள்ளத்தில், எதிர் நீச்சல் போட்டுக் கொண்டிருக்கும் பொழுது, இதையெல்லாம் எண்ணிப் பார்க்க ஏது நேரம்? ஏது எண்ணம்?
என்றாலும் நாம் அன்றாடம் உணவு உட்கொண்டுதானிருக்கிறோம். கேட்கின்ற அளவுக்கு கிடைக்கவில்லையேயென்றாலும், கிடைக்கின்றதை எப்படி உண்பது என்பதைத்தான் நாம் அறிந்து கொள்ள வேண்டும். நமக்கென்று கிடைக்கும் உணவை எப்படித்தான் பயன்படுத்துவது என்பதை நமது அறிவார்ந்த செயலாக அமைத்துக் கொள்ள வேண்டும்.
ஒருவர் எந்த அளவு சாப்பிட வேண்டும் என்றால் அது ஆளுக்கு ஆள் வேறுபடும். மாறுபடும், ‘ஒரு மனிதனின் உணவு மற்றொரு மனிதனுக்கு விஷம்’ என்று ஒரு பழமொழியையும் கூறுவார்கள். ஆக, உடல் அமைப்புக்கு ஏற்ப, வசிக்கின்ற சீதோஷ்ண நிலைக்கேற்ப, செய்கின்ற கடினமான வேலைகளுக்கேற்ப உணவு உட்கொள்ளும் அளவு மாறுபட்டுத்தான் இருக்கும். ஆனால், குறிப்பிட்ட ஒரு மனிதன் எவ்வளவு சாப்பிடலாம் என்றால், வயிறார, வயிறு முட்ட, தொண்டையளவு என்றெல்லாம் அளவினைக் கூறுவதும் உண்டு.
ஒரு நாளைக்கு ஒருமுறை உண்பவன் யோகி, இரு முறை உண்பவன் போகி; மூன்று முறை உண்பவன் ரோகி. என்பதாக ஒரு பழமொழி உண்டு. இந்தக் காலத்தில் எத்தனை முறை என்பது நம் எண்ணிக்கைக்கு உட்படுகிறதா என்ன? பார்த்த இடங்களில் பழகிடும் நேரங்களில், தனக்காகவும், மற்றவர்களுக்காகவும் உண்ணுகின்ற நாகரிகக் காலம் அல்லவா இது!
ஆனால், சாப்பிடும் நேரத்தில், எந்த அளவு உண்டால் வயிற்றுக்கும் இதமாகவும் மனதுக்கு இனிமையாகவும் இருக்கும் என்று அறிந்து கொண்டால், மிக நன்றாக இருக்கும். வயிற்றில் அரைபங்கு உணவு, கால்பங்கு நீர் இப்படி சாப்பிட்டால், அது ஜீரணமாகும் பொழுது ஏற்படுகின்ற மாறுதலில், வாயு ஏற்படும் பொழுது (Gas) அங்கேயே சுற்றிச் சுற்றி அடங்கிப்போக வாய்ப்பு உண்டு என்று அரை வயிறு உணவுதான் சாலச் சிறந்தது என்கிறார்கள் சிலர்.
இன்னும் சிலர் கூறுகிறார்கள். சாப்பிட்டுக் கொண்டே வரும்பொழுது இந்த ஒரு வாய் உணவை உட்கொண்டால் வயிறு நிறைந்துவிடும் என்ற உணர்வு ஏற்படுகின்ற பொழுது சாப்பிடுவதை நிறுத்திவிட வேண்டும். அதுதான் சரியான அளவு என்கிறார்கள்.
சாப்பிட்டு விட்டு உண்ட இடத்தை விட்டு எழுந்திருக்கும் பொழுது. பசிக்கின்ற உணர்வுடன் எழுந்திருப்பதுதான் சரியான உண்ணும் அளவு என்றும் கூறுகின்றார்கள். ஆக, உணவு உட்கொள்ளும்போது கொள்கின்ற மனநிலைதான் முக்கியம், உணவின் அளவு முக்கியமல்ல என்று வேறுபலரும் பலவித அபிப்பிராயங்களும் கூறுவார்கள்.
எந்த உணவைச் சாப்பிட்டாலும் அதை விரும்பிச் சாப்பிட்டால் வயிறு ஏற்றுக் கொள்ளும். வயிறு தாங்குகின்ற அளவுக்கு உண்பதுதான் வயிற்றைக் காப்பாற்றும் நல்ல வழியாகும். வயிறு சுகமாக இருந்தால். வாழ்வும் சுகமாக இருக்கும். ஆகவே, வயிற்றுக்கு உணவு தரும் போது என்னென்ன முறைகளை மேற்கொள்ள வேண்டும்?
என்ன உணவு, எவ்வளவு உணவு சாப்பிடுகிறோம், எந்த அளவு சுவை எவ்வளவு விலை உயர்ந்தவை என்பதனைப் பற்றி வருவதல்ல உடல் நலம். இருக்கின்ற உணவை கிடைக்கின்ற அளவை எப்படிச் சாப்பிடுகிறோம் என்பதில்தான் நமது உடல் நலம் உருவாக்கிக் கொண்டிருக்கிறது, மேலும் உரம் ஏறி தந்து கொண்டிருக்கிறது.
உணவு உண்ணும் பொழுது, நமது சூழ்நிலை என்ன, மனோநிலை என்ன என்பது தான் முக்கியம், மனம் போல வாழ்வு என்பார்களே நமது முன்னோர்கள், அது போலத்தான் மனம்போல உணவும்.
‘பசித்தவனுக்குப் பாகற்காய் இனிக்கும், பசி இல்லாதவனுக்குப் பிரியாணியும் கசக்கும்’ என்பது போல, மனம் விரும்பி மனம் எதிர்பார்த்து உட்கொள்கின்ற எந்த உணவையும் வயிறு வரவேற்று ஏற்றுக் கொள்கிறது. உடலும் நலமுடன் அதனை மாற்றிப் பயன் கொள்கிறது.
எனவேதான், எதையும் மனம் விரும்பி, ரசித்துப் புசிக்க வேண்டும் என்கிறோம். ஏனெனில், அவ்வப்போது மனதில் ஏற்படுகின்ற மனோபாவங்களுக்கும் உணர்ச்சிகளுக்கும் ஏற்ப உடலில் உற்பத்தியாகும் ஹார்மோன்கள், சுரப்பி நீர்கள் அளவில் குறைகின்றன, சில சமயங்களில் மிகுதியாகின்றன. அவை ஜீரணத்தைப் பாதிக்கும்.
ஆகவே, உணவு உண்ணும் நேரத்தில். நீங்கள் நிச்சயமாக, கட்டாயமாகக் கடைப்பிடிக்க வேண்டிய முறைகள் நியதிகள் சில உண்டு. அவற்றைக் கீழே கொடுத்திருக்கிறேன். முடிந்தவரை பயன்படுத்திக் கொண்டால் நல்ல பயன் கிடைக்கும்.
1. உணவு உட்கொள்ளும் நேரத்தை, சந்தோஷமான சூழ்நிலையுள்ளதாக அமைத்துக் கொள்ள வேண்டும், பலரோடு சேர்ந்து உண்ணும் பொழுதானாலும். தனியே உட்கொள்ளும் போதானாலும். மகிழ்ச்சிகரமான மனோ நிலையுடன் சாப்பிடப் பழகிக் கொள்ள வேண்டும். அதுவே அற்புதமான சக்தியை, அளவிலா ஆற்றலை நல்கி விடும்.
2. வாழ்க்கை என்றால் பல பிரச்சினைகள் வரத்தான் செய்யும். எதிர்பாராத கவலைகள் இன்னல்கள், அதிரடித் தாக்குதல்கள் நிகழத்தான் செய்யும். அதனால் ஏற்படுகின்ற அச்சம், கோபம், மனஸ்தாபம், மற்றும் எதிர்பார்த்து ஏங்கும் மனக் கவலைகளை எல்லாம் சாப்பாட்டு நேரத்தில் கொண்டு வந்து சங்கடப்படக் கூடாது.
படகு நன்றாக இருந்தால்தான் பயணம் நன்றாக இருக்கும். ஆடிச் சுழன்று போகும் நிலையில் உள்ள படகு, எப்பொழுதும் ஆபத்துதான். அதுபோலவே, உடலும். உடலை நன்கு காத்துக் கொண்டால்தான் உலகப் பயணமும் உவப்புடன் திளைக்கும். திடகாத்திரமான தேகத்திற்கு சிறந்த அடிப்படை உணவு அல்லவா!
ஆகவே, குழப்பமான மனோநிலையுடன் சாப்பிடக் கூடாது. அது வயிற்றுக்குள் பல மாறுதல்களை வரவழைத்து வயிற்றைக் கெடுத்து விடும். வேதனைகளைக் கொடுத்து விடும் என்பதை உணர்ந்து, சாப்பிடும் இடத்திற்குப் பல பிரச்சினைகளைக் கொண்டு வராமல், மகிழ்ச்சியுடன் உண்ண வேண்டும்.
3. தொடர்ந்து, கவலையும் துயரமும் கொண்டு வாழ்கின்ற உணர்வு உள்ளவர்களை (அல்சர்) குடற்புண் ஆக்ரமித்துக் கொள்கிறது என்கிறார்கள். குடற்புண்ணைக் கொண்டோடி வாங்கிக் கொள்வதால் உங்களுக்கென்ன லாபம்? சம்பாதிப்பது சாப்பிடத்தானே! சாப்பிடும் போது சங்கடத்துடன் சந்தர்ப்பத்தை ஏன் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.
4. மிகவும் களைத்துப் போயிருக்கின்ற நேரங்களில் அல்லது மனம் உடைந்து போயிருக்கின்ற சமயங்களில், பிறரது வற்புறுத்தலுக்காக அல்லது இனிமேல் இப்படி நமக்குக் கிடைக்கப் போகிறதா என்ற நினைவுக்காக, வயிறு முட்ட உண்டு விடக்கூடாது. அந்த நிலையில் ஜீரண உறுப்புகள் தளர்ந்தும், பாதிக்கப்பட்ட செயற்பாடும் கொண்டதாக விளங்குவதால், அது ஜீரண மண்டலத்தையே பாதிக்கவும் செய்யும். ஆகவே போதுமான அளவை இதுபோன்ற சமயங்களில் உண்ணக் கற்றுக் கொள்ள வேண்டும்.
5. ஒவ்வொரு உணவு வேளைக்கும் இடையில் போதிய அவகாசம் தர வேண்டும். வயிற்றில் உணவு ஜீரணமாக குறைந்தது 3 மணி நேரம் ஆகிறது என்கிற அடிப்படையில் பார்த்தாலும். கண்டதையெல்லாம் சாப்பிடுகிறவர்களின் கதி என்ன ஆகும் என்று நீங்களே யூகித்துக் கொள்ளுங்கள்.
6. ‘கொஞ்சமாக சாப்பிடுங்கள். நிறையவே சாப்பிடலாம்’ என்பது சீனப் பழமொழி. அதாவது வயிற்றைக் கனமாக ஆக்கிக் கஷ்டப்படுத்தாமல். கொஞ்சமாகக் குறைத்து நீங்கள் சாப்பிட்டால், நிம்மதியாக நோய் வராமல், நீண்டநாள் வாழ்வீர்கள். நீண்ட நாட்கள் வாழ்ந்தால் நிறையவே சாப்பிடலாம் அல்லவா!
அல்லாவிடில் அஜீரணம், மலச்சிக்கல் போன்றவற்றுக்கு ஆளாகி, அத்தனை அவஸ்தைகளையும் ஆரோகணித்துக் கொண்டு அல்லல்பட அல்லவா நேரிடுகிறது. மலச்சிக்கல்தான் உடல் சிக்கல் அத்தனைக்கும் மூலகாரணமாகும். அஜீரணம் அதன் அடிப்படை ஆதாரமாகும்.
ஆகவே முடிந்தவரை அஜீரணத்திற்கும், மலச் சிக்கல்களுக்கும் ஆளாகாமல் உணவை உட்கொள்ள வேண்டும்.
இதன்படி பார்த்தால் நாம் மேலும் கடைப் பிடிக்க வேண்டிய உணவு வகைகள் ஒரு சில உண்டு. இதையும் படியுங்கள். முடிந்தவரை பின்பற்றி, உங்களுக்கும் பயன் தந்தால் பழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள்.
உடலைக் காக்கின்ற உணவு வகைகளையே அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். பச்சைக் காய்கறிகள், கீரை வகைகள் பழங்கள், பால் என்பது எல்லா வகையினருக்கும் ஏற்ற உணவு வகையாகும்.
உணவை அமைதியாக உட்கொள்ளுங்கள். ஆத்திரமும் அவசரமும் அங்கு இருக்கவே வேண்டாம்.
உணவை சுவைத்து உண்ணுங்கள். நாவிற்கு சுவையானவை எல்லாம் உடலுக்கு உகந்ததாக ஆகாது. உங்கள் உடலுக்கு எந்த உணவு ஏற்றது, எது வாயுக் தொல்லை. அலர்ஜி போன்றவற்றைத் தருகிறது என்பதை அறிந்து மாற்றிக் கொள்ளுங்கள்.
நீரைத் தேவையான அளவு உட்கொண்டு, அத்துடன் மல ஜல விஷயத்தை நேரத்திற்கு என்று பழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். நாம் நிச்சயமாக நோய்க்கு இடம் தராமல் வாழ்ந்து விடலாம் என்றாலும் இன்னும் ஒரு சில பழக்க வழக்கங்களையும் கற்றுக் கொண்டால் மேலும் சுகமாக வாழலாம்.