நீங்களும் நோயில்லாமல் வாழலாம்/நடிப்பும் முடிப்பும்!
அந்த ஊரிலே அவன் ஓர் உத்தமமான விவசாயி. உலகநாதன் என்பது அவன் பெயர். யாருடைய பொருளுக்கும் ஆசைப்படாதவன். தர்ம சிந்தனையுள்ளவன். தனக்கு அதிக ‘சொத்து சுகம்’ வேண்டும் என்ற ஆசை அதிகம் உடையவனாக இருந்தாலும், நீதிக்கு மாறாக எதையும் செய்யத் துணியாதவன். அவன் ஆசையை அடக்கிக் கொண்டு, தன் வயலில் அயராது உழைத்து, செல்வம் சேர்த்து வைக்கப் பாடுபட்டுக் கொண்டிருந்தான்.
நல்லவன் ஒருவன் ஊரிலே இருந்தால், அவனை எல்லோருமா போற்றி விடுவார்கள்? ஏற்றுக் கொள்வார்கள்? அந்த ஊரிலே ஒருவன், சந்திரகாசன் என்பவன், சகல நல்லவனின் மதிப்பையும் மரியாதையையும் அழித்துக் கெடுத்து, கேவலப்படுத்தி விட வேண்டும் என்று அனுப்பி வைத்தான். அவனும் ‘இதோ சென்றேன் வென்றேன் வருகிறேன்’ என்று சபதம் கூறிவிட்டுப் புறப்பட்டான்.
சபதம் போட்ட சாமிநாதன் நேரே உலகநாதனிடம் சென்று வேலைக்காரனாக சேர்ந்து விட்டான். மிகவும் விசுவாசமுள்ள வேலைக்காரனாக நடித்தான். எள் என்பதற்குள் எண்ணெயாகி வேலை செய்தான். ‘வெட்டிவா என்றால் கட்டிக் கொண்டு, வந்து நின்றான். அவன் எண்ணம் என்ன என்பதை அறிந்து, எல்லாவற்றையும் முடித்துத் தந்ததால், உலகநாதன் உள்ளம் மகிழ்ந்து போனான். தன் உள்ளத்து ஆசையை மெதுவாக அவனிடம் வெளியிட ஆரம்பித்தான்.
அந்த ஆண்டு; உலகநாதன் வேலைகளை ஆரம்பித்தான். சாமிநாதன் மிகவும் பணிந்து கூறினான். நாம் விவசாயத்தை மேடான வயல்களில் மட்டும் செய்யலாம். ஏனென்றால் இந்த ஆண்டு மழை அதிகமாக இருக்கும் என்று நம்புகிறேன் என்றான். உலகநாதனும் சரி என்று அவ்வாறே பயிரிட்டான். என்ன ஆச்சரியம்! ஊரிலே பெருமழை பெய்து, மற்றவர்கள் வயல்களில் தண்ணீர் தேங்கி, பயிர்கள் அழுகிப் பாழான போது, உலகநாதன் பயிர்கள் மட்டும் தப்பித்துக் கொண்டன. பயிர்கள் தழைத்து செழித்தோங்கி விளைந்தன. இறுதியில், அதிக மகசூல். அதை அதிகப்படியாய் விற்றுப் பெரும் பொருள் சேர்த்தான். தரும சிந்தனையுள்ளவன், பொருள் ஆசையால், மற்றவர்களுக்கு அதிக விலைக்கு விற்றுப் பணக்காரன் ஆனான்.
அடுத்த ஆண்டு, சாமிநாதன் யோசனையின்படி விவசாயம் பள்ளமான வயல் பகுதிகளில் நடந்தது. மற்றவர்களோ பயந்து கொண்டு மேடான பகுதிகளில் விவசாயம் செய்திருந்தார்கள். இந்த ஆண்டு மழையே இல்லாமல் போனது. பள்ளப் பகுதிகளில் இருந்தவர்கள். மட்டும் பிழைத்துக் கொண்டனர். முடிவு உலகநாதனுக்கு மீண்டும் அதிர்ஷ்டம். நல்ல விளைச்சல். பணம் பெருகியது. சாமிநாதன் இப்பொழுது உலகநாதனின் உற்ற நண்பன் என்ற அளவுக்கு உயர்ந்தான். அப்பொழுது, ஆரம்பித்தது அவலம்? எப்படி?
பணக்காரன் ஆகிவிட்ட உலகநாதனுக்குப் பலப்பல நினைவுகள் வந்து ஆசை மூட்டினாலும். அவனது பழைய பண்புகள், அவற்றைத் தலை தூக்கிவிடாமல் மட்டந்தட்டிக் கொண்டு இருந்தன. சாமிநாதனின் அன்பும், பணிவு கலந்த சொற்களும் சேர்ந்து கொள்ளும் போது, உலகநாதன் சில சமயங்களில் தடுமாறிப் போவதுண்டு. மதிமாறிப் போவது உண்டு. புதுப் பணக்காரன், வேலை செய்யாத உடல். சோம்பேறித்தனம். சொகுசாக உடலை பதம் பார்த்துக் கொண்டிருந்தன.
சோம்பேறியின் மூளை சைத்தானின் தொழிற்சாலை என்பார்களே! அதுபோல, கையில் இருந்த பணத்தை மறந்து, இல்லாத கிடைக்காத இன்பத்திற்கு ஏமாந்து அலைய ஆரம்பித்தான். எண்ணங்கள் பலப்பல என்றால், இரவிலே இன்னுமல்லவா ஏறும்? பலன்! தூக்கமில்லாத இரவுகள். அவனைத் தூங்கவைக்க சாமிநாதன் சொன்ன யோசனை. தந்த மருந்து-அவனை சொர்க்கத்திற்கே இட்டுச் சென்றன.
புது வழக்கம், மதுப் பழக்கம்-புதுப்புது உறவுகளைக் கூட்டி வந்தது. தீய நண்பர்கள் அவனுக்குத் தேனுக்கும் மேலாக இனித்தார்கள். வந்த பணம் கொஞ்ச கொஞ்சமாக விடைபெற்றுக் கொண்டிருந்தது. பணம் போவதைப் பற்றி மனம் வருந்தவில்லை. பணம் கரைகின்றதே என்று திருந்தவும் இல்லை. குடும்பம் குழந்தைகள் கதறுவதைக் கேட்கவும் அவன் மனம் இடந்தரவில்லை.
ஊரில் இருந்த நற்பெயர் ஓடி ஒளிந்து, ஒழிந்து கொண்டிருந்தது. வீட்டில் இருந்த நிம்மதி விடை பெற்றுப் போயே விட்டது. உலநாதன் பெயரில் உறவாடிக் கொண்டிருந்த நிலபுலன்கள், மாற்றான் கைக்குப் போகத் தொடங்கின. வஞ்சத்துடன் உறவாடிய சாமிநாதன் வீசிய வலையில் சிக்கிய உலகநாதன், பஞ்சம் என்னவென்பதை உணரத் தொடங்கினான். நெஞ்சம் நினைப்பதற்குள்ளே நெருங்கிப் பழகியவர்கள், இருட்டில் நிழல் போல மறைந்தே போனார்கள். நினைத்ததை முடிக்க வந்த சாமிநாதன், சாதித்த சாதனையைச் சொல்ல தன் தலைவனை நோக்கிப் போனான்.
வந்த வெள்ளம் இருந்த வெள்ளத்தை அடித்துக் கொண்டு போனது போல, வைத்துக் காத்த சொத்தையெல்லாம், வந்தவன் வார்த்தையை நம்பி இழந்தான். வாழ்வையும் இழந்தான். போலியை உண்மையென நம்பினான். பணம் அவனைப் பாழாக்கியது. அவன் உழைத்துக் கஷ்டப்பட்டு சம்பாதித்து இருந்தால், அவன் கெட்டிருக்கமாட்டான். திடீரென்று வந்தது திடீரென்று ஆளை மாற்றி அழித்தே விட்டது.
தன்னிடம் வேலை பார்த்தவனிடம் வேலை வாங்கியிருந்தால், அவன் அழிந்திருக்க மாட்டான். தந்திர ‘மூளை’ வாங்கப் போயல்லவா மாட்டிக் கொண்டான்! தன் கீழ் உள்ளவர்களின் பேச்சைக் கேட்டு, செயல்பட்டு, நற்பெயரையும் கைப் பொருளையும் இழந்தவர்கள் அநேகம் பேர். ஏதோ தனக்குச் சிறிது லாபம் கிடைக்கும் என்பதற்காக உபகாரம் செய்வது போல வேஷம் போடும் வேலைக்காரர் விடுகிற ‘கரடிகளை’ புளுகுகளை நம்பி, ஏமாந்து, நண்பர்களையும் பகைவர்களாக்கிக் கொண்டவர்கள் ஏராளம். அவர்களிலே ஒருவனாகி விட்டான்.
சொந்த புத்தியில் சிந்தனை செய்து வாழ்பவர்களே, மன நிம்மதியுடன் வாழ்கின்றார்கள். பிறர் சொற்புத்தி கேட்டு அற்பத்தனமாய் நடந்து கொள்பவர்கள். மானம் இழந்து மதிகெட்டு, ஆன துயர் அத்தனைக்கும் ஆளாக்கி அவதிப்படுகின்றார்கள்.
ஆகவே, நோயில்லாமல் வாழ, ஆசையெனும் பொய் நோய்க்கு மட்டும் ஆளாகாமல் இருந்தால் போதாது. அறிவுரையை ஆலோசனையை எங்கிருந்து பெற வேண்டும் என்பதையும் யோசித்துப் பெற வேண்டும்.
இல்லையேல், அந்தப் பொல்லாத பொய்யும், மெய் நோயாய் மாறி, மேனியைக் குலைத்து, வாழ்வையும் அழித்துவிடும்.
உலகநாதனோ சொந்த புத்தியிழந்து வாழ்கிறான். இன்னொருவனோ, சொந்த புத்தியையும் இழந்து. வந்த புத்தியையும் அறியாது. வாயிழந்து போனான். அதாவது வாழ்வுக்கு வழியான வாயின் சுவைகளையும் பயன்களையும் இழந்து போனான். எப்படி?
அந்த கனகசுந்தரத்தின் கதையைக் கேளுங்கள்.