நீதிக் களஞ்சியம்/நீதிநெறி விளக்கம்
நீதிநெறி விளக்கம்
(குமரகுருபர சுவாமிகள்)
கடவுள் வாழ்த்து
நீரில் குமிழி, இளமை; நிறை செல்வம்
நீரில் சுருட்டும் நெடுந் திரைகள் நீரில்
எழுத்து ஆகும். யாக்கை, நமரங்காள்! என்னே,
வழுத்தாதது எம்பிரான் மன்று?
நூல்
அறம் பொருள் இன்பமும் வீடும் பயக்கும்:
புறங்கடை நல் இசையும் நாட்டும்; உறும் கவல் ஒன்று
உற்றுழியும், கைகொடுக்கும்;—கல்வியின் ஊங்கு இல்லை,
சிற்றுயிர்க்கு உற்ற துணை.1
தொடங்குங்கால் துன்பம் ஆய், இன்பம் பயக்கும்,
மடம் கொன்று அறிவு அகற்றும் கல்வி; நெடுங் காமம்
முன் பயக்கும் சில் நீர இன்பத்தின்,—முற்றிழாய்!—
பின் பயக்கும் பீழை பெரிது.2
கல்வியே கற்புடைப் பெண்டிர், அப் பெண்டிர்க்குச்
செல்வப் புதல்வனே தீம் கவியா, சொல் வளம்
மல்லல் வெறுக்கையா, மாண் அவை மண்ணுறுத்தும்
செல்வமும் உண்டு, சிலர்க்கு.3
எத் துணைய ஆயினும் கல்வி, இடம் அறிந்து,
உய்த்துணர்வு இல் எனின், இல்லாகும்; உய்த்து உணர்ந்தும்
சொல்வன்மை இன்று எனின், என் ஆகும்? அஃது உண்டேல்,
பொன் மலர் நாற்றம் உடைத்து.4
அவை அஞ்சி மெய் விதிர்ப்பார் கல்வியும், கல்லார்
அவை அஞ்சா ஆகுலச் சொல்லும். தவை அஞ்சி
ஈத்து உண்ணார் செல்வமும், நல்கூர்ந்தார் இன் நலமும்.—
பூத்தலின் பூவாமை நன்று.5
கலைமகள் வாழ்க்கை முகத்தது எனினும்,
மலரவன் வண் தமிழோர்க்கு ஒவ்வவான்:—மலரவன் செய்
வெற்று உடம்பு மாய்வனபோல் மாயா, புகழ் கொண்டு
மற்று இவர் செய்யும் உடம்பு.6
நெடும் பகல் கற்ற, அவையத்து, உதவாது
உடைந்துளார் உட்குவரும் கல்வி, கடும் பகல்
ஏதிலான்பால் கண்ட இல்லினும் பொல்லாதே;
தீது என்று நீப்பு அரிதால்.7
வருந்தித் தாம் கற்றன ஓம்பாது, மற்றும்
பரிந்து சில கற்பான் தொடங்கல்,—கருத் தனம்
கைத்தலத்த உய்த்துச் சொரிந்திட்டு, அரிப்பு அரித்து ஆங்கு,
எய்த்துப் பொருள் செய்திடல்.8
எனைத் துணையவேனும், இலம்பாட்டார் கல்வி
தினைத் துணையும் சீர்ப்பாடு இலவாம்;—மனைத்தக்காள்
மாண்பு இலள் ஆயின், மணமகன் நல் அறம்
பூண்ட புலப்படாபோல்.9
இன்சொல்லன் தாழ்நடையன் ஆயினும், ஒன்று இல்லானேல்,
வன் சொல்லின் அல்லது வாய் திறவா: என் சொலினும்
கைத்துடையான் காற்கீழ் ஒதுங்கும், கடல் ஞாலம்;
பித்து உடைய; அல்ல, பிற.10
இவறன்மை கண்டும், உடையாரை யாரும்
குறையிரந்தும் குற்றேவல் செய்;—பெரிதும் தாம்
முற்பகல் நோலாதார், நோற்றாரைப் பின் செல்வல்
கற்பு அன்றே; கல்லாமைஅன்று.11
கற்றார்க்குக் கல்வி நலனே கலன் அல்லால்,
மற்று ஓர் அணிகலம் வேண்டாவாம்; முற்ற
முழு மணிப் பூணுக்குப் பூண் வேண்டா; யாரே,
அழகுக்கு அழகு செய்வார்?12
முற்றும் உணர்ந்தவர் இல்லை: 'முழுவதூஉம்
கற்றனம்!' என்று களியற்க;—சிற்றுளியால்
கல்லும் தகரும்; தகரா, கனங்குழாய்!
கொல் உலைக் கூடத்தினால்.13
தம்மின் மெலியாரை நோக்கி, தமது உடையை
'அம்மா, பெரிது!' என்று அகம் மகிழ்க; தம்மினும்
கற்றாரை நோக்கிக் கருத்து அழிக, கற்றது எல்லாம்
எற்றே இவர்க்கு நாம்!' என்று.14
கல்வி உடைமை, பொருள் உடைமை என்று இரண்டு
செல்வமும் செல்வம் எனப்படும்—இல்லார்
குறை இறந்து தம் முன்னர் நிற்பபோல், தாமும்
தலை வணங்கித் தாழப் பெறின்.15
ஆக்கம் பெரியார், சிறியாரிடைப்பட்ட
மீச்செலவு காணின், நனி தாழ்ப— தூக்கின்,
மெலியது மேல்மேல் எழச் செல்லச் செல்ல,
வலிது அன்றே தாமும், நுலைக்கு?16
விலக்கிய ஓம்பி, விதித்தனவே செய்யும்
நலத்தகையார் நல்வினையும் தீதே;— 'புலப்பகையை
வென்றனம்; நல் ஒழுக்கின் நின்றேம், பிற' என்று,
தம் பாடு தம்மில் கொளின்.17
தன்னை வியப்பிப்பான் தற் புகழ்தல் தீச் சுடர்
நல் நீர் சொரிந்து வளர்ந்தற்றால்;— தன்னை
வியவாமை அன்றே வியப்பு ஆவது; இன்பம்
நயவாமை அன்றே நலம்.18
பிறரால் பெருஞ் சுட்டு வேண்டுவான், யாண்டும்
மறவாமே நோற்பது ஒன்று உண்டு: பிறர் பிறர்
சீர் எல்லாம் தூற்றி, சிறுமை புறங்காத்து,
யார் பார்க்கும் தாழ்ச்சி சொலல்.19
கற்று, பிறர்க்கு உரைத்து, தாம் நில்லார் வாய்ப்படூஉம்
வெற்றுரைக்கு உண்டு, ஓர் வலி உடைமை:— 'கொற்ற நீர்
நில்லாதது என்?' என்று நாண் உறைப்ப, நேர்ந்து ஒருவன்
சொல்லாமே, சூழ்ந்து சொலல்.20
பிறர்க்குப் பயன் படத் தாம் கற்ற விற்பார்,
தமக்குப் பயன் வேறு உடையார்;—திறப்படூஉம்
தீவினை அஞ்சா விறல் கொண்டு, தென்புலத்தார்
கோவினை வேலை கொளல்.21
கற்பன ஊழ் அற்றார், கல்விக் கழகத்து ஆங்கு
ஒற்கம் இன்று ஊத்தை வாய் அங்காத்தல், மற்றுத் தம்
வல் உரு அஞ்சன்மின், என்பவே,மா, பறவை
புல்லுரு அஞ்சுவபோல்.22
போக்கு அறு கல்வி புலம் மிக்கார்பால் அன்றி
மீக்கொள் நகையினார்வாய்ச் சேரா;—தாக்கு அணங்கும்
ஆண் அவாம் பெண்மை உடைத்து எனினும், பெண் நலம்
பேடு கொளப்படுவது இல்.23
கற்றன கல்லார் செவி மாட்டிக் கையுறூஉம்
குற்றம் தமதே; பிறிது அன்று; முற்று உணர்ந்தும்.
தாம், அவர் தன்மை உணராதார், தம் உணரா
ஏதிலரை நோவது எவன்?24
வேத்தவை காவார், மிகல் மக்கள்; வேறு சிலர்
காத்தது கொண்டு ஆங்கு உகப்பு எய்தார்;—மாத் தகைய
அந்தப்புரத்தது பூஞை புறங்கடைய,
கந்து கொல் பூட்கைக் களிறு.25
குலமகட்குத் தெய்வம் கொழுநனே; மன்ற
புதல்வர்க்குத் தந்தையும் தாயும்; அறவோர்க்கு
அடிகளே தெய்வம்; அனைவோர்க்கும் தெய்வம்,
இலை முகப் பைம் பூண் இறை.26
கண்ணில் சொலிச் செலியின் நோக்கும் இறைமாட்சி
புண்ணியத்தின் பாலதே ஆயினும்,—தண்ணளியால்
மன்பதை ஓம்பாதார்க்கு என் ஆம்? வயப் படை மற்று
என் பயக்கும், ஆண் அல்லவர்க்கு?27
குடி கொன்று இறை கொள்ளும் கோமகற்குக் கற்றா
மடி கொன்று பால் கொளலும் மாண்பே: குடி ஓம்பிக்
கொள்ளுமா கொள்வோற்குக் காண்டுமே, மா நிதியம்
வள்ளத்தின் மேலும் பல.28
இன்று கொளற்பால நாளைக் கொளப் பொறான்;
நின்று குறை இரப்ப. நேர்படான்; சென்று ஒருவன்
ஆவன கூறின், எயிறு அலைப்பான்; ஆறு அலைக்கும்
வேடு அலன், வேந்தும் அலன்.29
முடிப்ப முடித்து, பின் பூசுவ பூசி,
உடுப்பு உடுத்து, உண்ப உண்ணா. இடித்து இடித்துக்
கட்டுரை கூறின், செவிக்கொளா கண் விழியா,
நெட்டுயிர்ப்போடு உற்ற பிணம்.30
'ஒற்றின் தெரியா, சிறைப்புறத்து ஓர்தும்!' எனப்
பொன்—தோள் துணையாத் தெரிதந்தும், குற்றம்
அறிவரிது என்று அஞ்சுவதே செங்கோன்மை; சென்று
முறையிடினும், கேளாமை அன்று.31
ஏதிலார் யாதும் புகல, இறைமகன்
கோது ஒரீஇக் கொள்கை முதுக்குறைவு;—நேர் நின்று,
'காக்கை வெளிது' என்பார் என் சொலார்? 'நாய்க் கொலை
சால்பு உடைத்து' என்பாரும். உண்டு.32
கண்கூடாப் பட்டது கேடு எனினும், கீழ்மக்கட்கு
உண்டோ உணர்ச்சி? மற்று இல்லாகும்;—மண்டு எரி-
தான் வாய்மடுப்பினும், மாசுணம் கண் துயில்வ;
பேரா, பெருமூச்செறிந்து.33
நட்புப் பிரித்தல், பகை நட்டல், ஒற்று இகழ்தல்,
பக்கத்தார் யாரையும் ஐயுறுதல், தக்கார்
நெடுமொழி கோறல், குணம் பிறிதாதல்.—
கெடுவது காட்டும் குறி.34
பணியப் படுவார் புறங்கடையராக,
தணிவு இல் களிப்பினால் தாழ்வார்க்கு, அணியது
இளையாள் முயக்கு எனினும், சேய்த்தன்றே, மூத்தாள்
புணர் முலைப் போகம் கொளல்.35
கண் நோக்கு அரும்பா, நகை முகமே நாள்மலரா,
இன்மொழியின் வாய்மையே தீம் காயா, வண்மை
பலமா, நலம் கனிந்த பண்புடையார் அன்றே,
சலியாத கற்ப தரு.36
வாங்கும் கவளத்து ஒரு சிறிது வாய் தப்பின்,
தூங்கும் களிறே துயர் உறா: ஆங்கு அது கொண்டு,
ஊரும் எறும்பு இங்கு ஒரு கோடி உய்யுமால்,
ஆரும் கிளையோடு அயின்று.37
மாகர் சிறுகக் குவித்து நிதிக் குவை,
ஈகையின் ஏக்கழுத்தம் மிக்குடைய மா கொல்
பகை முகத்த வென் வேலான் பார்வையின் தீட்டும்
நகை முகத்த நன்கு மதிப்பு.38
களைகணாத் தம் அடைந்தார்க்கு உற்றுழியும், மற்று ஓர்
விளைவு உன்னி வெற்று உடம்பு தாங்கார்—தளர் நடையது
ஊன் உடம்பு என்று, புகழ் ஊம்பு ஓம்புதற்கே-
தான் உடம்பட்டார்கள் தாம்.39
தம்முடை ஆற்றலும் மானமும் தோற்று, தம்
இன் உயிர் ஓம்பினும் ஓம்புக!—பின்னர்ச்
சிறு வரை ஆயினும், மன்ற தமக்கு ஆங்கு
இறு வரை இல்லை எனின்.40
கலன் அழிந்த கற்புடைப் பெண்டிரும், ஐந்து
புலன் ஒருங்கப் பொய் கடிந்தாரும், கொலை ஞாட்பின்
மொய்ம்புடை வீரரும், அஞ்சார்—முரண் மறலி
தும்பை முடி சூடினும்.41
புழு நெளிந்து, புண் அழுகி, யோசனை நாறும்
கழி முடை நாற்றத்தவேனும்; விழலர்,
விளிவு உன்னி வெய்து உயிர்ப்பர்; மெய்ப் பயன் கொண்டார்
சுளியார், சுமை போடுதற்கு.42
இகழின் இகழ்ந்தாங்கு, இறைமகன் ஒன்று
புகழினும் ஒக்க புகழ்ப: இகல் மன்னன்
சீர் வழிப் பட்டதே மன்பதை; மற்று என் செய்யும்.
நீர் வழிப் பட்ட புணை?43
செவி சுடச் சென்று ஆங்கு இடித்து அறிவு மூட்டி,
வெகுளினும் வாய் வெரீஇ, பேரா;—கவுள் மதத்த
கைம்மா வயத்ததோ பாகு? மற்று எத் திறத்தும்,
அம் மாண்பினவே, அமைச்சு.44
'சைவரும் வேந்தன் நமக்கு' என்று, காதலித்த
செவ்வி தெரியாது உரையற்க!—ஒவ்வொருகால்
எண்மையனேனும், அரியன் பெரிது அம்மா;
கண் இலன்; உள் வெயர்ப்பினான்.45
பழமை கடைப்பிடியார், கேண்மையும் பாரார்,
கிழமை பிறிதொன்றும் கொள்ளார், வெகுளின் மன்;
காதன்மை உண்டே, இறை மாண்டார்க்கு? ஏதிலரும்
ஆர்வளரும் இல்லை, அவர்க்கு.46
'மன்னர் புறங்கடை காத்து வறிதே, யாம்
எம் நலம் காண்டும்?' என்று எள்ளற்க! பல் நெடு நாள்
காத்தவை எல்லாம். கடை முறை போய்க் கைகொடுத்து,
வேத்தவையின் மிக்குச் செயும்.47
உறுதி பயப்ப கடைபோகாவேனும்,
இறுவரைகாறும் முயல்ப:—இறும் உயிர்க்கும்
ஆயுள் மருந்து ஒழுக்கல் தீது அன்றால்; அல்வனபோல்
ஆவனவும் உண்டு, சில.48
'முயலாது வைத்து, முயற்று இன்மையாலே
உயல் ஆகா, ஊழ்த் திறந்த' என்னார்;—மயலாயும்,
ஊற்றம் இறு விளக்கம், 'ஊழ் உண்மை காண்டும்!' என்று.
ஏற்றார், ஏறி கால் முகத்து.49
உலையா முயற்சி களைகணா, ஊழின்
வலி சிந்தும் வன்மையும் உண்டே;—உலகு அறியப்
பால்முளை தின்று மறலி உயிர் குடித்த
கான்முனையே போலும், கரி.50
காலம் அறிந்து, ஆங்கு இடம் அறிந்து, செய் வினையின்
மூலம் அறிந்து, விளைவு அறிந்து, மேலும் தாம்
சூழ்வன சூழ்ந்து, துணைமை வலி தெரிந்து,
ஆள்வினை ஆளப் படும்.51
மெய் வருத்தம் பாரார்; பசி நோக்கார்; கண் துஞ்சார்;
எவ்வெவர் தீமையும் மேற்கொள்ளார்; செவ்வி
அருமையும் பாரார்; அவமதிப்பும் கொள்ளார்;—
கருமமே கண்ணாயினார்.52
சிறிய பகை எனினும், ஓம்புதல் தேற்றார்,
பெரிதும் பிழைபாடு உடையர்;—நிறை கயத்
தாழ் நீர் மடுவில் தவளை குதிப்பினும்,
யானை நிழல் காண்பு அரிது.53
புறப்பகை கோடியின் மிக்கு உறிலும், அஞ்சார்;
அகப்பகை ஒன்று அஞ்சிக் காப்ப:—அனைத்து உலகும்
சொல் ஒன்றின் யாப்பார் பரிந்து ஓம்பிக் காப்பவே,
பல் காலும் காமப் பகை.54
புறம் நட்டு அகம் வேர்ப்பார் நச்சுப் பகைமை
வெளியிட்டு, வேறாதல் வேண்டும்; கழி பெருங்
கண்ணோட்டம் செய்யார்;—கருவி இட்டு ஆற்றுவார்
புண் வைத்து மூடார் பொதிந்து.55
நட்பிடைக் குய்யம் வைத்து, எய்யா வினை சூழ்ந்து,
வட்கார் திறத்தராய் நின்றார்க்குத் திட்பம் ஆம்
நாள் உலந்தது அன்றே; நடுவன் நடு இன்மை
வாளா கிடப்பன், மறந்து.56
மனத்த கறுப்பு எனின், நல்ல செயினும்,
அனைத்து எவைாம் தீயவே ஆகும்; எனைத்துணையும்
தீயவே செய்யினும் நல்லவாக் காண்பவே,
மாசு இல் மனத்தினவர்.57
இனியவர் நான் சொலினும் இன் சொல்லே; இன்னார்
கனியும் மொழியும் கடுவே;—அனல் கொளுத்தும்
வெங்காரம் வெய்துஎனினும், நோய் தீர்க்கும்; மெய் பொடிப்பச்
சிங்கி குளிர்ந்தும், கொலும்.58
பொய், குறளை, வன்சொல், பயனில, என்று இந் நான்கும்
எய்தாமை சொல்லின் வழுக் காத்து, மெய்யில்
புலம் ஐந்தும் காத்து, மனம் மாசு அகற்றும்
நலம் அன்றே, நல் ஆறு எனல்?59
நல் ஆறு ஒழுக்கின் தலைநின்றார் நல்கூர்ந்தும்.
அல்லன செய்தற்கு ஒருப்படார்;—பல் பொறிய
செங் கண் புலிஏறு அறப் பசித்தும் தின்னாவாம்,
பைங் கண் புனத்த பைங் கூழ்.60
குலம் விற்றுக் கொள்ளும் வெறுக்கையும், வாய்மை
நலம் விற்றுக் கொள்ளும் திருவும், தவம் விற்று ஆங்கு
ஊன் ஓம்பும் வாழ்வும், உரிமை விற்று உண்பதூஉம்,—
தான் ஓம்பிக் காத்தல் தலை.61
இடை தெரிந்து, அச்சுறுத்து, வஞ்சித்து, எளியார்
உடைமை கொண்டு, ஏமாப்பார் செல்வம், மட நல்லார்
பொம்மல் முலைபோல் பருத்திடினும், மற்று அவர்
நுண் இடை போல் தேய்ந்து விடும்.62
பெற்ற சிறுக, பெறாத பெரிது உள்ளும்
சிற்றுயிர்க்கு ஆக்கம் அரிது அம்மா!—முற்றும்
வழ வர வாய்மடுத்து. வல் விராய் மாய,
எரி தழல் மாயாது இரா.63
தம் தம் நிலைக்கும் குடிமைக்கும் தப்பாமே,
ஒத்த கடப்பாட்டில் தாள் ஊன்றி, எய்த்தும்
அறங்கடையில் செல்லார். பிறன் பொருளும் வெஃகார்
புறங்கடையது ஆகும், பொருள்.64
பொதுமகளே போல்ப, தலையாயார் செல்வம்;
குலமகளே, ஏனையோர் செல்வம்; கலன் அழிந்த
கைம்மையார் பெண்மை நலம்போல், கடையாயார்
செல்வம் பயன்படுவது இல்.65
வள்ளன்மை இல்லாதான் செல்வத்தின், மற்றையோன்
நல்குரவே போலும் நனி நல்ல; கொன்னே
'அருள் இலன், அன்பு இலன், கண்ணறையன்' என்று
பலரால் இகழப்படான்.66
ஈகை அரிது எனினும், இன்சொலினும், நல்கூர்தல்
ஓஓ கொடிது கொடிது அம்மா:—நா கொன்று
தீவினைக் கம்மியனால் வாய்ப்பூட்டு இடப்படின், மற்று
ஆ! ஆ! இவர் என் செய்வார்?67
சொவ்வன்மை உண்டு எனின், கொன்னே விடுத்து ஒழிதல்
நல்வினை கோறலின் வேறு அல்ல; வல்லைத் தம்
ஆக்கம் கெடுவது உளது எனினும், அஞ்சுபவோ,
வாக்கின் பயன் கொள்பவர்?68
சிறு முயற்சி செய்து ஆங்கு உறு பயன் கொள்ளப்
பெறும் எனில், தாழ்வரோ? தாழார்—அறன் அல்ல
எண்மைய ஆயினும் கைவிட்டு, அரிதுஎனினும்
ஒண்மையின் தீர்ந்து ஒழுகலார்.69
'செயக் கடவ அல்லனவும் செய்தும்மன்' என்பார்
நயத்தகு நாகரிகம் என் ஆம்?—செயிர்த்து உரைப்பின்,
நெஞ்சு நோம் என்று தலை துமிப்பான் தண் அளிபோல்,
எஞ்சாது எடுத்து உரைக்கற்பாற்று.70
அல்லன செய்யினும், ஆகுலம் கூழாக் கொண்டு,
ஒல்லாதார் வாய் விட்டு உவம்புப; வல்லார்
பிறர் பிறர் செய்பபோல் செய்தக்க செய்து ஆங்கு
அறிமடம் பூண்டு நிற்பார்.71
பகை இன்று,பள்ளார் பழி எடுத்து ஓதி,
நகை ஒன்றே நன் பயணக் கொள்வான். பயம் இன்று.
மெய் விதிர்ப்புக் காண்பான். கொடிறு உடைத்துக் கொல்வான்போல்,
கை விதிர்த்து அஞ்சப்படும்.72
தெய்வம் உளது என்பார் தீய செயப் புகின்,
தெய்வமே கண் இன்று நின்று ஒறுக்கும்; தெய்வம்
இலது என்பார்க்கு இல்லை:—தம் இன் புதல்வர்க்கு அன்றே,
பல காலும் சொல்லார் பயன்?73
தீய செயல் செய்வார் ஆக்கம் பெருகினும்,
தீயன தீயனவே, வேறு அல்ல; தீயான
நல்லன ஆகாவாம்—நா இன்புற நக்கி,
கொல்லும் கவயமாப்போல்.74
நன் மக்கள் செந் நாத் தழும்பு இருக்க, நாள்வாயும்
செந் நெறிச் செல்வாரின் கீழ் அல்லர்—முன்னைத் தம்
ஊழ் வலி உன்னி, பழி நாணி, உள் உடைவார்,
தீய செயினும் சில.75
பிறன் வரை நின்றாள் கடைத்தலைச் சேறல்
அறன் அன்றே: ஆயினும் ஆக; சிறு வரையும்
நல் நலத்தது ஆயினும் கொள்க! நலம் அன்றே;
மெய்ந் நடுங்க உள் நடுங்கு நோய்!76
கருமம் சிதையாமே, கல்வி கெடாமே,
தருமமும் தாழ்வு படாமே, பெரிதும் தம்
இல் நலமும் குன்றாமே, ஏர் இளங் கொம்பு அன்னார்
நல் நலம் துய்த்தல் நலம்.77
கொலை அஞ்சார்; பொய்ந் நாணார்; மானமும் ஓம்பார்;
களவு ஒன்றோ, ஏனையவும் செய்வார்; பழியோடு
பாவம் இஃது என்னார்; பிறிது மற்று என் செய்யார்?—
காமம் கதுவப்பட்டார்.78
திருவினும் நல்லாள் மனைக்கிழத்தியேனும்,
பிறன் மனைக்கே பீடு அழிந்து நிற்பர்—நறுவிய
வாயினவேனும் உமிழ்ந்து. கடுத் தின்னும்
தீய விலங்கின் சிலர்.79
கற்பு உடுத்து, அன்பு முடித்து, நாண் மெய்ப் பூசி,
நற்குண நற்செய்கை பூண்டாட்கு—மக்கட்பேறு
என்பது ஓர் ஆக்கமும் உண்டாயின், இல் அன்றே,
கொண்டாற்குச் செய் தவம் வேறு.80
ஏந்து எழில் மிக்கான், இளையான், இசை வல்லான்,
காந்தையர் கண் சுவர் நோக்கத்தான், வாய்ந்த
நயனுடை இன்சொல்லான், கேள் எனினும், மாதர்க்கு
அயலார்மேல் ஆகும், மனம்.81
கற்பு இல் மகளின், நலம் விற்று உணவு கொளும்
பொன்-தொடி நல்லாச் நனி நல்லர்;—மற்றுத் தம்
கேள்வற்கும், ஏதிலர்க்கும், தங்கட்கும், தம் கிளைஞர்
யாவர்க்கும், கேடு சூழார்.82
முறையும் குடிமையும் பான்மையும் நோக்கார்;
நிறையும் நெடு நாணும் பேணார்; பிறிதும் ஒரு
பெற்றிமை பேதைமைக்கு உண்டே? பெரும் பாவம்,
கற்பு இல் மகளிர் பிறப்பு!83
பெண்மை வியவார்; பெயரும் எடுத்து ஓதார்;
கண்ணொடு நெஞ்சு உறைப்ப நோக்குறார்; பண்ணொடு
பாடல் செவி மடார்; பண்பு அல்ல பாராட்டார்;—
வீடு இல் புலப் பகையினார்.84
துயில் சுவையும், தூ நல்லார் தோள் சுவையும். எல்லாம்,
அயில் சுவையின் ஆகுவ என்று எண்ணி, அயில் சுவையும்
பித்து உணாக் கொள்பபோல் கொள்ப. பிறர் சிலர் போல்
மொத்துணா மொய்ம்பினவர்.85
அன்பொடு அருள் உடையரேனும், உயிர் நிலை மற்று
என்பு இயக்கம் கண்டும், புறந்தரார்;—புன் புலால்
பொய்க் குடில் ஓம்புவரோ, போதத்தால் தார் வேய்ந்து
புக்கில் குடி புகுதுவார்?86
சிற்றின்பம் சில் நீரது ஆயினும்,அஃது உற்றார்
மற்று இன்பம் யாவையும் கைவிடுப; முற்றும் தாம்
பேர் இன்ப மாக் கடல் ஆடுவார் வீழ்பவோ,
பார் இன்புப் பாழ்ங் கும்பியில்?87
எவ் வினையரேனும், இணைவிழைச்சு ஒன்று இலரேல்,
தெவ்வும் திசை நோக்கிக் கைதொழூஉம்; அவ் விளை
காத்தல் இலரேல், எனைத் துணையர் ஆயினும்,
தூர்த்தரும் தூர்ப்பார், அலர்.88
பரபரப்பினோடே பல பல செய்து, ஆங்கு
இரவு பகல் பாழுக்கு இறைப்ப; ஒருவாற்றான்
நல் ஆற்றின் ஊக்கின் பதறிக் குலைகுலை:
எவ்வாற்றான் உய்வார் இவர்?89
'இளையம்; முது தவம் ஆற்றுதும் நோற்று'` என்று,
உளைவு இன்று கண்பாடும் ஊழே, விளிவு இன்று
வாழ்நாள் வரம்பு உடைமை காண்பரேல்; காண்பாரும்,
தாழாமே நோற்பார், தவம்.90
நல்லவை செய்யத் தொடங்கிலும், நோனாமே
அல்லன அல்லவற்றின் கொண்டு உர்க்கும்—எல்லி
வியல் நெறிச் செல்வாரை ஆறு அலைத்து உண்பார்
செலவு பிழைத்து உய்ப்பபோல்.91
நெஞ்சு புறம்பாத் துறந்தார் தவப் போர்வை
கஞ்சுகம் அன்று; பிறிது ஒன்றே;—கஞ்சுகம்
எப் புலமும் காவாமே, மெய்ப் புலம் காக்கும்; மற்று
இப் புலமும் காவாது இது.92
வஞ்சித்து ஒழுகும் மதியிலிகாள்! 'யாவரையும்
வஞ்சித்தேம்' என்று மகிழன்மின்; 'வஞ்சித்த
எங்கும் உளன் ஒருவன் காணுங்கொல்!' என்று அஞ்சி
அங்கம் குலைவது அறிவு.93
மறை வழிப்பட்ட பழிமொழி, தெய்வம்
பறை அறைந்தாங்கு ஓடிப் பரக்கும்:—கழி முடைப்
புன் புலால் நாற்றம் புறம் பொதிந்து மூடினும்.
சென்று உதைக்கும் சேயார் மூகத்து.94
மெலியார் விழினும் ஒருவாற்றான் உய்ப;
வலியார் மற்று ஒன்றானும் உய்யார்; நிலை தப்பி,
நொய்ய சழக்கு என வீழாவாம்; வீழினும்,
உய்யுமால்: உய்யா, பிற.95
இசையாத போலினும் மேலையோர் செய்கை
வசை ஆகா, மற்றையோர்க்கு அல்லால்;—பசு வேட்டு,
தீ ஓம்பி, வான் வழக்கம் காண்பாரை ஒப்பவே,
ஊன் ஓம்பி ஊன் தின்பவர்?96
எவர் எவர் எத் திறத்தர், அத்திறத்தராய் நின்று,
அவர் அவர்க்கு ஆவன கூறி, எவர் எவர்க்கும்
உப்பாளாய் நிற்ப, மற்று எம் உடையார்—தம் உடையான்
எப்பாலும் நிற்பது என.97
மெய் உணர்ந்தார், பொய்ம் மேல் புலம் போக்கார்; மெய் உணர்ச்சி
கைவருதல் கண்ணாப் புலம் காப்பார்; மெய் உணர்ந்தார்
காப்பே நிலையா, பழி நாணம் நீள் கதவா,
சேப்பார் நிறைத் தாழ் செறித்து.98
கற்றுத் துறை போய காதலற்குக் கற்பினாள்
பெற்றுக் கொடுத்த தலைமகன்போல்,—முற்றத்
துறந்தார்க்கு மெய் உணர்வில் தோன்றுவதே இன்பம்;
இறந்த எலாம் துன்பம் அலாது இல்.99
கற்றாங்கு அறிந்து அடங்கி, தீது ஒரீஇ, நன்று ஆற்றி,
பெற்றது கொண்டு மனம் திருத்தி, பற்றுவதே
பற்றுவதே பற்றி, பணி அற நின்று ஒன்று உணர்ந்து,
நிற்பாரே—நீள் நெறிச் சென்றார்.100
ஐயம் திரிபு இன்று, அளந்து உத்தியின் தெளித்து.
மெய் உணர்ச்சிக் கண் விழிப்பத் தூங்குவார் தம் உளே
காண்பதே காட்சி: கனவு நனவு ஆகப்
பூண்பதே தீர்ந்த பொருள்.101