நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-13

காட்சி - 13



இடம் : அற மன்றம்
இருப் : நீதிதேவன், இராவணன், கம்பர்,
விசுவாமித்திரர்.

நிலைமை : இராவணன் வாதாடுகிறான். கம்பர்,
அலட்சியமாக இருப்பது போல் பாவனை செய்கிறார்.
விசுவாமித்திரர் திகைப்புற்றுக் காணப்படுகிறார். இந்த
வழக்கை விசாரிக்க வேண்டிய தொல்லை நமக்கு வந்து

சேர்ந்ததே என்று நீதிதேவன் கவலைப்படுகிறார்.


இரா : [விசுவாமித்திரரைப் பார்த்து] நாடாண்ட மன்னனைக்
          காடு ஏகச் செய்தீர்! அரண்மனையிலே சேடியர்
          ஆயிரவர் பணிவிடை செய்ய, ஆனந்தமாக வாழ்ந்து
          கொண்டிருந்த அரசியை அடிமை வேலை செய்ய
          வைத்தீர்.

மகன் பாம்பு தீண்டி இறந்தான்.

சுடலை காத்து நின்றான் கணவன்!

செங்கோல் ஏந்திய அவன் கரத்திலே, தவசியாரே!
பிணங்கள் சரியாக வெந்து, கருகினவா என்று
கிளறிப்பார்க்கும் கோல் இருந்தது.

பெற்ற மகன் பிணமாக எதிரே!

பொற்கொடி போன்ற மனைவி கதறிப் புரண்டிடும்
காட்சி, கண் முன்னே,

பிணம் சுட, சுடலைக் காசு கேட்கிறான்!

தன் மகன் பிணமாக, தன் மனைவி மாரடித்து
அழுகிறாள் – மாதவம் புரிந்தவரே! மகரிஷியே! அந்த
மன்னன், சுடலைப் பணம் எங்கே என்று கேட்கிறான்.

ஐயோ மகனே! பாம்பு அண்டிக் கடித்தபோது அலறித்
துடித்திட்டாயோ, பதறி விழுந்திட்டாயோ – சந்திரமதி
புலம்பல்! யாரடி கள்ளி! இங்கே பிணமது சுடவே
வந்தாய், கேளடி மாதே சேதி, கொடுத்திடு சுடலைக்காசு!
வெட்டியானாகிப் பேசுகிறான் வேந்தன்.

சுடலையில்!

இதைவிட, கல்லையும் உருக்க வேறு சோகக் காட்சி
வேண்டுமா! கல்லுருவமல்ல, கலை பல தெரிந்தவரே!

என்ன செய்தீர் இதைக் கண்டு?

இரக்கம், இரக்கம் என்று கூறி, என்னை இழிவு படுத்தும்

'எதுகை மோனை வணிகரே' மகன் பிணமானான் –

           மனைவி மாரடித்தழுகிறாள் – மன்னன் சுடலை
           காக்கின்றான் – பிணத்தை எட்டி உதைக்கிறான்.

           ஏன் இரக்கம் காட்டவில்லை? தபோதனராயிற்றே! நான்
           தான் அரக்கன், இரக்கம் எனும் ஒரு பொருள் இல்லை –
           இவருக்கு என்ன குறை! ஏன் இரக்கம் கொள்ளவில்லை?

கம் : [காரணம், விளக்கம் அறியாமல் இராவணன்
      பேசுகிறான் என்று நீதிதேவனுக்கு எடுத்துக் காட்டும்
      போக்கில்] சத்ய சோதனையன்றோ அச்சம்பவம்!
      மூவுலகும் அறியுமே, முடியுடை வேந்தனாம்
      அரிச்சந்திர பூபதி சத்யத்தை இழக்கச் சம்மதிக்காமல்,
      சுடலை காத்ததை சோதனை..சத்ய சோதனை....

இரா : ஆமய்யா ஆம்! சத்ய சோதனைதான்! ஆனால் இங்கு
      நான் இரக்கம் ஏன் அந்தச் சமயத்திலே முனிவரை
      ஆட்கொள்ளவில்லை என்று கேட்கிறேன்.

விசு : அரிச்சந்திரனை நான் வாட்டி வதைத்தது, அவனிடம்
      விரோதம் கொண்டல்ல.

இரா : விசித்திரம் நிரம்பிய வேதனை! காரணமின்றிக்
      கஷ்டத்துக்குள்ளாக்கினீர், காவலனை. இதயத்தில்
      இரக்கத்தை நுழைய விடாமல் வேலை செய்தீர்!

விசு : அரிச்சந்திரன் பொய் பேசாதவன் என்பதை....

இரா : தெரியுமய்யா – இரு தவசிகளுக்குள் சம்வாதம் - அதன்
       பயனாக நீர் ஓர் சபதம் செய்தீர், அரிச்சந்திரனைப்
       பொய் பேச வைப்பதாக....

விசு : ஆமாம்! அந்தச் சபதத்தின் காரணமாகத்தான்......

இரா : சர்வ ஞானஸ்தராகிய உமக்கு இரக்கம் எழ வேண்டிய
       அவசியம் கூடத் தெரியவில்லை...

விசு : அதனால் அரிச்சந்திரனுடைய பெருமைதானே
       அவனிக்கு விளங்கிற்று.


இரா : அதுமட்டுமல்ல! உம்முடைய சிறுமைக் குணமும்
       வெளிப்பட்டது. [விசுவாமித்திரர் கோபம் கொள்கிறார்.]
       கோபித்துப் பயன்? அவ்வளவு மட்டுமல்ல கம்ப
       இலக்கணமும் கவைக்கு உதவாது என்பது விளங்கிற்று
       – இரக்கம் நீர் கொள்ளவில்லை, உம்மை இவர்
       அரக்கராக்கவில்லை, இலக்கணம் பொய்யாயிற்று!
       நேர்மையுடன் இப்போதும் கூறலாம். ஆம்! சில
       சமயங்களில் தேவரும் மூவரும் தபோதனருங்கூட
       இரக்கம் காட்ட முடியாத நிலை பெறுவதுண்டு என்று.
       ஆனால் வேதம் அறிந்தவராயிற்றே! அவ்வளவு
       எளிதிலே உண்மையை உரைக்க மனம் வருமோ!
       வெட்கமின்றிச் சொல்கிறீர். நான் அரிச்சந்திரனைக்
       கொடுமைப்படுத்தியது, அதற்காக இரக்கத்தை மறந்தது
       அவனுடைய பெருமையை உலகுக்கு அறிவிக்கத்தானே
       உதவிற்று என்று. நான் ரிஷியல்ல, ஆகவே, நான்
       ஜானகியின் பெருமையையும் இராமனின் வீரத்தையும்,
       அனுமனின் பராக்கிரமத்தையும், அண்ணனையும்
       விட்டோடிய விபீஷணனின் ஆழ்வார் பக்தியையையும்
       உலகுக்குக் காட்டவே இரக்கத்தை மறந்தேன் என்று
       கூறிப் பசப்பவில்லை. என் பரம்பரைப் பண்புக்கும்,
       பர்ணசாலைப் பண்புக்கும் வித்யாசம் உண்டு.

       [இராவணனை அடக்கி உட்கார வைக்க
       வேண்டுமென்று கேட்டுக் கொள்வது போலக் கம்பர்,
       நீதி தேவனைப் பார்க்கிறார். மேலும் இராவணன்
       பேசினால் விசுவாமித்திரன் ஏதேனும் விபரீதமாகச்
       செய்வார் என்று நீதிதேவனும் பயப்படுகிறார். எனவே,
       அன்றைய விசாரணையை அந்த அளவோடு நிறுத்திக்
       கொண்டு அறமன்றத்தைக் கலைக்கிறார்.]

                         [சபை கலைகிறது.]