நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-8

காட்சி - 8



இடம் : அறமன்றம்
இருப்போர் : நீதிதேவன், இராவணன், கம்பர், அக்னி

தேவன்.


இரா : அக்னி தேவனே! புண்ணியத்தை நாடித்தானே
       யாகங்கள் செய்யப்படுகின்றன?

அக்னி : ஆமாம்.

இரா : மனத்தூய்மைதானே மிக முக்கியம் யாக
       காரியத்திலே ஈடுபடுபவர்களுக்கு.

அக்கினி : மனத்தூய்மைதான் முக்கியம்.

இரா : தாங்கள் பல யாகங்களுக்குச் சென்றிருக்கிறீர் – வரம்
       – அருள் –

அக்னி : போயிருக்கிறேன்.

இரா : பல யாகங்களிலே தரப்பட்ட ஆகுதியை உண்டு...

       [அக்னியின் தொந்தியைச் சுட்டிக்காட்டுகிறான்,
        அகனி கோபிக்கிறான்.]

அக்னி : என்னை வேண்டி அழைத்தவர்களுக்குத் தரிசனம்
       தந்து பூஜித்தவர்களுக்கு வரம் அருளி இருக்கிறேன்.
       இலங்கேசா! விண்ணும் மண்ணும் அறியும் என்
       மகிமையை – நீ அறிய மாட்டாய் – ஆணவம்
       உனக்கு...

இரா : மகிமை...! வரம் அருளும் வல்லமை தங்கட்குக்
       கிடைத்தது; தங்களுக்கு இருக்கும் தேவ பதவியால்?

அக்னி : ஆமாம்.

இரா : அந்தத் தேவ பதவி, மும்மலங்களை அடக்கி,
      பஞ்சேந்திரியங்களைக் கட்டுப்படுத்தி, தபோ பலம்
      பெற்று, புண்யத்தைப் பெற்றதால் தங்களுக்குக்
      கிடைத்தது.


அக்னி : வேறு எப்படிக் கிடைக்கும்? பஞ்சமா பாதகம் செய்து
        பெறுகிற பதவியா, தேவ பதவி?

இரா : பஞ்சமா பாதகம், அரக்கர் செயல்! தேவர், உலகுக்கு
       பஞ்சமாபாதகம், நஞ்சு!

அக்னி : உண்மைதான் !

இரா : அக்னி தேவனே! சப்த ரிஷிகள் உமக்குத் தெரியுமே?

அக்னி : தெரியும்..

இரா : ஏன் திகைப்பு! ஒரு முறை சப்தரிஷிகள் செய்த
       யாகத்திற்குச் சென்றிருந்தீரே, கவனமிருக்கிறதா?

அக்னி : போயிருந்தேன்...

இரா : தபோபலம் பெற்றவரே! தவசிகள் எழுவர் செய்த
       அந்த தனிச் சிறப்பான யாகத்துக்குச் சென்ற
       தாங்கள்... என்ன செய்தீர்...

அக்னி : சென்றிருந்தேன் – அழைத்திருந்தனர்.

இரா : அழைக்காமலா செல்வீர்! தங்கள் மகிமையை
       அறிந்துதான் அழைத்தனர், அந்த மகரிஷிகள் – வரம்
       அருள வாரீர் என்றுதான் அழைத்தனர் – ஆனால்
       அங்கு சென்று தாங்கள் செய்தது என்ன?

அக்னி : ஆகுதி அளித்தனர்...

இரா : அவர்கள் ஆகுதி அளித்தனர், அக்னிதேவனே!
       அவர்கள் அளித்தது ஆகுதி – தாங்கள் விரும்பியது
       என்ன?

அக்னி : நான்...

இரா : தாங்கள் விரும்பியது என்ன? மும்மலங்களை
       அடக்கிய மூர்த்தியே! விண்ணும் மண்ணும் போற்றும்
       தேவனே! அருள் வேண்டி அவர்கள் ஆகுதி அளித்தனர்
       – ஆனால் நீர்! எதை விரும்பினீர் – மனத்
       தூய்மையால் தேவ பதவி பெற்றவரே! எதை
       விரும்பினீர்... சொல்ல மாட்டீர்....

சப்தரிஷிகளின் பத்தினிமார்களை அல்லவா
விரும்பினீர்.

யாகம் காணச் சென்றீர், மோகம் கொண்டு விட்டீர் –
யாகத்தில் ஈடுபட்டிருந்த சப்தரிஷிகள் மனைவிமார் மீது–
இந்திரியங்களை அடக்கியதால் இந்தத் தேவ பதவி
பெற்றீர் – உம்மை வணங்கி வரம் கேட்டனர் தவசிகள்.
நீரோ, காமம் கக்கும் கண்களுடன் ரிஷி பத்தினிகளைப்
பார்த்தபடி நின்றீர்.

அவர்களைக் கற்பழிக்கத் திட்டமிட்டீர்... உண்டா?

இல்லையா?

அக்னி : ஏதோ ஒரு வகையான மன மயக்கம்.

இரா : உமக்கு! வரம் அருளப் போன இடத்திலே நீர் காமப்
       பேயானீர் – பெயரோ தேவன் – புகழோ அபாரம் –
       செயலோ, மிக மிக மட்ட ரகமானது– அக்னி தேவனே!
       யாகங்களை அழித்தனர் அரக்கர் என்கிறார்களே.
       அவர்கள் கூட அவ்வளவு ஈனத்தனமாக நடந்து
       கொண்டதில்லை. நீதிதேவா! யாக குண்டங்களருகே
       இது போன்ற ஆபாசங்கள் அனந்தம் – யாகம் பகவத்
       ப்ரீதிக்கான காரியம் என்று வியாக்யானம் கூறுகிறார்.
       கம்பர்?

       இந்த யாகங்களில் இலட்சணம் இப்படி இருக்கிறது!
       யாகங்களுக்குச் சென்று வரம் அருளப் போகும்
       தேவர்களின் செயல் இவ்விதம் இருக்கிறது–

அக்னி : மன மயக்கம் என்றுதான் கூறினேனே!

இரா : உமக்கு மன மயக்கம் ஏற்படலாமா? யாக
       குண்டத்தருகே அமர்ந்திருந்த ரிஷி பத்தினிகளிடம்
       ஏற்பட்டதே மனமயக்கம் – கண்டித்தனரா –
       தண்டித்தனரா – தேவ பதவியை இழந்தீரா? –
       இல்லையே – காமந்தகாரசேட்டை புரிந்தீர் – புரிந்தும்,
       அக்னி தேவனாகவே கொலு வீற்றிருக்கிறீர் –
       என்னையோ, இந்தக் கம்பர்

அரக்கனாக்கினார் – என் ராஜ்யம் அழிந்தது தர்ம
சம்மதம் என்று வாதாடுகிறார். நான் அரக்கன்! ஆனால்
நான் செய்ததில்லை, தாங்கள் செய்யத் துணிந்த
அக்கிரமத்தை...

ஆரியர்கள் செய்யும் யாகங்களைப் பற்றி, நான் எப்படி
மதிப்பு கொள்ள முடியும்? இந்த யாகங்களில்
பிரசன்னமாகும், அக்னி போன்ற தேவர்களிடம் நான்
எப்படி மதிப்பு காட்ட முடியும்? ஆகவேதான்,
யாகங்களை அழித்தேன். ரிஷி பத்னிகளைக் கூடக்
கற்பழிக்கத் துணியும் இந்தத் தேவர்கள், என்னை
இழித்தும், பழித்தும் பேசலாமா? இவர்களின் அக்ரமத்தை
அம்பலப்படுத்த யாரும் கிளம்பாததாலேயே
இவர்களுக்கும் – இவர்களின் புகழ் பாடிப்
பூரிப்படையும் இந்தப் புலவருக்கும், என்னைக்
கண்டிக்கத் துணிவு பிறந்தது...

...கூப்பிடுங்கள் ஒவ்வொரு தேவனையும் –
அவரவர்களின் அக்ரமச் செயலை, ஆதாரத்தோடு
எடுத்துக் கூறுகிறேன் – மறுக்க முடிகிறதா இந்த
மகானுபாவர்களால் என்று பார்ப்போம்.

[நீதிதேவன், கவலை கொண்டவராகி, சபையைக்

கலைத்து விடுகிறார்.]


நீதி : இன்று இவற்றுடன் நீதிமன்றம் கலைகிறது. பிறகு
      கூடுவோம்.