நீதிதேவன் மயக்கம்/நீதிதேவன் மயக்கம்: காட்சி-9
காட்சி - 9
[நீதிதேவனும், இராவணனும் வந்து
கொண்டிருக்கின்றனர்]
இரா : நீதிதேவா! இரக்கம் எனும் ஒரு பொருளிலா அரக்கன்
இது என் மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டு. என் மீது
மட்டுமல்ல, பலரால், பல பேர் மீதும் இக்குற்றச்சாட்டு,
பல சமயங்களில் சமயத்திற்கேற்றாற்போல் சாட்டப்படுகிறது.
இரக்கம் இல்லையா? ஏனய்யா இவ்வளவு கல்மனம்?
இரக்கம் கொள்ளாதவனும் மனிதனா? சர்வ
சாதாரணமாகக் கேட்கப்படும் கேள்விகள், ஆனால்,
பலரால் பல சமயங்களில் இரக்கத்தைக் கொள்ள
முடிவதில்லை. ஏன் வாழ்க்கையின் அமைப்பு
நீதி : என்ன! இரக்கம் கொள்ள முடியாததற்கு வாழ்க்கையின்
அமைப்பு முறையா காரணம்?
இரா : ஆம் நீதிதேவா! ஆம்.
நீதி : விளங்கவில்லையே, தங்களின் வாதம்.
இரா : விளங்காதது, என் வாதம் மட்டுமல்ல, நீதிதேவா! என்
மீது சாட்டப்பட்டுள்ள குற்றச்சாட்டும் கூடத்தான்
விளங்கவில்லை. வாழ்க்கையின் அமைப்பு முறை,
இரக்கத்தின் மன நிலைகளை மாற்றி விடுகிறது. இது
என் வாதம். அது தங்களுக்கு விளங்கவில்லை. வாரும்
என்னுடன்! என் வாதத்தின் விளக்கத்தினைக்
காட்டுகிறேன்.
(புறப்படுதல்)
[காட்சி முடிவு]