நூறாசிரியம்/அன்னையும் மறந்தாள்
அன்னையும் மறந்தாள்; ஆயமும் மறந்தாள்;
இன்ன பண்பினன் இனையரு ளாளன்
என்றிவை தேராது தந்தையும் மறந்தாள்;
மற்றிவள் விழுமத்து மன்றுகொள நின்ற
சிற்றில் ஆடுஞ் சிறுமியும் மறந்தாள்;
5
கிளைகிளை வந்த வுறவு மெண்ணாது
இளையோன் பாங்கின் விளைவும் ஒராது
நெருநல் பாவைக்கு அறுவை உடுத்துச்
சிறுவெண் முத்தத்துத் தொடையல் சாற்றி
மறுகின் ஆடிய குறுநுதல்
10
பறந்திய சென்றது யார்கொளப் பயின்றே!
பொழிப்பு:
(மறத்தற்கே இயலாதவளாகிய தன்னைப் பெற்ற) அன்னையையும் மறந்தாள்; (தன்னொடு சேர்ந்து விளையாடுகின்ற தன் அகவையொத்த) தோழிகளையும் மறந்தாள் புறவுலகில் ஒருவனை இன்ன பண்பை உடையவன், இன்ன அருளாண்மை உடையவன் எனும் இம் மனவியல் கூறுகளைத் தேறவறியாத இவள், (அவ்வாறு தேறி இவளுக்குப் பொருந்தியவனை அறிவிக்கும் திறனுள்ள) தன் தந்தையையும் மறந்து போனாள் மற்றும், இவள் தன் வாழ்வை அமைத்துக் கொள்ளும் பெருமையினாலும் தன்மையினாலும், அடுத்துள்ள தன் மணவாழ்வை அமைத்துக் கொள்வதற்குத் தொடர்ந்து நிற்கின்றவளும், இக்கால் சிற்றில் கட்டி விளையாடிக் கொண்டிருப்பவளும் ஆகிய தன் தங்கையாகிய சிறுமியையும் இவள் மறந்து விட்டாள்.
வழிவழியாக வந்த உறவினர்களின் தொடர்புகளையும் எண்ணாமல் இவள் பின்பற்றிச் சென்ற இளையவனின் உறவால் தொடரப்போகும் விளைவுகளையும் ஆராய்ந்து பாராமல், நேற்று (என்னும் கால நிலையில்), (தான் வைத்துக்கொண்டு விளையாடிய ) மரப்பாவைக்கு, ஆடைகளை உடுத்தியும், சிறிய வெண்முத்துக்களால் ஆன மாலையினைச் சாற்றியும் தெருவில் ஆடிக்கொண்டிருந்த சிறிய நெற்றியை உடைய இவள், (வெளியூர்க்குத் தன் காதலனுடன்) பறந்து சென்றது யார் பயிற்றுவித்த பயிற்சியினால்? விரிப்பு :
இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது
தான் அன்புடன் வளர்த்த மகள், தன் அன்னையையும் தன்னோடு ஒத்த ஆயத்தையும், தன்னைப் பேணிப் புரக்கும் தந்தையையும், தன் உடன் பிறந்த தங்கையையும், தன் உறவினர்களை மறந்தும், எண்ணிப் பாராமலும், தான் காதலித்து உடன்போகிய இளைஞனால் வரும் விளைவுகளையும் எண்ணிப்பாராமல் விளையாடிக் கொண்டிருக்கும் மிக்கிளம் பருவத்தினளாகிய இவள் வீட்டை விட்டு வெளியேறிப் போனது, யார் பயிற்றுவித்த துணிவினால் என்று செவிலித்தாய் புலம்பி வருந்தியதாகும் இப்பாடல்.
அன்னையும் மறந்தாள் - மறப்பதற்கும் அரியளாகிய தன்னைப் பெற்ற தாயையும் மறந்தாள்.
‘உம்மை சிறப்பும் அருமையும் உணர்த்தியது.
ஆயமும் மறந்தாள்-தன்னோடொத்த மகளிர் கூட்டத்தையும் மறந்தாள்.
அன்னைக் கடுத்தபடி தன்னொடு நெருங்கியிருந்து பழகியும் பயின்றும் ஆடியும் மகிழ்பவர் அவளொத்த தோழியராகலின் அவரையும் மறந்தாள் என்பது வியப்புக்குரியது.
இன்ன பண்பினன், இணையருளாளன் என்றிவை தேராது - இன்ன பண்பினை உடையவன், இந்த அளவின் அருளாளன் என்னும் இவ்வியற்கைப் பண்புகளைத் தேரவியலாதவளாகி,
பெண் ஒருத்தி, தான் மணக்கப்போவானைப்பற்றி அறிந்து கொள்வதற்கு இன்றியமையாத குணங்கள் இரண்டு ; அவை அவனது பண்பும் அருள் தன்மையுமாம் என்க.
பண்பு அவன் அவளை வைத்து நடத்தும் இல்லறத்திற்கும், அருள், அவள்பால் அவன் கொள்ளும் ஆர்வத்திற்கும் அக்கறைக்கும் அடிப்படையாம் என்க.
இனி, இவ்விரண்டு பண்புகளையும் உலகியலறிவு சான்ற முதியோரே அன்றி அவன் புறவெழிலால் மயங்கும் காதற்பெண் அத்துணைச் சிறப்பாகத் தேர்தற்கு இயலாததாகையின் தேராது’ என்றாள்.
இனி அவ்வாறு தேர்தற்கு உரியவருள் அவள் தந்தையே தக்கவராகலின், அக் கருத்தினைத் தொடர்ந்து அத்தகு தந்தையும் மறந்தாள்என்றாள் என்க.
மற்றிவள் விழுமத்து, விழுமம் - பெருமை, மற்று, இவள் பெருமையினாம்; தன்மையினாலும் சிறப்பு, நன்மை எனும் பலபொருள் படும் ஒரு சொல். மன்றுகொள நின்ற சிற்றில் ஆடும் சிறுமி திருமணத்திற்கு அணியமாகி நிற்கின்ற, சிற்றில் விளையாடும் தங்கையாகிய சிறுமி.
அக்கையின் திருமணம் நிகழ்ந்து, அதன் பெருமையினதும் நன்மையினதும் அடிப்படையில் தங்கைக்கும் மணம் வந்து கூடும் தன்மை ஈண்டுக் குறிக்கப்பெற்றது.
பெருமை - அக்கை மணந்து கொண்ட மணமகனின் தன்மையால் வரும் குடும்பச் சிறப்பும், அவனுக்கொத்த தகுதியில் தங்கையையும் மணம்பேச வரும் மணமகனது சிறப்பும்
நன்மை- அக்கையை மணந்து கொண்டவனால், அவள் தங்கையின் திருமணத்திற்கு வரும் குடும்பவுதவி ; அது மணவினைத்துணையும் பொருளுதவியும் ஆகலாம் என்க.
கிளைகிளை வந்த உறவு - மரபான் தொடர்ந்து வரும் குடும்ப உறவு.
குடும்ப உறவு மேலும் தொடர்வான் வேண்டி, இவளை மனங்கொடுக்கவும், மணந்து கொள்ளவும் தகுதியுடைய உறவினர்கள்.
அவர்களையும் எண்ணாது, அவர்கள் இவளை மணந்து கொள்ளவியலாது போனதால் வரும் ஏமாற்றத்தையும் அ'தால் வரும் பகையையும் சிறிதும் உணராமல், அயலான் ஒருவனுடன், அவனைத் தன் விருப்பமாக மணந்து கொள்ள வேண்டி வேற்றுர் போகினளே என்று புலம்பினாள் என்க.
இளையோன் பாங்கின் விளைவும் ஒராது - இவளை உடன் போக்கிச் சென்ற இளைஞனாகிய இவள் காதலனின் புதிய கூட்டுறவால் வரும் பலவகையான எதிர்விளைவுகளையும் ஆராய்ந்து பாராமல்,
புதிய உறவால், இவளை முன்கூட்டி அறியாத புக்கக உறவினர்களாலும், இவள் பெற்றோரின், உற்றாரின் பெருமையறியாத புதுவுறவுக் கணவனாலும், அறியாமையும் மதிப்பின்மையும் கலந்து ஏற்படப்போகும் எதிர்விளைவுகள் என்க.
நெருநல்.-நேற்று கால அண்மைநோக்கி, உலகியல் வழக்கில் நேற்று என்றாள்.
பாவைக்கு - மரப்பாவைக்கு.
அறுவை உடுத்து - ஆடையை உடுத்தி.
சிறுவெண் முத்தத்துத் தொடையல் - சிறிய வெள்ளிய முத்துகளால் ஆகிய மாலை.
சாற்றி - சாற்றுவித்து, அணிவித்து. மறுகின் ஆடிய குறுநுதல் - தெருவில் இறங்கி விளையாடிய சிறிய நுதலையுடைய இப் பெண்.
நெருநல் பொழுதில், மரப்பாவைக்கு ஆடையுடுத்து முத்து மாலை அணிவித்து விளையாடிய இச் சிறுபெண், அவ்விளையாட்டைப் போலவே இவ்வுடன் போக்கையும், இவள் கணவனையும் கருதி, மேற்கொண்டாள் போலும் என்று புலம்பினாள் என்க.
பறந்திய சென்றது - வீட்டை விட்டு வெளியேறிச் சென்றதைக் கூட்டைவிட்டுச் சிறகு முளைத்த பறவை பறந்து சென்றதுபோல் என்று கருதிக் கூறினாள் என்க. இய-விரைவு அசை
யார் கொளப் பயின்று - யார் பயில்வித்துப் பயின்று கொண்டு.
தான் வளர்த்த அருமை மகள், தான் பெற்ற அன்னை தந்தையரையும் உற்றார் உறவினரையும் இத்துணை விரைவில் துறந்தும் மறந்தும், புதிய உறவான காதல் இளைஞனுடன் வேற்றுார் சென்றாளே, இம் மனத்துணிவை வருவித்தவரும் பயில்வித்தவரும் யாரோ அறிகிலேனே என அலமந்து புலம்பினாள் செவிலி என்க.
இப்பாடல் பாலைத் திணையும் செவிலி புலம்பல் என்னும் துறையும் என்க.