நூறாசிரியம்/அறிதிகொல் மருந்தே
மருத்து வோனே! மருத்து வோனே!
திருத்தாக் கொடுநோய்க் கையிகந் தோரைக்
கருத்துகத் தணிக்கும் மருத்து வோனே!
பொறிப்புல னைந்துஞ் செறித்த வாகி
நெஞ்சு புதைத்து நஞ்கரை குயில்வோர்
5
அஞ்சு வினைக்குயிர் அஞ்சா துழல்வோர்
நன்றி கொன்றவர் நன்னடைப் போலியர்
என்றிவர்க் கறிதிகொல் மருந்தே
கன்றிய நெஞ்சோர் களிப்புற வுரைமே!
பொழிப்பு :
மருத்துவோனே! மருத்துவோனே! நலப்படுத்தவியலாத கொடிய நோயினால், பலராலும் கைவிடப்பெற்றவர்களைக் கருத்துடன் (கவனித்துத் தணித்து நலமாக்கும் (ஆற்றல் வாய்ந்த மருத்துவோனே! ஐந்து புலன்சார்த்த பொறிகளும் நல்ல முழுத்திறனுடன் இயங்குகின்ற நிலையில், தம் (உண்மை) நெஞ்சைப் புதைத்துக் கொண்டு, நஞ்சு தோய்ந்த இனிமை உரைகளைப் பேசுவோர், உலகம் அஞ்சுகின்ற செயல்களை அஞ்சாமல் செய்து திரிவோர் செய்த நன்மைகளைக் கொன்றவர்கள், புறத்தே நல்ல நடையினராகிய அகத்துப் போலியர் - என்னும் இவர்களை நலப்படுத்தும் மருந்தினை அறிவாயோ? அறியின், (இவர்களின் கொடிய நிலைகளைக் கண்டு) மனம் நொந்துபோய் இருப்பவர், மகிழ்வெய்தும்படி உரைப்பாயாக.
விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச்சார்ந்தது.
உலகியலில், நல்ல உடல் நலன்கள் சார்ந்தவர்களாகி, உள்ளத்தின் நல்லுணர்வுகளைப் புதைத்துக் கொண்டு, நஞ்சுபோலும் தீமை பயக்குகின்ற உரைகளை இனிமையாகப் பேசுவோர்களாலும், மக்கள் அஞ்சுகின்ற கொடிய செயல்களைத் துளியும் அஞ்சாமல் செய்வோர்களாலும் பிறர் செய்த உதவிகளுக்குரிய நன்றியுணர்வு இல்லாதவர்களாலும் வெளியில் நல்ல நடைமுறைகளை உடையவர்களாகி, அகத்தே வேறுபட்ட உணர்வுகளைக் கொண்ட போலி மாந்தர்களாலும் உள்ளம் நொந்து வருந்திய ஒருவர், பிறரால் நலமாக்க முடியாமல் கைவிடப்பட்ட கொடிய நோயாளர்களையும் குணப்படுத்துகின்ற திறன்வாய்ந்த மருத்துவரிடம், மேற்கண்டாரைக் குணப்படுத்தும் மருந்தும் உளதோ ? உண்டாயின் தெரிவிக்க வேண்டிக் கொண்டதாகும். இப்பாடல்.
மருத்துவோனே மருத்துவோனே - என இருமுறை அடுக்கியது, இன்றியமையாத் தேவையையும், மருத்துவரின் பெருமையையும் உணர்த்தியது.
திருத்தாக் கொடுநோய் - எவராலும் நீக்கவியலாத கொடிய நோயினால்,
கையிகந்தோரை ;கைவிட்டவர்களை, கைவிடப்படுதல்- நோய் கடுமையானதால் அதை நலமாக்க இயலாமல் நோயாளிகளைக் கைவிட்டு விடுதல்.
கருத்துகத் தணிக்கும் - கருத்து மிகும்படி கவனித்து அந்நோயைத் தணிக்கும்.
மருத்துவோனே என்று மூன்றாம் முறையும் விளித்தது இனி கூறப்போகும் கருத்தையும் கவனிக்கவேண்டும் என்னும் வேண்டுதல் பொருளைக் குறித்தது என்க.
பொறிப்புலன் ஐந்தும் செறித்தவாகி - பொறிகள் மேல் நின்று இயங்கும் ஐந்து புலனறி நிலைகளும் செறிவுடன் இருந்து பழுதின்றி இயங்குவன வாகி,
நெஞ்சு புதைத்து நஞ்சுரை குயில்வார்- நெஞ்சு களனாக நின்று இயங்கும் மனச் சான்றினைப் புதைத்துவிட்டு, வாயில் நஞ்சுபோல் தீமை செய்யும் உரைகளைக் குயில்போல் இனிமையாகக் கூறுவார். குயிலுதல்இனிமையாகப் பேசுதல் புணர்ச்சியில் உகரம் கெட்டது.
அஞ்சு வினைக்கு - மக்கள் அஞ்சத்தக்க செயல்களுக்கு.
உயிர் அஞ்சாது உழல்வோர் - உயிர்க்கு வருந் துன்பத்திற்கு அஞ்சாமல் சுழன்று இயங்குவோர்.
நன்றிகொன்றவர்- செய்த உதவிகளை நினைத்துப் பாராமல் அவற்றைச் செய்தவர்களுக்கே தீங்கு செய்பவர்.
நன்னடைப் போலியர் - புறத்தே நல்ல குணமுள்ளவர்கள்போல் நடந்து அகத்தே வேறுபடும் போலி மாந்தர்கள்.
என்று இவர்க்கு - என்னும்படியான இப்படிப்பட்ட உளநோய் கொண்டவர்களுக்கு
அறிதிகொல் மருந்தே - அறிவாய் கொல் தக்க மருந்தினையே. கொல் அசைநிலை இனி கொல் மருந்தே எனக் கொண்டு, அவ்வாறு மருந்தில்லாவிடினும், அவர்களைக் கொன்றழிக்கும் மருந்தையாகிலும் அறிவையோ என்று அசைக்கும் பொருள்கொண்டு உரைக்கலாம் என்க.
கன்றிய நெஞ்சோர்-மேற்கூறிய நால்வகை மக்கள் என்னுந் தோற்றத்துத் திரிபுள்ளம் கொண்டவர்களைக் கண்டு கொண்டு நொந்து கசிந்துபோன உள்ளமுடையவர்கள்.
களிப்புற உரைமே - மகிழ்வுறும்படி கூறுவாயாக
பொதுவான நல்ல மாந்தர்களுக்குரிய வகையில் நோய்ப்படாத உறுப்புகளைக் கொண்டிருப்பினும், நஞ்சுள்ளம் உடையவர்களாக இனிய உரைகளைப் பேசுபவர்களையும், தீயனவற்றை அஞ்சாமல் செய்பவர்களையும், நன்மை செய்தார்க்கும் தீங்கு செய்யும் நன்றியற்றவர்களையும், நல்லவர்கள் போல் நடக்கும் போலி மாந்தர்களையும். திருத்துவதற்கு ஏதேனும் மருந்து உண்டோ, தீராமல் கைவிடப்பட்ட நோயாளர்களையும் மிக்கக் கருத்துடன் கவனித்து அவர்களின் நோய்களைத் தீர்க்கின்ற மருத்துவனே அவ்வாறு மருந்து உளதாயின், அந்த மாந்தத் திரிபுள்ளவர்களுக்கு அதனைக் கொடுத்து அவர்களைத் திருத்தி, அவர்களைக் கண்டு உள்ளம் வருந்துகின்றவர்கள் மகிழுமாறு, அவர்களை நல்லவர்களாகச் செய்வாயாக என்றபடி,
இப்பாடல் பொதுவியல் என்னும் திணையும், முதுமொழிக் காஞ்சி என்னும்துறையும் என்க.