நூறாசிரியம்/இல்லெலி

75 இல்லெலி

கூரிள எயிற்றுக் குவிமுக இல்லெலி
போரிற் சாய்த்த புதுநெல் கொறிக்கும்
தொடரொலி படர்ந்த நெடுவல் லிரவின்
போக்குப் போலவன் வரவே
நோய்க்குநல் வரவிற் கொத்தது செலவே!

பொழிப்பு:

கூர்மையான இளமைபொருந்திய பல்லையும் கூம்பிய முகத்தையும் உடைய வீட்டகத்து எலி, கதிர்க் குவியலினின்றும் உதிர்த்துத் திரட்டிக் கொணர்ந்த புதிய நெல்லைக் கொறிக்கும் தொடர்ந்த ஒலிபடர்ந்த நெடிய வலிமை பொருந்திய இரவின் செலவு போன்றது தலைமகனின் வரவு: மற்று என் நோய்க்கு நல்வரவு கூறி வரவேற்பது அவன்றன் செலவு.

விரிப்பு:

இப்பாடல் அகப்பொருள் சார்ந்தது.

தலைமகன் பிரிந்து செல்லக் கருதியிருப்பதனை உணர்ந்த தோழி அதனைத் தலைமகளுக்குத் தெரிவிப்ப அவள் வருந்திக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

கூர்இள எயிற்றுக்-இல்எலி- கூர்மையான இளமை பொருந்திய பல்லையும் கூம்பிய முகத்தையும் உடைய வீட்டு எலி,

எலியின் கொறித்தல் இப்பாடலில் சுட்டப்படுதலால் அதற்கேற்பப் பல்லின் கூர்மையையும் இளமையையும் கூறினார்.

குவிமுகம்- கூம்பிய முகம்

இல்லெலி- வீட்டில் வாழும் எலி.பிற இனங்களின்றும் வேறுபடுத்தற்கு இல்லெவி என்றார்.

போரில் சாய்த்த புதுநெல் கதிர்க் குவியலின்றும் திரட்டிக் கொணர்ந்த புதிய நெல்.

போர்- நெற்கதிர்க் குவியல். சாய்த்தல் திரட்டுதல்.

கொறிக்கும் தொடர் எலி- கடித்துத் தின்னுகின்ற தொடர்ந்த ஒலி. கொறித்தல் -ஒவ்வொன்றாகக் கடித்துத் தின்னுதல், பொதுவாகக் கடித்தலைக் குறிக்கும் கறி என்னுஞ்சொல் ஒவ்வொன்றாகக் கடிக்கும் வேறுபாடு உணர்த்தற்குக் கொறி எனத் திரிந்தது.

தொடர் ஒலி படர்ந்த- தொடர்ந்த ஒலி பரவிய

புதுநெல் ஆதலின் பரபரப்போடு தொடர்ந்து கொறித்தது போலும்,

நெடுவல் இரவின்- வரவே நீண்ட வலிமை வாய்ந்த இரவின் செலவு போன்றது தலைமகனின் வருகை.

முன்னர்த் தலைவன் பிரிந்து சென்றிருந்த போது அவன் வரவை எதிர்நோக்கித்துயில் கொள்ளாது இரவிலும் விழித்திருந்த தலைவி அதனை நினைவுகூர்ந்து கூறினாள்.

இரவு நீண்டுசெல்லுதலும் வலிமையுடைத்தாதலும் இல்லையாயினும் தலைவனைப் பிரிந்து தனித்திருந்தமையின்

"ஒரு நாள் எழுநாள் போற் செல்லுங் சேட் சென்றார்

வருநாள்வைத் தேங்கு பவர்க்கு” என்றாங்கு இரவு நீண்டதாகவும் வலிமையுடையதாகவும் தோற்றியது எனக்கொள்க!

நோய்க்கு நல்வரவிற்கு ஒத்தது செலவே - அவன்றன் செலவு என்னைப் பற்றும் நோய்க்கு நல் வரவுகூறி வரவேற்பது போன்றது. நோயை வருக வருக என்று அழைப்பது போன்றதாம்; நோய் விரைந்து பற்றுதற்கு ஏதுவாம் என்றவாறு.

தலைவன் வரவுக்கு இரவின் செலவும் அவன்றன் செலவிற்கு நோயின் வரவும் உவமைகளாகச் சுட்டப்பட்டுள்ள முரணணி காண்க!

இப்பாடல் பாலை என்னும் அகத்திணையும் பிரிவுணர்த்திய தோழி க்குத் தலைவி வருந்திக் கூறியது என்னுந் துறையுமாம்.

"https://ta.wikisource.org/w/index.php?title=நூறாசிரியம்/இல்லெலி&oldid=1251289" இலிருந்து மீள்விக்கப்பட்டது