நூறாசிரியம்/நுங்கேய் கிளிஞ்சல்

74. நுங்கே கிளிஞ்சில்


நுரைதிரை சாய்த்த துங்கேய் கிளிஞ்சில்
கரைசிறு மணலுட் கரப்பினு மொருகால்
அலைக்கை யகழும் அன்ன
உலைக்கு நெஞ்சிங் குய்வது மியல்பே!


பொழிப்பு:

நுரைக்கின்ற அலை எற்றித் தள்ளிய பனை நுங்கு போலும் கிளிஞ்சில் கரையகத்து நுண்ணிய மணலின்கண் ஒருகால் மறைந்தாலும் அலையாகிய கையால் பிறிதொருகால் அகழ்ந்து வெளிப்படுத்தப் பெறுதல் போல மக்கள் நெஞ்சம் துன்பத்துட் புதையுண்டு வருந்தினும் அத் துன்பம் நீங்கப் பெறுதலும் இயல்பேயாம்.

விரிப்பு:

இப்பாட்டு புறப்பொருள் சார்ந்தது. கடலலையின் பெருவீச்சால் கரைமணலுட் புதையுண்ட கிளிஞ்சில் மீண்டும் அலையால் அகழப் பெற்று வெளிப்படுதலைச் சுட்டிக்காட்டி, துன்பத்துள் தோய்ந்து இனித் தமக்கு உய்தியும் உண்டுகொல் என உழலும் நெஞ்சினார்க்கு ஆறுதல் கூறி மன எழுச்சியூட்டுமாறு அமைந்தது இப் பாட்டு,

நுரைதிரை சாய்த்த - நுரைக்கின்ற அலையால் எற்றித் தள்ளப்பட்ட திரை நுரைத்தலால் அதன் எழுச்சியும் சாய்த்தலால் அதன் வீச்சும் உணரக் கிடந்தன. அது கடலலை யாதலும் உணரப்பட்டது.

நூங்கு ஏய் கிளிஞ்சில் - பனை நுங்கு போலும் கிளிஞ்சில், பனை துங்கு கிளிஞ்சிலுக்கு உவமையாகக் கூறப்பெற்றது ஆசிரியரின் கூரிய பார்வைக்கும் உவமைத் திறத்திற்கும் சான்றாகும்.

ஏய் -உவம உருபு

கரை சிறு மணல் உள் ஒரு கால் கரம்பினும் கரையகத்து நுண்ணிய மணலின் உள்ளே ஒருகால் மறைந்தாலும்,

கரை- கடற்கரை, யாற்று மணலினும் நுண்ணியாதாகலின் கடற்கரை மணலைச் சிறுமணல் என்றார்.

கரைசிறுமணல் என்பதன்கண் எதுகை நோக்கி வல்லொற்று மிகாதாயிற்று. நீரால் கரைக்கப்படுதலின் இதுவும் வினைத் தொகை எனினுமமையும்.

கரத்தல்- மணலுட் புதைந்து மறைதல்

அலைக்கை அகமும் அன்ன - அலையாகிய கை பிறிதொருகால் மணலை அகழ்ந்து புதையுண்ட கிளிஞ்சிலை வெளிப்படுத்துதல் போல.

அகழுதல்- தோண்டுதல் மணற் செறிவைக் கரைத்து உள்ளிருப்பை வெளிப்படுத்துதலின் அகழுதல் எனப்பட்டது. அவ்வினைக்கேற்ப அலை கையாக உருவகஞ் செய்யப் பெற்றது.

உலைக்கும் நெஞ்சு- உய்வதும் இயல்பே.-ஈண்டுத் துன்பத்துட் புதையுண்டு வருந்தும் உள்ளம் அத்துன்பத்தினின்றும் நீங்கப் பெறுதல் இயல்பேயாம்.

உலைத்தல்- துன்புறுத்தப்படுதல். செயப்பாட்டுவினை செய்வினையாய் நின்றது.

உய்தல் - நீங்குதல்.

இப்பாட்டு பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.