நூறாசிரியம்/எக்கர் இடுமணல்

67 எக்கர் இடுமணல்


எக்கர் இடுமண லொக்க உலகத்துப்
புக்காங்கு வாழ்ந்து பொன்றுநர் பலரே
அளிதவர் பிறப்பே எளிதவர் நிலையே
ஒளிதக உட்கிளர்ந்து மாணா வினையறப்
பழிசெய் பஞிலத் திரங்கித் தம்முயிர் 5
அரிதின் மாய்த்த பெரியோர் சிலரே
யாண்டவர் பிறந்தவ ராயினும் மாண்டக
வையத் தவர்வா ழுநரே
உய்யுநர் என்போர் அவர்வழி யோரே!


பொழிப்பு:

இவ்வுலகின்கண் பிறந்து வாழ்ந்து இறப்போர் (யாறு குவித்த எக்கரிடத்து மணல் போல எண்ணற்றோராவர். அவர்தம் பிறப்பு இரங்கத் தக்கது. வாழ்க்கை நிலையோ எளிமையுடைத்து. அவர்களுள் மெய்யறிவு பொருந்துதலால் உள்ளம் எழுச்சியுற்று, இழி செயல்களின் நீங்கப் பெற்றுச் சான்றோரால் பழிக்கப்படுவனவற்றைச் செய்யும் மக்கள் தொகுதியின் இழிநிலைக்கு இரக்கமுற்று அம்மக்களைக் கடைத்தேற்றுதற்குத் தாம் மேற்கொண்ட அருமுயற்சியிலே தம்மை மாய்த்துக் கொண்ட பெருமக்கள் மிகச்சிலராவர். அவர்கள் யாண்டுப் பிறந்தவராயினும் இவ்வுலகின்கண் என்றென்றும் சிறப்புற வாழ்ந்து கொண்டிருப்பவராவர். வாழ்க்கையில் ஈடேறுவோர் என்று சொல்லப் பெறுவோர் அப்பெருமக்களின் வழியைப் பின்பற்று வோரேயாவர்.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது

உலகத்துப் பிறந்து வாழ்ந்து இறப்போர் எண்ணற்றோராயினும் அவர்களுள் மெய்யறிவான் மேம்பட்டுச் செய்வினையாற் சிறப்புடையராய், மக்களைக் கடைத்தேற்றும் அருமுயற்சியை மேற்கொண்டு தம் உயிரையும் மாய்த்துக் கொண்ட மிகச் சிலராகிய பெருமக்கள் எங்குப் பிறந்தவராயினும் இவ்வுலகின்கண் என்றென்றும் வாழ்வோர் என்றும் அவர்தம் மெய்ந்நெறியைப் பின்பற்றுவோரே வாழ்க்கையில் ஈடேறுவோர் என்றும் விளக்குவது இப்பாட்டு.

எக்கர் இடுமணல் - யாறு அலையான் எற்றிக் குவித்த மணல் யாறு இடு எக்கர் மணல் எனக் கூட்டுக! யாறு வருவிக்கப்பட்டது.

புக்கு ஆங்கு - புகுந்து புகுதல் - பிறத்தல். இவ்வுலகிற் புதுவதாக வந்தடைதலின் புகுதல் எனப்பட்டது. புலம்பன் உடல்தாங்கி வருதல் எனினுமாம். ஆங்குஅசை,

பொன்றுநர் - இறப்போர்.

பலர் - எண்ணற்றோர். இதனையுணர்த்தற்கு எக்கர் மணலை உவமைகூறினார்.

அளிது அவர் பிறப்பு - அவர்தம் பிறப்பு இரங்கத் தக்கது. வாழ்க்கைப் பயனைப் பெற்று ஈடேறுதலின்றி வறிதே கழிதலின் பிறப்பு இரங்க்கத்திற் குரியதாயிற்று.

எளிது அவர்நிலையே - அவர்தம் வாழ்க்கை நிலையோ எளிமையுடைத்து. செயற்கு அரியன செய்யாது எளியன செய்தலால் அவர்தம் வாழ்க்கை நிலை எளிமையுடையதாயிற்று.

“செயற்கு எளியவாவன -உலகத் தொழில் செய்தலும் பொருளீட்டுதலும் இன்பந்துய்த்தலும் எளியாரை வாட்டுதலுமாம்” என்ப.

ஒளிதக - அறிவுபொருந்த ஒளி சிறப்பாக மெய்யறிவைக் குறித்தது. தக: - தக்கிருக்க - பொருந்த

உள் கிளர்ந்து - மன எழுச்சியுற்று. அஃதாவது அறியாமையால் பழிப்படுவன செய்து இழியும் மக்கள் கூட்டத்தின்பால் கொண்ட இரக்கத்தால் அம்மக்களைக் கடைத்தேற்ற விழைதலால் எழுந்த உணர்வு.

மாணா வினை அற - நற்குண நற்செயல்களுக்கு மாறான இழிசெயல்களைச் செய்யாது நீங்க.

பழி - சான்றோரால் பழிக்கப்படுவன. முதனிலைத் தொழிலாகு பெயர்.

பஞிலம் - மக்கள் தொகுதி, பஞ்ஞிலம் என்னுஞ் சொல் தொக்குப் பஞிலம் என நின்றது.

அரிதின்-அரிய வினைப்பாட்டின்கண்.தந்நலந்தவிர்த்துப் பொதுநலங் கருதிச் சான்றோர் மேற்கொள்ளும் வினை அருவினை யாதவின் அதனை அரிது என்றார்.

தம் உயிர் மாய்த்த - தம் உயிரை மாய்த்துக் கொண்ட பொதுநலத் தொண்டில் உள்ளம் ஒன்றி ஈடுபடும் பெருமக்கள் தாம் மேற்கொண்ட வினையிலேயே அழுந்தி பலதலையான இடர்ப்பாடுகளை எதிர்கொண்டு, மனக்கவலையிலும் மெய்வருத்தத்திலும் உழன்று, உயிர் வாழ்க்கைக்குக் கட்டயாத் தேவையான ஊண் உறக்கங் கொள்வதிலும் நாட்டமின்றி, வேளை மறுத்து உண்டும், ஏலா உண்டியைத் தவிர்க்காமலும், நோயுற்ற வழி மருத்துவஞ் செய்து கொள்வதிலும் காலங் கடத்தித் தம் வாழ்நாளுக்கு ஊறுநேரத் தாமே வாய்ப்பளித்தலின் தம் உயிர் மாய்த்த என்றார்.

பிறவற்றில் நாட்டமின்றித் தான் மேற்கொண்ட வினையில் முழுமூச்சாய் ஈடுபடுவானைக் குறித்து அவன் அதிலேயே கிடந்து மாய்கிறான் என்னும் உலக வழக்கையும் நோக்குக

இனிக் கொடும் பகைவரை இனங்கண்டு அவரிடத்து விழிப்பாய் இராமையும் தாம் மாய்க்கப்படுதற்கு இடஞ் செய்தலால் அதுவும் கொள்ளப்படும்.

பெரியோர் சிலரே - மேற்கூறியவாறு தம் உயிரையும் பொருட்படுத்தாது பொதுநலத் தொண்டாற்றுவது பெரிதும் அரிய செயலாதலின் அதனைச் செய்வாரைப் பெரியோர் என்றார்.

மேல் பலர் எனப்பட்டோர் எண்ணற்றோர் ஆதலின் ஈண்டுச் சிலர்’ எனப்பட்டோர் மிகச் சிலர் எனக் கொள்க.

யாண்டு அவர் பிறந்தவர்.ஆயினும் - மலை, கடல், யாறு முதலியவற்றான் இயற்கையானும் அரசால் செயற்கையானும் கண்டம், நாடு, பைதிரம் எனப் பாகுபடுத்தப்பட்ட இடப்பகுதிகளுள் எங்கே பிறந்தவர் ஆயினும்,

இனி, மொழியாலும் இனத்தாலும் தொழிலாலும் சமயத்தாலும் பாகுபட்டுக் கிடக்கும் மக்கட் பிரிவுகள் பலவற்றுள் எதன்கட் பிறந்தோராயினும் எனவும் கொள்க!

மாண்தக வையத்து அவர் வாழுநரே - அப்பெருமக்கள் இவ்வையகத்தில் என்றென்றும் சிறப்புற வாழ்பவரேயாவர். அவர் இறந்தும் இறவாதவரே என்றவாறு.

நத்தம்போற் கேடும் உளதாகுஞ் சாக்காடும்
வித்தகர்க் கல்லால் அரிது.

என்னுந் திருக்குறளையும் ஈண்டு நோக்குக !

பெருமக்கள் மேற்கொண்ட அருவினையின் நற்பயன் உலகத்தார்க்குத் தொடர்ந்து கிட்டுதலானும் வாழ்தல், என்பது பிறர்க்குப் பயனுற வாழ்தல் என்பதே சிறப்பாகக் கொள்ளப் படுதலானும் அப்பெரியோர் உடலளவில் மாய்ந்தாலும் இறப்பை வென்று என்றென்றும் வாழ்ந்துகொண்டிருக் கின்றனர் என அறிக!

உய்யுநர் - வாழ்க்கைத் துன்பங்களால் பல்லாற்றானும் அலைக்கழிக்கப் பட்டு அழிந்தொழியாமல் வாழ்க்கைப் பயனை முழுமையாகப் பெற்று ஈடேறுவோர்.

என்போர் - எனப்படுவோர் - என்று சிறப்பித்துச் சொல்லப் படுவோர். ‘இல்வாழ்வான் என்பான்’ என்றாற் போலச் செயப்பாட்டு வினை செய்வினை வாய்பாட்டில் நின்றது.

அவர் வழியோரே - அப் பெரியோர்தம் பின்செல்லியரே அவர்தம் வழியைப் பின்பற்றுவோரே என்றவாறு.

பின்பற்றுதலாவது அப்பெரியோர் வகுத்துரைத்த மெய்ந்நெறியில் வழுவாது ஒழுகுதலும், அவர் தொடங்கி நடத்திய அறவினை அல்லது அருந்தொண்டினைத் தொடர்ந்து செய்து வருதலும் அவர் இடைவிட்ட வினைப்பாட்டைக் கடைக்கொட்கச் செய்து நிறைவேற்றுதலும் ஆகும்.

இப்பாடல் புறத்தினைப்பொதுவியலும் பொருண் மொழிக் காஞ்சி என்னுந்துறையுமாம்.