நூறாசிரியம்/நானுகம் பெரிதே

68 நானுகம் பெரிதே


நானுகம் பெரிதே நாணுகம் பெரிதே
மாணுறு தீந்தமிழ் மகனை யாகி
பூப்பறு நெஞ்சுகப் புரிந்து நாணொடு
காப்பறு நாவின் மீச்சுவை மிசைந்து
செவித்துளை புகுந்த வீரொரு பிறசொற் 5
கொள்ளார் வழியும் இடையிடைக் கிளந்து
கல்லாப் புல்லுரை கரைந்து கடுப்புற
வல்லேம் யாஅம் எனவலம் வரூஉம்
வெம்மார் மாக்களை விதந்து
நம்மோர் எனற்கு நாணுகம் பெரிதே’ 10


பொழிப்பு

யாம் பெரிதும் நாணுகின்றேம்! யாம் பெரிதும் நாணுகின்றேம்! மாட்சிமை பொருந்திய இனிய தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மகனாகப் பிறந்தும், மலர்ச்சியுறாத தன் மனம் விரும்பியவாறெல்லாம் செயற்பட்டு, நாணமும் அடக்கமும் அற்ற தன்நாவினால் சுவைமிகு உண்டிகளை உட்கொண்டு, தன் செவியாகிய துளையின்கண்ணே புகுந்த இரண்டொரு வேற்றுமொழிச் சொற்களை அவற்றை விளங்கிக் கொள்ளாதவரிடத்திலும் இடையிடையே வெளிப்படுத்தி, முறையாகக் கற்றுத் தெளியாத புல்லிய சொற்களால் உரையாடி ஆணவத்தோடு யாஅம் பெரிதும் வல்லமையுடையேம்’ என்று ஊரைச் சுற்றி வருகின்ற கொடுமை வாய்ந்த கயவர்களைச் சிறப்பித்து நம்மேவர்கள் என்று கூறிக் கொள்வதற்கு யாம் பெரிதும் நாணுகின்றேம்.

விரிப்பு:

இப் பாடல் புறப்பொருள் பற்றியது.

சிறப்பு மிக்க தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மகனாய் இருந்தும் மனம் பண்பட்டு விரிவடையப்பெறாது அதன்வழி விரும்பியவாறெல்லாம் செயற்பட்டுச் சுவைபட உண்டு நவைபடப் பேசிச். செருக்கொடு திரியும் இழிதகையாளரை அவர் தமிழர் என்பது பற்றி நம்மவர் என்று சொல்லிக் கொள்வதற்கு நாணிப் பாடியது இப்பாட்டு.

நானுகம் பெரிதே நானுகம் பெரிதே; மாந்தர் தம் நிலைக்குப் பொருந்தாத கருமங்களைச் செய்யப் பின்வாங்குதல் நாணம் எனப்படுதலின், ஈண்டு ஆசிரியர், தமிழினத்துப் பிறந்தார் சிலர் இழிதகையாளராய் இருந்தும் அவரைச் சிறப்பித்து நம்மவர் என்று சொல்லிக் கொள்வதற்குப் பெரிதும் நானுகின்றேம் என்றார்.

அடுக்கு இளிவரல் மிகுதியான் வந்தது!

மானுறு தீம் தமிழ் மகனை யாகி; தலைக் கழகக் காலத்திற்கு முன்பே வினையின் நீங்கி விளங்கிய அறிவின் முனைவர் முதன்முதலாக உயிர் மெய்க்குந் தனிவடிவு கண்டு ஒலியன் முறையில் நெடுங் கணக்கு வகுத்து, எண்பெயர் முதலிய பத்து அகமும் கிளவி புணர்ச்சி என்றும் இருபுறமுமாகிய பன்னிரெழுத்திலக்கணமும் தோற்றி, இயல் திரிவு திசை என்னும் மூவகைச் சொல்லும் முதனிலை ஈறு முதலிய அறுவகைச் சொல்லுறுப்பும் தொகையும் விரியுமாகிய பதினால்வகைச் சொற்றொடரும் ஆய்ந்தும், மருளறு சிறப்பின் பொருளிலக்கணம் கண்டும் இருவகை வழக்கினும் அருகுதலில்லா என்றுமுள தென்றமிழ், பன்னெடுங் காலத் தொன்மையும் ஏனை மொழிகளினு முந்திய முன்மையும் பல மொழிகளைத் தோற்றுவித்த தாய்மையும் பிறமொழிகளால் பிறழாத தூய்மையும், எற்றைக் காலத்தும் ஏற்புற வளரும் இளமையும் சொற்சிறப்பாலும் இலக்கியப் பரப்பாலும் வளமையும்,இலக்கண வரம்பால் செம்மையும் இயல் இசைநாடகம் என்னும் மும்மையும், பழகுறு சிறப்பின் இயன்மையும் பலதுறை கொண்ட வியன்மையும் ஆய்வுச் செறிவால் நுண்மையும் அயன் மொழிகளுக்கும் சொற்பொருள் அளிக்கும் வன்மையும் என்றும் இருக்கும் நிலைமையும் ஏனை மொழிகளின் மேம்பட்ட தலைமையும், கலப்பு வேண்டாத தனிமையும் கேட்பார்க்கும் கிளர்வார்க்கும் இனிமையும் என மொழிநூன் மூதறிஞர் எடுத்துக்காட்டும் பதினாறு வகையின் ஓங்கிய சிறப்பும் பாங்குறப் பெற்ற மொழியாதலின் மாணுறு தமிழ் என்றார். இது மேலும் விரிப்பிற் சாலப் பெருகும்.

தீந்தமிழாவது இனிமை வாய்ந்த தமிழ். மாணுறு தமிழ் எனினே அமையும்; மற்றுத் தீந்தமிழ் என இனிமையை விதந்து வேறுபடக்கூறியது என்னை யெனின், தமிழின் பிற சிறப்புகளெல்லாம் ஆராய்ச்சி வகையான் புல மக்கள் மட்டுமே அறிந்துணரக் கிடக்க அதன் இனிமையோவெனின் இளஞ்சிறாரும், பொதுமக்களும் எளிதிற் சுவைக்குமாறும் மொழியறியா அயலவரையும் ஒலிவகையால் ஈர்த்து இன்புறுத்துமாறும் அமைந்திருத்தலின் அதன் ஏற்றங் கூறுமுகத்தான் அதனைத்தனித்தெடுத்துக் கூறினார் என்க:

செய்யுளும் ஒரு வகை வழக்கே யாயினும் அதன் பெருஞ்சிறப்புக் கருதி வழக்குஞ் செய்யுளும்’ என்ற விடத்து வேறுபடுத்திக் கூறியது போல இதனைக் கொள்க! .

தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட மாந்தன் என்பார் தமிழ் மக்களை ஆகியும் என்றார். மகனை என்பதன்கண் ஐகாரம் அசைநிலை உம்மை தொக்கது.

தாய்மொழியாவது இயல்பின் வந்த உரிமைமொழி.

பூம்று நெஞ்சு உகப்புரிந்து : பூப்பறு நெஞ்சாவது மலர்ச்சியுறாத மனம் கல்வி கேள்விகளானும் உலகியலறிவானும் பண்பட்டுப் பரந்த நோக்கும் நடுநிலையுணர்வும் பொது நல விழைவுங்கொண்டு விரிவுறாது, போலி நாகரிகப் போக்கும் ஆரவாரச் செருக்கும் தன்னல வேட்கையும் கொண்ட மனம்,

உகப்புரிதலாவது - மனம் விரும்பியவாறு புல்லிய செயல்களைச் செய்தல், மனம் பூப்பறு நெஞ்சு எனப்பட்டமையின் அதன் வழிபட்ட செயல்களும் புல்லியவை எனப்பட்டன. அவையாவன வெற்றாரவார வெறும்பகட்டுப் போலி நாகரிகச் செயல்களும் பிறவுமாம்.

நானொடு காப்புறு நாவின் மீச்சுவை மிசைந்து- நாவிற்கு நாணமாவது அவையல் கிளவிகளை இடக்கர் அடக்காது பேசக் கூசுதல்.

காப்பு - கட்டுப்பாடு அதாவது தீயவற்றில் தலைப்படாத அடக்கம். நாவடக்கமாவது பொய் குறளை கடுஞ்சொல் பயனில் சொல் என்னுஞ் சொற்குற்றங்களைத் தவிர்த்தல்.

இனித் தன் முயற்சியின்றிப் பிறருழைப்பின் வந்தவற்றைச் சுவைத்து உண்ணற்கும் ஏழை எளியோர் பசியால் வாடப் பார்த்தும் சிறிதும் இரங்காது உண்ணற்கும் அயலவர் முகஞ் சுளிக்குமாறு அநாகரிகமாக சுவைத்து உண்ணற்கும் கூசாமையையும் நாவிற்குரிய நாணமின்மையாகவும், அக்காலத்திலும் நோயுற்றவிடத்தும் சுவையைத் தவிர்க்கமாட்டாமல் ஏலா வுண்டியை விரும்பியாங்கு உண்ணுதலையும் நாவடக்கமின்மையாகவும் கொள்ளலுமாம்.

பசியும் உடனலமும் நோக்கியுண்ணாது சுவையையே பெரிதும் விரும்பு யுண்ணலைக் குறித்து மீச்சுவை மிசைந்து என்றார்.

செவித்துளை-கரைந்து : அரும்பொருள் குறித்து ஆன்றோர் கூறும் நறுந்தமிழ்ச் சொற்களை விரும்பிக் கேளாமையின் செவியைத் துளை என்றார்.

இருவர் மணிவிளக்கத்து ஏழிலார் கோவே
குருடேயும் அன்றுநின் குற்றம் - மருடீர்ந்த
பாட்டும் உரையும் டயிலா தனவிரண்டு
ஓட்டைச் செவியும் உள

எனும் ஏழில் மன்னனின் இழிநிலை குறித்த ஒளவையார் பாடலிற் கண்டாங்கு ஈண்டு நறுந்தமிழ் பயிலா வெறுஞ் செவிகளை, அவற்றின் புன்மை தோன்றத் துளை என்றும், குறிக்கொண்டு கேளாது காதிற்பட்டன என்பார் புகுந்த என்றுங் கூறினார். இருமை ஒருமை பற்றிய ஈர் ஒரு என்னும் சிற்றெண்கள் அச்சொற்களின் சின்மை குறித்து நின்றன.

பிற சொல்லாவன ஆரியம், ஆங்கிலம் முதலிய பிற மொழிகளின் சொற்கள். விளங்கிக் கொள்வார் இல்லாதவிடத்தும் தம் உரையாட்டின் இடையிடையே பிறமொழிச் சொற்களை வெளிப்படுத்துதல் வரட்டுப் பெருமையும் போலி நாகரிகமும் கருதியும் நல்லறிவின்மையானும் என்க.

மேற் 'புகுந்த’ என்றமையின் ஈண்டுக் கிளத்தல் வெளிப்படுத்தல் எனப்பட்டது. பிறரை வலிந்தழைத்தும் தாம் முறையாகக் கற்றுத் தெளியாத புல்லிய சொற்களைப் பன்னிப் பன்னிப் பேசும் இயல்பு பற்றிக் கரைந்து என்றார். புல்லிய சொற்களாவன பொருட் சிறப்பற்றன.

கடுப்புற வல்லேம் யாஅம் என வலம் வரூஉம் : “யாம் வல்லமை யுடையேம்’ என வாய் நீட்டலும் குறிக்கோளின்றி ஊரைச்சுற்றி வருதலும் செருக்கு மிகுதியின் வெளிப்பாடுகளாம். கடுப்பு - செருக்கு வலம் வருதல் சுற்றித் திரிதல் என்னும் அளவாய் நின்றது.

யாஅம், வரூஉம் என்னும் அளபெடைகள் இசைநிறைத்தன வேனும் அவை நிரலே செருக்கும் வியப்பும் உணர்த்தி நிற்றல் நுண்ணிதின் உணர்க!

வெம்மார் மாக்களை...பெரிதே : கடப்பாடு உணராதும் கட்டுப்பாடு இன்றியும் பிறருழைப்பை யுறிஞ்சியும், அறிவுநலமும், பண்பாடும் நாகரிகமுமின்றியும், வீறாப்புப் பேசித் தருக்கித் திரிவார் கொடுமை வாய்ந்த கயவர்களாதலின் அவர்களை வெம்ஆர் மாக்கள் என்றார்.

மேல்'மகன்'என்றவர் ஈண்டு மாக்கள் என்றது. அத்தகையோர் தொகை மிகுதிபற்றி என்க! அவ் இழிதகையாளரை நம்மவர்கள் என்றாலும் அவர்கட்குச் சிறப்பாய் அமைதலின் விதந்து என்றார்.

மொழியுரிமையானும் இனச்சார்பு நிலச்சார்புகளானும் அவர்களை நம்மவர்கள் என்றல் எளிதில் தவிர்க்கவியலாமையின் நாணுகம் பெரிதே என்று மீண்டும் கூறினார்.

இப்பாடல் பொதுவியல் திணையும் முதுமொழிக் காஞ்சித் துறையுமாம்.