நூறாசிரியம்/என்றும் வாழுநர்
7 என்றும் வாழுநர்
நாடு பலவாக; மொழி பலவாக!
ஆடமை கொடியின் அரசு பலவாக!
மாணும் ஒழுகினும் மக்கள் பலராக!
எத்திசை என்னோ ராயினு மத்திசைப்
புலனும் உளமும் பூண்டா ராகி,
5
நிலத்துயிர்க் கெல்லா மளியி னிரங்கிப்
புலத்துறுப் புய்க்குஞ் சான்றவ ருளரே!
வெம்மை மாக்களும் வினையழி வாரும்
மும்மையு முளரவர் உய்யல் வேண்டிப்
பன்னூல் துவன்று பாதை தெரித்தல்
10
மெய்ந்நூல் நின்ற மேலோர் பாடே!
ஊருணி மருங்கிற் பல்லதர் வகுத்து
நீருண வருஉம் வேட்கை யோர்க்கு
நின்றது தணிப்பதக் கடனே!
என்றும் வாழுந ரித்திகை வோரே!
பொழிப்பு:
இவ்வுலகத்து நாடுகள் பலவாகும்; ஆங்காங்கு வழங்கும் மொழிகளும் பலவாகும்; அவற்றை ஆளும், ஆடுகின்றதும், அமைகின்றது மான அறுவை இலச்சினையாகிய கொடிகள் சான்ற அரச அமைப்புகளும் பலவாகும். அவ்வமைப்புகளுக்கடங்கிப், பெருமை மிக்க நாகரிகத்தும் பலராவர். இவ்வழி, எவ்விடத்தாராயினும், எம்மக்கட் பிரிவினராயினும், அவ்வவ்வழி அறிவுணர்வும் உள்ளவுணர்வும் பூண்டவராகி, இவ்வுலகின்கண் கால்கோளும் எல்லாவகை உயிர்கட்கும் அருளால் இரங்கல் செய்து, அவ்வுயிர்கள் தாங்கிய புலன்களின் உறுப்பு விளக்கத்திற்கு அவற்றை வழிநடத்துதற்குச் சால்பு மிக்க தன்மையர் என்றும் உளராக. அவர் உளர் போலவே,அறிவானும் உளத்தானும் கொடுமை மிக்க மாந்தப் போலியரும் விலங்கு போலியரும், தாம் தாம் மேற்கொண்ட வினைகளான் அழிந்து படுவாரும் எக்காலத்தும் உளராவர்; அவ்வகையினார் தம் தம் நிலைகளினின்று உய்ந்து போதல் விரும்பி, அவர்செலும் விழி நிலைகளை முட்டறத் தெரிவிக்கும் பல்வகை நூல்களை நுவலுதல், மெய்யறிவாற்
கண்டுணர்ந்து அடங்கி நின்ற மேலோராகிய அவர் வினை ஆகும். ஊர் மக்கள் உண்ணுதற்குதவும் நீர்நிலைப் புறத்து, வரவும் போகவுமாகப் பல வழிகளையும் அமைத்துக் கொள்ளும் நீர் வேட்கை மிகுந்த மக்கள் போல், அறிவு வேட்கை மிக்கு வருவார்க்கு அது தணிவித்துப் போக்குவிப்பது அவர் மேற்கொண்ட வினையின் கடப்பாடு ஆகும்.அத்தகைமை சான்றவரே இவ்வுலகத்து என்றென்றும் உடலாலும் உணர்வாலும் வாழ்ந்து வருகின்ற தன்மையோர் ஆவர்.
விரிப்பு:
- இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.
அறிவுப் புலன் உழுது, வித்தி, விளைவித்துத் தானும் உண்டு, ஏனையோரையும் உண்பிக்கும் சான்றவர், இவ்வுலகத்து எந்நிலத்தும், எம் மக்கள் தொகுதியிலும், எவ்வகை ஆட்சியின் கீழிருந்தும், கடமையாற்றுந் தகைமையையும், அவர்தம் மெய்யானும், மெய்ந்நூலானும் என்றென்றும் வாழும் வகைமையையும் விளக்கிக் காட்ட வெழுந்ததிப்பாட்டு.
பொண்மையும் போன்மையும் மிக்க உலகத்துச் சான்றவர் தோற்றமும் இருப்பும் கடப்பாட்டால் உணரப்பெறும் ஆகையான், அவர்தம் கடப்பாடு யாதென்று உணர்த்தக் கூறியது இப்பாட்டு.
- பொண்மை- பொய்மை, போன்மை போலிமை.
மக்களால் நாடுதல் பெறும் தன்மையாகலின் நாடு எனப்பட்டது. அது நலத்தானும் வளத்தானும் இயல்பாகித் தன்னை நாடுதல் செய்விக்கும் நிலம் தன்னைச் சார்ந்தார் வேறு நலனும் வளனும் நாடாமல் நிற்கத் தன்னை வளப்படுத்திக் கொள்வது நாடு என்பர் வள்ளுவர். நாடு என்ப நாடா வளத்தன. நாடு - தொழிலாகு பெயர்.
பலவாக -பலவாகுக. நாடுகள் பலவாயினமையின் மொழிகளும் பலவாயின. பலமொழிகள் உள்ளடங்கிய நாடும், பல நாடுகள் உள்ளடங்கிய மொழியும் உளவாம் என்க. தெலுங்கு மலையாளம், கன்னடம், துளுவம், உருது, மராட்டியம், பிரஞ்சியம் முதலிய பல மொழிகள் உள்ளடங்கிய நாடு தமிழகம். இங்கிலாந்து, அமெரிக்கா, ஆத்திரேலியா, இந்தியா, இலங்கை முதலிய பல நாடுகள் உள்ளடங்கிய மொழி ஆங்கிலம்.
ஆடமை கொடி - ஆடு கொடி அமைகொடி என இரு தொகையாகக் கொண்டு, அரசு ஒச்சுதல் காலத்து ஆடு கொடியாகவும், அரசு ஒழிதல் காலத்து அமைந்த கொடியாகவும் பொருள் கொள்க. ஒரு கொடியின் இவ்விரு நிலைக்கு இடைப்பட்ட காலமே ஓர் அரசுக் காலம். அக்காலம் பலவாகுக என்பதாம்.
மாண்-பெருமை, சிறப்பு, மாணும்- சிறப்பினும், மக்கட் சிறப்பு நாகரிகம் என்க
ஒழுகு - ஒழுக்கம், மக்கள் ஒழுக்கம் பண்பாடு என்க. ஒழுகினும் ஒழுக்கத்தானும் - சொற்சிறப்பு முற்கூறப்பட்டது.
மக்கள் பலர் ஆக - அவ்வக்கால் பெற்ற நடைமுறைப் புறப்பாடு ஆகிய நாகரிகத்தானும், வழிவழிப்பெற்ற அகப்பாடு ஆகிய பண்பாட்டானும் மக்கள் பல பிரிவுகட்கு உட்பட்டவராவர். முந்நூற்றாண்டுக் கால புழக்கத்தில் ஆங்கிலரொடு புற நாகரிகத்தான் ஒன்று படினும், அகப் பண்பாட்டான் தமிழர் வேறுபடுதல் காண்க.
நிலத்தானும், மொழியானும், ஆட்சியானும், நாகரிகத்தானும், பண்பாட்டானும் மக்கள் பல்வேறு வகைப்பட்டவராவர். நிலத்தொடு மொழியும், மொழியொடு ஆட்சியும், ஆட்சியொடு நாகரிகமும் நாகரிகத்தொடு பண்பாடும் தொடர்புடையனவாகும். இவற்றுள், முன்னவை தழையத் தழையும் பின்னவை. முன்னவை குலையக் குலையும் பின்னவை.
இனி, ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு வளம் இருத்தல் உண்மையின், ஒவ்வொரு நிலத்துக்கும் ஒவ்வொரு மொழி உண்டாம். அவ்வவ்வெல்லை தடவும் மொழி தூய்மை மிக்கிருத்தலும், அவ்வவ்வெல்லைக் கடவும் மொழித் தூய்மை மிக்கழிதலும் இயல்பு. நெல்லைத் தமிழ் கேரளத்தும், ஆந்திரத் தெலுங்கு சென்னையினும் மிக்கழிதல் காண்க.
இவை போன்றே ஆட்சி, நாகரிகம், பண்பாடு முதலியவை ஒன்றொடு ஒன்று முட்டித் திரிந்து வேறாதல் இயல்பாம். இவை எல்லாமும் எத்திரிபுறினும், சான்றாண்மை எந்நிலத்தும், எக்காலத்தும், எம்மொழிக் கூட்டத்தும், எவ்வாட்சிக் காலத்தும், எவர் நாகரிகத்தும், எப் பண்பாட்டிடையினும் திரிபுறாது நிற்றல் தன்மையை விளக்கவே இத்திரிபுகள் வலியுறுத்தப்பட்டன.
எத்திசை - எம்மருங்கு
திசை, திக்கு தூய தமிழ்ச் சொற்களே
திசையச் செய்தலின் திசையாயிற்று.
திக்கச் செய்தலின் திக்கு ஆயிற்று
திசைதல் திக்கல் -தடுமாறல், மயங்கல். வழி புலப்படாத்தன்மை. திக்கு என்ற தென் சொல்லை தாம் கொண்டு, வடசொல் என்று வழக்கழித்து இழிவழக்காடுவர் ஆரியர்.
திகைதல் - திசைத்தல் ஒரு பொருட் பல சொற்கள்.
என்னோர் ஆயினும் எத்திறத்தோர் ஆயினும் இன்ன நாட்டினர், மொழியினர், கொடியினர், அரசினர், மாணினர், ஒழுகினர் என வரையறை தவிர்ந்த திறத்தோர்.
புலனும் உள்ளமும் -அறிவுணர்வும், உள்ளவுணர்வும் அறிவுணர்வு ஐம்பொறிகளால் தனித்தனி அறியும் ஐம்புலன் உணர்வு. உள்ள உணர்வு - இவ்வைம்புலன் உணர்வும் முதிர்ந்து ஒன்று கூடிய விடத்துத் தோன்றும் மெய்யுணர்வு. ஐந்தும் ஒரே காலத்து, ஒரே அளவின், ஒரே படித்தாய்ப் பொருந்தாவாகலின் அவை மாறி மாறியும், குறைந்தும் கூடியும் பொருந்தும் தன்மை நோக்கி உள்ள உணர்வும் வேறுபட்டு விளங்கும் என்க. இவ் வைம்புலனறிவும் நிலத்தானும், மொழியானும், ஆளுமையாலும் தொடக்கத்தே வேறுபட்டு நிற்பினும், முடிவே இவ்வுலகத்துள்ள எல்லா உயிர்கட்கும் ஒன்றுபட்டு உள்வாங்கும் தன்மையது. நம் வாயால் இட்ட ஒலி, நம் காதால் கதுவப் படுதல் போல், ஒரு பொறியால் எறியப்பட்ட உணர்வு இன்னொரு பொறியால் அறியப்படுதல் நிகழும். அதுபோலவே ஐம்புலனறிவும் ஒன்றுபட்டு உள்ளவுணர்வால் உள்வாங்கப்படும். அக்கால் உள்ளம் நுண்மை எய்தும். அந்நுண்மை சுரக்கச் சுரக்கப் புலன் உணர்வு வறக்கும். புலனுணர்வு வறளவே பொறி செத்துக் காயும். அதன்பின் எதிரேறிப் பாய்ந்த உணர்வெல்லாம் உளவூற்றினின்று பொறி புலன்கள் வழி எதிரிறங்கிச் சாயும் . அக்கால் பொறிகள் வழிக் கொள்ளப்படும் அறிவு ஒன்றுமில்லை. தள்ளப்படும் அறிவே மிகுதி என்க.
கையிறைவையுள் (Boring Pump) தொடக்கத்து ஊற்றப்படும் நீர், உள்நீர் மேலேறி வரத் துணை நிற்றலும், பின் ஊற்று நீர் தொடர்ந்து இறைவை வழி வெளியேறுதலும் போல்வன பொறிகள் உள்வாங்கிய புலனுணர்வும் (தொடக்கத்து ஊற்றும் நீர்) பின் அவை வழி, உள்ளம் வெளியேற்றும் மெய்யுணர்வும் (பின்வரும் ஊற்று நீர்) என்றறிக.
முதற்கண் புலனறிவு மிகுத்தே உள்ளவுணர்வு மிகுமாகலின் புலனும் உள்ளமும் எனலாயிற்று.
பூணுதல் - பூட்டப் பெறுதல்
(பூணப்பெறுதல் பூணும், அணியப் பெறுதல் அணியும் ஆகும்.அணிதல் அடிக்கடி கழற்றப் பெறுமாறு ஒன்றை உறுப்பிற் கொளுவித்தல், பூணுதல் என்றும் கழற்றப் பெறாவாறு ஒன்றை உறுப்பிற் கொளுவித்தல்,
ஆடை, வளை, முடி, மாலை, குப்பாயம், காலுறை முதலியன அணிவிப்பன.
கடகம், தோடு, மங்கல நாண், மணம், புகழ் முதலியன பூணுவன.
'மங்கல நாண் அணிதல்' எனல் பிழையான வழக்கு
'மங்கல நாண் பூணுதல்' என்பதே தமிழ்ப் பண்பு வழக்கு: அது கழற்றுதற்குரியதல்லதாகலின்)
புலனும் உளமும் பூண்டார். புலனறிவும், உள்ள உணர்வும் நிலை நிற்கப் பெற்றார்.
நிலத்து உயிர்க்கு நிலத்தின்கண் வெளிப்போந்த உயிர் யாவினுக்கும். மாந்தர்க்குமட்டுமின்றி, விலங்குகளுக்கும் சான்றோரே வழிகாட்டியா கலின்.
அளியின் இரங்கி - அருளால் இரங்கி. அருளல்-அன்பால் முதிர்தல். அறிந்தவிடத்துச் செலுத்தல் அன்பு அறியாவிடத்தும் செலுத்துதல் அருள். அறியாவிடத்துச் செலுத்தப்படும் அருள், பின் அறிந்தவிடத்து அன்பாகக் குறுகுமோ என்பார்க்கு, அஃதன்று; அன்பிற்குரியர் தொடக்கத்து அறியாரேயாயினும் அவர்பால் முற்செலுத்துதல் அருளன்று: கண்ணோட்டம் என்க. மேலும் அறியாவிடம் முகநோக்கில்லா இடம் மட்டும் அன்று அறியாமை மிக்க விடமுமாம் எனக் கொள்க.
புலத்துறுப்பு உய்க்கும் சான்றவர் - ஐம்புலவுணர்வினை மெய்யுணர்விற் படுத்தும் சால்பு மிக்கவர். உளர்-உளராக, சாலுதல்-நிறைதல் தன்மை அன்பு, நாண், ஒப்புரவு, கண்ணோட்டம், வாய்மை என்பன போலும் மீமிசை மாந்தத் தன்மைகள் நலியாது பொருந்தி நிறைதல்.
வெம்மை மாக்கள் -கொடுமை நிறைந்த விலங்கின் தன்மையர், வெம்மைகொடுமை, கொடுமை-வளைதல் தன்மை, வெம்மை(சூடு) பட்டது கோடும் (வளையும்) ஆகலின் வெம்மைக் கருத்தினின்று கொடுமைக் கருத்து தோன்றியது. மாந்த நிலையினின்று கோணிய தன்மை நிறைந்த மாந்தப் போலிகள் புலனறிவை உள்வாங்கி, அகத்தறிவை வெளிக்கொணராது, புலனறிவைப் புறஞ்சிதர்ந்து, அகத்தறிவை உட்புதைக்கும் அறியாமை மிக்கவர். ஏதங்கொண்டு ஊதியம் போக விடும் பேதையர் இவர்.
வினையழிவார்- இவர் பேதைமை நீங்கினும் வழிமாறியவர். ஓதியுணர்ந்தும் பிறர்க்குரைத்தும் தானடங்காப் பேதையர் தம் அகமுனைப்பாலும், புறமுனைப்பாலும் தத்தமக்குற்ற வினைப்பாடுகளில் அழிந்து படும் தன்மையர்.
மும்மையும் உளர்- மூன்று காலத்தும் உளராவர். தீமை அன்றன்று தோன்றி, விளங்கி, அழிதலுறும். நன்மை அன்றன்று தோன்றி, விளங்கி நிலைநிற்கும். தீமை மக்கட்கு இறங்குபடியும் நன்மை ஏறுபடியும் ஆகும். வாழ்நிலைப் படிகளுள் எதிரெதிராக வந்து கொண்டிருக்கும் தியோரும் நல்லோரும் தத்தமக்குற்ற நல்லோராலும் தியோராலும், ஆட்கொள்ளப் பட்டும் ஆட்கொளுவிக்கப்பட்டும் உய்கின்றனர். இனி, நன்மையும் தீமையும், உண்மையும் பொய்மையும், ஒளியும் இருளும் போல் ஒருமையின் அகப்புறமான இருமை நிலைகள். இவ்விரு படித்தான நிலைகளில் இருளினின்று ஒளிக்கு நடப்பதே வாழ்வாகும்.நடப்பு பின்னோக்கியதாயின் உயிர் பிறப்பினின்று உய்ந்து போதல் இல்லை என்க. இவ்விரு நிலைகளின் பிறவேறாந் தன்மைகளை மெய்ந்நெறி நூற்களில் விரிவாகக் கண்டுணர்க.
உய்யல் வேண்டி -உய்தல் விரும்பி - வேண்டுதல் - விரும்புதல்.
பன்னூல் நுவன்று - அறிவும், உளமும் புலப்படும் படியான பலவகை நூல்களில் எடுத்துக்கூறி, நுவலல் நூல்வழிச் சொல்லுதல்.
பாதை தெரித்தல் - அவர் செல்லும் அறவழிகளைத் தெளியக் கூறுதல்,
மெய்ந்நூல் நின்ற மேலோர் பாடு - மெய்ம்மையான நூற்களைக் கற்று, உணர்ந்து, அடங்கி நின்ற சான்றோர் வினைப்பாடு, படுதல்பாடு, படுதல்அழுந்துதல்-அழுந்தி அறிந்த அறிவைச் செயற்படுத்தல்.
ஊருணி மருங்கில்.அதுதணிப்பது அக் கடனே! ஊரால் உண்ணப்படுகின்ற நீர் நிலைக்குப் பல வழிகளையும் வகுத்துக் கொண்டு வரும் நீர் வேட்கை உடையவர்போல், அறிவு வேட்கை கொண்டு வருவோர்க்கு அறப்புனல் அருந்தக் கொடுப்பது அச்சான்றோரின் கடன்.
நீர்வேட்கை உடலது; அறவேட்கை உயிரது. உடல் கனலால் காய்ச்சப் பெறின் நீர்வேட்கை மிகும். உயிர் மறவுணர்வால் காய்ச்சப்பெறின் அறவுணர்வு வேட்கை மிகும். அறவுணர்வு-மெய்யறிவுணர்வின் பருநிலை.
இத்தகைவோரே என்றும் வாழுநர் என்று கூட்டுக.
இது, மெய்யறிவு வேட்கையினையும் அவ்வேட்கை தணிக்கும் சான்றோர் இத்தகைமையினார் என்பதையும், அவர் வாழும் நாடும். பேசும் மொழியும், ஏந்தும் கொடியும், பேணும் அரசும், கொளுவும் நாகரிகமும், தழுவும் பண்பாடும், தோன்றும் மன்பதையும் எத்தன்மையுடையவாயிருப்பினும், அவர் தாம் பிறருக்கு மெய்யறிவு கொளுத்தி உய்வித்தலையே தம் கடமையாகக் கொண்டிருத்தலையும், அதன் பொருட்டே அவர் முக்காலத்தும் வாழும் தகைமை பெற்றிருப்பதையும் எடுத்துக் கூறவந்த பாடலாகும்.
இது, பொதுவியல் என்திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.