நூறாசிரியம்/வலிதே காலம்!

8 வலிதே காலம்


வலிதே காலம்; வியப்பல் யாமே!!
முலைமுகம் பதிய மாந்திப் பாஅல்
ஒழுக வாய்வாங்கி "ஊ, ஆய்” எனவுமிழ்ந்து
தந்தை கழிநகை பெறக்காட்டி, யிழிந்து
குறுநடந்தும் ஒடியும் முதுகிவர்ந் தோச்சியும் 5
நெருநல் ஒவத்து நினைவழி யாமே,
பார்த்த மேனி படர நடைநெற்றி
ஆடு சிறுகால் அதைந்துர மேற
மெலிந்த புன்மார்பு பொலிந்து வலியக்
குரல்புலர்ந்தே அணல்தாவ 10
உளைபொதிந்து கழுத்தடர
வளைமாதர் மனமிதிப்பத்
திமிர்ந்தெழுந்து நின்றாற்குப்
பணைந்தெழுந்த இணைநகிலம்
குறுநுசுப்புப் பேரல்குல் 15
வாலெயிற்றுக் கழைதோளி
முனையொருநாள் வரைக்கொண்டு
மனைதனி வைக்கயெஞ் சிறுமகன் தானும்
பெறல்தந்த பெருமகன் உவக்காண்,
திறல்நந்த யாங்கிவன் தேடிக் கொண்டதே! 20


பொழிப்பு:

வலிவுடையது காலம்; வியப்புறுவேம் யாம்! தாயிடத்து முலையின் மிசை குழவியின் முகம் முற்றும் பதியும்படி பாலை வயிறு முட்ட அருந்தி, அஃது ஒழுகிக் கொண்டிருக்கும்படி தன் வாயை மீட்டு வெளியெடுத்து, “ஊ"ஆய்’ என உமிழ்ந்து தன் தந்தை பெருநகை செய்யுமாறு காட்டி எம் மடியினின்று இறங்கிக் குறுகிய அடிகள் சார்ந்த நடையிட்டும், சிலபொழுது ஓடியும், சிலகால் தன் தந்தையின் முதுகின் மிசையேறி அவரைக்குதிரையாக எண்ணி ஓச்சியும் நின்ற, நேற்றைய பொழுதின் ஓவியமெனப் பதிந்த என் நினைவுகள் அழியாமல் நிற்கவும், யாம் பார்த்து மகிழ்வுற்றே மேனி படர்ந்து பொலியவும், நடைதடுமாறி ஆடி நின்ற சிறிய கால்கள் விம்மிப் புடைத்து உரமேறி நிற்கவும், மெலிந்து நின்ற சிறிய மார்பு அழகுபெற, வலிவுபெற்று நிற்பவும், குரல் தடிப்பவும், முகவாயினும் தாடையினும் அடர்ந்த மீசையும் தாடியும் தாவி நிற்பவும், தலைமயிர் அடர்ந்து வளர்ந்து கழுத்தை அளாவி நிற்பவும், உடல்கட்டு மிகுநது வளர்ச்சியுற்று நிற்கவும் செய்தானுக்குப், பருத்து விம்மி இணைந்து நின்ற முலைகளும், குறுகி யொடுங்கிய இடையும், அகன்ற இடைக்கீழ்க் கடிதடமும், வெள்ளிய எயிறும், மூங்கில் போன்ற தோள்களும் கொண்டாள் ஒருத்தியை, முன்னைய ஒரு நாள் மனங்கொண்டு, தனி மனையில் வதியும்படி வைக்க, எஞ்சிறு மகனாகிய அவன் தானும் பெற்றுத் தந்த பெருமை பொருந்திய தன் மகனை உதோ, இவண் காண்! தனக்குற்ற திறமை நிறையும்படி இவன் அவ்வாற்றலைத் தேடிக் கொண்டது யாங்ஙன்?

விரிப்பு :

இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது.

தன் மகனின் குழவிப் பருவத்தையும், அவன் விரைந்து வளர்ந்து இளைஞனாகி மணம் புரிந்து ஈண்டொரு மகனுக்குத் தந்தையாகி நின்ற காலத்தையும் கண்ட தாய் ஒருத்தி, அவன் இத்திறம் பெற்றது எங்ஙனோ என வியந்து கூறியதாக அமைந்ததிப் பாட்டு.

இவனை விரைந்து இம்மாற்றத்திற்குரியனாக்கிய காலம் எத்துணை வலிமையுடையது எனக் கூறுவான் வேண்டி, வலிதே காலம் என்றாள். வலிது-வன்மையுடையது. குழவியை இளவோனாகவும், இளவோனை முதுவோனாகவும், முதுவோனை மூப்போனாகவும் செய்கின்ற ஆற்றல் பொருந்தியது காலம், இனிக், குழவியைக் குமரனாக்கி , ஒரு குழவிக்கும் தந்தையாக்கிய காலம், தன்னையும் கிழவியாக்கியதைத் தாய் தன் மகன். வழிக் காண்பாளாயினாள். எனினும் 'தன்கண் என்றும் தனக்கின்மை'என்றபடி, தன் மாற்றத்தை வியவாது தன் மகனின் மாற்றத்தைக் கண்டு வியந்தாள் என்க.

வியப்பல் யாமே என்றது, தன் கணவனையும் உள்ளடக்கிய கூற்று. கணவனினும் தானே அவனை ஊட்டியும் தூக்கியும், உடுத்தும், உறங்குவித்தும், பல்வகையிற் சீர் ஆட்டியும், அணுகியும் மகனைக் கண்டவளாகையால், தாய் தன் மகன் வளர்ச்சியைக் காலம் செய்த மாற்றம் என்றும், அது வியத்தற்குரியது என்றும் கூறுவதற்கு மிகவும் உரிமையோளானாள்.

இனி, தன் மகன் குழவிப் பருவத்திலிருந்து மணம் செய்விக்கும் வரை, தாய் அவனிடத்துப் பல்வகை மாற்றங்களையும் படிப்படியாகக் கண்டாளேனும், அம்மாற்றங்கள் யாவும் அவனை அவளுக்கு இளவோனாகவே காட்டியமையால், அவள் அக்காலத்தை அன்றன்று வியவாமல், ஈண்டு அவன் பிறிதோர் உயிரைப் படைத்தற்குரிய திறம்பெற்ற அளவிலேயே, அவனை முழு ஆடவனாகச் செய்த காலத்தையே மிகவும் வியந்தாள் என்க,

இனி, தன் மகன் பெற்ற பிள்ளையைக் கண்ட அளவிலேயே தாய், அவனைத் தான் பிள்ளையாகப் பெற்றெடுத்த பொழுதையும், அப்பிள்ளை வளர்ந்து வந்த நிலையினையும் நினைவு கூர்ந்து இதனை உரைப்பாளாயினள் என்க.

தன் மகன் குழவிக் காலத்தை நினைவு கூர்வாள், முதற் கண் அவன் தன்னிடத்துப் பாலருந்திய காட்சியையே தன் அகக்கண் வழிக் கண்டாளாகையால், அதனையே தலையெடுத்துக் கூறுவாள் 'முலை முகம் பதிய மாந்தி' என்றாள். தன் முலையின் மிசை குழவியின் முகம் முற்றும் பதியும்படி பால் மாந்திய அக்காட்சி அவள் மறவாத பசுமைக் காட்சியன்றோ.

மாந்துதல் - வேட்கை தீர அருந்துதல்வயிறு முட்ட அருந்துதல் அவ்வாறு அருந்தியமையால், அக்குழவி பாலை 'ஆய்' என உமிழ்ந்தது என்க

பாஅல் ஒழுக வாய் வாங்கி - குடித்த கடைசி வாய்ப்பாலை விழுங்காது அது கடைவாயில் ஒழுகிக் கொண்டிருக்கும்படி தன் வாயை முலைக் காம்பினின்று எடுத்து.

இனி, முலை சுரக்கப் பால் குடித்த குழவி தாயின் முலைக்காம் பினின்று பால் தர்னே ஒழுகும்படி தன்வாயினை எடுத்துக் கொண்டது என்றும் கொள்க.

ஊ, ஆய் என உமிழ்ந்தது-"ஊ" இழிவுக் குறிப்பும் "ஆய்" அருந்தற்காகாத இழிபொருள் இடக்கரடக்கலாகக் கூறப்படுவதும். குழவியின் மழலை மொழி, வயிறு நிரம்பும் வரை பாலாக விருந்து நிரம்பிய பின் 'ஆய்' என இறுதி வாய்ப் பாலை உமிழ்ந்து காட்டியது என்க.

தந்தை கழிநகை பெறக் காட்டியது- அமிழ்தாகிய பாலை வயிறு புடைக்க மாந்தியதும் 'ஊ' 'ஆய்’ எனக் குழந்தை உமிழ்ந்து காட்டத் தந்தை உவகையால் மிகச்சிரித்தார் என்றபடி, தந்தை பெரிதாக நகைக்கும்படி 'ஊ' 'ஆய்' என உமிழ்ந்து காட்டி என்று கூட்டுக.

இழிந்து- இறங்கி மடியின் மேலமர்ந்து பாலருந்திய பின் ஊ ஆய் என உமிழ்ந்து தாயின் மடிவிட்டு இறங்கி என்றபடி

குறுநடந்தும் ஒடியும் முதுகு இவர்ந்து ஒக்கியும் இறங்கிய குழந்தை குறுகுறுவென நடந்ததும், பின் ஒடுதல் செய்ததும், தன்தந்தையின் முதுகின் மேல் ஏறி அவனைக் குதிரையாக எண்ணி ஓட்டுதல் செய்ததும், குழவி பாலருந்துங்காலத்துத்தந்தை அருகிருந்ததும்.அவனிடம் பாலை உமிழ்ந்து காட்டி அவனைக் குதிரை இவர்ந்ததும்.இவள் உள்ளத்தில் ஓவியமாகப் பதிந்து நினைவில் நிற்கின்ற வாகையால், நெருநல் ஒவத்து நினைவு என்றாள். நெருநல்-முன்நாள். நேற்று. இக்காட்சி நெடுங்காலத்திற்கு முந்தியதாயினும் நேற்று நடந்ததுபோல் அவள் உள்ளத்து அழியாமல் நின்றது என்றபடி

அழியாமே- அழியாமல் நிற்க,

பார்த்த மேனி படர - தான் பார்த்துக் கொண்டிருக்கவே மேனி படர்ந்து நிற்க, படர்தல்- பரந்து வளர்தல்

நடை நெற்றி ஆடு சிறு கால் அதைந்து உரமேற - நடையானது தள்ளாடும்படி ஆடி அசைந்த அக்குழவியின் சிறிய கால்கள் பருத்து வலிமை மிகுந்தது என்றபடி

நெற்றுதல் - நடை தவறுதல், அதைத்தல் - பருத்தல்.

மெலிந்த புன்மார்பு பொலிந்து வலிய - மெலிவான இளமார்பகம் அழகு பெற்று வலிவெய்த

குரல் புலர்ந்து -சிறு பருவத்திலிருந்த மென்குரல், தடிப்பேறி வலிவு பெற்றது என்றபடி, புலர்தல் அவிழ்தல், மலர்தல், கட்டு நீங்குதல்.

அனல் தாவல் - முகத்துக் கண் குறுமயிர் அரும்பி, தாடியும் மீசையும் அடர்ந்து வளர்தல்.

உளை- ஆண் தலைமயிர்-பிடரிமயிர் பொதிதல்- நிறைந்து விளங்குதல்.

கழுத்து அடர - பின் கழுத்துப் பகுதியை அளாவி நிற்ப.

மேனி பரந்து வளர்தலும், தள்ளாடிக் கொண்டிருந்த கால்கள் பருத்து, வலிந்து உரம் பெறுதலும், மென்மையான மார்பகம் அழகு பெறும்படி வன்மையுறுதலும், மென் குரல் கட்டு நீங்கி உடைந்து பெருமித முறுதலும், முகத்துக்கண் குறுமயிர் திரளுதலும், தலைமயிர் அடர்ந்து பெருகிப் பின்கழுத்தை அளாவி நிற்றலும் ஆண் மகன் பருவ முறுதலுக்கான அறிகுறிகளாகையால், தாய் இம்மாறுதல்களைத் தன் மகனிடத்தில் படிப்படியாகக் கண்டு, தன் மகனை இவ்வளவு மாற்றத்திற்கும் உள்ளடக்கிய காலத்தை வலிது என்று வியந்தனள் என்றபடி

முலை முகம் பதியப் பாலருந்திய குழவியை இளையோனாக்கிய காலம் அவன் பால் இன்னும் சில மாற்றங்களையும் செய்யக் கருவியாக விருந்ததை அவள் மேலும் கூறுவாள். தன் மகன் முழு அளவில் இளையோனாகிய பின், அவன் தோற்றம், காதல் மணம் கொண்ட கன்னியர் தம் நெஞ்சங்களை மிதித்துத் துன்புறுத்தும்படி இருந்தது என்றும் கண்டாள் எனவே வளைமாதர் மனம் மிதிப்பத் திமிர்ந்து எழுந்து நின்றான் என்றாள். வளையல்கள் அணிந்த காதன் மிக்கக் கழியிளமைக் கன்னியரின் மனநினைவுகளை யெல்லாம் மிதித்துத் துயர்தரும்படி, உடல் பருவத்திரட்சியுற்று எழுந்து நின்றான் என்றபடி

மாதம் - காதல் உள்ளம் கொண்ட இளம் பெண்டிர்.

மாதர் காதல் (தொல்-உரி-30) (இது தூய தனித் தமிழ்ச் சொல். இதனை 'மாதா' எனும் வட சொல்லினின்று வந்ததென அறியார் கூறுவர். மாதா எனும் வட சொற்குத் 'தாய்’' என்பது பொருள். ஆனால் தமிழில் 'மாதர்’ என்ற சொல் அழகு, இளமை, காதல் என்று பொருள் பெற்று, அவ்வழகும் இளமையும், காதலும் உடைய பருவப் பெண்டிரை மட்டுமே குறிக்கும் உயர் தனிச்சொல். தமிழ்மொழிச் செழுமையும், வளப்பமும் ஆற்றலும் அறியாப் பேதையோர் சிலர் ஆரியப் போலிப் பொய்யுரைக்கு அடிதாங்கி இழிவழக்காடுதற்குத் தமிழ் மக்கள் விழிப்புற்றிருக்க முது பெண்டிர் பழந் தமிழ் நூல் வழக்கில் மாதர் என்ற பெயரால் குறிக்கப் படுவதிலர் ஒலி நூலும், சொன்னூலும், மொழி நூலும் அறியா வல்லடி வழக்கார் சிலர்தம் சொல்லாடல்களுக்குத் தமிழர் செவி மயங்காதிருக்க)

மனமிதித்தல் - பிறநினைவழித்துத் தன் நினைவழுத்தித் துன்புறுத்தல். இளையோனாக வளர்ந்து காதன் மாதர் தம் மனங்களைத் துன்புறுத்தி நின்றானுக்கு மணம் செய்வித்த நிகழ்ச்சியை இனிக்கூறுவான் தொடங்கினள் என்க.

பனைத்தெழுந்த இனை நகிலம் - புடைத்த விம்மி நெருங்கி வளர்ந்த கொங்கைகள்.

குறு நுகப்பு - ஒடுங்கிய இடை.

வால் எயிறு - வெண்மையும், கூர்மையும் கொண்ட பல் வரிசை.

கழை தோளி- மூங்கில் கழை போன்ற பசுமையும் இளமையும் ஒளியும் பொருந்திய தோளையுடைய பெண்.

முனையொரு நாள்- முன்னொரு நாள்.

வரைக் கொண்டு - மனங்கொண்டு. வரைதல் - மணத்தல். வரை எனுஞ் சொல் நெறி எனும் பொருள் பட்டு, உலக நெறியாகிய திருமணத்தைக் குறிக்கும்.

மனை தனி வைக்க -தனி மனையில் வாழும்படிச் செய்ய.

இளைஞனாகி நின்ற தன் மகனுக்கு அழகும், இளமையும், தகுதியும் சான்ற இளம் பெண் ஒருத்தியை மனங்கொண்டு, அவரிருவரையும் தனி மனையில் வைக்க என்றபடி.

எம் சிறுமகன் - எம்முடைய சிறியோனாகிய மகன் பெற்றத் தாய்க்கு தம்மகன் என்றும் இளையோனாகவே படுவானாகையால் சிறு மகன் என்றாள்.

பிள்ளையைப் பெறுவிக்காப் பருவம் வாய்ந்தோன் என்று தான் கருதியிருப்ப, அவன் தானும் ஒரு பிள்ளையைப் பெறுவித்துக் கொண்டானே என்ற வியப்புத் தோன்ற அவனைச் சிறுமகன் என்றாள்.

இனி, மணஞ் செய்வித்த மறு ஆண்டே அவன் பிள்ளை பெறுவித்த காதன் மேம்பாடும் இளமைக் குறும்பும் தோன்றும்படி அவனைச் சிறுமை பொருந்தியவன் என்று குறிக்க வேண்டி, சிறுமகன் என்றும் கூறினாள் என்க.

சிறுமை - சிறு பருவத்திற்கியல்பாய துடுக்குத் தன்மை.

பெறல் தந்த பெருமகன் - பெற்றுத் தந்த பெருமை பொருந்திய மகன். தன் மகன் தனக்குச் சிறு மகனாகவும் அவன் பெறுவித்த மகன் பெருமகனாகவும் படுவதில், தாய் கொண்ட தாய்மையன்பிற்கும் பெருமிதத்திற்கும் இயைபு கண்டு மகிழ்க

உவக் காண் - உதோ காண் இடைமைச் சுட்டு, “இவன் முலை முகம் பதிய, என்னிடத்துப் பாலை மாந்தியதும் பாலை, 'ஊ, ஆய்' என உமிழ்ந்து இவன் தந்தைக்குப் பெருநகை விளைவித்ததும், குறுநடையிட்டு நடந்ததும், கால் நெற்ற ஓடியதும், தந்தை முதுகில் ஏறியிவர்ந்து குதிரை ஒச்சியதும் எம் நினைவில் ஓவியமாகி இன்றும் பசுமையாகி நிற்கின்றன காண்; அத்தகைய குழவிப் பருவம் முதிர்ந்து இவன் உடல் மேனி படர்ந்ததும், கால் அதைந்து உரமேறியதும், மெலிந்த மார்பு பொலிந்து வலிந்ததும், குரல் புலர்ந்ததும், முகத்தே குறுமயிர் கிளர்ந்து தாவியதும், தலைமயிர் கழுத்தடர வளர்ந்ததும் ஆகிய தோற்றத்தால் கன்னி மாதர் தம் மனம் வருந்தும்படி செய்ததும், அதனால் இவனுக்குப் பனை நகிலும், சிற்றிடையும், பேரல்குலும், முகை முறுவலும், கழை தோளும் சான்ற இளமை நலமிக்காள் ஒருத்தியை மணம் புரிவித்து, அவளொடு தனி மனை கிடத்த, இவனிது காண், பெற்றுத் தந்த பெருமகனை” என்று தாய் தன் அயலாள் ஒருத்தியிடம் உவந்து கூறி, இவன் 'தந்தை ஆகிய பெருமை தாளாது', “இவன் இத்தகைய திறமையை யாண்டுத் தேடிப்பெற்றான்” என்றும், இவனை இத்திறத்துக் குள்ளாக்கிய காலம் மிக வலியது; எம்மை வியப்புறும்படி வைத்தது” என்றும் கூறினாள் என்றபடி

திறல் நந்துதல்- திறமை மிகுதல்,நிறைதல்.

யாங்கு இவன் தேடிக் கொண்டது- இவன் இத்திறமை வளர்ந்து மிகும்படி இவ்விடைக் காலத்து, இதனை யாண்டுத் தேடிக் கொண்டான் என்றபடி முலைமுகம் பதிய - தேடிக் கொண்டதே என்று கொண்டும், பின் வலிதே காலம் வியப்பல் யாமே என்று கூட்டியும் பொருள் காண்க

இது தாயொருத்தித் தன் தாய்மையுளத்தால் தன் மகன் பெற்ற பிள்ளையைக் கண்டு மகிழ்ந்து கூறிக் காலத்தை வியந்தது.

இஃது, இல்லிருந்து மனையறம் பூண்ட தன் மகன் திறமுரைத்த தாகலின் முல்லை யென் திணையும், கிளந்த தமர்வயின் நற்றாய் கிளத்தல் என் துறையுமாம்.