நூறாசிரியம்/எழுந்தனர் இவரே!

51 எழுந்தனர் இவரே!


தும்பை சூடிலர் இடைவாள் செருகிலர்:
வெண்கலை உடுத்திலர், கொல்வேல் ஏந்திலர்;
தடமுர சார்த்திலர் இடம்பொழு தமைத்திலர்!
வடம்பிணிப் பறுத்த மதக்களி றன்ன
தடம்பட நடந்த கால்கழல் பூண்டிலர்!5


வேத்தவை நுழைந்திலர் யாத்தநூல் அறிகிலர்!
பூத்த இளமுகத் தொளியுமிழ் கண்ணும்
முத்த வெய்துளி துதலுஞ் சிவப்பக்
கொள்கை பொறித்த கொடிதோள் தாங்கி
வெல்கை யொன்றே வேண்டுவோராகி 10
வானம் அதிரச் சூழ்ந்துகோள் ஆர்த்து
மானங் காத்திட எழுந்தனர் இவரே!


புன்றலை முதிரா யாக்கையி னோரே!
முகமயிர் அரும்பா இளவயி னோரே!
பால்முகம் மாறாப் பசுமையோ ராகி 15
நூல்முகம் புகூஉம் பள்ளி யோரே!


செம்புது வெள்ளம் ஒப்போ ராகித்
தம்புதுக் கொள்கை தெருத்தொறும் முழக்கி
வைகறை தொடங்கிக் கதிரொடு நடந்தே
யாமமுந் துயிலாத் தறுக னோரே! 20
மண்ணும் வேண்டிச் சூழ்ந்தனர் இலையே!
பொன்னும் விழைந்தனர் இலையே! பொருதும்
நோக்கும் அரும்பிலர், நுண்கலை பயின்றிலர்;
கருவியுங் கொண்டிலர் போர்முகம் கண்டிலர்:
சுவடியும் கோலுந் தூக்குவ தன்றிக் 25
கவடும் படையும் தாமறி கல்லார்!

படையும் மலைந்திலர் நடையுந் தளர்ந்திலர்!
இடையிடை நெகிழ்தலும் இறுதலும் இல்லார்!
விறலே அவர்தம் கோளே! விறற்கு
மறலே அவர்தாம் தூக்கிய படையே! 30
ஊண்தவிர் நோன்பொடும் உயிர்தீர் முயல்வொடும்
காண்குநர் கண்ணிர் கலுழக் காலமும்
நன்றுந் தீதும் நினையாராகி
ஒன்றும் நெஞ்சொடு சென்றனர் உவந்தே!
தொல்லோர் மரபின் அரசரும் அல்லர்; 35
வல்லோர் வழியின் துறவோர் அல்லர்;
பொருளும் இன்பும் அறத்தொடு நடந்தே
இருள்தீர் வாழ்வும் விழையா ராகி
அற்றைத் தமிழ்த்தாய்க் கிற்றை மகரென
ஒற்றைத் தனிநீள் நினைவொடு சென்றார்! 40

மூவா இளமை முதுமொழிக் கேய்ந்த
தாவாப் பெருந்துயர் தகர்ப்பா ராகி
நெய்யெரி புகுத்திய புகழோர் சிலரே!
மெய்யழி பட்ட மேலோர் சிலரே!
கடுஞ்சிறை தாங்கிய வல்லோர் சிலரே! 45
கொடுங்குறை யுறுப்பொடு நைந்தோர் சிலரே!
யாங்கன் உரைப்பவக் கொடுங்கோல் வினையே!

பூங்கண் மதிமுகப் புன்னகைச் செவ்வாய்
செந்தமிழ் வாழ்கெனச் செப்பிய உரைக்கே
ஈர்ந்தண் உலகமும் இருணிள் விசும்பும் 50
தாமுங் கொடுப்பினும் தகுநிறை வன்றே!
ஒன்றும் ஈயான் ஆகினும் ஒழிக,
கொன்றும் அடங்கிலாச் சாப்பசி கொண்டு
படையற நின்ற நடையி னோரை
விளையா நின்ற இளையோர் தம்மை 55
மலர்முகை சிதைத்துத் தழலிடற் போல
உலர்தி நெஞ்சினன் உயிர்வாங் கினனே!

ஆடல் இளமகள் நல்லுயிர் அயின்ற
கேடுறு நன்னனும் இவன்வினை நாணும்!

மொழிக்கென வெழுந்தார் இவர்பிற ரிலரே! 60
பழிக்கென நின்றோன் இவன் பிற னிலனே!
மயர்தீர் கொள்கைச் சான்றோர் அழுங்க
உயர்செந் தமிழ்க்கே உறநின் றாரை
வெய்வேட் டெஃகம் விதிர்ப்பறத் தாங்கிக்
கொய்துயிர் துணித்தது கொலையோன் கோலே! 65

புன்றலைச் சிறாஅர் செந்நீர் ஆடியோன்
முந்நிற நெடுங்கொடி முன்றிலும் சிதைக!
அன்னோன் தாங்கிய அரசுஞ் சிதைக!
முற்றா இளவுயிர் தமிழ்க்கெனப் போக்கி
வற்றா நெடும்புகழ் வழிவழிக் கொண்ட 70
இளையோர் காத்த எந்தமிழ்
கிளையுறப் பொலிக குலைவிலா தினியே!

பொழிப்பு

(1-12) போர் செய்யப் புறப்பட்டதற்கு அடையாளமான தும்பைப் பூவை இவர்கள் குடியிலர், இடையிலே கைவாள்களையும் செருகியிலர்: போர் செய்யப் போவோர் உடுத்தும் வெள்ளை உடைகளையும் உடுத்தியிலர் கொல்கின்ற வேல்களையும் ஏந்திலர், பெரிய முரசங்களை ஆர்த்திலர் போர் தொடங்குவதற்குரிய இடத்தையும் பொழுதையும் இவர்கள் அமைத்துக் கொண்டார்களில்லர். கயிற்று வடங்களைப் பிணித்த பிணிப்புகளை அறுத்துக் கொண்டு, இடங்கள் நலியுமாறு நடக்கின்ற மதங்கொண்ட களிறுகளைப் போல் இவர்கள் தம் கால்களில் வெற்றிக் கழல்களைப் பூண்டாரல்லர். இவர்கள் வேந்தரின் அவைக்குள் நுழைந்தும் இலாதவர்; போர் நுணுக்கங்களை கூறுவதற்கென யாக்கப்பெற்ற நூல்களையும் இவர்கள் அறிந்தவரல்லர் பூத்த மலர் போலும் இளமை முகங்களில் ஒளி சிந்துகின்ற கண்களும், முத்துப் போலும் அரும்பியிருக்கும் வெயர்வைத் துளிகள் சேர்ந்த நெற்றியும் சிவக்க, கொள்கை முழக்கங்களை பொறித்த கொடிகளைத் தோள்களில் தாங்கி வெற்றி யொன்றையே விரும்புவோராகி, வானம் அதிரும்படி, அனைவரும் சூழ்ந்து நின்று, கொள்கைகளை முழக்கித் தமிழ்த்தாயின் மானம் காக்கும்படி எழுந்து விட்டனர். இவர் காண்!

(13-16) இளமைத்தலை முதிராத உடம்பையுடையவர்கள் இவர்கள். முகத்தில் குறுமயிர் அருப்பம் கொள்ளாத இளமையினோர் இவர்கள். பால் நாறும் முகம் மாறாத பச்சை இளந்தையராகி, நூல்களில் முகம் பதிப்பதன் பொருட்டுப் பள்ளிக்கண் விடப்பட்டவர்கள் ஆவர். இவர்கள். (17-26) செந்நிறந் தாங்கிய புதுமழை வெள்ளத்தைப்போலும் பொங்கி யெழுந்தவராகித், தமிழ்மொழியின் மேல் தாம் வைத்த பற்றாகிய புதுமைக் கொள்கையினைத் தெருத் தோறும் முழக்கி, வைகறை தொடங்கிக் கதிரவனொடு ஏற நடந்து, இரவின் நடு யாமத்திலும் துயில் கொள்ளாத வீரவுணர்வு கொண்டவர்கள் இவர்கள். மாற்றார் நிலத்தைத் தாம் கொள்ள வேண்டி இவர்கள் ஒன்று திரண்டவர்கள் அல்லர் பொன்னையும் விரும்பினர் இல்லை; எதற்காகத் தாம் போராடவேண்டும் என்ற நோக்கமும் அரும்பாத அகவையினர்; நுண்ணிய போர்க்கலைகளைப் பயின்றில்லாதவர்கள்; கருவிகளையும் தம் வயின் கொண்டு வராதவர்கள்; போர் முகம் கண்டிராதவர்கள்; கற்கவும் எழுதவும் உள்ள சுவடிகளையும், தூவல் முதலிய எழுதுகோல்களையும் தாம் தூக்கி வரும் பழக்கத்தினரன்றிப் போர்ச் சூழ்ச்சிகளையும், கருவிகளையும் அறிந்திலாதவர்கள்.

(27-34) இவர்களைத் தடுத்து நிறுத்தும் காவலர் படையைக் கண்டும் இவர்கள் மலைப்புற்றாரிலர் முன்னேறி நடக்கும் நடையும் தளராதவர்கள்; இடையிடையில் தாம் ஒன்றிய போக்கில் நெகிழ்ச்சியும் முறிவும் இல்லாதவர்கள்! வெற்றிதான் அவர்களின் குறிக்கோள்! அவ் வெற்றி பெற வேண்டியதற்கான வீரவுணர்வே அவர்கள் தூக்கியிருக்கும் படைக்கருவி. உணவைத் தவிர்க்கின்ற நோன்பு உணர்வொடும், உயிர் கழலினும் ஊழ்க்காத முயற்சியொடும், பார்ப்பவர்களுக்குக் கண்களில் நீர் கசியும்படி, பகல், இரவு என்னும் பொழுதுகளையும் நல்லது, தீது என்னும் நிலைகளையும் நினையாதவர்களாகிக், குறிக்கோளில் பொருந்திய நெஞ்சத்தோடு மகிழ்வுடன் சென்றனர்.

(35-40) தொன்மைக் காலத்தினின்று வழி வழியாக வரும் அரசமரபினர் அல்லர் இவர்கள்; வலிமைமிகு சான்றோர் வழியாக வந்த துறவியரும் அல்லர் இவர்கள். பொருளிட்டமும், இன்ப நாட்டமும் அறம் பிழையாதவாறு நடக்கின்ற இருள்தவிர்ந்த வாழ்க்கையினையும் விரும்பாதவராகி, அன்றைய தமிழ்த்தாய்க்கு இன்று பிறந்த மக்களென, ஒன்றேயாகிய, தனித்த, நீண்ட நினைவொடு இவர்கள் சென்று கொண்டிருந்தனர்.

(41-47) மூவாததும், இளமை கொண்டதும், முதிர்ந்ததும் ஆகிய தமிழ் மொழிக்கு வந்து நேர்ந்து அழிவுறும்படி வருத்துகின்ற பெருந்துயரத்தைத் தகர்த்தெரிவதன் பொருட்டுத் தொடங்கியபோரில் தம்மை நெய்யூட்டிய எரிக்குள் புகுத்துக் கொண்டழிந்த புகழுடையோர் சிலர் உளர் உடலழிவுற்ற மேன்மையோர் சிலர் உளர். கடுமையான சிறைக்குள் அடைக்கப் பெற்ற துன்பத்தைத் தாங்கி கொண்ட வலிமையினார் சிலர் உளர். கொடுமையாகக் குறைக்கப் பெற்ற எச்ச உறுப்புகளுடன் துன்புற்று வருந்தியவர்கள் சிலர் உளர். எவ்வாறு உரைப்போம் அக் கொடுமை சான்ற அரசின் செயல்களை?

(48-57) பூப்போலும் கண்ணும், மதிபோலும் முகமும், புன்னகை செய்கின்ற சிவந்த வாயும் கொண்ட அவ் விளைஞர்கள் ‘செந்தமிழ் வாழ்க’ எனக் கொள்கை முழங்கிய உறத்துரைக்கு, ஈரமும் குளிர்ச்சியும் உடைய இவ்வுலகமும், இருள் நீண்ட விசும்பும் ஆகிய இரண்டையும் அன்பளிப்பாகக் கொடுப்பினும் அவை தகுந்த நிறைவாக இரா. ஆயினும், ஒரு பொருளும் ஈயாதவனாகினும் ஒழிக. மாந்த உயிர்களைக் கொன்றும் அடங்கிடாமல் சாவையே பசியாகக் கொண்டு, கருவிகளில்லாமல் வெறுங்கையராக நின்ற, இப் போராட்ட நடையினோரை முழுவதும் விளையாமல் நின்ற இளைய பருவத்தினர் தம்மை, மலர் மொட்டுகளைச் சிதைத்து நெருப்பிலிடுதல் போல் உலர்ந்த பொருளில் பற்றுகின்ற தீயைப் போன்ற கொடுமையுற்ற நெஞ்சையுடையவன் உயிர்களை வாங்கினான்.

(58-65) நீராடிய அன்னிமிஞிலியின் நறுவிய உயிரைத் தின்ற கேடு சான்ற நன்னன் என்னும் அரசனும், இவ்வினைக்கு நானுவான் ! தமிழ்மொழி காப்பதற்கென்றே எழுந்தவர்கள் இவர்களைத் தவிர வேறு இலர்; அது போல் பழிக்கெனவே நின்றவனும் இவனைத் தவிர, (தமிழ் வரலாற்றில்) வேறு எவனும் இலன். மயக்கம் தீர்ந்த கொள்கையையுடைய சான்றோர் வருந்தும்படி, உயர்ந்த மொழியாகிய செந்தமிழுக்குத துணையாகி நின்றவரை, கொடிய வேட்டெஃகத்தை நடுக்கமுறாது தாங்கி உயிர் கொய்து உடலைத் துண்டு செய்தது கொலையவனின் கொடுங்கோல்!

(66-72) இளந்தலைமை உடைய சிறுவர்களின் குருதியில் குளித்தவனின் மூன்று நிறப்பேராயக் கட்சிக் கொடியும் அரண்மனை முன்றிலும் சிதைத்தொழிக. அன்னவன் தாங்கிய அரசும் சிதைந்தொழிக! முற்றாத இளவுயிர்களைத் தமிழ்மொழிக்கெனவே போக்கிய வழி, வற்றாத நெடிய புகழை வழி வழியாகக் கொண்ட இளைஞர்கள் காத்த எம் தமிழ்மொழி பல கிளைகளும் மல்கிக் குலைவுகள் இலாது இனிப் பொலிந்து விளங்குக.

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

உலக வரலாற்றிலேயே மொழிக்கென வெழுந்த முதற்புரட்சியும், தமிழக மறுமலர்ச்சி வரலாற்றின் திருப்பமும் ஆகிய 1965ஆம் ஆண்டு இந்திப் போராட்டத்திற் கலந்து செந்நீர் சிந்தி, விழுப்புண் ஏற்ற தமிழ் மறவர்கட்குப் பாடியது இப் பாடல்.

தும்பை குடிலர் - போரெழுச்சிக்கு அடையாளமாகிய தும்பைப் பூவை அணியாது முனைந்த மாணவர் எழுச்சியைக் கூறியது. தும்பைப் பூவைச் சூடாது போருக்கெழுந்தனர். இவர் என்றது.

இடைவாள் செருகிலர் - தம் இடைகளில் வாள்களைச் செருகி யில்லர். மொழிப் போராகலின் கருவி தவிர்த்தலைக் கூறியது.

வெண்கலை உடுத்திலர்- போர்க்கென் றெழுவார் வெள்ளிய ஆடையை உடுத்தல் மரபு வெளிராடை அற்றைப் போர்ச் சீருடை போலும். அதனை உடுத்திலர் என்றது.

கொல் வேல் ஏந்திலர் - கொல்லும் வேலையும் ஏந்திவர்.

தடமுரசு ஆர்த்திலர் - போரின் தொடக்கம் அறிவிப்பான் வேண்டி எழுச்சி முரசும் ஆர்த்தலைச் செய்திலர்.

இடம்பொழுது அமைத்திலர் - போர் நடத்தற்குரிய இடத்தையும்,பொழுதையும் தேர்ந்து கொண்டிலர் என்பது.

வடம்பிணிப் - பூண்டிலர் - தம் கால்களில் இட்ட கயிற்று வடங்களை அறுத்துக் கொண்டு, கட்டுத் துறையினின்று வெளியேறும் மதக்களிறுகள் போல், அதர்ந்த நடை கொண்ட கால்களில் வெற்றிக்கழல் பூண்டிலர். படை மறவரல்லாத பள்ளி மாணவராகலான் அணிகள் கைதரப் பெறுதல் இலையாகலின்.

வேத்தவை-அரசரவை, வேந்தரவை வலித்தது.அரசு ஆளுமை அறியாத நிலையினர் என்றது.

யாத்த நூல் - போர் நுணுக்கங்கள் தொகுத்துக் கூறும் நூல். போர்த்திறன் பற்றி அறியாமை கூறியது.

பூத்த ---- சிவப்ப- மலர்போலும் இளமை முகம் அம்முகத்து ஒளியை உமிழ்க்கும் கண்கள். முகத்துக்கண் முத்துப் போலும் வியர்வைத்துளிகள் சார்ந்த சிவந்த துதல். இவை மாணவர்தம் இளமை நிலையையும் முயற்சி முனைப்பையுங் குறித்தன என்க.

கொள்கை பொறித்த கொடி-தமிழ் வாழ்க’ எனும் கொள்கை வரியெழுதிய கொடி

தோள் தாங்கி - தோள்களிலே சாய்த்துத் தாங்கி,

வெல்கை --- ஆகி - தமிழ் வெற்றியையும் இந்தி மொழியின் திணிப்புத் தவிர்ப்பையும் விரும்புவோராகி,

வானம்---- ஆர்த்து ஒன்று சூழ்ந்து திரண்டு, வானம் அதிரும்படி கொள்கைகளை முழக்கி.

மானம் --- இவர்- தமிழ் மானத்தையும்; தமிழர் மானத்தையும் காத்திட இவர் எழுந்தனர்.

புன்றலை - இளமைத் தலை,

முகமயிர் - முகத்து அரும்பு மீசையும் தாடை அணலும்

பால் முகம் - குழந்தைமை முகம்.

பசுமையோர் - இளமையோர்.

நூல்முகம் புகூஉம் - பொத்தகத்து முகஞ்செலுத்தும், கல்வி கற்கும்.

செய்து வெள்ளம் ஒப்போர் - செந்நிறஞ்சான்ற புதிய வெள்ளம் போல் அலைவும் அடர்வும் விரைவும் உடைய இளைஞர் கூட்டம்.

தம் புதுக்கொள்கை - 'தமிழே வேண்டும்; இந்தி வேண்டாம்' என்னும் புதுமைக் கொள்கை.

தெருத்தொறும் முழக்கி - தெருத்தொறும் வலஞ்சென்று முழக்கி,

வைகறை - தறுகனோரே - முன் காலை தொடங்கிக் கதிரவன் போக்கொடு தாமும் பகல் முழுதும் நடந்து, நள்ளிரவிலும் கண்மூடாத வீரம் மிக்கவர்.

மண்ணும் - இலையே பிறரின் ஆட்சி நிலத்தைத் தன் ஆளுமை நிலத்தொடு இணைத்துக் கொள்ளும் ஆசை இவர்களுக்கு இல்லை.

பொன்னும்--இலையே-பொன்னுக்கும் பொருளுக்கும் ஆசையில்லாதவர்.

பொருதும்--அரும்பிலர்-போராடவேண்டும் எண்ணமும் தோன்றாதவர். இயல்பான எழுச்சி கொண்டாராதலின்.

நுண்கலை - போர்க்குரிய நுண்ணிய முறைகள்.

கவடும் படையும்- போருக்கான சூழ்ச்சிகளும் கருவிகளும்

படையும் மலைந்தியர்- தம்மைத் தடுத்து நிறுத்தும் காவலர் படைக்கும் அஞ்சி மயங்கிப் பின்வாங்காதவர்.

இறுதல் - இற்றுப் போதல், தனித் தனியாகப் பிரிந்து போதல்.

விறல் - வெற்றி; மறல் - வீரம்.

ஊண்தவிர்நோன்பு - ஊணும் தவிர்த்த கொள்கையுரம்.

உயிர்தீர்முயல்வு- உயிர் தீரும் வரை செய்யப் பெறும் முயற்சி.

காண்குநர் கண்ணிர் கலுழ- இவர்களின் எழுச்சியையும், வீரவுணர்வையும், அதே பொழுது அவர்களின் இளமையையும் கல்வி பயில வந்தார் போராட வேண்டி வந்ததே என்னும் நினைவும், பார்ப்பவர் கண்களில் கண்ணிரை வருவித்தன என்க.

நன்றும் தீதும்தினையாராகி- கல்வியால் ஏற்படும் நன்மையும் இவ்வகைப் போராட்டங்களால் நேரும் தீமையையும் நினைத்துப் பாராதவராகி,

ஒன்றும் நெஞ்சொடு - கருத்து வேறுபாடற்றுப் பொருந்தி ஒரே எண்ணத்தோடு கூடிய நெஞ்சோடு

தொல்லோர் மரபின் அரசர் - பழம் பாண்டிய, சோழ, சேரர் என்னும் மரபில் வந்த அரச வழியினர்.

வல்லோ அல்லர்- தவம் முதலிய அருந்திறல்களால் வலிமை பொருந்திய துறவிகள் வழியினரும் அல்லர்.

பொருளும் - விழையாராகி அறவழிகளால் ஈட்டிய பொருளும், அதன் வழி இன்பமும் கூடிய, இருள்தீர்ந்த தூய வாழ்க்கையும் விரும்பாதவர்கள் ஆகி.

அற்றைத் தமிழ்த்தாய் - பன்னெடுங்காலம் முந்தித் தோன்றிய தமிழ் என்னும் தாய்.

இற்றை மகர் - இன்று இக்காலத்துள்ள மக்கள்.

ஒற்றைத் தனி நீள் நினைவு - ஒன்றேயாகித் தனித்து நின்ற நெடிய நினைவாகிய தமிழின் முன்னேற்றம்.

மூவா இளமை--ஏய்ந்த முதுமையுறாமல் என்றும் இளமைத் தன்மையே சார்ந்த மிகப் பழமையான மொழியாகிய தமிழ் மொழிக்கு வந்து பொருந்திய,

தாவாப் பெருந்துயர் நீங்காத பேரிடர்.

நெய்யெரி புகுத்திய புகழோர் - நெய்யினால் தோற்றிக் கொண்ட எரியில் தன் உடலைப் புகுத்திக் கொண்டு மாய்ந்த புகழை உடையவர்.

மெய்யழி பட்ட - உடலம் மாய்த்துக் கொண்ட

கொடுங்குறை யுறுப்பொடு - உறுப்புகள் குறைந்த கொடுமையான நிலையொடு.

யாங்கன் -- வினை - இம் மொழிப் போராட்டத்திற்கென வெழுந்த மாணவர் எழுச்சியை அடக்குவான் வேண்டி இக்கொடிய அரசு மேற்கொண்ட கடிய நடவடிக்கைகளையும் அவற்றினால் ஏற்பட்ட தீய விளைவுக்ளையும் எவ்வாறு உரைப்பல் என்றபடி

ஈர்ந்தண் உலகம் - குளிர்ந்த தண்ணிர் சூழ்ந்த இந்த உலகம்.

இருள் நீள் விசும்பு - நீண்ட இருள் தோய்ந்து கிடக்கும் இவ் வானம்.

‘செந்தமிழ் வாழ்க'வென முழக்கமிட்டுக் கூறி ஊர்வலம் வரும், அவ்விளைமையோர்க்கு வானையும் இந்நிலத்தையும் பரிசிலாகக் கொடுப்பினும் அது நிறைவாக இராது. அவ்வுணர்வின் பெருமை அக்கொடையினும் உயர்ந்தது என்றபடி

ஒன்றும் ஈயான் ஆகினும் ஒழிக - அவர்களின் ஈக உணர்வுக்குப் பரிசாக வானையும் நிலத்தையும் போல் ஒன்றினையும் அவர்களுக்குத் தரான் ஆயினும் போகட்டும்.

கொன்றும்... கொண்டு - ஏற்கனவே நடந்த முன்னைய நாள் போராட்டங்களில் மாணவ இளைஞர்கள் பலரைச் சுட்டுக் கொன்றும் அவனின் சாக்காட்டுப் பசி அடங்காது, மீண்டும் அந்த வெறிகொண்டு.

படையற நின்ற நடையினோரை - எவ்வகையான கருவிப் படைகளையும் கொண்டிலராய், வெறுவராய்க் கொள்கை முழக்கத்தோடு மட்டும் ஊர்வலம் செல்லும் இவரை.

விளையா நின்ற இளையோர் தம்மை - தமக்காகவும் நாட்டுக்காகவும் இன்னும் பல நிலைகளிலும் விளைந்து வரவேண்டிய தன்மையுடைய இவ்விளைய மாணவரை.

மலர் முகை - போல - மலரவேண்டிய மொட்டுக்களைக் கசக்கியும் கிள்ளியும் சிதைவு செய்து நெருப்பிலிட்டுப் பொசுக்குதல் போல.

உலர்தி நெஞ்சினன் - உயிர்களை வற்றடிக்கும் தீப்போலும் கொடிய நெஞ்சையுடையவன்.

உயிர் வாங்கினனே - அவர்களின் உயிர்கள் மேலும் நீங்கும்படி காவலர்களை விட்டுக் கொன்று தீர்த்தான்.

ஆடல் இளமகள் - நாணும் - நீராடல் செய்த இளமகள் ஒருத்தி அரசன் தோட்டத்து விளைந்த மாங்காயொன்று ஆற்றில் விழுந்து மிதந்து வர, அதனை அறியாமல் எடுத்து உண்டதால் அவளைக் கொன்ற கொடிய நன்னன் என்னும் அரசனும், இந்தி மொழி படிக்க மறுத்துப் போராடிய மாணவர்களைச் சுடுவித்துக் கொன்ற இவனின் வினைக்கு நானுவன் என்று பழியும் இழிவும் சாற்றியது.

நன்னன் நிகழ்ச்சியைக் குறுந்தொகை 292 ஆம் பாட்டால் தெரிந்து கொள்க.

மொழிக்கென-இலரே! - தாய் மொழியைக் காப்பதற்கென்று எழுச்சி கொண்டவர் இம்மாணவரைவிட வேறு எவரும் இலர்.

பழிக்கென-இவனே - அதே போல் பழி மேற்கொள்ள எழுந்தவன் இவனினும் வேறு எவனும் இலன்.

மயர்தீர் கொள்கை -குற்றமற்ற கொள்கையை உடைய சான்றோர் அழுங்க சான்றோர்கள் வருந்தும்படி

குற்றமற்ற நடுவு நிலையுள்ள சான்றோர் பலர், மாணவர்கள்மேல் அடக்குமுறை செய்து அவர்களைக் கொல்லற்க என்று வேண்டியும், அவர் மொழி கேளாது, அவர்கள் நெஞ்சம் துயருறும்படி கொல்வித்தான் என்பது.

உயர்செந்... நின்றாரை - உயரிய செந்தமிழ் மொழிக்குக் காப்பென நின்றவரை.

வெய்வேட்டெஃகம் விதிர்ப்பறத் தாங்கி - கொடிய துமுக்கிகளை நடுக்கமிலாது தாங்கி,

கொய்துயிர்...கோலே உயிரைக் கொய்து துண்டித்தது ஆட்சியதிகாரத்தில் அமர்ந்த கொலைஞனின் கொடுங்கோல் ஆணை.

புன்றலைச் சிறாஅர்- இளமைத் தலைகளையுடைய சிறுவர்களின்.

செந்நீர் ஆடியோன் - குருதியில் குளித்தவன்.

முந்நிற நெடுங்கொடி - கோட்டையின் நீண்ட கம்பத்தில் கட்டப்பெற்ற மூன்று நிறமுள்ள பேராயக் கட்சியின் கொடி

முன்றிலும் சிதைக - அக்கொடியுடன் அவ்வரசின் ஆளுகை முற்றமும் சிதைக. முன்றில் - சிதைதல் என்றது அவ்வரசின் ஏற்றம் சிதைக என்பது.

அன்னோன் தாங்கிய அரசும் சிதைக- அவ்விளைஞர்களைச் சுடுவித்த முதலமைச்சர் ஏற்று நடத்திய அரசும் இனி உருக்கொளாதபடி சிதைந்தொழிக என்றவாறு. இது வஞ்சினம். முதலமைச்சர் சார்ந்து நடத்திய அரசு பேராயக் கட்சி யரசு. முதலமைச்சர் திருபக்தவச்சலம். இவ்வஞ்சினப் பாடல் வெளிவந்த பின்னர் அவர் அரசாட்சி அவ்வாறே சிதைந்தது. மீண்டும் அவர், அரசுக்கட்டிலேறும் வாய்ப்பின்றியே போனார்.

முற்றா இளவுயிர் - முதிராத இளைஞரின் உயிர்.

தமிழ்க்கெனப் போக்கி-இந்தியழிப்பினின்று தமிழைக் காப்பதற்கென்று போராடி உயிர்விட்டு.

வற்றா நெடும்புகழ் - வற்றுதல் இல்லாத நீண்ட நெடிய புகழ்.

வழி வழிக் கொண்ட - தொன்மைக் காலத்திலிருந்து இன்று வரை வழி வழியாகக் கொண்ட

இளையோர் காத்த எந்தமிழ் - இளைஞரால் காக்கப்பெற்ற எம்முடைய தமிழ்மொழி. இனி, குலைவிலாது கிளையுறப் பொலிக - இனிமேல், எவ்வகைக் குலைவுமிலாது, கிளைமொழிகளை ஊன்றி மேன்மேலும் பொலிவுற்று விளங்குக.

- இது வாழ்த்து!

- 1938-இல் சென்னை மாநிலத்தின் ஆட்சிப் பொறுப்புப் பேராயக் கட்சியினர் கைக்கு வந்தது. அக்கால் முதலமைச்சராக விருந்த திரு. இராசகோபாலாச்சாரி (இராசாசி) 'இந்தியைக் கட்டாயப் பாடமாக்குவேன்’ என்று தெரிவித்தார். அதையடுத்துத் தமிழகத்தில் இந்தி யெதிர்ப்புணர்வு தொடங்கி வலுப்பெற்றது. அக்கால் பல்லாவரம் பொதுநிலைக் கழக ஆசிரியர் உயர்திரு மறைமலையடிகள், நாவலர் சோமசுந்தர பாரதியார், கோ. துரைசாமி (G.D.Naidu), பாகநேரி காசிவிசுவநாதன், ஈழத்துச் சிவானந்த அடிகள், அருணகிரி அடிகள், சண்முகானந்த அடிகள், பெரியார் ஈ.வெ.இராமசாமி, அண்ணாத்துரை, சண்முகவேலாயுதம், சிடிநாயகம், தமிழவேள் உமாமகேசுவரன், சச்சிதானந்தம், தூத்துக்குடி மாசிலாமணி, சாமி சகசானந்தா, அருள் தங்கையா, பாரிப்பாக்கம் கண்ணப்பர், முத்தையா, பரவிசுநெல்லையப்பர், சற்குணர், இராபிசேது. வச்சிரவேல், பிடிஇராசன், செளந்தரபாண்டியன், சாத்துார் கந்தசாமி, ஏ.டி.பன்னிர்செல்வம். காசுப்பிரமணியனார், கருமுத்து தியாகராசன், பண்டுவர் தருமாம்பாள், மூவாலுர் இராமாமிர்தத் தம்மையார், சென்னை மலர்முகத்தம்மையார், சரசுவதி சிற்சபை, கந்தம் உரோசம்மாள், சரோசினி மாணிக்கவாசகம் (மறைமலையடிகள் மூத்த மருமகள்) கோபிசெட்டிப் பாளையம் மாரியம்மாள், மறை திருநாவுக்கரசு, பரவத்து இராசகோபாலாச் சாரியார், கே.எம். பாலசுப்பிரமணியம், டிஏவிநாதன், கே. இராமையா, பாலசுந்தரப் பாவலர், எசுசம்பந்தம், பல்லடம் பொன்னுசாமி, மீனாம்பாள் சிவராசு முதலிய அறிஞர்களும், கட்சித் தலைவர்களும், துறவிகளும், பெரியோர்களும் ஆகப் பலர் எதிர்த்து அறிக்கைகள் விட்டும், மாநாடு நடத்தியும், போராடியும், மறியல்கள் செய்தும், சிறை சென்றும், அடிதடி பட்டும் இந்தித் திணிப்பை எதிர்த்து நின்றனர்.

இப்போராட்ட எதிர்ப்பால் இந்தி நுழைப்பு ஒரேயடியாகத் தீராமல், சிறிது சிறிதாகவும், மெல்ல மெல்லவும், தமிழகத்தில் காலூன்றியே வந்தது. அக்கால் வெளிவந்த செய்தித்தாள்கள் பலவற்றுள்ளும், இந்தி யெதிர்ப்புத் தொடர்பான கட்டுரைகள், பாடல்கள், அறிக்கைகள், தீர்மானங்கள் அனைத்தும் வெளிவந்தன. ஆனால் இந்தி படிப்படியே நுழைக்கப் பெற்றே வந்தது. இடையிடையே இந்தியெதிர்ப்புப் போராட்டங்கள் நடத்தப் பெற்றும் பயனில்லை.

இறுதியாக, 1965 சனவரி 25ஆம் பக்கல் மாணவர் எழுச்சிப் போராக இந்தி யெதிர்ப்புணர்வு வெடித்தது. இப் போர் பிப்ரவரி 12ஆம் நாள் வரை தீவிரமாக நடந்தது. அக்கால் பேராயக் கட்சி தமிழகத்தில் அரசு வீற்றிருந்தது.

திரு. பக்தவத்சலம் முதல்வராக அமர்ந்து, மாணவர்களின் எதிர்ப்புணர்ச்சியைக் சற்றும் பொருட்படுத்தாது தில்லியாட்சியரின் கையாளாக விருந்து, அடக்குமுறைகளையும், வன்மங்களையும் கையாண்டு மாணவர்கள் பலரையும் பொதுமக்கள் பலரையும் சுட்டு வீழ்த்தி, நடுவணரசால் 'எஃகு நெஞ்சர்' என்று பாராட்டப் பெற்றார். அக்கால் நடந்த இந்தியெதிர்ப்புப் போரில் ஏற்பட்ட பொதுவிழப்புகளும், உயிரழிவுகளும் நிகழ்ச்சிகளும் பற்பல. அவற்றுள் சில வருமாறு:

1. அண்ணாமலைப் பல்கலைக் கழக மாணவர் இராசேந்திரனும் இளங்கோவனும் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

2. கோடம்பாக்கம் சிவலிங்கமும், விருகம்பாக்கம் அரங்கநாதனும் தீக்குளித்தனர்.

3. சென்னை, கோட்டைக்கு ஊர்வலமாகச் சென்ற கல்லூரி மாணவர்களைக் காவலர்கள் அடித்து நொறுக்கியதில் ஏறத்தாழ 50 மாணவர்கள் படுகாயமுற்றனர்.

4. முப்பது பொது உந்துகள் கொளுத்தப்பட்டன. .

5. கல்லூரிகள், பள்ளிகள் அனைத்தும் ஒன்றரை மாத காலத்துக்கு மூடப்பட்டிருந்தன.

6. சென்னை நகர வீதிகளில் குதிரைக் காவலர்கள் உலாவந்த வண்ணமிருந்தனர்.

7. ஆயிரக்கணக்கான மாணவியர் கறுப்புப் புடவை, சட்டையுடன் மதுரை ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.

8. சனவரி 25முதல் 28 வரை ஏறத்தாழ 2000 பேர் சிறைப்படுத்தப் பெற்றனர்.

9. அண்ணாமலைப் பல்கலைக் கழகம் காலவரையறையின்றி மூடப்பட்டது.

10. காவலர்கள் கல்லூரிகளுக்குள் புகுந்து மாணவர்களை அடிக்கையில் பேராசிரியர்கள் பலரும் காயம் பட்டனர்.

11. சென்னை, திருச்சி, மதுரை, காஞ்சி, சிதம்பரம், சேலம், நெல்லை, திருவாரூர், சிவகாசி, பட்டுக்கோட்டை, அரக்கோணம், தாளவாடி, ஆரணி, இராணிப்பேட்டை, வேலூர், ஆலந்துளர், வளவனூர், இடைப்பாடி, மகுடஞ்சாவடி, திண்டிவனம், நெய்வேலி, வெங்காலூர், புதுவை, கடலூர், குன்னூர், கும்பகோணம், கடையநல்லூர், திருப்பூர், நாகர்கோயில், காரைக்கால், சாத்துர், அருப்புக்கோட்டை, வாசுதேவநல்லூர் முதலிய ஊர்களில் தொடர்ந்து கிளர்ச்சிகள் நடந்து வந்தன.

12. சென்னைக் கடற்கரையில் இந்திப் புத்தகங்கள். தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

13. அமைச்சர் மகன் ஒருவனும், காவல் அதிகாரி மகன் ஒருவனும், அமைச்சர் ஒருவர் மருமகனும் போராட்டங்களில் கலந்து கொண்டனர்.

14. மதுரையில் மலையுந்து (Jeep)க்கும் பேராயக் கட்சி அலுவலகத்திற்கும் தீ வைக்கப் பெற்றது.

15. மதுரையில் வடநாட்டினர் உணவு விடுதியைத் தாக்கி அதன் இந்திப் பெயர்ப் பலகைக்கும், குடியரசு நாளைக் கொண்டாட அமைத்த பந்தலுக்கும் தீ வைத்தனர்.

16. நாடெங்கும் இந்தியரக்கியின் கொடும்பாவிகள் கொளுத்தப் பட்டன.

17. சென்னை இசுடான்லி மருத்துவமனைப் பயிற்சி மருத்துவர்கள் ஒரு நாள் வேலை நிறுத்தம் செய்தனர்.

18. சென்னை பச்சையப்ப்பன் கல்லூரிக்குள் புகுந்து பேராசிரியர்களை அரம்பர்(ரெளடி)கள் என்று கூறி மாணவர்களைக் காவலர்கள் அம்மணமாக நிறுத்தி வைத்து அடித்தனர். மாணவர்களைப் பார்க்க வந்த பெற்றோர்களும் இந்தக் கொடுமைக்கு ஆளாயினர்.

19. திருச்சி, கீரனூரில் 20 அகவை முத்து என்பவர் இந்தித் திணிப்பை எதிர்த்து நஞ்சுண்டு இறந்தார்.

20. கோவையில் கடைகள் சூறையாடப்பட்டன.

21. தொடர் வண்டிகள் கொளுத்தப்பட்டன.

22. சோமனூர், திருப்பூர், கரூர், குறிஞ்சிப்பாடி, திருவொற்றியூர், தக்கோலம், மனப்பாறை, புதுவை ஆகிய தொடர்வண்டி நிலையங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.

23. சென்னை, வேலூர், ஈரோடு, சேலம், கோவை, திருச்சி, மதுரை, திருநெல்வேலி, துத்துக்குடி, கரூர், திருப்பூர் முதலிய இடங்களுக்கு பட்டாளங்கள் அனுப்பப்பட்டன.

24. அமைச்சர்கள் சுப்பிரமணியமும் அழகேசனும் வேலை விடுப்பு நாடகம் நடத்தினர்.

25. கல்கத்தாவிலும் பள்ளிகள் மூடப்பட்டன.

26. கரூரில் காவல்துறை அதிகாரி தாக்கப்பட்டார்.

27. திருச்சி மரக்கடை அஞ்சலகம் தீ வைக்கப்பட்டது.

28. ஏறத்தாழ 20 தொடர்வண்டிநிலையங்கள் சேதப்படுத்தப்பட்டன.

29. பொள்ளாச்சி நகரமே வெறிச்சோடிக் கிடந்தது.

30. மதுரை, கூடலூரில் இரு காவலர்கள் உயிருடன் கொளுத்தப் பட்டனர். திருப்பூரில் இரு காவல் அதிகாரிகள் உயிருடன் கொளுத்தப்பட்டனர்.

31. நூற்றுக்கணக்கான அஞ்சல் பெட்டிகளும், பொதுத் தொலைபேசி நிலையங்களும் தீக்கிரையாகின.

32. கர்னூலிலும், கேரளாவிலும், ஆந்திராவிலும் மாணவர்கள் கொதித்தெழுந்தனர்.

33. தஞ்சை அஞ்சலகம், தூத்துக்குடி அஞ்சலகம் தீவைத்துக் கொளுத்தப்பட்டன.

34. திருச்சி, அய்யம்பாளையம் தொடக்கப்பள்ளி ஆசிரியர் வீரப்பன், சத்தியமங்கலம் உழவர் முத்து இருவர் மேலும் தீக்குளித்தனர்.

35. சென்னை, ஆழ்வார்ப்பேட்டை மாநகராட்சிப் பள்ளிக்குத் தீ வைத்தனர்.

36. அனைத்துத் தொடர்வண்டிகளும் ஒரு கிழமை காலத்திற்கு ஒடவில்லை.

37. அரசினர் உந்துகள் பதினைந்து நாட்களுக்கு ஓடவில்லை.

38. பஞ்சாபிலும் துமுக்கிச் சூட்டில் நான்கு பேர் இறந்தனர்.

39. மொத்தம் 50 உந்து வண்டிகள் கொளுத்தப்பட்டன.

40. புதுவை அரவிந்தர் பாழி தாக்கப்பட்டு தீ வைக்கப்பெற்றது.

41. இந்திப் படம் காட்டாதே என்று நாகர்கோவில், சென்னை, கோவை முதலிய இடங்களில் கொட்டகைகளின் முன் போராடித் தடுத்து நிறுத்தினர்.

42. செங்கோட்டையருகில் தண்டவாளம் பெயர்க்கப்பட்டது.

43. கல்கத்தாவிலும் போராட்டம் தொடங்கியதால், பள்ளிகளை 15 நாட்கள் மூடும்படி கல்கத்தா அரசு ஆணையிட்டது.

44. ஆரணி அஞ்சலகம் சூறையாடப்பட்டது.

45. திருத்தணியில் மாணவர்கள் தொடர்வண்டிக் கடவைக் கதவுகளை உடைத்துத் தூள் தூளாக்கினர்.

46. அனந்தப்பூரில் ஏறத்தாழ 3000 பேர் தொடர் வண்டி நிலையத்தைத் தாக்கினர்.

47. 12 வானூர்திகளில் பட்டாளம் வரவழைக்கப்பட்டது.

48. குடியேற்றத்தில் மாணவர்களுக்கும் காவலர்களுக்கும் கைகலப்பு நேர்ந்து, காவலர்கள் மாணவர்கள் மேல் 14முறை துமுக்கிச் சூடு நடத்தினர்.

49. கடையநல்லூரில் தொலைவரிக் கம்பிகள் அறுக்கப்பட்டன. அஞ்சலகப் பெயர்ப் பலகைகள் உடைக்கப்பட்டன.

50. 1965-இல் நடந்த இந்தியெதிர்ப்புப் போராட்டத்தில் காவலர்கள் கட்டதால் இறந்தவர்கள் மொத்தம் 68பேர். தீக்குளிப்பில் இறந்தவர்கள் 5பேர். தீயிடலில் மாண்டவர் ஒருவர். மக்களால் தாக்கப்பட்டு மாண்ட காவலர்கள் பேர். சுடப்பட்டு இறந்த 68 பேரில் குமாரபாளையத்தில் 15பேர்; பொள்ளாச்சியில் 10 பேர்; புதுச்சேரியில் 10 பேர்.

1965ஆம் ஆண்டில் நடந்த இந்திப்போரில், மாணவர் அடர்ந்தெழுந்த உணர்வெழுச்சியைக் குறித்தது; இப்பாடல். அக்கால், தமிழகத்து, இனங்காக்கவும் மொழி பேணவும் நின்ற கட்சிகள் பலவிருந்தும், தலைவர் பலரிருந்தும் அவற்றுள் ஒன்றினாலும் அவருள் ஒருவராலும் தூண்டப் பெறாமல், தமிழ் காத்தற்குத் தாமே எழுச்சியுற்று வீறுகொள நின்ற உயர்பள்ளி, கல்லூரி மாணவர்தம் வலிந்த போக்கை வரலாறு படுத்துவதாகும் இப்பாடல். இனி, இது தொடர்ந்து வரும் பன்னிரு பாடல்களும் இத்தகையினவே.

இது, செந்தமிழ்த் தும்பை என் திணையும் புன்மொழி பொருதல் என் துறையுமாம் என்க. திணை, துறை புனைந்த புதியன.

செந்தமிழ்க்கெனப் பொருத வெழுந்தது ‘செந்தமிழ்த்தும்பை'யும் தமிழ் மீதுர்ந்து அழிக்க வந்த இந்தியென் புன்மொழி நோக்கிப் பொருதி நின்றது ‘புன்மொழி பொருதலு'ம் ஆம்.