நூறாசிரியம்/தேறுக நெஞ்சம்
52 தேறுக நெஞ்சம்
தேறுக நெஞ்சம் வீறுகொள நின்றே!
ஈற்றப் பொலிந்தது நின்மக னிசையே!
மூத்தோர் மரபின் யாத்த முத்தமிழ்!
காத்தோர் நிரலின் தலைநின் றனனே!
5
கல்விக் கழகத்து ஐயற் றுறந்த
செல்வத் தனிமகற் சேர்த்தினை அம்ம!
வெய்குழ லெஃகம் உமிழ்ந்துயிர் கழன்ற
மெய்யோன் தமிழ்ச்சீர் மீமிசை நிறுத்தி,
10
மறப்பூண் பயந்தநின் வயிறு குளிர
ஆய்நினக் குரியன் அனைவர்க்கு மாகிய
உளங்கிளர் மாக்கதை உள்ளி
இளங்கிளர் உணர்வின் ஏந்தலன் றாயே!
பொழிப்பு :
தேற்றிக் கொள்க (நின் நெஞ்சத்தை பெருமை பெருமாறு நின்று) அழிவு இறுதி இல்லாமல் விளங்கி நின்றது நின்னுடைய மகனது புகழ். அறிவின் முதிர்ந்த தொன்மையோர் தம் வழிவழி முறைமையால் நிலைபெறுவித்த மூவியல் தமிழ் மொழியினைக் கட்டிக் காத்தவர் வரிசையில் முதலாக நின்றனன், அவன்! நிறைந்த வலிமையொடு, தன்னைச் சேர்ந்த அனைவரினும் முதல்வனாக வருக என்னும் நோக்கத்துடன், கல்வி கற்பிக்கப்பெறும் கலைக் கழகத்து, தன் தந்தையைத் துறந்த, உடன் பிறப்பில்லா ஒரு மகனைக் கல்வி கற்க வேண்டுமென்று சேர்த்தனை அம்ம! வெப்பமான எஃகுக்குழலாகிய வேட்டெஃகத்தினின்றும் உமிழப் பெற்ற குண்டினால், உயிர் நீங்கப் பெற்ற உடலையுடையவன், தமிழ் மொழியின் பெருமையை மேலும் உயர்நிலைக்கண் கொண்டு சேர்த்து நிலைபெறச் செய்து, வாழ்வறத்தின் சிறப்பால் விளங்கித் தோன்றிய நின் மார்பு கண்ணீரால் நனையும் படியும், மறத்திற்கே சிறப்பு தோன்றுமாறு நின்ற அவனைப் பெற்றெடுத்த நின் வயிறு குளிரும். படியும், பெற்ற தாயாகிய நினக்கு உரியவன், தான் செய்த தமிழ்காக்கும் வினையால் தமிழர் அனைவர்க்கும் உரியவன் ஆகிப் பெருமைபெற்ற, உள்ளத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் பெருமைக்குரிய வரலாற்றை நினைந்து, இளமை கிளர்ந்தெழும் உணர்வினால் சிறந்தோனுடைய தாயாகிய நீயே!
விரிப்பு : இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.
அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக் கல்விக் காலத்துத் தமிழ் காக்க முன் நின்று உயிர் துறந்த இளவல் அரசேந்திரன் நற்றாயைத் தேற்றிப் பாடியதாகும் இப் பாடல். -
தேறுக நெஞ்சம்.நின்றே! - பெருமிதத்தால் உயர்ந்து நின்று, நின் நெஞ்சத்தைத் தேற்றிக் கொள்வாயாக. இளங்கிளர் உணர்வின் ஏந்தலன் தாயே, தேறுக நெஞ்சம் வீறுகொள நின்றே” என்று கொண்டு கூட்டுக. நின் மகன், பிறர்போல், இயற்கையான் வரும் பொதுவான இறப்பால் நின்னைப் பிரிந்து சென்று விடவில்லை. செம்மாப்புற்ற ஒரு கொள்கை நோக்கி அதனைச் செயற்படுத்தும் பொருட்டாக உயிர் துறந்தனன். எனவே நீயும் ‘எல்லாரையும் போல் அவன் இறப்புக்காக வருந்த வேண்டுவதில்லை.அவன் பெற்ற பெருமையை எண்ணி, நின் அழுங்கல் நெஞ்சத்தைத் தேற்றிக் கொள்வாயாக என்று தெருட்டியதாகும்.
ஈற்றப். இசையே அழிவால் முடிவுறாத சிறந்த தன்மையுடையதாய், இவ்வுலக இறுதிவரை விளங்கி நிற்பதாகும் நின் மகனுடைய புகழ்,
என்னை; மொழிக்கு உறுதி சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டோனது மொய்ம்புகழ் அம்மொழி யுள்ளளவும் நின்று நிலைபெறுவதாகுமன்றோ ! ஆகவே, தமிழ்மொழி இவ்வுலகுள்ளளவும் நிலைபெறுவது போல், அவன் புகழும் நின்று நிலை பெறும் என்க.
மூத்தோர் - அறிவின் முதிர்ந்த தொன்மையோர்; சான்றோர்.
மரபின் யாத்த முத்தமிழ் - வழி வழி முறைமையால் நிலை பெறுவித்த மூவியல் தமிழ். யாத்தல் நிலை பெறுவித்தல்; கட்டு வித்தல் எழுத்து, சொல், பொருள், யாப்பு, அணி ஆகிய ஐந்துறுப்பிலக்கண வகையால் கட்டுக் கோப்பு செய்விக்கப் பெற்ற, இயல், இசை, நாடகமெனும் மூவியல்பானாகிய தமிழ் மொழி!
என்னை முதலொலி எழுத்துகள் இன்னின்ன வென்றும், அவை தழுவி வரும் மூலச் சொற் கூறுகள் இவை யிவை என்றும், அவற்றான் புறப்பாடுறுவனவும், புலப்பாடுறுவனவும் ஆகிய பொருண்மொழிக் கோள்கள் இவை யிவை யென்றும், சொல்லும் பொருளும் நிரலுற நிறுத்தி, உளமும் உறனும் துலக்குறக் காட்டி, அழகும் பழகும் உணர்வொடு புணர, காலமும் இடமும் கடந்து நிலை பெறுஉம், சிறந்தோர் நெய்யும் செய்யுள் அமைப்புகள் இவையிவை யென்றும், அவை ஏய்ந்து வரும் சொல்லும் பொருளும் மிளிரத் தோன்றி, மணிவகை போலும் மல்கி நின்ற, அணி வகை ஆவன இவையிவை யென்றும், தேட்டமிலார்க்குத் தெளிவுறுமாறு காட்டி நின்ற ஐந்துறுப்பிலக்கணம் என்க. என்றதன்பின் , நின்று நிலவிய அன்றைய நற்றமிழ், இயல்பின் இயங்கும் உரைபெறு கட்டுரை, மயல் தவிர் பொருளொடு மல்கிய இயலும் ஒலியொடு வெழுத்தும், எழுத்தொடு சொல்லும், சொல்லொடு பொருளும், பொருளொடு பண்ணும், பண்ணொடு தாளமும், தாளத்தோடு இசையும் ஆலத்தோன்றி, கிளப்போரையும் கேட்போரையும் உளத்தாலும் உவகை முதலிய உணர்வுகளாலும் பிணிப்பிக்கும் இசையும், இவ்விசையும் இயலும் அசைவுறாநின்று, உடலோடிய உணர்வையும், உணர்வோடிய சுவைகளையும் ஒரு நன்னெறிக்கண் கட்டி நிறுத்தி, உளத்தையும் உரனையும் வளத்தகப் படுத்தும் நாடகமென்னும் பூடக அமைப்பும், கொண்டு தழுவித் தொன்று தொட்டு, காலத்துக் காலத்து, இடத்து இடத்து, சழக்கு நிலைமிக்கு வழக்குத் திரியினும் புழக்கு தமிழ் தோற்றத்துப் பொலிவுற நிற்கும் மூவா இளமை முத்தமிழ் என்க.
காத்தோர் நிரலின் இத்தகு பெருமை பெறுமாறு நின்ற தமிழை, நினைவு, மொழி, மெய் என்னும் மூவுரத்தானும் காத்தல் வினையாற்றுவோர் வரிசையின்.
தலைநின்றனனே முதலிடத்து வைத்து எண்ணிப் பெறுமாறு இருந்தனன்.
மொய்ம்பொடு - நிறைந்த வலிமையொடு.
முதலாவம்மென் நோக்கின்-தன்னைச் சார்ந்த அனைத்து மாணவரினும் முதலாமவனாக வருக என்னும் நோக்கத்துடன் .
ஐயுற்றுறந்த செல்வத் தனிமகன்- தந்தையைத் துறந்த உடன் பிறப்பற்ற ஒரு தனிமகனை.
கல்விக் கழகத்துச் சேர்த்தினை அம்ம- கல்வி பயிலும் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் கொண்டு சேர்த்தினை.
வெய்குழல் எஃகம் உமிழ்ந்து- வெம்மையான வேட்டெஃகத் தினின்று உமிழப் பெற்ற குண்டினால்,
உயிர்கழன்ற மெய்யோன்- - உயிர் நீங்கப்பெற் உடலையுடையவன்.
தமிழ்ச்சீர் மீமிசை நிறுத்தி தமிழ் மொழியின் பெருமையை மிக உயரத்தில் கொண்டு சேர்த்தி மேலும் பெருமைப் படுத்தி.
என்னை, தமிழ் மொழி வழங்கும் நிலத்தில், வேற்று மொழியாகிய இந்தி மொழி ஆளுமைக்கு வருவதைத் தடுத்து நிறுத்தும் நோக்கத்துடன் போராடி, அப்போராட்டத்தில் தன்னைக் காவாகத் தந்து, அப் பிறமொழி ஆளுமை முயற்சியை முறியடித்து, அதனால் தமிழுக்குத் தேடிய பெருமை. அஃது இழிவை எதிர்த்துப் பெற்றதாகலின் முன்னின்ற பெருமையினும் மிகுந்த பெருமை என்க.
அறப்பூண் விளங்கிய ஆகம் பனிப்- வாழ்வறத்தின் சிறப்பால் விளங்கி நின்ற பெருமிதம் தாங்கிய மார்பகம், விடுகின்ற கண்ணிரால் நனைந்து குளிர
மறப்பூண் - குளிர மறவுணர்வுக்கே சிறப்புத்தோன்றுமாறு நின்ற மகனைப் பெற்றெடுத்த வயிறு, அவனிட்டிய புகழால் குளிர்ச்சி பெறுமாறு:
ஆய்நினக் குரியன் - தாயாகிய உனக்கென உரியவன்.
அனைவர்க்கு மாகிய- அனைத்துத் தமிழர்க்கும், அவர் மொழியைக் காத்ததால், கொண்டாடுதற்கு உரியவன் ஆகிய
இளங்கிளர் உணர்வின் ஏந்தலன்- இளமை கிளர்ந்தெழும் உணர்வினால் சிறந்தோன்.
உளங்கிளர் மாக்கதை உள்ளி - உளத்தைக் கிளர்ச்சியுறச் செய்யும் அவனுடைய பெருமை மிகு கதையை எண்ணி,
தாயே! - தாயாகிய நீயே.
‘இளமை கிளர்ந்தெழுகின்ற உணர்வுடைய ஏந்தலன் தாயே! தந்தையற்ற நின் ஒரு தனி மகனை, அவனையொத்த மாணவர்களுள் கல்வியான் முதலிடத்தே வருமாறு கலைக்கழகத்துள் சேர்த்தினை. அவன் தமிழ் காக்கும் போராட்டத்துள் தலைநின்று, வேட்டெஃகத்தால் சுடப்பெற்றுத் தமிழ் மொழியின் பெருமையை உயர்த்தி, நின் மனம் வருந்தும்படியும், நின் வயிறு குளிரும்படியும் வீரனாகி உயிர் துறந்தான். அவ்வழி, நினக்கு மட்டுமே உரியவனாகியிருந்த அவன் தமிழர் அனைவர்க்கும் உரியவனாகிப் பெருமை பெற்றான். உள்ளத்தைக் கிளர்ந்தெழச் செய்யும் இப்பெருமையுடைய அவன் வீர வரலாற்றை நினைந்து, வெற்றியுணர்வால் பெருமிதம் கொள்ளும்படி, அவன் மறைவால் துயருறும் நின் நெஞ்சத்தைக் தேற்றிக் கொள்வாயாக!’ என்று, தமிழ்க்கென உயிர் செகுத்தோனது தாயைத் தெருட்டிக் கூறியதாகும் இப்பாடல்.
இது, செந்தமிழ்த் தும்பை என்தினை மாணவவென்றி என் துறையுமாகும்.
திணை, புனைந்த புதியது. என்னை, மாணவனாகி, நிறை பருவத்தேயே, வீரனாகிப் புகழ் வென்றானைப் பாடியதாகலின் மாணவவென்றி ஆயிற்று என்க.