நூறாசிரியம்/ஏகாச் சேர்க்கை
ஐயிரு திங்கள் மெய்யற வருந்திப்
பையல் வீறலில் உயநோய் மறந்தெம்
ஆகக் கனப்பில் அணைத்தமிழ் துாட்டி
ஏகுநா ளெண்ணி இளவோ னாக்கிப்
போக விட்ட புறத்தெம் புகழ்கெட
5
ஏகாச் சேர்க்கை இணைந்தோ னாகித்
தளிமகண் நுகர்ந்து களிமிக மண்டி
வெளிதுயிற் படுக்கும் விழலைப் பேறென
முனையின் றேமே தோழி
சினையில் வயிறியாச் செத்தழி யாமே!
10
பொழிப்பு:
தோழி! பத்து மாதங்கள் உடல்முழுதும் வருந்தி ஈன்று ஆண்மகவின் அழுகுரல் கேட்டு மகவுயிர்த்த துன்பம் நீங்கப்பெற்று உடற் சூட்டில் அனைத்துக் கொண்டு பாலூட்டி, கடந்து வரும் அகவையை எண்ணிப்பார்த்து, இளைஞனாய் வளர்த்து அவனை வெளியே செல்லவிட்ட எம் புகழ்கெடுமாறு கூடாநட்புப் பொருந்தினோன் ஆகி, பரத்தையினிடத்தே இன்பந்துய்த்துக் கள்ளை அளவிறப்பக் குடித்துத் தெருவில் உறங்கிக் கிடக்கின்ற விழல் போலும் வீனனை மகவென்று முன்னை ஈன்றனமே, கருவுறாத வயிற்றினளாக இறந்தொழியாமல்!
விரிப்பு:
இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.
வருந்தி யீன்று வளர்த்து ஆளாக்கப்பெற்ற தன் மகன் தம் குடும்பத்தின் புகழ்கெடுமாறு கூடா நட்புக் கொண்டும் பரத்தையிடத்தே இன்புற்றும் வரம்பின்றி மதுக்குடித்தும் தெருவில் உறங்கிக் கிடத்தல் கண்டு வருந்திய தாய் மலடியாகச் செத்தொழியாமல் இவ் விழல் போலும் வீணனை மகவாகப் பெற்றனமே என்று தன் தோழியொடு மனம் நொந்து கூறுமாறு அமைந்தது இப்பாட்டு.
ஐ இரு திங்கள் மெய் அறவருந்தி - பத்துமாதக் காலம் உடம்பு முற்றும் வருத்தமுற்று.
சுமந்ததும் ஈன்றதுமாகிய இருநிலையையும் உள்ளடக்கி மெய்அற வருந்தி என்றாள். அறமுழுவதும்.
பையல் விறலின் உய நோய் மறந்து -ஆண்மகவின் வீறிட்ட அழுகுரல் கேட்டு மகப்பேற்றுத் துன்பத்தை மறந்து
ஆண்மகவு என்பது அந்நொடியில் அறிய வாய்ப்பில்லையாயினும் வீறிட்ட குரலாலேயே உணர்ந்தாள் போலும் மகவு ஆதலின் பையன் என்னாது பையல் என்றாள். பையலைப் பயல் என்பது சிறுமைப்படுத்தப்பட்ட இற்றை வழக்கு
வீறல்- வீறிட்டழுதல்,
மகப்பேற்றுத் துன்பம் உயநோய் எனப்பட்டது.
ஆகக் கனப்பில் அனைத்து அமிழ்து ஊட்டி -உடலின் வெதுவெதுப்பில் அனைத்துக் கொண்டு பாலமிழ்தைப் பருகுவித்து.
அமிழ்தாவது தாய்ப்பால். இதன் விளக்கத்தை ஆசிரியரின் திருக்குறள் மெய்ப்பொருளுரையில் காண்க!
ஆகம் உடம்பு
ஏகுநாள் எண்ணி- நாள், மாதம், ஆண்டு என அகவைக் கணக்கீட்டால் மகனின் வளர்ச்சியை மகிழ்வுற எண்ணி.
கழிந்த காலம் வளர்ந்த நிலையைக் குறிப்பதாயிற்று.
ஏகுதல் கடத்தல்.
இளவோன் ஆக்கி -கட்டிளம்பருவ இளைஞனாக வளர்த்து ஆளாக்கி பையலை இளைஞனாக வளர்த்த நிலையைச் சுட்டினாள். போகவிட் புறத்து வெளியிலே அனுப்பி வைத்த அவ்விடத்தில் இளைஞனாகுங்காறும் தன். கண்காணிப்பிலேயே வளர்த்தவள் பருவமெய்திய நிலையில் கண்காணிக்கவியலாத வெளியிடத்துக்கு அனுப்பி வைத்தாள். போகவிட்ட புறத்து என்பதைப் புறத்துப் போகவிட்ட எனக் கூட்டுக.
எம்புகழ்கெட எம் புகழ் கெடுமாறு
தன்கணவனையும் மற்றும் இளைஞனின் பாட்டன் பாட்டியரையும் உள்ளடக்கி எம் என்றாள்.
ஏகாச் சேர்க்கை இணைந்தோன் ஆகி - சேரக்கூடாத சேர்க்கையொடு பொருந்தியவனாகி,
ஏகத் தகாத சேர்க்கையை ஏகாச் சேர்க்கை என்றார். பெரும்பாலும் கள், சூது, வரைவின் மகளிர் தொடர்பெல்லாம் நண்பர்களாலேயே வருதலின் அவன் கெடுதலுக்குக் கரணியமான கூடா நட்பை ஈண்டுக் குறித்தார்.
தளிமகள் நுகர்ந்து -விலைமாதினிடத்தில் இன்பந் துய்த்து.
கோயிலில் தொண்டு செய்யப் புகுந்து நடனமாடத் தொடங்கி தேவரடியாரானோர் விலைமாதராய் இழிந்தாற்போலக் கோயிற்பெண்டிர் எனப்பொருள்படும் தனிமகளிரும் விலைமாதராயினர். தளி கோயில்.
களி மிக மண்டி - மயக்கம் மிகுமாறு கள்ளை அதிகமாகக் குடித்து.
களி - கள்ளுண்ட மயக்கம்.
மிக - மிகுமாறு. - மண்டி நிரம்பக் குடித்து.
வெளியில் துயில்படுக்கும் - தெருவில் உறங்குகின்ற
விழலை - விழல் போலும் புல்லனை.
விழல் - உள்ளீடற்ற பயிர் புல் வகைகளுள் ஒன்று பயன்பாடற்றது. ‘விழலுக்கு இறைத்த நீர் என்பது பழமொழி.
பேறு என' - மகவு என-பிள்ளை என்று.
முனை ஈன்றனமே தோழி - முன்னாளில் ஈன்றோமே, தோழி! தன் கணவனையும் உள்ளடக்கி ஈன்றனமே என்று தோழியிடம் வருந்திக் கூறினாள்.
இது வாகை என்னும் புறத்தினையும் மூதின்முல்லை என்னும் துறையுமாம்.