நூறாசிரியம்/ஒருத்தியீங் குண்டே
தோட்குரி யோயே! தோட்குரி யோயே!
கேட்கருந் தொலைவிற் கிடந்துநீர் வடிய
நாட்குநா எளிளைக்குந் தோட்குரி யோயே!
முன்மழை சிதர்ந்து பின்னிலாக் காயும்
மென்னடை யிரவின் எதிர்நா ளெண்ணி
5
நோன்றரு பிரிவிற் றான்றணிப் புலம்புநள்
ஆன்ற தெருவின் அதிர்சிலை மடுத்தே
ஒய்வறக் குரைக்கும் ஒருதனிக் குக்கல்
பாய்ந்தின் வருகை தடுக்குமென் றஞ்சி
எழலும் விழலு மாகி
10
உழலும் மெய்யோ டொருத்தியீங் குண்டே!
பொழிப்பு:
தோளுக்குரியவனே! தோளுக்குரியவனே! அழைப்பொலி கேட்பதற்கு இயலாத நெடுந்தொலைவில் இல்லத்தே படுக்கையில் துக்கமற்றுக் கிடந்து, (நின் பிரிவுத் துயரால்) கண்களில் நீர் வடியும்படி (வாடி) நாளுக்கு நாள் இளைத்துப் போகின்ற நின் தலைவியின்) தோளுக்கு உரியவனே ! முன்யாமத்துப் பெய்த மழை தூறியடங்கிப் பின் யாமத்தில் நிலாக் காய்ந்து வீசும், மெதுவாக நடையிடுகின்ற இரவுக்கு அடுத்துவரும் நாளைக் கணக்கு வைத்து எண்ணியவாறு, கற்பு நோன்புடன் தாங்குதற்கரிய பிரிவில், தனக்குத் தானே பேசிப் புலம்பு கின்றவள், நெடிதகன்ற தெருவில் அலைந்து வரும் எதிரொலியைக் காதுகளில் வாங்கியவளாய், ஒய்வில்லாமல் குரைக்கின்ற தனித்த ஓர் ஒற்றைக் குள்ள நாய், ஒரு வேளை, முன்னறிவியாமல் வருகின்ற) உன் இனிய வருகையைத் தடுத்து விடுமோ என்று அஞ்சி, எழுந்து வந்து வாயிலைப் பார்ப்பதும், வராமை கண்டு உளச் சோர்வுடன் மீண்டும் படுக்கையில் வீழ்வதுமாகிய, உழல்கின்ற உடம்புடன் ஒருத்தி, இங்கு உள்ளாள்.
விரிப்பு:
இப்பாடல் அகத்துறையைச் சார்ந்தது. தலைவனின் ஒதற் பிரிவால் உழன்ற தலைவியின் துயரைத் தோழி தலைவற் குணர்த்தியது. திருமணத்தின்பின், கற்புக் காலத்து, கல்வியின் பொருட்டுப் பிரிந்து சென்ற தலைவனை நாளும் எதிர்நோக்கிய தலைவியின் துயரத்தை அவன் உணருமாறு, தோழி, ஒரு மடல்வழிப் புலப்படுத்தியதாகும், இப்பாடல் என்க.
“தோளுக்குரியவனே! தோளுக்குரியவனே! கேட்பதற்கு அரிய நெடிய தொலைவில் இருந்து, நாளுக்கு நாள் இளைத்துப் போகின்ற தலைவியின் தோளுக்குரியவனே! முன் யாமத்துப் பொழிந்த மழை நின்று, பின் யாமத்துக் காய்கின்ற நிலாவொளி நிரம்பிய இரவில், அவள் வழக்கம்போல் உன் வரவை எண்ணி எதிர்பார்த்துக் கிடக்கின்றாள். அக்கால் எங்கோ ஓர் ஒற்றை நாய் குரைக்கும் எதிரொலி அவள் செவிகளில் எட்டுகின்றது. அக்கால் ஒருவேளை, நீ வருவதாயிருப்பின் அவ் வரவை அந்த நாய் தடுத்து விடுமோ என்று அஞ்சி, எழுந்து ஓடுவதும், பின் வராதது கண்டு மீண்டும் வந்து படுப்பதுமாகிய வெற்றுடம்புடன் இங்கொருத்தி உள்ளாள் என்பதை நினைவிற்கொள்” என்று தோழி, தன் தலைவியின் நிலையை ஒரு மடல் வழித் தலைவனுக்கு அறிவிக்கின்றாள் என்க.
தோட்குரியோயே! - தோளுக்குரியவனே!- தோளுக்குரியவன் என்றதால் திருமணம் செய்த உரிமை புலப்பட்டது. இருமுறை அடுக்கியதால் நினைவூட்டுதலாகவும் அமைந்து, இரக்கக் குறிப்பும் புலப்பட்டது. ஏற்கனவே ஒருத்திக் குரியவன் என்னும் உரிமை சாற்றியதால், பிறர்க்குரிமை மறுக்கப் பெற்றது என்க.
தலைவியின் அனைத்து உறுப்புகளுக்கும் உரியவனான தலைவனை, தோளுக்கு மட்டும் உரியவனாகச் சிறப்பித்துக் கூறியது என்னெனின், அது தழுவலுக்குரியதாகலின் என்க. மேலும் தலைவனின் பிரிவால் மெலிவுறும் தலைவியின் பிற உறுப்புகள் யாவினும் தோளே மிகவும் மெலிந்து தோன்றி அழகு குன்றிப் போவதாலும் என்க.
கேட்கருந் தொலைவு - பேசுகின்ற ஒலி கேட்பதற்கு அருமையான தொலைவு.
தலைவியின் தனித்துப் புலம்புகின்ற ஒலியை நாங்கள் நாள்தொறும் கேட்கும்படி அருகிலிருக்கின்றோம். நீயோ அதைக் கேட்க வியலாதவாறு சேய்மையிலிருக்கின்றாய் என்று குறிப்புணர்த்தினாள் என்க. இதனால் அவள் துயர் நன்கு உணர்த்தப் பெற்றது.
கிடந்து படுக்கையில் துயிலின்றி வெறுமனே படுத்திருந்து. நீர் வடிய கண்ணிர் வழியும்படி நனைந்திருக்கும் தோள். நாட்கு நாள் இளைக்கும் தோள் - நாளுக்கு நாள் இளைத்து வருகின்ற தலைவியினது தோள். பிரிவுத் துயரால் ஒவ்வொரு நாளும் வருந்திக் கிடக்கின்றமையின், தோளின் அழகும் வலிவும் கெட்டு இளைத்தது என்றாள். நாளுக்கு நாள் என்றதால் முன்னைய நாளினும் அடுத்த நாள் மேலும் இளைத்தது கூறப்பெற்றது. இனிதோட்குரியோயே என்று மூன்றாம் முறை அடுக்கியது. அவ்வாறு இளைத்துப் போகின்ற தன்மைக்கு நீ இரங்குதல் வேண்டும் என்று குறித்தது. முன் மழை - காயும் முன் யாமத்து மழை பொழிந்து பின் யாமத்து நிலவொளி காய்கின்ற இரவு.
முன் யாமத்துப் பெய்த மழையால் நிலமும் காற்றும் குளிர்ச்சி யடைந்திருப்பினும், பின் யாமத்தின் நிலவொளி அவளுக்கு வெப்பத்தைத் தருகின்றது. அந்த நிலைக்குப் பிரிவுத் துயரால் அவள் வாடுகின்றாள் என்றபடி,
மென்னடை இரவு - மெதுவாகக் கழிகின்ற இரவு. முன்யாமத்து மழை பெய்வதும், பின் யாமத்து நிலவு காய்வதும் போலும் ஒவ்வொரு நிகழ்ச்சியையும் தலைவி தூங்காமலிருந்து காணுவதால் அவளுக்கு அவ்விரவு மெதுவாகக் கழிகின்றதுபோல் தோன்றகின்றது. விரைந்து போகாத தன்மையால் நடக்கின்ற இரவு என்றாள்.
எதிர்நாள் எண்ணி - இரவுக்குப் பின் வருகின்ற பகலுடன் தலைவன் தன்னைப் பிரிந்து சென்ற நாளைக் கணக்கிட்டு எண்ணிப் பார்த்தவளாய்.
நோன்றரு பிரிவு- தாங்குதற்குரிய பிரிவு. இல்லிருத்தல் முல்லை என்றதால் நோன்பு என்பதைக் கற்பு நோன்பாகக் கொண்டு, அந்நோன்புட்ன் கூடிய அரிய பிரிவு என்றும் பொருள் கொள்க.
தான்.தனிப் புலம்.நள் - தான் ஒருத்தியாகவே தனித்துப் புலம்புதல். புலம்புதல் தனியாகப் பேசிக்கொள்ளுதல், நாள் எண்ணுதல் வராமை குறித்து வருந்துதல் போலும் புலம்பல்.
ஆன்ற தெரு- அகன்ற தெரு அகன்றிருப்பதால் நீண்டும் இருத்தல் வேண்டும் என்க.
அதிர் சிலை மடுத்து - அதிர்ந்து வரும் எதிரொலியைக் கேட்டு. இரவில் எங்கோ தெருக்கோடியில் குரைக்கின்ற நாயின் ஒலி, நெடிதகன்ற தெருவாகலின், எதிரொலித்துக் கேட்கின்றது. இனி, மடுத்து என்றதால் தலைவியே அவ்வொலியைக் கூர்ந்து கேட்டு அறிந்தாள் என்க.
ஓய்வறக் - குக்கல்- ஓய்வில்லாமல் குரைக்கின்ற தனித்த ஒரு குள்ளநாய். ஒலி வேற்றுமையால் அதைக் குள்ள நாய் என்றும் தனித்த நாய் என்றும் உணர்ந்தாள் என்க.
இனி, தன்போலவே அந்த நாயும் இரவில் ஒய்ந்திராமல் தொடர்ந்து குரைத்துக் கொண்டே யிருப்பதால், அதுவும் துணையின்றித் தனியாகத்தான் இருத்தல் வேண்டும் என்றும் வரைந்தாள் என்க.
பாய்ந்து இன்வருகை தடுக்கும் என்று அஞ்சி-மேற் பாய்ந்து தலைவனின் இனிய வருகையைத் தடுத்துவிடுமோ என்று அஞ்சியவளாய்.
ஒவ்வொரு நாளிரவிலும் தலைவி தலைவனின் வரவு நேராதோ என்று எதிர்பார்த்துக் கிடக்கின்றாள். ஒவ்வோர் இரவும் அவன் வந்து விடுவான் என்றே எண்ணுகின்றாள். ஆனால் அந்தக் குறிப்பிட்ட இரவில் தனித்த ஒரு நாய் வேறு தொடர்ந்து குரைத்துக் கொண்டுள்ளது. ஒருவேளை, முன்னறிவிப்பின்றித் தன் தலைவன் அன்று வர நேர்ந்தால், அருமையாக நேரும் அவனின் இனிய வருகையையும், அந்த நாய் அவன் மேற்பாய்ந்து தடுத்துவிட்டால் என்செய்வது என்னும் கவலையால் அலமருகின்றாள் தலைவி.
துணையுடன் உள்ள நாயாகவன்றித் தனித்த நாயாகவுள்ளதால் மேலே பாயலாம் என்று அஞ்சுகின்றாள். அவ்வாறு அஞ்சி எழலும் விழலுமாக விருக்கின்றாள்.
எழிலும் விழலும் ஆகி- (எதிர்பாராமல் நேருகின்ற தன் தலைவனின் இனிய வரவைத் தொடர்ந்து குரைக்கின்ற அந்த நாய் அவன் மேல் பாய்ந்து தடுத்துவிடுமோ என்று அஞ்சியவள்) படுக்கையிலிருந்து எழுந்து வெளியே ஓடிப் பார்ப்பதும், பின் சோர்வுற்று உள்ளே வந்து மீண்டும் படுக்கையில் விழுவதுமாக இருக்கின்றாள் என்க.
எழலும் விழலும் - விரைவுக் குறிப்புடன் கூடிய சொற்கள். எழுதல் விழுதல் இயல்புக் குறிப்பான சொற்கள்.
உழலும் மெய்யோடு - இயங்குகின்ற உடம்புடன்.
தலைவியை உயிரற்ற உடம்பு என்றாள். அவள் உயிர் தலைவனோடு உறைவதால் இங்குள்ளது வெற்றுடம்பே என்றாள். ஆனால் உயிரின்றி இவ்வுடம்பு இயங்குவதால், இயங்குகின்ற உடம்பு என்றாள் என்க! உணர்வின்றி இயக்கிவிட்ட பாவைபோல் தலைவி நடமாடினாள் என்க. மேலும் உடம்பு என்றதால், தலைவனை உயிரென்றும் உணர்த்தி, அவ்வுடம்பொடு வந்து பொருந்துக என்றும் கூறினாள் என்க.
ஒருத்தி ஈங்கு உண்டு - உனக்கென ஒருத்தி இங்கு உள்ளாள் என அறிக. உனக்குரியவளான ஒருத்தியென்றமையால், உரிமையற்ற பிறரை ஒரு வேளை எண்ணிக்கொண்டு நீ வராமற் காலம் கடத்தியிராதே. நின் தலைவி உயிரற்ற உடலாக இங்கு இயங்குகின்றாள். அவளுக்கு நீதான் உயிர். எனவே நீ அவனை நினைத்து உடனே வரவு கொள் என்னும் குறிப்புணர்த்தினாள் என்க.
ஒதற் பொருட்டு வேற்றுார் சென்று வதியும் தலைவற்குத் தோழி நேரில் சென்று உணர்த்தல் இயலாதாகையின் மடல்வழிப் போக்கினாள் என்க.இனி, தோழி கூற்றாக வன்றித்தலைவி கூற்றாகப் பொருள் கொளினும் இஃது இயலும் என்க
இது, முல்லைத் திணையும் பிரிவிடை யழுங்கல் என்னும் துறையும் ஆகும்.