நூறாசிரியம்/பேதை மடமகள்
பெறல்தந் தாளே பெறல்தந் தாளே!
அறம்படு நெஞ்சின் அல்லோர்க் கிணங்கி
அழனிற மேனி ஆம்பியற் சாம்ப,
குழலுகச் செங்கண் குழிந்துவெள் ளோடக்
கழைதோள் கூனிக் கவின்கெட, வைகல்
5
மதியம் போலும் முகவொளி மழுங்க
துதிவெடிப் புண்டு மடிநணி வறல,
அறலென அடிவயிறு மடியத் திறலறப்
பெறலே வினையாப் பேதை மடமகள்
பொறையோர் பொறைகெடப் பெறல்தந் தாளே!
10
பொழிப்பு:
(குழந்தைகள் பலவாகப்) பெற்றுத்தந்தவளே! பெற்றுத்தந்தவளே! அறம் அழிந்து போன நெஞ்சையுடைய பொல்லாதவர் பலரின் தழுவலுக்கு இணங்கி, தீயைப் போலும் சிவந்த ஒளிபொருந்திய மேனி, காளானைப் போல் நிறம் வெளிர்ந்து சாம்பிப் போகும் படியும், அடர்ந்த கூந்தல் உதிர்ந்து அழகிழக்கும் படியும், சிவந்த கண்கள் குழிவு எய்தி வெளிர்நிறம் பாயுமாறும், மூங்கில் போலும் ஒளியும் அழகும் வாய்ந்த இளந்தோள்கள் கூனலுற்று, அழகு கெடும்படியும், காலை நேரத்தில் புலப்படும் முழுநிலவு போல் முகத்தின் ஒளி மழுங்கித் தோன்றுமாறும், காம்புகள் வெடிப்புற்று முலைகள் நன்கு வறண்டு தொங்கும் படியும், மணல் அலைகளென அடிவயிறு மடிந்து விழும்படியும், தன் உடல் திறம் முழுவதும் அற்றுப் போகுமாறும், பெற்றுத் தருவதையே வேலையாகக் கொண்டு பேதைமை சான்ற அவ்வேழைப்பெண், பொறுமையே குணமாகக் கொண்டவர்கள் கூட இவள் செயலைக் கண்டு பொறுமை இழக்கும் படியும், பல குழந்தைகளைப் பெற்றுத் தந்தவளே!
விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது. அவள் தலைவன் நயந்த பரத்தை எத்திறத்தாள் என வினவிய தோழிக்குத் தலைவி, “அவள், அறம் போகிய இருண்ட நெஞ்சையுடையப் பொல்லாதவர் பலர்க்கும் இணங்கி, ஒளி பொருந்திய உடல் வெளிறிப் போகும் படியும், அடர்ந்த குழல் உதிர்ந்து அழகிழந்துபோகும் படியும், கண்கள் குழி விழுந்து, தோள்கள் கூனுதலுற்று, முகம் ஒளி மழுங்கி நிற்குமாறும், நுனிகள் வெடிப்புற்றுப் பூரிப்பின்றி மார்புகள் வறண்டு கிடக்கவும், அடிவயிறு மணல் அலைகள் எனுப்படி திறங்கி மடிப்புகள் எய்தவும், சூலுற்றுப் பெறுவதையே வேலையாகக் கொண்டவள் போல், அறிவில்லாத அவள், பொறுமை மிக்கவர்களும் பொறுமையிழக்கும்படி பல “குழந்தைகளை பெற்றெடுத்தவள்’ என்று பழித்தாளாக
பெறல் தந்தாள் - என்னும் எடுப்புக் குறிப்பினால், தான் இன்னும் ‘பெறாத தன்மையுடையள் என்றும் உணர்த்தினாள் என்க. இருமுறை அடுக்கால், அடிக்கடி பல குழந்தைகளைப் பெற்றவள் என்று தன் வெறுப்புத் தோன்றும்படியும், அவள் முதுமை புலப்படும்படியும் பழித்தாள் என்க.
அறம்படு நெஞ்சின் அல்லோர்க் கிணங்கி - என்றமையால், அவளை அணுகுவார் தன்மை உணர்த்தப் பெற்றது. அறமல்லாத கொடிய நெஞ்சையுடையவர்கள் தம் ஆசைக்கும் பொருளுக்கும் இணங்கியவள் என்றதால், தன் தலைவனையும் அறம்பட்ட நெஞ்சினன் என்றும், பொருள் மிகுப்பால் நெறியற்றவன் என்றும் கடிந்தாள் என்றபடி
அழல் நிற மேனி - நெருப்பைப் போலும் சிவந்த மேனி, இது, புகழ்வது போலப் பழித்ததாம். தாமரை மலர் போலும் சிவந்த மேனி என்பது போல் சொல்லாமல், நெருப்பைப் போலும் சிவந்த மேனி என்றது, அவள் உடல் குளிர்ச்சியற்று நெருப்பைப் போலும் கனலும் தன்மையுடையது கொடியது, தீயது எனற்கு, ஆனால் அத்தன்மையுடைய உடலும் இக்கால் எரிந்து சாம்பலாகவே போனது போல் காளானைப் போல், சாம்பி விட்டது என்ன ஆம்பியிற் சாம்ப என்றாள்.
குழல்உக தலைமயிர் உதிர்ந்து போகும்படி எனவே அவளுக்குத் தலைமுடி நீண்டிருந்ததைப் புலப்படுத்தினாள் என்க.
செங்கண் - செவ்வரி படர்ந்த கண் புணர்ச்சி மிகுதியில் சிவந்த கண்.
குழிந்து வெள்ளோட - குழியாகி, வெளிறு அடையும்படி, கழைதோள் கூனிக் கவின்கெட - மூங்கிலைப் போலும் அழகிய தோள், மிகுதிப் புணர்ச்சியினாலும், பிள்ளைப்பேற்றினாலும் அழகு கெடும்படி கூனுதலுற்று நிற்க,
வைகல் மதியம் போலும் - வைகறையின் முழுநிலாப் போல. விடியற்காலையின் முழுநிலவின் ஒளி படிப்படியாக மழுங்குதல் போல், முகத்தின் ஒளி மழுங்கிப் போகு மாறும்.
நுதி நுனி; முலைக்கண், வெடிப்புண்டு பலரும் வருடுதலாலும் அடிக்கடி பிள்ளை பெறுதலாலும் காய்ந்து வெடிப்புற்றுப் போகும்படியும்.
மடி நனிவறல- முலைகள் எழுச்சியின்றி நன்றாக வற்றிப் போகும்படியும். இளமைக்கே அழகுதரும் மார்பகம் நிமிர்தலின்றி தாழ்ந்து தொய்ந்து போகும்படியும்.
அறலென அடிவயிறு மடிய மணல் அலைகள் போலும் அடி வயிறு மடிதலுறும் படியும்.
திறல் அற- உடல் திறன் குன்றுமாறும்.
பெறலே வினையா - பிள்ளை பெறுவதையே வேலையாகக் கொண்ட
பேதை மட மகள் - உடலை விற்று உடலை வளர்த்தல் தீமை பயக்கும் என்று அறியாத பேதைமை சான்ற மடப்பம் பொருந்திய பெண் மூட மகள்.
பொறையோர் - பொறுமை மிகுந்த சான்றோர்.
பொறைகெட இவள் செயல்களால் பொறுமையிழந்து வெகுளும்படியும்.
பெறல் தந்தாள் - பல குழந்தைகளைப் பெற்றுத் தந்தவள். கணவன் அல்லாதவர் களிடத்துத் தொடர்பு கொண்டு பல பிள்ளைகளைப் பெற்றவள்.
இனி, சாம்ப, உக, ஒட, கெட மழுங்க, வறல, மடிய என்னும் எச்சங்களை, முற்றாகக் கொண்டு, சாம்பிப் போக, அழிந்து போக, மறைந்து போக, ஒழிந்து போக, மழுங்கி போக, வறண்டு போக, மடிந்து போக என்று ஏசிச் சாவித்தாள் எனவும் கொள்க.
அறமல்லாத நெஞ்சைக் கொண்ட தலைவனுக்கும், அவனைப் போலும் பலருக்கும், அவர்கள் தரும் பொருளுக்காக அணைய இசைந்து, அதனால் தன் நலன்கள் கெடுமாறு பல பிள்ளைகளைப் பெற்றுத் தந்தவளாகும் அப் பரத்தை எனத் தலைவி அவளைப் பழித்து ஏசினாள் என்க.
இனி, தான் அத்தனை நலன்களையும் பெற்றிருந்தும், அந்நலன்கள் முற்றும் அழிந்த விலைமகளை அவன் நாடினான் ஆகலின் அவன் அறம் கொன்றவனும் ஆகும்; இனி, அவனைச் சான்றோரும் பொறுக்கார், நான் எவ்வாறு பொறுத்தல் இயலும் என்னுங் குறிப்புத் தோன்ற உரைத்தாள் என்றபடி
இது, பெருந்திணையும் பரத்தையை ஏசல் என்னுந் துறையுமாகும்