நூறாசிரியம்/சாய்தலும் இல்லேம்

69 சாய்தலும் இல்லேம்

சாய்தலு மில்லேம் சாயினும் நனைவிழி
ஒய்தலு மில்லேம்; ஒயினும் புழுங்குளம்
மாய்தலோ யாண்டையு மிலமே! தோய்துயர்
எவனுமைத் தொடருவ தென்குவீ ராயின்;
குடிபுரந் துவக்கும் கொற்றமு மில்லை;
முடிபணிந் துய்யுங் குடியுமீங் கில்லை;
நிறையின் வாங்கிக் குறையின் மாறும்
கறைநெஞ் சத்துக் கள்வரே வணிகர்;
அஞ்சுடர் தவறினும் அறந்தவ றாத
செஞ்சொல் மன்றுந் தந்திறங் குன்றிய,
கூத்துங் கலையுந் தீத்திறம் பட்ட,
பூத்துயர் கற்பின் மடவரும், புரைந்து
மனைமுடி கழற்றிப் புனைமுடி பூண்டார்!
வலியோர் வலிந்தார்; மெலியோர் மெலிந்தார்;
குலம்பல வாகிக் கலாம்பல விளைத்த;
தந்துயர் பொறைந்து பிறர்துயர் கரையும்
செந்நெறிச் சான்றோர்க் கேமமு மின்றே!
புல்லென் உவகைக் குள்ளம் விற்று
நல்லியல் பழிகுவர்; நாணுத் துறந்தார்;
பொருள்தனி யொன்றே போற்றும்
இருள்மிகு வாழ்வோர்க் கிரங்குகை யானே!


பொழிப்பு :

யாம் உடலைச் சாய்த்துப் படுத்தலும் இல்லேம் ; ஒரோவழிப் படுப்பினும் ஈரத்தோய்ந்த விழிகளை மூடித் துயிலுதலும் இல்லேம் : ஒரோவழித் துயிலினும் வெதும்புகின்ற எம்மனம் மறதி கொள்ளுதல் ஒரு போதும் இலேம்!

'இங்ஙனம் செறிந்த துயரம் நம்மைத் தொடருவது ஏன் ? 'என்று வினவுவீராயின், குடிமக்களைக் காத்து வாழ்வித்து உளம் மகிழும் நல்லரசும் நாட்டில் இல்லை; அரசுக்கு அடங்கி நடந்து குற்றங் குறைகளின் நீங்கி வாழும் குடிமக்களும் இல்லை. பிறரிடத்தினின்றும் தாம் மிகுதியாக வாங்கிக் கொண்டு பிறர்க்குக் குறைவாகக் கொடுக்கும் மாசுபட்ட மனத்தையுடைய கள்வர்களே வணிகர்களாக உள்ளனர். அழகிய ஒளிவீசும் ஞாயிறு இயங்குமுறை தவறினும் முறை பிறழாத நேர்மையான தீர்ப்பு வழங்கும் அற மன்றங்களும் தம் இயல்பினின்றுங் குன்றிவிட்டன. நாடகமும் பிறகலைகளும் தீய இயல்புடையன ஆகிவிட்டன. பொலிவுற மேம்பட்டு விளங்கும் கற்பிற் சிறந்த மகளிருங்கூட மனநிலை திரிந்து மனைக்குரிய ஆளுமையைக் கைவிட்டு ஒப்பனையால் செயற்கை முடியை அணிந்து கொள்வார் ஆயினர். பல்லாற்றானும் வலிமை வாய்ந்தவர்களே மேலும் வலிமை பெற்றுள்ளனர்; மெலிவுற்றவர்களோ மேலும் மெலிவுபட்டுள்ளனர். குலங்கள் பல்வேறு சாதிகளாகக் கிளைத்துப் பற்பல கலகங்களைச் செய்கின்றன. தமக்கு உற்ற துன்பத்தைப் பொறுத்துக் கொண்டு பிறர்படும் துன்பத்தைப் போக்கும் பொருட்டுக் குரல்கொடுப்போரும் செவ்விய நெறியைக் கடைப்பிடித்து ஒழுகுவோருமான சான்றோர் பெருமக்களுக்குத் தக்க பாதுகாப்பு இல்லை. இத்தகைய சீர்கெட்ட நிலையினும் இழிந்த மகிழ்ச்சியின் பொருட்டு மனக்கருத்தை விற்று நல்ல இயல்புகள் அழியப் பெறுவோரும் தீவினைகளைச் செய்யக் கூசாதவர்களும் கைப்பொருள் ஒன்றையே பெரிதெனக் கொண்டு பேணிக் காக்கும் அறியாமை மிக்க வாழ்வுடையோருமாக இருக்கும் மக்கள் நிலையை எண்ணி யாம் வருந்துகின்றமையான் என்றவாறு.

விரிப்பு :

இப்பாடல் புறப்பொருள் பற்றியது.

நாட்டின் பல்வேறு இழிநிலைகளையும், மக்களின் சிறுமைப் போக்கையும் எண்ணித் தாம் வருந்தும் நிலையை வெளிப்படுத்திப் பாடியது இப்பாட்டு.

சாய்தலும் இல்லேம் - என்குவிராயின் நிற்றலும் இருத்தலும் ஆகிய நிலைகளை இயங்குவதற்கு ஏற்றவை யாதவின் இயக்கத் தவிர்தலைக் குறிக்கக் கிடக்கும் நிலையைக் கூறினார். சாய்தல்-படுத்தல்,

மனக் கவலையின் மெய்ப்பாடு கண்கசிதல் ஆகலின் நனைவிழி எனப்பட்டது. க்வலையால் வெதும்பும் உள்ளம் அக் கவலையை எந்நிலையிலும் மறத்தலாகாமையின் ‘மாய்தல் யாண்டையும் இலம்’ என்றார். மாய்தல் -மறத்தல்,

உள்ளமும் உடலும் அமைதிபெற வொட்டாது வருத்துதலின் தோய்துயர் என்றார். தோய்தல்-செறிதல்

குடிபுரந்து உவக்கும் கொற்றம் :அரசு குடிமக்களைப் புரத்தலாவது புறப்பகையான் வரும் போர்கள், அகப்பகையான் வரும் பூசல்கள், மற்றும் அதிகார முறைகேடுகள் இயற்கை ஊறுபாடுகள் முதலானவற்றை எதிர்கொண்டும் தடுத்து அடக்கியும் நெறிப்படுத்தியும் இழப்பீடு நல்கியும் பாதுகாத்து வாழ்வித்தல், அன்றியும் மக்களின் அறிவு வளர்ச்சிக்கும் செயும் முயற்சிகளுக்கும் ஊக்கமளித்து உதவிபுரிதலுமாம்.

மக்களை இனிது வாழ்வித்தலே அரசின் மெய்யான வெற்றியா கலின் அதனான் வரும் மனமகிழ்ச்சி உவகை எனப்பட்டது.

முடிபணிந்து உய்யுங் குடி : குடிமக்கள் அரசுக்கு அடங்கி நடத்தலாவது அரசு வகுக்கும் அறச்சட்டங்கள் செயற்படவும், நலத் திட்டங்கள் நிறைவேறவும் அவற்றைக் கடைப்பிடித்தும் ஒத்துழைத்தும் வாழ்தல், உய்தல்-குற்றங் குறைகள் நீங்குதல். செய்தக்க அல்ல செய்தல் குற்றமும் செய்தக்க செய்யாமை குறையுமாம். முடிஅரசு

இனி, முடிபணிந்து உய்யுங் குடியாவது அரசும் பணிந்து உய்யுமாறு விளங்கும் தலைமை சான்ற குடிமக்கள் எனினுமாம்.

நிறையின் வாங்கிக் ... வணிகர் ': நிறையின் என்பது குறையின் என்பதற்கு மறுதலையாக நிற்றலின் அளவின் மீறி மிகுதிப் பொருள் கொடுத்தது.

பேராசையான் நடுநிலை பிறழ்ந்து பிறரை ஏமாற்றிப் பொருள் குவிக்கும் குற்றவாளிகள் ஆதலின் இழிநிலை வணிகர்கள் கறை நெஞ்சத்துக் கள்வர் எனப்பட்டனர். ஈண்டுச் சுட்டப் பெறும் வணிகர் நிலை,

கொள்வது உம் மிகைகொளாது

கொடுப்பது உம் குறைகொடாது

எனப் பட்டினப் பாலை குறிக்கும் வணிகர் நிலைக்குத் தலைமாறாதல் காண்க.

அஞ்சுடர் தவறினும் -குன்றிய : முறை பிறழாத இயக்கத்துக்குக் க்திரவனை எடுத்துக் காட்டாகக் கூறுதல் வழக்காதலின் ‘அஞ்சுடர்தவறினும்’ என்றார். இருள்நீக்கி அச்சந்தவிர்த்து எழுச்சியூட்டுதலின் கதிரவனை அஞ் சுடர் என்றார். செஞ்சொல் - நடுநிலையான தீர்ப்புரை.

கூத்தும் கலையும் தீத்திறம் பட்ட : நாடகக் கலை எல்லா நிலையினரையும் ஈர்க்கும் இயல்பு பற்றியும் - பாடல், உரையாடல், இசை, கூத்து, நடனம், ஒவியம், ஒப்பனை முதலான பல்வகைக் கலைகளையும் உள்ளடக்கி நிற்றல் பற்றியும் ‘கூத்துங் கலையும்’ என்ற விடத்துத் தனித்தெடுத்துச் சிறப்பித்து உரைக்கப்பட்டது.

கூத்து என்பது இசை தழுவிய ஆட்டத்தையும் நாட்டியம் என்பது இசைப்பாடல் தழுவிய மெய்ப்பாடு சான்ற நடனத்தையும் நாடகம் என்பது கதை தழுவிய நிகழ்ச்சியையும் சிறப்பாகக் குறிக்கும். குறிப்பினும் ஈண்டுக் கூத்து என்பது மேற்காட்டியவாறு கலைகளினின்றும் தனித்து எடுத்துச் சிறப்பித்துரைக்கப்படுதலின் அது நாடகக்தையே குறித்தல் அறியப்படும். அன்றியும் அஃது இற்றை நிலையில் திரைப்படமாகவும் கொள்ளப்படும்.

பூத்து உயர் கற்பின் -பூண்டார் : கல்வி கேள்விகளினும் செல்வச் சிறப்பினும் எழில்நலங்கள் பிறவற்றினும் மேம்பட்டதாகவும் தெய்வத் தன்மையுடையதாகவும் போற்றப்படுதவின் கற்பு பூத்து உயர் கற்பு எனப்பட்டது. அஃது இளமகளிர்க்கே சிறப்புடைமை பற்றி கற்பின் மடவர் என்றார். மடவர்.இளமகளிர். அவர்தாமும் மனந்திரிந்து ஒப்பனையால் போலி முடியைப் புனைந்து கொள்ளும் நிலைக்கு இழிந்தனர் என்றார். புரைந்து - புரைபட்டு.

மகளிர் மனையாள், மனைவி, இல்லாள், இல்லத்தரசி என்றெல்லாம் சிறப்பிக்கப்படுதலின் மனை முடிகழற்றி’ என்பதற்கு ‘மனைக்குரிய ஆளுமையைக் கைவிட்டு’ என்றாம். அவ்வாறன்றி ‘இயற்கையான முடியைக் கத்தரித்து விட்டு’ எனினுமாம். இவ்வாறே அழகு வேண்டி இயற்கையான பற்களைக் களைந்துவிட்டுப் பொய்ப்பல் கட்டிக் கொள்வாரும் பலர்.

வலியோர் வலிந்தார் மெலியோர் மெலிந்தார் : செல்வத்தானும் பிறவுடைமைகளானும் ஆளுமைநிலைகளானும் வலிமையுடையோரே தம் வலிவைப் பெருக்கிக் கொள்ளுதலும் அவற்றின் மெலிவுற்றோர் மேலும் மெலிவுறுதலும் வெளிப்படை

குலம் பலவாகிக் கலாம்பல விளைத்த- நிலத்தானும் தொழி லானும் இயற்கையைாய் ஒன்றி வாழ்ந்த மக்கட் குலங்கள் அயலவர் சூழ்ச்சியால் பிறப்பின் வந்தனவாகவும் உயர்வு தாழ்வு உடையனவாகவும் திரிக்கப்பட்டும் பல்வேறு சாதிகளாகப் பிரிக்கப்பட்டும் ஒவ்வொன்றினும் எண்ணற்ற உட்பிரிவுகள் விரிக்கப்பட்டும் தமக்குள் பகைத்து நின்று கலகம் விளைத்தல் கண்கூடு.

தந்துயர் பொறைந்து-ஏமும் இன்றே: தந்துயர் பொறைந்து உற்ற நோய் நோன்றல்’ என்றபடி தமக்குற்ற துன்பத்தைப் பொருட் படுத்தாமல் பொறுத்துக் கொண்டு. தமக்கென முயலா நோன்றாட் பிறர்க்கென முயலுநர் என்றான் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி.

பொறைந்து- பொறுத்துக் கொண்டு. பொறை என்னும் முதனிலை திரிந்த தொழிற்பெயர் பொறைந்து என்று எச்சமாகி வினை வடிவு கொண்டது. கரைதல் அழைத்துச் சொல்லுதல்.

நல்லனவெல்லாம் கடனெனக் கொண்டு ஒல்லும் வகை யெல்லாம் உயர்பணி செய்யும் சான்றோர் பெருமக்களும் அரம்பர்களின் தாக்குதலுக்கு ஆளாக நேர்தலானும் தம் நற்பணிகளுக்கு உதவியும் துணையும் இன்றி அவற்றைக் கடைகொட்கச் செய்தற்கு இடர்படநேர்தலானும் சான்றோர்க்கு ஏமமும் இன்றே என்றார்.

புல்லென் உவகைக்கு ... இரங்குகை யானே : இழிநிலை மகிழ்ச்சியின் பொருட்டு மாந்தர்க்குச் சிறந்த மனக்கருத்தை விலைப் படுத்தலும், தீவினைகளைக் செய்யக் கூசாமையும் அறக்கொடினவாகலின் அவற்றைச் செய்வார்நிலை ஆசிரியரை வருத்துவதாயிற்று.

‘பொருளாட்சிபோற்றாதார்க் கில்லை’ என்றபடி வாழ்க்கைத் தேவையின் பொருட்டுப் பொருளும் போற்றத் தக்கதே யாயினும் அஃது ஒன்றனையே பெரிதெனப் போற்றித் தீவினைகளுக்கு இடமான அறியாமை இருளில் சிக்கி உழல்வோர் இரக்கத்துக்கு உரியராயினர்.

இரங்குகையானே சாய்தலும் இல்லேம் எனக் கூட்டுக !

இப்பாடல் பொதுவியல் திணையும், முதுமொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.