நூறாசிரியம்/தமிழே வாழிய

அண்ணா மலைசெய் பல்கலைக் கழகத்து
உண்ணில் போக்கிய இளையோர் அண்மி
தெருவலம் வந்து சூளுரை முழக்கி
ஒள்ளிய கொள்கை சுவர்தொறும் வரைந்து
மைநிற நெடுங்கொடி பன்மனை தூக்கி 5
நெடுந்தொடர் வண்டித் தடம்படுத் திருந்து
கல்லாப் புலைமொழி கற்கெனத் தூண்டிய
ஒல்லாப் பேதையர் அரசு கடிந்து
காவல் மாடத்து ஏவல் பணிந்து
வல்சிறை போகி மெய்யடி பட்டு 10
நெருப்புரை யாற்றி உறுப்பறை போகிய
தடந்தோள் மாணவர்க் குள்ளுயிர் கீண்ட
தாழா நல்லிசைத் தமிழே
வாழிய நெடுநீர் வையநாள் வரையே!

பொழிப்பு :

அண்ணாமலையார் உருவாக்கிய பல்கலைக்கழகத்தின் (உணவு விடுதியிலிருந்து ஏற்பட்ட கலவரத்தின் பொருட்டாய்) வெளியேற்றப்பட்ட இளைஞர்கள் யாவரும் ஒன்று கூடித் தெருத் தெருவாய் ஊர்வலம் வந்தும், (இந்தியை நுழைய விடமாட்டோம் எனப் பலவாகிய) உறுதி உரைகளை முழக்கியும், தெளிவான அறிவு சான்ற கொள்கை மொழிகளை ஆங்காங்குள்ள சுவர்கள்தோறும் வரைந்தும், நீண்ட கறுப்பு நிறக் கொடிகளைப் பல வீடுகளில் ஏற்றி நிறுத்தியும், நெடிய் தொடர்வண்டித் தடங்களில் படுத்து, வண்டிகளைத் தடுத்தும், கல்விச் சிறப்பில்லாத புல்லிய மொழியாகிய இந்தியைக் கற்றுக் கொள்ளத் துண்டிய, அதைத் தடுத்து நிறுத்தவியலாத பேதைமை சான்றவரின் அரசமைப்பைக் கடிந்தும், காவல் நிலையங்களில் உள்ள காவலர்களின் கட்டளைப்படி பணிந்தும், சிறைப்பட்டும், உடல் வருந்த அடிபட்டும், நெருப்புப் போலும் கொதிப்பான உரைகளைக் கூறியும், உடல் உறுப்புகள் தாக்கப்பட்டதால் ஊறுபட்டும், நின்ற பருத்த தோள்களை உடைய மாணவர்களுக்கு, அத்தகைய வீர உணர்வு பெறுமாறு உள்ளுயிரைக் கிளர்ச்சியுறச் செய்த தாழ்ச்சியுறாத நல்ல புகழை உடைய தமிழ்மொழியே, நீ வையமானது இருக்கின்ற நாள்வரை இருந்து வாழ்வாயாக!

விரிப்பு:

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

கல்லாப் புலைமொழி இந்தியை எதிர்த்து நின்ற செல்லா நல்லிசை மாணவர் தமக்கு உள்ளுணர்வு கீண்டிய தமிழை வாழ்த்திப் பாடியது இது.

“இந்தி நுழைப்பால், தமிழ் உணர்வு கொளுத்தப்பெற்ற அண்ணாமலைப் பல்கலைக் கழகத்து மாணவர்கள், கலவரத்தின் காரணமாக உணவு விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட பின்னை, அவர்கள் அனைவரும் ஒன்றுகூடி ஆங்கிருந்து தெருத் தெருவாய் இந்தியை எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டு ஊர்வலம் சென்றும், இந்தியை எதிர்க்கின்ற கொள்கை வரிகளை ஆங்காங்குள்ள சுவர்கள் தொறும் எழுதியும், நீண்ட கறுப்புக் கொடிகளைப் பல வீடுகளில் ஏற்றியும், தங்கள் எதிர்ப்பைத் தெரிவிக்க வேண்டி, ஆங்குள்ள நீண்ட தொடர்வண்டிகளைத் தடுத்து நிறுத்தியும், கல்விச் சிறப்பில்லாத புல்லிய இந்திமொழியைக் கற்கத் தூண்டிய அறிவற்ற அரசு ஆளுமையைக் கடிந்தும், அவற்றால் காவலர்களின் பிடிக்குள்ளாகிச் சிறைப்பட்டும், அவர்களால் உடல் உறுப்புகள் ஊறுபடுமாறு அடிபட்டும், அக்காலும் அடங்காமல், நெருப்புப் போலும் சுடுகின்ற சொலவகங்களைக் கூறியும் நின்ற, பருத்த தோள்களை உடைய மாணவர்களுக்கு அவர்கள் அத்துணை வீர உணர்வு பெறுமாறு, அவர்களின் உள்ளுயிரைக் கிளர்ச்சியுறத் தூண்டிய, தாழ்ச்சியுறாத நல்ல புகழையுடைய தமிழ் மொழியே, நீ, உலகம் உள்ளளவும் நின்று வாழ்வாயாக” என வாழ்த்தியதாகும் இப்பாடல்.

அண்ணாமலை செய் பல்கலைக் கழகத்து - கல்வி வள்ளல் அண்ணா மலையால் கட்டுவிக்கப் பெற்ற பல்கலைக் கழகத்தின்.

உண்ணில் போக்கிய - உண்ணுகின்ற இல்லமாகிய உணவு விடுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்ட.

இளையோர் - இளைமை பொருந்திய மாணவர்கள்.

அண்மி - ஒன்றுகூடி

தெருவல்ம் வந்து - தெருக்கள் தோறும் ஊர்வலம் வந்து.

சூளுரை முழக்கி - கொள்கை உறுதிகளை உரக்க ஒலித்து.

ஒள்ளிய கொள்கை - தெளிந்த அறிவார்ந்த கொள்கை மொழிகளை

மைநிற நெடுங்கொடி - கறுப்பு நிறமுடைய நீண்டகொடி

பன்மனை தூக்கி - பல வீடுகளிலும் தூக்கி நிறுத்தி,

கல்லாப் புலைமொழி - கல்விச் சிறப்பில்லாத புன்மை சான்ற மொழி இழிந்த மொழி - இந்திமொழி.

கற்கெனத்துண்டிய - கற்றுக் கொள்ளுங்கள் எனத் தூண்டிய.

ஒல்லாதப் பேதையர் - இந்தி நுழைவைத் தடுத்து நிறுத்தவியலாத பேதைமை சான்றவர்.

அரசு கடிந்து - அரசைக் கடிந்து.

காவல் மடம் - காவல் நிலையம்.

ஏவல் பணிந்து - கட்டளைக்குப் பணிந்து.

வல்சிறை போகி - வலிந்த சிறைகளுக்குள் அடைக்கப்பட்டு.

மெய்யடி பட்டு - உடல் வருந்த அடிபட்டு.

நெருப்புரை - கொதிக்கின்ற உணர்வுரை.

உறுப்பறை போகிய - உடல் உறுப்புச் சிதைவு ஏற்பட்ட

உள்ளுயிர் கீண்ட - உள்ளுயிரில் தோய்ந்திருந்த தமிழுணர்வைக் கிளர்ச்சியுறச் செய்த

தாழ நல்விசைத் தமிழ் - என்றும் எதிலும் தாழ்ச்சியுறாத சிறந்த புகழ்பெற்ற தமிழ்மொழி.

நெடுநீர்வையம் - நீண்ட கடலையுடைய உலகம். வண்டிபோல் சுழன்று ஒடுவதால் உலகை வையம் என்றனர்.

வையநாள் வரை - உலகம் நிலைத்திருக்கின்ற நாள் வரைக்கும்.

வட அரசு தென்மாநிலங்களின் மேல் கட்டாயமாகத் திணிக்கின்ற இந்தி என்னும் கல்விச் சிறப்பற்ற புல்லிய மொழியை எதிர்க்கத் திறமையற்ற மாநில அரசு, அதைக் கற்குமாறு மாணவர்களைத் தூண்டியதும், அதால் வெறுப்புற்று மனக் கொதிப்படைந்த மாணவர் பலரும் குறிப்பாக அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக் கல்வி பயின்ற மாணவர்கள் பலரும், போராட்டம் நிகழ்த்திய முறைமையைக் கூறி, அவ்வுணர்வெழுச்சிக்குக் காரணமாயமைந்த தமிழ் மொழியை வாழ்த்திக் கூறியதாகும் இப்பாடல்.

இப்பாடல் முன்னது திணையும், முதுமொழி வாழ்த்து என் துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.

"https://ta.wikisource.org/w/index.php?title=நூறாசிரியம்/தமிழே_வாழிய&oldid=1251265" இலிருந்து மீள்விக்கப்பட்டது