நூறாசிரியம்/தமிழ்கண் டோரே

54 கோணை அரசியல்


கவுள்நனை வேழம் கணைபட் டாங்கு
செயிர்வுமே லோங்கிய கல்விச் செவ்வியர்
ஒருதலை மாமணி உகுத்தோன் பெயர்ந்த
மனைமுகத் தவன்றணி ஈட்டங் குவித்து
முழங்கு விறற்பறை முருக மூட்டும் 5
அழற்போல் வெவ்வெரி அடரக் கொளுத்திய
காட்சி கண்டோர் தமிழ்கண் டோரே
பூட்கை அறிந்தோர் தமிழறிந் தோரே!
பொன்றிய தமிழ்ச்சீர் புதுக்கி மலர்த்தும்
மாணவர் அறவினை மகிழார் 10
கோணை அரசியல் கொள்கையி னோரே!


பொழிப்பு :

கசிகின்ற மதநீரால் கதுப்பு (கன்னம்) நனையப் பெற்ற ஆண் யானை, எய்த அம்பினாலும் குத்துப்பட்ட விடத்து, அடங்காச் சினம் மேலெழும் தன்மையில் (அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துக்) கல்வி பயில வந்த மாணாக்கர்கள், தங்களுள் ஒருவனாகிய தலைமைத்திறம் பொருந்திய சிறந்த ஒளி மணி போன்ற வீரன் அரசேந்திரனைச் சுட்டு வீழ்த்தச் செய்தோனாகிய கழகப் பதிவாளன், (முன்னரே அஞ்சித் தன் வாழிடமாகிய மனையைத் துறந்து புறம் போகிய பின்னை, அம் மனையின் முன்றிலில், (அவன் உள்ளே விட்டுச் சென்ற மனைப்பொருள்களாகிய) சிறப்புடைய ஈட்டங்களை (கதவை உள்ளே சென்று, கொண்டு வந்து போட்டுக்) குவித்து, தொடர்ந்து முழங்குகின்ற வெற்றி முரசம், (ஈரத்தால் தளர்வுற்று முழக்கொலிகுறைய, அதனை மீண்டும் விறைப்பேற்றுதற் பொருட்டுத் தீக் கொளுவிக்காட்டி) முருகுவிக்க முட்டுகின்றதழல் போல் வெம்மை மிகுந்த எரியினை அடர்ந்து எரியும்படி கொளுத்தி மூட்டிய அக் காட்சியைக் கண்டவர்கள்தாம், (அவர்கள் சினந்து போராடுவதற்குக் காரணமாக விருந்த தமிழ் மொழியின் சிறப்பினை, அவ்வுணர்வின் வழி) உண்மையில் கண்டவர்கள் ஆவார்கள்; அவர்களின் உறுதிப்பாட்டை (இவ் வகையான செயல் வழி நேரில் கண்டு) அறிந்தவர்கள் தாம், (அவர்களின் எழுச்சிக்கு அடிப்படையாக விருந்த தமிழ் மொழியின் சிறப்பினை உண்மையிலேயே அறிந்தவர்கள் ஆவார்கள்.

குறைந்து விட்ட தமிழ் மொழியின் சிறப்பியல்களை மீண்டும் புதுமை செய்து மலர்ச்சியுறச் செய்யும் மாணவர்களின், இவ்வலிந்த முயற்சி (அழிவின் பாற் பட்டதன்று); அறத்தின் பாற்பட்ட செயலே என்று கருதி மகிழாதவர்கள் (எவரேனும் இருப்பின் அவர்கள்) கொடுமையான வல்லதிகார அரசியல் கொள்கை உடையவர்களாகவே இருத்தல் வேண்டும்.

விரிப்பு :

இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.

அண்ணாமலைப் பல்கலைக் கழகத்துத் தமிழ்த்திறங் காக்க வெழுந்த மாணவருள் அரசேந்திரனைக் கொல்லுவித்த கழகப் பதிவாளர்தம் உடைமையைத் தீக்கொளுவியழித்த மாணவர் தந்திறம் வியந்து பாடியது இது.

அரசேந்திரன், குண்டடிபட்டு மாய்ந்தான் என்ற செய்தி கேட்டதும், மாணவர்கள் , இதற்கெல்லாம் அடிப்படை, பல்கலைக் கழக வளாகத்திற்குள் காவலர்களை வரவிட்ட பதிவாளரின் செயலன்றோ என்று எண்ணி, வெகுண்டெழுந்து, அவர் வீடு சென்றனர். செல்லவும், கழகப் பதிவாளர் அதன் முன்பே, தம் வீட்டைப் பூட்டிவிட்டுக் குடும்பத்துடன் வெளியேறியிருந்ததைக் கண்டனர். காணவும், மீண்டும் கொதிப்பு மேலிட்டவராய் அவர் வீட்டை உடைத்து, உள்ளே இருந்த அவரின் உடைமைகளையெல்லாம் வெளியே எடுத்துக் கொண்டு வந்து போட்டுக் குவித்துத் தீ வைத்துக் கொளுத்திச் சாம்பலாக்கினர். இந்த நிகழ்ச்சியை நேரில் பார்த்தவர்கள், அம் மாணவர்களின் எழுச்சிக்குத் தமிழ் அன்றோ காரணம் என வியந்தனர். அந்த நிலையை நேரில் கண்டு வியந்து எழுதியதாகும் இப்பாடல்.

கவுள் - யானையின் கதுப்பு, கன்னம்

நனைவேழம் - மத நீரால் நனைக்கப்பட்ட ஆண்யானை,

கணை பட்டாங்கு - ஏற்கனவே மதம் பிடித்துள்ள ஆண் யானையின் மேல், அம்பு தைத்தது போல்.

செயிர்வு- கடுஞ்சினம்.

கல்விச் செவ்வியர் - கல்வி பயிலும் மாணாக்கர்கள். மாண்பு என்னுஞ் சொல்லின் அடிப்படையாகத் தோன்றிய மாணாக்கர் என்னுஞ் சொல்லுக்கு இணையான புதுச்சொல், செவ்வியர்.

ஒரு தலை மா மணி - மாணவர்களுள் தலை சிறந்த வீரனாகிய அரசேந்திரன்.

உகுத்தோன் - உயிரை உகுக்கச் செய்தோனாகிய பதிவாளன்.

பெயர்த்த- வெளியேறிப் புறம்போகிய, எவர்க்கும் தெரிவியாது சென்றமை பெயர்தல் எனலாயிற்று.

மனைமுகத்து.குவித்து- பதிவாளனின் மனையின் முன்றிலில் அவனது தனி ஈட்டமாகிய மனையடை பொருள்களைக் கொண்டு வந்து குவித்து, தனியீட்டம் என்றது அவன் அல்வழியில் தொகுத்த குறிப்பாயிற்று.

குவித்து- ஒன்றெனக் கூட்டி

முழங்கு விறல் பறை- வெற்றிப் பண் முழங்கித் தொய்ந்த பறைத் தோல்,

முருக மூட்டும் அழல் போல் - பறைத் தோலின் தொய்வு நீங்கிச் சூடேறி விறைப்புறுதற்கு மூட்டுகின்ற எரி நெருப்புப் போல்,

வெவ்வெரி அடர - வெப்பமான தீ நாக்குகள் நெருங்கி எரிய.

காட்சி கண்டோர் - அக்காட்சியினை நேரில் கண்டவர்களே ;

தமிழ் கண்டோரே - உண்மையில் தமிழ் மொழியின் ஆற்றலைக் கண்டவர்கள் ஆவார்கள்.

மாணவர்கள் பதிவாளனின் உடைமைகளை அவர் வீட்டினின்று வெளியே எடுத்துக் கொண்டுவந்து போட்டுக் குவித்துத் தீமூட்டி எரித்தது. அவர்கள் தமிழ் மொழியை இந்தி நுழைப்பினின்று காக்க வெழுந்த எழுச்சியினால் ஆதலின், அவ்வெழுச்சிக்குக் காரணமாகிய தமிழ் மொழியின் உணர்வாற்றாலே மாணவர்களின் உள்ளூர நின்றது, என்றது.

பூட்கை - கொள்கை உறுதி.

பூட்கை.... தமிழறிந்தோரே!- மாணவர்களின் கொள்கை உறுதியை நேரில் அறிந்தவர்கள்தாம். (அதற்குக் காரணமாகிய தமிழ் மொழியின் சிறப்பியல்கள் இவ்வளவு உறுதியைத் தர வல்லனவா என்று எண்ணித்) தமிழை உண்மையில் அறிந்தவர்கள் ஆவார்கள்.

பொன்றிய - குறைந்த, மறைந்த

தமிழ்ச்சீர்- தமிழ் மொழியினது பழைமை, புதுமை, முதுமை, இளமை, தனிமை, இனிமை, திண்மை, நுண்மை, புகன்மை, (புகலுந் தன்மை) , அகன்மை (விரிந்த தன்மை) உண்மை,எண்மை(எளிமை), நயன்மை (விரும்புந் தன்மை), இயன்மை, (இயற்கைத் தன்மை), தாய்மை, தூய்மை, வியன்மை, பயன்மை, (பயன்படும் தன்மை), எழின்மை, பொழின்மை (பொருள் தரும் தன்மை), இழுமை(இளகல் தன்மை), முழுமை (நிறைந்த தன்மை), செம்மை, மும்மை (இயல், இசை நாடகம் எனும் மூன்றியல் தன்மை), சீர்மை, ஓர்மை (ஓரியல் தன்மை-ஒருமைத் தன்மை) ஆகிய இருபத்து ஆறு சிறப்பியல்களை),

புதுக்கி-(இவ்வாறு தமிழ் மொழியின் சீர்மைகள் பலவாக இருப்பினும், அவை நலிந்தும் மெலிந்தும், திரிந்தும் திசைந்தும், மறைந்தும் குறைந்தும், மறந்தும் இறந்தும் காணப்படும் தன்மைகளைச் சரி செய்து அவற்றைத் தற்கால அறிவியல் வளர்ச்சிக் கேற்பப்) புதுமை செய்து,

மலர்த்தும் - அதனை எதிர்கால நிலைப்பாட்டுக்கு உரிய வகையில் விரிவும் மலர்ச்சியும் உறும்படி செய்கின்ற.

மாணவர் அறவினை - (மாணவர்தம் எழுச்சியை வன்முறை என்று இகழாமல், புதியதோர் உலகு செய்யும் புரட்சிப் பணியாகிய) கூர்தலற மேம்பாட்டு உழைப்பு என்று கருதி.

மகிழார் - இவ்வாறு ஒர் எழுச்சி வந்ததே என்று எண்ணி மகிழ மாட்டாதவர்கள்.

கோணை அரசியல் - நேரல்லாமல் வளைந்த கொள்கைகளையும் நடைமுறைகளையும் கடைப்பிடித்து நடத்தப் பெறும் இக்கால வல்லாண்மை அரசியல் தன்மையின்,

கொள்கையினோரே - கொள்கையைக் கொண்டவர்களே!

இப்பாடலின் வரலாற்று நிகழ்வினை முன்னைய மூன்றுபாடல் களானும் உரைகளானும் கண்டு கொள்க.

மாணவர்களின் எழுச்சி அறமுடைய செயலன்று என்று மனமும், முகமும் சுளுக்குவார், கைதேர்ந்த அரசியல் கரவுடையவர்களே அன்றி, உண்மையின் தமிழ் மொழியின் சிறப்பியல்களை அறிந்தாரல்லர் என்று தெளிப்பான் வேண்டி உரைத்தது என்க.

இப்பாடல் முன்னது திணையும், முதுமொழிபேணல் என்துறையும் என்க.

திணையும் துறையும் புதியன.