நூறாசிரியம்/தமிழ் கமழ் உள்ளம்!
விழைவே வேண்டலின் நனிகுறை வினதே!
பிழைப்பே வழுக்கிலா முறைபிறழ் விலதே!
உழைப்பே தமிழ்கமழ் உள்ளத் துன்றியோ
ரிழைபுறஞ் செல்லா நிலைபொருந் துதலின்
இழிவழிப் பொருட்குப் பழிகாண் பதுவே!
காதற் பூணலாக் கடுகிழை பூணா
ஆதுணை புரக்குங் குடும்போ பெரிதே’
வரவே யொருமுழப் பீறல் வரைத்தே!
நிரப்பே நெடுந்தொளை வாடையி னேர்த்தே!
வாழ்வே நளிர்த்த வல்லிருள் முயக்கில்
கூனித் தாழ்ந்த கூரையு ளோதத்து
முழத்துணி மெய்ம்மேன் முன்னும் பின்னும்
இழுத்திழுத் தழுங்கு மியல்பி னொத்தே!
உறவே பொருட்குக் கையகன் றேந்திக்
குறையக் கரையும் புரைகாய் வதுவே!
அயலே குய்ப்புகை பிறமனை யணுகா
தியங்குதாழ் செறிக்கு மியல்பின தளியே!
ஊரே ஆளுநர்க் குளங்கவ லாது
சீர்மை நூறும் சிறுமைத் ததுவே!
ஈங்கிவ் விடையிலெம் உயிரே
போங்குறி யறியாக் கானிர்ப் புணையே!
பொழிப்பு :
எம் விருப்பம் எமக்குற்ற தேவையினும் மிகக் குறைவினது. எம் பிழைப்பு வழுக்கலிலாத நெறி முறையிற் பிறழ்ச்சி ஏதும் இலாதது; எம் உழைப்பு தமிழ் கமழ்கின்ற உள்ளத்தே ஊன்றி, ஒர் இழைதானும் புறத்தே செல்லாத நிலையிற் பொருந்துதலின் இழிந்த வழி வரும் பொருளுக்குப் பழி கண்டு விலகும் தன்மையது; அன்பு எனும் அணிகலனன்றிப்பிறிதோர் அணியைக் கடுகளவு தானும் பூணுகிலாத, எமக்கு ஆய துணைவி புரந்து வரும் குடும்பமோ பெரிது. எமக்கு வரும் வரவோ கிழிசல் உடைய ஒரு முழப் பீறல் போன்றது. எமக்குற்ற வறுமையோ, நெடிது தொளைக்கின்ற வாடைக்காற்றைப் போன்றது. இவற்றால் யாம் வாழும் வாழ்வோ, குளிர் பொருந்தி வலிந்த இருளால் முயங்கப் பெற்ற கூரை கூனிய தாழ்ந்த குடிலுள், ஈரங்கசிந்த ஒதத்துள், உடல் போர்த்தப் பற்றாத ஒரு முழத்துணியை முன்னும் பின்னும் இழுத்திழுத்துப் போர்த்தி வருந்திக் கிடக்கும் தன்மை போன்றது. எமக்குற்ற உறவினர்களோ பொருளுக்கெனக் கைகளை அகன்று ஏந்தி, அது நிறையா விடத்துப் பலவாறு குறை கூறிக் காய்கின்ற தன்மையினர். எம் அயலகத்தாரோ, தம் மனையில் தாளிதம் செய்யும் மணப் புகை தானும் பிறமனையுட் புகாவண்ணம், தம் திறந்த கதவம் தாழால் நெருங்க முடுக்கும் இயல்பை உடையவர். யாம் வாழும் ஊரோ, தம்மை ஆளுகின்றார்ப் பற்றிக் கவலாது பெருமையைப் பொடியாக்கும் சிறுமைத்து. இவை தமக்கிடையில் எம் உயிர், போகின்ற வழி அறியாத ஆற்று நீரின் தெப்பத்தைப் போன்றது.
விரிப்பு:
இப்பாடல் புறத்துறையைச் சார்ந்தது.
தம் மனமும் அது கொண்ட விழைவும், அவ்விழைவு புரக்கும் குடும்பமும் அக் குடும்பு பெற்ற வறுமையும், அவ் வறுமை தாக்கும் கொடுமையும், அக்கொடுமை மிகுக்கும் உறவும், அவ்வுறவு சார்ந்த அயலும், அவ்வயல் நிரம்பிய ஊரும், அவ்வூர் நிரம்பிய மக்களும், அம்மக்களிடை தம் உயிர் செல்லும் செலவும் கூறுவதாக அமைந்ததிப் பாட்டு,
உயிர் பற்றுக் கோடாகக் கொள்வது மனத்தையே ஆகலின் மனவுணர்வு முதற்கண் கூறப்பெற்றது. - மனம் வேட்கையுறாது பற்றற்றிருக்கும் அளவை, அது தானுற்ற புறவாழ்க்கைக்கு வேண்டிய உலகியற் பொருள்மேல் அவாவுதலின் தன்மைவழிக் காட்டப் பெற்றது.
விழைவு - மனத்தேவை. வேண்டல்- புறத்தேவை. புறப்பொருளை அவாவுதலையே 'வேண்டுதல்' என்று வள்ளுவரும் குறித்தார். புறத்தேவையினும் அகத்தேவை குறைந்து நிற்றலே, மெய்யுணர்வு மிகுக்க வழி செய்யுமாகலின், விழைவே வேண்டலின் நனிகுறை வினதே எனக் கூறலாயிற்று.
பிழைப்பு- உலகியல் வாழ்வு உயர்வையே குறித்த ஒழுக்கம், நாற்றம், காமம் முதலிய சொற்கள் தீயொழுக்கம், தீநாற்றம், இழிகாமம் எனக் கீழ்மைப் பொருள்களுக்கும் ஒட்டிவரத் தொடங்கிய இழிந்த நிலையில், கெடுதல், தவிர்தல், தவறல் முதலிய இழிநிலைப் பொருள்களே பெறும் பிழைப்பு என்ற சொல்லும் உலகியல் வாழ்வைக் குறிக்கும் ஓர் உயர்ந்த சொல்லாக உயர்வு பெற்றது.
பிழையின்றி உலக வாழ்வியலா நிலையில், பிழைப்பே வாழ்வு என்னும் பொருள் பெற்றது. எனவே, உலக வாழ்வியலைக் குறிக்க இச் சொல்லே கையாளப் பெற்றது. இச்சொற்பொருள் அண்மைக் காலத்தது.
வழுக்கிலா முறை பிறழ்விலது- மேலேறுதல் இல்லாவிடத்தும் கீழ்ச்சறுக்குதல் இல்லாவொரு நிலைக்கு ஊற்றுக்கோலாக நிற்கும் நெறிமுறையில் பிறழ்ச்சி இலது.
உழைப்பு -உடல் வருத்தம், வருந்துதல் என்னும் பொருளடியாகப் பிறந்து அவ்வருத்தம் செய்யும் உடல் முயற்சியைக் குறிக்கும் பிற்காலச் சொல்.
உள்ளம் தமிழின்பத்துத் தலைப்படின் ஒர் இழைதானும் புறம் செல்லாது. அவ்வுணர்விலேயே நிலைபெறும் என்பதால் உள்ளத்து ஊன்றி ஓர் இழைபுறஞ் செல்லா நிலை பொருந்துதல் எனப் பெற்றது. அவ்வாறு பொருந்திய விடத்து, இழிவான வழிகளில் ஈட்டப்பெறும் பொருளுக்குப் பழிகண்டு விலக்கும் பான்மை பெறுதலின், இழிவழிப் பொருட்குப் பழி காண்டது எனலாயிற்று.
இழிதல்- மேல்நின்று கீழிறங்குதல். உயர்வான நிலையினின்று உள்ளத்தைக் கீழ்நிலைக்குத் தாழ்த்துதலால் இழி பொருள் எனப்பெற்றது.
காதலன்பு உளத்தை இறுகப் பற்றுதலின் காதற் பூண் எனப்பெற்றது. கடுகிழை-கடுகத்துணை இழை, ஆதுணை ஆகியதுணை, வினைத்தொகை-மனைவி, புரத்தல்- பராமரித்தல், காத்தல்.
குடும்பு-குடும்பம். குழும்பு என்ற சொல்வேர் அடியாகப் பிறந்த சொல். கலவு-குலவு-குழவு-குழம்பு குழும்பு-குடும்பு குடி என் பெயரடியாகப் பிறந்த சொல் எனினும் வழுவின்றாம்.
பீறல் -கிழிந்த துணி கந்தை.
நிரப்பு - சான்றோர் வறுமை- விளக்கம் முற்கூறப் பெற்றது.
உடலையும், எலும்பையும் தொளைத்து ஊடுருவிச்செல்வதுபோலும் குளிர்ந்த வாடைக் காற்றாகையால் தொளை வாடை எனப்பெற்றது. இனி அது நீடுதல் பற்றி நெடுந்தொளை வாடை எனப்பெற்றது.
நேர்த்து- நேரது சமமானது.
நளிர்குளிர்- நள்ளென் அடியாகப் பிறந்த சொல்.
நள் - நெருக்கம், செறிவு உடல் குளிரால் நெருக்கமுறுதல் பற்றி நளி என்பது குளிர்மையைக் குறிக்கும். அணுக்கள் சூட்டால் விரிவடைதலும், குளிரால் நெருக்கமுறுதலும் ஆகிய இன்றைய வேதியல் அறிவுக்கும் பொருத்தமாக இச்சொல் அற்றைக்காலத் தமிழ் மொழியில் பொருள் பொதி சொல்லாக அமைந்திருத்தல் காண்க. நள்+து-நடு-நடுக்கம்: அணுக்கள் நெருக்க முறுதலால் ஏற்படும் அலைவு நள்+பு- நட்பு:உயிர் நெறுக்கமுறுதல்.
முயக்கம் - சேரத் தழுவுதல்,
கூனித்தாழ்ந்த -வளைந்து தாழ்வுற்ற.
ஒதம் - வெள்ளம் வெள்ளக் கசிவு. 'ஒள்'லென் வேரடியாகப் பிறந்த சொல்.
ஒள் - வெண்மை ஒளி -ஒளிர்தல் (வெண்மை உள்ளது ஒளிர்தலும் ஒளியுடையது வெண்மையாயிருத்தலும் ஓர்க்க). ஒள் +து, ஒது-ஓது ஓதுதல்-ஓசையிடுதல்-ஆரவாரித்தல் ஓது-ஓதை ஆரவாரம்-ஓசை, ஓதை-ஓதம். தண்ணீர் ஒளிப்பெற்று விளங்குதலும் பெருத்த ஓசையுடன் செலவு மேற்கொள்ளுதலும் ஆதலின் அதற்கு ஓதம் என்ற ஒரு காரணப் பெயர் தோன்றிற்றென்க.
நீர்க்கசிவு பெற்றுத் தாழ்ந்த கூரைக்குடிலுள் தொடர்ந்து குளிரும் மண்டிய இருட்போதில், உடலைப்போர்த்துதற்காகாத ஒரு முழத் துணியை முன்னுக்கும் பின்னுக்கும் இழுத்திழுத்து மூடுதலால் ஏற்படும் துயரத்திற் கொப்பான எம்வாழ்க்கை எனப்பெற்றது.
கையகன்று ஏந்தி - கைகளை அகல விரித்தபடி ஏந்தி.
குறையக் கரையும்- குறையுங்காலை ஒலிப்பட ஆரவாரித்தல் செய்யும்.
புரை காய்வது -குறைநிலைகளைத் தம்முட் கனன்று காய்வது.
குய்ப்புகை - தாளிதப் புகை
தாழ் செறித்தல் - கதவைத் தாழிட்டு நெருங்க முடுக்குதல்.
இயல்பினது - என்றும் இயல்பான தன்மையுடையது.
அளியே - இரங்கத் தக்கது!
தம் மனையில் சமையல் செய்யுங்கால் எழும் இனிய தாளிதப் புகையும், அண்டை வீட்டினர் தம் வயின் செல்லுதல் கூடாதெனத் தடுக்க, தம் வீட்டுக் கதவினைத் தாழால் நெருங்க முடுக்கியடைக்கும் இரங்குதற்கரிய இயல்பான தன்மையை உடைய அயலார் என்றபடி
இரங்குதல் அவர் எளிய மனப்பண்பு குறித்து என்க.
ஆளுநர்க்குளம் கவலாது -தம்மை அரசியலால் ஆளுதல் பொறுப்புப் பெறுவார்தம் அறிவு, பண்பு, அறன், நடுவு நிலைமை, தறுகண், கொடை முதலியன பற்றிக் கவலுறாது எவரேனும் ஒருவர் ஆளுதலுக் கியைந்து நிற்பது.
உளங் கவலாத்தன்மை கல்வியறிவுக் குறைவானும்; அரசியல் அறிவுக் குறைவானும், பொதுமை யுணர்வின்மையானும் ஏற்படுவது.
சீர்மை நூறும் சிறுமை - செப்பமான உயர்ந்த தன்மைகளை அழித்துக் கொள்ளுதலாம் இழிந்த தன்மை.
ஈங்கிவ் விடையிலெம்.புனையே - என்றது ஈங்குக் காட்டிய இத்துணைத் துயர் சான்ற நிலைகளுக்கிடையில் எம் துணுக்குறும் உயிர், எத்திசை போகி இத்தரை கடப்பது என்றறியாது காட்டாற்று வழிச்செல்லும் புனை போன்றதாம் என்பது.
இப்பாட்டு, நாட்டுநிலை குலைந்த நிலையில் மக்கள் நிலை தாழ்தலும், மக்கள் நிலை தாழ்ந்த நிலையில் நாடு திருவிழ்ந்து வாடுதலும், அதன் வழி, சான்றோர் தமக்குற்ற துயரையும் பொருட்டாக நினையாது, நெஞ்சங் கவலுதலும், உயிர் அழுங்குதலும் கூறவந்த பாடலாகும்.
இது பொதுவியல் என் திணையும், பொருண்மொழிக் காஞ்சி என் துறையுமாம்.