நூறாசிரியம்/நெடுந் தொலை விலையே

92 இனிய நன்னாளே!


நெடுந்தொலை விலையே, கடுவணி மைத்தே;
 உடுநீ ராடையில் வுலகம் ஒன்றெனப்
பனிக்கல் மிதவைப் பாடகழ்ந் துண்ணும்
நனிக்குற ளொருவனும், நடுமணற் பரவை
நீந்தக லடியுயர் நெடுங்கழுத் தொட்டை 5
ஏந்துபு புறமுடைத் தின்புன லருத்தும்
பாலை வாணனும், பனிமலை வதியனும்,
நீலலைக் குமரி நெடுங்கரை முகிழ்த்த
முதுகுடித் தமிழனும், மொய்நீர் வேலிப்
புதுத்தி வுயிர்க்கும் புன்குர லொருவனும், 10
அறிவறி யாவிருள் அடர்மரக் கான்மிசை
குறிகட வாவெய் கூர்வே லுயிருண
வீழ்மட மாந்தர் வெந்நீ ருறிஞ்சிச்
சூழ்ந்துட லுண்ணும் பாழினத் தொருவனும்
தம்பிறப் பிறந்தே தமக்குள் 15
எம்பிறப் பென்னு மினியநன் னாளே!

பொழிப்பு:

‘உடுத்துள்ள நீராகிய ஆடை தழுவிய இவ்வுலகத்துவாழ் மக்களெல்லாம் ஒன்று எனுங்கொள்கையராகி, உட்புறத்துக் காண்டலாகிய உணவுச் செல்வங்களுக்காக மிதக்கின்ற பனிக்கட்டியை உடைத்து, உண்டுவாழும் பண்பினராகிய, மிகவும் குட்டையான மாந்தர்இனத்தானும்: மணற்கடலாகிய பாலைப் பரப்பின் நடுப்புறத்தே, நீந்திக் கடக்கும் அகன்ற அடிகளையும், உயர்ந்த நெடுமையான கழுத்தையும் உடையதான ஒட்டகத்தின், எடுத்து நின்ற புறமுதுகின் குமிழை உடைத்து, அதனுள் காக்கப்பட்ட இனிமையான நீரை அருந்தும் பண்பினராகிய பாலை நாட்டார் இனத்தானும், பனிதோய்ந்து கிடக்கும் மலைகளில் வாழும் இனத்தானும், நீல அலை தவழும் குமரி முனையின் நெடுமையான கடற்கரையில் வதியும் தொல்குடித் தமிழனும் சுற்றிலுஞ் சூழ்ந்த நீரே வேலியாகி நிற்க, நடுவில் எழுந்த புதுமையான தீவின்கண் தோன்றிய அடங்கிய குரலையுடைய எளிய மாந்தர் இனத்தானும் அறிவாலும் அறியப்படாமல் இருள்மண்டி அடர்ந்திருக்கின்ற மரங்கள் நிறைந்த காட்டகத்தே, குறி பிழையாமல் எய்யும் கூரிய வேலானது உயிரை உண்ண, அடியற்று வீழும், அறியாமல் அங்கு வந்த மாந்தர் தம் சூடான குருதியை உறிஞ்சி, அவரைச் சூழ்ந்து அவர் உடலை உண்ணும் கொடும் பண்பு சான்ற இனத்தானும், தம் தம் பிறப்பும் நாடும் பழக்க வழக்கங்களும் கடந்து தமக்குள்ளே ஒருவரை யொருவர் ‘எம் பிறப்பு என்று கூறிக் கொள்ளும் அந்த இனிய நல்ல நாள் நெடுந்தொலைவில் இல்லையாக, மிகவும் குறுகிய கால எல்லைக்குள் வருவதே

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

உலகின் பல்வேறு பகுதிகளிலும் வாழுகின்ற, நாட்டாலும் இனத்தாலும் நாகரிக நிலைகளாலும் வேறுபட்ட பற்பல மக்கள் பிரிவினரும் தம் வேற்றுமைகளை யெல்லாம் கடந்து உடன்பிறப்பு உணர்வோடு உறவாடும் நாள் மிக நீண்ட தொலைவில் இல்லை; மிக அண்மையிலேயே உள்ளது என்று கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

இதனால் ஆசிரியரின் பரந்த மனப்பான்மையும் எதிர்கால நோக்கும் பிறவும் புலப்ப்டக் காணலாம்.

உடுநீர் ஆடை இவ்வுலகம் - உடுத்துள்ள நீராகிய ஆடை தழுவிய இவ்வுலகம்,

நிலம் ஆடையணிந் திருப்பதாகக் கூறுவது அதனைப் பெண்ணாக கற்பனை செய்யும் மரபுபற்றி யென்க!

ஒன்று என- ஒன்று என்னுங் கொள்கையுடையவராகி

பனிக்கல் மிதவைப்பாடு அகழ்ந்து உண்ணும்-உட்புறத்துக் காண்டலாகிய உணவுச் செல்வங்களுக்காக மிதக்கின்ற பனிக்கட்டியை உடைத்து, உண்டு வாழும் பண்பினராகிய,

பனிக்கட்டியை உடைத்து அதனுள்ளிருக்கும் உயிரிகளை உணவாகக் கொள்வோர் என்றவாறு மிதவைப்பாடு மிதவைப்பட்டது; மிதப்பது.

நனிக்குறள் ஒருவனும் - குட்டையான மாந்தர் இனத்தானும்

இவ்வாறு குறிப்பிடப் பெறுவோர் எக்கிமோக்கள் என்க.

குறள் குறுகிய வடிவத்தையுடைய

மணல்பரவை நடுந்து-மணற் கடலாகிய பாலைப்பரப்பின் நடுப்புறத்தே அதனை நீந்திக் கடக்கின்ற

பாலையைப் பரவை என்றமையால் அதைக் கடத்தற்கு நடத்தலை நீந்தல் என்றார்.

அகல் அடி உயர் நெடும் கழுத்து ஒட்டை - அகன்ற அடிகளையும், உயர்ந்த நெடுமையான கழுத்தையும் உடையதான ஒட்டகத்தின்

பாலையைக் கடத்தற்குரிய ஒட்டகத்தின் உடலமைப்பைக் கூறுவாராய் அதன் காலமைப்பை நோக்கி அகல் அடி என்றார். புல் பூண்டுகளற்ற விடத்து ஓங்கி நிற்கும் நிலைத்திணைகளில் உணவு கொள்ளுதற்கு ஏற்பவும் பாறைவிடர்களில் தேங்கி நிற்கும் நீரைப் பருகுதற்கு ஏற்பவும் அது நெடுங்கழுத்து உடையதாயிருத்தலின் அதனையுங் கூறினார்.

ஏந்துபு புறம் உடைத்து இன்புனல் அருந்தும் - எடுத்து நின்ற புறமுதுகின் குமிழை உடைத்து, அதனுள் காக்கப்பட்ட இனிமையான நீரை அருந்தும் பண்பினராகிய

நீரற்ற நெடுவெளியில் செல்லுங்கால் பயன்கொள்ளும் பொருட்டு ஒட்டகம் தன் முதுகிலுள்ள திமிலின்கண் நீரைத் தேக்கி வைத்திருத்தலின், தங்கொனா வேட்கையுள்ளவிடத்து ஒட்டகத்தின் மேல் ஊர்ந்து செல்வோர் அத் திமிலை உடைத்து அதனுள்ளிருக்கும் நீரைப் பருகும் இயல்பினரான,

திமில் குமிழ்போல் இருத்தலின் குமிழ் எனப்பட்டது. திமிலின்கண் இருக்கும் நீர் அதனைப் பருகுவார் உயிரைக் காத்தலின் அது இன்புனல் எனப்பட்டது.

பாலை வாணனும் - பாலை நாட்டார் இனத்தானும்

வாணன்- வாழ்நன்.

பனிமலைவதியனும் - பனி தோய்ந்து கிடக்கும் மலைகளில் வாழும் இனத்தானும்

மக்கள் பதிந்து வாழுமிடம் பதி எனப்பட்டு, அப்பதி வதியெனத் திரிந்து, வாழ்தல் வதிதல் எனப்பட்டது. வாழ்வோன் வதியன் எனப்பட்டான். வதிதல் வசித்தல் என வேறு சென்று, வசிப்போன் வாசியாயினன்.

நீலலைக்குமளிநெடுங்கரைமுகிழ்த்த-நீலஅலை தவழும் குமரி முனையின் நெடுமையான கடற்கரையில் வதியும்

நீலஅலை என்றது. கடலலை என்றற்கு.

முதுகுத் தமிழனும்- தொல் குடித் தமிழனும்

முதுகுடியாவது படைப்புக் காலந்தொட்டு மேம்பட்டு வருங்குடி’ என்றாங்குத் தொன்மை மிக்க குடி

மொய்நீர்வேவிப் புதுத் தீவு உயிர்க்கும் சுற்றிலுஞ் சூழ்ந்த நீரே வேலியாகி நிற்க, நடுவில் எழுந்த புதுமையான தீவின்கண் தோன்றிய

மொய்த்தல்-சூழ்தல் உயிர்த்தல் பிறத்தல்

புன்குரல் ஒருவனும் - அடங்கிய குரலையுடைய எளிய மாந்தர் இனத்தானும்

அறிவு அறியா இருள் அடர் மரக்கான்மிசை - அறிவாலும் அறியப்படாமல் இருள்மண்டி அடர்ந்திருக்கின்ற மரங்கள் நிறைந்த காட்டகத்தே

குறிகடவா எய்கூர்வேல் உயிர்உண - குறி பிழையாமல் எய்யும் கூரிய வேலானது உயிரை உண்ண

வீழ்பட மாந்தர் வெந்நீர் உறிஞ்சி- அறியாமல் அங்குவந்த மாந்தர்தம் சூடான குருதியை உறிஞ்சி

ஏதமுள்ளமையை அறியாமல் வந்தமையின் மடமாந்தர் என்றார். கொலை செய்யப்பட்டவர் உடலை உடனே உண்டனர் என்பது தோன்ற அவ்வுடற் செந்நீர் வெந்நீர் எனப்பட்டது.

சூழ்ந்து உடல் உண்ணும் பாழ் இனத்து ஒருவனும் - அவரைச் சூழ்ந்து அவர் உடலை உண்ணும் கொடும் பண்பு சான்ற இனத்தானும்,

தம் பிறப்பு இறந்தே - தம்தம் பிறப்பும் நாடும் பழக்க வழக்கங்களும் கடந்து

பிறப்பாவது இனம் - தமக்குள் எம்பிறப்பு என்னும் தமக்குள்ளே ஒருவரையொருவர் எம்பிறப்பு என்று கூறிக்கொள்ளும்

இனிய நல்நாளே - இனிய நல்ல நாள்

யாவரும் மகிழ்ந்து உறவாடுமாறு போரும் அழிவுற்ற நாளாதலின் இனிய நன்னாள் என்றார்.

நெடும்தொலைவு இலையே கடுஅணி மைத்தே - நெடுந்தொலைவில் இல்லையாக, குறுகிய கால எல்லைக்குள் வருவதே.

அணிமையை வலியுறுத்தற்கு எதிர்மறை வாய்பாட்டான் வரும் தொலைவுக்கு நெடுமை குறித்த அடையாற் பயனில்லை யாயினும் அது அணிநயமுற நின்றது.

இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னுந் துறையுமாம்.