நூறாசிரியம்/இறப்பினும் சிறப்பே
இற்றைப் புரிந்திவர் ஏற்றற் குளரென
அற்றைப் பயந்திலள் எந்தாய் அழிவோர்க்
கொன்றுள் ளுவந்துயிர் புரந்திட ஒருவர்
என்றும் அழிந்திலர்; இல்லவ ரெனினும்
உலர்நா ஆற ஒருகை நீரே!
5
சிலர்பலர் வெகுளினுஞ் சிறப்பில போற்றேம்
எவரிழி செய்யினு மேற்றன. விகழேம்
பொன்றுவ பொன்றுவ, பொன்றில பொன்றா!
குன்றலும் வேறலுங் கொள்ளுநர் தகவே!
ஒன்றுவ தொன்றிலா தொழியினும்
10
என்றும் உண்டே இறப்பினுஞ் சிறப்பே!
பொழிப்பு:
இன்று யாம் உதவி புரிய இவர் ஏற்றுக் கொள்ளுதற்கு உரியவர் என்று கருதி அன்று எம்மை ஈன்றாளல்லள் எம் தாய் இறக்கும் நிலையில் இருப்போர்க்கு ஒன்றினை மனமுவந்து அளித்து அவரைக் காப்பாற்றுதலாலே எக்காலத்தும் ஒருவர் அழிந்தாரல்லர் தாம் வறுமையுற்றவரே யாயினும், பிறரது உலர்ந்த நா ஊறப்பெறுதற்கு அவரளிக்கும் ஒரு கை நீரே போதுமானது. ஆங்காங்குச் சிலரும் பலரும் வெகுண்டாலும் சிறப்பில்லாதனவற்றை யாம் போற்றுவேமல்லேம்; எத்தகையார் இழிவுபடுத்தினும் தகுதியானவற்றை யாம் இகழ மாட்டேம், அழியத்தக்கன அழிவனவாம்; அழிவற்றன அழிய மாட்டா; தோல்வியுறுவதும் வெற்றி பெறுவதும் அவற்றை ஏற்போர்தம் தகுதியைப் பொறுத்தனவே. ஒருவர் அடையத் தக்கது அவர்பால் வந்து பொருந்தாவிடினும், அந்நிலையிலேயே அவர் இறந்தாலும் அவர்க்குரிய சிறப்பு எக்காலத்தும் உண்டு.
விரிப்பு:
இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.
இக்காலத்து இவர் உதவி புரிதற்குரியார், இவர் பெறுதற்குரியார் என்று முன்னறிந்தோ விரும்பியோ யாரும் பிறப்பிக்கப்படவில்லை. துன்பநிலையில் உள்ளவர்கட்குச் சிறு உதவி செய்தலாலே அழிந்து போனவர் யாருமில்லை.
எவர் வெகுண்டாலும் யாம் சிறப்பில்லாதவற்றைப் போற்றுவே மல்லேம் எவர் இழிவுபடுத்தினும் சிறந்தவற்றை யாம் இகழேம்; தகாதன அழியும், தக்க அழியா தோல்வியும் வெற்றியும் ஏற்போர் தகுதியைப் பொறுத்தனவே. பொருந்துவன பொருந்தாது ஒழியினும் யாம் இறப்பினும் என்றும் சிறப்பு உண்டு என்று எடுத்துரைப்பது இப்பாட்டு,
இற்றைப் புரிந்து இவர். . . எம்தாய் பயந்திலள் - இன்று யாம் உதவி புரிய, இவர் ஏற்றுக் கொள்ளுதற்கு உரியவர் என்று கருதி அன்று எம்தாய் எம்மை ஈன்றாளல்லள்.
இன்ன காலத்து இன்னின்னார் ஈதற்கும் ஏற்றற்கும் உரியார் என்று யாரும் இவ்வுலகில் பெறப்படவில்லை என்றவாறு,
இந்தும் உயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
கெடுக உலகியற்றி யான்.
என்றார் திருவள்ளுவரும்
புரிந்து- உதவிசெய்து பயந்திலள் - ஈன்றாலல்லள்.
அழிவார்க்கு ஒன்று உள் உவந்து உயிர் புரந்திட - இறக்கும் நிலையில் துன்புறுவோர்க்கு ஒரு பொருளை மனம் உவந்து அளித்து அவர்தம் உயிரைக் காப்பாற்றுதலாலே.
உவந்து - மகிழ்ந்து ஈண்டு விருப்பத்தைக் குறித்தது.
ஒருவர் என்றும் அழிந்திலர் - ஒருவர் எக்காலத்தும் அழிந்தாரல்லார். எவரும் அழிவாருமல்லர் என்பது பெறப்படும்.
இல்லவர் எனினும் உலர்நா ஊற ஒருகை நீரே - தாம் வறுமையுற்றவரே யாயினும் பிறரது உலர்ந்த நா ஊறப்பெறுதற்கு அவர்க்கு அளிக்கப்பட வேண்டியது ஒரு கையளவு நீரே.
இல்லவர்- வறுமையுற்றார்; உலர்நா-வறண்ட நா
சிலர் பலர் வெகுளினும் சிறப்பில போற்றேம் - ஆங்காங்குச் சிலரும் பலரும் எம்மாட்டுச் சினந்தாலும் சிறப்பிலாதவற்றை யாம் போற்றுவேம் அல்லேம்.
சிலர்பலர் - ஓரிடத்துச் சிலரும் பிறிதோரிடத்துப் பலரும் எனக் கொள்க!
எவர் இழி செயினும் ஏற்றன. இகழேம் - எவர் இழிவுபடுத்தினாலும் ஏற்புடையவற்றை யாம் இகழ்வேமல்லேம்.
பொன்றுவ பொன்றுவ பொன்றில பொன்றா - அழியத்தக்கன அழியும்; அழியத் தகாதன அழியா!
உள்ளது சிறத்தல் என்னும் கூர்தலறக் கோட்பாட்டை இவ்வாறு விளக்கினார்.
குன்றலும் வேறலும் கொள்ளுநர் தகவே - தோல்வியுறுவதும் வெற்றி பெறுவதும் அவற்றைக் கொள்வோர் தகுதியினாலேயே,
தோல்வியுறுவார் மனங்குன்றுதல் இயல்பாதலின் தோல்வியைக் குன்றல் என்றார். இது வெற்றியைக் குறிக்கும் கெலித்தல் என்பதன் மறுதலையில் வைத்து உணரப்படும்.
தகவே என்றமையான், தகவின்மையின் தோல்வியும் தகவுண்மையின் வெற்றியும் என்க!
வெற்றி தோல்வி என்றும் வழக்கிற்கு மாறாகத் தோல்வியை முற்கூறியது என்னை யெனின், மேல் பொன்றுவ, பொன்றில என வைத்த நிரல் நோக்கி யென்க!
வெல்தல் வேறல் எனப் புணர்ந்து நின்றது. வேறல் - வெற்றி.
ஒன்றுவது ஒன்றாது ஒழியினும் - ஒருவர்க்கு வந்துறத் தக்கது வந்துறாது தவிரினும்
ஒன்றுவது பொருந்துவது வந்துறத்தக்கது. ஒன்றாது வந்துறாது. ஒழியினும் தவிரினும்
இறப்பினும் என்றும் சிறப்பு உண்டே - அந்நிலையிலேயே அவர் இறக்க நேரினும் எக்காலத்தும் அவர்க்குரிய சிறப்பு உண்டு.
இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்திணையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.