நூறாசிரியம்/பொற்புறு கொள்கை

95 பொற்புறு கொள்கை

நல்லியல் மாந்தர் நலங்கவர்ந் துண்ணும்
புல்லியர்ச் செகுக்கும் பூட்கை யோனே
உணர்வு நுண்ணிய உளமும் உளத்துப்
புணர்வு மன்னிய உரையும் உரைத்த
நிலைவினை பண்ணு மதுகையு நிவந்த 5
புலரா வாழ்வொடு பொருந்தினர் வயினே
தற்குழ் பறிந்து தாமுயர் வுறுதலும்
பொற்புறு கொள்கைப் பூண்டுளி தளர்தலும்
யாண்டுங் காண்கில மாகவின்
வேண்டுங் கொன்மதி நுமக்கெழு விழைவே! 10


பொழிப்பு:

நல்ல இயல்பினையுடைய மாந்தரது செல்வத்தை வலிந்து கைப்பற்றி உண்டு வாழும் கயவர்களை அழிக்கும் கொள்கையாளனே உணர்வு நுணுகி யிருக்கும் மனமும், மனத்தொடு ஒன்றிப் பொருந்திய வாய்மொழியும், சொல்லிய சொல்லைச் செயற்படுத்தும் ஆற்றலும் உயர்ந்த வாடுதலில்லாத வாழ்வின் கண் பொருந்தியவரிடத்து, சூழ்நிலையை அறிந்து தாம் தம்மை உயர்த்திக் கொள்ளுதலும், உயர்ந்த கொள்கைப் பற்றினின்றும் சிறிதேனும் தளர்ச்சியுறுதலும் எங்கும் காணேம்; ஆதலின் துங்கட்கு விருப்பம் தோன்றுதல் வேண்டுங்கொல்!

விரிப்பு:

இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.

நன்மக்களின் செல்வத்தைச் சுரண்டியும் கொள்ளையடித்தும் உண்டு வாழும் கயவர்களை அழிப்பதையே கொள்கையாகக் கொண்டியங்கும் படையின் தலைவன் தன் படையைச் சார்ந்த வீரன் ஒருவனை நோக்கிக் கூறுவதாக அமைந்தது இப்பாட்டு.

நல்இயல் மாந்தர் நலம் கவர்ந்து உண்ணும் நல்ல இயல்புகளையுடைய மக்களது செல்வத்தை வலிந்து கைப்பற்றி உண்டுவாழும் கயவர்களை.

நல்லியல் மாந்தராவார் முறையான வழிகளில் முயற்சி மேற்கொண்டு பொருளீட்டித் தம் வாழ்க்கை மற்றையோர்க்கும் பயன்படுமாறு வாழ்வித்து வாழும் ஒழுக்கந் தவறாத மக்கள்.

நலம்- செல்வம். செல்வம் எனப் பொதுப்படக் கூறினும்கைப்பொருளே யன்றி அறிவுச் செல்வமும், உழைப்புச் செல்வமும் பிறவுங் கொள்ளப்படும்.

கவர்ந்து என்றது நல்லியல் மாந்தர்க்கு நேரும் சூழ்நிலை நெருக்கடி களைப் பயன்படுத்திக் கொண்டு அவர் அறிந்தும் அறியாமலும் அவர்தம் செல்வத்தை வலிந்து கைப்பற்றிக் கொண்டு என்றவாறு.

உண்ணுதலாவது பசிதணிய உண்பதுமட்டுமன்று; இனிது நுகர்தலுமாம்.

புல்லியர்ச் செகுக்கும் - கீழ்மக்களை அழிக்கின்ற.

புல்லியர் கீழ்மைக் குணங்களுடையார், செகுத்தல் அழித்தல்.

அழித்தலாவது மென்முயற்சியால் மட்டுமன்றி வன்முயற்சியாலும் கீழ்மக்கள் தம் கயமைக் குணங்களைக் கைவிட்டு மனந்திருந்தச் செய்தல்.

பூட்கை யோனே - கொள்கையாளேனே!

பூட்கை உள்ளத்து உறுதியுறக் கொண்ட கொள்கை

உணர்வு நுண்ணிய உளமும் - உணர்வு நுணுகியிருக்கும் உள்ளமும்.

தம் முயற்சிகளைத் திறம்படச் செய்யவும் தற்காத்துக் கொள்ளவும் ஆழ்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடுதலின் இவ்வாறு கூறினார்.

உளத்துப் புணர்வு மன்னிய உரையும் - உள்ளத்து உணர்வொடு பொருந்தி நிற்கும் சொல்லும்.

இவன் வாய்தந்தன கூறாது உள்ளத்து உணர்வொடு பொருந்தக் கூறுதல்,

உரைத்தநிலை வினை பண்ணும் மதுகையும் - சொல்லிய நிலை செயற் படுத்தும் ஆற்றலும்,

வினை பண்ணுதலாவது செயற்படுத்தல். மதுகைஆற்றல்.

நிவந்த புலரா வாழ்வொடு பொருந்தினர் வயினே - உயரியதும் வாடுதலில்லாததுமான வாழ்க்கையில் ஈடுபட்டவர்களிடத்தில்

புலரா வாழ்வாவது நாளுக்கு நாள் பிடிப்புத் தளராத வாழ்வு.

நிவந்த உயர்ந்த புலர்தல் உலர்தல்; வாடுதல். வயின்-இடத்தில்.

தற்குழ்பு அறிந்து தாம் உயர்வு உறுதலும் - சூழ்நிலையின் திறமும் வாய்ப்புகளும் அறிந்து அதைப் பயன்படுத்திக் கொண்டு தம்மளவில் தாம் மட்டும் முன்னேறுதலும்.

பொற்புஉறு கொள்கைப் பூண்துளி தளர்தலும் - சிறந்த கொள்கைப் பற்றினின்றும் சிறிதேனும் தளர்ச்சியுறுதலும்

பொற்பு சிறப்பு. பூண் பற்று. துளி- சிறிதளவு.

யாண்டுங் காண்கிலம் - எங்கும் யாம் காணேம்.

காண்கு இல்அம் காண்கிலேம்; காணேம்.

நுமக்கு விழைவு எழுதல் வேண்டும் கொல் - நுங்கட் கெனத் தனியே விருப்பம் வேண்டுங்கொல்!

மேல் பூட்கையோனே என விளித்தவர் ஈண்டு நுங்கட்கு என்றது அவன் போல்வாரையும் உள்ளடக்கி என்க.

மதி-அசை,

இப்பாடல் பாடாண்டிணை யென்னும் புறத்திணையும் நெடுமொழி வஞ்சி என்னுந் துறையுமாம்.