நூறாசிரியம்/பொலங்கிளர் தாமரை

94 பொலங்கிளர் தாமரை



புலம்புகோ யானே பொன்றுகோ யானே
நெருநல் வெண்முகை இன்றவிழ்ம் ஊங்குப்
பெருங்கட் படுவந் தூம்புநிறை உண்மெனக்
கருதிப் பொறிDமிறு கயந்தலைப் படுமுன்
நீர்வேட்டு நண்ணிய வயக்களிறு வாங்கிக் 5
கர்ங்கோட் டேந்தி வழியிடை யூழ்க்கும்
பொலங்கிளர் தாமரைப் புதுமலர் புரைய
நலங்கெடப் புரிந்தவன் தோட்குக்
கலங்குயிர் சோரக் கலுழுமெந் நிலைக்கே!


பொழிப்பு:

யான் புலம்பி அழுவேனோ, அன்றியான் இறந்தே ஒழிவேனோ! நேற்றைய வெண்ணிறப்போது இன்று மலரும், அதனிடத்தே மிகுந்த தேன் பொருந்தியிருக்கும், துளைக்கையால் உறிஞ்சி நிரம்ப உண்ணுதும் எனக் கருதிப் புள்ளிகளையுடைய வண்டு நீர்மடுவைச் சென்றடைதற்கு முன்னரே, நீர் பருக விரும்பி அவ்விடத்தை யடைந்த வலிமைசான்ற ஆண்யானை பறித்துத் தன் கூரிய மருப்பின்கண் ஏந்திச் சென்று வழியிடையே செவ்வியழிக்கப்பட்ட எழில் விளங்கு தாமரையாகிய நாண்மலர் போல என் நலங்கெடுத்தவனது தோளை மருவுதற்கு விருப்பமின்றி அஞ்சி உயிர் வாட்டமுற வருந்துகின்ற எம் நிலை குறித்து.

விரிப்பு:

இப்பாடல் புறப் பொருள் சார்ந்தது.

கன்னி யொருத்தியின் காதலன் அவளைக் கூடி மகிழ எண்ணி வந்தானாக அவள் காத்திருந்த இடத்திற்கு வேறு வேலையாக வந்த பிறனொருவன் அவளைக் கண்டு வலிந்து பற்றிச் சென்று அவள் நல்னுண்டு கற்பைச் சிதைத்தானாக, அதனை யறிந்த ஊரார் அவளை அவனுக்கே மணம்பொருத்த முற்பட்ட காலை அவள் வருந்தி யழுது கூறியதாக அமைந்தது.இப்பாட்டு.

நாண்மலரில் தேனுண்ண நயந்தவண்டு நீர்மடுவை நண்ணுமுன்னரே நீர்வேட்டு அங்குவந்த வயக்களிறு ஒன்று அம் மலரைப் பற்றியிழுத்துச் சென்று வழியிடை நலஞ்சிதைத்தது போல நலங்கெடுத்தவன் என்று அப்பெண் வாயிலாகக் கூறப்பெறும் உவமையின் மூலம் மேற்கூறியாங்கு அவள் நலஞ்சிதைக்கப்பட்ட செய்தி புலப்படுத்தப்பட்டுள்ளது.

புலம்புகோயானே பொன்றுகோயானே-யான் தனித்திருந்து அழுவேனோ அன்றியான் இறந்தொழிவேனோ,

புலம்புதல் தனித்திருத்தல்; தனித்திருந்து அழுதல் புலம்பே தனிமை. பொன்றுதல் இறத்தல்,

நெருநல் வெண்முகை இன்று அவிழ்ம் - நேற்றைய வெண்ணிறப் போது இன்று மலரும்.

நெருநல்-நேற்று. முகை போது, அவிழ்ம்- அவிழும் ஊங்குப் பெரும் கள் படுஉம் - அதன் பால் மிகுந்த தேன் பொருந்தியிருக்கும்.

கள்-தேன். படுஉம்-படும்; பொருந்தியிருக்கும். வண்டினது எதிர்பார்ப்பின் மிகுதியைக் காட்டி நின்றது.

தூம்புநிறை உண்ம் எனக்கருதி - தும்பிக்கையால் உறிஞ்சி நிறைய உண்ணுதும் எனக் கருதி. -

தூம்பு துளைக்கை, வண்டின் தும்பிக்கை.

பொறிகுதியிறு கயந்தலைப்படுமுன்-புள்ளிகளையுடைய வண்டு நீர்மடுவை நண்ணும் முன்னரே.

பொறி-புள்ளி. ஞிமிறு-வண்டு, கயம்-நீர்நிலை. தலைப்படுதல் வந்து சேருதல்.

நீர்வேட்டு நண்ணிய வயக்களிறு - நீர் உண்ணுதலை விரும்பி அங்குவந்த வலிமை சான்ற ஆண்யானை.

வேட்டு விரும்பி. நண்ணிய வந்து சேர்ந்த வயம்-வலிமை. களிறு ஆண்யானை,

வாங்கிக் கூர்ங்கோட்டு ஏந்தி - வளைத்துப் பற்றித் தன்கூரிய கொம்பிலே ஏந்திச் சென்று. கோடு- கொம்பு.

வழிஇடைஊழ்க்கும் - வழியிடையே செவ்வியழிக்கப்பட்ட ஊழ்த்தல் செவ்வியழிக்கப்படுதல்.

பொலங்கிளர்தாமரைப் புதுமலர்புரைய - எழில் விளங்கும் தாமரையாகிய நாண் மலர்போல.

பொலம் அழகு கிளர்தல்-விளங்குதல் நாள்மலர் அன்றலர்ந்த மலர்; புதுமலர். புரைய-போல.

நலம் கெடப்புரிந்தவன் - என் நலத்தைக் கெடுத்தவனது

நலம் என்றது கற்பை, கெடப் புரிந்தவன் - கெடுத்தவன்.

தோட்குக் கலங்கு - தோளை மருதற்கு விருப்பமின்றி அச்சமுற்று. தோளை மருவுதலாவது - தழுவுதல்

உயிர் சோரக்கலுழும் எம்நிலைக்கே - உயிர்வாட்ட முறுமாறு வருந்துகின்ற எம் நிலைகுறித்து.

சோர்தல்-வாடுதல், கலுழ்தல்- வருந்துதல்.

புலம்புகோ யானே பொன்றுகோ யானே என்பதை ஈண்டுக் கூட்டிக் கொள்க!

தேன்வேட்டு வந்த சிறு கருந்தும்பி கயந்தலைப்படுமுன் நீர்வேட்டுவந்த பெருந்தும்பி பொலங்கிளர் தாமரையை நலஞ்சிதைத்த உவமை கைக்கிளைக்கண் வந்த உள்ளுறை உவமை யென்க!

நலஞ்சிதைத்தானுக்கு அவளை மணங்கூட்ட ஊரார் முற்பட்டமை எற்றாற் பெறுதும் எனின் அவன் தோட்குக் கலங்கி அவன் உயிர் சோரக் கலுழ்தலால் என்க.

இப்பாடல் கைக்கிளை யென்னும் புறத்திணையும் புதுவகைத் என்னும் துறையுமாம்.