நூறாசிரியம்/யாக்கை உள்ளொளி
மடவை நடுமுள் ஏய்ங்குறு பின்னல்
அடர்த்திய பூவோ டாடிய காட்டும்
முற்றாச் சிறுமி முறுவலு முண்டேம்
பற்றாச் சீரை புனைவதுங் கண்டேம்
மொய்விழி நடவிரன் முனைந்துறழ் பெய்து
5
முத்தத் தடுக்கிய முல்லையந் தொடையல்
ஆடிமுன் னணிந்து பாடிய மடுத்தேம்
வகுமா வடுவிழி மகவேட் டாற்குப்
புகுமாண் கற்பொடு புதுநல மாந்த
ஈன்றோ ரீந்ததும் ஈரா னொருபெண்
10
தானினி தீன்ற தகைமையுங் கண்டேம்!
பெருமா மடந்தை வருகையும் போக்கும்
நெருநல் போலும் அம்ம! நிழலென
உருவும் உளத்ததே! உண்டுபோல் வாளே!
எம்மொடு பயின்றா ளெம்மொடு துயின்றாள்!
15
விம்மிய எமக்கு விம்மினள்! உவப்பின்
தாமே மிகுவள்; தம்பசி கரந்தெம்
ஆய்போ லருத்துவள் அக்கை யிலளே!
வரவு நோக்கிச் சிறாரை முடுக்கி
இரவு வேய்குழ லின்முகை நகைநாற
20
எம்மை மனையொடும் இளவோ ரேந்தி
மும்மையும் புரந்த முதுப்பிறப் பவளே!
யாண்டுகொல் ஈண்டே மாண்ட தமக்கை!
மீண்டுங் காணும் பேணுங் கொல்லோ!
அற்றே உண்டோர் குறிப்பே முன்றில்
25
வற்றா நிலைநீர்க் குட்டத் துயர்கரை
ஆயே அழுமுகஞ் சாய்புன லவிழ
ஏயவட் காணா திரந்து குழற
மல்லன் ஒருவன் வல்லெனப் பாய்ந்தே
ஈரச் சீரை இழிஸ்ரீ ரோடும்
30
மீளக் கொணர்ந்த தீக்கனா வொன்றே!
பின்றையோர் யாமத்து முந்தை மாண்ட
துவெண் கூறையோடு ஐயாய் விளங்கி
வாவென் குறிப்பின் இருவருந் தொடரப்
புறவூர் மருங்கிற் றமியனை நிறுத்தி
35
எமக்கை வலத்தோ ளிட்டுவா னேறிய
அமையாக் கனவோ அம்ம விரண்டே!
ஈங்கிவை நிறைமதி இரண்டி னெதிர்ந்த
யாங்கினி யமைவந் தாங்கிய நாளே!
சாக்குறி காட்டிய யாக்கை உள்ளொளி
40
மீக்குறி காட்டிக் கூட்டல் மெய்யென
ஒன்றிய நினைவின் யாமே என்றுந்
துயிலுவம் எதிர்கவின் கனவே!
பொழிப்பு:
மடவை மீனின் உடல் நடுவிருக்கும் முள்போலும் சிறிய சடையின்கண் செறிவுறப் பூவைச் சூடிக்கொண்டவளாய் ஆடிக்காட்டும் இளஞ்சிறுமியின் புன்முறுவலையுங் கண்டேம்; அவள் அப் பருவங் கடந்து தனக்குப் பற்றாத சீலையை உடுத்திக் கொண்ட நிலையையுங் கண்டேம், மொய்க்கின்ற விழிகளையுடைய அவள் நடனமாடும் விரல்களால் பூக்களைத் தலைமாறிச் சேர்த்து முற்றத்திலிருந்து தொடுத்த முல்லைமாலையைக் கண்ணாடிக்கு முன்னர் நின்று அணிந்துகொண்டு பாடிய பாட்டையுஞ் செவிமடுத்தேம், பிளக்கப்பட்ட மாவடு போன்ற விழியையுடைய அவள் மகப்பேற்றை விரும்பிய கணவனுக்கு மனைவியாகப் புகுந்து மாட்சிமிக்க கற்பியல் வாழ்க்கையின் புதுமையான இல்லற இன்பந்துய்ப்ப, அவன்றன் பெற்றோர் ஈன்றாங்கு ஆண்மகவு இரண்டும் பெண் மகவு ஒன்றுமாகத் தான் இனிது ஈன்ற பெருமையையுங் கண்டேம்.
பேரிளம்பெண்ஆகிய அவள் வந்ததும் சென்றதும் நேற்று நிகழ்ந்தன போலுள்ளன; அம்ம! நிழல்போலும் அவடள் உருவமும் எம் உள்ளத்திலேயே உள்ளது. உயிருடன் வாழ்ந்துகொண்டிருப்பவள் போலவே எம் உள்ளத்தில் இருக்கின்றாள்.
எம்முடனேயே தானுங் கல்வி பயின்றாள்; எம்முடனேயே கண்ணுறங்கினாள் யாம் விம்மி அழுதக்கால் எம் பொருட்டுத் தானும் அழுதாள் யாம் மகிழின் அதுகண்டு அவளே பெரிதும் மகிழ்வாள்; தம்பசியை அடக்கிக் கொண்டு எமக்கு உணவூட்டும் அன்னையாரைப் போலத் தானும் எம்மை உண்பிப்பாள் அவள் எம் அக்கையல்லிள்.
எம் வருகையை எதிர்பார்த்திருந்து தன் பிள்ளைகளை ஆர்வமுறச் செய்து, கூந்தலின்கண், இரவே கட்டிவைத்த மொட்டுகள் மலர்ந்து மனங்கமழ எம்மையும் எம் துணைவியையும் வரவேற்றுக் குழந்தைகளைத் தூக்கி அணைத்துக் கொண்டு எம்மை நிறைவுறப் பேணிய தமக்கை அவள்!
எப்போது இங்கே வருவாள் இறந்துபட்ட அக்கை மீண்டும் வருவாளோ! எம்மைப் போற்றுவாள் கொல்:
முன்னரே அவள் இறப்புப் பற்றிய குறிப்பொன்று உண்டு.
வீட்டின் முற்றத்தை யடுத்த நீர் வற்றாத கிணற்றின் உயர்ந்த கரையின்கண் அழுகின்ற எம் அன்னையின் முகத்தினின்றும் திரண்ட கண்ணிர் வழிய, வெளியே சென்றவளைக் காணாது அவர் வருந்தி நாக்குழற; வலிமை வாய்ந்தான் ஒருவன் விரைந்து அந் நீர்க்குட்டத்துட் பாய்ந்து நனைந்த சீலையோடும் ஒழுகும் நீரோடும் அவளை மீட்டுக் கொண்டு வந்த தீய கனவு ஒன்று.
பின்னையொரு நள்ளிரவில், முன்னை இறந்துபோன தூய்மையான வெள்ளைச் சீலையையுடுத்திய எம் பாட்டியார் தோன்றி எம்மை நோக்கி வாஎன்று குறிப்பு காட்டயாங்கள் இருவேறாம் அவரைத் தொடர்ந்தனமாக, ஊரின் புறம்பான பகுதியில் எம்மைத் தனியனாக நிறுத்தி எம் அக்கையைத் தம் வலப்புறத் தோளில் தூக்கிக் கொண்டு வானத்தின்கண் எழும்பிச் சென்ற, எம் மனத்தை உறுத்திய இரண்டாவதான கனவு மற்றொன்று அம்ம!
இவ்விரு கனவுகளும் இரண்டு மாதங்களில் நனவாய் நிகழ்ந்தன. அக்கொடுமையைச் சுமந்த நாளின் நினைவை இப்போது எங்ஙனம் பொறுத்துக்கொள்வேம் சாவு பற்றிய அறிகுறி காட்டிய எம் உடலின்கண் பொருந்திய உள்ளொளி மேலை நிகழ்ச்சிகளையுண்ரும் அறிகுறி காட்டி எம்மை இறைமையில் பொருத்துதல் உண்மையில் நிகழும் என ஒருமையுற்ற நினைவோடும் யாம் நாளும் துயிலுகின்றேம். இனிய கனவு வாய்ப்பதாக!
விரிப்பு:
இப்பாடல் புறப்பொருள் சார்ந்தது.
பாவலரேறு அவர்களுடைய பெற்றோர் தம் முதன்மகவாகவும் மூத்த மகளாகவும் பிறந்து இளஞ்சிறுமியாகவும் படிப்படியே வளர்ந்த நிலையிலும் பாவலரேறு அவர்களால் அணுகியிருந்து காணப்பெற்று உடன்பயின்றும் உடன்துயின்றும் சிறந்திருந்த இராசம்மாள் என்னும் பெயருடைய அவர்தம் அக்கையார் மணஞ்செய்விக்கப் பெற்று மக்கள் மூவரை ஈன்றுபுரந்து பெற்று வாழ்ந்துவந்த நிலையில், பாவலரேறு அவர்கள் அத்தமக்கையார் தொடர்பாக அடுத்தடுத்து இரு கொடிய கனவுகளைக் கண்டனராக, சாவுக்கு அறிகுறியான அவ்விரு கனவுகளும் இருமாத அளவில் நனவாயின. அக்கையார் மறைந்தார்.
கனவுநிலை அறிகுறி காட்டிய உள்ளொளி தம்மை மெய்ப்பொருட் காட்சியில் கூட்டுவித்தல் உறுதியென்றும் அத்தகைய கனவு எதிர்க என்றும் வேண்டுவதாக அமைந்தது இப்பாட்டு.
இராசம்மாள் அம்மையார் சிறுமியாக இருந்தது முதல் அவர் தம் மறைவு வரையிலான வளர்ச்சியும் வாழ்வும் தம் இளவல் பால் கொண்ட கழிபேரன்பும்; பாவலரேறு கண்ட இரு தீக்கனா நிகழ்ச்சிகளும், அவை நனவான கொடுமையும், பிறவும் நாற்பத்து மூன்று அடிகளில் ஆற்றொழுக்காய் நடக்கும் இவ்வகவற் பாவினுள் பாலவரேறு அவர்களால் அருஞ்சித்திரமாகத் தீட்டப்பட்டுள்ளன.
மடவை நடுமுள் ஏய்ம்குறு பின்னல் - மடவை மீன் உடலில் நடுவிலிருக்கும் முள்போலும் பின்னலின்கண்,
சிறுமியின் பின்னலுக்கு மடவை மீனின் முள் உவமையாகக் கூறப்பட்டுள்ளது.
ஏய்-உவம உருபு.
அடர்த்திய பூவோடு... முறுவலும் கண்டேம் - செறிவுறப் பூவைச் சூடிக் கொண்டவளாய் ஆடிக் காட்டும் இளஞ்சிறுமியின் புன்முறுவலையுங் கண்டேம்;
பற்றாச்சிரையுனைவதும் கண்டேம் - அவளுடைய உடலுக்குப் பொருந்தாத சீலையை அணிந்து கொண்ட காட்சியையுங் கண்டேம்,
சீலை பெரியதாகலின் உடலுக்குப் பற்றாதாயிற்று.
பற்றா- பொருந்தாத, ைேரசலை.
மொய்விழி நடவிரல்....மடுத்தேம் - வண்டுபோலும் மொய்க்கின்ற விழிகளையுடைய அவள் நடனமாடும் விரல்களால் பூக்களைத் தலைமாறிச் சேர்த்து முற்றத்திலிருந்து தொடுத்த முல்லை மாலையைக் கண்ணாடிக்கு முன்னர் நின்று அணிந்து கொண்டு பாடிக்காட்டிய பாட்டையும் செவிமடுத்தேம்,
மொய்த்தல் என்னும் வினைபற்றி வண்டு வரவழைக்கப்பட்டது. பூத்தொடுக்கும் பெண்களின் விரல் நடனமாடுவதுபோற் காட்சியளித்தலின் நடவிரல் என்றார். பூக்களைத் தலைமாற்றிச் சேர்த்தலை உறழ்பெய்து என்றார். அம் - தொடையில் - அழகிய மாலை
வகுமர்வடு விழி....... மாந்த - மாவடுவைப் பிளந்தது போன்ற கண்ணையுடைய அவள் மகப்பேற்றை விரும்பிய கணவனுக்கு மனைவியாகப் புகுந்த மாட்சி மிக்க கற்பியல் வாழ்க்கையின் புதுமையான இல்லற இன்பந் துய்ப்ப
ஈன்றோர் ஈந்ததும்...... கண்டேம் - கணவனின் பெற்றோர் ஈன்றாங்குத் தானும் இரு ஆண்மகவையும் ஒரு பெண் மகவையும் இனிது ஈன்ற பெருமையையுங் கண்டேம்.
பெருமா மடந்தை வருகையும் போக்கும் - பெருமை வாய்ந்த பேரிளம் பெண்ணாகிய அவள் வந்ததும் சென்றதும்
நெருநல் போலும் அம்ம - நேற்று நடந்தது போல உள்ளன அம்மா! நிழல் என உருவும் உளத்ததே நிழல் போலும் அவளுடைய உருவமும் என் உள்ளத்திலேயே உள்ளது. -
உண்டுபோல் வாளே - உயிருடன் வாழ்ந்து கொண்டிருப்பது போலவே எம் உள்ளத்தில் இருக்கின்றாள்.
எம்மொடு பயின்றாள்..... துயின்றாள். - எம்முடனேயே தானும் கல்வி பயின்றாள். எம்முடனேயே தானும் கண்ணுறங்கினாள்.
பயின்றாள் என்பதற்குப் பழகினாள் எனினுமாம். விம்மிய எமக்கு விம்பினள் - யாம் விம்மி அழுதக்கால் எம் பொருட்டுத் தானும் அழுதாள்.
உவப்பின் தாமே மிகுவள்- யாம் மகிழின் அது கண்டு அவளே பெரிதும் மகிழ்வாள்.
தம் பசி கரந்து எம்ஆய்போல் அருத்துவள் - தம் பசியை அடக்கிக்கொண்டு எமக்கு உணவூட்டும் எம் அன்னையாரைப் போலத் தானும் எம்மை உண்பிப்பாள்.
அக்கை இலளே - அவள் எம் அக்கையல்லள்;
அன்னையேயாம் என்றபடி,
வரவு நோக்கிச் சிறாரை முடுக்கி - எம் வருகையை எதிர் பார்த்திருந்து தன் பிள்ளைகளை ஆர்வமுறச் செய்து,
அம்மான் வருகிறார் மாமி வருகிறார் என்றும், நாளை இந்நேரம் வந்து விடுவார் விடியற்காலம் வந்துவிடுவார் என்றும், உனக்குச் சட்டை வாங்கி வருவார், ஊதல் வாங்கி வருவார் என்று மெல்லாம் ஆர்வமுறச் செய்து என்றவாறு,
இரவு வேய்குழல் இன்முகை நகைநாற - கூந்தலின்கண் இரவே கட்டி வைக்கப்பட்ட இனிய மொட்டுகள் சிரித்து மணங்கமழ.
நகை சிரிப்பு- நாற- மணத்தைப் பரப்ப,
எம்மை மனையொடும் இளவோ ஏந்தி - எம்மையும் எம் துணைவியையும் வரவேற்றுக் குழந்தைகளைத் தூக்கி அனைத்துக் கொண்டு
துணை - வாழ்க்கைத் துணை - இளவோர் குழந்தைகள் ஏந்தி அனைத்துக் கொண்டு.
மும்மையும் புரந்த முதுபிறப்பு அவளே - எம்மை நிறைவுறப் பேணிய தமக்கை அவள் மும்மையும் என்பது முழுமையும் என்னும் பொருட்டு முதுபிறப்பு என்பதற்கு மூதாட்டி எனினுமாம்.
யாண்டுகொள் ஈண்டே மாண்ட தமக்கை - எப்போது இங்கே வருவாள் இறந்து பட்ட அக்கை
மீண்டும் காணும் பேணும் கொல்லோ - மீண்டும் வருவாளோ, எம்மைப் போற்றுவாள் கொல்!
அற்றே உண்டுஓர் குறிப்பே முன்னரே அவள் இறப்புப் பற்றிய குறிப்பு ஒன்று உண்டு.
முன்றில் வற்ற நீர்நிலைக் குட்டத்து உயர்கரை வீட்டு முற்றத்தை யடுத்த நீர்வற்றுதல் இல்லாத கிணற்றின் உயர்ந்த கரையின்கண்.
குட்டம் - கிணறு.
ஆயே அழுமுகம் சாய்புனல் அவிழ் - அழுகின்ற எம் அன்னையாரின் முகத்தினின்றும் திரண்ட கண்ணிர் வழிய.
ஏயவள் காணாது இரந்து குழற - வெளியே சென்றவளைக்கானாது அவர் வருந்தி வேண்டி நாக்குழற
இரந்து என்றது தெய்வங்களையும் இறைவனையும் விளித்தும் கண்ணிற் கண்டாரைக் கூவியும் மகளைத் தேடித் தருமாறு வேண்டுதல்.
குழற நாக்குழற
மல்லன். ஒருவன் வல் எனப் பாய்ந்தே வலிமை வாய்ந்தா னொருவன் விரைந்து அந் நீர்க்கூட்டத்துட் பாய்ந்து. வல் என்பது விரைவுக் குறிப்பு.
ஈரச் சீரை இழிபு நீரோடும் ஈரமான சீலையோடும் ஒழுகும் நீரோடும்
மீளக் கொணர்ந்த திக்கனா ஒன்றே அவளை மீட்டுக் கொண்டு வந்த தீய கனவு ஒன்று.
பின்றையோர் யாமத்து - பின்னொரு நாள் நள்ளிரவில்
யாமம்- நள்ளிரவு
முந்தை மாண்ட முன்னமே இறந்து போன
தூவெண் கூறையொடு ஐஆய் விளங்கி - தூய்மையான வெள்ளைச் சிலையையுடுத்திய எம் பாட்டியார் தோன்றி.
வா என் குறிப்பின் இருவரும் தொடர - வா என்ற குறிப்புக் காட்ட யாங்கள் இருவேறாம் அவரைத் தொடர்ந்தனமாக
புறவூர் மருங்கின் தமியனை நிறுத்தி - ஊரின் புறத்தே உள்ள பகுதியில் தமியேனை நிறுத்திவிட்டு.
புறவூராவது ஊர்ப்புறம். தமியனை தனியாக எம்மை என்னும் பொருட்டு.
எம் அக்கை வலத்தோள் இட்டுவான் ஏறிய - எம் தமக்கையைத் தம் வலத்தோளில் தூக்கிக்கொண்டு வானத்தின்கண் எழும்பிச் சென்ற
அமையாக் கனவோ அம்ம இரண்டே - எம் மனத்தை உறுத்திய இரண்டாவது கனவு மற்றொன்று.
அமையா- மனத்தை உறுத்திய
அம்ம என்பது துன்ப நினைவுச் சுமையான் வந்த விளி.
ஈங்கிவை நிறைமதி இரண்டின் எதிர்ந்த- இவ் இரு கனவுகளும் இரண்டு மாதங்களில் நனவாய் நிகழ்ந்தன.
யாங்கு இனி அமைவம் தாங்கிய நாளே - அக்கொடுமையைச் சுமந்த நாளின் நினைவை இப்போது எங்ஙனம் பொறுத்துக் கொள்வேம்!
இப்போது எங்ஙனம் பொறுத்துக்கொள்வேம் என்றமையால் அற்றை நாள் கொடுமையினை உணரலாம்.
சாக்குறி காட்டிய யாக்கை உள்ளொளி - சாவு அறிகுறி காட்டிய எம் உடலின்கண் பொருந்திய உள்ளொளி.
மீக்குறி காட்டி - மேலை நிகழ்ச்சிகளை உணரும் அறிகுறி காட்டி மேலை என்றது காலத்தால் பண்டைய நிகழ்ச்சிகளையும் இடம் பற்றி இனிவரும் நிகழ்ச்சிகளையும் குறித்து நின்றது.
கூட்டல் மெய்என- இறைமையில் பொருத்துதல் உண்மையில் நிகழ்வதாம் என்று.
ஒன்றிய நினைவில் யாமே - ஒருமையுற்ற உணர்வோடும் யாம்
என்றும் துயிலுதும் எதிர்க இன் கனவே - நாளும் துயிலுகின்றேம். இனிய
கனவு வாய்ப்பதாக!
இப்பாடல் பொதுவியல் என்னும் புறத்தினையும் பொருண்மொழிக் காஞ்சி என்னும் துறையுமாம்.