நெஞ்சக்கனல்/10
தேர்தல் நாள் நெருங்க நெருங்கக் கமலக்கண்ணனுக்கு ஒரே கவலையாக இருந்தது. செலவை நினைக்கும் போதும் பயமாக இருந்தது. ‘தோற்றுவிட்டால்?’ என்று நினைக்கும் போதோ அதைவிடப் பயங்கரமாக இருந்தது. பிரகாசம் ஏதோ பெட்ரோல் செலவுக் கென்று வந்து பணம் கேட்டான்.
“பார்த்துச் செலவு செய்யி...ஏகமா ரூபாய் செலவழியிது” என்று கவலையோடு சொல்லியபடியே பணத்தை எடுத்துக் கொடுத்தார் கமலக்கண்ணன்.
“கவலைப்படாதீங்க சார்! நிச்சயமா ஜெயிச்சுடுவீங்க. மந்திரியா வர்ரத்துக்கும் சான்ஸிருக்கு...அப்படியே இல்லையின்னாலும் போட்ட பணத்தை எடுத்துடலாம். நாலு மெடிகல் காலேஜ் அட்மிஷன் ரெண்டு என்ஜினீயரிங் காலேஜ் அட்மிஷன்னு வராமலா போயிடுவாங்க...”
கமலக்கண்ணனுக்கு என்னவோ பயமாகத்தான் இருந்தது. பணத்துக்கு பணமும் நஷ்டமாகி அவமானமும் ஆகிவிடக் கூடாதே என்று பயந்தார் அவர்.
அவருடைய மனைவி வேறு மாதர் சங்கத்துப் பெண்களை அழைத்துக்கொண்டு வீடு வீடாகக் கணவனுக்கு ஒட்டுப் போடுமாறு வேண்டிக் கொண்டிருந்தாள். நாலா விதங்களிலும் முழு மூச்சாகப் பிரச்சார வேலை நடந்து கொண்டிருந்தது. அந்தக் கவலையும் பயமும் நிறைந்த இரவுகளில் கமலக்கண்ணன் நிறையக் குடித்தார். இன்னும் சில இரவுகளில் மதுவின் மயக்கத்தோடு மாயாதேவியின் துணையும் வேண்டியிருந்தது அவருக்கு.
தேர்தலுக்கு இரண்டு மூன்று நாட்கள் இருக்கும் போது, சேரிப் பக்கமாகப் போன போது பிரகாசத்தை யாரோ எதிர்த்தரப்பு ஆட்கள் அடித்துப் போட்டுவிட்டு ஓடிவிட்டார்கள். சேரியில் ஏதோ ஒட்டுக்குப் பணம் கொடுத்துவிட்டுப் போக வந்ததாகச் சந்தேகப்பட்டு அடித்துவிட்டதாகத் தெரிந்தது. கமலக்கண்ணன் பிரகாசத்தை ஆஸ்பத்திரியில் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்.
வழக்கப்படியும் விதியை அநுசரித்தும் தேர்தலுக்கு நாள் நெருங்கி வரவரப் பொதுக்கூட்டங்கள், பிரசார மேடைகள் நிறுத்தப்பட்டன. போர் தொடங்கப்படுவதற்கு முந்திய போர்க்களம்போல் நகரம் அமைதியடைந்து விட்டது.
கமலக்கண்ணனுக்கான தேர்தல் ஏஜண்டுகள் ‘போலிங் பூத்’ வாரியாக நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் தவிர வாக்காளர்க்ளை ஒட்டுச் சாவடிக்கு அழைத்து வருவதற்கான ஏற்பாடுகளைக் கவனிப்பதற்கு ஐம்பது ஆட்களும் இருபத்தைந்து கார்களும் ஏற்பாடு செய்யப் பட்டாயிற்று. கமலக்கண்ணனின் தொழில் நிறுவனங்களில் பல்வேறு உத்தியோகங்களைப் பார்த்து வந்தவர்கள் எல்லாம் தேர்தல் காரியங்களைக் கவனிப்பதற்கு அமர்த்தப்பட்டார்கள்.
எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஒரு விறுவிறுப்பான நிகழ்ச்சி போலவும்— அதே சமயத்தில் வேகமாக நிகழ்ந்து சுவடில்லாமல் மறையும் ஒரு கனவு போலவும்—தேர்தல் நாளும் வந்துபோயிற்று. கார்களும், ஆட்களும் பறந்தார்கள். ஒட்டுச்சாவடிகளில் பெரிய பெரிய க்யூ நின்றது. கடைசி வினாடி வரை ஒட்டுப் பதிவாயிற்று. நடுப்பகல் வெயிலில் கொஞ்சம் கூட்டம் குறைந்திருந்தாலும் மாலை மூன்றரை மணிக்கு மேல் மீதமிருந்த குறுகிய நேரத்தில் விறுவிறுப்பாக ஒட்டுப் பதிவு நடந்தது.
இரண்டு தினங்கள் முடிவை எதிர்பார்த்திருக்கும் ஆவலும் அமைதியும் நிலவின. பத்திரிகை ஹேஷ்யங்கள் வேறு குழப்பின. வெற்றி தோல்விகளைப் பற்றிய வம்புகளும் வதந்திகளும், பொதுமக்களையும் அபேட்சகர்களையும் குழப்பிக்கொண்டிருந்தன.
இந்த இரண்டு நாட்களும் கமலக்கண்ணன் எங்கும் வெளியே போகவில்லை. ரேடியோவில் தேர்தல் முடிவுகளைக் கேட்பது தவிரக் காலை —மாலை வேளைகளில் வெளியாகும் எல்லாச் செய்தித்தாள்களையும் வாங்கி ஒரு வரி விடாமல் படித்தார். தம்முடைய தினக்குரல் காரியா லயத்துக்கும் ஃபோன் செய்து அடிக்கடி விவரங்களை விசாரித்துக்கொண்டார். மீதி நேரங்களில் நிறையக் குடித்தார். மாயாவோடு சல்லாபம் செய்தார்.
வோட்டுக்கள் எண்ணப்பட்ட தினத்தன்று நம்பிக்கையான செய்திகள் அரைமணி நேரத்துக்கு ஒருமுறை டெலி போனில் கமலக்கண்ணனுக்குத் தெரிவிக்கப்பட்டுக்கொண் டிருந்தன. இரவு ஏழரை மணி நிலவரப்படி அவருக்குப் பதினேழாயிரம் ஒட்டுக்கள் அதிகமாக இருந்தன.
இரவு ஒன்பதரை மணிக்கு அதிகாரப்பூர்வமான முடிவே தெரிந்துவிட்டது. இருபத்தேழாயிரத்து நூற்றிருபது வோட்டு வித்தியாசத்தில் அவர் வெற்றி பெற்றுவிட்ட மகிழ்ச்சியான செய்தி ஃபோனில் வந்தது.
பல நண்பர்களும், பிரமுகர்களும், வர்த்தகர்களும், கட்சித் தொண்டர்களும் பார்த்துப் பாராட்டவும் மாலை சூட்டவும். தன் வீடுதேடி வருவார்களாதலால் இனி மாயாவின் வீட்டிலிருக்கக் கூடாதென்று கருதியவராகக் கமலக்கண்ணன் வீடு புறப்படத் தயாரானார். நிறையக் குடித்திருந்ததனால் மற்றவர்களுக்கு வாடை தெரிந்துவிடக் கூடாதே என முகத்தில் ‘சென்ட்’டை வாரிப் பூசிக் கொண்டு அவசர அவசரமாகப் புறப்பட்டார்.
“இந்த வெற்றிக்காக எனக்கு என்ன தரப்போகிறீர்கள்?” என்று பூ மத்தாப்புச் சிலிர்த்தது போல் புன்னகையோடு எதிரே வந்து கிளுகிளுத்தாள் மாயா.
“இந்த வெற்றியே நீ தந்ததுதானே மாயா...” என்று கமலக்கண்ணன் அவளை நெருங்கி இறுகத்தழுவிக்கொண்டார். பேதைகளைத் திருப்தி செய்ய வெறும் புகழ் வார்த்தைகள் மட்டுமே போதும் என்பதில் அவருக்கு எப்போதுமே அசைக்க முடியாத நம்பிக்கை உண்டு.
அவர் வீடு திரும்புவதற்கு முன்பே தயாராக ஒரு கூட்டம் மாலைகளோடு அங்கே அவரைப் பாராட்டுவதற்குக் காத்திருந்தது. மனித இதயத்திலுள்ள தார்மீக பிடிகள்—வாழ்க்கையின் சோர்வுகளாலோ பயத்தினாலோ தளரும் போதும் அவனுக்குப் பெண் வேண்டும், மது வேண்டும், புகழ் வேண்டும். கமலக்கண்ணனுக்கு முதல் இரண்டு வகையிலும் குறைவில்லை. மூன்றாவது வகை ஆசையிலும் இப்போது அவர் வெற்றிப்படியேறி விட்டார்.
“வர்த்தக இனமே உங்கள் வெற்றியால் பூரிப்படைகிறது” என்று கூறிக் குமரகிரி டெக்ஸ்டைல்ஸ் குப்புசாமி நாயுடு ஒர் ஆள் உயர மாலையைத் தூக்க முடியாமல் தூக்கிக் கமலக்கண்ணனின் கழுத்தில் போட்டார்.
அடுத்த மாலை கடம்பவனேசுவரர் கோயில் தர்மகர்த்தாவினுடையதாக இருந்தது. “கோயில் திருப்பணிக்கமிட்டிக்கு வைஸ் பிரஸிடெண்டாக வந்தாலும் வந்தீர்கள், கடம்பவனேசுவரன் உங்களுக்கு ஒவ்வொரு யோகமாகக் கொடுக்கத் தொடங்கிவிட்டான். இப்போது ராஜயோகமே வந்திருக்கு...” என்றார் தர்மகர்த்தா.
புலவர் வெண்ணெய்க்கண்ணனார் ஓர் உரோசாப் பூமாலையைக் கமலக்கண்ணனுக்குக் கொண்டுவந்து அணிவித்தார்.
‘சேம்பர் ஆஃப் காமர்ஸ்’, ‘காஸ்மாபாலிடன் கிளப்’, ‘சங்கீத சபை’– எல்லாவற்றின் சார்பிலும்—அவற்றைச் சேர்ந்த பெருந்தலைகள் கமலக்கண்ணனுக்கு மாலை அணிவித்தார்கள். பத்திரிகைக்காரர்கள் புகைப்படங்களைப் பிடித்துத் தள்ளினார்கள்.
“மாநிலத் திரைப்பட நிருபர்கள் சங்க சார்பில் வள்ளல் கமலக்கண்ணன் அவர்களுக்கு இந்த மலர் மாலையைச் சூட்டுகிறேன்” என்று எங்கிருந்தோ திடீரென்று வந்து குதித்த கலைச்செழியன் திடீரென்று உதயமாகியிருந்த ஒரு சங்கத்தின் சார்பிலே கமலக்கண்ணனுக்கு மாலையையும் வள்ளல் பட்டத்தையும் சேர்த்துச் சூட்டினான்.
அந்த நேரம் பார்த்து அங்கு கூடியிருந்தவர்களில் யாரோ ஒருவர், “முன்னாள் அறநிலையப் பாதுகாப்பு மந்திரி விருத்தகிரீஸ்வரன் தோற்றுப்போய் விட்டாராமே? தெரியுமா சேதி?” என்று கூறவே கமலக்கண்ணன் பழைய சம்பவம் ஒன்றை நினைவு கூர்ந்தார்.
இதே விருத்தகிரீஸ்வரன் முன்பொரு சமயம் நான் கோவில் திருப்பணி சம்பந்தமாக ஃபோன் செய்தபோது கமலக்கண்ணனா? எந்தக் கமலக்கண்ணன்? என்று என்னை யாரென்றே தெரியாதவர் போல நடித்தாரே! அன்று என்னை அவமானப்படுத்திய அவர் நாளை நான் மந்திரியானால் என்னைத்தேடி வரவேண்டியிருக்குமென்று எண்ணினார் கமலக்கண்ணன். அப்போது தேசியக் கட்சித் தலைவர் மாலையோடு தேடிவந்தார்.
“என்னய்யா? என்னமோ நான் பழைய ஜஸ்டிஸ் கட்சி ஆளுன்னு ‘டிக்கட்’ கொடுக்க பயந்தீங்க; அப்படியிருந்தும் ஜெயிச்சுட்டேன்.”
“எனக்குத் தெரியாதா சார் உங்க பெருமை? ஏதோ நம்ம கட்சியிலே விடலைப் பசங்க... ஆ..ஹீன்னாங்க... இப்ப அவங்களுக்கே மூஞ்சிலே கரியைப் பூசினாப்ல நீங்க ஜெயிச்சிட்டீங்க...ஆனாலும் நம் கட்சிக்கு இத்தனை செல்வாக்கு இருந்தும்கூட உங்க தொகுதியிலே உங்களை எதிர்த்து யாரையுமே நாங்க நிறுத்தலியே...”
“நிறுத்தியிருந்தீங்கன்னாக் கூட நம்ப முதலாளியை அடிச்சிருக்க முடியாது. இருபதாயிரத்துக்கு மேலேயில்ல ஒட்டு வித்தியாசப்படுது...” என்று ‘முதலாளி’யைக் காக்காய் பிடித்தார் ஒருவர்.
அன்றிரவு கமலக்கண்ணன் வீட்டில் ஒரு நூறுபேருக்கு மேல் வடை—பாயாசத்தோடு விருந்து சாப்பிட்டார்கள். கமலக்கண்ணனுடைய வெற்றி அமோகமாகக் கொண்டாடப்பட்டது.
“நாளன்றைக்குச் சாயங்காலம் ‘பார்டி ஆபீஸிலே’—ஒரு பாராட்டுக் கூட்டம் வச்சிருக்கோமுங்க. நீங்க அவசியம் வந்துடணும்”—என்று கட்சித் தலைவர் தொடங்கியபோது.
“அங்கேயா? உங்க கட்சியைச் சேர்ந்த தடிப்பசங்க யாராச்சும், ‘வாபஸ் வாங்கு’—அது இதுன்னு கத்தினா நான் வரமாட்டேன். ஏற்கெனவே அன்னிக்கி ஊழியர் கூட்டத்திலே அவங்க நடந்துக்கிட்டது எனக்குக் கொஞ்சம்கூடப் பிடிக்கல்லே...நான் பெரிய மனுசன் வீட்டுப் பிள்ளை...பொடிப்பசங்க கண்டபடி கேள்வி கேட்டா எனக்குப் பிடிக்காது...”
“அப்படியெல்லாம் ஒண்ணும் ஆகாதுங்க...இது நீங்க ஜெயிச்சதுக்காகப் பாராட்டுக் கூட்டம்தானே?...”
“ஒண்ணும் தாறுமாறாஆகாதுன்னா வார்த்தைப்பத்தி எனக்கொண்ணுமில்லை. ‘கட்சியிலே நீங்க எவ்வளவு காலமாக உறுப்பினர்? தீவிர உறுப்பினரா? சாதாரண உறுப்பினரா–ன்னெல்லாம்’ ஊழியர் கூட்டத்திலே – என்னைக் கேள்வி கேட்டு மடக்கினானே – யாரு அந்த ஆளு?”...
“அடடே அந்த ஆளா? காந்திராமன்’னு பேரு. ‘சர்வோத்யக் குரல்’ங்கிற பத்திரிகைக்கு ஆசிரியர். தீவிர உறுப்பினர். சரியான காந்தி பக்தர்...ரொம்ப முரண்டுக் காரரு... நெளிவு சுளிவுகூடப் பார்க்கத் தெரியாது...”
“அந்த ஆளென்னமோ தேசியமே தனக்குத்தான் சொந்தம்னு நினைக்கிறாப்பலருக்கு...”
“ரொம்பக் கொள்கைப்பிடிப்புள்ள ஆள். தீவிரமான தேசியவாதி...”
“அது சரி! அதுக்காக மத்தவங்களை அவமானப் படுத்தணும்னா சொல்லியிருக்கு...”
“அந்த ஆள் கிடக்கிறாருங்க...உங்க செல்வாக்குக்கு முன்னாடி ஒண்னும் பண்ணிட முடியாது!...நீங்க நாளைக்கு மந்திரியா வந்துட்டீங்கன்னா கட்சியிலே உங்களுக்கு ஒரு பிடி இருக்கும்...”
“கட்சிக்கு நாம் எவ்வளவோ செய்யிறோம். கட்சி தான் சமயத்துலே நம்மை மறந்துடுது....” –என்று ஒரு தினுசாகச் சிரித்துக்கொண்டே கூறினார் கமலக்கண்ணன்.
“–சுயேச்சையாக நின்று ஜெயித்தாலும்–நான் தேசியவாதியானபடியினால் கட்சியில் சேர்ந்து நாட்டுக்குத் தொண்டாற்றுகிற உத்தேசம் உண்டு’–ன்னு பத்திரிகையிலே இப்பவே ஒரு அறிக்கை விட்டுட்டிங்கன்னா நல்லாயிருக்கும். இல்லையின்னா மந்திரியா வர்ரதுக்காகத் தான் கட்சியிலே சேர்ந்தார்னு பின்னாலே நாலு பேருவம்பு பேசுவாங்க...”–என்று கமலக்கண்ணனைத் தனியே அழைத்து. இரகசியமாக யோசனை கூறினார் கட்சித் தலைவர். “நாளைக் காலை எடிஷன்லியே வர்ராப்ல இப்பவே நம்ம தினக்குரலுக்குச் சொல்லிடறேன்” என்றார் கமலக்கண்ணன்.
“சும்மா–பி.டபிள்யூ.டி. மீன்வளப் பாதுகாப்புன்னு உருப்படாததைத் தலையிலே கட்டிடப்போறாங்க... கேக்கறப்புவே, கல்வி, அல்லது தொழில்தான் வேணும்னு கண்டிப்பாக்கேளுங்க... நம்ம ஆளுங்களுக்கு ஏதோ நாலு உபகாரம் பண்ணலாம்...” என்று அந்தரங்கமாகக் கமலக்கண்ணனுக்கு யோசனை கூறினார் அனுதாபியும், பிரமுகருமான ஒரு நண்பர்.
“கல்வி எதுக்கு? இண்டஸ்ட்ரீஸ் அண்ட் லேபர் தான் நல்லதுன்னு பார்க்கிறேன்” என்று கமலக்கண்ணனும் மெல்ல அதற்கு ஒத்துப் பேசினார்.
கமலக்கண்ணன் பங்களாவில் பின்பக்கத்து அறையில் நடமாட்டமின்றிக் கிடந்த தாயைப் போய்ப் பார்த்து வணங்கிவிட்டு வந்தார். உடனே பக்கத்திலிருந்த நிருபர் கலைச்செழியன் அதையே ஒரு செய்தியாக எழுதி மறுநாள் தினக்குரலில் பிரசுரிக்கு மாறு ஃபோனில் கூறினான்.
“வெற்றிபெற்ற செய்தியறிந்ததும், நேரே அன்னையைக் கண்டு வணங்கி ஆசி பெற்றார் கமலக்கண்ணன்”–என்று தினக்குரலில் முதல் பக்கத்தில் கட்டம் கட்டிச் செய்தி போடுவதற்கு ஏற்பாடு செய்தாயிற்று. சாதாரண மனிதன் எளிமையாயிருந்தால், சாதாரணமனிதன் தாயன் போடிருந்தால், சாதாரண மனிதன் தெய்வபக்தியோடிருந் தால், அதற்கெல்லாம் விளம்பரமோ, புகழோ, வியப்போ கிடைக்காது. செல்வாக்குள்ளவனின் குண நியாயங்கள் தான் தேவையை மீறிக் கொண்டாடப்படும். தேவையை மீறி விளம்பரப்படுத்தப்படும். கமலக்கண்ணனின் சாதாரண செயல்கள் கூடக் குணங்களாகவும், இலட்சியச்செயல்களாகவும் விளம்பரப்படுத்தப்பட்டன.
கமலக்கண்ணனின் பங்களா கலியாண வீடு போலாகி விட்டது. வருகிறவர்களும் போகிறவர்களும் அதிகமானார்கள். காலையிலும் மாலையிலுமாக தினம் ஐம்பது பேருக்குக் குறையாமல் சாப்பிடத் தொடங்கினார்கள்.
தேர்தலில் வெற்றிபெற்றதற்காக நன்றி அறிவிப்புக் கூட்டம் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதற்குள் பிரகாசம் ஆஸ்பத்திரியிலிருந்து ‘டிஸ்சார்ஜ்’ ஆகிவந்திருந்த தனால் கூட்டத்தை அவனே நடத்தினான். பேசிய பேச்சாளர்கள் யாவருமே கமலக்கண்ணன் அமைச்சராக வந்து நாட்டுக்குச் சேவை செய்ய வேண்டியதன் அவசியத்தை வற்புறுத்திப் பேசினார்கள். கமலக்கண்ணனுக்கே அந்தப் பேச்சுக்கள் கேட்பதற்கு மகிழ்ச்சியை அளித்தன. சுயேச்சையாக வெற்றி பெற்றிருந்தாலும் சட்டசபையில் அதிக உறுப்பினர்களைப் பெற்றிருந்த தேசியக்கட்சியில் சேர்ந்து விடப் போவதாகவே அவர் பத்திரிகைகளில் அறிக்கை விட்டிருந்தார். கட்சி ஊழியர்கள் கூட்டத்திலும் அவரைப் பாராட்டுவதற்கு ஒர் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. அதற்குப் போவதற்கு மட்டும் கமலக்கண்ணன் பயந்து நடுங்கினார். கட்சி ஊழியர்கள் கூட்டமென்றாலே அவருக்குப் பயமாக இருந்தது. பழைய ஊழியர் கூட்டத்தில் நடந்ததை நினைத்த போது சிம்ம சொப்பனமாகவும் இருந்தது. ஆனால் இப்போது ‘கட்சி ஊழியர்கள்’ நடத்தும் பாராட்டுக்கூட்டத்திற்கு வரமாட்டேனென்று மறுப்பதிலும் தர்ம சங்கடம் இருந்தது. அதே கட்சியின் சார்பில் ஒரு மந்திரியாகப் பதவி வகிக்க நாளைக்குச் சந்தர்ப்பம் இருக்கும்போது இன்று அவர்களைப் பகைத்துக்கொள்வது நன்றாக இராதென்றும் தோன்றியது. கட்சித் தலைவரையும், நகரக் குழுவின் காரியதரிசியையும் மட்டும் அந்த ரங்கமாக விசாரித்து வைத்துக்கொண்டார்.
“என்னவோ ஊழியர் பாராட்டுக் கூட்டம்றீங்க...! உங்ககட்சி ஊழியர்களிலே நம்மை மனசாரப் பாராட்டறவன் எவனும் இருப்பான்னு எனக்குத் தோணலை. முன்னாடியே ஒருதடவை தகராறாயிருக்குது, அதனாலேதான் பயப்படறேன். எவனாவது கன்னாப்பின்னான்னு நடந்துக்கிட்டான்னா நான் ரொம்பப் பொல்லாதவனாயிருப்பேன்”–என்று முன்னெச்சரிக்கை போல் அவர்களிடம் சொல்லியும் வைத்திருந்தார் கமலக்கண்ணன். ஆனால் அவர்களோ தம் செவிகளால் நம்ப முடியாத ஒரு செய்தியை அவருக்குத் தெரிவித்தார்கள்.
“இப்ப அப்படியெல்லாம் நடக்காது. நீங்க எலெக்ஷன்லே ஜெயிச்சிருக்கீங்க...அந்த ஆள் காந்திராமனே உங்களுக்கு மாலைபோட வந்தாலும்கூட ஆச்சரியப்படறத்துக்கில்லே.”
“மாலை போட்டாலும் பரவாயில்லை. நாலு பேர் கூடியிருக்கிறப்ப அவமானப்படுத்தாமே இருந்தாக்கூடப் போதும்.”
“அதெல்லாம் ஒண்னும் நடக்காது! நீங்க கவலைப்படாம வாங்க...” என்றார் கட்சித் தலைவர்.
இதற்குள் பத்திரிகைகளில் எல்லாம் கமலக்கண்ணன். மந்திரியாக வர இடமிருப்பதாக உறுதியான ஹேஷ்யங்கள் வெளிவரத் தொடங்கிவிட்டன. அறநிலையப் பாதுகாப்பு மந்திரியாக வருவார் – என்பது சில பத்திரிகைகளின் ஹேஷ்யம் கல்வி மந்திரியாக வருவார் என்பது வேறு சில பத்திரிகைகளின் ஹேஷ்யம் தொழில்மந்திரியாக வருவார் என்பது வேறு சிலரின் ஹேஷ்யமாக இருந்தது. அவற்றை எல்லாம் பார்க்கப் பார்க்க, ‘இந்த ஹேஷ்யங்கள் எல்லாம் பொய்யாகும்படி மந்திரி பதவி என்றுமே கிடைக்காமல் ஆகிவிடக்கூடாதே’–என்ற பயமும் தற்காப்பும் வேறு அவருள் தலை எடுத்தன எனவே கட்சி ஆட்களைக் கவரவும் வசீகரிக்கவும் அவரே முன்வந்து முயற்சிகள் செய்யவேண்டியிருந்தது. கொஞ்ச நஞ்சமிருந்த வேறு உடைகளையும் தூக்கி எறிந்துவிட்டு முழுக்க முழுக்கக் கதரில் இறங்கினார் கட்சியின் செல்வாக்குள்ள மனிதர்களையும், தலைவர்களையும் அடிக்கடி பார்த்து அவர்களுடைய ‘குட்புக்ஸ்’ஸில் இருக்க முயற்சி செய்தார். கட்சியின் முக்கியஸ்தர் ஒருவர் மெல்ல ஒரு காருக்கு அடிப்போட்டார். கமலக்கண்ணனிடம் நேரடியாகப் பணம் கேட்க அவருக்குத் தயக்கமாயிருந்தது. “கட்சி வேலையா அலைச்சல் அதிகம். நீங்க எனக்குச் செய்யறதா கவே நினைக்கப்படாது. கட்சிக்கே இதைச் செய்யறதாகத் தான் வச்சுக்கணும். உங்கக்கிட்ட உபயோகத்திலே இருக்கிற வண்டியா இருந்தாக்கூடப் பரவாயில்லே” என்றார் பிரமுகர்.
“பார்க்கலாம்! கொஞ்சம் டயம் குடுங்க, யோசிக்கறேன்”–என்று நழுவப் பார்த்தார் கமலக்கண்ணன். பிரமுகரும் சுற்றிச் சுற்றி அதே பேச்சுக்கு வரவே நாசூக்காக மந்திரி பதவியைப் பதிலுக்கு வற்புறுத்த ஆரம்பித்தார் கமலக்கண்ணன். “அது ஒண்ணும் சிரமமில்லே! நிறைய எம். எல். ஏக்களோட குட்புக்ஸ்ல இருக்கணும். அதை நான் பார்த்து முடிச்சுத்தரேன். கொஞ்சம் செலவழியும், தயங்காமே செலவழிக்கணும்...”
“ஏற்கெனவே வேறே நிறையச் செல்வாகியிருக்கு. நீங்க வேறே காரைப்பத்திச் சொல்றீங்க...”
“இதுக்கெல்லாம் தயங்கினிங்கன்னா ஒண்னுமே ஆகாதுங்க... அஞ்சு வருஷம் மந்திரியா இருக்கிறதுன்னா சும்மாவா...?”
“அதுக்குச் சொல்ல வரலே. பார்ட்டிக்கே நான் நிறையச்செஞ்சிருக்கேன். நான் ஒரு ‘டெய்லி’ நடத்தறனே, அதுலே எவ்வளவோ கையைப் பிடிக்குது...இருந்தும் பார்ட்டிக்காக அதைவிடாப்பிடியா நடத்திட்டுவரேன்...”
“அதெல்லாம் வேறே..அதைக்கொண்டாந்து இதிலே சம்பந்தப்படுத்தாதீங்க...இது எப்படின்னா...சாதாரணமாகவே கொஞ்சம் வசதியுள்ளவங்கதான் மந்திரியா வர முடியும். நீங்களோ சுபாவமாகவே வசதியுள்ளவரு. மந்திரியா வரணுங்கற ஆசையுள்ள பத்து எம்.எல்.ஏக்கள் உங்களுக்காக அதை விட்டுக்குடுக்கணும்னா பதிலுக்கு. அவங்களுக்காக நீங்க ஏதாவது செஞ்சுத்தானே ஆகணும்?”
“என்னமோ...ரொம்பப் பெரிசா பயமுறுத்தீங்க... பார்க்கலாம்...” கமலக்கண்ணனுக்குத் தான் ஒரு மந்திரியாக வரமுடியும் என்ற நிலைமைகள் தெளிவாகி விட்டன. அதற்கான ஏற்பாடுகளில் அவர் தீவிரமாக இறங்கினார். கட்சி ஊழியர்கள் பாராட்டுக்கூட்டத்தன்று அவர் மிக மிக உற்சாகமாக இருந்தார். எல்லாரும் அவரையும் அவருடைய வெற்றியையும் வானளாவப் புகழ்ந்து பேசினார்கள். தேர்தலுக்கு முன்பு நடந்த ஊழியர் கூட்டத்தில் கமலக்கண்ணன் அசல் தேசியவாதி அல்ல என்றும் அவரைப் போன்றவர்கள் கட்சியில் தீவிர உறுப்பினராகக்கூடாதென்றும்’– தாக்கிப் பேசிய அதே காந்திராமன் இன்று தேர்தலில் அவர் வெற்றி பெற்றதைப் பாராட்டிப் பேசுவதாகவும் மாலையணிவிப்பு தாகவும் நிகழ்ச்சி நிரலில் கண்டிருந்தது. கமலக்கண்ணன் முற்றிலும் எதிர்பாராத மாறுதல் இது. அதனால் எல்லாருடைய மாலைகளும், எல்லாருடைய புகழும் அவர் செவிக்கு இன்பம் தந்ததை விடக்காந்திராமன் என்ன பேசப் போகிறார் எப்படிப்பட்ட மாலையைச் சூட்டப்போகிறார் என்பதையே அவர் ஆவலோடு எதிர்பார்த்திருந்தார். நிகழ்ச்சி நிரலில் காந்திராமனின் பெயர் கடைசியிலிருந்தது. அவர் ஒரு தீவிரமான காந்தியவாதி என்பதால் முன்பு பலமுறை கமலக்கண்ணனைப் பிடிக்காததுபோல் காண்பித்துக் கொண்ட அவர்–இன்று எப்படிக் கமலக்கண்ணனைப் பாராட்டிப் பேசப்போகிறார் என்பது எல்லாருக்கும் திகைப்பாகவும்– வியப்பாகவுமே இருந்தது. ஆனால் மின்வெட்டும் நேரத்தில் யாருமே எதிர்பாராத நிகழ்ச்சி நிகழ்ந்துவிட்டது.
“கெட்டவை நிகழ்வதற்குமுன் வானில் வால் நட்சத்திரங்கள் தோன்றுமென்பார்கள், காந்தியத்திலும், தேசியத்திலும் நம்பிக்கை இல்லாத ‘கள்ள மார்க்கெட்’ பேர்வழிகள் நம் கட்சியின் ஆதரவில் வெற்றி பெற்றிருப்பது நமது லட்சியங்களுக்கு ஏற்றதல்ல என்று நான் கருதுகிறேன். நமது கட்சி அழிவதற்குரிய உற்பாதங்களாக இந்த வெற்றிகளைக் கருதி வெறுக்கிறேன் நான்’ என்று மேடையேறிச் சீறுவதுபோன்ற குரலில் வேக வேகமாக முழங்கிவிட்டுக் கையோடு கொண்டுவந்திருந்த மாலை பொட்டலத்தைப் பிரித்துக் கமலக்கண்ணனை அவமானப் படுத்துவதுபோல் முற்றிலும் எருக்கம் பூவாலேயே கட்டப்பட்டிருந்த அந்த மாலையைத் துணிந்து அருகில் நெருங்கி அவருக்கு அணிவித்துவிட்டு–விறு விறுவென்று இறங்கி நடந்துவிட்டார் காந்திராமன். ஒருவருக்கும் அவரை எதிர்க்கத் தோன்றவில்லை. அவ்வளவேன்? கமலக்கண்ணனே எருக்கம்பால் நாற்றமடிக்கும் அந்த மாலையைக் கழற்றத் தோன்றாமல் ஐந்து நிமிஷம் ‘திக்பிரமை’ பிடித்து இருந்தார். காந்திராமன் மின்னலைப்போல் மேடையேறி ஒவ்வொரு வார்த்தையாக முழங்கிய முழக்கம் இன்னும் சபையில் எதிரொலித்துக் கொண்டிருப்பதுபோல ஒரு பிரமை நிலவியது. யாருக்கும் எதுவும் செய்யத் தோன்ற வில்லை. கூட்டத்தை முடிக்கும்போது சம்பிரதாயமான முறையில், “இங்கு நடந்த அசம்பாவிதங்களுக்காக மனப் பூர்வமாக வருந்துவதோடு கமலக்கண்ணன் அவர்களிட மும், உங்களிடமும் தலைவன் என்ற முறையில் கட்சியின் சார்பில் மன்னிப்பும் கேட்டுக் கொள்கிறேன்” என்றார் கட்சித் தலைவர் .
“நீங்க இதைப் பெரிசு படுத்தாதிங்க...பொறாமைக்காரங்க எங்கேயும் இருப்பாங்க... எதுவும் செய்வாங்க...” என்று ஒருபிரமுகர் கமலக்கண்ணனுக்கு ஆறுதல் கூறினார்.
“பேப்பர்ல பெரிசா பாராட்டுக் கூட்டத்தில் கலாட்டான்னு வராமப் பார்த்துக்கணும்” என்று மட்டும் கமலக்கண்ணன் பதில் கூறினார்.
“அப்பிடி ‘நியூஸ்’ வராது. அதை நாங்க பார்த்துக்கறோம். நீங்க கவலைப்படாதீங்க” என்று கட்சித்தலைவர் உறுதி கூறினார். மனம் என்னவோ அவமானத்தை உணர்ந்து கொதிக்கத்தான் செய்தது. ஆனாலும் நிலைமை கெடாமல் ‘டிப்ளமேட்’ ஆக இருந்தார் கமலக்கண்ணன். அடுத்த வாரம் அசெம்பிளியின் மெஜாரிடி உறுப்பினர் களடங்கிய தேசியக் கட்சித் தலைவரின் மந்திரிகள் பட்டியல் வெளியானபோது பட்டியலில் நாலாவதாகக் கமலக்கண்ணனின் பெயரும் இருந்தது. இரண்டு நாட்களில் கட்சியின் சட்டசபை முதல்வர் பட்டியலை ஒப்படைப்பதற்காகக் கவர்னரைச் சந்திக்கச் சென்றபோது உடன் சென்றவர்களில் கமலக்கண்ணனும் ஒருவராக இருந்தார். இந்த மிதமிஞ்சிய மகிழ்ச்சிகளில் ‘காந்திராமன்’ செய்த அவமானத்தைத் தற்காலிகமாகக் கமலக்கண்ணனால் மறக்க முடிந்தது.