9

குடியரசாட்சி, சமஉரிமை, எல்லாருமே ஒர் குலம், எல்லாரும் ஓர் விலை, எல்லாரும் ஓர் நிறை— என்றெல்லாம் பழக்கமாகி விட்ட வாசகங்களை நம்பிக்னையில் ஆழம்வரை போக விடாமல்—எதிரே கேட்கிற பாமரர்களுக்காகச் சொல்கிறவர்கள்—கேட்கிறவர்களிடம் அது உண்டாக்குகிற விளைவுகளுக்கேற்பப் பின்பு நடக்கவும் தெரிய வேண்டும். ஆனால் அடுத்தலனுடைய மனச்சாட்சியைக் கிளரச்செய்து–விட்டு அது கிளர்ந்தெழுந்து தனக்கெதிரே வருகிறவேளையில், ‘என்னை எதிர்த்து இப்படிக் கேட்க, இவனுக்கு எவ்வாறு இவ்வளவு துணிவு வந்தது’– என்று வெகுளிப்படுவது தான் சராசரி இந்தியப் பெரிய மனிதனின் ஜனநாயகமாக இன்று இருக்கிறது. பாமரர்கள் செயலளவில் ஜனநாய கத்தைப் புரிந்துகொள்கிற வேளையில் புரியவைத்தவர்கள் வெட்கப்படுகிற நிலையோ, பயப்படுகிற நிலையோ கனிந்த ஜனநாயகம் ஆகாது. உரிமை, அபிப்பிராய சுதந்திரம்—போன்ற வார்த்தைகளுக்கு எல்லாம் எவ்வளவு பொருள் உண்டு என்பதைப் புரிந்துகொள்ளாமல் கமலக்கண்ணனே பலமுறை யாரோ சொல்லிக்கொடுத்துப் பேசியது போல மேடையிலே அவற்றைப்பற்றி முழங்கியிருக்கிறார். இன்று அந்த உரிமையை அவராலேயே பொறுத்துக் கொள்ளமுடியவில்லை. “வாபஸ் வாங்கு! வாபஸ் வாங்கு! ‘நான்சென்ஸ்’—என்ற வார்த்தையை வாபஸ் வாங்கு” எனச் சுதந்திரமான மனிதர்களின் கோபம் நிறைந்த குரல்கள் கூடம் நிறைய அதிர்ந்த போது தான் அவர் பயந்தார். “தேர்தலுக்கு இன்னும் சிலமாதங்களே இருக்கின்றன! இந்தச் சமயத்தில் இவர்களை எல்லாம் பகைத்துக் கொண்டீர்களானால் கட்சித் தொடர்பையே இழக்க நேரிட்டுவிடும். கவனமாக ஏதாவது சொல்லித் தப்பித்துக்கொள்ளப் பாருங்கள், கோபமாகப் பேசாதீர்கள்” என்று கட்சித் தலைவர் கமலக்கண்ணனின் காதருகே முணுமுணுத்தார். கமலக்கண்ணனுக்கும் தன் நிலைமை புரிந்துதான் இருந்தது. புதிதாகச் சேர்ந்த அந்தக் கட்சிக்காக எவ்வளவோ செலவழித்தது எல்லாம் தேர்தலை மனத்தில் வைத்துத்தான். பணத்தைச் செலவழித்து அடைய முயன்ற செல்வாக்கை ஒரு வார்த்தையைச் செலவழிக்கத் தயங்குவதன் மூலம் இழந்துவிடக் கூடாதென்ற முன் ஜாக்கிரதையுடன், “நண்பர்களே! என்னை மன்னியுங்கள். தவறாக எதையும் நினைத்து நான் கூறவில்லை. பழக்கத்தின் காரணமாக ‘நான்சென்ஸ்’ என்று வந்துவிட்டது. யாருடைய பெருமையையும் நான் வாய்தவறிக் கூறிய வார்த்தை குறைத்து விடாது என்று பணிவுடன் தெரிவித்துக்கொள்கிறேன்” என்று சமயோசிதமான தந்திரத்துடன் கூறி முடித்தார் கமலக்கண்ணன். ஊழியர்கள்கூட்டம் அமைதியடைந்தது. அதுதான் சரியான வேளையென்று—வேறு எதுவும் அவர்களுக்கு ஞாபகம் வருவதற்குமுன் நன்றி கூறிக் கூட்டத்தை முடித்துவிட்டார் கட்சித் தலைவர். கூட்டத்தில் நிகழ்ந்த குழப்பம் பத்திரிகைகளில் தவறிக்கூட வந்துவிடாமல் தலைவரும் கமலக்கண்ணனும் கவனித்துக் கொண்டார்கள். அதற்குப்பின் இரண்டுமாதகாலம் ஊழியர் கூட்டம் என்ற பேச்சே கிடையாது. மூன்றாவது மாதம் பொதுத்தேர்தல் வந்துவிட்டது. கட்சி கமலக்கண்ணனை அபேட்சகராக நிறுத்தும் என்று நம்பத் தகுந்த வட்டாரங்களிலிருந்து செய்தியும் பரவத் தொடங்கிவிட்டது அந்த வேளையில். தான் மறுபடியும் எதிர்ப்பு உருவாயிற்று.

‘தேசியப் போராட்டக் காலத்தில் வெள்ளைக்கார னுக்கு ஆதரவாக இருந்த குடும்பத்தைச் சேர்ந்தவரும், கட்சியின் தீவிர உறுப்பினருக்கான தீவிரத் தகுதிகளான சுதேசித் துணி உடுத்துதல், மதுவிலக்குக் கொள்கையை மேற்கொள்ளுதல், போன்றவற்றைக் கடைப்பிடிக்காதவரு மான கமலக்கண்ணன் கட்சி அபேட்சகராக நிறுத்தப் பட்டால்–உடனே கட்சியிலிருந்து விலகுவோம்’—என்று கையொப்பமிட்ட பல கடிதங்கள் தலைவரிடம் குவிந்தன்.

‘ஒருவன் தான் படுகிற சிரமங்களினால் தியாகியாகலாம். ஆனால் தன்னைத் தியாகியாகத் தயாரித்துக் கொள்ள முடியாது’—என்பது மீண்டும் கமலக்கண்ணனுக்கு நிரூபிக்கப்பட்டது. ஆனாலும் பெரிய மனிதரும் பெரும் பணக்காரருமான கமலக்கண்ணனைக் கட்சி பகைத்துக்கொள்ள விரும்பவில்லை. எல்லாத் தொகுதிகளுக்கும் கட்சியின் அபேட்சகர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டார்கள் பெயர்களும் பத்திரிகைகளில்வந்துவிட்டன. கமலக்கண்ணன் நிற்கவேண்டிய தொகுதிமட்டும் இன்னும் அறிவிக்கப்படவில்லை. கமலக்கண்ணனையே நிறுத்திவிடுகிற துணிவு கட்சிக்கு இல்லை. ஆனால், ‘சுயேச்சையாகக் கமலக்கண்ணன் நின்றால் அவரை எதிர்த்துக் கட்சியின் சார்பில் யாரையும் நிறுத்துவதில்லை’ என்றுமுடிவாயிற்று. இந்த ஏற்பாட்டைக் கமலக்கண்ணனும் ஏற்கவேண்டியதாயிற்று. இதற்கே கட்சியில் பலத்த எதிர்ப்பு இருந்தும் பெரிய பெரிய தலைவர்கள் கமலக்கண்ணனுக்காக முன் நின்று இதைச் செய்தார்கள்.

சுயேச்சையாக நின்றால் எதைச் சின்னமாகக் கொள்வது என்றுமுடிவுசெய்வதற்காக அபேட்சைமனுக் கொடுப் பதற்குமுன் தம் வீட்டில் ஒரு ஞாயிற்றுக்கிழமை இரவு நெருங்கிய நண்பர்களைக் கலந்தாலோசித்தார் கமலக்கண்ணன். எல்லாரும் விருந்து சாப்பிட்ட பின்னர் மொட்டை மாடியில் ஆலோசனை ஆரம்பமாயிற்று.

“நம்ம தொகுதியில் பெண் வாக்காளர்கள்தான் அதிகம். ஆகவே பெண்களுக்கு அதிகம் பரிச்சயமுள்ள இன்னம் ஒன்று வேண்டும்...” என்றார் கமலக்கண்ணன்.

“மலர்—தான் பெண்களுக்கு அதிகமாக அறிமுகமானது. எனவே ‘பூ’ சின்னம் வைக்கலாம்”—என்றார் புலவர் வெண்ணெய்க் கண்ணனார்.

“முடியவே முடியாது! அந்தச் சின்னத்தை இதே தொகுதியில் நிற்கும் ‘சிவராசன்’ என்ற மற்றொரு சுயேச்சை அபேட்சகர் வைத்துக்கொண்டு விட்டார்” என்று உடனே அந்த யோசனை மறுக்கப்பட்டது.

“குடம்—அல்லது பானை...”

“அதுவும் சாத்தியமில்லை. இதே தொகுதியில் பார்லிமெண்டிற்கு நிற்கிற சுயேச்சை சுப்பையாவின் சின்னம் அது.”

குடமும் கைவிடப்பட்டது.

“வளையல்–ஹேர் பின்...”

“கண்ணுக்குப் போல்டாகத் தெரியாத சின்னங்களால் பயனில்லை. பிரச்சாரமும் பயனளிக்காது.”

—கண்ணுக்குப் போல்டாகத் தெரியாதவை என்ற காரணத்தால் வளையலும் ஹேர் பின்னும் கைவிடப்பட்டன.

“அரிவாள்மணை—அடுப்பு—விறகு......காபி டவரா டம்ளர்...”

“அமங்கலம்! அமங்கலம்! இவை யாவுமே மங்கலக் குறிகளல்ல"– என்று மறுத்தார் புலவர்.

அவைகளும் கைவிடப்பட்டன.

சில நிமிடங்கள் அமைதி நிலவிற்று.

“எல்லாரும் ஒப்புக்கொள்வதாயிருந்தால் நான் ஒன்று சொல்கிறேன்.... யாரும் மறுக்கக்கூடாது..."என்று பிரகாஷ் பப்ளிவிடீஸ் பிரகாசம் தொடங்கினார். கமலக்கண்ணன் உள்பட எல்லோரும் ஆவலோடு அவர் முகத்தையே பார்க்கலானார்கள்.

“ஏன்னா பப்ளிவிடி லயன்லே ரொம்ப நாளா இருக்கேன். மாஸ் ஸைகாலஜி புரிஞ்சவன். நல்லா யோசிச்சு இதைச் சொல்கிறேன்...”

“அட சொல்லும் ஐயா! முன்னுரை வேண்டாம்” என்றார் கமலக்கண்ணன்.

பிரகாசம் கூறலானார்:–

“தண்ணீர் பிடிக்கச் சிரமப்படாத பெண்ணே கிடையாது. பெண் வாக்காளர்கள் அதிகமாக இருக்கிறதுனாலே கிணறு அல்லது குழாய்ச்சின்னம் வச்சிக்கலாம். குழாய் கூட போல்டா இராது. இராட்டினம் கயிறோடு கூடிய கிணறுதான் போல்டான பெரிய சின்னம். நீர் ஊறுகிற அம்சமாகையினால் மங்கலமாகவும் இருக்கும். தொழில் வளரும்கிறதுக்கும் நீர் மேலும் மேலும் ஊறுகிற கிணறு ஒரு சுபசூசகம்...”—

“எனக்குக் கிணறு பிடிச்சிருக்கு அதையே வச்சிக்கலாம்”—என்று தீர்க்கமான குரலில் கமலக்கண்ணனிடமிருந்து பதில் வந்தது. பிரகாசம் முகம் மலர்ந்தார். கமலக் கண்ணனுக்கே பிடித்தபின் மற்றவர்கள் ஏன் வாய் திறக்கிறார்கள்? எல்லோரும் ஏகமனமாகக் கிணற்றுச் சின்னத்தைப் பாராட்டினார்கள். பிரகாசத்தையும் பாராட்டினார்கள்.

“கிணறு விருத்திக்கு அடையாளம்னா...பேஷானசின்னமாச்சே அது”—சோதிடர் சர்மாவும் ஒத்துப்பாடினார். மறுநாள்காலை அதிகார பூர்வமாக அபேட்சை மனுதாக்கல் செய்து கிணற்றுச் சின்னமும் வேண்டப்பட்டது. சின்னமும் கிடைத்தது கிணற்றுச் சின்னத்திற்கு யாருமே போட்டியில்லை. அகில இந்தியாவிலேயும் கமலக்கண்ணன் என்ற ஒரே ஒரு சுயேச்சை அபேட்சகர்தான் கிணறு சின்னத்தையே கேட்டிருந்தார். அதனால் அதை இவருக்கு வழங்குவதில் எந்தச்சிரமமும் இருக்கவில்லை. கிணறுச்சின்னம் முடிவாகி அபேட்சைமனு தாக்கல் செய்து பத்திரிகைகளிலும் செய்தி கள் வெளிவந்த பின் தேர்தல் அலுவிலகம் திறப்பதற்கு ஏற்பாடாயிற்று. தேர்தல் பிரச்சாரத்திற்கான பிரசுரங்கள், வாசகங்கள், சுவரொட்டிகள் அச்சிடும் பொறுப்பு புலவர் வெண்ணெய்க்கண்ணனாரிடம் விடப்பட்டது. நீர்வளத்திற்கு அடையாளம் கிணறு! நிலவளத்திற்கு அடையாளம் கிணறு! நல்வாழ்வின் சின்னம் நற்கேணியே! ஊற்றுப் பெருக்கால் உலகு ஊட்டுவது கிணறே!

என்றெல்லாம் வாசகங்களை அடுக்கிவரைந்து தள்ளினார் புலவர். பெண் வாக்காளர்களுக்கு ஒரு கவர்ச்சி வேண்டு மென்று கருதித் தேர்தல் அலுவலகத் திறப்புவிழாக் கூட்டத்திற்கு நடிகை மாயாதேவி அழைக்கப்பட்டிருந்தாள். அவளும் கமலக்கண்ணனை ஆதரித்து மேடையில் இரண்டு வார்த்தைகள் பேசினாள்.

பிரகாஷ் பப்ளிஸிட்டி அதிபர் பிரகாசத்தின் யோசனைப்படி நடிகை மாயாதேவியின் படத்துடன்—“உங்கள் ஒட்டு கமலக்கண்ணனுக்கே’’ என்ற மாபெரும் சுவரொட்டி சின்னத்துடன் அச்சிட்டு ஒட்டப்பட்டது. மாயாதேவி மயக்கும் புன்னகையுடன் வளைக்கரங்களால் கிணற்றுச்—சின்னத்திற்கே ஒட்டு போடுவதுபோல் எடுக்கப்பட்ட புகைப்படக் காட்சியோடு சுவரொட்டிகள் எல்லா இடங்களிலும் மின்னின. தினசரி காபி—சிற்றுண்டிச் செல்வுபகல்—இரவு உணவுச் செலவு–வாகனங்களுக்கான பெட்ரோல் செலவு இரண்டாயிரம் ரூபாய் வரை ஆயிற்று. தொகுதியில் மொத்தம் ஐந்தாறு பெரிய தேர்தல் அலுவலகங்கள். பத்துப் பன்னிரண்டு சிறிய தேர்தல் அலுவலகங்கள் எல்லாவற்றிலும் ஒரு பப்ளிக் ரிலேஷன்ஸ் ஆபீசர், வேறு, தற்காலிகமாக அவர்களுக்கு மாதச் சம்பளம் வேறு பேசப்பட்டிருந்தது. தனக்குத் தெரிந்த சோம்பேறிகளை பிரகாசமும், தனக்குத் தெரிந்த சோற்று மாடன்களைக் கலைச்செழியனுமாகக் கமலக்கண்ணனின் தேர்தல் அலுவலகங்களில் பி.ஆர்.ஒக்களாக அமர்த்தி வைத்திருந்தனர்.

தேர்தல் ஊர்வலங்கள் நடத்தி நடைமுறையில் கமலக் கண்ணனின் சின்னத்திற்கே ஒட்டைப் போட வேண்டுமென்று கோஷங்கள் இடும் போதுதான் ஒரு தொல்லை புரிந்தது.

“உங்கள் ஒட்டை”—என்று ஒருவர் கோஷத்தைத் தொடங்கினால்,

“கிணற்றில் போடுங்கள்’’—என்று மற்றும் பலர் அதைத் தொடர்ந்து சொல்லி முடிப்பதைக் கேட்கும் போது அந்தச் சொற்றொடர்கள் கமலக்கண்ணனுக்காகப் பிரச்சாரம் செய்வதாகத் தோன்றியதைவிடத் துஷ்பிரச்சாரம் செய்வதுபோல் ஒலிக்கத் தொடங்கின. உடனே பலத்த சந்தேகத்தோடு கோஷங்கள் நிறுத்தப்பட்டன. அன்றிரவே இந்தப்பிரச்சினை வாசகங்களின் தேர்தல் மொழி அதிகாரியும் பிரச்சாரப் பொறுப்பாளருமாகிய புலவர் வெண்ணெய்க்கண்ணனாரிடம் கொண்டு போகப்பட்டது.

“உங்கள் ஒட்டைக் கிணற்றில் போடுங்கள்...என்பது சரியா அல்லது வேறு விதமாகத்தான் சொல்ல வேண்டுமா?”

“அடபாவிகளா! கெடுத்தீர்களே குடியை அறியாதவன், தெரியாதவன் கிணற்றிலேயே கொண்டுபோய் ஒட்டைப் போட்டுவிடப் போகிறான்! இனிமேல், ‘உங்கள் ஒட்டைக் கிணற்றுச் சின்னத்திலேயே போடுங்கள்’–என்று பிரச்சாரம் செய்ய வேண்டுமே ஒழியவேறுவிதமாகப் பிரச்சாரம் செய்யக்கூடாது” –என்று முடிவு கூறப்பட்டது. தேர்தல் போர்க்களத்தில் மாற்று அபேட்சகர்களாகிய எதிரிகளின் முகாம்களிலிருந்து ஒவ்வொருநாளும் ஒவ்வொரு விதமான செய்திகள் கமலக்கண்ணனுக்குக் கிடைத்தன. அவற்றிற்கெல்லாம் தகுந்தபடி கமலக்கண்ணனும் பதிலுக்கு ஏதாவது செய்ய வேண்டியிருந்தது.

“பூச்சின்னக்காரர் தன்னுடைய வாக்காளர்களைச் சந்திக்கப் போகும்போது பூவும், தேங்காய்ச் சின்னக்காரர் வாக்காளர்களைச் சந்திக்கப் போகும்போது தேங்காயும் கொடுக்கிறார்கள். மக்களும் இப்படிப் புதுமையான முறையில் பொருள்களுடனேயே தங்களை நாடிவருகிறவர்களை வியக்கிறார்கள்’’–என்று கூறப்பட்டவுடன்.

“கிணறு சின்னத்தை அப்படியெல்லாம் வாரி வழங்க, முடியாது. ஒவ்வொரு வாக்காளருக்கும் ஒரு கிணறே வெட்டிக் கொடுக்கலாமென்றாலும் அது தேர்தலுக்குள் நடக்கக்கூடிய காரியமில்லை. எனவே எனாமலில் சட்டையில் குத்திக்கொள்ள ஏற்றபடி கிணறு சின்ன ‘பாட்ஜ்’ ஒன்று செய்து யாவருக்கும் வழங்கலாம்”–எனப் பதிலுக்கு இவர்கள் தரப்பிலும் யோசனை தெரிவிக்கப்பட்டது. உடனே கமலக்கண்ணனிடம் செய்தி தெரிவிக்கப்பட்டு, அவருடைய சம்மதத்துடன் எனாமல் பாட்ஜுகளுக்கு ஆர்டர் கொடுக்கப்பட்டது. சினிமா கம்பெனி ஒன்றில்கூறி கிணறு மாதிரி லாரியின் மேல் ஒரு ஸெட்டிங்ஸ் பிளைவுட்டில் தயாரித்து ஊர்வலம் விடவும் ஏற்பாடுகள் செய்யப் பட்டன. கமலக்கண்ணனை எதிர்த்து அவர் சேர்ந்திருந்த அதே தேசியக் கட்சி ஊழியர்கள் சிலரும் மேடையேறி முழங்கத் தொடங்கிவிட்டார்கள். அவர்களை எதிர்த்தும் சமாளிக்க வேண்டியிருந்தது.

“தேச விடுதலைக்காக ஒரு துரும்பைக்கூட இவர் அசைத்ததில்லை! வெள்ளைக்காரன் இருந்தவரை இவர் குடும்பம் தாசானு தாசனாக இருந்தது. அன்று சத்தியாக்கிரகிகளைக் கேலி செய்த இவர் குடும்பம் இன்று பதவிக்காகப் பறக்கிறது. கிணறுச் சின்னத்தில் நிற்கிற இவரை நம்பினால் பொதுமக்கள் பாழுங்கிணற்றில் விழவேண்டியதுதான்”—என்று முழங்கினார்கள் கமலக்கண்ணனின் எதிரிகள். பதிலுக்குக் கமலக்கண்ணனின் பிரசார இயந்திரம் சரியாக இயங்கி உடனே மறுமொழி கூறியது.

காந்திய சமதர்மசேவா சங்கத்தின் கட்டிடங்களை உருவாக்கிய வள்ளல் கமலக்கண்ணனைக் குறைகூறுகிறவர்களின் நாக்கு அழுகிப் போகும். தம் வீட்டு முகப்பில் பெரிதாக மாட்டியிருக்கிற் காந்தியடிகள் படத்தைத் தொட்டுக் கண்களில் ஒற்றிக்கொள்ளாமல் சாப்பிடப் போகமாட்டார் நம் வள்ளல். ஆலயங்களுக்குச் செய்த அறப்பணிகளோ அளவற்றவை. கலைத்துறையிலோ மாயாதேவி போன்ற மாண்புமிகு தாரகைகள் மின்னவும் புகழடையவும் நம் வள்ளலே உறுதுணை புரிந்தவர். நல்லவர்களின் நண்பர், தீயவர்களின் எதிரி, துரயவர்களின் துணைவர், தூர்த்தர்களைத் தொலைப்பவர், கமலக்கண்ணன் அவர்களே. கருணை மயமாக ஊறும் அந்தக் கிணற்றிற்கே உங்கள் ஒட்டைப் போடவேண்டுகிறேன்”—என்பது போன்ற சொற்பொழிவுகளைக் கமலக்கண்ணனின் ஆட்கள் முழக்கித்தள்ளினார்கள். ‘தினக்குரல்’ பக்கம் பக்கமாகக் கமலக்கண்ணனைப் பற்றிப் புகழ்ந்து எழுதியது. துண்டுப் பிரசுரங்கள் விமான மூலம் தூவப்பட்டன. பானர்கள்,தோரணங்கள், சுவரொட்டிகள், எங்கும் கமலக் கண்ணனின் கிணற்றுச் சின்னமே தென்படலாயிற்று. இருபத்தைந்து கார்களும், ஐந்து ‘வான்’களும் தொகுதி முழுவதும் சுற்றின. பனம் தண்ணீராக ஒடியது.

“ரொம்பச் செலவழிக்கிறேன்னு பேசிக்கிறாங்க... இத்தினி செலவழிச்சி ஜெயிச்சுத்தான் என்ன பண்ணப் போறே?”—என்று ஒரு வழிக்கும் வராத கமலக்கண்ணனின் தாய்கூட ஒருநாள் அவரை மெல்லக் கண்டித்தாள்.

“பேசாம இரம்மா! உனக்கொண்ணும் இதெல்லாம் புரியாது. ஜெயிச்சா எத்தினியோ காரியம் ஆகும்”—என்று தாய்க்குப் பதில் சொன்னார் கமலக்கண்ணன். கமலக்கண்ணன் நின்ற தொகுதியில் மிக முக்கிய கட்சியும், அப்போதைய ஆளும் கட்சியுமான தேசியக்கட்சியின் போட்டி இல்லை என்றாலும் மற்றக் கட்சிகளின் போட்டியும், உதிரி களான சுயேச்சைகளின் போட்டியும், அதிகமாக இருந்தது. ஒட்டுக்கள் அநாவசியமாகப் பிரிந்து கமலக்கண்ணன் தோற்றுப் போய்விடுவாரோ என்ற பயமும் எழுந்தது. ஏற்கெனவே அபேட்சை மனுத்தாக்கல் செய்வதற்கு—முன்பாகவே—சிலரை நிற்கவிடாமலே தடுத்திருந்தார் அவர். கொடுக்க வேண்டியதை கொடுத்துத் தடுக்க வேண்டியதைத் தடுத்திருந்தார் என்றாலும் கூடப் பயம்–பயமாகத் தான் இருந்தது.

ஆனால் கமலக்கண்ணனை வெற்றிபெறச் செய்ய வேண்டும் என்று மாயாதேவி போன்ற நட்சத்திரங்கள். வெண்ணெய்கண்ணனார் போன்ற புலவர்கள், சர்மா போன்ற சோதிடர்கள் பிரகாசம், கலைச்செழியன் போன்ற சாதுரியக்காரர்கள், எல்லோரும் அயராமல் பாடுபட்டுக் கொண்டிருந்தார்கள். எந்தக் கூட்டத்திலும் அபேட்சகராகிய கமலக்கண்ணன் அதிகம் பேசவில்லை. மற்றவர்கள் அவரை மேடையில் அமர்த்தி வைத்துக்கொண்டு பேசினார்கள். இறுதியில் நாடகத்தின் கடைசிக் காட்சி போல் அவரும் எழுந்து ‘மைக்’ முன்வந்து “பொது மக்களே! உங்கள் அனைவருக்கும் என் பணிவான வணக்கங்கள். எனக்கு வாழ்க்கையில் சகலவிதமான வசதிகள் இருந்தும் பொது மக்களுக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்கிற ஒரே ஆசைக்காகத் தான் இப்படித் தேர்தலில் நிற்கிறேன். வேறு சிலரைப்போல் ஒரு பதவியை அடைந்து அந்தச் செல்வாக்கின் மூலம்தான் பணமும், புகழும் சேர்க்கவேண்டும் என்ற நிர்ப்பந்தம் எனக்குக் கிடையாது. வசதிகளை உடைய நான் ஏன் சிரமப்பட முன் வருகிறேன் என்பதை நீங்கள் நன்கு சிந்திக்கவேண்டும்”—என்று விளக்கி யாவரும் தமக்கேவாக்களிக்க வேண்டுமெனக்கோருவதோடு கூட்டங்கள் முடியும்.

தேர்தல் நாள் நெருங்க நெருங்கக் கமலக்கண்ணனின் தொகுதியிலுள்ள ஸ்லம், சேரி, குடிசை வாழ்பெருமக்களின் கோட்டைகளைப் பற்றிய பிரச்சினை தலையெடுத்தது. “நூறு குடிசைங்க நான் இன்னா சொல்றேனோ அப்பிடியே ஒட்டுப் போடும் சார்! நம்பகிட்ட பொறுப்பா வுட்டுடுசார்! அத்தினி ஒட்டும் தானா உனக்கே விழுந்துடும்”—என்று ஒர் தலை சீவாத ஆள் கழுத்தில் கைக்குட்டையைச் சுற்றுவதும் கழற்றுவதுமாகச் சேட்டை செய்து கொண்டே பேரம் பேசினான். அதுவரை அப்படிப் பத்து. ஆட்களைச் சந்தித்திருந்தார் கமலக்கண்ணன். ஒவ்வொரு வரும் குறைந்தபட்சம் ஆயிரம் அல்லது இரண்டாயிரம் முன் பணமாகக் கேட்பதற்குத் தவறவில்லை. “அத்தினி ஸ்லம் ஒட்டும் லாட்டா விழறாப்ல பண்றேன் சார்! மூவாயிரம் குடுப்பியா?”—என்றான் ஒருவன். இதில் வேடிக்கை என்னவென்றால் ஒரே சேரிக்கு ஆறு பேர் தங்களையே தனிப் பெரும் தலைவர்களாகப் பிரகடனப்படுத்திக் கொண்டனர். சேரி, குடிசைப் பகுதிகளுக்குள் கமலக்கண்ணனே நேரில் நடந்துபோய் குடிசை குடிசையாக ஒட்டுக் கேட்க வேண்டுமென்று பிரகாசம் யோசனை கூறினார்.

“ஒரே சேறும் சகதியுமா ரொம்ப டர்ட்டி ப்ளேஸா இருக்குமே? நாம்பளே போவானேன்னு பார்க்கிறேன். ரூபாயை வீசி எறிஞ்சாலே நடக்காது...?”— என்றார் கமலக்கண்ணன்.

“ரூபாயும் வேணும்தான்! ஆனா நேரேயும் போனால் தான் நல்லது. நேரே போகலேங்கறது. ஒரு குறையா ஆயிறப்பிடாது பாருங்க?”

“சரி! போனாப் போகுது. காரிலே முடியாது நடந்தேதான் போய் ஆகணும்.”

“காரை மெயின் ரேர்டிலே விட்டுட்டு இறங்கி நடந்துட வேண்டியதுதான். நாங்கள்ளாம் கூட வருவோம். ஒரு பந்தாவா – அஞ்சாறு பேர் சேர்ந்து போனம்னாலேகளை கட்டிப்பிடும்.”

“அதான் செய்துடலாம்னேனே.”

“நம்ம எனாமல் கிணறு பாட்ஜ் கொஞ்சம் கையோட எடுத்துக்கனும், குடிசைக்குக் குடிசை அதையும் ஒரு ஞாபகமாகக் கொடுத்துட்டு வந்துடலாம்.”

“ஒகே! வர ஞாயிற்றுக்கிழமை காலைலே புறப்பட்டுடலாம் எல்லா ஏற்பாடும் பண்ணிப்பிடு...”

பிரகாசம் கமலக்கண்ணனின் ஸ்லம் விஜயத்திற்கான எல்லா ஏற்பாடுகளையும் செய்து முடித்தார். ஞாயிறு காலையும் விடிந்தது. தேர்தல் பரிவாரங்கள் புடைசூழ மின்னல் வழிவது போல ஸில்க் ஜிப்பாவும், பட்டு வேஷ்டியும், அழுக்குப் படாத புதுப் பாதரட்சைகளும், கை நிறைய டாலடிக்கும் மோதிரங்களுமாகக் கமலக்கண்ணன் சேரியில் புகுந்தார்.

என்ன ஆச்சரியம்! முதல் குடிசையிலே அவருக்கு ரோஜாப்பூ மாலை போட்டு ஆரத்தி எடுத்து வரவேற்றார்கள் ‘இந்த சேரி மக்களுக்கு நாம் எதுவுமே செய்யவில்லையே?இவர்களுக்கு நம் மேல் இவ்வளவு பிரியமா?’ என்று கமலக்கண்ணனுக்கே வியப்பாகிவிட்டது சில குடிசைகளில் பெண்களே ஆரத்தி எடுத்ததுடன் அவருக்கு மட்டரகக் குங்குமத்தில் திலகமும் வைத்தார்கள். கமலக்கண்ணனுக்கு உற்சாகம் தாங்கவில்லை. அப்போதே தேர்தலில் வென்று விட்டது போன்றபெருமிதம் வந்துவிட்டது இத்தனை பயபக்தியுள்ள சேரி மக்களின் ஒட்டு நிச்சயம் தனக்கே கிடைக் கும் என்று பெருமிதம் கொண்டார். ஆனால் அந்தப் பகுதி மக்கள் ஒவ்வொரு அபேட்சகரையும் இப்படியே வரவேற்றிருக்கிறார்கள் என்பதை அவர் அறியமாட்டார். நவீன காலப் பொதுவாழ்விலே மிகவும் சிரம சாத்தியமான காரியம் அசல் புகழ் எது? அசல் பிரியம் எது? என்று கண்டு பிடிப்பதுதான். கமலக்கண்ணனோ அப்படி எல்லாம் கண்டு பிடிக்க முடியாமல் ஆரத்தியையும் மாலையையும், திலகத்தையும் அசல் பிரியமாகவே எடுத்துக்கொண்டு விட்டார். ஆனால் அன்று மாலையிலே ஆரத்தி, மாலை, திலகம் ஆகியவற்றைப்பற்றிய சாதாரண உண்மைகளை அவர் புரிந்து கொள்ளும்படியான சம்பவங்கள் நடந்தன. அன்று மாலை அவரைத் தேடிச் சேரியிலிருந்து ஆட்கள் வந்தார்கள், வந்த ஒவ்வோர் ஆளும் பேரம்பேசினான். பேரம் ஒத்து வராமற் போகவே ஓர் ஆள் கோபமாகச் சொல்லியே விட்டான்:

“இன்னா சார்! நீ ஏதோ பெரிசாக் குடுக்கப் போறேன்னு நான் தெண்டத்துக்கு மாலை, ஆரத்தின்னு, எங்க பேட்டையிலே கைக் காசைச் செலவழித்துத் தட புடல் பண்ணினேனே?”

கமலக்கண்ணனுக்கு இந்த வார்த்தைகள் கரீறென்று உறைத்தன. பணத்தைக் கொண்டு வந்து அந்த ஆளுக்கு முன்னால் எறிந்தார்.

“நீயே வச்சுக்க சார்! நம்பளுக்கு வாணாம் இந்தப் பிச்சைக் காசு. ஏதோ நாய்க்கு வீசிக் கடாசற. மாதிரி எறி பிறியே. நீ ஒட் வேனும்னே நான் ஏற்பாடு பண்றேன்னேன். ஏதோ தருமம் பண்ற மாதிரி வீசி எறிஞ்சாவாணாம் சார்...”

இப்படி அவன் சல்லியாக மாறி ரிக்ஷாக்காரன் போல் இறக்கி விடுகிற இடம் பார்த்துத் தகராறு செய்யும் நிலைக்கு வரவே அருகிலிருந்த பிரகாசம் கமலக்கண்ணனுக்கு ஜாடை செய்து உள்ளே அழைத்தார். அவர் உள்ளே வந்ததும்,

“சுத்த செங்காங்கடைப்பசங்க இவங்களோட ரொம்பப் பேச்சு வச்சுக்காதீங்க...கொடுக்கிறதை மரியாதையாக் கொடுக்கிற மாதிரிக் கொடுத்தனுப்பிச்சிடுங்க...” என்றார் பிரகாசம்.

“அதென்னமோ சேரிமக்களுக்கு உங்க மேலே அபாரப் பிரியம், அமோகமான மரியாதை, அதுனாேலதான் மாலை மரியாதை, ஆரத்தி எல்லாம்னு நீயே சொன்னியே பிரகாசம்?”

“சொன்னேன் சார்! ஆனா என்ன செய்யிறது. இந்தக் காலத்திலே பணமில்லேன்னா என்னதான் நடக்குது?’’

இதற்குப் பதில் சொல்லக் கமலக்கண்ணனால் முடியவில்லை. பேசாமல் வெளியே வந்து மரியாதையாக அந்த ஆளிடம் பணத்தை எடுத்துக் கொடுத்தார். கூடவே இன் னொரு பத்துருபாயும் தனியே கையில் கொடுத்து இதைக் காப்பிச் செலவுக்கு வச்சிக்க’ என்று போலியாக வர வழைத்துக்கொண்ட ஒரு சிரிப்புடன் கூறி வைத்தார் கமலக்கண்ணன்.

“ரொம்பச் சந்தோசங்க... மத்ததெல்லாம் நான் பாத்துக்கறேன். லாட்டா அத்தினி ஸ்லம் ஒட்டும் உங்களுக்குத்தான்வுளும்” என்று கூறிப் பெரிதாக ஒரு கும்பிடும் போட்டு விட்டுப் போனான் அவன்.

கமலக்கண்ணனுக்குப் பிரகாசத்தின் மேல் ஒரு சந் தேகமும் வந்தது. ‘மாலை, ஆரத்தி, திலகம் எல்லாமே பிரகாசத்தின் ஏற்பாடுதானா?’ என்று தோன்றியது. ‘எல்லாம். பிரமாதமாச் செய்து ஐயாவைக் குவிப்படுத்தனிங்கன்னா அஞ்சுக்குப் பத்தாக் குடுப்பாரு’ என்று பிரகாசமே அந்தச் சேரி ஆட்களைத் தூண்டிவிட்டிருக்கலாமென்று அநுமானிக்க முடிந்தாலும் பிரகாசத்திடம் அதை அவர் கேட்கவில்லை.

சேரிக்கு விஜயம் செய்த தினத்தன்று மாலையிலேயே தனித்தனியாக நான்கு ஆட்களுக்கு மேல் முதலில் பிரகாசத்தைத் தேடி வந்து அப்புறம் பிரகாசம் அவர்களைக் கமலக்கண்ணனிடம் அழைத்து வந்து தலையைச் சொறிந்து கொண்டு நின்றார். அவர்களுக்கும் பிரகாசம் சொன்ன தொகையை மறுக்காமல் கொடுத்தனுப்பினார் கமலக்கண்ணன்.

“வீடுகளிலே நீயும் உன் ஃபிரண்ட்ஸும் போய் மஞ்சள்—குங்குமம் கொடுத்து ஒட்டுக்குச் சொல்விட்டு வரணும்...” என்று மனைவியிடம் வேண்டினார் கமலக்கண்ணன்.

“ஏன் அந்த மாயாவையே போகச் சொல்லப் படாதோ? ஒருவேளை நான் போனா ஒட்டுக் குறைஞ்சு போனாலும் போயிடலாம். எனக்கும் என் ஃபிரண்ட்ஸுக்கும் கவர்ச்சி ஒண்ணும் கிடையாது” என்று அந்த அம்மாள் பதிலுக்குக் கிண்டிலில் இறங்கினாள்.

“வீணா வம்பு பண்ணாதே! உன் மாதிரி யாராலியும் கவர்ச்சியா இருக்க முடியாது. நீ மனசு வச்சா எத்தினி காரியத்தையோ சாதிக்க முடியுமே...!” என்று சொந்த மனைவியிடமே வேறெங்கோ பேசுவது போல் செயற்கையாகப் புனைந்து பேசினார் கமலக்கண்ணன்.

அந்த அம்மாள் முகம் ஒரளவு மலர்ந்தது.

"https://ta.wikisource.org/w/index.php?title=நெஞ்சக்கனல்/9&oldid=976864" இலிருந்து மீள்விக்கப்பட்டது