நெஞ்சை உருக்கும் நீதிக்கதைகள்/012-013

 

12. அரசனும் அறிஞனும்


 

ந்தக் கதை இரண்டாயிரத்து ஐந்நூறு ஆண்டுகளுக்கு முன் பிறந்தது. ஆசியாக் கண்டத்தில் ‘லிடியா’ என்ற பிரதேசத்தின் ஒரு பகுதியை ‘குரேசஸ்’ என்னும் அரசன் ஆண்டு வந்தான். அவனிடத்தில் இருந்த அளவு 'தங்கச் சேமிப்பு' உலகத்தில் வேறு யார் ஒருவரிடமும் இருக்கவில்லை. அவனுடைய நாட்டில் இருந்த மலை ஒன்றிலிருந்து பீறிட்டுக் கொண்டு வந்த ஒரு சிற்றாற்று நீரில், மண்ணும் மணலும் கலந்தவாறு மிக அதிகமாகத் தங்க துகள்களும் கிடைத்து வந்தன. கணக்கற்ற மக்கள் கூலி வாழ்வுக்காக அந்தத் தங்கத் துகள்களைச் சேகரிப்பதுவே அவர்களுடைய வேலையாக இருந்தது.

“தங்கத் துரை” என்றே பிரசித்தி பெற்ற ‘குரோசஸ்’ அரசனின் ராஜதானியின் பெயர் ‘சார்டிஸ்’. ஒரு முறை கிரேக்க நாட்டிலிருந்த பெரிய விஞ்ஞானியும், நீதிபதியுமான ‘சொலோன்’ என்பவர் உலக யாத்திரை செய்தவாறு குரோசஸின் அரண்மனைக்கு வந்து சேர்ந்தார். குரோசஸ் இந்தப் பெருஞ் செல்வத்தின் காரணமாக ஒரு மதோன் மத்தனாகி இருந்தார். மிகப் பெருமித உணர்வோடு தன்னுடைய அரண்மனையிலிருந்த அந்த மாபெரும் செல்வத்தை அவன் விருந்தினராகிய சொலோனுக்கு விவரித்துக் கூறிக் காட்டினார். அரண்மனையில் நிறுவப்பட்டிருந்த துரண்கள் அனைத்தும் தங்கமாக இருந்தன. அரண்மனையில் உபயோகப்படுத்திக் கொண்டிருந்த பெரியதும் சிறியதுமான எல்லாப் பாத்திரங்களும் தங்கத்தினாலேயே செய்யப் பட்டிருந்தன. குளிக்கும் தண்ணீர்த் தொட்டி முதல் தாம்பூலம் தரித்து, மென்று துப்புவதற்கான காளாஞ்சியங் கூட தங்கத்தினாலேயே ஆக்கப்பட்டிருந்தது. மற்றுமுள்ள ஒவ்வொரு பொருளையும் செல்வச்செருக்கோடும், விம்மிதமான குரலோடும் சுட்டிக் சுட்டிக் காட்டலானான். வியப்புற்ற நிலையில் சொலோன், அரசர் சுட்டிக் காட்டிய அவ்வளவு பொருட்களையும் சகிப்புத் தன்மையோடு பார்த்தார்.

அதன்பின் அரசன் குரோசஸ் கேட்டான். “சொலோன், நீங்கள் பற்பல நாடு நகரங்களை யெல்லாம் சுற்றிப் பார்த்துக் கொண்டு வந்துள்ளிர். அப்படி நீங்கள் சுற்றிப் பார்த்த நாடு நகரங்களில் வசிக்கும் மக்களில் மிகமிகச் சுக புருஷன் யார்? உம்மால் சொல்ல முடியுமா?” என்று.

இவன் தன்னையே ஒரு சுக புருஷன் என எண்ணிக் கொண்டு இவ்வாறு வினவுகிறான் என்று சொலோன் எண்ணினார். ஆனால், சொலோன் சொன்னார் : “ஏதென்ஸ் நகரத்தில் தாலஸ் என்ற ஒரு அறிஞன் மிகமிகச் சுக புருஷனாக அமைதியாக வாழ்ந்து கொண்டிருந்தான்” என்று. அரசன் குரோசஸின் எதிர்பார்ப்பு முற்றிலும் வீணாயிற்று. ‘அப்படியா, ஆனால் நான் அவருடைய பெயரைக் கூட இதுகாறும் கேள்விப்படவில்லையே? என்றான்.

(Upload an image to replace this placeholder.)

“இருக்கலாம், நீங்கள் அவரைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்க மாட்டீர். ஆனால், அவர் ஒரு பரோபகாரியாக இருந்தார். தம்முடைய மக்களும் கூட மிகமிக நல்லவர்களாக, மற்றவர்களுக்கு வேண்டிய உதவி ஒத்தாசை புரிபவர்களாக வாழ்வதை மிக மகிழ்ச்சியோடு அவர் தம் கண்ணாரக் கண்டார். அவர், பழம் போன்ற கிழவனாகி இருந்த முதுமைக் காலத்திலும், தாய்நாட்டைப் பகைவர்கள் முற்றுகையிட்ட போது தம் கூர்மையான அறிவு ஆலோசனைகளினால் பகைவரை வெல்ல எல்லோருக்கும் அவர் உத்வேகமளித்தார். அந்த நல்ல மனிதர் கடைசியாகத் தன்னுடைய நாட்டிற்காகப் போராடி இறந்தார். அவருடைய மரணத்துக்காக ஏதென்ஸ் நகர மக்கள் அனைவரும் தத்தம் கண்ணீரையே ஒரு ஆறாகுமாறு வடித்தார்கள்” என்றார் சொலோன்.

“போகட்டும், நீர் அதற்கடுத்தபடியாகப் பார்த்த பெரும் சுக புருஷர் யார்?” என்று குரோசஸ் கேட்டான்.

“தாயையும், தந்தையையும் அன்போடு ஆதரித்து அவர்களை மகிழச் செய்த ‘ஜீனோ’ என்ற பெயருடைய ஒரு வாலிபன் பெரும் சுக புருஷன்” என்று சொலோன் கூறினார்.

அரசன் குரோசஸுக்கு இதைக் கேட்கவும், ஏமாற்றமடைந்த இருதயத்திலிருந்து கோபம் கொப்பளித்தது. “சொலோன், தரித்திரர்களைப் பற்றியும் பிரக்யாதியற்றவர்களைப் பற்றியும் ஏன் எனக்கு எடுத்துக் கூறுகிறீர். என்னுடைய கீர்த்தியையும், மகிழ்ச்சியையும், செல்வத்தையும் நேரில் கண்டு கூட அவர்களைக் காட்டிலும் நான் சுக புருஷன் என்பதை வாயிலிருந்து சொல்லாக வெளியிட உங்களுடைய சின்னப் புத்தி அனுமதிக்க வில்லையா?” என்று கூக்குரலிட்டான், அந்த அறிவற்ற அரசன்.

அரசனுடைய கோபத்திற்குத் துளியும் சலனமடையாத உள்ளத்தோடு, “அரசே! நீர் இப்பொழுது அளவு கடந்த பெருஞ்செல்வத்தின் உச்சக் கட்டத்தில் அமர்ந்துள்ளீர் என்பது உண்மை. ஆனால், இன்னும் எத்தனையோ ஆண்டு காலம் நீர் இந்த மண்ணில் உயிரோடு இருந்து வாழ வேண்டியவராக உள்ளீர். வியப்புத் தரும் உம்முடைய இந்த மாபெரும் செல்வத்தின் மகிழ்ச்சி கர வாழ்க்கை எந்த முறையில் உம்மை நிறைவுறுத்தவுள்ளது என்று உங்களுக்காகட்டும், எனக்காகட்டும் தெரிந்திருக்கவில்லை. அதனால் இப்போதே உம்மை ஒரு மனிதன் என்று கூட என்னால் சொல்ல இயலவில்லை” என்று சொல்லி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார்.

ஒரு சில மாதங்கள் கழிந்தன. ஒரு நாள் ‘பர்சியா’ தேசத்தின் அரசன் ‘சைரஸ்’ ஒரு பெரிய படையோடு வந்து குரோசஸின் அரண்மணையை முற்றுகையிட்டான். கடுமையான போராட்டத்தின் இறுதியில் குரோசஸ் தோல்வியடைந்தது மாத்திரமல்ல, பகைவர்களினால் சிறைப்படுத்தவும் பட்டான்.

இரக்க சித்தமற்ற அந்தச் ‘சைரஸ்’, ‘குரோசஸை’ உயிரோடு சுட்டுப் பொசுக்க வேண்டும் என்று தன்னுடைய படை வீரர்களுக்குக் கட்டளையிட்டான்.

அந்தப் படை வீரர்கள் பெரும் மரக்கட்டைகளைக் குவித்து அடுக்கிக் கயிறுகளினால் ஆடாது அசையாது பிணிக்கப்பட்டிருந்த தங்கதுரை என்று பெயர் படைத்த குரோசஸை அந்தச் சிதையின் மேல் தூக்கிப் போட்டார்கள். சிதை உடனேயே நெருப்பும் மூட்டப்பட்டது.

இப்போது, குரோசஸின் இரண்டு கண்களிலும் தாரை தாரையாகக் கண்ணீர் வழியத் தொடங்கிற்று. அவன், ‘சொலோன், சொலோன், சொலோன்’ என்று கூவலானான். அங்கேயே நின்று இந்தக் காட்சியைப் பார்த்துக் கொண்டிருந்த கல் நெஞ்சனனான ‘சைரஸ்’ இந்தக் குரோசஸைப் பார்த்து, “ஏன் ‘சொலோன், சொலோன்’ என்று கூவினாய்? இதனுடைய அர்த்தமென்ன?” என்று கேட்டான்.

உடனே, குரோசஸ் தன்னுடைய அரண்மனைக்கு அன்றொரு நாள் வந்திருந்த யாத்ரிகர், சொலோனுக்கும் தனக்கும் இடையே நடந்த சம்பாஷனைகளை விவரித்துக் கூறி மேலும் “மிகப் பெரும் செல்வந்தனான தன்னுடைய இறுதி வாழ்வின் நிலை எப்படியாகிறதோ தெரியவில்லை என்று சொல்லி இருந்தது, இப்போது என் நினைவுக்கு வந்தது. அதனால் அந்தப் பேரறிஞர் சொலோனுடைய பெயரைச் சொல்ல நேர்ந்தது” என்றான்.

குரோசஸ் சொன்ன, இந்த வார்த்தைகளை அரசன் சைரஸ் கூர்ந்து கேட்டான். தன் உள்ளத்தை அவை ஓரளவு மாற்றமடையச் செய்வது போலிருந்தது. எனவே, “உண்மை, உண்மை, ஆம், அவர் சொன்னது உண்மை. நான் கூட இன்னும் வெகுகாலம் வாழ வேண்டியவனாக உள்ளேன். “என்னுடைய வாழ்வின் முடிவும் கூட என்னால் முன் கூட்டி அறியக் கூடாததாகவுள்ளது” என்று எண்ணி, படைவீரர்களைக் கூவி உடனே, “இந்த எரியும் நெருப்பை அவித்து விடுங்கள்” என்று கட்டளையிட்டான்.

மேலும் கூறினான். “படைவீரர்களே, உதாரகுணத்தோடு நான் குரோசஸை மன்னித்திருக்கிறேன். எனவே குரோசஸை இந்த நாட்டிற்கு அரசனாக ஆக்கி விட்டு நாம் நம்முடைய நாடாகிய ‘பரிசியா’வுக்குத் திரும்பலாம்”, என்றான்.

குரோசஸ் மறுபடியும் அரசனானான். அன்றிலிருந்து தங்கம் தேடும் பழக்கத்தை அறவே கைவிட்டான். கூலியாட்களுக்கு விமோசனம் ஏற்பட்டதன்றித் தன்னுடைய பொருள்களையும்கூட எல்லாருக்கும் பங்கிட்டளித்து நல்ல பெயரெடுத்தான். பிற்காலத்தில் குரோசஸ் மக்களால் மிகவும் பாராட்டப்படுபவனாக வாழ்ந்து வரலானான்.

பணத் திமிர், அதிகாரத் திமிர் எவரிடம் இருக்கிறதோ அவர் தமக்குத் தாமே நாசம் தேடிக் கொள்கிறார் என்பதற்குச் சரியான மேற்கோள் கதை இதுவல்லவா?

🌑