நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 13

13

போலீஸ்காரர் அதட்டுவதுபோல் கேட்டது தமிழரசிக்கு என்னவோ போலிருந்தது. டிக்கெட் எடுப்பதற்காக வரிசையில் நின்ற பயணிகள் வரிசையைக் கலைத்து, போகப் போகும் ரயிலேயும் மறந்து ‘ரவுண்டானார்கள்’. இதைப் பார்த்த மற்றும் பலர் ஒன்று திரண்டு வந்தார்கள். தமிழரசியை, போலீஸ்காரர் அதட்டுவதை, ஒருவித ரசனையோடு பார்த்து விட்டு, இன்னும் அவர் வேறு ஏதாவது திட்டுவாரா என்பதைக் கேட்க, மிக்க ஆவலோடு காத்திருந்தார்கள். தமிழரசி, நாகரிகத் திருடி அல்லது வேறு காரியங்கள் செய்பவள் என்பதில் அவர்களுக்கு சந்தேகம் இல்லை.

வார்த்தைகளால் பாயப்போன தமிழரசி, சுற்றுப்புறச் சூழலை உணர்ந்தாள். போலீஸ்காரரின் வருகையையும், 'வரவேற்பையும்' எதிர்பாராத அவள் சிறிது துணுக்குற்றாள். கூட்டம், தன்னையே பார்ப்பதில் எரிச்சல் ஏற்பட்டது. அவரை கோபமாகப் பார்த்தபடி, கூட்டத்திற்குச் சொல்வதுபோல், அவரிடம் சொன்னாள்.

"நான் ஒரு கவுரவமான பிரஜை; கல்லூரி ஆசிரியை. எதுக்காக என்னை போலீஸ் ஸ்டேஷனுக்குக் கூப்பிடுறீங்க?"

போலீஸ்காரர் மீண்டும் சத்தம் போட்டார். எல்லோரிடமும் சொல்லப்படும் 'ஸ்டாக்' பதிலை வழங்கினார்.

"என்னைக் கேட்டால் எப்படி? எது பேசணுமுன்னாலும் ஸ்டேஷன்ல வந்து பேசு. உம்... தட...சீக்கிரம்...ஜல்தி... குயிக்..."

"மொதல்ல...நீங்க மரியாதை கொடுத்து பேசக் கத்துக்கங்க. நம்ம நாடு சுதந்திரமடைஞ்சுட்டது ஒங்களுக்குத் தெரியுமா? இல்ல, அதிக நாளைக்கு முன்னாலயே சுதந்திரம் வந்துட்டதுனால, அதை மறந்திட்டிங்களா?"

போலீஸ்காரரும், கூட்டமும், தமிழரசியை அண்ணாந்து பார்த்தது. பலரை, ஒரு வார்த்தை மூலமே, அது பேசப்படும்போது ஏற்படும் முகத்தோற்றம் மூலமே எடை போடும் பலே'காரரான' போலீஸ்காரர் "என் பேச்சே அப்படித்தாம்மா. சரி போகலாமா" என்றார் வினயத்துடன்.

தமிழரசி, டிக்கெட்டை வாங்கிக் கொண்டு போகலாமா என்பதுபோல் யோசித்தாள். பின்னர், டிக்கெட் வாங்காமல், போலீஸ்காரரைப் பார்த்தபடியே முன்னால் நடந்தாள். அவரும், தான் கொண்டு வந்த சைக்கிளை உருட்டிக்கொண்டு, அவளுக்கு இணையாக நடந்தார். ரயில் நிலைய வாசிகளில் கால்வாசிப்பேர், அவர்களைப் பின்தொடரப் போனார்கள். தமிழரசிக்கு, அவமானமாக இருந்தது. எரிச்சலோடு சுற்றும் முற்றும் பார்த்தாள். இதைப் புரிந்து கொண்ட போலீஸ்காரர், உருண்ட சைக்கிளை நிறுத்தியபடி, கூட்டத்தைப் பார்த்து. கண்களை உருட்ட, அது உருண்டோடியது. "கச்சடாப் பயலுவ. போலீஸ்காரங்களோட யார் போனாலும் அவங்க தப்புத் தண்டா செய்ததாய் நினைக்கிற பசங்க, அதுலயும் லேடீஸ், போலீஸோட போனால், இவங்க. ரேட்டை நினைச்சுட்டு தயாராய் இருப்பாங்க" என்றார்.

தமிழரசி, போலீஸ்காரரை கோபமாகப் பார்த்தாள். அவரிடம் குதர்க்கம் இருப்பதாகத் தெரியவில்லை. அட கடவுளே. அப்படியானால் அவளைப் பார்த்த கூட்டம்... பாதி வழி வரை முண்டியடித்து வந்த கூட்டம், அவளை 'அப்படித்தான்' நினைத்திருக்குமா? பெண் என்பவள், 'அது' தவிர வேறு எதற்குமே ஏற்றவள் இல்லையா? தமிழரசி, போலீஸ்காரரிடம் படபடப்பாகப் பேசினாள்.

"சார், நீங்க முன்னால போங்க, நான் பின்னால வாரேன்."

"நான் இன்னைக்கு 'ஸ்பாட்டுக்கு' வரலைன்னாலும் ஒங்க ஊர்ல நடந்ததுல்லாம் எனக்குத் தெரியும். ஒங்களுக்கு முன்னால 'எங்கய்யா' முந்திக்கிட்டார். நீங்க அப்பவே டி. ஐ. ஜி.க்கு தந்தி கொடுத்திருக்கணும். இப்பவும் லேட்டாகல. நான் சொல்றபடி நடந்தீங்கன்னா, இந்த சப்-இன்ஸ்பெக்டர் கண்ணுல விரல் விட்டு ஆட்டலாம்."

தமிழரசி, போலீஸ்காரரை கடைக்கண்ணால் நோக்கினாள். இவர், 'மனோண்மணியத்தில்' வரும் 'குடிலனா'? இல்லை சங்க காலத்தில் இருந்த நக்கீரரா? நடந்த விஷயமும், அவளை நடத்திய விஷயமும் பிடிக்காத நல்ல மனிதரா? யாரோ எவரோ... எப்படியாவது இருந்துட்டுப் போகட்டும்...

"அதை நான் பார்த்துக்கிறேன். இப்போ நீங்க ஸ்பீடாய் போங்க. நான் பின்னால வாரேன்" தமிழரசி பதிலளித்தாள்.

போலீஸ்காரர் தயங்கியபடியே சைக்கிளில் ஏறினார். அவர் போகட்டும் என்பது போல் தமிழரசி நின்றாள். அவரைப் பார்க்க விரும்பாமல், ரயில் நிலையத்தைப் பார்த்தாள். அங்கே, கூட்டம் இன்னும் கலையாமல், அவளையே ரசனையோடு பார்த்துக் கொண்டிருந்தது. அவளைப் பார்த்த விதம் என்ன விதமோ, தமிழரசி, கூனிக் குறுகினாள். கண்கள் கூசி, வாய் கோணி, உடம்பெல்லாம் ஆட்டம் எடுத்தது... அந்தக் கூட்டத்தின் முன்னிலையில், தான் நிர்வாணப் படுத்தப் பட்டது போன்ற தவிப்பு. இதற்கெல்லாம் யார் காரணம்? யார்? எவன்?

தமிழரசி, சப்-இன்ஸ்பெக்டர் எதற்குக் கூப்பிடுகிறார் என்பதைப் புரிந்து கொண்டாள். கண் முன்னால் நடந்த அநியாயத்தைக் கண்டித்ததற்காக அவர் தன்னை மறைமுக மாகக் கண்டிப்பதை உணர்ந்த அவள் ஒரு நிமிடம் சோர்ந்தாள். ஒருவரை, நம்மால் தாக்கி சேதப்படுத்த முடியும் என்று தெரிந்தும், மனிதாபிமானத்தால் விட்டுக் கொடுக்கும் போது அதுவே நம் பலத்தை குறைக்கக் கூடியதானால் எப்படி? நாம் ஒருவருக்குக் காட்டும் சலுகைகளே, நமக்கு எதிராகப் பயன்படுத்தப்படும் ஆயுதங்களானால் எப்படி?

‘எப்படி' என்பதற்கு 'என்ன' என்பதையும், 'ஏன்' என்பதையும் அறியத் துடித்தவள் போல் சீறி நடந்தாள். அங்கிருந்தபடியே தாவிப் பறந்து அந்த போலீஸ் மனிதரிடம் நேருக்கு நேராய் சூடு சொரணையுள்ள கேள்விகளைக் கேட்டே தீர்வது என்பது போல் அவள் ஓடினாள் . பற்களைக் கடித்தபடி, கால்களை கடத்திக் கொண்டிருந்தாள்.

போலீஸ் நிலையத்தில் ஒரே கூட்டம், சர்வ ட்சித் தலைவர்களின் சமரசக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறதோ இல்லையோ, ஒவ்வொரு காவல் நிலையத்திலும் நடைபெறும் என்பதை எடுத்துக்காட்டுவது போல், பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 'லோகல்' அரசியல்வாதிகள் போலீஸ் நிலைய வராண்டாவில் கூடிப் பேசியபடி நின்றார்கள். அவர்கள் முகங்களையே பார்த்தபடி திறந்த வெளியில் 'அடிதடிக்காரர்கள்’ நின்றார்கள். போலீஸ் முன்னிலையில் விவகாரத்தை முடித்துக் கொள்வதற்கு அன்றும் முயற்சி செய்யப் படுவதுபோல் தோன்றியது, இதற்கிடையே திறந்தவெளி கட்டாந்தரையில் சில ஏழை பாழைகள் 'பழி' கிடந்தார்கள்.

தமிழரசி, போலீஸ் நிலையத்திற்குள் துழைந்ததும், தனக்குத் தெரிந்தவர்கள் யாராவது தென்படுகிறார்களா என்று பார்த்தாள். தெனபட்டார்கள். முத்துலிங்கம், தன் தந்தையுடனும், பங்காளிகளுடனும், ஒரு வேப்ப மரத்தடியில் நின்றபடி, காரசாரமாகப் பேசிக் கொண்டிருந்தார். அவளேப் பார்த்ததும், அவர் தலையை முன்னும் பின்னும் ஆட்ட, உடனே அவருடன் நின்றவர்கள் அவளே ஒருசேரப் பார்த்தார்கள். அவர்களைப் பார்த்ததும், தமிழரசி கம்பீரப்பட்டாள். குழம்பிய சிந்தனை கூர்வேலாகியது. துவண்ட கால்கள் துருதுருத்தன. வெளுத்த கண்கள் சிவந்தன.

போலீஸ் நிலையப் படிக்கட்டுகளில் ஏறி நின்று சற்று நிதானித்துப் பார்த்தாள். கட்டிடத்தில் நடுநாயகமாய் போட்டிருந்த பெரிய மேஜையை ஒட்டியிருந்த நாற்காலி காலியாக இருந்தது. அதன் பக்கவாட்டில் போடப்பட்டிருந்த மேஜைமீது பலப்பல ரிஜிஸ்டர்கள். அவற்றைப் புரட்டிக் கொண்டிருந்த ஒரு ரைட்டர். இடது பக்கம், அளிப் பாய்ந்த கம்பிகளை ஜன்னல்களாகக் கொண்ட உள்ளறையில் நான்கைந்து பேர் தார் பாய்ந்த வேட்டிகளோடு கம்பிகளில் முகம் பதித்து, கண்களில் நீர் பதித்து நின்றார்கள். வலது பக்கம், ஆயுதக்கிடங்கு போலிருந்த அறைக்கு முன்னால் போலீஸ்காரர் ஒருவர் துப்பாக்கிகளைத் துடைத்துக் கொண்டிருந்தார்.

தமிழரசி, சுற்று முற்றும் பார்த்து விட்டு, ரைட்டரைப் பார்த்து "என் பெயர் தமிழரசி. சப்-இன்ஸ்பெக்டர் வரச் சொன்னாராம்" என்றாள். ரைட்டர், அவளை ஓரக் கண்ணால் பார்த்தபடி "அவசரமாய் வெளியே போயிருக்கார்" என்றார்.

"எப்போ வருவார்?"

"எனக்கு என்ன ஜோஸ்யமா தெரியும்?"

"ஒங்களுக்கு ஜோஸ்யம் தெரியுமா என்பதை தெரிஞ்சுக்கிறதுல எனக்கு அக்கறை இல்ல. அவர் எப்போ வருவார்னு தெரியணும், நான் இப்போ சென்னைக்குப் புறப்பட்டு நிற்கிறேன். அவர் வர லேட்டாகு முன்னால், நான் போகணும்."

"உட்காருங்கம்மா. ஒரு அடிதடி கேஸ். போற இடத்துல எப்படியோ' பட், வந்துடுவார். உட்காருங்க.?"

தமிழரசி, உட்கார்ந்தாள்.

ஒரு மணி நேரம் ஓடி, முப்பது நிமிடம் கழிந்து கொண்டிருந்தது. அவள், எரிச்சலோடு கைக் கடிகாரத்தைப் பார்த்துக் கொண்டாள். போவது போல் எழுந்து, எழுந்து நின்றாள். முத்துலிங்கம், இன்னும் பேசிக் கொண்டே இருந்தார். அப்போது, வேப்ப மரத்தடி; இப்போது, பூவரசு மரத்தடி; அவ்வளவு தான் வித்யாசம், ரயிலுக்கு நேரமாகிக் கொண்டிருப்பது உறைத்தது. உடனே, 'வருவது வரட்டும்' என்ற வைராக்கியத்துடன், தமிழரசி உறுதியோடு எழுந்தாள். எழுந்தவள் மீண்டும் உட்கார்ந்தாள்.

மோட்டார் பைக்கில், சப்-இன்ஸ்பெக்டர் வந்தார். அவர் வண்டிக்கு, சர்வ கட்சி லோகல் தலைவர்கள், அகலமாகவே வழி விட்டார்கள். வண்டியை 'ஆப்' செய்யாமலே, அவர் தலைலர்களிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தார். பிறகு, வண்டியை ஒரு சுழற்றுச் சுழற்றி, ஒரு ஓரமாக நிறுத்தி விட்டு, தமிழரசியைப் பாராதது போல் 'பாவலா’ செய்தபடியே, பெரிய நாற்காலியில் உட்கார்ந்தார். "வெட்டாம்பட்டி அக்கூஸ்டுக்கு வாரண்ட் வாங்கியாச்சா" என்று ரைட்டரிடம் கேட்டபடியே, ஒரு சில ரிஜிஸ்டர்களைப் புரட்டினார். இதற்குள், முத்துலிங்கம் தம் கோஷ்டியுடன் வராண்டாவிற்கு வந்தார். 'லோகல்கள்' சப்-இன்ஸ்பெக்டரை மொய்த்துக் கொண்டார்கள். அவர்களிடம் தக்காளி விலை கிலோ பத்து ரூபாய்க்குப் போனதில் இருந்து, வெயில் எப்படி மோசமாய் இருக்கிறது என்பது வரைக்கும், சப்-இன்ஸ்பெக்டர், சாவகாசமாய் பேசிக் கொண்டிருந்தார். அவர் பேச்சை கவனமாகக் கேட்ட லோகல்களில் ஒருவர், "அந்த விவகாரத்தை ஒரு வழியா முடிச்சுட்டோம்..." என்றதும், போலீஸ் அதிகாரி, 'முடிச்சு' விவகாரத்தை சுவாரஸ்ய மாய் கேட்கப் போனார்.

வருவதற்கு முன்பு ஒன்றரை மணி நேரமும், வந்த பிறகு அரை மணி நேரமும் காத்திருந்த தமிழரசி, பொறுமை இழந்தாள். காரமாகக் கேட்டாள்:

"என்னை எவ்வளவு நேரம் காக்க வைக்கப் போறீங்க? அதையாவது சொல்லிட்டுப் பேசுங்க!"

லோகல் லீடர்கள், வாயடைத்து நின்றபோது, சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் முன்னிலையில் தன் அதிகாரத்தை நிலைநாட்டிக் கொள்ள நினைத்தவராய், "பொறுங்கம்மா, சில்லறை விஷயங்களை முடிச்சுகிறேன்" என்றார்.

"சில்லறை செலவாகாமலே இருக்கும். என்னை எதற்காகக் கூப்பிட்டிங்க சார்? மொதல்ல அதைச் சொல்லுங்க சார்."

"ஒன்று ஞாபகம் வச்சுக்கங்கம்மா. இது காலேஜ் இல்ல, நான் ஒங்க ஸ்டூடண்டும் இல்ல. போலீசிற்கு, அக்கூஸ்ட்தான் காத்து இருக்கணுமே தவிர, அக்கூஸ்டுக்கு போலீஸ் காத்திருக்க முடியாது. ஏன்னு எங்க வேலை அப்படிப்பட்ட வேலை.”

“ஓங்க வேலை எப்படிப் பட்ட வேலைன்னு எல்லோருக்கும் தெரியும். இப்போ எனக்கும் மெட்ராஸ்ல வேலை இருக்கு.”

“அப்படின்ன நாளைக்கு வாங்க.”

“நான் மெட்ராஸ் போறேனே.”

“நீங்க எங்கே போனால் எனக்கென்ன. கூப்பிட்ட நேரமில்லாம் நீங்க வரணும். அவ்வளவுதான் சொல்வேன். போலீசிற்குன்னு சில பொறுப்புண்டு. ஒங்களை எங்களுக்கு வசதிப்பட்ட நேரத்துல விசாரிக்க போலீசுக்கு உரிமையுண்டு.”

“நீங்க கடைசியாய் சொன்னீங்க பாருங்க ‘உரிமை’ அந்த வார்த்தையிலதான் சார் அடிப்படைக் கோளாறே இருக்கு. நீங்க கடமை செய்யுறதுக்காக கொடுத்திருக்கிற அதிகாரங்களை உரிமையாய் நினைக்கிறீங்க. கடமை யாற்றுவதை ஏதோ சலுகை காட்டுறதாய் நினைக்கிறீங்க. இதுதான் இந்த நாட்ல... போலீஸ் டிபார்ட்மெண்ட்ல மட்டுமில்ல... எல்லா டிபார்ட்மெண்ட்லயும் இருக்கிற அடிப்படைக் கோளாறு. நீங்க சொல்றதைப் பார்த்தால், யாரோ ஒருவர், எவரையோ ஒருவரைப்பற்றி, ஒரு புகார் கொடுத்திட்டால் போதும். நீங்களே ஒருவரை அக்கூஸ்டா நெனைத்து என்ன வேணுமானாலும் செய்யலாம். இதுதான் இன்றைய சட்டமுன்னால், இந்த நாடு, நாடல்ல; பெரிய லாக்கப் அறை. அகலமான குற்றவாளிக் கூண்டு. திறந்த வெளிச் சிறைச்சாலை. சரி... என்னை விசாரிக்கப் போறீங்களா இல்லையா?”

“மிரட்டுறீங்களா?”

“அப்படி வேண்டுமானாலும் வச்சுக்கங்க. நான் இப்போ வெளியேறப் போறேன். என்னை வேண்டுமானல் லாக்கப்புல தள்ளுங்க. ஐ டோன்ட் கேர்.” தமிழரசி எழுந்தாள். அவளை, இன்னும் லாக்கப்பில் தள்ளாமல் இருக்காரே என்பது மாதிரி முத்துலிங்கத்தின் உதடுகள் துடித்தன. இதற்குள், லோகல் லீடர்களுக்கு தங்களது காரியம் தாமதப்படுவதில் எரிச்சல். அவர்களுள் ஒருவர், "அந்தம்மா சொல்றதும் ஒரு வகையில் சரிதான். சட்டுப்புட்டுன்னு விசாரிங்களேன்" என்றார். சப்-இன்ஸ்பெக்டர், அவர்கள் வார்த்தைக்கு மதிப்பளிப்பவர் போல், ஒரு காகிதத்தை கையில் வைத்தபடியே, அவளிடம் கேட்டார்.

"முத்துலிங்கம், தன்னோட மைனர் தங்கை பொன்மணியை வினைதீர்த்தான் கடத்திப் போறதுக்கு, நீங்க தான் உடந்தைன்னு ஒரு ரிப்போர்ட் கொடுத்திருக்கார்."

"நீங்க ஏழைக் குடிமக்களான மாடக்கண்ணுவையும், கலாவதியையும் கொடுமைப் படுத்தும்போது என்ன சொன்னேனோ, அதைத்தான் இப்பவும் சொல்றேன். அதற்கும், எனக்கும் சம்பந்தமில்ல. அதோடு பொன்மணி மைனர் பெண்ணல்ல."

"நீங்களே அனுமானித்தால் எப்படி?"

வாக்குவாதம் பலத்தபோது, தாமோதரன் எவரும் எதிர்பாராத வகையில், கையில் சூட்கேசுடன் வந்தான். சப்-இன்ஸ்பெக்டர், அவனை உட்காரச் சொன்னார். அவன் நின்றபடியே பதிலளித்தான். பிறகு, "பொன்மணி விவகாரத்திற்கும், மிஸ். தமிழரசிக்கும் எந்த சம்பந்தமும் இல்ல. இதை நீங்க சாட்சியாய் கூட பதிவு செய்துக்கலாம்," என்றான்.

சுமைதாங்கிக் கல் போல் அசையாது நின்ற தாமோதரனை, சப்-இன்ஸ்பெக்டர் முகம் சுழிக்கப் பார்த்தார். முத்துலிங்கம், கண்களில் கனல் கக்கப் பார்த்தார். என்றாலும், அவன் வருகையால் தமிழரசி கோபம் குறைந்தவளாகத் தெரியவில்லை.

“நான் வாரேன் சார். இதுதான் என் மெட்ராஸ் முகவரி. எனக்கு அரெஸ்ட் வாரண்ட் அனுப்பனுமுன்னால், இதுதான் என் அட்ரஸ்.”

தமிழரசி, திரும்பிப் பாராமல், திரும்பினுள். சப்-இன்ஸ்பெக்டர் அவளைத் தடுக்கவில்லை.

போலீஸ் நிலையத்திற்கு வெளியே தமிழரசி வந்த போது, சற்றுத் தொலைவில், ஆலமர நிழலில், தலைகளில் கை வைத்தபடி இருந்த மாடக்கண்ணுவும், கலாவதியும், அவளை நோக்கி ஓடி வந்து, ஆளுக்கு ஒருவராக, அவள் கைகளைப் பிடித்துக்கொண்டார்கள். யாரும், யாருடனும் பேசவில்லை. நீண்ட மவுனம். நெடிய மவுனம். மூவரும், பஸ் நிலையத்தைப் பார்த்து நடந்தார்கள். போக வேண்டிய ரயில், இந்நேரம் தென்காசியில் இருந்து போயிருக்கும். இனி திருநெல்வேலிக்குப் போய், அங்கிருந்து நெல்லை எக்ஸ்பிரஸ்ஸில்தான் சென்னைக்குப் போகவேண்டும்.

பஸ் நிலையத்தில் தமிழரசி, இருவருக்கும் இடையில் நின்றாள். ஊருக்கே திரும்பலாமா என்று நினைத்தாள். கலாவதியையும், சித்தப்பாவையும் போலீசார் விசாரணை என்ற பேரில் மீண்டும் தாக்குவார்களோ என்ற பயம். அந்த அளவிற்கு அவர்கள் துணிய மாட்டார்கள் என்ற தெளிவு. போவதற்கு முன்பு, தாமோதரனே ஒரு தடவையாவது பார்த்துவிட்டுப் போய்விட வேண்டும் என்பது போல், தமிழரசியிடம் ஒரு தாகம். சில பஸ்களை, அசட்டையாக விட்டு விட்டாள். ‘கடைசியில் அவர் என்னைக் கை விடவில்லை. எப்படிச் சொல்ல முடியும்? விசாரணை வலுத்து, நான் மேல் அதிகாரிகளிடம் புகார் செய்து, அதனால் தனது வேலைக்கும் ஆபத்து வந்துவிடக் கூடாது என்று நினைத்து, அவர் முன் யோசனையோடு நடந்திருக்கலாமா... எவ்வளவு நெருக்கமாய் பழகினோம்... ஒரு வார்த்தை ‘ஐ அம் சாரி தமிழு’ என்று சொல்லியிருக்கலாமே... மிஸ் தமிழரசியாம்...’

தமிழரசி, தன்னுள் அவனையும், அவனுள் தன்னையும் தேடிக்கொண்டிருந்தபோது, தாமோதரன், முத்துலிங்கம் கோஷ்டியுடன் வந்து கொண்டிருந்தான், அவளைப் பார்த்து, லேசாய் திடுக்கிட்டது போல், நடக்காமல் நின்றான். பின்னால் வந்த அண்ணனை ஒரு தடவையும், அவளை ஒரு தடவையும் பார்த்துக் கொண்டான். பிறகு, ஆகாயத்துள் எதையோ தேடுபவன் போல், கண்களால் துழாவினான். முத்துலிங்கம், அவன் முதுகைத் தட்டினார். அப்புறம், அவர்கள் ரயில் நிலையத்தைப் பார்த்து நடந்தார்கள்.

தாமோதரனைப் பாராதது போல், உடம்பில் எந்தவித அசைவுமின்றி நின்ற தமிழரசியிடம், "தாமுத்தான் நாகர்கோவில் போறார் போலுக்கு ... ரயில்வே ஸ்டேஷனைப் பார்த்து நடக்காங்க" என்றாள் கலாவதி. அவளுக்கும் குரல் உடைந்தது. மாடக்கண்ணு, ஏதோ ஒன்று புரிந்தது போலவும், ஆனால் அது, தன் சக்திக்கு மீறியது என்பது போலவும், கண்களை சிமிட்டியபடியே தலையைத் தடவியபடி, தமிழரசியைப் பார்த்தார், தமிழரசியோ, கலாவதிக்கு எந்தப் பதிலையும் வழங்காமல், நிலைகுலைந்து நின்றாள்.

'தாமு... தாமு... இனிமேல் நம் இருவருக்கும் இடையே கசப்பான நாட்கள் கடக்கலாம். ஆனாலும், அந்த காசியாபிள்ளை கிணறும், அந்த இனித்த நாட்களும் என்னளவில் வாழ்க்கை என்னைத் தாலாட்டிய நாட்கள். காதல் பாட்டோடு, கல்யாணி ராகத்துடன், நான் என்னை மறந்த நாட்கள்!

இனிமேல் வரும் நாட்கள் எப்படியோ...நாட்களோ... நரகங்களோ... எதையோ நினைச்சேன்...எதையோ முடிச்சேன். எதுலயோ முடிஞ்சிட்டேன். தாமு... என் தாமு... ஒங்களை நான் இனிமேல் பார்ப்பேனா? சந்தர்ப்பம் பார்க்க விடுமா?"

நெல்லை பஸ் வந்தது. பார்வை கலையாமல் நின்ற தமிழரசியை, கலாவதி உலுக்கினாள். தமிழரசி தயங்கினாள். ஒருவேளை ரயில் போய்விட்டது என்று 'தாமு' இங்கே வந்தாலும் வருவாரோ? இன்னொரு நடவை, அவரை ஆசைதீரப் பார்த்து விட்டுப் போகலாமே. பஸ், சத்தம் போட்டது. தமிழரசி, கலாவதியிடம் இருந்த சூட்கேசை வாங்கிக் கொண்டாள். அவளைக் கட்டியணைத்து, முகத்தில் முத்தம் கொடுத்து விட்டு, தன் தோளில் பட்ட துளிகளுக்குச் சொந்தமான கண்களை மருட்சியோடு பார்த்த சித்தப்பாவின் கரங்களை எடுத்து கண்களில் ஒற்றியபடி, தமிழரசி பஸ்சிற்குள் வரவும், அவளை நிலையிழக்கச் செய்தபடி, பஸ் விசில் சத்தம் முடியு முன்னாலயே பாய்ந்தது.

தனித்துவிடப்பட்ட மாடக்கண்ணுவும், கலாவதியும் புழுதித் தடயங்களை விட்டுச் சென்ற பஸ்சையே வெறித்துப் பார்த்தார்கள். பிறகு ஒருவர் கையை ஒருவர் பிடித்தபடி ஊரை நோக்கி நடந்தார்கள்.

ரயில் நிலையத்தில், தாமோதரனை, நாகர்கோவிலுக்கு வைதபடியே வழியனுப்பி விட்டு, திரும்பிக் கொண்டிருந்த முத்துலிங்கமும், அவரது கையாட்களும், காலாட்களும், மாடக் கண்ணுவையும், கலாவதியையும் 'வெறி'த்துப் பார்த்தார்கள். எல்லா வகையிலும் அவமானப் பட்டதாகக் கருதிய முத்துலிங்கம், தன் ஆட்களிடம் ஆணையிட்டார்:

"ரெண்டு பேரையும், என் தோட்டத்துக்கு இழுத்துட்டு வாங்க. போலீஸ் செய்து காட்ட முடியாததை, நான் செய்து காட்டுறேன்?"