நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 14

14

ரவு கொடுங்கோலோச்சிய வேளை.

ஊருக்கு இரண்டு கிலோ மீட்டர் தொலை வில் உள்ள முத்துலிங்கம் தோட்டம். கிணற்றை மறைக்கும்படி. எருக்கலைச் செடிகள் படர்ந்திருந்தன. நான்கு பக்கத்தில் மூன்று பக்கம் சரல் மேடுகள் குவிந்து கிடந்தன. ஒரு பக்கத்தில் கமலைக் கிடங்கு, பள்ளமாய் நீண்டிருந்தது. பச்சைப்பசேலென்ற சோளப் பயிர்கள்- ஆறடிக்கு மேல் வளர்ந்து, தோகை விரித்து காற்றில் ஆடின. வரப்போர ஆமணக்குச் செடிகளில், 'கொட்டை முத்துக்கள்' வெடித்துக் கொண்டிருந்தன. ஆடிக் காற்று தென்னை மரவோலைகளைக் குனிவித்து, சோளத் தட்டைகளை மண்டியிட வைத்து, 'உய்' என்ற கூச்சலுடன் பேயாய், பேத்தலாய் ஒப்பாரியிட்டது.

ஆங்காங்கே இருந்த எலி வளைகளுக்குள், பாம்புகள் ஊர்ந்து கொண்டிருந்தன. 'விருவு' எனக் கூறப்படும் காட்டுப் பூனைகள், பூவரசு மரங்களிலும், ஆலமரங்களிலும், அடைக்கலமான பறவைகளைப் பிடித்துக்கொண்டிருந்தன. இவற்றைப் பார்த்து, காகங்களும், கரிச்சான்களும் தங்கள் பகையை மறந்து, ஆகாயத்தில் ஒன்கை, ஓல ஒலியே உயிரொலியாக வட்டமடித்தன. வண்ணத்துப் பூச்சிகள், வலையில் மாட்ட, அதைப்பின்னிய சிலந்திகள் தன் வலையை வேகவேகமாய் சுற்றி, அந்தப் பூச்சிகளைக் கசக்கிக் கொண்டிருந்தன, அருகே இருந்த சுடுகாட்டில், நரிகள் அகோரமாய் ஊளையிட்டுக் கொண்டிருந்தன.

சரல் மேட்டில், கையும், காலும் தனித்தனியாகக் கட்டப்பட்டு, பிறகு அவை ஒன்றோடொன்றாய் சேர்த்துக் கட்டப்பட்டு, ஆறடி அளவிலான மேனி மூன்றடி அளவில் குறுக்கப்பட்டுக் குப்புறக்கிடந்த தந்தையையே கலாவதி கமலைக் கிடங்கில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தாள்.

“அய்யாவ... விட்டுடுங்கய்யா... விட்டுடுங்கய்யா” என்று சொல்லிச் சொல்லி, அழுதழுது, அவளுக்கு வாயடைத்து விட்டது. கண்ணீர் தீர்ந்து விட்டது. அவரைப் பார்த்துப் பார்த்து, பார்வையும் தீர்ந்துவிட்டது. இப்போது அவள் அரை மயக்க நிலையில், மரணமும், வாழ்வும் ஒன்றாக, தலையில் கை வைத்து, முட்டிக்கால்களில் முகம் புதைத்து வெம்பிக் கொண்டிருந்தாள்.

தமிழரசியை, பஸ்ஸில் பறிகொடுத்துவிட்டு, தந்தைக்கு விரைவில் சமைத்துப் போட வேண்டும் என்று தான், அவள் ஊரை நோக்கி விரைந்து கொண்டிருந்தாள். இருவரும், தலைச்சுற்றலும், உடல் உற்றலுமாய் நடந்து கொண்டிருந்த போது, நான்கைந்துபேர், அவர்களை வழி மறித்தார்கள். திகைத்து நின்ற மாடக் கண்ணுவையும், கலாவதியையும், தங்களுக்குள்ளே பங்கு போட்டுப் பிடித்துக் கொண்டார்கள். இரண்டு பேரையும் தரதரவென்று இழுத்தும், அடியடி என்று அடித்தும், இழு இழு என்று இழுத்தும், இந்தத் தோட்டத்திற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்னாலேயே கொண்டு வந்து போட்டார்கள்.

மாடக்கண்ணுவை, ‘தாம்புக்’ கயிற்றாலும், வாழை நாராலும் கட்டி, சரல் மேட்டில் உருட்டிப் போட்டு விட்டு “கிழட்டுப் பயலே...கிடடா... கிட.. எங்க பொன்மணி இருக்கிற இடத்தைச் சொல்றது வரைக்கும் ஒன்னை விடப்போறதில்ல” என்று கொக்கரித்தார்கள்.

அன்று, கோழி கூவியதில் இருந்து, இந்த இரவுவரை, நடந்ததையும், நடப்பதையும் நம்ப முடியாமல் போன கலாவதி, கட்டப்பட்டவரை மீட்கப் போனபோது, அந்த ஐவரும் அவளைச் சுற்றி நின்று கொண்டார்கள், அவர்களையே, அவள் வியப்பாக, திகைப்பாக, நம்ப முடியாதவளாகப் பார்த்தாள்.

ஒருவர், பிள்ளையார் மாமா—முத்துலிங்கத்தின் சித்தப்பா. வழியில் பார்க்கும் போதெல்லாம் 'என்ன மருமகளே... எப்படி சவுக்கியமெல்லாம்' என்று குசலம் விசாரித்தவர். இன்னொருவர் வீரபத்திர மச்சான். 'ஒன் அழகுக்கு நீ சினிமாவுல சேரணும்' என்று விகற்பமில்லாமல் கிண்டல் செய்பவர். மூன்றாவது ஆள், முத்துத் தாத்தா. இவரும் 'கலாவதி... வயசு காலாவதியாவுது பிள்ள... ஒனக்கு மாப்பிள்ள கிடைக்காட்டால் சொல்லு... தாத்தா இருக்கேன் தயாராய்' என்று லூட்டி செய்பவர். இதேமாதிரித்தான் இந்த மாரிமுத்து மச்சானும், பேச்சிமுத்து மாமாவும். ஆனால் இப்போதோ, இந்த தெரிந்த முகங்களே, எமராஜ முகங்களாய் அவளுக்குத் தென்பட்டன. இந்த சினேகித முகங்களால், எப்படி இவ்வளவு சீக்கிரமாய் சினப்பு முகங்களாய் ஆக முடிகிறது?

அவர்களின் நீண்டகால பழக்கத்தை வைத்து, தங்களைப் பிடிக்கும்போதும், தந்தையைக் கட்டிப் போடும் போதும், கலாவதிக்கு வேடிக்கை மாதிரியே தெரிந்தது. அப்பா, வலி தாளாமல் கத்தியபோதுதான் கலாவதி, சுயத்திற்கு வந்தாள். மண்டியிட்டாள். மன்றாடினாள், கையெடுத்துக் கும்பிட்டாள், நெடுஞ்சாண் கிடையாகத் தரையில் விழுந்து, ஒவ்வொருத்தர் காலாக, ஊர்ந்து ஊர்ந்து தொட்டுத் தொட்டுக் கும்பிட்டாள். அழுதழுது புலம்பினாள். "ஒங்கள கையெடுத்துக் கும்புடுறேய்யா... ஒங்களுக்குக் கோடிப் புண்ணியம் உண்டுய்யா... நாங்க ஒரு பாவமும் அறியாதவங்கய்யா... அதோ பாருங்கய்யா... எங்கய்யா எப்டி வலியில துடிக்காருன்னு பாருங்கய்யா... ஏற்கனவே போலீஸ்ல அடிபட்டு உடம்புல்லாம் காயமய்யா... காயம் பட்ட இடத்துல கயிற்றைக் கட்டுனால் எப்படிய்யா? என்னை வேணுமுன்னால் கட்டிப் போடுங்கய்யா... அய்யாவ விட்டுடுங்கய்யா... வீரபத்திர மச்சான்.... பிள்ளையார் மாமா... முத்துத் தாத்தா... எங்கய்யாவ இப்டி நடத்த ஒங்களுக்கு எப்டி மனசு

வந்தது? எங்கள காலால உதறி கையால தள்ளிவிட்டுடுங்கய்யா.’’

தோட்டத்துப் பாண்டவர்களான அந்த ஐவரும் கலாவதியையும், மாடக்கண்ணுவையும் அப்போது மனிதப் பிறவிகளாக நினைக்கவில்லை. கோவில்களில் வெட்டப்படும். ஆடுகளாக, சமையலறையில் திருகப்படும் கோழிகளாகத் தான் நினைத்தார்கள். இப்போது அவர்களுக்கு முத்து லிங்கத்தின் குடும்ப மானமே பெரிதாய் தெரிந்தது. ஒரு தடவை, குடித்துவிட்டு போலீசில் மாட்டியபோது, வீரபத்திரனை மீட்டியவர் முத்துலிங்கம். பிள்ளையார் மாமா பக்கத்து வயல்காரனின் பல் ஒன்றை வெளியே எடுத்துப் போட்டபோது, அதை போலீசிற்குப் போக விடாமலே சரிக்கட்டியவர் இந்த முத்துலிங்கம். அவ்வப்போது, ஐந்து பத்தென்று கடன் கொடுப்பவரும் இந்த முத்து லிங்கம்தான். எல்லாவற்றிற்கும் மேல் பங்காளி. அவன் மானமே போகிறதென்றால், அப்படிப் போன மானத்தை நிலைநாட்ட, எந்த மானங்கெட்ட செயலை வேண்டு மானாலும் செய்யலாம். செய்ய வேண்டும்!

ஏதோ ஒருவித சேடிஸத்தில்-அதாவது பிறர் துன்பத்தைக் கண்டு மகிழும் மனோபாவத்தில் சிக்கி, ஐவரும் எக்காளமாகச் சிரித்தார்கள். ஏளனமாய்ப் பார்த் தார்கள். என்னடி நெனைச்சே? இது மானத்தை மட்டுமே உயிராய் நினைக்கிற மவராசா குடும்பம். ஒண்ணன் வினைதீர்த்தான் எங்க பொன்மணியை கடத்திட்டுப் போனதுக்கு, அவன் ஆயுள் முழுசும் வருத்தப்படனும். நீங்க பட்ட பாட்டையும், அதைப் பார்த்துட்டு அவன் படப்போற) பாட்டையும் பார்த்தால், அப்புறம் எந்த செறுக்கி மவனும் எங்க குடும்பத்து பொம்பிளைங்கள ஏறெடுத்துப் பார்க்கமாட்டான். இவ்வளவுதான் எங்களுக்குத் தெரிஞ்சுது. ஒங்கள விடக்கூடாது என்கிறது எங்க பையன்’ உத்தரவு. இதுக்குமேல எது பேசணு முன்னாலும் 

அவன்கிட்டேபேசிக்கலாம். இப்போ வந்துடுவான். டேய் பிள்ளை யாரு! இன்னும் ஏன் அவன் வர்ல?”

"நிதானமாய் வரட்டேன், இப்போ என்ன அவசரம்?”

இதற்கிடையே, போலி சார் நன்கொடையாய் கொடுத்த காயங்களில், கயிறு அழுத்தியதால் மாடக் கண்ணு, வலி தாளாமல் கூப்பாடு போட்டார். கலாவதி, தந்தையிடம் ஒடப் போனாள். ஒருவரை இடித்துக் கீழே தள்ளிவிட்டு ஓடினாள். உடனே, பிள்ளை யார் மாமா அவளை, மல்லாக்கத் தள்ளினர். வீரபத்திர மச்சான், அவள் தலைமுடியைப் பிடித்து, தரதரவென்று இழுத்து கிணற்றுப் பக்கம் கொண்டு போனார், லேசான மனச் சாட்சி கிக்கில் தவித்த மீதி மூவரும், குப்பியில் கொண்டு வந்ததைச் சப்பிக் கொண்டார்கள். அப்போது அவள் எங்கய்யாவுக்குப் பதிலா என்னை என்ன பாடு வேண்டு மானாலும் படுத்துங்கய்யா. அய்யாவ விட்டுடுங்கய்யா,’’ என்று துடித்தபடியே கேட்டாள். உடனே, அந்த கொலை தேசப் பிரஜைகளில் ஒருவர் ‘அப்பனுக்கு வலிக்கு துன்னு இப்டி துடிக்கிறியே, இந்நேரம் எங்க பொன்மணி ஒங்கண்ணன்கிட்ட என்ன பாடுபடுறாளோ? நெனச்சுப் பார்த்தியா செறுக்கி?” என்றார்,

கலாவதி, திரு திருவென்று விழித்தபோது, மேட்டுச் சரட்டில் புரண்ட மாடக்கண்ணு, ‘எப்பா...ஒங்களத் தாம்பா... என்னை வேணுமுன்னல் ஒரேயடியாய் கொன்னுடுங்கப்பா. ஆனல் தர்மப் பிரபுக்களே! புண்ணிய வான்களே! இப்டி சித்ரவதை பண்ணுதிங்கப்பா. என்னல தாங்க முடியலப்பா’ என்றார்.

கீழே விழுந்து கிடந்த கலாவதி, கையையும், காலையும் உந்தியபடி எழுந்தாள். அருகே கிடந்த ஒரு பாராங் கல்லைத் துக்கி வைத்துக் கொண்டு, ‘ எங்கய்யாவ கொன்னால் ஜெயிலுக்குப் போகணுமுன்னு நீங்க பயப்படுறது நியாயந்தாய்யா. அதனா ல நானே...எங்கய்யாவ கொல்றேய்யா. அவரு இப்டி துடிச்சு சாகிறதவிட, மொத்தமாய் செத்துடலாம்” என்று சொல்லியபடியே, கொலைப் பாசம் கொண்டு, தூக்கிய கல்லோடு, கலாவதி சரல் மேட்டுக்குத் தாவப்போனாள். மகாத்மா காந்தி பார்த்த கன்றுக்குட்டி போல் துடித்தவரைப் பார்த்து பாயப் போனாள். அந்த ஐவரும் அவளை மடக்கியபடி, சிரித்தார்கள். சாராயச் சிரிப்பாய் சிரித்தார்கள் . “அவ்வளவு சீக்கிரமாய் உயிர் போகலாமா?... போகத் தான் விடுவோமா?” என்றார்கள்.

அவர்கள், ஏதோ விட்டுக் கொடுப்பதற்காகத்தான், அப்படிச் சிரிக்கிறார்கள் என்று நினைத்த கலாவதி, மீண்டும் மன்றாடினாள் :

“தப்புப் பண்ணுனவன் எனக்கு அண்ணன், அவருக்கு மகன்னு இருந்தால் நாங்க என்னய்யா பண்ணுவோம்? நிர்க்கதியாய் நிற்கிற எங்களுக்கு உதவ வேண்டிய நீங்களே இப்படிச் செய்தால் எப்படிய்யா? எங்கள விட்டுடுங்கய்யா. இந்த ஊர்ல கூட இருக்கல. கண் காணாத இடத்துக்கு வேணுமுன்னாலும் ஓடிப் போயிடுறோம்.”

உடனே வீரபத்திரன், “ஒண்ணன் இருக்கிற இடத்துக்கு போயிடுறோமுன்னு சொல்றியா? தாராளமாய் போ! நாங்க ஒன்னை ஒன்றுமே செய்யல, போறவளை தடுக்கப் போறதுமில்ல. வேணுமானால் போ! ஒப்பனத் தான் கட்டிப் போட்டிருக்கோம். ஒன்னைக் கட்டிப் போடல. போகணுமுன்னால் போ. ஏண்டா, இவள் போகப் போறாளாம்... போவட்டும்” என்றார், பெரிதாய் நகைச்சுவையோடு பேசுகிற நினைப்பில். மற்றவர்கள், குரூரமாகச் சிரித்தார்கள்.

கலாவதி, பேசுவதை நிறுத்திக் கொண்டாள். குற்றுயிரும், கொலையுயிருமாய் கிடந்த தந்தையைப் பார்ப்பதை மறுத்துக் கொண்டாள். தந்தையைப் பார்க்கக் கூடாது என்று கண்களை மூடிக்கொண்டாள். அய்யாவின் புலம்பலை கேட்கக் கூடாது என்று காதுகளை கைகளால் பொத்திக் கொண்டாள். இறுதியில் தன்னையே தொலைத்தவளாய், நியாயமில்லாத சந்தேகத்திற்கு உட்பட்ட, சீதாப்பிராட்டிபோல், பூமாதேவியிடம் அடைக்கலம் கேட்பவளாய், அவளுக்கும், சீதைக்குப்போல் பூமி பிளக்கும். என்று நினைத்தவளாய், பூமியோடு தன் மேனியைக் கவிழ்த்துக் கொண்டாள்.

எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தாளோ, அவளுக்குத் தெரியாது. எவரோ செருப்புக்காலால் தன்னை இடறுவதைப் பார்த்து விட்டு கண் விழித்தாள்!

முத்துலிங்கம்!

அவளை, மதர்ப்பாகப் பார்த்தபடி நின்றார். கலாவதி, தடுமாறி எழுந்தாள், முத்துலிங்கத்தின் கைகளைப் பிடித்தாள். அவர் உதறியதால், தடுமாறி விழுந்தவள், மீண்டும் அவர் கால்களைப் பிடித்துக் கொண்டாள். தானே அறியாதவகையில் மன்றாடினாள்:

"மச்சான்! ஒம்மத்தான் மச்சான்... நாங்க ஒரு பாவமும் அறியாதவங்க. எங்களை விட்டுடுங்க மச்சா அய்யா துடிக்காரு மச்சான். ஒரு தடவை அவரை பக்கத்துல போய் பாரும் மச்சான். ஒமக்கே மனசு மாறும் மச்சான். எய்யா... நீரும்... மச்சான்கிட்டே பேசுமிய்யா ..."

முத்துலிங்கம், அவளைக் காலால் இடறி விட்டு, கையாட்கள் நிற்கும் பக்கமாய் நடந்தார். பிறகு "அவள்... தமிழரசியா... தடியரசியா... அந்த செறுக்கி மவளையும் இங்கே கொண்டு வந்திருக்கணும். அவள் இங்கே இல்லாதது, எனக்கு மனசு கேட்க மாட்டங்குது..." என்றார். கலாவதி, தடுமாறித் தடுமாறி, மீண்டும் அவர் காலடிக்கு வந்து "மச்சான்... மச்சான்" என்றாள் அவரோ சிங்கம் தோற்கும்படி கர்ஜித்தார்.

"ஒப்பன விட்டாலும், ஒன்னை விடப் போறதில்ல. செருக்கி மவளே! நீ தானே ஒங்க அண்ணனுக்கும், எங்க வீட்டு மூதேவிக்கும் காவல் காத்தது? ஒனக்கு இப்போ எவன் காவல் காக்க வாரான்னு பார்ப்போம்?"

"சத்தியமாய் நான் அப்படிப்பட்ட காரியத்த செய்யல மச்சான். என்னை நம்பும் மச்சான்."

"சரி போனது போவட்டும். நான் ஒன்னை நம்பணுமுன்னால், ஒன் அண்ணன் இருக்கிற இடத்தைச் சொல்லிடு. ஒன்மேல மேற்கொண்டு ஒரு துரும்புகூட விழாது."

"எனக்கு, அந்த நொறுங்குவான் போன இடம் தெரிஞ்சால் தானே சொல்ல முடியும் மச்சான்? எனக்கு எதுவுமே தெரியாது."

முத்துலிங்கம், வீராப்பாகச் சிரித்தார். பிறகு, அவர், அடிமேல் அடி வைத்து, சரல் மேட்டில் ஏறினார். குப்புறக் கிடந்த குறுகிய மாடக்கண்ணுவை காலால் இடறினார். அதனால் மயக்கம் கலைந்த மாடக்கண்ணு, மகளைப் போலவே, அந்த மகானுபாவரின் காலைப் பிடிக்க முடியாமல் கட்டப்பட்டிருந்ததால், தனது தலையை எடுத்து, அவர் திருப்பாதத்தில் வைத்து உருட்டியபடியே-

"முத்துலிங்கம்! ஒன்னையும் சின்ன வயசுல சில சமயத்துல என் தோள்ல எடுத்திருக்கேன். ஒம்மா எனக்கு ஒரு வகையில் சொந்தண்டா. என்னையா இந்தப் பாடுபடுத்துறே? என்னையா?" என்று சொன்னபடியே, வறண்ட கிணற்றில், சிறிய இடைவெளியில் ஊறிய நீர் போல், பொட்டல் கண்களை, புலம்பல் நீரில் நனைத்தார்.

முத்துலிங்கம், இறுதித் தீர்ப்பு வழங்கினார்.

"இந்தா பாருடா கிழட்டுப் பயலே! ஒன் மகன் தப்பிச்சது மாதிரி, நீயும் தப்பிச்சிடலாமுன்னு நெனைக்காதே. அந்தப் பயல் இருக்கிற இடத்தை மட்டும் நீ சொல்லல... ஒனக்கு உயிரோட சமாதி தான்... சீக்கிரமாய் சொல்லிட்டால், சீக்கிரமாய்... ஒன் மகளோட ஒன் வீட்டுக்குப் போயிடலாம். இல்லன்னா உயிரு தான் சீக்கிர மாய் போகும். அப்புறம் ஒன் இஷ்டம்."

மாடக்கண்ணு வாதித்தார்.

"இப்போ தப்பிக்கதுக்காக ஏதாவது ஒரு ஊரை சொல்லணுமுன்னால் சொல்லலாம். ஆனால் நான் அந்த மாதிரி வளந்தவன் இல்ல. அதனால்தானோ என்னவோ இப்டி அவஸ்தப்படுறேன்."

கையாட்களில் ஒருவர், இடைமறித்தார்.

"கிழவன விடுப்பா. இவளை விசாரிக்கிற விதமாய் விசாரிச்சால், உள்ளதைச் சொல்லிட்டுப் போறாள். இந்நேரம் நம்ம பொன்மணியை வினைதீர்த்தான் பயல் என்ன பாடு படுத்துறானோ?"

முத்துலிங்கம், கலாவதி பக்கம் வந்தார்.

"ஒன் கிட்ட ஒரே ஒரு தடவைதான் வாயால் கேட்கப் போறேன். ஒண்ணன் எங்கே இருக்கான்?"

"கூட்டிக்கிட்டு வாங்க காட்டுறேன்."

"அவ்வளவு திமுராடி ஒனக்கு?"

"பின்ன என்ன மச்சான்?... சொல்லிச் சொல்லிப் பார்த்துட்டோம். நீங்க கேட்காட்டால்... நாங்க அனாதைங்க... என்ன பண்ண முடியும்?... நீரே சொல்லும்..."

இன்னொரு கையாள், இடையில் புகுந்தார்.

"இவள் சப்-இன்ஸ்பெக்டர் கிட்டேயே நடிச்சவள். நீ எம்மாத்திரம்? வீட்டுக்குள்ள ரெண்டு பேரையும் படுக்க வச்சுட்டு, காவல் காத்த நாயை விசாரிக்கிற விதமாய் விசாரிக்காமல் கொஞ்சிறியாக்கும்."

முத்துலிங்கம், பதிலளிக்கவில்லை. எல்லாவற்றையும் எதிர்பார்த்தவர் போல், கையாட்களிடம் வந்தார். “உம்... நெருப்ப மூட்டுங்கப்பா... இந்தா... இதைச் சுட வை... ரெண்டுல ஒண்ண பாத்துடலாம்” என்றார்.

கையாட்கள், அங்குமிங்குமாய் குதி போட்டுச் சென்றார்கள். பழுத்து விழுந்த தென்னை ஒலைகளையும் தூக்கணுங்குருவிக் கூடுகளையும், குஞ்சுகளோடும், குருவிகளோடும் எடுத்தார்கள். சோளப்பயிர் காவலுக்காய் போடப்பட்ட பரணில் இருந்து மண்ணெண்ணெய் டின்னை எடுத்தார்கள். ஒருவன் தீக்குச்சியைக் கிழித்தபோது, இன்னொருவன் அது காற்றில் அணையாமல் இருக்க, தன் வேட்டியால் திரை போட்டான்.

கலாவதியின் காயங்களைப் போல், நெருப்பு, விறகுகளில் அங்குமிங்கு மாய் சிவப்புச் சிவப்பாய் பற்றி, செந்தீயானது. ‘உய்...உய்’ என்ற சத்தத்துடன், பாம்பு படமெடுத்து ஆடுவது போல், காற்றில் ஆடியது. கலாவதியின் பக்கம் ஒரு தடவை. மாடக்கண்ணுவின் பக்கம் மற்றாெரு தடவை. அதற்குள் இருந்த வளைந்த கதிரருவாளும் சிவப்பாகிக் கொண்டிருந்தது. நெருப்பின் ஒளியில், மாடக்கண்ணு, லேசாகத் தலையைத் தூக்கி மகளைப் பார்த்தார். அவளோ, தந்தையை மருவி மருவிப் பார்த்தாள். ஒரேயடியாகப் பார்த்தாள்.

முத்துலிங்கம், சிவப்பு அரிவாளின் பிடியைப் பிடித்த படியே, கலாவதியை நெருங்கினார் அவள் நடப்பது நடக்கட்டும் என்பதுபோல் இருந்தாள். அதை உதாசீனமாக நினைத்த முத்துலிங்கம் கையாட்களிடம் கர்ஜித்தார். காளி கோவில் சாமியாடிகள், அறுத்த ஆட்டின் ரத்தத்தை குடிக்கும்போது, குரல் எழுப்புவார்களே, அப்படிப்பட்ட குரலில் ஆணையிட்டார்.

“இவள் உடம்புல சேலயும் ஜாக்கெட்டும் இருந்தால் எப்படிப்பா சூடு போட முடியும்? உம்... சீக்கிரம் இவள் வாயில சூடு வச்சால் சொல்ல மாட்டாள்!”