நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 23

23

ந்தக் கல்லூரி வளாகத்திற்குள் மாணவிகளும், ஆசிரியைகளும் கும்பல் கும்பலாய் கூடிக் கூடி நின்றனர். வயதுக்கேற்ற சேட்டைகளோ, பருவத்திற்கேற்ற 'கலாட்டாக்களோ' இல்லாமல், மவுன கழிவிரக்கத்தில் கரைந்து கொண்டிருப்பதுபோல் தோன்றினார்கள். பல பெண்கள், கரங்களில் அட்டைகள் ஏந்தி முகங்களில் சோகம் கப்பி நின்றார்கள்.

தமிழரசியும், பத்மாவும், இன்னும் ஒருசில ஆசிரியைகளும், தனித்தனியாய் தத்தம் குழுக்களுடன் பேசிக் கொள்ளாமல், பிரிந்து செல்லாமல் நின்ற பெண்களை, கல்லூரி கொடிக் கம்பத்திற்கு முன்னால் வந்து நிற்கும்படி சைகை செய்தார்கள். இதைப் பாராமுகமாய் நின்ற பல பெண்களை, பார்த்த முகமாய் நின்ற பெண்கள் விலாவில் இடித்து, எல்லோரும் கொடிக் கம்பத்தின் முன்னால் குவிந்தார்கள்.

தமிழரசியும், சமூகஇயல் உதவிப் பேராசிரியை பத்மாவும் அவர்களை மூன்று மூன்று பேராய் பிரித்து, வரிசைப் படுத்தினார்கள். மூன்று அணிகளுக்கு ஒரு அணி வீதம், மாணவிகள் அட்டைகளை ஏந்தி நின்றார்கள். அத்தனைப் பெண்களின் தோள் களில் துவண்ட முந்தானை களில், கருப்புத்துணிகள் குத்தப்பட்டு, அவைகளும் துக்கித்து நின்றன. ஊர்வல வரிசையின் முன்னாலும், பின்னாலும், பக்கவாட்டிலும், மத்தியிலும்-பலப்பல விதமான அட்டைகள் கம்பீரமாய், தலைகளுக்கு மேல் தாவி நின்றன. அவற்றில் எழுதப்பட்டிருந்த முழக்கங்கள், மவுனமாய் நின்ற மாணவிகளை சீறும் பெண் புலிகளாகக் காட்டின. கரங்கொண்ட அட்டைகள்,

"எங்களவர்களைக் கொல்லும் சிங்களவர்களே!-உங்களை என்ன ஆனாலும் விடோம்."

"குட்டிமணியின் கொலை மரணம் ஈழத் தமிழகத்தின் எல்லை விரிப்புக்கள்."

"இப்போதைய தேவை-எப்படியும் எம்மவுரைக் காத்தல்."- என்று ஆர்ப்பரித்தன.

அணி திரண்ட மாணவிகள், கொடிக்கம்ப மேடைக்கு முன்னால் கம்பீரமாய் நின்றார்கள். தமிழரசி ஒரு அறைக்குள் போய் இரண்டு பக்கமும் கொம்புகளை எல்லைகளாய்க் கொண்ட துணி பேனரைக் கொண்டு வந்தாள். அதில் "இலங்கை அரசே! இனக் கொலையை நிறுத்து!" என்ற சிவந்த வாசகம், வெண்மை நிறப் பின்னணியில் ரத்தம் போல் ஒளிர்ந்தது.

ஊர்வலத்தின் முகப்பில், இந்தப் பேனரை, யார் பிடிக்கவேண்டும் என்று, தமிழரசி, இதர ஆசிரியைகளுடன் விவாதித்தாள். பிறகு கூட்டத்தை ஒட்டு மொத்தமாய் பார்த்துவிட்டு, பின் வரிசையில் நின்ற இரண்டு பெண்களை கையாட்டிக் கூப்பிட்டாள். அவர்கள் ஒன்றும் புரியாமல் அவளை நெருங்கியபோது, தமிழரசி பேனரைக் கொடுத்தாள்.

அவர்களில் ஒருத்தி என். ஸி. ஸி.; இன்னொருத்தி இந்தக் கல்லூரியில் படிக்கும் இலங்கைத் தமிழ் மாணவி, தமிழர்கள் பெரும்பான்மையாய் வாழும் யாழ்ப் பாணத்துக்காரியல்ல. தமிழினம் கொன்று குவிக்கப்பட்ட கொழும்பு நகரில் குடிகொண்ட குடும்பத்தினள். இலங்கையில் கொலைக் கொடுங்கோன்மை துவங்கியதிலிருந்து, குடும்பத்திடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. பெற்றோருடன், தமையன்கள் இருவரும், தம்பியும், தங்கையும் என்ன ஆனார்கள் என்று தெரியவில்லை,.கொழும்பு நகரமே, அங்குள்ள தமிழர்களுக்கு, உயிரோடு கூடிய சமாதியாய் மாறிய பிறகு, தனது குடும்பமும் உடலற்றுப் போய்விட்டதா அல்லது அகதி முகாம்களில் உணர்வற்றுக் கிடக்கிறதா என்பதை, எவ்வளவு முயன்றும் இன்னும் அவளால் அறிய முடியவில்லை.

தமிழரசி, பேனரின் ஒரு முனையை என். ஸி, ஸி. மாணவியிடம் கொடுத்துவிட்டு, இன்னொரு முனையை அந்த இலங்கைத் தமிழ்க்காரியிடம் நீட்டினாள். ஆனால் அந்த மாணவியால் அதை வாங்க முடியவில்லை. அப்படியே குனிந்து உட்கார்ந்து விம்மினாள். அவளுக்கு ஆறுதல் சொல்வதற்காக தமிழரசியும், ஒரு சில மாணவிகளும் அவளிடம் ஓடியபோது, அவளும் ஓடி, கூட்டத்திற்கு முன்னால் வந்தாள். கூட்டத்தைப் பார்த்து, கரங்கூப்பித் தொழுதாள். இலங்கையில் தனது குடும்பத்தைத் தொலைத்து விட்டாலும், தமிழகத்தில் தான், தன்னைப் போன்றவர் களுக்கான மிகப் பெரிய குடும்பத்தைக் கண்ட பாசபந்தத்தில், கட்டுண்டு கண்ணீர் விட்டாள்.

இங்கிருக்கும் தமிழர் ரத்தம், இந்து மகா சமுத்திரத்தையும் ஊடுருவி, அங்கிருக்கும் தமிழ்க் குருதியுடன் இணைந்து துடிக்கும் அன்பின் ஈர்ப்பில், அவள் ஆடிப் போனாள். அத்தனை பேரும், அவளுக்கு உடன் பிறவா சகோதரிகளாக-அவளைப் போன்றவர்களுக்காக, எந்தத் தியாகத்தையும் செய்யலாம் என்ற எண்ண முனைப்புடன் வந்திருக்கும் தமிழ்க் குடும்பமாக - அவளுக்குத் தோன்றியது.

மின்னும் கறுப்பில் நிறமெடுத்து, எண்ணமும், செயலும் ஒன்றாகவே உடலெடுத்தது போல், விகற்பம் இல்லாத பளிங்குப் பார்வையும், வஞ்சமற்ற வளர்ச்சியும், எழிலும் கொண்ட அந்த இலங்கை மாணவியின் தோளை, தமிழரசி தட்டிக் கொடுத்தாள். "கவலைப்படாதே! இன்னிக்கு இலங்கை அஸிஸ்டெண்ட் ஹைகமிஷனர் கிட்டே, ஒன்னோட குடும்பத்தின் விவரத்தைக் கண்டு பிடிச்சு சொல்லச் சொல்லுவோம். அவங்க தராட்டால், நானே சாகும் வரைக்கும் உண்ணாவிரதம் இருப்பேன்," என்றாள்.

உடனே அந்த மாணவி, தமிழரசியின் தோளில் சாய்ந்து விம்மினாள். அதைப் பார்த்து விட்டு ஊர்வலத்தில் சங்கிலித் தொடராய் நின்ற அத்தனை பெண்களும் அழுதார்கள். தோளிலே புரண்ட அந்த மாணவியை, குழந்தை மாதிரி அணைத்துக்கொண்ட தமிழரசிக்கு, இலங்கைத் தமிழர்கள் பட்ட- படுகின்ற- ஒரு வேளை படப்போகின்ற துன்பங்களும், துயரங்களும், துக்கப் பெருங்கடலாய் உருவமெடுத்து, மூழ்க வைத்துக் கொண்டிருந்தது. இதற்கெல்லாம் யார், யார், எவையெவை காரணங்கள்?

அவளுக்கு தான் இதுவரை கலந்து கொண்ட பட்டிமண்டபங்களும், கவியரங்கங்களும் வெத்து வேட்டுக்களாய் தெரிந்தன. இலங்கைத் தமிழர்களின் இன்றைய நிலைக்குத் தானும், தன்னைப் போன்றவர்களும், ஏதோ ஒரு வகையில் காரணம் என்பதை அறிந்து நிமிரமுடியாமல் நின்றாள். கண்களை மூடியபடியே நின்ற தமிழரசியை, பத்மா உலுக்கினாள். இதற்குள் நான்கைந்து மாணவிகள் வந்து இலங்கை மாணவியை ஆற்றுப்படுத்தி அழைத்துச் சென்றார்கள்.

கண் விழித்த தமிழரசியால், ஆவேசத்தைக் கட்டுப்படுத்த முடியவில்லை. கொடிக்கம்ப மேடையில் ஏறினாள். பிறகு "இலங்கையில் விதவையாக்கப்பட்டவர்களுக்கும், அனாதைகளான சிறுவர் சிறுமிகளுக்கும், கற்பழிக்கப்பட்ட பத்தினிகளுக்கும், கொலையுண்ட தமிழர்களுக்கும், இரண்டு நிமிட மவுன அஞ்சலி செலுத்துவோம்" என்றாள்! அத்தனை கண்களும் மூடின. அத்தனை தலைகளும் முன்புறமாய்ச் சாய்ந்தன. இரண்டு நிமிடமாகியும் எழாமலே கிடந்தன. எப்படியோ அவை நிமிர்ந்தபோது, தமிழரசி மேடைப் பேச்சாளியானாள்.

"என் அன்புச் சகோதரிகளே!

இலங்கையில் இனப்படுகொலையை, நான் உங்களுக்கு விளக்க வேண்டியதில்லை, சுருக்கமாகச் சொல்வதென்றால், உலக வரலாற்றில் இதுவரை இடம் பெறாத நரமாமிசவேட்டை. மற்ற நாடுகளில் நடந்ததுண்டு எப்படி? இரு தரப்பார் மோதுவார்கள். ஆனால் ஒரு தரப்பு குறைவாயும், இன்னொரு தரப்பு மோசமாகவும் பாதிக்கப்படும். ஆனால் இலங்கையில் நடப்பதோ ஒருதலைக் கொலைகள். நிராயுதபாணிகளான நம்மவர்களை நிர்மூலமாக்கும், சிங்களவ கோர தாண்டவம். கடலுக்கும், பூமிக்கும், சூரியனுக்கும், ஆகாயத்திற்கும், காற்றிற்கும் அவையே உதாரணங்கள் என்பதுபோல், இலங்கை இனப் படுகொலைக்கு, அதுவே உதாரணம். வேறு எடுத்துக்காட்டால் அதை விளக்கமுடியாது. வெளிநாடுகளில் வாழும் தமிழர்களிலேயே இலங்கைத்தமிழர்கள், நமக்கு பூகோளப் படியும், பண்பாட்டுப்படியும் நெருக்கமானவர்கள்.

தனித்தமிழ் இயக்கத்தைத் தோற்றுவித்து, சைவ சித்தாந்த இலக்கிய வளர்ச்சிக்குப் பாடுபட்ட ஆறுமுக நாவலர், யாழ் ஆராய்ச்சி செய்த வித்தகர் விபுலானந்த அடிகள், இப்போது மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் இஸ்லாமிய இலக்கியப் பேராசிரியராகப் பணியாற்றும் டாக்டர் உவைஸ், 'கள்ளத்தோணி' நாடகம் எழுதிய எம். ஏ. அப்பாஸ், திறனாய்வுத் துறைக்கு புதிய வடிவம் கொடுத்த டாக்டர் கைலாசபதி, டாக்டர் கா சு. சிவத்தம்பி, தமிழகத் தமிழ் எழுத்தர்களை விடச் சிறப்பாக எழுதும் டொமினிக் ஜீவா, யோகநாதன், டேனியல் ஆகியோர் தமிழை செழிக்க வைத்த இலங்கைச் செல்வங்கள். உலகத் தமிழ் இலக்கியத்தில் இன்று வழிகாட்டிக் கொண்டிருப்பது யாழப்பாணத் தமிழ் இலக்கியமே. இந்த யாழ்ப்பாணத்தில் ராணுவ அடக்கு முறையும், தமிழர்கள் சிறுபான்மையாய் வாழும் இதர பகுதிகளில் இனக்கொலையும், அன்றாடச் செய்தியாகிவிட்டது.

ஆனாலும், நாமும், நம் தலைவர்களும், இப்போது கண்ணீர் வடிப்பதைப்பார்க்கும்போதும், கேட்கும்போதும், எனக்கு ஒரு கதைதான் நினைவுக்கு வருகிறது. குழந்தை நோயில் கிடக்கும்போது ஒருத்தி சினிமாவுக்குப் புறப்பட்டாளாம். பெற்ற பிள்ளைக்கு மருந்து கொடுத்தால், சினிமா துவங்கிவிடும் என்று நினைத்து, வந்து பார்த்துக் கொள்ளலாம் என்று வேக வேகமாய் போனாளாம். சினிமா முடிந்து திரும்பும்போது, குழந்தை செத்துக் கிடந்ததாம். கதறிக் கதறி அழுதாளாம். இவள் கதைக்கும், நாம், இலங்கைத் தமிழர்களுக்காய் கண்ணீர் விடுவதற்கும் என்ன வித்தியாசம்? அந்த நாட்டில், கடந்த ஐந்தாண்டுகளாக சிங்களவர்கள், தமிழர்கள் மீது கொலை, கொள்ளை, கற்பழிப்பு தீச்செயல்களில் ஈடுபட்டது, நம் தலைவர்களுக்கும், பத்திரிகைகளுக்கும் தெரியும். தெரிந்தது, மக்களிடம் தெரிவிக்கப்பட்டதா? இல்லை. தலைவர்கள், பிறந்த நாளில் ஒரு போஸ்டரும், பிறக்காத நாட்களில் பல போஸ்டர்களும் போட்டு, விழா மயமானார்கள். பத்திரிகைகளோ, சினிமாக்காரர்களின் அந்தரங்க வாழ்க்கையை தோண்டிக் கொண்டு இருந்தன. இதனால், இலங்கைத் தமிழர்களுக்கு, ஆதரவு தெரிவிக்கும் தகுதிகூட நமக்கில்லை. ஐந்தாண்டுகளுக்கு முன்பே, நாம் தமிழகத்தில் ஒரு வலுவான இயக்கத்தைத் தோற்றுவித்திருந்தால், இலங்கையில் இனப்படுகொலை, ஒருவேளை நடந்திருக்காது. காரணம், சக்திகளிலேயே பெரியது மனோசக்தி. இது சிங்களவர்களை ஆட்கொண்டிருக்கும். ஒரு வகையில், இலங்கைக் கொலைகளுக்கு, நாமும் பங்குதாரர்களே. ஆகையால் இப்போது நாம் மேற்கொள்ளும் ஊர்வலம், ஒரு பிராயச்சித்தம்; நம்மை நாமே கேட்டுக் கொள்ளும் ஒரு சுய மறுவாய்வு நடவடிக்கை. "ஏசுநாதர் இலங்கைத் தெருக்களில் மரித்துவிட்டார்" என்ற வாசக அட்டைகளுடன், கிறிஸ்தவப் பெருமக்கள் எப்படி மௌனமாக நடந்தார்களோ, அப்படி நடப்போம்."

தமிழரசி, கொடிமேடையில் இருந்து கீழே இறங்கினாள். அவள் பேச்சுக்குக் கைதட்டாமல் மாணவிகள், தங்கள் முதிர்ச்சியைக் காட்டினார்கள். ஒரே ஒரு மாணவி மட்டும், "மேடம், டி. வி. வர்லியா?" என்றாள். தமிழரசியும் இங்கிதம் தெரியாமல் சீறினாள்.

"ஒனக்கு அறிவிருக்காடா? டி. வி. க்காரங்க வராததைப் பற்றி நாம ஏன் கவலப்படணும்? விடிய விடிய ராமாயணம் கேட்ட மூடன் கதை தான் ஒன் பேச்சு. டி. வி. க்குத்தான் இந்த மாதிரி ஊர்வலங்கள் தேவையே தவிர நமக்கு டி. வி. தேவையில்ல. நாம நம் உணர்வுகளை வெளிப்படுத்தத்தான் போகிறோம். வெளிச்சம் போட இல்ல. இப்பெல்லாம் சில சங்கங்களும், தனி நபர்களும், டி. வி. வருமுன்னு உறுதிப்படுத்தின பிறகு தான் உண்ணாவிரதத்தையே துவக்குறாங்களாம். இது பிணங்களைக் கொத்துற கழுகுத்தனத்தை விட மோசமானத்தனம். நாமெல்லாம் பப்ளிஸிட்டி மோகிகள் என்கிறதால தான், சினிமா நடிகர், நடிகைகள் போன ஊர்வலத்தை எல்லாப் பத்திரிகைகளும் 'நடந்தே போனார்கள்' என்று பெரிசாய் போட்டாங்க. இலங்கையில் தமிழன் ரத்தம் பெருக்கெடுக்கு. 'தமிழர் மாமிசம்' கிடைக்குமுன்னு போர்டு போடுறாங்க. அதுக்கான ஊர்வலத்தில நடிகர் நடிகைகள் நடந்து போனது, நம்ம பத்திரிகைக்காரங்களுக்கு பெரிய நியூஸ். ஒன்னை மாதிரி... என்னை மாதிரி... எல்லாரும் எதைப் போட்டாலும் சிந்திக்காமல் படிப்போமுன்னு அவங்களுக்குத் தெரியும். சினிமாக்காரனுக்கும்... சினிமாக்காரிக்காகவும்.. இலங்கைத் தமிழரை மட்டுமில்ல, எல்லாரையும் விட்டுக் கொடுப்போமுன்னு அவங்களுக்குத் தெரியும்."

கேட்ட மாணவி தலைகுனிந்தபோது, மற்ற மாணவிகள் "ஏய்... ஏய்... முந்திரிக் கொட்டை..." என்று உஷ்ணமாய் கேட்டார்கள். உடனே தமிழரசிக்கு தன் தவறு புரிந்தது, தான் படித்த பிரஷ்நேவின் 'கன்னிநிலம்' புத்தகம் நினைவுக்கு வந்தது.

அந்த மாணவியின் அருகே போய் அவள் கையைப் பிடித்தபடி "என்னை மன்னிச்சிடுடா. உன்னிடம் தனியாய் பேச வேண்டியதை, பகிரங்கமாய் கேட்டது தப்புத்தான். வேகமாய் பேசுறதாலயே, ஒருத்தர் வீரமுள்ளவர்னோ விவேகம் உள்ளவர்னோ ஆயிடாது. நான் தான் அப்படி ஆயிட்டேன்" என்று எல்லோருக்கும் கேட்கும்படியாய் சத்தம் போட்டு மன்னிப்புக் கேட்டாள்.

மாணவிகள் முன்புறமாய் திரும்பினார்கள். பானர் பிடித்த மாணவிகள் முன்னால் நடக்க, ஊர்வலம் கல்லூரி வாசலைத் தாண்டி சாலையோரமாய் நடந்தது. கை பிடித்த அட்டைகள் மேலோங்க, கழுத்துப் பிடித்த தலைகள் கீழோங்க மவுன ரதமாய் ஊர்வலம் நடந்தது. தமிழர்கள் சிதறிய குருதிபோல் சிவப்புப் புடவைகளும், கற்பழிக்கப்பட்ட தமிழ் மாந்தர் கண்கள் போல் வெளுத்த தாவணிகளும், நம்மவர்கள் எரிந்து கரியாய் போனதைப் போன்ற கறுப்புத் துணிகளுமாய் ஊர்வலம் இலங்கைத் தூதரகம் உள்ள இடத்திற்கு வந்தது.

விடுதிக்குச் செல்வதற்காக, பஸ் நிலையத்தில் காத்து நின்ற தமிழரசிக்கு ஒரே அலுப்பு. பத்மா கல்லூரிக்கு பேனர்களை வைக்கப் போய் விட்டாள். கடந்த பத்து நாட்களாக கல்லூரி ஆசிரியர்கள் சார்பாக உண்ணாவிரதம் என்றும், உழைக்கும் பெண்கள் சார்பாக ஊர்வலம் என்றும், விடுதிப் பெண்கள் சார்பாக நன்கொடை வசூலிப்பு என்றும், இரவு பகல் பாராமல் செயல்பட்ட தமிழரசி, தன்னையும் தன் பிரச்சனைகளையும் பின்னுக்குத் தள்ளினாள்.

ஏதோ ஒன்றைத் தன்னளவில் செய்த திருப்தி இருந்தாலும், அவளால் நிற்கமுடியவில்லை. ஒரு ஆட்டோவைப் பிடித்துக் கொண்டு விடுதிக்கு வந்தாள். விடுதியின் வரவேற்பறைக்குள் அவள் வந்தபோது-

உட்கார்ந்திருந்த தாமோதரன், எழுந்து நின்றான்.