நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 24

24

தாமோதரனைப் பார்த்தபடியே நின்ற தமிழரசிக்கு, பத்து நாட்களாக ஒழிந்து விட்டதாக அவளே நினைத்த பழைய நினைவுகள் பிடித்துக் கொண்டன. அவள் நின்ற இடம் ஊர் போலவும், காதல் கிணறு போலவும், கட்ட விழ்த்து விடப்பட்ட கொடுமைகள் நிலவிய சித்தப்பாவின் வீடு போலவும், மாறி மாறித் தோற்றம் காட்டின. ஒருவரை ஒருவர் கண்களால் பார்த்தபடி கால்களை நகர்த்திக்கொண்டார்கள். இறுதியில் மூன்றடி இடைவெளியில் இருவரும் நின்றார்கள். தமிழரசி பேசப்போனாள். வார்த்தைகளை வாங்கிக் கொள்ளும் முன்னாலேயே வாய்க்குள் விம்மல் வந்தது. லாவகமாக புறங்கையால் கண்களைத் தேய்த்த படி அவனைப் பார்த்து சோகமாய் புன்னகைத்தாள். பிறகு தான் கண்கள் வெளுக்க,மோவாயின் முன்பகுதி துக்கத்தை அனுசரிப்பது போல தளிர்விட்ட ரோமக் கணைகளாக அவன் தவித்து நிற்பதைப் பார்த்தாள். அவனும் ஏதோ பேசப் போனான். முடியவில்லை. மோவாயில் கை வைத்து விரல்களை வாயில் பரப்பிக் கொண்டாள்.

இதற்குள் அங்குமிங்குமாய் நின்ற பெண்கள் அவர்கள் இருவரையும் விநோதமாகப் பார்த்தார்கள். 'தமிழரசியா' என்று வினாவோடு பார்த்து, நல்ல ஜோடிதான் என்ற விடையோடு தலையை ஆட்டிக் கொண்டார்கள். அவர்கள் காதலர்கள் தான் என்பதை அந்த "அனுபவசாலிப்" பெண்கள் அடையாளம் கண்டு கொண்டார்கள். கண்களைச் சுற்ற விட்ட தமிழரசி சுதாரித்தாள். "எப்போ வந்தீங்க" என்றாள். அவன் "இப்போதான்" என்று சொல்வதற்கு முன்பாகவே "வாங்க, வெளில போய் பேசலாம்" என்றாள்.

இருவரும் அந்த விடுதிக்கு வெளியே வந்து சாலையோரமாய் நடந்தார்கள். தாமுவிற்கு முன்னால் நடந்த தமிழ், அவனுக்காக நின்றாள். அவன் வந்ததும் அவனுக்கு இணையாக நடந்தாள். நடந்தவர்கள் நடையை நிறுத்தி ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். அதற்குள் சாரி சாரியாய் வந்த மனித நெரிசலுக்கு வழிவிட்டு அவன் முன்னாலும், அவள் பின்னாலுமாய் நடந்தார்கள். தாமு அவளுக்காக நடையைத் தளர்த்த, அவள் ஓடி வந்தாள். சிறிது நின்று ஒருவரை ஒருவர் பார்த்துக் கொண்டார்கள். பிறகு இணையாய் நடந்தார்கள். தமிழரசி அவனிடம் "ஆளே அடையாளம் தெரியாமல் போயிட்டீங்களே" என்றாள். அவன் சிறிது யோசித்து விட்டு, "உயிரோடயாவது இருக்கேனே" என்றான். அவனையே பார்த்த தமிழரசி, மீண்டும் மனித நெரிசலுக்கு வழிவிட்டு, ஜோடி பிரிந்து, பின்னால் தனியாய் நடந்தாள். பிறகு அவன் நடையைக் குறைக்க, இவள் கூட்ட மீண்டும் இணையான போது "ஒரு லட்டர் போடக் கூடாதா" என்றாள், முகத்தைத் திருப்பி, கண்களைத் துடைத்துக் கொண்டாள்.பின்னர் கண்ணை மூடிக்கொண்டு நடப்பவள் போல், அவனை முந்தி நடந்து, சிறிது தூரத்திற்குப் பிறகு திரும்பிப் பார்த்தாள். அவன் வருவது வரைக்கும் காத்திருக்கப் பொறுக்காதவள் போல், வந்த வழியிலேயே திரும்பி நடந்து, அவனுக்கு ஜோடியாகி "என் மேல கோபந்தானே?" என்றாள் அவன், "நான் கேட்க வேண்டியது..." என்றான்.

இருவரும் மவுனமாகி, நீண்ட நடை நடந்து கடல் மண்ணில் நடந்தார்கள். அங்கே ஜோடி ஜோடியாக, தொட்டும், தொடாமலும், பேசியும், பேசாமலும் இன்பப் பூரிப்பில் இருந்த இளசுகளை, தமிழரசி அங்கீகரிப்போடு பார்த்தாள். முன்பு தோழிகளோடு இந்தப் பக்கம் வந்த போது 'சீ, விவஸ்தை கெட்டதுகள்' என்று காதல் வயப்பட்டவர்களின் காது வயப்படப் பேசியவள், இப்போது அவர்களை, 'இன்னும் நெருக்கமாய் உட்காரலாமே,' என்று கேட்பதுபோல் பார்த்தாள். குறிப்பிட்ட ஒரு இடத்தில் தமிழரசி உட்கார்ந்தாள். ஆனந்தமாயும், அழுகையாயும் மனம் போட்ட கூச்சல், கால்களை நடக்க விடவில்லை. கீழே உட்கார்ந்த தமிழு, அவனை குழந்தை போலவும், குழந்தையைப் போலவும், பார்த்தாள். அவளருகே உட்கார தனக்குத் தகுதியில்லை என்று தாமோதரன், தன்னைத்தானே கேட்டபடி தனித்து நின்றான். தமிழரசி, அவன் கையைப் பிடித்திழுத்து உட்கார வைத்தாள். உட்கார்ந்தபடியே அவன் பக்கமாக தன்னை நகர்த்திக் கொண்டாள்,

"ஒங்க தங்கை விஜயா கல்யாணம் நல்லா நடந்துதா?"

"ஒனக்கு அது அண்ணன் கல்யாணமாய் தெரியலியா?"

"அண்ணனாய் இருந்தால் லட்டர் போட்டிருப்பானே. நான் போகக் கூடாதுன்னோ.. என்னவோ கல்யாணத்துக்குப் பிறகு தான் வெறும் அழைப்பு வந்தது. அப்புறம் என் மனசு கேட்கல. அண்ணன் கல்யாணத்துக்குப் போக முடியலியேன்னு துடிச்சுது. என் மனசு என்ன மனசோ! நீங்க போனீங்களா?"

"உம், போய்த் தொலைச்சேன்!"

"ஊர் எப்படி இருக்குது?"

"ஊரா? ஏதோ இருக்குது."

"சித்தப்பாவும், கலாவதியும் எப்படி இருக்காங்க? கல்யாணத்துக்கு வந்தாங்களா? எங்கம்மா நான் வர்லன்னு துடிச்சிருப்பாளே? ஊர்ல நடந்ததை ஒன்றுகூடப் பாக்கி இல்லாமல் சொல்லுங்க. உம். ஒங்களத்தான்.

தாமோதரன், அந்த இளயிருட்டில், அவளைப் பயத்தோடு பார்த்தான். அனிச்சையாக, சிறிது விலகி உட்கார்ந்தான். அப்படியும் தன்னை அடக்க முடியாமல் எழுந்தான். அங்குமிங்குமாய் தலையைச் சுற்றினான். அவளுக்கு இன்னும் ஊரில் நடந்த விவரங்கள் தெரியாமல் இருப்பதில், ஏதோ ஒருவகையில் அவனுக்குத் திருப்தி. உண்மை தெரிந்தால், இவள் என்னைப்பற்றி என்ன நினைப்பாள்?" நான் போகட்டும், இவள் மனம் என்னபாடு படும்? நான், கெட்டவைகளை மூடி மறைத்ததுபோல், இவள் கிட்டேயும் மூடி மறைக்கலாமா? கூடாது, கூடவே கூடாது! இவளிடம் சொல்லித்தான் ஆக வேண்டும். இந்தத் தாயின் மடியில் புரண்டு, சொல்லிச் சொல்லி அழத்தான் வேண்டும். ஆனால் இன்றைக்கு அல்ல, நாளைக்கு. நாளைக்கே. இந்த இனிமையான நேரத்தை, நிதர்சனத்தில் சூடாக்க மாட்டேன். வாழ்க்கையில் வாராதது போல் வந்த இந்தப் பொழுது, ஒரு பொய்ப் பொருளாய் போனாலும், அழுபொழுதாய்... அழுகும் பொழுதாய் ஆகலாகாது.

தமிழரசி கீழே உட்கார்ந்து அவன் விரல்களைப் பற்றிய படியே "ஏன் எழுந்திட்டீங்க? என் பக்கத்துல உட்கார ஒங்களுக்குப் பிடிக்கலியா?" என்றாள். அவன் உட்காராமலே "பிடிக்காமல்தான் ஒன்னைப் பார்க்கணுமுன்னு வந்தேனா?" என்றான். அந்தப் பதிலில் மெய் சிலிர்த்த, தமிழரசி, "சாரி! கலாவதி எப்படி இருக்காள்? போலீஸ் அடி கொடுத்த அதிர்ச்சியில் இருந்து மீண்டுட்டாளா?" என்றாள்.

"உம், மீண்டுட்டாள்."

"சித்தப்பா?"

"ஒரேயடியாய் மீண்டுட்டார்!"

தாமோதரன், தன்னை இழிவாகப் பார்த்துக் கொண்டான், தர்மர் 'அஸ்வத்தாமா' என்று சொன்னதுபோல், பொய்க்கு மெய்வடிவம் கொடுத்தாச்சு. மாடக்கண்ணு மாமா மரணத்தாலும், கலாவதி மூளை பிசகியும், மீண்டு விட்டதாக அனுமானித்தது ஒரு வகையில் சரிதான். அடேடே! இப்பகூட உண்மையைத்தான் பேசியிருக்கேன்.

தமிழரசி, மீண்டும் எதையோ கேட்கப் போனாள். தாமோதரன், பேச்சை மாற்ற நினைத்தான், பொன் மணியோ, வினை தீர்த்தானோ அவனுக்கு இப்போது ஒரு பிரச்சனை இல்லையானாலும், தன் பிரச்சனையை மறைப்பதற்காக, அவர்களைப் பிரச்சனையாக்கினான்.

"வினைதீர்த்தான்-பொன்மணி ஊர்ப்பக்கம் வரவே இல்ல. ஒனக்காவது ஏதாவது தகவல் தெரிஞ்சுதா?"

தாமோதரன் தனக்கு மீண்டும் கிடைத்து விட்ட காதல் பெருமிதத்தில் கடல் மண்ணை அள்ளி அள்ளி தூரத்தே எறிந்த தமிழரசியின் கரங்கள், மல்லாந்து மண்ணோடு நின்றன. அவனை அவனுக்குத் தெரியாமலே பார்த்தாள். அவன் பார்வை தன் மீது பட்டபோது தலையைத் தாழ்த்தினாள். நாணத்தால் கவிழ்ந்த தலை அவமானத்தால் அதிகம் தாழ்ந்தது. எப்படிச் சொல்ல முடியும்? வினைதீர்த்தானிடமிருந்து பொன்மணியைப் பிரிக்க நினைத்து-பின்னர் அதை செயல்படுத்தினால் அது தனது காதலுக்கே சாபமாகி விடும் என்ற காதல் பயத்தாலும், அவர்களைப் பிரிப்பது முறையில்லை என்ற தார் மீகப் பயத்தாலும், அடுத்துக் கெடுப்பது. அநியாயம் என்ற தர்ம பயத்தாலும், தானே முயன்று, சட்ட ரீதியாக அவர்கள் திருமணத்தை முன்நின்று நடத்தி வைத்ததை எப்படிச் சொல்வது? நேற்று கூட பொன்மணி போட்ட கடிதம் வந்ததை எப்படிச் சொல்வது? அப்படிச் சொன்னால் அவர்கள் ஊரில் இருந்து வெளியேறியதற்கும் தனக்கும் சம்பந்தம் என்று ஆகிவிடுமே. காதலி என்று ஆசையோடு பார்க்க வந்தவர் துரோகி என்று விலகக் கூடாதே. அதற்காகச் சொல்லாமல் இருப்பதா? அது துரோகங்களிலேயே மிகப் பெரிய துரோகம். சொல்வேன்! இந்த இனிமையான நேரத்தில் அல்ல, நாளைக்கு. நிதானமாக-பீடிகையாக சுற்றி வளைத்துச் சொல்ல வேண்டும். இப்போது என் தாமுவின் சிந்தனையும் செயலும் எனக்கே... எனக்கே...

தமிழரசியும் எழுந்தான். இருவரும் கடலை நோக்கி தந்தம் குற்றவுணர்வுச் சுமையோடு நடந்தார்கள். விடமாட்டேன் என்பதுபோல் ஒருவர் கரத்தை இன்னொருவர் மவுனமாகப் பற்றியபடி இலக்குத் தெரியாமல் சுற்றிச் சீரணி அரங்கின் அருகே உட்கார்ந்தார்கள். தமிழரசி அவன் விரல்களுக்கு சொடுக்கு விட்டபடியே கேட்டாள்.

"டூட்டிக்கு எப்போ போகணும்?"

"வீட்டுக்கா?"

"டூட்டிக்கு?"

"போகணும் ஒரே வழியாய் ...ஸாரி... ஒரு வழியாய் போகணும்."

"நீங்க டூட்டிக்கு போவீங்களோ...மாட்டீங்களோ, நமக்குத் தெரியாதுப்பா. இன்னும் நாலு நாளைக்கு என்னை விட்டுப் போகப்படாது. போக விடமாட்டேன். வேணுமுன்னால் 'சிக்' லீவு கேட்டு தந்தியடிங்க."

தாமோதரன் முகம் உறைந்தது. அண்ணனும், கல்யாண வீட்டில் இப்படித்தான் சொன்னான், அப்புறம் வேலையை விட்டது தெரிந்ததும் அடித்தான், இவளும், தன் வேலையை காட்டியது தெரிந்ததும், அடிக்கப் போகிறாள். அது நோயடி... இது மரணடி...

தாமோதரன் புலம்பலாய் கேட்டான்.

"ஒரு வேளை... நான் இங்கேயே இருந்து, அதனால் என் வேலை போய்விட்டால் என்ன செய்வே?"

"சந்தோஷப்படுவேன்! என் தாமு ஏழை பாழைகளை இனிமேல் அடிக்க மாட்டார்னு ஆனந்தப்படுவேன். நீங்க சப்-இன்ஸ்பெக்டர்னு காதலிக்கல. அந்தப் பதவிக்குப் போறதுக்கு முன்னாலேயே காதலிச்சவள். சப்-இன்ஸ்பெக்டராய் ஆன பிறகும் தொடர்ந்து காதலிச்சேனே, அதுவே என் அசைக்க முடியாத அன்பை காட்டலியா? ஏன் கன்னா பின்னான்னு உளறுறீங்க?"

"என்னமோ தெரியல... இப்போல்லாம் என்ன பேசுறோமுன்னு எனக்கே தெரிய மாட்டங்குது."

"இந்தா பாருங்க தாமு, எப்படியோ ஒங்க அண்ணாவாலயும், போதாக்குறைக்கு பொன்மணி வினைதீர்த்தானாலயும், நாம் எல்லோருமே கஷ்டப்பட்டுட்டோம். தெரிஞ்சும் தெரியாமலும் நாம் ரெண்டு பேருமே தப்பு செய்திருக்கலாம். போனது போகட்டும். முன்பு, பார்க்கிறதுக்கு டிப்டாப்பாய் இருக்கும் உங்களை இந்தக் கோலத்தில் பார்க்கையில் இப்போகூட எனக்கு அழுகை வருது. நாளைக்கு நீங்க பழைய தாமோதரனாய் வரணும்."

"பழைய தாமோதரனைப் பார்க்கத்தான் போறே."

"குட்... நல்லது."

"குட்டோ... பேடோ... நல்லதோ... கெட்டதோ..."

ஒரு பூக்காரச் சிறுமி தட்டோடு வந்தாள். தமிழரசி, தாமுவை செல்லச் சிணுங்கலில் அதட்டினாள்.

"பூக்காரப் பொண்ணப் பாருங்க."

தாமோதரன் பார்த்தான். கேட்டான்.

"ஏய்...போ...போ... பூ வாங்குற நிலைமையில இல்ல.... சமய சந்தர்ப்பம் தெரியாமல்..."

"அய்யோ... அய்யோ... அவளை நான் விரட்டச் சொல்லல. ஒங்க கையால என் தலையில..."

தமிழரசியால் பேச்சைத் தொடர முடியவில்லை. நாணத்தோடும், பொய்க் கோபத்தோடும் அவனைப் பார்த்தாள். 'ஒன் தலையில தான் ஒரேயடியாய் கை வச்சுட்டேனே...' என்று உள்ளூறப் புலம்பிய தாமோதரன், மனிதச் செடிபோல் ஒதுங்கி நின்ற பூக்காரச் சிறுமியிடம், மூன்று முழம் பூ வாங்கினான். தமிழரசி, நாணத்தால் சிரித்து அவன் கரத்திற்குக் கீழே, தன் தலையைக் குனிந்த போது, தாமோதரன், உள்ளத்துப் புலம்பலில் ஒடுங்கிப் போய், கதம்பப் பூவை, அவள் தலையில் சூடினான்.. அதையே கழுத்தில் விழுந்த தாலியாகப் பாவித்த தமிழரசி, தன்பாட்டிற்குப் பேசிக் கொண்டிருந்தாள்.

"என் மூச்சை எப்படி என்னால கணக்கெடுக்க முடியாதோ, அப்படி ஒங்களை நான் நினைத்ததை கணக்கெடுக்க இயலாது. உண்ணும் போதும், உறங்கும்போதும் ஒங்களைத்தான் நினைச்சேன்னு சொன்னால், அதுக்கு இடைப்பட்ட நேரத்துல நினைக்கலன்னு அர்த்தமாயிடும். வாழ்க்கை தற்காலிகம் என்றாலும் வாழ்கின்ற ஜீவராசிகள் நிரந்தரம் என்று எல்லா மதங்களும் சொல்லுது. இப்படி ஒரு நிரந்தரத்துவம் கண்டு ஏனோ நான் என்னுள்ளே பயந்திருக்கேன், ஆன்மா நிரந்தரம் என்றால், முடிவு இல்லாத எதுவும் போரடிக்கிறது மாதிரி இதுவும் போரடிக்கு மேன்னு பயப்படுறேன். ஆனால் ஒங்களோட நிரந்தரமாய் இருக்க முடியும் என்கிற நினைப்பு வரும்போது, ஆன்மா மட்டுமில்ல... இந்த வாழ்க்கையும் நிரந்தரமாய் இருக்கணுமுன்னு நினைக்கிறேன். ஊர்ல நடந்த சம்பவங்களுக்குப் பிறகு நான் பட்ட பாடு... படுற பாடு... சில சமயம் என் தாமு அயோக்கியனாய் மாறி, அதனாலயே நான் அவரை வெறுக்கணுமுன்னுகூட நினைக்கிறேன். அப்படி ஆனால் கூட, என்னால ஒங்களை மறக்க முடியாது போலத் தோணுது. என்னை எப்போவாவது நினைச்சீங்களா? நினைக்காட்டாலும், நினைச்சேன்னாவது சொல்லுங்க, சினிமாவுல நடிப்புன்னு தெரிஞ்சாலும் நாம் லயிப்போமே அது மாதிரி, நீங்க பொய் பேசுனாக்கூட சுகம் கிடைக்கும். ஏன்னா, இனிப்புச் சுவை திகட்டும்; இது மாதிரி இனிய சுவை எப்பவுமே திகட்டாது. சொல்லுங்க என்னை எப்போ நாகர்கோவிலுக்குக் கூட்டிட்டுப் போவீங்க? நான் வேலையை விட்டுட்டு, இப்பகூட ஒங்களோட வரத் தயார். ஒங்களை விடமாட்டேன். என் தாமுவை இனி மேல் விடவே மாட்டேன். பேசுங்கத்தான்..."

தாமோதரனால், தாங்கிக் கொள்ள முடியவில்லை, அவள் அன்பு ஜோதியில் தான் கருகுவது போலிருந்தது. அப்புறம் புடம்போட்ட பொன்னாய் மாறியது போலிருந்தது. அத்தனை கருமை உணர்வுகளும் எரிந்து, அவனும், அவனுள் அவள் வயப்பட்ட காதலும் மட்டும் தங்கியிருப்பது போலிருந்தது. உயிர், காதலாகி தனித் தன்மையை இழந்தது மாதிரியான பிரமை; அவன், உணர்ச்சிப் பிழம்பாகி, அவளைக் கட்டிப் பிடித்துக் கொண்டான். இதை எதிர்பாராததால், அவனைப் பொய்க் கோபமாய், நாணத்தில் தேய்ந்த வார்த்தைகளால் பேசி, சிறிது தன்னை நகர்த்தப் போனவள் அவன் பக்கம் நகர்ந்து, அவனைக் கட்டிப் பிடித்து, பதறிப் பேசினாள்.

"எத்தான், என்னத்தான் இது, ஏன் அழுகிறீங்க? அட எதுக்குத் தான் அழுகிறீங்க?"

தாமோதரன், மீண்டும் தன் வசமானான். அவனையே பார்த்திருந்த தமிழரசி, அவன் கண்களைத் துடைத்தபடியே, தன் கண்களைப் பொழிய விட்டாள். தாமு, அவள் கண்களைத் துடைத்து விட்டான். நடந்தவைகளுக்காக, தாமு வருத்தப்படுகிறான் என்பதைப் புரிந்து கொண்ட தமிழரசி, பழைய ரணத்தைக் கிளற விரும்பவில்லை. ஒருவரை ஒருவர் அணைத்தபடி, இருவரும் காலத்தை மறந்து, காலங்காலமாய், அந்த கடற்கரையிலேயே காதல் நினைவுச் சின்னங்களாய் நிரந்தரமாய் இருக்கப் போவது போல் இருந்தார்கள். கடற்கரைக் காதலர்கள் போய்விட்டார்கள். சுண்டல் பையன்கள் போய் விட்டார்கள். கிராக்கிகளும், கிராக்கர்களும் போய் விட்டார்கள். கடற்கரை ரவுடிகள் கூட, காலிழைத்து நின்று போனார்கள். தமிழரசி சுதாரித்தாள்.

"போகலாமா?"

"இதுக்குள்ளேயா?"

"நாளை வரத்தானே போகுது!"

"அதனால தான் போக மனம் வர்ல"

தமிழரசி எழுந்து, இன்னும் எழாமல் இருந்த தாமோதரனைத் தூக்கினாள். "எப்போ... என்ன கனம்..." என்று சொன்னபடியே அவனை நிறுத்த முயற்சித்தாள். அவன் விருப்பமில்லாமல் எழ, இருவரும் வேகமில்லாமல் எழுந்தார்கள். கடற்கரைச் சாலையில் வந்த ஆட்டோவில் ஏறி, அண்ணாசாலையில், நவீன ஓட்டல் ஒன்றிற்குச் சென்றார்கள். "என்ன சாப்புடுறே?" என்று தாமு கேட்டபோது, "மனசு நிறைவாய் இருக்கையில் சாப்பிடத் தோணாதோ" என்றாள் தமிழரசி.

சர்வர் 'போங்கள்' என்று கதவைத் தட்டித்தட்டி, தந்தி மொழியில் சொன்ன பிறகு, இருவரும் ஒரு டாக்சியில் ஏறினார்கள், விடுதியில் டாக்சி வந்ததும் தமிழரசி வெறுப்போடு இறங்கினாள். உள்ளே இருந்தவனைப் பார்த்து "உங்களோட லாட்ஜ் அட்ரஸை சொல்லலியே?" என்றாள்.

"எழுதிக்கிறீயா?"

"வாயால சொல்லுங்க. அதுகூட மனசில நிற்காட்டால் அப்புறம் இந்த உயிர் உடம்புல நிற்காதுன்னு அர்த்தம்."

"சீமா லாட்ஜ் ... ரூம் நம்பர் 15; தெற்கு கிராஸ் தெரு... நாலாவது அவென்யூ... அண்ணா நகர்."

"நாளைக்குக் காலையிலேயே சீக்கிரமாய் வந்துடுங்க. இந்த ராத்திரிப் பொழுதை எப்படித்தான் தாங்கிக்கப் போறேனோ? என்ன பேசாமல்... சீ... ரொம்ப மோசம்..."

"கவலப்படாதே. நாளைக்குச் சீக்கிரமாய் முடிஞ்சிடும்."

"என்ன உளறுறீங்க?"

"நாளைப் பொழுது சீக்கிரமாய் வந்துடுமுன்னு சொல்ல வந்தேன். விடிஞ்சிடும் என்கிறதுக்கும், முடிஞ்சிடும் என்கிறதுக்கும் வித்யாசமில்ல."

தமிழரசி, ஏதோ பேசப்போக, முதலில் இருமிப் பார்த்த டிரைவரும், விடுதி வாட்ச்மேனும் எரிச்சல் பட்டதுபோல், முன்னவர் வண்டியை ஸ்டார்ட் செய்தார். பின்னவர் கம்பிக் கேட்டை, 'கிரீச் கிரீச்' என்று ஸ்டார்ட் செய்தார்.

பிரிய மனமில்லாமல் பிரிந்து அறைக்குள் வந்த தமிழரசியை, பத்மா கோபமாகப் பார்த்தாள். "என்னடி இது, ஒரு நாளும் இல்லாத திருநாள்?" என்று அவள் கேள்வி கேட்கப் போன போது, தமிழரசி, மேஜையில் கிடந்த கடித உறையைப் பிரித்தாள். நிதானமாக முதல் வரியைப் படித்தவள், கடிதத்தின் உடல் பகுதிக்கு வந்ததும் துடித்தாள். பின்னர் முகத்தைக் கடிதத்தின் முன்பகுதியிலும், பின்பகுதியிலும் நகர்த்திக் கொண்டாள். இறுதியில் நிலையிழந்து, நிர்க்கதியானவள் போல் பத்மாவின் தோளில் சாய்ந்தாள். சாய்ந்தபடியே புலம்பினாள்; புரண்டாள்.

"சித்தப்பாவை சாகடிச்சிட்டாங்களாமே? கலாவதியை பைத்தியமாக்கிட்டாங்களாமே? இந்த தாமோதரன் இவ்வளவு பெரிய அயோக்கியனா? மோசம் போயிட்டேனடி பத்மா!"