நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 26

26


நேர்மையானவர் என்று ஒருவரை நாம் நம்பும் போது அவர் சாதாரணமாகப் பேசும் பேச்சுக்கூட தர்மத்தின் உரைபோல தோன்றும். அதே போல், அயோக்கியன் என்று நாம் நம்பும் ஒருவர், தரும நெறிகளைப் பற்றிப் பேசினால் நமக்கு அந்த தர்மத்தின் மீதே அதர்மமான கோபம் வரும். நேர்மையானவர்களே, நியாயம் தேடுபவர்களை, சூதுவாதில்லாத சுத்தர்களை ஆட்டுவிக்கும் உளவியல் விதி இது.

இதனால் ஆட்கொள்ளப்பட்ட தமிழரசி, கடற்கரையில் தாமோதரன் அழுததை, கை தேர்ந்த அயோக்கியனின் கண் நடிப்பாகக் கருதி, அவன் அடிக்கடி கடைப்பிடிக்கும் மவுனத்தை வஞ்சகமாகக் கருதி, நேற்று அவன் தன்னிடம் வந்ததையே வலை விரிப்பாகக் கருதி, புழுவைத் தேடுவது. போல் அவனைத் தேடிப் பார்த்தாள். கிடைக்கவில்லை.

இதற்குள் விடுதி வாட்ச்மேன் வந்து, அவளிடம் நான்காக மடிக்கப்பட்ட காகிதம் ஒன்றை நீட்டியபடி “இதை அந்த ஆளு ஒங்ககிட்டே கொடுக்கச் சொல்லிட்டு ஓடிட்டாருமா” என்றான்.

தமிழரசி, காகித மடிப்புக்களைக் கலைத்தாள். அதை வரி வரியாய், வார்த்தை வார்த்தையாய் ஒரேயடியாய்: பார்த்து விட்டு, சோபாவில் சாய்ந்தாள். நடுங்கிய கரங்களில் கசங்கிய காகித வரிகள் கண்வழியாய் நெஞ்சுக்குள் போய் நிலையிழந்து தவித்தன.

“தகுதியில்லாத இந்தப் பாவிக்குத் தற்காலிகமாய் கிடைத்த தமிழரசியே!”

உன் முன்னால் நிற்கக்கூட தகுதியில்லாமல் ஓடுகிறேன். உன்னைப் பற்றிய இனிய எண்ணங்களையும், என்னைப் பற்றிய கொடிய நினைவுகளையும் சுமந்தபடியே ஓடுகிறேன். நீ சொன்னதுபோல் நான் மிருகம். மிருகம், மனிதர்கள் மத்தியில் நடமாடலாமா? கூடாது. ஆகையால், கூனிக் குறுகி மிருகமாகவே என்னைப் பாவித்து. மீள்வது தெரியாமல், மீட்பவர் கிடைக்காமல் ஓடுகிறேன்.

நீ காட்டிய கடிதத்தில் குறிப்பிட்டது போல் மாடக் கண்ணு மாமாவை என் அண்ணன் என்று சொல்லப்படுபவனே சாகடித்தான். கலாவதிக்கு சூடு போட்டான். இப்படி நடக்கும் என்றாே, நடத்திக் காட்டுவான் என்றாே நான் நினைக்கவில்லை. என்றாலும், அவன் நடத்திய, கொடுமைகளே மூடி மறைத்த கொடியவன் நான். என் தமையனை போலீசில் ஒப்படைக்க நினைத்தபோது, கடமை முன்னிழுக்க, பாசம் பின்னிழுக்க, நான் பாசத்தை விழுங்காமல், பாசத்தால் விழுங்கப்பட்டேன்.

ஆனல், அதற்குப் பிறகு நான் பட்ட வேதனை – பட்ட என்பது தவறு. அது படும் வேதனை –படப்போகிற வேதனை – ஆயுட்கால சித்ரவதை – உடல் வாதையைவிட கொடிய மனவாதனே – குற்றச்சுமை தாங்கமாட்டாது, சப்-இன்ஸ்பெக்டர் பதவியை ராஜினமா செய்தேன். ஊருக்கு ஓடினேன். கல்யாண வீட்டில், விஷயத்தைக் கேள்விப்பட்டதும், அங்கேயே அண்ணன் என்னை அடித்தான். அவன் மனைவி மானபங்கமாய் பேசினாள். அப்பா வெளியேறச் சொன்னார். வழிகாட்ட வேண்டிய தந்தையே, வீட்டுக்கு வெளியே வழிகாட்டினார். ஒருவரும், தட்டிக் கேட்கவில்லை.

வெளியேறிய நான், நெல்லைக்குப் போய் பெரிய போலீஸ் அதிகாரியிடம் நடந்ததைச் சொல்லி, சரணடையத்தான் நினைத்தேன். பழையபடியும் பாசம் என்னைத் தாளிட்டது. ஒன் அண்ணன், ஒனக்கு கல்யாணம் பற்றி கடிதம் எழுதவில்லையானலும், ஒனக்கு ஒன் அண்ணனை வெறுக்க முடியுதா? அதே நிலைதான் என் நிலை.

நடந்ததையெல்லாம், உன்னிடம் சொல்லிட்டு, எங்கோ தலைமறைவாகப் போகத்தான் வந்தேன். நேற்று, அந்த இனிமையை கெடுக்க மனமில்லாமல், இன்று சொல்ல நினைத்தேன். அதற்குள், எவனே ஒரு நியாயவான் முந்திக் கொண்டான். குடும்பத்தின் கொடுமைகளுக்கு உடன்பட்டு, ஊருக்குப் பகையாகி, நீ கொண்ட காதலுக்கும் துரோகியாகி, இனந் தெரியா திசைக்குள் போகிறேன். நீ இதுவரை, நல்லதுக்காக எப்படி அல்லதைச் சாடினாயோ அப்படியே இறுதிவரை சாட வேண்டும். நான் எங்கிருந்தாலும், நீதான் என்:நினைவு. அந்தத் தகுதியில் நான் செய்த பாவங்களுக்குப் பரிகாரம் தேடுவேன். இதை ஒப்புதல் வாக்கு மூலமாகவும், நீ போலீசில் பயன்படுத்திக் கொள்ளலாம்.

எங்கேயாவது, வடநாட்டில் ஒரு அனாதைப் பிணம் கிடந்ததாகச் செய்தி வந்தால், அது ஒரு வேளை நானாக இருக்கலாம். அப்போது நீ அழக்கூட வேண்டாம். அயோக்கியனாய்ப் போன ஒருவன் மீண்டும் யோக்கியனாவதற்கு, அவனுக்குத் தெரிந்த ஒரே வழி இதுதான் என்று நீ, இரு சொட்டுக் கண்ணீர் விட்டால், அதுவே எனக்கு பால் வார்ப்பு; அதுவே ஈமக்கடன்.

உன் காதல் பூஜையில் வைக்க முடியாத தாழம்பூ நான். தாழம்பூ பொய்ச் சாட்சி சொன்னதாய் புராணம் சொல்கிறது. ஆனல் நானே, சாட்சிகளையே பொய்யாக்கி விட்டேன். என்.. தங்க நிலாவே! என்னை மன்னிச் சுடும்மா. தாயே, என்னை மன்னிச்சுடும்மா.

போகிறேன். உன்னே... மன்னிக்கவும்... உங்களை ஒருமையில் அழைக்கும் யோக்கியதை எனக்கேது?

இருந்த அன்பை எங்கேயோ விட்ட, தாமு.”

தமிழரசி, தாமுவின் கடிதத்தையும் அத்துடன் அவன் இணைத்திருந்த மொட்டைக் கடிதத்தையும், கைக் கொன்றாய் வைத்தபடி சுவரில் தலை சாய்ந்தாள். இதற்குள் பத்மாவும் குளித்து முடித்துவிட்டு, கோதி முடிந்த முடியோடு வந்தாள். தமிழரசியின் கோலத்தைப் பார்த்து, அவள் நிலைமையை யூகித்துக் கொண்டாள்.

அவள் கையில் இருந்த கடிதத்தை, பலவந்தமாகப் பிடுங்கிப் படித்தாள். படித்து முடித்துவிட்டு, தமிழரசியின் அருகே அமர்ந்து அவள் தோளில் தட்டினைள். “பாவம், இந்த தாமோதரனும் என்னசெய்வார்? அவரோட கதையும் ஒன் சித்தப்பா, தங்கை கதை மாதிரிதான் முடியும்போலத் தோணுது. பூவர் மேன். தற்கொலை பண்ணிக்கப் படாது,” என்று சொன்னபடியே தமிழரசிக்கு ஆறுதல் அளிக்க வழிதெரியாது விழியாட்டினாள்.

தமிழரசி நிமிர்ந்து உட்கார்ந்தாள். தாமு, ஒருவேளை தற்கொலை பண்ணிக்குவாரோ? இனிமேல் அவரைப் பார்க்க முடியாதோ? என்னாலயே இந்த வினைதீர்த்தான் - பொன்மணி திருமணத்தைச் சொல்ல முடியல. என்னால கூட சித்தப்பா உயிருக்கு விலை வாங்கிய தந்தை மீது நடவடிக்கை எடுக்கணும் என்று தோணல. அப்படித்தானே அவருக்கும் இருந்திருக்கும். நானே அவரை துரத்திட்டேனே. என் மன்னவனை நானே ஆண்டியாய் அனுப்பிட்டேனே. தாமு... தாமு... எங்கே போனீங்க தாமு?

அருகே வந்த வாட்ச்மேனிடம், அவள் குலைநடுங்கக் கேட்டாள் :

“அவரு எந்தப் பக்கமாய் போனாரு?”

“நான் சரியாய் கவனிக்கலம்மா...”

“அவரு போய் எவ்வளவு நேரம் இருக்கும்?”

“பத்து நிமிஷத்திற்கு மேலவே இருக்கும்.”

தமிழரசி எழுந்தாள். பத்மாவும் எழுந்து, “எங்கே போறே” என்றாள். தமிழரசியால் பேச முடியவில்லை. பேதலித்து நின்றாள். பிறகு, “தாமு இந்தப்பக்கம் எங்கேயாவது தென்படுறாரான்னு பார்த்துட்டு வாறேன்” என்று சொல்லிவிட்டு, பத்மாவின் பதிலுக்குக் காத்திராமல், விடுதியின் வாசலுக்கு வந்தாள். அந்தச் சமயம் பார்த்து வந்த ஆட்டோ ரிக்‌ஷாவில் ஏறிக் கொண்டாள். மேற்குப் பக்கமாக வண்டியை விடச் சொன்னாள். ஒரு கிலோ மீட்டர் தூரம்வரைக்கும், கண்களை அங்குமிங்குமாகச் சுழற்றினாள், பிற்கு டிரைவரிடம், ஆட்டோவை கிழக்குப் பக்கமாக விடச் சொன்னாள். டிரைவர், அவளை ஒரு மாதிரி பார்த்தபோது, தமிழரசி கையெடுத்துக் கும்பிட்டு, கண்ணீரும், கம்பலையுமாய் மன்றாடினாள்.

“டிரைவர் அண்ணா! என்னைப் பைத்தியமுன்னு நினைக்காதீங்க. ஒருத்தரைப் பறிகொடுத்துட்டுத் தேடுறேன். இப்போ அவரைக் கண்டுபிடிக்க முடியாட்டால், அப்புறம் அவரை எப்பவுமே கண்டுபிடிக்க முடியாது. இந்த ஒவ்வொரு நிமிஷமும், எனக்கு விலமதிப்பில்லாதது; எவ்வளவு பணம் வேணுமுன்னாலும் தாரேன்... நான் சொல்ற இடத்துக்கெல்லாம் ஓட்டணும். கூடப்பிறந்த அண்ணன் மாதிரி ஒங்ககிட்டே கேட்கிறேன்... தயவு செய்து...”

அவளையே விநோதமாகப் பார்த்த டிரைவருக்கு, அவளின் சோகம் தொத்திக் கொண்டது. “எந்தப் பக்கம் போகணும்மா? ஸீட்ல நல்லா உட்காருங்க” என்றார். ஆட்டோரிக்‌ஷா வந்த வழியாய் வந்து, கிழக்குப் பக்கமாய் ஒரு கிலோ மீட்டர் தூரம் போனது. மீண்டும் திருப்பி ஓடியது. தெற்குப் பக்கம் அவன் தென்படவில்லை. வடக்குப் பக்கம் முட்டிச்சந்து. “அண்ணாநகர்” என்றாள். நகர்கிறது. வழியில் ஒரு பெட்ரோல்பங்கில் நின்றது. காலையிலேயே பெட்ரோல் போட்டு ரெடியாய் இருக்கக் கூடாது? நீங்க மட்டுமில்ல, எல்லா டிரைவர் களுக்குமே இப்படித்தான். அவசரமாய் போகும்போதுதான் பெட்ரோல் இருக்காது” என்றாள். டிரைவர், அதை காதில் வாங்கிக் கொள்ளவில்லை.

வண்டி அண்ணாநகருக்கு வந்து அந்த லாட்ஜை கண்டு பிடிக்க அரைமணி நேரம் ஆகியது. விடுதிக்குள் சென்று விசாரித்தாள். தாமோதரன், பத்துப் பதினைந்து நிமிடத்திற்கு முன்புதான் அறையைக் காலிசெய்துவிட்டு ஒரு ஆட்டோவில் ஓடி விட்டானாம். அவளை ஒரு மாதிரியாகப் பார்த்தவர்களைப் பார்க்காமலே அவள் ஆட்டோவிற்குத் திரும்பினாள். “சென்ட்ரல் ஸ்டேஷன்” என்றாள்.

தமிழரசி, ரயில் நிலையத்திற்குள் முட்டிமோதி ஓடினாள். டிக்கட் கவுண்டர்களைப் பார்த்தாள். தாமுவின் சாயல் கொண்ட ஒரு சிலரைப் பார்த்து சந்தோஷமாய் முன்னேறி சலிப்போடு பின்னேறினாள். ரயில்வே பிளாட்பாரங்களில் டில்லி ரயிலை, பம்பாய் மெயிலை, கல்கத்தா வண்டியை பெட்டி பெட்டியாக சல்லடை போட்டாள். ஒவ்வொரு முகத்தையும் உற்று உற்றுப் பார்த்தாள். ஓடிப் பார்த்தாள். தேடிப் பார்த்தாள். இறுதியில் ஓய்ந்து போனாள்.

ஆட்டோவிடம் மீண்டும் வந்தவள், எங்கேபோவது என்று தெரியாமல் விழித்தாள். டிரைவர் “இம்மா பெரிய சிட்டில எப்படிம்மா கண்டுபிடிக்க முடியும்? இனிமேல் அவராய் வந்தால்தான் உண்டு” என்று சொல்லி விட்டு, அவளையே பரிதாபமாய் பார்த்தான். அவளோ எதுவும் சொல்லாமல், இருக்கையில் விழுந்தாள். ஆட்டோ அவள் மனம்போல் அலறியது. உடல் போல் ஆடியது.

அவள் விடுதிக்குத் திரும்பும்போது நண்பகல்; டிரைவரை அங்கேயே இருக்கும்படி சைகை செய்துவிட்டு, அறைக்குள் வந்தாள். அவளுக்காகவே கல்லூரிக்கு விடுப்புப் போட்டுவிட்டுக் காத்திருந்த பத்மா, பதறி எழுந்தாள்.

“எங்கேடி போனே? சொல்லியிருந்தால் நானும் வந்திருப்பேனே.”

“அப்புறமாய் சொல்றேன். ஆட்டோ வெளில நிக்குது. என் பெட்டில பணம் இருக்கு. ஆட்டோவை அனுப்பிட்டு வா. இந்த இடத்தை விட்டு என்னல நகர முடியாது.”

பத்மா பணத்தோடு போனாள். தமிழரசி, கட்டிலில் சாய்ந்தாள். தாமுவின் கடிதத்தை மேலும் கீழுமாய் பார்த்தாள். முகத்தோடு சேர்த்து அணைத்தாள். பய பக்தியோடு பார்த்தாள். பதற்றத்தோடு மடித்தாள்.

பத்மா திரும்பி வந்ததும், தமிழரசி, குலுங்கிக் குலுங்கி அழுதாள்.

“விரட்டிட்டேனே...என் தாமுவை நானே விரட்டிட்டேனே...எவ்வளவு கஷ்டத்தோடு வந்தாரோ? எவ்வளவு ஆசையோடு வந்தாரோ? ஆறுதலுக்காக வந்த மனிதரை அவமானமாய் பேசி அனுப்பிட்டேனே! தாமு... தாமு .. என்னை மன்னிச்சிடுங்க தாமு. நீங்க பதவியைத்தான் பறி கொடுத்தீங்க, நான்... ஒங்களையே பறிகொடுத்துட்டேனே. பாவி நான்! சண்டாளி நான்... நான்... இனிமேல் உலகத்துல இருக்கப்படாது. நீங்க இந்நேரம் எங்கே இருக்கீங்களோ? எப்டி தவிக்கீங்களோ? என்னைப் பற்றி என்ன நினைக்கீங்களோ? தாமு! என் தாமு...”

தமிழரசி, என்னவெல்லாமோ பேசிக் கொண்டிருந்தாள். சிறிது நேரம் அவளை அவள் போக்கில் விட்ட பத்மா, இறுதியில், அவளுக்கு அதிர்ச்சி வைத்தியம் செய்யத் தீர்மானித்து தமிழரசியின் முன்னால் போய் நின்று அவளைச் சாடினாள்.

“என்னடி இது? உலகத்துல நீ ஒருத்திதான் கஷ்டப்படுறது மாதிரி அங்கலாய்க்கிறே. ஒன்னை என்னமோன்னு நினைச்சேன், கடைசில நீ இவ்வளவுதானா? நேற்று இலங்கை இனப்படுகொலையை கண்டிச்சுப் பேச ஒனக்கு என்னடி தகுதியிருக்கு? கொழும்புல தீயில எரிந்த தமிழ்க் குழந்தைகளை நினைச்சுப் பாருடி கர்ப்பிணிப் பெண்களோட வயிறுகளைக் கிழித்த பேடித்தனக் கொடுமைகளைக் கற்பனை செய்து பார். ‘இங்கே தமிழர் மாமிசம் கிடைக்கும்’ என்று அங்கே போர்டு போட்ட அரக்கத்தனத்தை எண்ணிப் பாருடி.

அவ்வளவு ஏன்? நம் காலேஜில படிக்கிற அந்த இலங்கை மாணவி என்னமா புலம்பினாள்? அவளோட குடும்பத்தின் நிலைமையைக் கண்டு பிடிச்சுக் கொடுக்கிறதாய் வாக்குக் கொடுத்தே. சாகும் வரை உண்ணாவிரதம் இருக்கப் போவதாய் அலட்டிக்கிட்டே. சொந்தத் துன்பத்தைத் தாங்கிக்க முடியாதவங்களுக்கு, பிறத்தியார் துன்பத்தைத் தீர்க்கிற யோக்கியதை கிடையாது. இவங்களோட துன்பங்களைவிட ஒன் துன்பம் பெரிசாடி? இப்போ கலாவதி எந்தத் தெருவுல பைத்தியமாய் சுத்துறாளோ? அவளைவிட இந்த தாமு ஒனக்குப் பெரிசாப் போயிட்டான் என்ன? ஊருக்கு உபதேசம் ஒனக்கில்லை என்கிறது உண்மைதான்.”

தமிழரசி, எழுந்து உட்கார்ந்தாள். பத்மாவின் வார்த்தைகள் ஒவ்வொன்றிற்கும் ஏற்றபடி உடம்பை அசைத்தாள். பத்மாவை, கூச்சத்தோடு பார்த்தாள். அவள் இப்போது குரலை இறக்கி, கோபத்தைக் குறைத்து, அனுதாபத்தைக் கூட்டிப் பேசினாள்

“கஸ்தூரிபாய் இறந்ததுனால, காந்தி போராட்டத்தை நிறுத்தல. கமலாநேரு இறந்ததாலே, நேரு செயல்படாமல் இருக்கல. வறுமை வாட்டியபோதும் கார்ல் மார்க்ஸ் ஏழை மக்களின் ஆயுதத்தை கூர்மைப்படுத்தாமல் இருக்கல. இந்த சமூக அமைப்புல, நியாயம் கேட்கத் துவங்குறது புலிமேல் ஏறி சவாரி செய்யுறது மாதிரி. பாதில இறங்கினால், பாதிக் கிணறு தாண்டின கதை தான்.

இப்போ ஒருத்தனுக்காக ஓய்ஞ்சு போறது சுயநலம். அதையும் மீறி செயல்படுவதுதான் மனிதாபிமானம். ஒன்னோட துயரம் எனக்குத் தெரியாமல் இல்ல. அதே சமயம் தாமுவோட வாழ முடியாட்டாலும், நாம் மனித குலத்தோடத்தான் வாழ்றோமுன்னு நினைச்சுப்பாரு. பெரிசாய் முடங்கி, சிறிசாய் போயிடப்படாது. கண் முன்னாலயே சிங்களவர் கையில் கணவனோட தலையைப் பார்த்த இலங்கை தமிழ்த் தாய் ஒருத்தியின் நிலைமையை விடவா ஒன் நிலைமை துயரமானது?

ஒனக்கு எவ்வளவோ வேலை காத்திருக்கது தெரியுமா. ஊருக்குப் போய் கலாவதிக்கு ஒரு ஏற்பாடு செய்யணும். நம்மோட இலங்கை மாணவிக்கு ஒரு வழி செய்யணும். ஒருத்தரோட வாழ்க்கையில் துயரங்கள், அரைப்புள்ளிகளாய் இருக்கணும். முற்றுப்புள்ளியாய் ஆயிடப்படாது. தாமோதரனோ, இன்னும் மூளை குழம்பாத ஆண் மகன். ஆனால் கலாவதி? இதுக்கு மேலேயும் நீ புலம்பிக்கொண்டிருந்தால், கலாவதியையும், அவளை மாதிரி அபலைகளையும் நீ இழிவு செய்ததாய் ஆகிடும். அப்புறம் ஒன் இஷ்டம்.”

பத்மா, தமிழரசியைப் பார்க்காமல், பேச்சில் லயித்தாள். அவளே இப்போது தன்னுள் ஒளிந்து கிடந்த சக்தியின் ஒளிப் பிரணாயாமத்தை அறிந்தவள் போல் வீரியமானாள்.

தமிழரசியின் வெளுத்த கண்கள் சிவக்கத் துவங்கின. உறைந்த நெஞ்சம் கொதிக்கப்போனது. கண்களில் நிறைந்த நீராலேயே முகத்தைக் கழுவிக் கொண்டாள். அதை முந்தானையாலும் துடைத்துக் கொண்டாள். பதற்றமற்ற குரலில் - பற்றறுத்த தோரணையில் முகம் இறுக, இடுப்புச் சேலையை இறுக்கிக் கொண்டே பதிலளித்தாள்.

“தப்பு என்மேலதான் பத்மா! மனிதர்கள், குழந்தைத் தனமாய் இருக்கலாம். ஆனால் சிறு பிள்ளைத்தனமாய் இருக்கப்படாது. நாளனோ, இரண்டாவதில் சிக்கிய-ரெண்டாந்தரப் பெண்ணாய் மாறிட்டேன். நல்ல வேளையாய் நீ என்னை மீட்டிட்டே. இனிமேல் நான் ஒரேயடியாய் செத்தாலும் சாவேனே தவிர, செத்துச் செத்துப் பிழைக்க மாட்டேன். குட்டையை கடலாக நினைத்து மூழ்கிய நான், இனிமேல் கடலையே குளம்போல் கலக்கப் போறேன். அந்த சக்தியை ஊட்டிய ஒனக்கு நன்றி. புறப்படுடி, ஒரு இடத்துக்குப் போகலாம்.”