நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 25

25

த்மா துடிதுடித்தாள். என்னவெல்லாமோ சொல்லிவிட்டு, இறுதியில் தன் தோளில் பேச்சு மூச்சு இல்வாதவள் போல் கிடந்த தமிழரசியை "என்னடி... என்னடி" என்று சொல்லியபடியே அவளைக் கட்டிலில் கிடத்தினாள். படபடப்பாகி தமிழரசியின் மூக்கில் கை வைத்தாள். பிறகு கண்ணாடிக் குவளையில் இருந்து கையில் நீர் மொண்டு அவள் முகத்தில் அடித்தாள். வெளியே வார்டனிடம் சொல்லி டாக்டரை வரவழைக்கலாம் என்று வெளியேறப் போனாள்.

அதற்குள் தமிழரசி, உடம்பை அசைவற்றுப் போட்டபடி முகத்தை மட்டும் ஆட்டினாள். 'சித்தப்பா...கலா... சித்தப்பா... அடேய் முத்துலிங்கம், அடேய் தாமு...' என்று முணங்கி முணங்கி அரற்றினாள். பத்மா கட்டிலில் உட்கார்ந்து தமிழரசியின் தலையை தன் மடியில் போட்டபடி "என்ளடி எழுதியிருக்கு? 'இடுக்கண் வந்தால் நகுக' என்று வள்ளுவர் சொன்னதை எனக்குச் சொல்லிட்டு. இப்படிப் புலம்பலாமாடி?" என்றாள்.

தமிழரசி அவள் மடியில் தலைபுரட்டி, கண்ணில் நீர் புரட்டிக் கத்தினாள்.

"வள்ளுவர்... பெண்ணாகவோ, இல்ல ஏழையாயோ,.. இருந்தால் இப்படி எழுதியிருக்க மாட்டாரு. இந்தாடி லட்டரு. கடவுளே! மேசமானவங்களால மோசமாய் போயிட்டோமே. பத்மா, இந்த லட்டரைப் படிச்சுக் காட்டுடி. என் உயிர் போறதுக்கு முன்னால ஒரு தடவை படிச்சுக் காட்டுடி. படிடி. ஒருவேளை நான் தான் தப்பாய் புரிஞ்சுட்டேனோ என்னவோ, படிப்பா!"

பத்மா, தமிழரசியின் கையில் துவண்ட கடிதத்தை வாங்கினாள். கோணல் கோணலான எழுத்துக்கள். தமிழரசி, அவள் விலாவை இடித்தாள். பத்மா படிக்கத் துவங்கினாள்.

"தமிழரசிக்கு,

நீ, நல்லவளோ... கெட்டவளோ... ஒனக்கு ஒன்றை எழுத வேண்டியது என்னோட கடமை! இவ்வளவு நாளும், யோசித்து யோசித்து இன்னைக்குத்தான் எழுதுறேன். 'தான் ஆடாட்டாலும் சதை ஆடும்' என்பார்கள். நீ ஊருக்கு வராததில் இருந்து உனக்கு நம்பவூர் அசிங்கங்கள் தெரியாதுன்னு நினைக்கிறேன். ஒருவேளை தெரிஞ்சதால தான் வராமல் இருக்கியோ என்னமோ?"

"நீ மெட்ராஸ் போன ராத்திரியிலேயே, முத்துலிங்கம் ஒன்னோட சித்தப்பா பைத்தியாரத் தர்மரையும், அவரோட மகளையும் ஆட்களை வச்சு அவன் தோட்டத்துக்கு ராத்திரியோட ராத்திரியாய் தூக்கிட்டுப் போனான்.

மாடக்கண்ணுவை, கையைக் காலைக் கட்டி, கிணத்துக்குள்ள தள்ளி கொன்னுட்டான். ஒரு பாவமும் அறியாத கலாவதியின் உடம்புல, கண்ட கண்ட இடத்துலயும், காணக் கூடாத இடங்கள்லயும் சூடுபோட்டு அவளைப் பைத்திய மாக்கிட்டான்."

"போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போன விவகாரத்தை, ஒன்னோட 'இவன்' சப்-இன்ஸ்பெக்டர் தாமோதரன் சரிக்கட்டிட்டான். நாகர்கோவிலுல ஒரு எஸ்டேட் முதலாளியோட ஊருக்கு வந்து, ஊரையே அநியாயத்துக்கு சமாதியாக்கிட்டான். போலீசை வச்சு ஊரை மிரட்ட வச்சான்."

"ஒங்க அய்யா ஏழாயிரம் ரூபாய் கலாவதியோட பிழைப்புக்குன்னு வாங்கிட்டு, பக்கத்து வயல வாங்கிட்டார். கலாவதி, குடிக்கக் கஞ்சி இல்லாமல், பைத்தியமாய் (பைத்தியம் மாதிரியில்ல... பைத்தியமாயே ) திரியுறாள். அதே சமயம், இந்த அக்ரமங்களைச் செய்த முத்துலிங்கமும், அவனோட கையாட்கள் பேச்சிமுத்து, எல்லாரும், சாராயமும் கோழியுமாய், சிரிப்பும் கும்மாளமுமாய் ஊர்ல கூத்தடிக்காங்க. ஒருவேளை நீ ஏதாவது வம்பு பண்ணுவியோன்னு பயப்படுறாங்க. அதனால தான் ஒங்க அண்ணனுக்கு விஜயாவை அவசர அவசரமாய் கொடுக்குறாங்க. ஆனாலும் ஒன்கிட்ட பயம்."

"தாமோதரனை வச்சு ஒன்னை சரிக்கட்டப்போறதாய்... அதாவது அவன் மெட்ராஸ் வந்து.... உள்ளத்தால மயக்குன ஒன்னை, உடம்பாலயும் மயக்கப் போறதாய் ஒரு பேச்சு அடிபடுது. ஒன்னோட கல்யாணம் ஒன் சொந்த விவகாரம். ஆனாலும் ஒன்று சொல்லியாகணும். அதுல, மாடக் கண்ணோட இழவு விவகாரத்தை மறக்கப் போறியா, இல்ல மறுபடியும் எடுக்கப் போறியா? நீ எப்படிப்பட்டவள்னு இனிமேல்தான் எனக்குத் தெரியணும். என்ன செய்வியோ, ஏது செய்வியோ, கலாவதிக்கு ஒரு வழி செய்துட்டாவது போ, நீ சுய நலக்காரியா, பொது நலக்காரியா தெரியணும்!

இப்படிக்கு
உண்மை விளம்பி."

தமிழரசி, ஓவென்று கூச்சலிட்டாள்.

ஆமாம். நான் சுயநலக்காரிதான். சித்தப்பாவையும், கலாவதியையும் போலீஸ் அடிச்ச பிறகும், அவங்களை நிர்க்கதியாய் விட்ட பாவி நான், தாமோதரன் மேல இருந்த காதலால , அவருக்கு ஏதாவது தீமை வரப்படாதுன்னு, ஊர்ல நடந்ததை சென்னையில பெரிய போலீஸ் அதிகாரிங்ககிட்ட புகார் செய்யாத பாவி நான். அல்லும் பகலும் அற்பத்தனமான தாமோதரன் மேல் இருந்த மயக்கத்தால, ஊர்ல நடந்ததை கேட்கக்கூட நேரமில்லாமல்போன வில்லி நான். அய்யோ ... சித்தப்பா .... கலா....

தமிழரசி, சொல்ல மாட்டாது அழுதாள். பிறகு அசைவற்றுக் கிடந்தாள். ஒருவருக்கு என்றால் ஒரேயடியாய் அழலாம். ஒன்றுக்கு மேற்பட்டவர்களுக்கு எப்படி அழுவது? சித்தப்பாவுக்கா... கலாவுக்கா... கனவாய் போன தன் காதலுக்கா?

தமிழரசியையே கண்களில் நீர் சொட்டக் கவனித்த பத்மாவிற்கு மனதில் ஒரு பொறி கிளம்பியது. அதில் அவளுக்கே நம்பிக்கை இல்லையானாலும் ஆறுதலைக் கருதி, அதட்டிச் சொன்னாள்.

"என்னடி நீ, சின்னப்பிள்ளை மாதிரி? எவனோ ஒரு ஸ்கௌண்டிரல் பொறுக்கி நடந்ததையும், நடக்காததையும் சேர்த்து எழுதியிருக்கான்; அவன் ஆசைப்படுறதை செய்தியாக்கிட்டான். எனக்கென்னமோ, அவன் சொன்னபடி எதுவுமே நடந்திருக்காதுன்னு நினைக்கேன்."

அசைவற்றுக் கிடந்த தமிழரசியின் கையாடியது, காலாடியது. எழுந்து உட்கார்ந்து பத்மாவின் கைகளைப் பிடித்தபடி கெஞ்சினாள்.

“பத்மா! என்னைப் பார்த்து இன்னொரு தடவை சொல்லுடி. என் சித்தப்பா உயிரோடதான் இருப்பாரா? என் கலா சுயபுத்தியிலதான் இருக்காளா? என் தாமு நல்லவன்தானா?”

“அந்த மடையனைப் பற்றி இப்போ ஏண்டி பேசுறே? மனசுல சந்தேகமும், பயமும் வந்துட்டால் அதுவே பீதியாகும். என்றைக்குமே மொட்டை லட்டர்களை பெரிசாய் எடுக்கப்படாது. அப்டி எடுத்தால் நாமதான் மொட்டையாவோம். நீ அழுகிறது மாதிரி எதுவும் நடந்திருக்காது. வேணுமுன்னல் பாரேன்.”

“அப்படியா சொல்றே! ஒண்ணு செய்வோமா?... அடையார்ல, எங்க ஊருக்குப் பக்கத்து ஊர்க்காரர் இருக்கார். ஒரு ஆட்டோவுலயோ, டாக்சியிலயோ ரெண்டு பேரும் போய் கேட்டுட்டு வருவோமா?”

“இப்பவே மணி பன்னிரண்டு. இந்த மெட்ராஸ்ல பெண்கள் பகல் நேரத்துலயே தனியாய் போக முடியாது. காலையில் போவோம்.”

“அதுவரைக்கும் என் உயிர் தாங்காதடி.”

“என்னடி நீ குழந்தை மாதிரி...”

“பத்மா...என் கூட எவளும் பிறக்கல...தங்கை மாதிரி நினைச்சவள் பைத்தியமாய் போயிட்டாலும் எனக்கு இன்னும் பைத்தியம் பிடிக்கல. ஏன் தெரியுமா? ஒரு தங்கை உருப்படாமல் போயிட்டாலும், இன்னொரு தங்கை-என் கூடப்பிறக்காத சகோதரி-இந்த அறையிலயே இருக்கிறதுனாலதான் நான் கோப்பெருந்தேவி மாதிரி சட்டுன்னு சாகாமல் இருக்கேன்டி.”

“பத்மாவிற்கு அந்த நேரத்திலும் அவள் பேச்சு இதயத்தைப் பூரிக்கச் செய்தது. உறவற்ற தனக்கு உறவு கொடுப்பவளை – இன்று அந்த உறவை வெளிப்படையாய் சொல்பவளை – கட்டியணைத்தாள். உள்ளத்தால் பூரித்து உணர்வால் அழுதாள்.

தமிழரசி பத்மாவை நச்சரித்தாள்.

“டெலிபோன்ல பேசலாமாடி?”

தமிழரசியை கைத்தாங்கலாய் பிடித்தபடி, பத்மா, மாடியில் இருந்து கீழே இறங்கினாள். அவர்களைப் பார்த்து, தூக்கம் கலைந்த ‘வாட்ச்மேன்’ எழுத்தான். அவனிடம், டெலிபோன் சாவியைக் கேட்டார்கள். அவன், வார்டன் அறையை கை நீட்டிக் காட்டிவிட்டு, கொட்டாவி விட்டான்.

வார்டன் அம்மாவின் அறைக்கு வந்து, பத்மா காலிங் பெல்லே அழுத்தினள். தமிழரசி கதவைத் தட்டினள். விட்டுவிட்டு காலிங்பெல் ஓசையும், விடாமல் கதவோசையும் ஒலித்தன. பத்து நிமிடமாகியும் பதில் இல்லை. பத்மா, குனிந்து பார்த்தாள். அறையில் பூட்டுத் தொங்கியது. வார்டன் அம்மா, ஒருவேளை செகண்ட் ஷோ போய்விட்டார்களோ என்னமோ?

தமிழரசி, தலைவிரி கோலமாக, பத்மாவின் கையைப் பிடித்தபடி, டெலிபோன் பக்கம் வந்தாள். கீழே, அவளுக் கென்றே போட்டதுபோல் கிடந்த கம்பியை எடுத்தாள். தடுக்கப்போன பத்மாவை, வெறிபிடித்தவள் போல் தள்ளி விட்டு விட்டு, கம்பியால் ‘டைகர்’ பூட்டை துழாவினாள். அது வேடனின் அம்பு பட்ட புலியாகி, டெலிபோன் ரிஸீவர் குமிழை லேசாய் உடைத்தபடி விழுந்தது. தூங்கிக் கொண்டிருந்த தோட்டக்கார – காவல் கார இளைஞன்மேல் உராய்ந்தது.

தமிழரசி, டெலிபோன் எண்களைச் சுழற்றினாள். நல்ல வேளையாக மணியடித்தது. ‘அடையார்’ ராஜ கோபால், தூக்கம் கலைவதற்கு ஐந்து நிமிடமும், ஐந்து நிமிடம் துள்ளி எழுவதற்கும் நேரம் கொடுத்து நின்றாள். பிறகு, பத்மாவைப் பார்த்து “பதிலே இல்லியே?” என்றாள்.

“இந்தா பாரு தமிழு. ஏதாவது நடந்திருந்தாலும் அதை இனிமேல் மாற்ற முடியாது!”

“என்னடி நீ, கொஞ்ச நேரத்துக்கு முன்னல எதுவும் நடந்திருக்காது என்று எனக்கு உயிர் கொடுத்தே. இப்போ...”

“எதுவும் நடந்திருக்காதுன்னு இப்பவும் நினைக்கேன். அதனால காலையில...”

“முடியாதுடீ... நீ வந்தாலும் வராட்டாலும் அண்ணு நகர் சீமா லாட்ஜ்ல, அவரைப் போய் கேட்கப் போறேன்.”

“எவனைடி?”

“அதுதாண்டி தாமோதரன். இன்னைக்கு வந்திருந்தார்டி... வந்திருந்தாண்டி... அவர்... அவன் கூடத்தான் கடற்கரைக்குப் போனேன். அப்புறம் ஓட்டலுக்குப் போனேன். அண்ணா நகர்ல தங்கியிருக்கார். இப்பவே போய், ஊர்ல நடந்ததை கேட்டுட்டு வரணும். இந்தாப்பா வாட்ச்மேன்! ஒரு ஆட்டோ...”

“ஒனக்கு மூளை இருக்காடி! ஒருவேளை ஊர்ல, லட்டர்ல சொன்னது மாதிரி நடந்திருந்தால்... நீ அடிக்கடி சொல்ற அந்த தாமோதரன் ஒரு ஜென்டில்மேன் – அயோக்கியன். லேடி – கில்லர். இப்போ நீ அங்கே போய், உண்மை தெரியாமல் இருக்க ஒன்னையும் அவன் ஏதாவது செய்திட்டால்? ஏதோ திட்டம் போட்டுத்தான் ஒன்னைப் பார்க்க வந்திருக்கான். டர்ட்டி பெல்லோ... டாங்கி...”

“என்ன பத்மா, எதுவும் நடந்திருக்காதுன்னு நீதான் சான்னே. உண்மை தெரியுமுன்னலே பிறத்தியாரை திட்டப்படாது டி.”


“ஓ சாரி. அவன் எனக்கு மட்டுந்தான் பிறத்தியான் என்பதை மறந்துட்டேன். சரி... வா... அறைக்குப் போவோம்.”

தமிழரசி, மீண்டும் டெலிபோனைச் சுழற்றினாள். மணியடிக்க மறுக்கவில்லை. வெறுப்போடு ரிஸீவரை வைத்து விட்டு பத்மாவுடன் படியேறினாள். அறைக்கு வந்ததும் தனது தனிக்கட்டிலில் படுக்காமல், பத்மாவுடன் சேர்ந்து படுத்தாள். “பத்மா, என் கையை பிடிச்சுக் கோடி” என்று பதறியடித்துச் சொன்னாள். பத்மா அவளே அணைத்துக் கொண்டாள். “டீ பத்து... நீ சொல்றது. மாதிரி எவனே ஒரு அயோக்கியனேட வேலையாய்த்தான் இருக்கும். இல்லியா?” என்றாள். பத்மா, “ஆமாடி... பேசாமல் படுடி... நான் அதைத்தான் யோசித்துக் கொண்டிருக்கேன்” என்றாள்.

பத்மா, எப்படியோ தூங்கிப் போனாள். தமிழரசி, அவள் பிடியை விலக்கி மல்லாந்து படுத்தாள் கண்கள் திறந்து கிடந்தன. மனம் மூடிக்கிடந்தது. பத்மாவை எழுப்பி, மீண்டும் அவள் வாயால் “அப்படில்லாம் நடந்திருக்காது” என்று கேட்கப் போனாள், ஏனோ எழும்பவில்லை. ரேடியத்தில் மின்னிய, அவளது கைக் கடிகாரத்தையே உற்றுப் பார்த்தாள். வினாடிகள் அவளுக்கு நிமிடக் கணக்கிலும் நிமிடங்கள் மணிக்கணக்கிலும் நகர்ந்து கொண்டிருக்கின்றன. “கடவுளே... அடேய் .. கடவுளே... இந்த லட்டரில் வந்ததெல்லாம் பொய்யாக இருக்கணும். என் சித்தப்பா உயிரோடு இருக்கணும். என் தங்கை நான் பார்த்தது போலவே இருக்கணும்!”

கடிகார முள்போல், விழியுருட்டி, தமிழரசி புரண்டு. புரண்டு படுத்தாள். எழுந்து உட்கார்ந்தாள். நின்றபடி சுவரில் சாய்ந்தாள். அப்படியே தரையில் விழுந்தாள். கடிகாரம் மூன்று முறை கூவியதும், எழுந்தாள். ஒருவேளை செகண்ட்ஷோ சினிமாவிற்குப் போய் விட்டு ராஜகோபால் வந்திருக்கலாம் என்று நினைத்து, படியிறங்கினாள். டெலிபோன் சுழற்றினாள். பதிலில்லை. மீண்டும் மேலே வந்தாள். சித்தப்பா, ஆவியுருவில் ‘நீ பாதுகாப்பு கொடுக்கலே’ என்று முறையிட்டார். கலாவதி ஆள்காட்டிவிரலை அவளை நோக்கிக் காட்டினாள்.

தமிழரசி தூக்கத்திற்கும், சுய பிரக்ஞைக்கும் இடைப்பட்ட நிலையில் கிடந்தாள். ஆறுமணியடித்தபோது அவளால் எழுந்திருக்க முடியவில்லை. தாமோதரனே அவன் அறையில் சந்திக்க விரும்பவில்லை. மனம் பயங்காட்டியது. எப்படியும் வருவான் வரட்டும்

வாட்ச்மேன் வந்து ‘காப்பிக்கு’ தட்டினான்.

தமிழரசி, தூங்கிக் கொண்டிருந்த பத்மாவின் ஆடைகளைச் சரிசெய்துவிட்டு, கீழே இறங்கினாள். இன்னொரு தடவை ராஜகோபாலுக்கு போன் செய்யலாமா?... தாமோதரன் லாட்ஜூக்கு டெலிபோனில் தொடர்பு கொள்ளலாமா? மனம் ஒப்பவில்லை. கடிதம் காட்டியவை உண்மைதான் என்பது தெரிந்துவிடுமோ என்ற பயம். தாமோதரன் முழு உண்மையைச் சொல்லாமல், நழுவி விடக்கூடாதே என்ற அச்சம். தாமோதரன் வருவதற்கு முன்புள்ள இந்த இடைவேளைதான், இனிமேல் வாழ்க்கையிலேயே வரும் துக்கம் குறைந்த நேரம் என்று நினைத்தாள். காபியை, தானும் குடிக்காமல், பத்மாவை எழுப்பி குடிக்க வைக்காமலும், கட்டிலில் மீண்டும் சாய்ந்தாள்.

அப்புறம், பத்மாதான் அவளே எழுப்பினாள். தமிழரசி, வாரிச் சுருட்டி எழுந்தாள். முகத்தைக் கழுவிவிட்டு, முந்தானையால் துடைத்தபடி, வெளியே வந்தாள். விடுதியின் கேட்டிற்கு வந்து, தாமோதரன் வருகிருன என்று எட்டி எட்டிப் பார்த்தாள். இறுதியில் சோர்வுற்று, வரவேற்பறையில் சோபாவில் சாய்ந்தாள். முன் கைகளில் முகம் கவிழ்ந்து, எவ்வளவு நேரம் இருந்தாளோ... அவளுக்கே தெரியாது. ‘தமிழு’ என்ற சத்தங் கேட்டு, கண் விழித்தாள்; தாமோதரன்!

தமிழரசி, துள்ளி எழுந்தாள். தாமோதரனைக் கொட்டக் கொட்டப் பார்த்தாள். பிறகு இடுப்பில் செருகப்பட்ட மொட்டைக் கடிதத்தை எடுத்து அவனிடம் நீட்டினாள். அவன் வாங்கிக் கொண்டபோது, வாட்ச்மேன் வந்து “மேடம், வார்டன் ஒங்களை உடனே கூப்பிடுறாங்க” என்றான். அவன் சொன்னதைக் கவனிக்காமலே, தமிழரசி, கடிதத்தைப் படித்துக் கொண்டிருந்த, தாமோதரனின் முகபாவத்தையே பல் தெறிக்கப் பார்த்தாள்.

கடிதத்தைப் படித்து முடித்த தாமோதரன், அவளைப் பார்க்க முடியாமல், எதிர்ப்புறத்துக் கண்ணாடியைப் பார்த்தான். அங்கேயும் தமிழரசியின் முகத்தைப் பார்த்து விட்டு, முன் வரிசைப் பற்கள், பின்னுதட்டை அழுத்த, நிலையற்று நின்றான்.

தமிழரசி, அவன் முன்னலும் பின்னலும் நகர்ந்து கத்தினாள்.

“மிஸ்டர் தாமு, சொல்லுங்க. இந்த லட்டர்ல எழுதியிருக்கதெல்லாம் உண்மையா? சொல்லுங்க சார்: ஒங்களத்தான்...இதோ என் துடிப்பைப் பாருங்க மிஸ்டர். நான் படுற பாட்டைப் பாருங்க மிஸ்டர்...‘நம்மைப் போய். இவள் சந்தேகப்பட்டுட்டாளேன்’னு நீங்க அரிச்சந்திரத் தனமாய்-நேர்மையில் ரோஷப்பட்டுப் பேசாமல் நிற்கிற, தாய் நான் இப்போகட நினைக்கேன். சொல்லுங்க மிஸ்டர். சொல்லுய்யா... ஒன்னைத்தான்... சொல்லித் தொலைங்க.”

தாமோதரன் கழுத்தைப் பின் பக்கமாய் சாய்த்தான். அவளை விட்டு விலகி நின்றான். தமிழரசிக்கு முதுகைக் காட்டியபடி “பொய்யுன்னல் நான் மறுத்திருப்பேனே” என்று சொல்லியபடியே, கைகளால் முகத்தை மூடிக் கொண்டான்.

தமிழரசி ஆவேசியானாள்.

“நீங்க மனுஷனா? இல்ல...இல்ல...மிருகம், மிருகத்துலயும் கேடுகெட்ட மிருகம். சீ! ஏய்யா என் வாழ்க்கையில குறுக்கிட்டே? கடவுளே...கடவுளே!”

கூப்பிட்டும் வராத கோபத்தில், அதிலும் இரவு லேட்டாக வந்தும், டெலிபோன் பூட்டை உடைத்தும் ‘டிஸ்ஸிபிளினை’ மீறிய தமிழரசியை, நேரடியாகத் திட்டுவதற்காக ஓடிவந்த வார்டனம்மா, அவள், ஒரு இளைஞனிடம் பல்லைக் கடித்துப் பேசுவதையும் அவன் தலை கவிழ்ந்தல்ல – அதை இழந்தவன் போல் நிற்பதையும் பார்த்து விட்டுக் கோபத்தை அதே விகிதாச்சாரத்தில் அனுதாபபாக மாற்றிக்கொண்டாள். பரிதாபமாக நோக்கியபடி பறிகொடுத்தவன் போல் கண் செருக, அதற்கு விழியால் சமாதி கட்டி, வேர்த்து விறுவிறுத்து நின்ற தாமோதரனை நோக்கி தமிழரசி, சில சொல்லம்புகளை எய்யப்போனாள்.

அதற்குள் வார்டன், தமிழரசியின் தோளில் கை போட்டு, தன்னேடு சேர்த்து இழுத்தபடி நடந்தாள். நிலைமையின் நிலை புரியவில்லையானலும், அதன் வேகத்தைப் புரிந்து அதைக் குறைக்க நினைத்தவள் போல், தாமோதரனைப் பார்த்து “பீ ஹியர்...ஷி வில் கம்” என்று சொல்லிவிட்டு, தமிழரசியிடம் “பீகாம்...பீகாம்” என்று அவள் முதுகைத் தட்டிக் கொடுத்தபடியே, தன் அறைக்குள் அழைத்துச் சென்றாள்.

வார்டன் அம்மாவிடம், ஐந்து நிமிட நேரம் அழுது விட்டு, அதற்குப் பிறகு நடந்ததைச் சொல்லிவிட்டு, நான்கு பேர் பரிகசிக்கும்படி நடந்துகொள்ளப் போவதில்லை என்று அந்த அம்மாவிடம் வாக்குக் கொடுத்து விட்டு பதினைந்து நிமிட நேரம் கழித்து, தமிழரசி எழுந்தாள்.

அவளுடன் எழுந்த வார்டன், பிறகு இருக்கையில் அமர்ந்தபடி, “நீ இண்டலிஜெண்ட் கேர்ல். அந்தப் பையனும் என் அனுபவத்தில் பார்க்கும்போது கெட்டவனாய் தெரியல. அவன், நடந்ததுக்குப் பொறுப்பில்ல. நடந்ததுக்குப் பிறகு நடந்ததுக்குத்தான் பொறுப்பு. நாம நேர் கோட்ல போறதாய் நினைச்சுத்தான் வாழ்க்கையில் நடப்போம். ஆனால் வாழ்க்கை வட்டக்கோடு, நடக்கிறவனுக்கு அந்த வட்டம் நேர் கோடாய் தெரியும். பார்க்கிறவனுக்குத்தான் அது வட்டமுன்னு புரியும். இதுக்கு சுய நலம். சொத்து சுகம் என்கிற மையத்துல, இந்த சமூக அமைப்பு உழல்வதே காரணம். இந்தக் காலக் கட்டத்துல, தனி மனித பிரயத்தனங்கள் இந்த சமூகச் சாக்கடையில பன்னீரைத் தெளித்தது மாதிரி. எந்த முடிவு வேணு முன்னாலும் எடு ஆனால் பாவம். அவனுக்கு முடிவு கட்டுறதாய் இருக்க வேண்டாம். விஷ் யூ பெஸ்ட்” என்றாள்.

தமிழரசி,ஆவேசம் குறையாமலே வெளியே வந்தாள். வரவேற்பறைக்கு வந்து, அங்குமிங்குமாய் பார்த்தாள். விழியருகே, ஒரு நெருப்புக் குச்சியை வைத்திருந்தால், அது தீப்பிடித்து எரிந்திருக்கும். எரிந்த கண்களோடு, எல்லா இடங்களையும் பார்த்தாள். ஆனால் –

தாமோதரனைக் காணவில்லை.