நெருப்புத் தடயங்கள்/அத்தியாயம் 3

3

கிணற்றுமேட்டில் நின்ற கோணத் தென்னையில் இருந்து ஒரு ‘குறும்பு’ (துளிர்விடும் தேங்காய்), வரப் போரம் சரிந்து நின்ற வாழைக்குலையில் விழுந்தது. பம்ப்செட் அறையை ஒட்டியிருந்த நிலத்தில் பச்சையாய் கோலங்காட்டி, சிவப்பு சிவப்பாய் முடிந்த செம்பருத்திப் பூக்கள், மாலை வெயிலில் மரகதமாய் மின்னின. உலக்கைக்கு வெள்ளை வர்ணம் தீட்டியது போல் சிந்தாமல் சிதறாமல் பாய்ந்து, பிறகு தளத்தில் பட்டுத் தெறித்த வெண்மை நீர்த்திவலைகள், செம்பருத்திப் பூக்களில் சிந்தி, வானவில்லாய் ஆகாயத்தில் தோன்றும் அதிசய நட்சத்திரங்களாய் மின்னின.

அப்போதுதான் தமிழரசிக்கு, தாமோதரன் மீது தான் கொண்ட அன்பின் முழுமையும் புரிந்தது. அறியாப் பருவத்தில் இருந்தே பாசமாகி, ‘அறியும்’ பருவத்தில் காதலாகி, பற்றாகி, பாசமாகி, பழக்கமில்லா நட்பான ஏதோ ஓர் உணர்வு உடலோடு உருக்கொண்டு, உணர்வோடு உயிர் கொண்ட, அந்த இன்பச் சுமை, இப்போது அவளிடமிருந்து பிரிந்து,தன்னந்தனியாய் நின்று, அவளையும் தனியாக்கித் தவிக்க வைத்தது தாபப்படுத்தியது. கோபப்படுத்தியது. சுமை போனதால், அவளுக்குத் தலை கனத்தது.

தமிழரசி, அவனை ஏறிட்டுப் பார்த்தாள். அவனோ, குழந்தை பெற்ற தாய்போல பூரிப்போடு நின்றான். தமிழரசி, அந்த இடத்தை விட்டு நகரப் போவதுபோல பாதங்களை நகர்த்திப் பார்த்தாள். அவை முன்னும் பின்னுமாக வம்படித்தன. அவளுக்கும் ஒரு நிறைவு தேடும் தாபம். ‘நான் உன்னைத்தான் காதலிச்சேன். ஆனால் வேறு வழியில்லாமல் இன்னொருத்தியை கட்டும் படியாச்சு’ என்று ‘அவர்’ சொல்லவேண்டும் என்ற எதிர்பார்ப்பு. அந்த இன்னொருத்தியுடன் அவன் அப்படியும் நடந்திருக்கலாமோ என்ற ஒரு பயக் கற்பனை. தெய்வயானையை தேர்ந்தெடுத்த அவனுக்கு, தான் வள்ளியாக இருக்கலாமா என்பது போன்ற இடக்கு மடக்கான சிந்தன.

சிறிது நேரத்தில், தமிழரசி, தன்னைத்தானே நிமிர்த்திய வேகத்தில், உள்ள மும் கூன் போடாமல் நின்றது. அவர் காதலிக்காதபோது, நான் ஏன் காதலிக்கணும்? இப்போ...இதோ...நெளிகிற உணர்வு, சுய மரியாதையைக் கவ்வும் ஒரு நச்சுப் பாம்பு. அதை அடித்துக் கொல்ல முடியாவிட்டாலும் பிடித்துக் கொள்ள வேண்டும்! நீராக நெளிந்த அவள் மனம் ஒன்று திரண்டு ஐஸ் கட்டியாகியது. ஐஸ் கட்டியை, கல்லென்று நம்பி, கல்லாக நின்றாள்.

தமிழரசியை ரசித்துப் பார்த்தோ அல்லது பார்த்து ரசித்தோ, தனக்குள் தானே மூழ்கியிருந்த தாமோதரனுக்கு, அவள் பார்வையின் நோக்கோ, போக்கோ புரியவில்லை. அவளேயும் சுற்றுப்புறத்தையும், தன்னையும், கண்களால் சுத்திச் சுத்தி வட்டமடித்தபடி நின்றான்.

இதற்குள் தென்னைக்குப் பின்னால் சிரிப்பை விட்டு விட்டு, கலாவதி குறுஞ் சிரிப்போடு வந்தாள். எதுவுமே நடக்கவில்லை என்று அவளுக்கு உணர்த்துவதுபோல், அவள் தப்பாக நினைக்கக்கூடாது என்பதற்காக, அவன் தமிழரசியிடம் ‘தப்பாகப்’ பேசினான்.

“தமிழ்ல காலேஜ்தான எடுத்திங்க. ஸாரி...பி.ஏ.வுல எக்னமிக்ஸ் எடுத்திங்க...பிறகு ஏன் எம். ஏ.வுல தமிழ் எடுத்தீங்க? கஷ்டமாய் இருந்திருக்குமே?”

மிகப் பெரிய கேள்வி கேட்டவன்போல், அவன் தன் கையை இடுப்பில் வைத்தபோது, தமிழரசி, இடுப்பில் வைத்த கையை எடுத்து வீசியபடியே பதிலளித்தாள்:

“எனக்கு தமிழ் கஷ்டமாய் இல்ல. அது சொல்றபடி எதுவுமே நடக்காததுதான் கஷ்டமாய் இருக்கு.”

“நீங்க என்ன சொல்றிங்க?”

“காலேஜில பட்டப்படிப்புப் படிக்கும்போது... தமிழ்ல சிலப்பதிகாரத்துல ஒரு பகுதி வந்துது. அதுல, ஆற்று மணலுல, ஒரு ஆடவன் உருவத்தை உருவாக்கும் ஒரு சிறுமிகிட்ட, அதுதான் ஒன் காதலன்னு பேசிடுறாங்க. உடனே அந்த அறியாச் சிறுமி, அதை நம்பி, காதலனை ஆற்றுவெள்ளம் அடிச்சிட்டுப் போயிடப்படாதுன்னு காவல் காத்தாளாம்.”

“ஆமா, நானும் படிச்சேன். இது கண்ணகி, பாண்டிய மன்னன் கிட்ட சொல்றது தானே?”

“ஆமாம், இதை நான் அற்புதமாய் நினைச்சு. எம்.ஏ. வுல தமிழை எடுத்தேன். ஆனல் இப்போதான் புரியுது, அற்புதமுன்னு நினைக்கிறதுக்கு நம்மோட அபத்தமான மனசுதான் காரணம். கலாவதி, இந்தக் கிணறு பிரயோஜனமில்ல. நாம அந்தக் கிணத்துல போய் குளிக்கலாம். உம், சோப்பு டப்பாவை எடு.”

எதிர்பாராத பேச்சைக் கேட்டு, சற்றே திகைத்த கலாவதியின் தோளைப் பிடித்துக் கொண்டு, கீழே குனிந்து சோப்பு டப்பாவை எடுத்துக் கொண்டு, தமிழரசி கலாவதியை, ரதத்தை இழுப்பதுபோல் இழுத்தாள். தாமோதரனுக்கு ஒன்றும் புரியவில்லை. அவளே நோக்கி, அவனையறியாமலே, அவன் கால்களும் இயங்கத் துவங்கின. உடனே ஒரு காலால், இன்னொரு காலுக்கு அணை போட்ட படியே, அவன் கேட்டான்:

“இங்கேயே நீங்க குளிக்கலாம். நான் கிணத்துக்குள்ளே இறங்கிக் குளிக்கிறேன்.”

“கலா, ஒன்னத்தாண்டி! நீ கூட மரக்கட்டையாய் போயிட்டியா? புறப்படு.”

கோபப்பட்டு அறியாத பெரியப்பா மகளின் பேச்சால் திக்கு முக்காடிய கலாவதி, அவளை விகற்பத்தோடு பார்த்தாள். தமிழரசியோ, தன்பாட்டுக்குப் போய்க் கொண்டிருந்தாள். தாமோதரனும், தன்பாட்டுக்கு நாலடி நடந்தான். பிறகு "இந்த ரெண்டு கல்யாணத்தையும் ஒரே பந்தலுல நடத்துறதுக்கு ஒங்க வீட்டுக்கு ஆட்சேபம் இருக்காதே" என்றான்.

வேகமாக நடக்கப்போன தமிழரசி நின்றாள். அவனே நோக்கித் திரும்பாமலே, கண்களைத் துடைத்தபடி, சட்டென்று பதிலை ஒரே வெட்டாய் வெட்டி, இரண்டு துண்டுகளாக்கினாள்:

"ஒங்க கல்யாணத்தை முன்னலயாவது பின்னலயாவது வச்சுக்கங்க. நான் என்னோட அண்ணன் கல்யாணத்தை மட்டுந்தான் பார்க்க விரும்புறேன்.”

தமிழரசி தன்னையறியாமலே, தனக்குள் ஒரு முறை கூட கேட்டுக் கொள்ளாமலே பேசியதற்கு, வருந்தாதவள் போல் அவர்கள் இருவருக்கும் முதுகைக் காட்டியபடியே நின்றாள். கலாவதி, தமிழுக்கு என்ன ஆயிற்று என்பதை அறிய விரும்பியவளாய் அவள் தோளைப் பிடித்து தன் நாக்கைக் கடித்தாள். தாமோதரனுக்கும் லேசாகக் கோபம் வந்தது. சென்னையில் வேலை பார்ப்பதால், மனதளவிலாவது சிதைந்து போயிருப்பாளோ என்ற சந்தேகம். இளக்காரமாகவே கேட்டான்:

"பொன்மணி ஒங்கமேல உயிரையே வச்சுருக்காள், அவள் கல்யாணத்தைப் பார்க்க ஒங்களுக்குப் பிடிக்கலியா? ஒங்களை மெட்ராஸ் ரொம்ப மாத்திட்டுன்னு நினைக்கேன்.”

தமிழரசிக்கு அவனைப் பார்த்து, தான் எப்படித் திரும்பினோம் என்பது புரியவில்லை. ஐஸ் கட்டி உருகி, நெஞ்சுள் நீர் பிரவாகமாகியது. அவசர அவசரமாகக் கேட்டாள்: "அப்படின்னா கல்யாணம் ஒங்களுக்கு இல்லியா?”

‘எனக்கா? நான் இந்த ஊர்லேதான் பண்ணிக்கப் போறேன். நான் வேலை பார்க்கற இடத்துல ஒரு பையன் ஹைஸ்கூல் டீச்சராய் இருக்கான். பி. ஏ. பி.டி. வசதியான குடும்பம். பேசிப் பார்த்தேன். சரின்னுட்டாங்க, 'ஒங்களைப் பார்த்ததே பொண்ணைப் பார்த்தது மாதிரி. இனிமேல் நிச்சயதாம்பூலத்துக்குத்தான் ஓங்க வீட்டுக்கு வரணும்’னாங்க. ஏன் சிரிக்கிறீங்க?”

‘'சிரிப்புக்கு எத்தனயோ காரணம். நீங்க 'இங்க’ போடுறதுனால, எனக்கு வயசாயிட்டோன்னு சிரிப்பு. “ஒங்களப் பார்த்தால் பொண்ணைப் பார்த்தது மாதிரின்னு’ மாப்பிள்ளை வீட்ல சொன்னதாய் சொன்னிங்க, சிரிக்காமல் எப்படி?”

தாமோதரனும், அவளோடு சேர்ந்து சிரித்தான். மகிழ்ச்சி என்பது காரண காரியமற்ற ஒரு தொற்றுணர்வு என்பதை நிரூபிப்பதுபோல், கலாவதி, அந்தச் சிரிப்பிற்கு அர்த்தம் தெரியாமலே சிரித்தாள். பிறகு, தமிழரசியின் கையைப் பிடித்து, "வா... பம்ப்செட் நின்றுடப்போவுது" என்று சொல்லி செல்லமாக இழுத்தாள்.

தாமோதரன் பல்லைக் கடித்து, அங்கேயே அவளைக் கைது செய்து காவலில் வைக்கப் போவதுபோல் பார்த்த போது, தமிழரசி "ஏய்... கலா... என்னால இப்போ நடக்க முடியாது. இங்கேயே குளிக்கலாம்" என்று சொல்லி விட்டு, தாமோதரனைப் பார்த்து இவளுக்கும் நாகர் கோவிலுல ஒரு மாப்பிள்ளை பாருங்க” என்றாள்.

கலாவதி, அப்போதே கல்யாணமானதுபோல் நாணி, தமிழரசியை முன்னிலும் பலமாக இழுத்தாள். காரணத்தோடுதான். விஷயம் புரிந்துவிட்டது. நாலுபேர் பார்த்தால் என்ன நினைப்பார்கள்? பெரியப்பாவோட குடும்ப கவுரவம் லேசுப்பட்டதா?

தாமோதரன் எங்கேயோ எட்டிப் பார்த்தான். பிறகு "கலாவதி, மாலைப் பதனி நல்லா இருக்கும். அதோ ராமசுப்பு தாத்தா பனந்தோப்புல, ஒரு மரத்துல தொத்துறார் பாரு, போய் வாங்கிட்டு வா... அப்படியே நொங்கும் கேளு...” என்றான்.

“ஆமாம் கலா... பதனிக்கும், நொங்குங்கும் நல்ல பொருத்தம். டேஸ்டாய் இருக்கும்” என்றாள் தமிழரசி.

இருவருக்கும் தற்காலிகமாய் பிடிக்காமல் போன கலாவதி, வேண்டா வெறுப்பாகப் புறப்பட்டாள். திரும்பித் திரும்பிப் பார்த்தபடியே நடந்தாள். பாதி தூரத்தை அவள் கடந்தபோது, ஓங்கிய பனை ஒன்றில், மார்பில் தோல் கவசத்துடன் காலில் பனைநார் தளையோடு தவளை மாதிரி கிடந்த ராமசுப்பு தாத்தா, "இரும்பு அடிக்கிற இடத்துல ஈய்க்கு என்ன வேல? சீக்கிரமாய் வாபிள்ள" என்று சொன்னபடியே, "மன்மத லீலையை வென்றார் உண்டோ?" என்று பாகவதரானர்.

தனித்து விடப்பட்ட தாமோதரனும், தமிழரசியும், ஒருவரை ஒருவர் உன்னிப்பாய் பார்த்துக் கொண்டார்கள். ஒருவர் பார்வை இன்னொருவர் பார்வையில் முட்டும்போது, அவள் தலையை தாழ்த்திக் கொண்டாள். அவன் முகத்தைக் கோணலாக ஆக்கிக் கொண்டான். பிறகு, இருவருமே சேர்ந்தாற்போல் பேசப் போனர்கள் அப்புறம் சிரித்துக் கொண்டார்கள். தமிழரசியே பேசட்டும் என்பதுபோல், தாமோதரன், தன் வாயில் ஆள் காட்டி விரலை வைத்துக் கொண்டான். தமிழரசியே முந்தினாள்.

"போலீஸ் வேலையில சேர்ந்த பிறகு, நீங்க ஊரையே மறந்துட்டிங்களாமே. எல்லோரையுமே மறந்துட்டிங்களாம்."

“நான் ஊரையும் மறக்கல, உறவையும் மறக்கல. இதை நிரூபிக்க, ஒரே ஒரு இன்ஸிடெண்ட் சொல்லுறேன் கேளுங்க. நான் காலேஜை முடிச்சுட்டு, ஊர்ல சுத்துறேன். டிராமா போடுறேன். நீங்க அப்போதான் காலேஜ்ல போய் சேர்ந்துட்டு, விடுமுறையில ஊருக்கு வந்திருக்கீங்க... ஒரு நாள்...’

"‘நான் ஒண்ணும் ஒங்கள அப்போ தாமுன்னு கூப்பிடல.” -

“அந்த சமாச்சாரம் அப்புறம். இப்போ சொல்றது வேற சமாச்சாரம். நான் எங்க வயலுல தமாஷாய் கமலை அடிக்கிறேன். நீங்க ஒங்க வயலுல பருத்திச் செடியோடு பசலிச் செடி மாதிரி நிற்கிறிங்க. நான் மாட்டுக்கு வச்சுருந்த சாட்டைக் கம்பை வச்சு, ஒங்களைப் பார்த்து ஆட்டுறேன். மொதல்ல லேசா, அப்புறம் பலமாய், அதுக்கப்புறம் வேகமாய். நீங்க வயல் கிணத்துல, குத்துக் காலுல சாய்ஞ்சு நிற்கிற ஒங்க அப்பாவைப் பார்த்து போறிங்க. அவருகிட்டே எதையோ பேசுறிங்க. அப்புறமாய் திரும்பி வாறிங்க. எனக்கு பயம் வந்துடுது. சாட்டைக் கம்பை தூர எறிஞ்சுட்டு கமலை அடிக்கிறேன். கொஞ்ச நேரத்துக்குப் பிறகு ஒங்களைப் பார்க்கேன். நீங்க கையில அகத்திக் கீரையை வச்சு, என்னைப் பார்த்து வேகமாய் ஆட்டி, பலமாய் ஆட்டி, அப்புறம் மெதுவாய்... ஏன் இப்படி முகம் மாறுது? இதை எதுக்குச் சொல்ல வந்தேனானல், ஒரு சின்ன நிகழ்ச்சியைக் கூட நான் மறக்கலன்னு காட்டுறதுக்குத்தான்.’’

அவன் சொல்வதை சுவையோடும், நிலம் நோக்கிய நாணச் சுமையோடும் கேட்டுக் கொண்டிருந்த தமிழரசி, அவனை துடிதுடிக்கப் பார்க்கிறாள்! அந்த நிகழ்ச்சி சின்ன நிகழ்ச்சியா? போலீஸ்காரருக்கு, அகநானூறும், புற நானுறாய் தெரியுமோ? இது இவருக்கு வெறும் அகத்திக் கீரை. ஆனால் எனக்கோ அகத்தை தீக்கீரையாக்கிய நிகழ்ச்சி. மன்மதன் போல் தீயில் சாம்பலாகி, மறுபிறவி எடுத்த மனவோட்டம். ஆனால் இவருக்கு சின்ன நிகழ்ச்சியாம். யூனிபாரம் போட்டுட்டால் - அதுவும் காக்கி யூனிபாரம் போட்டுட்டால் - எல்லாமே யூனிபாமாய் ஆயிடுமோ? சீ!

அவனை மீண்டும் பார்க்காமல், அங்கிருந்து ஒட வேண்டும் என்று நினைத்தவளுக்கு, கால்கள் சத்யாக்கிரகம் செய்கின்றன. வாய் காட்டிக் கொடுக்கிறது.

“அப்படின்னா ஒங்களுக்கு அது சின்ன நிகழ்ச்சியா?”

“ சின்ன நிகழ்ச்சின்னு சொன்னது சரிதான். அதாவது, நான் ஒருத்திமேல வச்சிருக்கிற அன்புக்கு அது சின்னம். தமிழம்மாவுக்கு இதுகூடத் தெரியலியா?”

தமிழரசியால், அவனை நேருக்கு நேராகப் பார்க்க முடியவில்லை. அவன் முன்நோக்கி நடப்பதைப் பார்த்து, அவள் பின்னோக்கி இரண்டடி நடக்கிறாள். மஞ்சள் வெயிலில், தன் நிழலை நெருங்கப் போகும் அந்த நிழலையே பார்க்கிறாள். "தமிழு, ஒன்னத்தான் தமிழு, நீ என்னை மறக்கலியே? சொல்லு தமிழு, ஒரே ஒரு வார்த்தை" என்ற குரல் அவளுக்குக் கேட்கிறது. ஆனாலும் அவளால் பேச முடியவில்லை. வாய்க்கு, உதடுகள் கதவாகின்றன. ‘'எத்தனையோ வருஷத்தை வேஸ்ட் பண்ணுவது மாதிரி இப்பவும் நாம் வேஸ்டாயிடப்படாது. சொல்லு தமிழ். ஒரே ஒரு வார்த்தை; என் மேல் ஒனக்கு... சொல்ல மாட்டியா? அப்படின்னா என் கிட்ட ஒனக்கு ‘அது’ இல்லியா?” என்று குரல் சன்னமாகிறது.

தமிழரசி, தலையை மேலும் கீழும் ஆட்டுகிறாள். பிறகு இல்லியா என்ற அவன் சந்தேகத்தை உறுதிப் படுத்துவதுபோல் ஆமாம் என்று ஆகிவிடக் கூடாது என்று அஞ்சி, தலையை பக்கவாட்டில் ஆட்டுகிறாள். திடீரென்று அவள் தலையாட்டம் தடைபடுகிறது. உள்ளங்கை ஒன்று, அவள் மோவாயை ஏந்திக் கொள்வதுபோல் தோன்றுகிறது. கண்களை மூடிக்கொள்கிறாள். தாமரை மலர், தண்டோடு ஆகாயத்தில் தொங்குவது போன்ற காட்சி. பப்பாளிப்பழம் மேல் நோக்கித் தொங்குவது போன்ற நேர்த்தி. ஐந்து தலை நாகம், மரகத மணியை சுமந்து நிற்பது போன்ற தோற்றம்.

தாமோதரன், தன் கையை அகற்றவில்லை. அவள், அதில் படர்ந்த முகத்தை எடுக்கவில்லை. கண்களைத் திறக்கவும் முடியவில்லை. தாமோதரன் குரல், அவள் காதில் உஷ்ணக்காற்றின் உராய்வோடு விழுகிறது.

"தமிழு, நான் ஒரு முட்டாள். நீ அஸிஸ்டெண்ட் புரபஸராகி இலக்கியக் கூட்டத்துல பேசி, பிரபலமாயிட்டே. ஒன்னோட கூட்டத்துக்குக்கூட நான் 'டூட்டில’ வரவேண்டியதிருக்கும். ஒன்னோட வாழ்க்கை வட்டம் அகலமாயிட்டது. இந்த சாதாரண சப்-இன்ஸ்பெக்டரை மறந்திருப்பேன்னு நினெச்சன். ஆனால், நீ பேசு தமிழு . பேசு.”

'தமிழு’ இன்னும் தன் முகத்தை மீட்டுக் கொள்ளாமலே பேசியது.

"வாழ்க்கை வட்டம் என்னதான் அகலமாய் போனலும், அதுக்கு ஒரே ஒரு மையம்தானே உண்டு! நான்தான் முட்டாள். தாமு சப்-இன்ஸ்பெக்டராயிட்டான்... தப்பு, டார். எவனாவது பெரிய பணக்காரன் என்னோட தாமுவையும் அவன் வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாயும் கொடுத்து, மருமகளாக்கி, தன்னோட சொத்துக்களை காவல் காக்க வைப்பான்னு நினைச்சேன்.”

இப்போ?”

"இப்போவா? நீங்க என்னை விடுறிங்களாம்."

இருவரும் சிறிது விலகிக் கொண்டார்கள். பிறகு, ஒருவர் கையை ஒருவர் பற்றிக் கொண்டார்கள். முதன் முதலாக தனிமையில் சந்திக்கும் கூச்சம் இருந்தாலும், பயமற்றுப்போனார்கள். காதல் மின்சாரம் மாதிரி. ஒயரிங் முடிந்துதான் கனெக்க்ஷன் கொடுக்க வேண்டும். இவர்களைப் பொருத்த அளவில் இந்த ஒயரிங் எப்போதோ முடிந்துவிட்டதால், இப்போ நடந்தது 'டச்சப்’ கனெக்க்ஷன்தான்.

இருவரும் இப்போது சரளமாக, ஒருவரை ஒருவர் செல்லமாகத் தட்டியபடி பேசிக் கொண்டிருந்தார்கள். எப்போதோ நடந்து முடிந்த மின்சாரக்கம்பி இணைப்பில், அந்த இரண்டு கலர் பல்புகளும் பிரகாசித்துப் பேசிக் கொண்டன.

அப்போது--

தாமோதரன் தங்கை பொன்மணி, தலைவிரிகோலமாக வந்து கொண்டிருந்தாள். இடுப்பிற்குள் புடவையோடு ஒளித்து வைத்திருந்த விஷப்பாட்டிலை அவ்வப்போது 'இருக்கிறதா' என்பதுபோல் கையால் தடவியபடியே, தன்னை இல்லாமல் ஆக்கப்போகிறவள்போல், அவர்களே நோக்கி ஓடிவந்தாள்.